ஊடகம் அறம் சார்ந்து செயற்பட வேண்டும்!

ஊடகம் அறம் சார்ந்து செயற்படவேண்டும்!

தெல்லியூர் சி.ஹரிகரன்

ஊடகங்கள் அறம் சார்ந்து – தர்மம் சார்ந்து – ஊடக தர்மத்தைக் காத்து செயற்படுவது அந்த ஊடகத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். ஆனால், இன்று ஊடகங்களைப் பார்க்கும்போது வியாபாரத்துக்காகவும் ஊடக முதலாளி அரசியல்வாதியாயின் அவரின் தனிப்பட்ட ஊது குழலாகவும் செயலாற்றுகின்றமை – செயற்படுகின்றமை – வேதனையளிக்கின்றது.

ஊடகப் பணியில் நான் 20 ஆண்டுகள் நிறைவடைந்து 21 ஆவது ஆண்டில் கால்பதித்துத் தொடர்ந்தும் பணியாற்றுகின்றேன். நான் ஓர் ஊடகவியலாளராக இருந்துகொண்டு இன்னோர் ஊடகத்தைப் பற்றி விமர்சிப்பதும் ஊடக தர்மம் சார்ந்தது அல்லதான். அதுவும் நான் ஊடகப்பணியில் அகரம் அறிவித்த ஊடகம் பற்றிக் குறிப்பிடுவது இன்னும் அறம் சார்ந்ததன்னு. ஆயினும், பல தடவைகள் யோசித்தபின் தர்மத்தை – உண்மையை – அறத்தை 2010 ஆம் ஆண்டுவரை – நாங்கள் பணிபுரிந்த காலத்தில் போதித்த ஊடகம், தற்போது சில தனி நபர்களினதோ அல்லது அந்த ஊடக நிர்வாகியினதோ விருப்பு வெறுப்பை வெளிப்படுத்தி மக்களுக்கு மறம் போதிப்பதாக அமையும் போது அந்த ஊடகம்மீது தீராத நம்பிக்கையும் பற்றும் கொண்டவன் என்ற அடிப்படையில் இந்தக் கருத்தை – பத்தி எழுத்தை – வரைய முனைகின்றேன்.

நான் அந்த ஊடகத்தில் பணிபுரிந்த காலத்தில் – 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் – வடக்கின் அரசியலைத் தீர்மானிக்கின்ற சக்தியாக அந்த ஊடகம் செயற்பட்டது. அந்தக் காலத்தில் போர் சூழ்ந்து வடக்கில் விடுதலைப் புலிகளால் இயக்கப்பட்ட ஊடகங்கள் தவிர தனிநபர்களால் – பொதுப்படையான ஊடகமாகத் திகழ்ந்தது இந்த ஊடகம் மட்டுமே!. இந்த ஊடகம் ஒன்றும் ஒன்றும் மூன்று என்றால் மக்களும் அது சொன்னால் உண்மை என்று நம்பிச் செயற்பட்ட காலம் அது. மகேஸ்வரனின் தேவை உணர்ந்து எவரும் அறியாத – எவராலும் அறியப்படாத – மகேஸ்வரனை நல்லவர், வல்லவர், நாலும் தெரிந்தவர் என்று அதன் ஆசிரியர் எழுதி நாடாளுமன்றுக்கு அனுப்பிய பெருமையும் அந்த ஊடகத்தையே சாரும். கூட்டமைப்புத் தலைவர்கள் அந்த ஊடக ஆசிரியருடன் கதைத்தபின்தான் தமது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்த காலம் அது. இதனால் அந்த ஊடக ஆசிரியருக்கு யாழ்.பல்கலை மானியங்கள் ஆணைக்குழுவில் உறுப்பினர் பதவி கிடைக்க, நிர்வாகி தனது பதவிநிலையை ”நிர்வாக ஆசிரியர்” என்று மாற்றித் தான் பல்கலை மாணிய உறுப்பினரானமையும்,, விடுதலைப் புலிகள் அரியநேத்திரன், யோசப் பரராஜசிங்கம் போன்ற ஊடகவியலாளர்களை நாடாளுமன்ற வேட்பாளராக உள்வாங்கிய காலத்தில் அந்த இரு பத்திரிகைகளின் ஆசிரியருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு வேண்டிக்கொண்டமையும்” கடந்தகால வரலாறுகள். பின்னர் அந்த இரு ஊடகங்களின் பணியைக் காரணங்காட்டி – தமது பலத்தைக் காட்டி – அந்த நிர்வாகி தேர்தலில் ஆசனங்கேட்டு பெற்று, எதுவுமறியா மக்களுக்கு – அந்த ஊடகம் கூறிய கருத்தை நம்பிய மக்களுக்கு – ”ஊடகப் போராளி தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார்” என்று கூறி வாக்குப் பெற்று நாடாளுமன்று சென்றதும் வரலாறு. இந்த இரு ஊடகங்களும் அரசியல் கலப்பில்லாதவை என்று ஆசிரியர் தலைப்பில் எழுதிய காரணத்தால் – ஊடக நிர்வாகி தேர்தலில் நின்றமையால் – இரு ஊடகங்களின் ஆசிரியராகச் செயற்பட்டவர் தனது ஊடகப் பணியில் இருந்து ஒதுங்கிக்கொண்டமையும் கடந்தகால வரலாறு.

நான் 2000 ஆம் ஆண்டு அங்கு கடமையாற்றியபோது தமிழில் பாண்டித்தியம்பெற்ற வடக்கிலுள்ள பல அறிஞர்கள், புலவர்கள் என்னோடு பணியாற்றினார்கள். அவர்களிடமிருந்து பெற்ற பிச்சைதான் இன்று என்னை ஒரு பத்தி எழுத்தாளனாக உயர்த்தியது. பிரதம ஆசிரியர் அடிக்கடி என்னிடமும் சக பணியாளர்களிடமும் கூறுவார், ”எமது பத்திரிகையைப் பார்த்துத்தான் மாணவர்கள் தமிழைக் கற்கின்றார்கள். நாம் இலக்கண, இலக்கியப் பிழைகள் இன்றி கட்டுரைகளையும் செய்திகளையும் உருவாக்கவேண்டும்”. என்பார்.

இந்த ஊடகம் யுத்தகாலத்தின் இனத்தின் குரலாக சர்வதேச அரங்கில் ஒலித்தது. இதற்காக அதன் பணியாளர்கள் கொடுத்த தியாகங்கள் எண்ணிலடங்கா. எத்தனையோ உயிர்கள் காவுகொல்லப்பட்டன. ஆனாலும், ஊடகப் போராளியாகக் களத்தில் பலர் நின்று சமராடியமையால்தான் ‘துணிச்சல்மிகு ஊடக விருது” அதற்குக் கிடைத்தது. தலைவர் பிரபாகரன் கூட அந்த ஊடகத்தைப் பாராட்டியுள்ளார். அந்த நேரத்தில் அதன் செயற்பாட்டை வர்ணித்துக்கொண்டே செல்லலாம். ஒரு செய்தி தவறாயின் அதற்கு மறுப்பு சம்பந்தப்பட்ட தரப்பிலிருந்து கிடைக்கப்பெறுமிடத்து, அது அப்படியே பிரசுரிக்கப்படும். சிலவேளை அந்த மறுப்பு உண்மைக்குப் புறம்பாயின் ஆசிரியர் குறிப்பு வரையப்பட்டு ‘ஆ – ர்”. என்று இடப்படும் ‘ஆ – ர்’ என்றால் ஆசிரியர் என்பது பொருள். தற்போது பத்திரிகையில் எந்த மறுப்பும் பிரசுரிக்கப்படுவதில்லை. பத்திரிகையின் முழுப் பொறுப்பானவராக ஆசிரியரே காணப்படுவார். ஆசிரிய பீடத்துடன் நிர்வாகி கூட தலையிட முடியாது. நிர்வாகியின் விருப்பு வெறுப்புக்கள் இன்றி பத்திரிகை செயற்பட்டது. இந்த இடத்தில் இன்னொரு முக்கிய விடயத்தையும் குறிப்பிட்டாகவேண்டும்.

2011 ஆம் ஆண்டு நான் ஊடகப் பணியில் இருந்து ஒதுங்க நிர்வாகத்தால் நிர்ப்பந்திக்கப்பட்டேன். அதற்குரிய காரணத்தை அறிந்தால் வியப்பாக இருக்கும். 2011 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வலி.வடக்கு பிரதேசசபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் நான் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். நான் ஓர் அரசியல் கட்சி சார்ந்துள்ளமையால் ஊடகத்தில் கடமையாற்ற முடியாது என்றும் எனது தனிப்பட்ட அரசியல் சார்ந்த விருப்பு வெறுப்புகள் அந்த ஊடகத்தில் பிரதிபலிக்கப்படும் என்பதாலும் ஊடகத்துறையிலிருந்து ஒதுங்குமாறு நிர்வாகத்தால் பணிக்கப்பட்டேன். அவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து ஊடகப் பணியில் இருந்து ஒதுங்கினேன். நான் ஊடகப் பணியிலிருந்து என்ன காரணத்துக்காக ஒதுக்கப்பட்டேனோ நான் பணிபுரிந்த ஊடகத்தின் நிர்வாகி அந்த நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பதையும் குறிப்பிட்டாகவேண்டும்.

இவ்வாறு பல ஊடக ஜாம்பவான்களால் பார்த்துப் பார்த்து ஊடக ஒழுக்கம் சார்ந்து வளர்ந்த பிள்ளை, இன்று தறிகெட்டு – தடம்மாறி – அற்ப பதவிகளுக்காகவும் சுகபோகத்துக்காகவும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக தமக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்பதற்காக உண்மைக்கு நேர்மாறாக – ஊடக தர்மத்துக்கு நேர் எதிராக – அறத்துக்கு நேர் முரணாக – செயற்படுகின்றமை வேதனையளிக்கின்றது.

அந்த ஊடகம் இலக்கு வைத்துத் தாக்கும் நபர் வேறுயாருமல்லர். இன்று தமிழ் மக்களின் இராஜதந்திரியாக உள்ள எம்.ஏ.சுமந்திரன். ஒரு காலத்தில் இந்த ஊடகத்துக்கும் அவர் சம்பளமில்லா இராஜதந்திரியாகச் செயற்பட்டவர். இந்த ஊடகத்துக்காக 12 வழக்குகளை இலவசமாக வாதாடி இன்றுவரை அந்த ஊடகத்தைக் காத்தவர். என்ன செய்வது ”விநாசகாலே விபரீத புத்தி” என்று வடமொழியில் ஒரு சுலோகம் உள்ளது. அறிவு மங்கினால் புத்தி பேதலிக்கும். அவ்வாறு பேதலித்துத்தான் அந்த ஊடக நிர்வாகி – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் – செயற்படுகின்றார் போலும். நான் தற்போது தேர்தல் காலம் என்றதால் அந்த எம்.பியும் எனது கட்சி சார்ந்தவர் என்பதாலும் அவர் தொடர்பிலான விளம்பரப்படுத்தலை மட்டுமே செய்தேன். ஆயினும் நிலைகெட்ட மாந்தரை எண்ணி நெஞ்சு பொறுக்காமல் இப்பத்தியை வரைகின்றேன்.

நான் இவ்வளவும் புலம்புவதற்குக் காரணம், நேற்று யாழ்மாவட்டத்தில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையின் முன்பக்கத்தில், ஒரே கட்சியில் போட்டியிடும் – ஒரே மேடையில் சந்திக்கத் தயாராகும் – ஒரு வேட்பாளர் தனது சக வேட்பாளரை அரசியல் காழ்ப்புணர்வால் திட்டமிட்டு தனது ஊடகத்தால் தாக்கும் வகையில் ”சுமந்திரனால் மட்டும் 20 பேர் அரசியல் கைதிகள்” என்றும் இந்த 20 பேரும் உள்ளிருப்பதற்கு சுமந்திரனே காரணன் என்ற பொருள்படவும் செய்தி வரையப்பட்டுள்ளது. இதன் உண்மைத் தன்மை பற்றி மக்கள் புரிய – தெளிய -வேண்டும்.

சுமந்திரனைக் கொல்ல முயற்சிகள் நடைபெற்றன எனக் கூறப்படுகின்றது. அதுதொடர்பில் இருபது பேர்வரை (அந்த ஊடகச் செய்தியின்படி கைது செய்யப் பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலை முயற்சிகள் தொடர்பாக முறைப்பாட்டாளர் சுமந்திரன் அல்லர். இப்படித் தம்மைக் கொல்ல முயற்சி நடப் பது குறித்து மேற்படி சந்தேக நபர்களைக் கைது செய்த பின்னர் பொலிஸ் தரப்புக் கூறித்தான் சுமந்திரனுக்கே விடயம் தெரியும். அப்படி இருக்கையில் இந்த இருபது கைதிகள் உள்ளே இருக்கின்றமைக்கு சுமந்திரன் எப்படி பொறுப்பாவார்? எப்படிக் காரணமாவார்?

சுமந்திரன், அந்த இருபது பேரையும் விட்டுவிடுங்கள் என்று கூறினால் கூட இலங்கைச் சட்டத்தின் கீழ் அவர்களை விடுதலை செய்ய முடியாது.

அப்படி இருக்கையில் இந்த இருபது பேரும் உள்ளே இருப்பதற்கு சுமந்திரன் எப்படிப் பொறுப்பேற்க முடியும்?

சுமந்திரன் பொறுப்பு என்று நாங்கள் கூறினோமா என்று அந்தச் செய்தியைப் பிரசுரித்த ஊடகம் கேட்கலாம். நீங்கள் அப்படிக் கூறவில்லை . ஆனால் இந்தச் செய்தியை தலைப்பிட்டுப் புனைந்தவிதம் அத்தகைய கருத்தைத்தான் தந்து நிற்கின்றது.

இதில் இன்னும் சில வேடிக்கைகள் உள்ளன.

அந்த ஊடகம் குறிப்பிடும் 20 அரசியல் கைதிகளில் – சுமந்திரன் கொலை முயற்சி தொடர்பாக உள்ளே இருக்கும் இருபது பேரில் – ஏழுபேர் சிங்களவர்கள். பாதாள உலகக் கோஷ்டியைப் சேர்ந்த வர்கள். சுமந்திரனைக் கொல்வதற்கு ‘கொண்ட்ரக்ட்’ எடுத்த குழுவோடு சேர்ந்து இயங்கியவர்கள். சுமந்திரன் கொலை முயற்சி விவகாரமும் அவர்கள் உள்ளே இருப்பதற்கான காரணங்களில் ஒன்று.

சுமந்திரனைக் கொல்ல முயன்ற ‘சாதனை’யில் அவர்கள் அடங்குகின்றமையால் அந்த ஊடகத்தின் பார்வையில் அந்த மாபியா குழு உறுப்பினர்கள் ஏழுபேரும் கூட அரசியல் கைதி அந்தஸ்தைப் பெற்று விட்டார்கள். அதில் மற்றொருவர் முன்னர் ஈ.பி.டி.பியிலும், பின்னர் அண்மையில் மொட்டுக் கட்சியிலும் தேர்தலில் போட்டியிட்டவர். அவரும் சுமந்திரனைக் கொல்ல முயன்ற அரிய பணி காரணமாக இந்த ஊடக முதலாளியின் பார்வையில் அரசியல் கைதி அந்தஸ்துக்கு உயர்ந்து விட்டார்.
இந்த விவகாரத்திலே – சுமந்திரனைக் கொல்ல முயன்ற விடயத்திலே – இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதல் சம்பவம் தொடர்பில் முதலில் கைதான ஐவரும் பெரும்பாலும் முன்னாள் போராளிகள்.

இவர்கள் கைது செய்யப்பட்ட காலத்திலேயே இவர்களுக்கு எதிரான வழக்குகளை பயங்கரவாத்தடைச்சட்டத்தின் கீழ் தொடுப்பது தவறானது, சாதாரண சட்டத்தில் விடயத்தைக் கையாளுங்கள் என்ற கோரிக்கை சுமந்திரன் சார்பில் அரசுத் தரப்பிடம் முன்வைக்கப்பட்டது.
அந்தக் கோரிக்கைப்படி முதலில் அவர்கள் சாதாரண சட்டத்தில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்கள். அதனால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், வழக்குத் தொடுக்கப்பட்ட போது தட்டை மாற்றிப் போட்டு விட்டது சட்டமா அதிபர் திணைக்களம். குற்றப்பத்திரம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.
முதலில் கைது செய்யப்பட்ட ஐவரில் ஒருவருக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லாதமையால் அவரை விடுவித்தது அரசுத் தரப்பு.
ஏனைய நால்வருக்கும், ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒருவருமாக ஐவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப் பட்டது – பயங்கரவாதத் தடைச் சட்டத்தில்.

அதனால் பிணையில் விடுவிக்கப்பட்ட அந்த நால்வரும் மீண்டும் கைதாகினர். இப்போதும் தடுப்பில் உள்ளனர்.

இவர்கள் மீளக் கைது செய்யப்பட்ட காலத்திலே இவ்விடயத்தை ஒட்டித் தாம் ஒரு சட்டத்தரணி என்ற முறையில் சுமந்திரன் அப்போதைய சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவை (இப்போதைய பிர தம நீதியரசர் நேரில் சென்று சந்தித்தார்.

“நாங்கள் பயங்கரவாத தடைச்சட்டம் தவறானது என்று நாடாளுமன்றத்தில் வாதிடுறோம். நல்லாட்சி அரசின் கட்சிகள் பலவும் அதனை ஒப்புக்கொண்டு அந்தச் சட்டத்தை மாற்ற முயல்கின்றன. எனவே, இவர்களுக்கு எதிரான வழக்கைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடுத்ததை வாபஸ் பெறுங்கள். சாதாரண சட்டத்தின் கீழ் வழக்கைத் தொடுக்கலாம்” – என்று வாதிட்டார். ஆனால் அது பயன்தரவில்லை .

இப்படித் தன்னை கொல்ல சதி செய்தனர் என்ற வழக்கைக் கூட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கக் கூடாது என்று வற்புறுத்தியவர் சுமந்திரன்.

அடுத்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பாலும் பாதாள உலகக் கோஷ்டிக்காரர்கள்.

இப்படி சுமந்திரனைக் கொல்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றிய முழு விவரத்தையும் மக்களுக்கு அம்பலப்படுத்தியமையும் கூட அந்த ஊடகம்தான்.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் தனது பத்திரிகையில் ஒன்றரைப் பக்கத்துக்கு மேல் ”சுமந்திரனுக்கு வைக்கப்பட்ட குறி!’ என்ற தலைப்பில் முழுவிவரமாக இந்தக் கொலை முயற்சி பற்றி விவரணம் வெளி யிட்டு, அந்தச் செய்தியையும் பணமாக்கிக் கொண்ட அந்த ஊடகம், இன்று விருப்பு வாக்குகளுக்காக சுமந்திரனைக் கொல்லச் சதி செய்தவர்கள் சிறையில் வாடுவதற்கு சுமந்திரன் தான் காரணன் என்பது போல படம் போட முயல்கின்றது.
சிங்கள மாபியா கும்பலை தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியலில் அணி சேர்க்கின்றது.

இவ்விடயத்தில் இன்னும் விவரமாகப் பல விடயங்கள் எழுதலாம். எனினும் வேண்டாம், விட்டுவிடுவோம்.

ஆனால் இப்படி விதண்டாவாதச் செய்தியைப் பிரசுரிப்பது பத்திரிகை இயலுக்கே அபத்தம்… பொறுப்புள்ள பத்திரிகையா ளர்கள்யாரும், இப்படி முதலாளியைத் திருப்திப்படுத்துவதற்காக இழிநிலை இதழியலுக்குப் போக மாட்டார்கள். அப்படிப் போகக் கூடியவர்கள் இருப்பதால் தான் இப்படி இழிநிலை இதழியல் இன்னும் தப்பிப் பிழைக்கின்றது…..!

அந்த நாளிதழில் நாளை பிரதான செய்தியாக –

”கொழும்பில் பிறந்த சுமந்திரனுக்கு வடக்கு கிழக்கில் எதுவும் தொயாது!
சுமந்திரனுக்கு கருணா சாட்டை அடி”

என்பது பிரதான தலைப்பாக வரும். எதிர்பார்த்துக் காத்திருப்போம்……!

About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply