சிவசக்தி ஆனந்தனைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ததேகூ நா.உறுப்பினர்கள் மீது சேறு வாரிப் பூசக் கூடாது!

சிவசக்தி ஆனந்தனைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ததேகூ நா.உறுப்பினர்கள் மீது சேறு வாரிப் பூசக் கூடாது!

நக்கீரன்

எதிர்வரும் ஓகஸ்ட் 05 இல் நடைபெற இருக்கும் தேர்தல் செலவுக்கு மக்களிடம் பணம் கேட்டு சி.வி. விக்னேஸ்வரன் அறிக்கை விட்டுள்ளார். இது எதிர் பார்த்ததே. 2013 ஆம் ஆண்டு நடந்த மாகாண சபைத் தேர்தல் நேரத்திலும் மாதாந்தம் ஓய்வூதியாகமாகக் கிடைக்கும் ரூபா 30,000 இல் தான் சீவிப்பதாகவும் தேர்தலுக்குச் செலவழிக்கத் தன்னிடம் பணம் இல்லை என்று சம்பந்தன் ஐயாக்குச் சொன்னார்.

 “அதையிட்டுக் கவலைப் படவேண்டாம். அதற்கான ஒழுங்கை நான் செய்கிறேன்” எனச் சொன்ன சம்பந்தன் ஐயா கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் க.ச.குகதாசன் அவர்களோடு தொடர்பு கொண்டு  வழக்கமான தேர்தல் நிதியளிபுக்கு மேலாக விக்னேஸ்வரனுக்கு சில இலட்சம் ரூபாய்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்படியே அவருக்கு அந்தப் பணம் அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் நன்றிகொன்ற விக்னேஸ்வரன் 2015 இல் நடந்த நாடாளுமன்ற தேர்தல் நிதி சேர்ப்பு நிகழ்சிக்கு வருமாறு அழைப்பு விடுத்த போது தனக்கு முதுகில் புண், விமானத்தில் நெடுந்தூரம் பயணம் செய்ய முடியாது எனச் சொல்லி அந்த அழைப்பை தட்டிக் கழித்துவிட்டார். மருத்துவர் சத்தியலிங்கத்தை உங்களுக்குத் துணையாக வர ஒழுங்கு செய்கிறோம் என்றும்  கேட்டுப் பார்த்தோம். அவர் மசியவில்லை. பின்னர் தனது நெருங்கிய நண்பர்களோடு பேசும் போது “உவங்கள் (கனடா ததேகூ) என்னை வைத்துத் தேர்தலுக்கு நிதி சேர்க்கப் பார்க்கிறார்கள்” என சொல்லிக் கொண்டதாக அறிந்து கொண்டோம்.

பின்னர் அவர் அதே முதுகுப் புண்ணோடு கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்குப் பயணம் செய்து “வட மாகாண அபிவிருத்தி” என்ற போர்வையில் ஒரு இலட்சம் அ.டொலர் அளவில் நிதி திரட்டினார் என்பது தனிக்கதை. கனடாவில் மட்டும் க.டொலர் 50,150 திரட்டப்பட்டது. பலர் பணமாகவும் சாசோலையாகவும் கொடுத்தார்கள். உண்மையில் இரவு விருந்து நிகழ்ச்சி உட்பட மொத்தம் 113,500 கனடிய டொலர் சேர்க்கப்பட்டது. விக்னேஸ்வரனது பயணச் செலவு 11,434 டொலர்,  ஐந்து நட்சத்திர கோட்டல் செலவு டொலர் 2,342  போன்ற செலவுகள் போக  மிஞ்சிய தொகையே க.டொலர் 50,150 ஆகும்.

சரி, இனி அவரது  அறிக்கைக்கு வருவோம். வழக்கம் போல தனது இயலாமைக்கும் வினைத்திறன் இன்மைக்கும் தமிழ் அரசுக் கட்சியைச் சாடியிருக்கிறார்.

“என்னை அரசியலுக்கு அழைத்து வந்தவர்களே எனக்கு விரோதிகளாக மாறிக் கொண்டனர்” என்கிறார். சரி அப்படியே வைத்துக் கொள்வோம். ஏன் விரோதிகளாக மாறினார்கள்? சம்பந்தன் ஐயாவின் புண்ணியத்தில் வட மாகாண சபை நிருவாகம் எந்தக் கட்சித் தலையீடுமின்றி அவரது பொறுப்பில் விடப்பட்டது. அமைச்சர்களை அவரே தெரிவு செய்தார். பின் அவரே அந்த அமைச்சர்களைப் பந்தாடினார். விசாரணை ஆணையத்தால் குற்றமற்றவர் என சொல்லப்பட்ட மருத்துவர் சத்தியலிங்கத்திடம் இருந்து இராசினாமாக் கடிதத்தை வாங்கிக் கொண்டார். குருகுலராசாவிடம் இருந்த கல்வி அமைச்சை  ஆனோல்ட் அவர்களுக்கு வழங்குமாறு தமிழ் அரசுக் கட்சித் தலைவர் கேட்ட போது ‘ஆம்’ என்று தலையசைத்துவிட்டுப் போன  விக்னேஸ்வரன் இபிஆர்எல்எவ் கட்சியைச் சார்ந்த க. சர்வேஸ்வரனை கல்வி அமைச்சராக்கி அழகு பார்த்தார். “அனந்தி மீதான ஒழுக்காற்று நடவடிக்கை நிலுவையில் இருக்கிறது. அவருக்கு அமைச்சுப் பதவி கொடுப்பது உசிதமில்லை” என்று  அவருக்குச் சொல்லப்பட்ட பின்னரும் அவரையே அமைச்சராக்கி அழகு பார்த்தார்.

இப்படித் தான் நினைத்தபடி எல்லாவற்றையும் செய்த விக்னேஸ்வரன் இப்போது சொல்கிறார் தன்னை அரசியலுக்கு அழைத்து வந்தவர்களே தனக்கு விரோதிகளாக மாறிவிட்டனராம். இதை யாருக்குச் சொல்லி அழுவது என்பது விளங்கவில்லை.

“அவர்களின் சொற்களைக் கேட்டு, ஒரு கிளிப்பிள்ளையாக இருந்து முதல்வர் பதவியை காப்பதை விடவும் எனது தேர்தல் வாக்குறுதிகள் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்குத் துரோகம் செய்வதை விடவும் மக்களின் மனக்கிடக்கைகளை உலகுக்கு உணர்த்த வேண்டும் என்பதும் எத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும் எமது மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்ட இனப்படுகொலையை உலகத்துக்கு வெளிப்படுத்தவேண்டும் என்பதும் என் அவாவாகியது” என்கிறார்.

உண்மையில் விக்னேஸ்வரனுக்கு வட மாகாண சபை உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன என்பது  கடைசிவரை தெரிந்திருக்கவில்லை. உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, கொடுக்கப்படும் நிதியைப் பயன்படுத்தி  போரினால் தங்கள் வாழ்வாதாரங்களைத் தொலைத்த மக்களது வாட்டத்தைப் போக்கி அவர்களது அடிப்படை வசதிகளான வீடு, குடிதண்ணீர், மலசலசூடம், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றை செய்து கொடுப்பதே ஒரு முதலமைச்சரின் கடமையாக இருந்தது. அதை அவர் செய்யவில்லை. மொத்தம் 444 தீர்மானங்களை நிறைவேற்றி  சபையின் நோக்கத்தை பாழடித்தார்!

சுருக்கமாகச் சொன்னால் ஒரு கோழிப்பண்ணையைக் கூட அவரால் உருவாக்க முடியவில்லை! ஒரு பால்பண்ணையைக்  கூட அவரால் தொடக்கி வைத்து நாலு பேருக்கு வேலை கொடுக்க முடியவில்லை.

வேலை செய்யத் தெரியாதவன் தனது  ஆயுதங்களைக்  குறை கூறுவது போல தனது தோல்விக்கு மற்றவர்களைக் குறைசொல்வது, குற்றம் கண்டு பிடிப்பது போன்றவற்றை  ஒரு கலையாகவே விக்னேஸ்வரன் வளர்த்திக் கொண்டிருக்கிறார்.  

“இதனால் பல்வேறு இன்னல்களையும் நெருக்கடிகளையும் குழி பறிப்புக்களையும் சந்தித்த நிலையிலேயே துணிச்சலான பல நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் தமிழ் மக்கள் கூட்டணி
என்ற புதிய கட்சியை ஆரம்பித்து எனது புதிய அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருகின்றேன். இந்த அரசியல் பயணத்தில் உங்கள் அனைவரதும் எல்லா வகையிலுமான ஒத்துழைப்புக்களை வேண்டி நிற்கின்றேன். என்னை முதலமைச்சர் பதவியில் இருந்து தூக்கி எறியவும் எனது குரலைப் புதைக்கவும் சிலர் முற்பட்டவேளை மக்களாகிய நீங்கள் திரண்டு ஆதரவளித்தீர்கள். எனக்குத் தொடர்ந்தும் உங்கள் ஆதரவும் பங்களிப்பும் வேண்டும். குறிப்பாக எதிர்வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் உதவி எனக்கு எல்லா வழிகளிலும் தேவைப்படுகின்றது.

“என்னை முதலமைச்சர் பதவியில் இருந்து தூக்கி எறியவும் எனது குரலைப் புதைக்கவும் சிலர் முற்பட்டவேளை மக்களாகிய நீங்கள் திரண்டு ஆதரவளித்தீர்கள். எனக்குத் தொடர்ந்தும் உங்கள் ஆதரவும் பங்களிப்பும் வேண்டும். குறிப்பாக எதிர்வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் உதவி எனக்கு எல்லா வழிகளிலும் தேவைப்படுகின்றது” என்கிறார் விக்னேஸ்வரன்.

யார் அந்த மக்கள் கூட்டம்? விக்னேஸ்வரனுக்கு ஆதரவு  தெரிவித்த மக்கள் கூட்டத்தில் தொண்ணூறு விழுக்காடு  கஜேந்திரகுமாரின்  சைக்கிள் கட்சிக்காரர்கள். எஞ்சியவர்கள் யாழ் பல்கலைக் கழக மாணவர்கள்.

ஆனால் அவரது பதவியைக் காப்பாற்றிய கஜேந்திரகுமாரைப் பற்றி விக்னேஸ்வரன்  அடுக்கடுக்காக குற்றச் சாட்டுக்களை வீசியிருந்தார். 

விக்னேஸ்வரன் அனுப்பி வைத்த – வாராந்த ஊடகவியலாளர் கேள்வி பதில் அறிக்கையில் ‘தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான் தமிழர்களின் ஒற்று மைக்கு சாபக்கேடு‘ என்ற சாரப்பட கடுமையாகத் தாக்கு தாக்கு என்று தாக்கியிருந்தார்.

கேள்வி :- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நீங்கள் ஒற்றையாட்சி அரசமைப்புக்குள் தமிழ் மக்களை ஏமாற்றி முடக்குவதற்கு ஈ.பி. ஆர்.எல்.எவ். கட்சியுடப் இணைந்துள்ளீர்கள் எனக் கூறுகின்றனரே? உங்கள் கருத்தென்ன?

பதில்: – யார் இந்தத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர்? அந்தப் பழைய தமிழ் காங்கிரஸ் சின்னத்தில் பயணிப்பவர்களைத்தானே நீங்கள் கூறுகின்றீர்கள்?

ஊடகவியலாளர்:- ஆம்.

பதில்: – அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியினர் தமது யாப்பை மாற்றி விட்டார்களா? எனக்குத் தெரிந்த வரையில் ஒற்றையாட்சிக்குள் ஐம்பதுக்கு ஐம்பது என்றுதான் ஜீ.ஜீ. கூறிவந்தார். இப்போதைய முன்னணியினர் அதனை மாற்றி விட்டார்களா? அப்படியானால் என்னவென்று? இப்பொழுது அவர்கள் சமஷ்டி என்று மாற்றியிருந்தால் ஜீ.ஜீ. தனது கட்சியில் இருந்த தந்தை செல்வாவிடம் மண்டியிட்டார் என அர்த்தமாகும். தனித் தமிழ் ஈழம் என்று மாற்றியிருந்தால் அவர் சி.சுந்தரலிங்கம், வி.நவரத்தினம் ஆகியோரின் கருத்துக்களை ஏற்றார் என முடியும். ஜீ.ஜீ. சிங்களவரிடம் மண்டியிட்டாலும் இன்னொரு தமிழரிடம் மண்டியிடமாட்டாரே!

எனக்குத் தெரிந்த வரையில் அகில இலங்கைத்க் தமிழ் காங்கிரஸ் இன்று வரையில் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட ஒரு கட்சிதான்! அவ்வாறான கட்சியின் சின்னத்தையும் பதிவையும் தொடர்ந்தும் பாவிக்கும் முன்னணியினர் எவ்வாறு மற்றவர்களைத் தமிழ் மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சிக்குள் முடக்க எத்தனிக்கின்றார்கள் என்று கூறலாம்?

நாங்கள் கேட்பது சமஷ்டி. அது எல்லோருக்கும் தெரிந்த விடயம். நாங்கள் ஒற்றையாட்சிக்குள் மக்களைக் கொண்டு செல்ல எத்தனிக்கின்றோம் என்றால் எமக்கும் மத்திய அரசாங்கங்களுக்கும் இடையில் ஏதோவொரு கரவான இணக்கப்பாடு இருப்பதாகக் கூறுகின்றார்களா?

ஊடகவியலாளர்:- ஆமாம். அவ்வாறுதான் கூறுகின்றார்கள்!

பதில்:- சரி! எங்களுக்கு அவ்வாறான உறவு இருப்பதானால் நாங்கள் தமிழ் மக்களிடையே ஒற்றுமையை உண்டு பண்ண எத்தனித்திருக்க மாட்டோம் அல்லவா?

ஊடகவியலாளர்: – விளங்கவில்லை.

பதில்:- அதாவது நாங்கள் மத்திய அரசாங்கங்களுடன் கரவான உறவு வைத்திருப்பது உண்மையானால் நாங்கள் என்ன செய்வோம்? எந்தத் தருணத்திலும் தமிழ் மக்களோ மக்கல் தலைவர்களோ ஒன்று சேர விடாது தடுப்போம் அல்லவா? அதாவது தமிழ் மக்களிடையே ஒற்றுமை ஏற்படுவதால் மத்திய அரசாங்கத்திற்கு ஏற்படக் கூடிய பாதிப்பைத் தடுப்போம் அல்லவா?

ஊடகவியலாளர்: – ஆமாம்.

பதில்:- நாம் அப்படியொன்றும் செய்யவில்லையே! இன்றும் நாங்கள் தமிழர் ஒற்றுமைக்காக கஜேந்திரகுமாரை எங்களுடன் சேருமாறுதானே கூறிவருகின்றோம்? அவரின் மூன்று தலை முறையினரைத் தெரிந்த என்னால் என் மகனுடன் இறுதிச் சட்டப் பரீட்சை செய்த மற்றும் என் நண்பர் தர்மராஜா தன் மகன் போல் அரவணைத்த கஜேந்திரகுமாரை விமர்சிப்பது எனக்குச் சங்கடமாக இருக்கின்றது. ஆனால் உண்மைகளை வெளியிட வேண்டிய தருணம் வந்துவிட்டது.

1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்று மையை முதலில் 2009 இல் குலைத்தவர் யார்?

2. தமிழ் மக்கள் பேரவையின் ஒற்றுமையைக் குலைத்து அதன் முக்கியத்துவத்தை மழுங்கச் செய்தவர் யார்?

3. பல்கலைக்கழகத்தில் ஆறு கட்சிகள் சேர்ந்து தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஆவணப்படுத்த எத்தனித்த போது அதன் ஒற்றுமையைக் குலைத்தவர்கள் யார்?

4. காணாமல் போனோரின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து தமக்குள் ஒரு ஐக்கியத்தைத் தேடிய போது தம் கட்சிக்கென வேறு ஓர் அலகை உண்டு பண்ணி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை இரண்டு அணிகளாகப் பிரித்து, அவர்கள் போராட்டத்தைத் திட்டமிட்டு மழுங்கடிப்பவர் யார்?

5. யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்காக தமிழர் அனைவரும் உணர்வெழுச்சியுடன் பங்குகொள்ளும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் தாம் மட்டும் வேறான இடத்தில் தமது நிகழ்வை நிகழ்த்திப் பிரிவினையை வளர்ப்போர் யார்?

6. ஈ.பி.ஆர்.எல்.எவ். உடன் கூட்டுச் சேருவதாகக் கூறிக் காலத்தைக் கடத்தி அவர்கள் கூட்டைச் சிதைத்தவர்கள் யார்?

7. எமது இரண்டாவது ‘எழுக தமிழ்’ நிகழ்வை எப்படியாவது குலைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஒற்றுமையைச் சிதைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியவர்கள் யார்?

8. தமது கொள்கை ஒற்றையாட்சியா, சமஷ்டியா, தனிநாடா என்பதை வெளிப்படுத்தாமல் ஒற்றையாட்சி காங்கிரஸ் சின்னத்தையும் கட்சியையும் தொடர்ந்து பாவித்து வருபவர்கள் யார்?

9. இந்தியா வழி நடத்துகின்றது என்று மற்றக் கட்சிகளைக் கண்டித்துக் கொண்டு, இரவில் ஜெட் விங்ஸில் சீனப் பிரதிநிதிகளைக் கரவாகக் கண்டு வந்தவர்கள் யார்?

10. கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது தமது சகோதரனை விடுவிக்கக் கோட்டாபயவுடன் கரவான ஒப்பந்தங்களில் ஈடுபட்டவர் எந்தக் கட்சி யைச் சேர்ந்தவர்?

11. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் விரக்தி கொண்ட மக்களை அவர்கள் நேசித்த தமிழ் மக்கள் பேரவை மூலம் தமக்கு ஆதரவைப் பெறத் தமிழ்த் தேசியப் பேரவை என்ற ஒன்றை உருவாக்கி தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவான மக்களின் வாக்குகளை 2015 இல் ஏமாற்றிப் பெற்றவர்கள் யார்?

12. பேசுவது முன்னணி, தஞ்சமடைவது காங்கிரஸ் என்ற ரீதியில் தம்மை ஒற்றையாட்சிக் காங்கிரஸினுள் இணைத்து வைத்து அரசாங்கத்திற்கு ஒற்றையாட்சி என்ற தலையையும், தமிழ் மக்களுக்கு இன்னொரு முகமாக வாலையும் விலாங்கு மீன் போலக் காட்டும் கட்சி எந்தக் கட்சி?

13. ஈ.பி.ஆர்.எல்.எவ்.ஐ வெளியேற்று, இல்லையேல் நாங்கள் உங்கள் கூட்டில் இணைய மாட்டோம் என்று எங்களுடன் இன்று வரையில் அடம் பிடிப்பவர்கள் யார்?

14. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெற்கில் சோரம் போன நிலையில், அரசியலைக் கொண்டு செல்ல வலுவானதொரு அரசியல் கூட்டு உருவாகும் போது தேசிய நலன் கருதி தாமும் கை கொடுத்து இணையாமல் மக்களுக்குத் துரோகம் செய்பவர்கள் யார்? ஆகவே தமிழ் மக்களின் ஒற்றுமையை இதுவரையில் திட்டம் போட்டுக் குலைத்து வருபவர்கள் யார் என்று நான் உங்களுக்குக் கூறத்தேவையில்லை. நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகின்றேன். தமிழ் மக்களின் பிளவு அல்லது ஒற்றுமையின்மை யாருக்கு நன்மை அளிக்கும்?

ஊடகவியலாளர்: – அரசாங்கத்திற்கும், பேரினவாதிகளுக்கும்!

பதில்: – சரியாகச் சொன்னீர்கள்! அரசாங்கத்திற்கும் பேரினவாதிகளுக்கும் நன்மை அளிப்பதற்காக இவ்வாறான செயல்களில் தொடர்ந்து ஒரு கட்சி ஈடுபட்டு வருகின்றதென்றால் தமிழ் மக்களை ஏமாற்றி வருவது நாங்களா? அவர்களா? அத்துடன் இத்தனை தரம் மக்களைப் பிரித்துப் பிரித்து செயல்பட்டமை தற்செயலாக நடந்த நிகழ்வுகளாக இருக்க முடியாது. யாரோ ஒருவரின் அல்லது பலரின் வழி நடத்தலில்தான் இவர்கள் இவ்வாறு நடக்கின்றார்கள் என்பது எனது சந்தேகம். எனது சந்தேகம் பிழையென்றால் இப்பொழுதாவது தமது குலைக்கும், சிதைக்கும் சிந்தனைகளை மூடை கட்டி வைத்துவிட்டு ஒற்றுமையின் பேரில் எம்முடன் சேர்ந்து பயணிக்கச் சொல்லுங்கள் காங்கிரஸாரை!

கஜேந்திரகுமாருக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். சான்றோர் நட்பு வளர்பிறை போன்று படிப்படியாக வளர்ந்து  முழுமை பெறும் நிலவுக்கு நிகராகும். நன்றி கொல்பவர் நட்பு படிப் படியாகக் குறைந்து செல்லும் தேய்பிறை போன்று மறைந்து போகும்!

“எமது கட்சி சார்பில் போட்டியிடுகின்றவர்கள் எவரும் பணம் படைத்தவர்கள் அல்லர். பணத்தை உழைக்கவும் அவர்கள் அரசியலைத் தேர்வு செய்யவில்லை. அவர்களுக்கு உங்களின் நிதியுதவி, பேருதவியாக அமையும். அரசியலுக்கு வந்தால், பணம் உழைக்கலாம், வாகன உரிமத்தை விற்று அந்தப்பணத்தைத் தமக்கு எடுக்கலாம், மனைவி, பிள்ளைகள் என குடும்ப உறுப்பினர்களுக்கு உத்தியோகம் கொடுத்து அந்த வருமானங்களையும் சுருட்டிக்கொள்ளலாம் என்ற இன்றைய தமிழ் அரசியல் தலைவர்கள் மத்தியில் காணப்படும் உழைப்பு கலாசாரத்தை மாற்ற வேண்டும். அதனை முதல் வேலையாக எமது கூட்டணி செய்யும்”  என்கிறார் விக்னேஸ்வரன்.

“நான் ஒருவன்தான் யோக்கியன், மற்றவர்கள் எல்லாம் அயோக்கியர்கள்” என்பது விக்னேஸ்வரனின் அடிப்படை அரசியல் சித்தாந்தம்s.  அவன் கிடக்கிறான் குடிகாரன் எனக்கு வார் என்று சொன்னவனின் அடுத்த வீட்டுக்காரர்.

“வாகன உரிமத்தை விற்று அந்தப்பணத்தைத் தமக்கு எடுக்கலாம்” எனக் குற்றம் சாட்டும் விக்னேஸ்வரனது தமிழ் மக்கள் தேசியக் சுட்டமைப்பின் செயலாளர் சிவசக்தி ஆனந்தனை பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் இப்படிக் குற்றம் சாட்டுகிறார்! சிவசக்தி ஆனந்தன் தனக்குக் கிடைத்த வாகன உரிமத்தை விற்றவர் என்பது உலகறிந்த உண்மை. அதை வசதியாக விக்னேஸ்வரன் மறந்து விட்டார். சரி அது போகட்டும். விக்னேஸ்வரனது யோக்கியதை என்ன? அவர் சொகுசு வாகனத்துக்கு விண்ணப்பித்தாரா இல்லையா? தனக்கு அ.டொலர் 45,000  பெறுமதியான வாகனத்துக்கு கிடைத்த உரிமம் தவறானது. முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு அ.டொலர் 65,000 பெறுமதியான வாகனத்தை இறக்குமதி செய்ய உரிமையுண்டு எனப்  பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டார்.

வரியில்லாத கார்களை அமைச்சர்கள், முதலமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறக்குமதி செய்யலாம் என்பது ஒரு சலுகை. உரிமையில்லை. அமைச்சரவைதான் அப்படியான முடிவை எடுத்தது. அதே அமைச்சரவைதான் அப்படியான சலுகையை நாட்டின் நிதி நிலைமையைக் காரணம் காட்டி நிறுத்தியது.

“வடமாகாண முதலமைச்சரின் உரித்து வேறு, அதை நடைமுறைப் படுத்தும் நடவடிக்கைகள் வேறு என்பதை அமைச்சர் மங்கள சமரவீர சரியாகப் புரியாது விட்டுள்ளார் என்றே தோன்றுகிறது. அதனால் அவருக்கு உடனே கடிதம் எழுதி, தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரம் எனக்கு வழங்கவேண்டியது சட்டப்படி எனது உரித்து என்றும், அதனை வழங்குமாறும் கேட்டுள்ளேன்” என்றார் விக்னேஸ்வரன்.

வாகனத்தின் பெறுமதியான அ.டொலர் 65,000 (6.5 கோடி உரூபா)  பெறுமதியான காரை இறக்குமதி செய்வதற்கு மகன் பணம் தருவார் என்றார் விக்னேஸ்வரன்.  அவரது மகன் ஒரு கோடீசுவரனாக இருப்பது மெத்த மகிழ்ச்சியைத் தருகிறது. பின்  எதற்காக நான் ஒரு பிச்சைக்காரன் தேர்தலுக்குச் செலவழிக்கப் பணம் இல்லை, மக்களாகிய நீங்கள்தான் பணம் தரவேண்டும் என்று கெஞ்சுகிறார்?

விக்னேஸ்வரன்  பற்றைக்குள் இருந்த இரண்டு பறவைகளைப் பிடிக்க ஆசைப்பட்டு கையில் இருந்த ஒரு பறவையை பறக்கவிட்டவன் மாதிரி   கைக்கு வந்த அ.டொலர் 45,000  பெறுமதியான  வாகன உரிமத்தை திருப்பி அனுப்பிவிட்டு அ.டொலர் 65,000 உரிமத்துக்கு ஆசைப்பட்டதால் இரண்டை யும்  இழந்தார். இதைத்தான் பெரியோர்கள் பேராசை பெரும் நட்டம் என்று சொல்லி வைத்துள்ளார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை சரியில்லை, அவர்களது அணுகுமுறை சரியில்லை, பதவிக்காகவும் சலுகைகளுக்காகவும் பணத்துக்காகவும் தமிழ் இனத்தை விற்று விட்டார்கள் என விக்னேஸ்வரன் ஓயாது ஒழியாது குற்றம் சாட்டி வருகிறார்.

விக்னேஸ்வரன் கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறியக் கூடாது. தனக்குக் கிடைத்த வாகன உரிமத்தை கோடிகளுக்கு விற்றுவிட்ட தமிழ்த் தேசிய மக்கள்  முன்னணியின்  செயலாளர் சிவசக்தி ஆனந்தனைப்  பக்கத்தில் வைத்துக் கொண்டு ததேகூ நா.உறுப்பினர்கள் மீது சேறு வாரிப் பூசக் கூடாது.

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply