சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சு ஈழம் என்ற சொல்லைக் கேட்டு மிரளுகிறது!

சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சு ஈழம் என்ற சொல்லைக் கேட்டு மிரளுகிறது!

நக்கீரன்

கடந்த மாதம்  இலண்டனில் இருந்து வெளியாகும்  The Guardian  என்ற ஏட்டின் இணையதளப் பதிப்பில்  வாசகர்களிடம் ஒரு பயண வினாடி வினா: உங்கள் தீவுகள் உங்களுக்குத் தெரியுமா? என்ற தலைப்பில் பல கேள்விகளைக்   கேட்டிருந்தது. 

எந்தப்  பிரபலமான விடுமுறை தீவுக்கு ஈழம் என்ற ஒரு பூர்வீகப் பெயர் உள்ளது?  (Eelam is an indigenous name for which popular holiday island?) என்பதுதான் கேள்வி. 

வாசகர் ஒருவர் அந்தக் கேள்விக்கு சரியான பதிலை சிறிலங்கா எனத் தெரிவு செய்வார். ஆனால் ஒரு சிக்கல். எவரேனும் ஒருவர் சரியான பதிலாக சிறிலங்காவைக்  குறிப்பிடும் பட்சத்தில், அதில் இந்தத் தீவின் அண்மைய இராணுவக் கிளர்ச்சியை நடத்திய அமைப்பின் முழுப் பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற மேலதிக விளக்கம் வெளியிடப்பட்டது. (‘the full name of the island’s recent military insurgency was LTTE – Liberation Tigers for Tamil Eelam’ appeared.)

மிரண்டவன் கண்ணுக்கு அருண்டதெல்லாம் பேய் என்பார்கள்.  சிறிலங்கா வெளியுறவு அமைச்சு கேட்டுக் கொண்டதற்கு இணங்க இலண்டனில் உள்ள சிறிலங்கா தூதுவர்  சரோசா சிறிசேனா அந்தப் பயண வினாடி கேள்வியை நீக்குகமாறு த கார்டியன் செய்தித்தாளுக்கு கடித மூலம் வேண்டுகோள் விடுத்தார்.  அதில் “ஈழம் என்ற  சொல்லை  சிறிலங்காவில் ஒரு தனி அரச சித்தாந்தத்தை பரப்புவதற்கு புலிகள் பயன்படுத்தினர், மேலும் ஈழம் என்ற சொல்  ஒருபோதும் நாட்டிற்கான ஒரு பூர்வீக  சொல்லாகப் பயன்படுத்தப்படவில்லை” எனச் சொல்லப்பட்டிருந்தது.  (https://www.bbc.com/tamil/sri-lanka-52699833)

அதனை அடுத்து அந்தக் கேள்வி அகற்றப்பட்டது.

ஈழம் என்ற சொல்லைச் சிறிலங்காவில் ஒரு தனி அரச சித்தாந்தத்தைப் பரப்புவதற்கு வி. புலிகள் பயன்படுத்தினர் என்பது சரியே. ஆனால் ஈழம் என்ற சொல் ஒருபோதும் (சிறிலங்கா) நாட்டிற்கான ஒரு பூர்வீக  சொல்லாகப் பயன்படுத்தப் படவில்லை என்பது பிழையாகும். வரலாறு வேறு விதமாக இருக்கிறது.

இலங்கைக்  கிழக்காசியா மற்றும் கிழக்கு ஆபிரிக்காவுக்கிடையே சம தூரத்திலமைந்த ஒரு நாடு. கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியை இணைக்கும் கடற்பாதைகள் இலங்கை ஊடாகவே சென்றன.  இந்திய துணைக் கண்டத்திற்கு அண்மையில் இலங்கை இருந்த காரணத்தால் அதன் செல்வாக்குக்கு  உட்பட்டிருந்தது.

இலங்கையைப்  பல நாட்டினர் பல பெயர்களால் அழைத்து வந்துள்ளனர்.  அவை லங்கா (சமற்கிருதம்) , இலங்கை, ஈழம், மணி பல்லவம், இரத்தின துவீபம், நித்தில துவீபம், சேரன்றிப், சிலோன் முதலாயின ஆகும். இப் பெயர்கள் சில ஓரோர் காரணத்தைக் கருத்திற் கொண்டு, வேறு வேறு மொழி பேசும் வேற்று நாட்டார் தத்தம் மொழி இயல்புக்கமைய இட்டு வழங்கிய பெயர்களாகும்.

ஈழம் என்ற சொல்லுக்கு சரியான விளக்கம் இன்னும் யாரும் சொல்லவில்லை. ஈழம் என்னும் சொல்லுக்குக் கிழக்குநிலம் என்பது பொருள்.  தமிழக நிலப்பரப்பின் பெரும்பகுதி மேற்கில் உயர்ந்தும், கிழக்கில் தாழ்ந்தும் உள்ளது. இதனால் மேல்திசை, கீழ்திசை என்னும் சொல்வழக்கு தோன்றியது. தொல்காப்பியம் உவமைப் பொருள் உயர்ந்ததன் மேலும், தாழ்ந்ததன் மேலும் வரும் என்கிறது. அது தாழ்ந்த பொருளைக் ‘கிழக்கிடும் பொருள்’ என்று குறிப்பிடுகிறது.  எனவே ஈழம், கீழம், கிழக்கு என்பவை ஒன்றோடொன்று தொடர்புடைய ‘ஒருபொருட்பன்மொழி’ என்பது தெளிவு.

ஈழம் என்ற சொல்லுக்கு அகராதிகள்  (1) மாழைக்காட்டி (உலோகக்கட்டி), (2) பொன், (3) கள்,  (4) கள்ளி  எனப் பொருள் தருகின்றன.  இன்றைய கேரளத்தில் கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள சமூகம் ஈழவர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.

ஈழம் என்ற சொல்  சங்க இலக்கியங்களில் ஒன்றான  பட்டினப்பாலையில் இடம்பெற்றுள்ளது.

பட்டினப்பாலை என்பது  சங்ககாலத்து இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல். பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். பண்டைய சோழ நாட்டின் சிறப்பு, சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு, அதன் செல்வவளம், கரிகாலனுடைய வீரச்செயல்கள், மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை எடுத்து இயம்பும் இப் பாடல் 301 அடிகளால் அமைந்துள்ளது. கரிகால் சோழன் திரைக்கடலில் நாவாய்கள் பல செலுத்தி, சுங்க முறையை ஏற்படுத்தி, வெளிநாடுகளுடன் வாணிபத் தொடர்பு ஏற்படுத்தி தமிழகத்திற்கு உலகப்புகழை ஏற்படுத்தியவன். அவன் ஆண்ட சோழப் பேரரசின் தலைநகரமாக காவிரிப்பூம்பட்டினத்தின் விளங்கியது.  கரிகால் சோழனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருஞ்சிறப்பைச் சொல்வதே பட்டினப்பாலை ஆகும். காவிரிப்பூம்பட்டினத்தின் வளம் பல நிறைந்த தெருக்களை புலவர் வர்ணிக்கிறார்.

நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்,
காலின் வந்த கருங் கறி மூடையும்,
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்,
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்,
தென் கடல் முத்தும், குண கடல் துகிரும்,
கங்கை வாரியும், காவிரிப் பயனும்,
ஈழத்து உணவும்,
காழகத்து ஆக்கமும்,
அரியவும், பெரியவும், நெரிய ஈண்டி,
வளம் தலைமயங்கிய நனந் தலை மறுகின்….           (பட்டினப்பாலை)

ஈழம் என்பது இலங்கைத் தீவுக்கும், காழகம் என்பது  மலாய் நாட்டின் ஒரு பகுதியான கடாரத்தை குறிக்கும் பண்டைய பெயர்களாகும்.  கடாரம் இன்று கெடா என அழைக்கப்படுகிறது.

பிற்காலச் சோழர் காலத்தில் இயற்றப்பட்ட முத்தொள்ளாயிரம் என்ற சிற்றிலக்கியத்திலும் ஈழம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கிள்ளிவளவனின் வீரத்தைப் பாடும்போது,

“கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால்
தத்து நீர் தன்னுஞ்சை தான் மிதியா
பிற்றையும் ஈழம் ஒருகால் மிதியா வருமே
நம் கோழியர் கோ கிள்ளி களிறு”

என்கிறது. அதாவது கிள்ளிவளவனின் யானையானது காஞ்சிபுரத்தை ஆக்கிரமித்துப் பின்னர் வட இந்திய நகரமான  உஜ்ஜயினியில் ஒரு காலையும் அங்கிருந்து திரும்பி ஈழத்தில் மறுகாலையும் வைத்து சோழனின் ஆதிக்கம் தமிழ் நாட்டில் மட்டுமன்றி வட இந்தியாவிலும் கடல்கடந்து ஈழ நாட்டிலும் பரவி இருந்ததென்று பாடப்பட்டுள்ளது.

சங்க காலத்தில் ஈழத்துப் பூதன்தேவனார் என்ற புலவர்  இருந்திருக்கிறார். இவர் பாடிய ஏழு பாடல்கள் சங்க நூல்களில் இடம்பெற்றுள்ளன. இவர் அக்காலத்தில் தமிழர் வாழ்ந்து வந்த ஈழநாட்டில்  வாழ்ந்தவராக இருக்க வேண்டும்.

எனவே ஈழம் என்ற சொல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே வழக்கத்தில் இருந்து வருகிற சொல்லாகும்.

ஈழம் என்ற சொல்லை தனது அரசியலுக்குப் பயன்படுத்திய முதல் அரசியல்வாதி சி.சுந்தரலிங்கம் ஆவார். 1959 ஆம் ஆண்டில் ஈழத் தமிழ்ர் ஒற்றுமை முன்னணி என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். இக்கட்சிச்  தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாததால் 1960 மார்ச்சு தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டார்.

எனவே ஈழம் என்ற சொல்லுக்கு நீண்ட வரலாறு உண்டு.  ஈழம் என்ற சொல் ஒருபோதும் (சிறிலங்கா) நாட்டிற்கான ஒரு பூர்வீக  சொல்லாகப் பயன்படுத்தப்படவில்லை என்பது பிழையான வாதமாகும்.

உண்மை என்னவென்றால் சிறிலங்காவின் வெளியுறவு  அமைச்சு ஈழம் என்ற சொல்லைக் கேட்டு மிரளுகிறது என்பதாகும்.

About editor 3124 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply