இலங்கை : வடமாகாணத் தேர்தலும் 13வது சட்டத் திருத்தமும்

இலங்கை : வடமாகாணத் தேர்தலும் 13வது சட்டத் திருத்தமும்

அ.மார்க்ஸ்

13 ஆகஸ்ட், 2013

(இலங்கையின் அரசியல் சட்ட வரலாற்றில் முதன் முதலாக Unitary State என்பதற்கு மாற்றாக unitary வடிவத்திற்குள் மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குதல் என்கிற கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்ட அரசியல் சட்ட வடிவம் 13வது திருத்தம். ஆனால் இத் திருத்ததின் மூலம் வழங்கப்படும் மாகாண அதிகாரங்கள் எத்தனை அபத்தமானவை என்பதை இக்கட்டுரை விரிவாக அலசுகிறது. இந்த 13வது திருத்தத்தையும் நீர்க்கச் செய்ய இலங்கை அரசு முயற்சித்து வரும் சூழலில், இத் திருத்தத்தின் அடிப்படையில் வட மாகாணத்தில் நடத்தப்படும் தேர்தல் தமிழர்களுக்கு எந்த அரசியல் அதிகாரத்தையும் உண்மையில் அளிக்கப் போவதில்லை என்றாலும், இன்றைய சூழலில் இந்தத் தேர்தலில் தமிழர் கட்சிகள் பங்கேற்பது அரசியலதிகாரத்தை நோக்கிய போராட்டத்திகான ஒரு வலுவான தளத்தை ஏற்படுத்தித் தரும், அந்த வகையில் தேர்தலில் பங்கேற்பது என தமிழர் அரசியல் கட்சிகள் எடுத்துள்ள முடிவு சரியானதே என வாதிடுகிறது இக் கட்டுரை)

த.தே.கூ தலைவர்கள் த.தே.கூ தலைவர்கள்

இலங்கையில் வடமாகாணத்திற்கான தேர்தல் வரும் செப்டம்பரில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளைத் துவங்கிவிட்டன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ளது. அவரும் தொடக்க மறுப்புகளுக்குப் பின் அதை ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஜூலை 27,1987 அன்று இயற்றப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடியாக நவம்பர் 14,1987 அன்று இலங்கைப் பாராளுமன்றம் இயற்றிய 13வது சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் 26 ஆண்டுகளுக்குப் பின் இப்போது ஈழத் தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசமான வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடக்கப் போகிறது. இடையில் என்னென்னவோ நடந்துவிட்டன. ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட ராஜிவ் காந்தி, ஜெயவர்த்தனா இருவரும் இப்போது இல்லை. விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு நான்காண்டுகள் ஓடிவிட்டன.

இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போதுகூட வட மாகாணத் தேர்தல் குறித்த முறையான அறிவிப்பு எதையும் ராஜபக்‌ஷே அரசு வெளியிடவில்லை. ஏதாவது ஒரு காரணம் சொல்லித் தேர்தலை ரத்து செய்வதுதான் இலங்கை அரசின் நோக்கமாக இருக்கிறது. தேர்தல் நடந்தால் நிச்சயமாக இங்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (த.தே.கூ) வெற்றி பெறும். இலங்கையின் ஒரு  மூலையில் கூட ராஜபக்‌ஷே குடும்பத்திற்கு விசுவாசமாக இல்லாத ஒரு அரசு வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர் சகோதர்கள். பாதுகாப்புச் செயலர் கோத்தபயா, ”இன்னும் தனி நாட்டுக் கோரிக்கையை வைத்துக் கொண்டுள்ள ஒரு கட்சியிடம் (அதாவது த.தே.கூ) காவல் அதிகாரத்துடன் கூடிய அரசைக் கையளிக்க இயலாது” என வெளிப்படையாகக் கூறியுள்ளார் (மே23, 2013).

ஆனால் இன்னொரு பக்கம் வட மாகாணத் தேர்தலை நடத்திவிடுவதுதன் உசிதம் என ராஜபக்‌ஷேவுக்கு நெருக்கமானவர்களால் அறிவுரையும் வழங்கப்படுகிறது. மனித உரிமைகள் தொடர்பாக ஜெனிவாவில் இயற்றப்பட்ட தீர்மானம் அப்படியான ஒரு முடிவுக்கு அவர்களைத் தள்ளுகிறது. அப்புறம் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ள காமன்வெல்த் நாட்டுத் தலைவர்களின் மாநாடு நல்லபடியாக நடந்து முடிய வேண்டுமே என்கிற கவலை வேறு. எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய அரசு இந்த விசயத்தில் ரொம்பவும் கறாராக உள்ளது. அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை அயலுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீசைத் தொலைபேசியில் அழைத்து இது தொடர்பாக எச்சரித்த விவரம் இப்போது இதழ்களில் கசிந்துள்ளது. தவிரவும் டெல்லியில் உள்ள இலங்கைத் தூதுவரை அழைத்து இந்திய அயலுறவு அமைச்சகம் இது தொடர்பாக வழங்கியுள்ள வேண்டுதல் கடிதம் (demarche) உண்மையில் ஒரு எச்சரிக்கைக் கடிதம் என்றே இலங்கை அரசால் கருதப்படுகிறது.

ஆக, இலங்கை அரசுக்கு வேறு வழியில்லை. இரண்டொரு நாட்களில் முறையான தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஆனால் 13வது சட்டத் திருத்தத்தை மேலும் நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிகளில் அரசு உள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே இந்தத் திருத்தம் வழங்கியுள்ள ‘அதிகாரப் பரவல்’ (devolution) என்பது ஒரு பெரிய கேலிக் கூத்து. சென்ற 13 அன்று கூடிய இலங்கை  அமைச்சரவைக் கூட்டம் 13 வது திருத்தத்தில் மேலும் இரு திருத்தங்கள் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. 13வது திருத்தத்தின் ஒரு முக்கிய கூறு இரு மாகாணங்கள் விரும்பினால் ஒன்றாக இணந்து கொள்ளலாம் என்பது. இந்த அடிப்படையிலேயே வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரே தமிழ் மாகாணம் ஒன்று நிறுவப்பட்டு 1988ல் ஒரு ‘தேர்தலும்’ நடத்தப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் ஒரு கருத்துக் கணிப்பு

மேற்கொள்ளப்பட்டு பின்னர் இந்த இணைப்பு உறுதி செய்யப்படவேண்டும் என்பது 13வது திருத்தத்தின் முக்கிய கூறு.

இந்தியப் படைகள் (IPKF) வெளியேறிய கையோடு வட கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும்., பின்னாளில் இனவாதக் கட்சியான ஜே.வி.பி தொடுத்த வழக்கில் இலங்கை உச்ச நீதி மன்றம் இந்த இணைப்பை ரத்து செய்ததும், அந்த நிலை இன்றுவரை தொடர்வதும் எல்லோரும் அறிந்த கதை. இந்நிலையில் மேற்குறித்த அமைச்சரவைத் தீர்மானம் உணர்த்துவது யாதெனில் இனி எக்காலமும் இந்த இணைப்பை அனுமதிக்க முடியாது என்பதுதான்.

அமைச்சரவை ஒப்புதல் அளித்த அடுத்த முடிவு, மாகாண சபைகள் தொடர்பான சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றும்போது மாகாணங்கள் எல்லாவற்றின் ஒப்புதலையும் பெற வேண்டும் என்கிற நிபந்தனையை நீக்குவது தொடர்பானது. அடுத்த நான்காவது நாள் (ஜூன் 17) பிரதமர் டி.எம்.ஜயரத்னே மாகாண சாபைகளுக்கு சட்டம் ஒழுங்கு மற்றும் நிலம் தொடர்பான அதிகாரங்களை வழங்குவது இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டில் தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும் என்கிற கருத்தை மீண்டும் வற்புறுத்தினார். அடுத்த நாள் (ஜூன் 18) கடும் இனவாதக் கட்சியான ‘ஜாதிய ஹெல உறுமய’வின் உறுப்பினர் ஒருவர் அரசியல் சட்டத்திலிருந்து 13வது திருத்தத்தையே நீக்க வேண்டுமென ஒரு தனிநபர் மசோதாவைக் கொண்டுவந்தார். பிரதான எதிர்க் கட்சியான யு.என்.பி உறுப்பினர் அதை வழிமொழிந்தார். ஆக, நீதியரசரும் முதலமைச்சர்  வேட்பாளருமான விக்னேஸ்வரன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளது போல, ஏற்கனவே 13 வது திருத்ததிற்குக் கொடுக்கப்பட்டிருந்த சிறகுகள் பறக்கத் தகுதியற்றவை. அதையும் இப்போது சுத்தமாக வெட்டிவிட முயற்சி நடக்கிறது.

விக்னேஸ்வரன்விக்னேஸ்வரன்

பறக்கத் தகுதியற்ற சிறகுகள் என்றால் என்ன? அது குறித்து விக்னேஸ்வரன் இப்படிச் சொன்னர்.:”13வது திருத்தம் என்பது வேறொன்றுமல்ல. மாகாணங்களுக்கு அதிகாரங்களை இடது கையால் கொடுத்துவிட்டு வலது கையால் பறித்துக் கொள்வதுதான்.” இது குறித்துச் சற்று விளக்கமாகக் காண்போம்.

இந்திய அரசியலமைப்பை மாதிரியாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட 13 வது திருத்தத்தின் ஒரே சிறப்பு இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஒற்றை அதிகார அரசு (Unitary State) என்பதற்கு மாறாக ஒற்றை அதிகார மத்திய அரசுக்குள், அதிகாரப் பரவல் செய்யப்பட்ட மாகாண சபைகள் என்கிற வடிவம் ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான். ஆனால் இந்திய அரசியலமைப்பு மாநிலங்களுக்கு வழங்கியுள்ள குறைந்தபட்ச அதிகாரத்தையும் கூட அது எப்படிக் கேலிக் கூத்தாக்கியுள்ளது என்பதை இனி காண்போம்.

                              இலங்கை அரசியலமைப்பு வரலாறு

1931   டொனொமூர் அரசியலமைப்பு.    ஒற்றை அதிகார அமைப்பு.  கூட்டாட்சிக் கோரிக்கை இல்லை

1948   சோல்பெரி அரசியலமைப்பு.   இதுவும் ஒற்றை அரதிகார அமைப்புத்தான் என்ற போதிலும் இதன் பிரிவு 29ன்படி தமிழர், முஸ்லிம்கள் ஆகியோருக்குக் குழும உரிமைகள் (group rights) வழங்கப்பட்டன. அமைச்சரவைப் பிரதிநிதித்துவங்களும் இருந்தன. எனினும் இந்திய வம்சாவளியினருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது.    

1972   புதிய அரசியலமைப்பு.    ஒற்றை அதிகார அமைப்பு. பிரிவு 29 நீக்கப்பட்டது. அதாவது இன அடிப்படையில் உரிமைகள் நீக்கப்பட்டு தனிநபர் உரிமை மட்டுமே வழங்கப்பட்டது.

1978     நிர்வாக அதிகாரத்துடன் கூடிய ஜனாதிபதி ஆட்சி முறை.      ஒற்றை அதிகார அமைப்பு. இதில் மாற்றம் செய்யப்பட வேண்டுமானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும். கருத்துக் கணிப்பின் மூலம் உறுதி செய்யப்படவேண்டும்.

1987     13வது திருத்தம்.   ஒற்றை அதிகார அமைப்புக்குள் மாகாணங்களுக்கு அதிகாரப் பரவல். எனினும் அனைத்து மட்டங்களிலும் இறுதி அதிகாரம் ஜனாதிபதியால் நியமிக்கப் படும் கவர்னரிடம் குவிந்திருக்கும். இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.    

# 13வது திருத்ததின்படி ஆளுநர் நிர்வாக அதிகாரமுடையவராக இருப்பார். பொதுப் பணிகள் அனைத்தும் அவரது கட்டுப்பாட்டில் இருக்கும். அரசுப் பணியாளர்களை நியமிப்பது, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது, இட மாற்றம் செய்வது, பணி நீக்கம் செய்வது முதலான அதிகாரங்கள் அனைத்தும் அவரிடமே இருக்கும்,  முதலமைச்சரும் பிற அமைச்சர்களும் ஆளுநருக்கு  “உதவவும் அறிவுரை வழங்கவும்” செய்வர். ஆனால் ஆளுநர் அவற்றிற்குக் கட்டுப்படத் தேவை இல்லை.

# மாகாணங்களுக்கான நிதியைப் பெறுவதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

# அமைச்சரவைக்கும் ஆளுநருக்கும் முரண்பாடுகள் வரும் நிலையில் ஜனாதிபதி அமைச்சரவை அதிகாரங்களை எடுத்துக் கொள்வார். மாகாண சபைகளைக் கலைக்க ஜனாதிபதிக்கு முழு அதிகாரம் உண்டு.

மொத்தத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களுக்கு அமைச்சு அதிகாரங்கள் இருக்காது. நியமிக்கப்பட்ட ஆளுநருக்கு அமைச்சு அதிகாரங்கள் இருக்கும். வட மாகாணத்திற்குத் தேர்தல் என்கிற பேச்சு வந்த உடனேயே தற்போது வட மாநில ஆளுநராக இருக்கும் முன்னாள் இராணுவ அதிகாரி, சில நாட்களுக்கு முன் மாகாண அதிகாரிகள் அனைவரையும் கூட்டி, தேர்தல் நடந்து அமைச்சரவை அமைக்கப்பட்டாலும் கூட எல்லா அதிகாரங்களும் தன் மூலமே செயல்படும் என அறிவித்துள்ள செய்தி சமீபத்தில் பத்திரிக்கைகளில் வந்தன. விக்னேஸ்வரன் அதைக் கண்டித்துள்ளார்.

# அரசுத்துறைகள் அனைத்தும் மூன்று பட்டியல்களில் அடக்கபடும். (i) மாகாண சபைப் பட்டியல்: இதில் கண்டுள்ளவற்றின் மீது மாகாண சபைகள் சட்டம் இயற்றலாம். ஆனால் இப்பட்டியலில் கண்டுள்ள அம்சங்கள் எதுவும் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை மீறுவதாகப் பொருள் கொள்ளக் கூடாது. (ii) பொதுப் பட்டியல்: பாராளுமன்றமோ மாகாண சபையோ இதில் கண்டுள்ளவற்றின் மீது சட்டங்களை இயற்ற வேண்டுமானால் மற்றதைக் கலந்தாலோசிக்க வேண்டும். (iii) ஒதுக்கப்பட்ட பட்டியல்: தேசியக் கொள்கை (National Policy) என அறிவிக்கப்பட்டால், மாகாண அதிகாரத்திற்கு உட்பட்ட எந்த அம்சத்தின் மீதும் பாராளுமன்றத்திற்குச் சட்டம் இயற்றும் அதிகாரம் உண்டு. ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகள் ஆகியவற்றை நிறைவேற்றப் பாராளுமன்றத்திற்கு குறைந்த பட்சப் பெரும்பான்மை இருந்தால் போதும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை இல்லை.

# மத்திய அரசுக்கு மாகாணப் பட்டியலில் உள்ளவற்றின்மீதும் சட்டங்கள் இயற்ற அதிகாரமுண்டு. குறைந்த பட்சப் பெரும்பான்மையின் மூலம் இது நிறைவேற்றப்பட்டால் இவ்வாறு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஏற்றுக் கொள்ளும் மாநிலங்களில் மட்டுமே அது செல்லுபடியாகும். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களிலும் அது செல்லுபடியாகும்.

சிறுபான்மையினரை ஒடுக்குவதில் பிரதான சிங்களக் கட்சிகளுக்கிடையே ஒற்றுமை உள்ளதால் இப்படியான பிரச்சினைகளில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவது சிரமமல்ல. அப்படியும் சாத்தியம் இல்லாவிட்டால் எந்த அம்சத்தையும் தேசியக் கொள்கை என அறிவித்து அதைக் குறைந்த பட்சப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆக மாகாணப் பட்டியலில் கண்டுள்ள எவற்றின் மீதும் பாராளுமன்றம் குறைந்த பட்சப் பெரும்பான்மையுடன் சட்டம் இயற்றலாம்.

# ஒவ்வொரு நிதி ஆண்டிற்குமான நிதிநிலை அறிக்கையை ஆளுநரே தயாரித்து அளிப்பார். இவ்வாறு அளிக்கப்படும் செலவுத் திட்டங்களுக்கு (Budget Estimates)  மாகாண சபையின் ஒப்புதல் தேவையில்லை. நிதி ஒதுக்கீட்டை (grant) அதிகரிக்கக் கோரும் உரிமை மாகாண சபைக்குக் கிடையாது.

# பொது ஒழுங்கு மற்றும் காவல் துறை ஆகியன மாகாணப்பட்டியலில் இருந்தபோதிலும் 13ம் திருத்தத்தின் பின்னிணைப்பில் (9ம் பட்டியல்) கண்டுள்ள விதிகளால் அந்த அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைக் காவல்துறை முழுமையும் மத்திய காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனெரலின் (ஐ.ஜி.பி) கீழ் வருகிறது. மாகாணக் காவல்துறை துணை இன்ஸ்பெக்டர் ஜெனெரலின் (டி.ஐ.ஜி.பி) கீழ் வரும். இவரை நியமிக்கும் அதிகாரம் ஐ.ஜி.பியிடம் இருக்கும். அவர் முதலமைச்சரைக் கலந்தாலோசித்து டி.ஐ.ஜி.பியை நியமிப்பார். இதில் கருத்தொருமிப்பு வராவிட்டால் ஜனாதிபதி தலையிடுவார். காவல் படைக்கு ஆள் தெர்வு செய்யும் மூவர் கொண்ட குழுவில் ஒருவர் மட்டுமே முதலமைச்சரால் நியமிக்கப்படுவார். இன்னொரு உறுப்பினர் டி.ஐ.ஜி.பி. மூன்றாமவரை மத்திய அரசுப் பணியாளர் ஆனையம் ஜனாதிபதியைக் கலந்தாலோசித்து நியமிக்கும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பயிற்சியையும் மத்திய காவல்துறையே அளிக்கும்.

சட்டம் ஒழுங்குப் பொறுப்பு முதலமைச்சருக்கோ ஆளுநருக்கோ கிடையாது, அது முழுக்க முழுக்க மாகாணக் காவற் பிரிவையே சார்ந்திருக்கும். காவல்துறை அதிகாரிகள் அனைவரும் டி.ஐ.ஜி.பியின் கட்டுப்பாட்டிலேயே இருப்பர். டி.ஐ.ஜி.பி முதல்வரின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும் அவரை நியமிக்கும் அதிகாரம் அவருக்கில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

# நிலத்தின் மீதான அதிகாரம் ( Land and Land Settlement) மாகாணப்பட்டியலில் இருந்தபோதிலும் அந்த அதிகாரங்கள் 13ம் திருத்தத்தின் இரண்டாம் பின்னிணைப்பால் கட்டுப்படுத்தப்படும். “அரசு நிலமனைத்தும் குடியரசிற்கே சொந்தம் என்கிற நிலை தொடரும்.. இது தொடர்பான 33 (d) விதிப்படி இதை யாருக்கும் ஒப்பளிக்கவும் கையளிக்கவும் செய்யும் அதிகாரம் குடியரசிற்கு உண்டு.” குடியரசு என்பதை நாம் ஜனாதிபதி எனப் பொருள் கொள்ள வேண்டும்.

“மாகாணங்களில் உள்ள அரசு நிலங்கள் அனைத்தின் உரிமையும் ஜனாதிபதியிடமே இருக்கும். அவை மாகாணசபைகளுக்குக் கொடுக்கப்படாது”  என அரசியல் சட்ட மன்றத்தில் அன்றைய ஜனாதிபதி ஜெயவர்தனே கூறியது (அக்டோபர் 30, 1987) குறிப்பிடத் தக்கது.

விக்னேஸ்வரன் சரியாகத்தான் சொன்னார் மாகாணங்களுக்கு அதிகாரங்களைக் கொடுப்பதுபோலக் கொடுத்துப் பறித்துக் கொள்வதற்குப் பெயர்தான் 13ம் சட்டத் திருத்தம். இவ்வாறு பெயரில் மட்டுமே இருக்கும் இந்த அதிகாரங்களையும்  முற்றாகப் பறிப்பதுதான் ராஜபக்‌ஷேக்களின் இன்றைய நோக்கம்.

13வது சட்டத் திருத்தம் குறித்தும் இன்று சிங்கள, தமிழ்ச் சமூகங்கள் இரண்டிலும் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஒருபக்கம் சிங்கள இன வெறியர்கள் இந்த அளவு மாகாண உரிமைகளும் கூட தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்குக் கொடுக்கலாகாது என்கின்றனர். கோத்தபயாவின் கருத்தை முன்பே குறிப்பிட்டேன். ஒட்டு மொத்தமாக அரசின் கருத்தும் இப்படியாகத்தான் உள்ளது, ஹெல உருமய, பொது பல சேனா போன்ற இன வாத அமைப்புகள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இன்னொருபக்கம் சிங்கள ஜனநாயக சக்திகளும், லங்கா சம சமாஜக் கட்சி, ஜனநாயக இடது முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி முதலான அரசில் அங்கம் பெற்றுள்ள, இடதுசாரிக் கட்சிகளும் 13வது சட்டத்

வாசுதேவ நாணயக்கார திருத்தத்தில் எந்த மாற்றங்களையும் செய்யக் கூடாது என்கின்றன. அப்படி ஏதும் செய்ய முயன்றால் தாங்கள் ஆட்சியிலிருந்து விலகவும் தயார் என சம சமாஜக் கட்சித் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்காரா அறிவித்துள்ளார்.  இலங்கையின் இன்னொரு முக்கிய கட்சியான முஸ்லிம் கங்கிரசும் 13ம் திருத்ததில் எவ்வித மாற்றமும் கூடாது என்கிறது.

தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியிலும் கூட ஒரு சில கட்சிகள் இப்படி எந்தவிதமான அதிகாரமும் இல்லாத 13வது திருத்தத்தின் கீழ் இந்த அரசதிகாரத்தில் பங்கு பெற வேண்டுமா, தேர்தலைப் புறக்கணிப்போம் அல்லது சுயேச்சைகளை நிற்கவைத்து வெற்றி பெறச் செய்வோம்  என்கிற கருத்துக்களை முன்மொழிகின்றன. வெற்றி வாய்ப்புள்ள த.தே.கூவைப் பொருத்தமட்டில் அவர்களின் கருத்து வேறாக உள்ளது. 13வது திருத்தத்தின் கீழுள்ள அரசில் பங்கேற்பதில் எந்தப் பெரிய பயனுமில்லாத போதிலும், “இன்றைய அரசியல் மற்றும் அரசியலமைவுச் சூழலில், இலங்கையின் இனப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர, கவுரவமான தீர்வுக்கான செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு 13வது திருத்தம் ஒரு போதுமான நிபந்தனையாக இல்லாவிட்டாலும் அவசியமான ஒன்றாக இருக்கிறது என்கிறார் த.தே.கூவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பில்லாத கட்சியினர்தான் இப்படித் தேர்தலைப் புறக்கணிக்கச் சொல்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார். தேர்தலைப் புறக்கணித்துவ்விட்டு சுயேச்சைகளை ஆதரிப்பது இன்னும் அபத்தமாக முடியுமே எனவும் அவர் கேட்டுள்ளார்.

2009ல் உள்நாட்டுப் போர் முடிந்த கையோடு 13ம் திருத்தத்தின்படி தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வு அளிப்பது பற்றி ராஜபக்‌ஷேவும் பேசினார். ”13க்கு மேலும்” (13 ப்ளஸ்) என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் கூறினார். ஆனால் நடமுறைகளோ வேறாகத்தான் இருந்தன. இன்று சர்வதேச அழுத்தங்கள் அவரை வேறு வழியின்றி வடமாகாணத் தேர்தலை நோக்கித் தள்ளியிருக்கிறது.

முன்னதாக சந்திரிகா – ரணில் அரசு 13வது திருத்தத்தை நடைமுறையாக்க விருப்பம் கொண்டிருந்தது. மங்கள மூனசிங்கே அறிக்கை, 2000 ஆண்டு அரசியலமைப்பு, திஸ்ஸ விதரண தலைமையிலான வல்லுனர் குழுவின் பெரும்பான்மை அறிக்கை முதலியன

திஸ்ஸ விதரனதிஸ்ஸ விதரன

உண்மையிலேயே 13ம் திருத்தத்தைக் காட்டிலும் கூடுதலான அதிகாரப் பரவலைப் பரிந்துரைத்திருந்தன. திஸ்ஸ விதாரண குழு அறிக்கை மீண்டும் வடக்கு கிழக்கு இணைப்பையும், தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களிலிருந்து இரு துணை ஜனாதிபதிகள் நியமிப்பது முதலானவற்றைப் பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடியாக உருவாக்கப்பட்டதுதான் எனினும், சிங்கள அரசும், அன்றைய முக்கிய தமிழ்க்கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் (TULF)  விரிவாகப் பேசி உருவாக்கப்பட்டதுதான் 13ம் திருத்தம். ‘ஏசியன் ட்ரிப்யூன்’ இதழுக்கு த.தே.கூ தலைவர் சம்பந்தன் அவர்கள் 14சமீபத்தில் அளித்த (ஜூன் 27,2013) நேர்காணலில்

சம்பந்தன்சம்பந்தன்

இதை வலியுறுத்தியுள்ளார். 1987 அக்டோபர் 28 அன்றைய தேதியில் ராஜிவ்காந்திக்கு எழுதிய கடிதத்தில் அமிர்தலிங்கமும் இதை ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனாலும் இடைப்பட்ட 26 ஆண்டுகளின் வேதனை மிகுந்த வரலாறும் எந்த அதிகாரப் பரவலுக்கும் தயாராக இல்லாத சிங்கள இனவாத சக்திகளும் இன்று அதையும் கூடச் சாத்தியமில்லாமல் ஆக்கிவிட்டன.

த.தே.கூவும் இதர தமிழ் அரசியல் கட்சிகளும் வடமாகாணத் தேர்தலில் பங்கு பெறுவது என எடுத்துள்ள முடிவு தவிர்க்க இயலாத ஒன்றுதான். தேர்தலில் பங்குபெற்று ஒரு அரசு அமைப்பதன் மூலம் தமிழர்களுக்கு அதிகாரம் கிடைத்துவிட போவதில்லை என்பது எல்லோரும் அறிந்ததுதான். அனால் தமது உரிமைகளுக்காக்க இன்னும் தீவிரமாகப் போராட, இன்னும் கூடுதலான அதிகார பரவலைப்  பெற அது ஒரு தளமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதே காரணத்திற்காகத்தான் சிங்கள இனவாத சக்திகளும் வட மாகாணத் தேர்தலை எப்படியாவது தடுத்துவிட முயற்சிக்கின்றன.

இணைப்பு

                              ஈழப் போராட்டம் – முக்கிய திருப்பங்கள்

1983 -87     ஈழப்போர் I               இந்தியா புலிகளுக்கு ஆதரவு

1987 -90     ஐ.பி.கே.எஃப் காலம்       13 வது திருத்தம், வடகிழக்கு மாகாண அரசு

1990 -95      ஈழப்போர் II              இறுதியில் போர் நிறுத்தம்

1991         ராஜீவ் கொலை            இந்தியா கடுமையான புலி எதிர்ப்பு

1990 -92      முஸ்லிம்கள் வெளியேற்றப்படுதல் மற்றும் கொலைகள்

1995 -2002     ஈழப்போர் III               புலிகள் வெற்றிமுகம்

2002 -06      சமாதானப் பேச்சுவார்த்தைகள்

2004          புலிகள் அமைப்பில் பிளவு    கருணாவுடன் சுமார் 6,000 வீரர் வெளியேற்றம்

2004          சுனாமி அழிவு  30,000 பேர் சாவு, இந்தியா மற்றும் அமெரிக்காவிலிருந்து   உதவ வந்த படைகள் இலங்கை அரசுக்கு உளவு உதவிகள் செய்தல்

2006 -09       புலிகள் தோல்விமுகம்    40,000க்கும் மேற்பட்ட தமிழர்களின் அழிவுடன்  புலிகள் அழிக்கப்படுதல், (இந்திய மற்றும் அமெரிக்க உதவிகளுடன்)

(இரு வாரங்களுக்கு முன் எழுதப்பட்டது)

About editor 3192 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply