பண்டிதத் தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் பாமரத் தமிழ் வாக்காளர்களும்
இலைஜா ஹூல்
September 6, 2015
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பலரும் பல வியாக்கியானங்களைக் கொடுத்தாயிற்று. தேர்தல் காலத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தீவிர அர்ப்பணிப்புடன் ஆதரித்த ‘புத்திஜீவிகள்’ பலரும் இன்று தாம் சார்ந்த கட்சியின் படுதோல்விக்கு நகைக்கத்தகு அர்த்தங்களைக் கற்பித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்கிய ஊடகவியலாளர்களில் நிலாந்தன் முதன்மையானவர். தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இவர் எழுதிய “தமிழ் வாக்காளர்களை எப்படி விளங்கிக் கொள்வது?” என்ற கட்டுரையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தோல்வி “சாதாரண தமிழ் வாக்காளர்களுக்கும் தமிழ் சமூகத்தில் உள்ள முன்னேறிய பிரிவினருக்குமிடையிலான பாரதூரமான ஓர் இடைவெளியை” வெளிப்படுத்தி நிற்கின்றது என்கிறார்.
தமிழ் சிவில் சமூக அமையத்தின் பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன் தனது பேஸ்புக்கில் ‘தேர்தல் படிப்பினைகள்’ என்று தலைப்பிட்டு வரைந்த பதிவில் “மக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டு இல்லாமை” தமிழ்த் தேசிய அரசியலில் உள்ளடக்கத்தை விட அதன் வடிவமே (அதாவது, யார், எந்தக் கட்சி தமிழ்த் தேசிய அரசியலைச் செய்கின்றது என்பது) பிரதானமாக இருப்பதற்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகின்றார். தமிழ் மக்களது அரசியற் தெரிவுகள் அரசியலின் உள்ளடக்கம் சார்ந்ததாக இல்லாமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தோல்விக்கான பிரதான காரணங்களில் ஒன்று என்பது இவரது வாதம்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட வேட்பாளர் மணிவண்ணன் விஸ்வலிங்கமும் தேர்தலின் பின்னர் வழங்கிய செவ்வியொன்றில் தமிழ் மக்களுக்கு அரசியல் விளக்கம் போதாது என்ற தொனிப்படக் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
ஏன்? தேர்தலுக்கு முன்னரே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதற்கெல்லாம் ஒரு படி மேற்சென்று யாழ். முகாமையாளர் மன்றத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மதியாபரணம் சுமந்திரனுடன் நடந்த விவாதத்தில் தமிழரைப் பல தடவை ‘பாமர மக்கள்’ என்று விழித்திருந்தார். இந்த விவாதத்தில் ‘பாமர (தமிழ்) மக்களுக்கு’ பூகோள அரசியலில் தமிழர் தம் வாக்கின் வலிமையைப் பற்றிப் பாடம் சொல்லிக் கொடுத்து அவர்களை ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்கச் செய்யவில்லை என்பது கூட்டமைப்பின் தலைமையின் மீதான அவரது குற்றச்சாட்டுக்களில் ஒன்றாக இருந்தது.
இவர்கள் மொத்தத்தில் கூறி நிற்கும் கருத்தென்ன? நிலாந்தன் இரத்தினச் சுருக்கமாகப் பதிலுரைக்கின்றார்: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் ‘புத்திபூர்வமான’ அரசியற் கருத்துக்களை ‘சாதாரண’ தமிழ் வாக்காளர்கள் விளங்கிக் கொள்ளவில்லையாம். இதுவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தோல்விக்குக் காரணமாம். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சார்ந்த பண்டிதர்களது கருத்தின் படி முன்னணியைத் தவிர்த்து ஏனையோருக்கு – குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு – வாக்களித்த பல இலட்சம் தமிழ் மக்கள் நாம் யாவரும் பாமர மடையர்கள்.
தமிழ்த் தேர்தல் களம்: ஓர் பரந்துபட்ட அலசல்
முன்னணி ஆதரவாளர்களது கருத்துக்கு மாறாக, இந்தத் தேர்தலை அண்டியே 1980களில் ஆயுதப் போராட்டம் வலுப்பெற்ற பின்னர் மக்களிடையே தமிழ்த் தேசிய அரசியலின் பால் பரவலான கருத்துப் பரிமாறல் நடைபெற்றிருக்கின்றது. இதற்குப் பல காரணங்கள் துணை செய்திருந்தன. இலங்கை வரலாற்றில் பல தசாப்தங்களின் பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதப் பொதுத் தேர்தல் மிகக் கிரமமாக நடந்தேறியது. கடந்த தேர்தல்களைப் போலன்றி அரசியற் கட்சிகளும் வேட்பாளர்களும் துணிச்சலுடன் தமது கருத்துக்களை முன்வைக்கக் கூடிய சூழல் வட கிழக்கில் நிலவியது. நாட்டில் முன்பிருந்த நிலையிலும் முன்னேற்றகரமான ஊடகச் சுதந்திரம் இருந்தது. சமூக வலைத்தளங்கள் இளைஞர்களிடையிலான அரசியல் உரையாடலை வலுப்படுத்தியிருந்தது. இரவு பகல் என்றில்லாது பல கூட்டமைப்பு வேட்பாளர்கள் நடத்திய பல சிறு கலந்துரையாடல்களில் நான் கலந்து கொண்டவன். பரப்புரைக் கூட்டங்களைக் காட்டிலும் இந்தச் சிறு கட்சிக் கூட்டங்களில் மக்களும் வேட்பாளர்களும் நெருங்கி உரையாடும் வாய்ப்புக் கிட்டியது; காரசாரமான கேள்விகள் கேட்கப்பட்டன; வேட்பாளர்களுக்கும் பொதுமக்களுக்குமிடையே விவாதங்கள் நடைபெற்றன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தமக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையிலான கொள்கை வேறுபாடுகளையும், அரசியற் போக்கின் அடிப்படை வித்தியாசங்களையும் தமது பரப்புரை மேடைகளிலும், மக்கள் சந்திப்புக்களிலும், பேஸ்புக் வழியேயும், துண்டுப் பிரசுரங்கள் மூலமும் பரந்துபட அழுத்திச் சொல்லி வந்தனர். இணையத்தின் வழியேயும், சமூக வலைத்தளங்களூடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு எதிராகப் பெருமெடுப்பிலான பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சில இணையத்தளங்கள் இது விடயத்தில் நாளின் இருபத்து நான்கு மணித்தியாலங்களும் முழுமூச்சாக ஈடுபட்டன. பேஸ்புக் வழியே புலம்பெயர் தமிழர்கள் பலரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றிக்கென்று நேரப் பாகுபாடு யாவும் மறந்து தொண்டாற்றினர். இறுதியாக, தேர்தலுக்கு ஒரு கிழமை மிஞ்சியிருந்த நிலையில் தன்னைக் கட்சிச் சார்பற்றவர் என்று பிரஸ்தாபப்படுத்திக் கொண்ட வட மாகாண முதலமைச்சர் எந்தச் சந்தேகங்களுக்கும் இடமின்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சரணாகதி அரசியலைச் செய்வதாகச் சாடினார். தமிழர் தமது தனித்துவத்தையும், சுயநிர்ணய உரிமையையும் உறுதி செய்யும் பொருட்டு தேர்தல் நாளன்று ‘வீட்டுக்குள்’ முடங்கிக் கிடக்காமல் விடியுமுன்பே எழுந்தடித்து தம் ‘பொன்னான’ வாக்குகளை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கே வழங்க வேண்டுமெனச் சொல்லாமல் சொல்லி வைத்தார். போதாதென்று, முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவ்வப்போது யாழ். ஊடக அமையத்தில் ஒலி வாங்கிகளைப் பொருத்தி, தேசத்திற்கும், நாட்டிற்குமான வேறுபாடுகளைப் பற்றிய அரசியல் விஞ்ஞான விளக்கங்களைக் கொடுத்ததோடு கூட்டமைப்பு இழைத்திருக்கும் துரோகச் செயல்களுக்குப் பதில் சொல்லும் காலம் நெருங்கி வருவதாக இடித்துரைத்து வந்தார்.
இவையெல்லாம் நடந்திருக்க, பரப்புரைக் கூட்டங்களில் மக்கள் பெருமளவில் பங்குபற்றியிருக்கவில்லை இதனால், அவர்கள் தெளிவான சிந்தனையின்றி வாக்களித்தனர் என்ற நிலாந்தனது கூற்றையும், இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியலின் உள்ளடக்கம் சார்ந்த உரையாடல் நடைபெறவில்லை என்ற குருபரனது கருத்தையும் எந்த அடிப்படையில் ஏற்றுக்கொள்வது? மேலும், முன்னணியினரது செய்தி வாக்காளரைச் சென்றடையவில்லை என்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான கருத்தாகும். உதாரணமாக, தமிழ் ஊடகவியலாளர்கள் பலரும் பிரச்சாரக் காலத்தின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குப் பரிவு காண்பித்ததையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கடுமையாக விமர்சித்ததையும் நிலாந்தனே தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்றார். தமிழ் மக்களிடையே முன்னணியின் கருத்துக்கள் சென்றடையவில்லை என்பதை பேச்சுக்கு எடுத்துக் கொண்டாலும் அது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆற்றாமைக்குச் சான்று பகிருமேயன்றி கூட்டமைப்பின் வெற்றியை மழுங்கடிக்காது.
இம்முறை தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தளவில் தமிழ் மக்கள் முன்பு தெளிவான இரு பிரத்தியேகக் கட்சித் தெரிவுகள் இருந்தது. பலத்ததொரு மறைப் பிரச்சாரத்தின் மத்தியிற் தான் தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் புறக்கணித்து தமது ஏகோபித்த பிரதிநிதிகளாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தெரிந்தெடுத்திருக்கின்றார்கள்.
எந்த நம்பிக்கையில் தமிழ் மக்கள் கூட்டமைப்பைத் தெரிந்தெடுத்திருக்கின்றார்கள்? இதற்கு குருபரன் தனது பதிவில் இவ்வாறு விளக்கமளிக்கிறார்: “தமிழ்த் தேசிய அரசியல் செய்பவர்களில் யாரை நம்புவது (trust worthy) என்பது யார் அந்த வடிவத்தை உருவாக்கினார்கள் என்பதைப் பொறுத்து என்று மக்கள் முடிவெடுத்திருக்கின்றார்கள். ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின் யாரை நம்புவது என்பது தான் தமிழ் மக்களுக்கு பெரிய பிரச்சினை. விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பை நம்புவோம் என்று தீர்ப்பளித்திருக்கின்றார்கள்”.
இதுவொரு ஆதரமற்ற மொட்டைக் கருத்து.
இவ்விடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தோல்வியோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டுப் பாரிய சரிவுகளைச் சந்தித்த சில பிரமுகர்களையும் சேர்த்துப் பார்ப்பது பொருத்தமானது. இந்தப் பிரமுகர்களில் முதன்மையானவர் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவரும் முன்னாள் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன். இவர் 2010 பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டவர்களில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு அடுத்ததாக இரண்டாமிடத்தில் தெரிவானவர். ஏறிய மேடையெல்லாம் பிரபாகரன் புகழ்பாடிய கூட்டமைப்பு வேட்பாளர்களில் இவரும் ஒருவர். இவரது நிலைப்பாடுகள் பலவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைகளுடன் ஒத்திருந்தது. சர்வதேச விசாரணையாக இருக்கட்டும், இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பொதுசன வாக்கெடுப்பைக் கோருவதாக இருக்கட்டும் பிரேமச்சந்திரனுக்கும் பொன்னம்பலத்துக்குமிடையில் கருத்தொற்றுமை நிலவியது. இவற்றையும் தாண்டி, பிரேமச்சந்திரனிடம் கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற கனம் கொண்ட பதவியொன்று கைவசம் இருந்தது. இந்தப் பதவியால் இவரது கருத்துக்களுக்குத் தமிழ்ப் பத்திரிகைகளில் முதற்பக்க இருப்பிடம் நிரந்தரமாகவே வழங்கப்பட்டிருந்தது. இருந்தும் இம்முறை இவர் ஏழாமிடத்திற்குத் தள்ளப்பட்டு தனது நாடாளுமன்ற ஆசனத்தை இழந்தார். இவருக்கும் ஆறாமிடத்தில் வந்த சாவகச்சேரியைச் சார்ந்த அருந்தவபாலனுக்குமிடையில் விழுந்த வித்தியாசம் ஏறத்தாழ 12,000 விருப்பு வாக்குகள். போலவே கிழக்கில் தன்னை விடுதலைப் புலிகளின் தீவிரப் பற்றாளராகக் காட்டிக் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனும் படுதோல்வியடைந்திருக்கின்றார்.
இது ஒரு புறமிருக்க, மறுபுறத்தில் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று சாடியதாகவும், ஆயுதப் போராட்டத்தைக் கீழ்த் தரமாகப் பேசியதாகவும் தொடர்ந்து குற்றம் சுமத்தப்பட்டு வந்த கூட்டமைப்பின் வேட்பாளர் சுமந்திரன் யாழ். மாவட்டத்தில் 58,043 வாக்குகளைப் பெற்று மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டார். நான் அறிந்த வரை சுமந்திரன் இந்தக் குற்றச் சாட்டுக்களுக்குப் பதிலளிக்க 2014இல் சாவகச்சேரியில் ரவிராஜ் நினைவுப் பேருரையை ஆற்றிய போது தான் கூறிய – எந்த இயக்கத்தையோ, தனி நபரையோ சாராத – ஆயுதப் போராட்டம் மற்றும் ஆயுதம் தாங்கிப் போராடிய இளைஞர்களது தியாகம் என்பன பற்றிய பொதுவான சில கருத்துக்களை மீள-உரைத்ததைத் தவிர புதிதாக எதையும் சொல்லவில்லை. மேலும், விடுதலைப் புலிகளது நாமத்தை மக்களைத் தூண்டிவிடும் படி பயன்படுத்தவோ, வாக்கு வேட்டைக்கென பிரபாகரனது பெயரை எந்தப் பரப்புரை மேடையிலும் புகழ்ந்துரைக்கவோ இல்லை. இருக்க, சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறீகாந்தா என்போர் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகளின் எண்ணிக்கையின் இருமடங்கு விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். போலவே, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மீதும் சிங்கக் கொடியர், சிங்களக் கைக்கூலி போன்ற கடுஞ்சொற்களை வீசி துரோகிப் பட்டம் குத்தவென ஒரு கூட்டம் அலைந்தது. ஆனால், அவரும் சிறந்த வெற்றியைச் சுவீகரித்தார்.
குருபரனது விளக்கத்திற்கெதிரான எனது பிரதிவாதத்தின் சாரம் இதுவே: விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்டமைதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை வைக்கக் காரணம் என்றால் கூட்டமைப்புக்குள்ளிருந்த விடுதலைப் புலிகளின் தீவிரப் பற்றாளர்கள் தோல்வியடையவும், புலி எதிர்ப்பாளர்களாகக் கடுமையாகச் சாடப்பட்டவர்கள் வெற்றியடையவும் காரணம் என்ன? விடுதலைப் புலிகள் தொடக்கி வைத்த கட்சி என்ற காரணத்திற்காகக் கூட்டமைப்புக்கு வாக்களித்த அதே மக்கள் அடுத்த மூச்சில் தாம் தெரிந்தெடுத்த கட்சிக்குள்ளே இருக்கும் புலிகளின் பலத்த ஆதரவாளர்களைப் புறக்கணித்தனரா? இது யாது விநோதம்?
சரிவர நிதானித்தால் தமிழ் மக்களது வாக்களிப்பில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்ட காரணிகளின் செல்வாக்கு புறக்கணித்த நிலையே இருந்திருக்கின்றது என்பதை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். இதற்கு ஆதாரமாக மேலும் இரு காரணங்களைத் தருகின்றேன்.
முதலாவதாக, தம்மை விடுதலைப்புலிகளின் நேரடி வாரிசுகளாகக் காட்டிக் கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் எந்தளவிற்கு முனைந்தார்களோ அந்தளவிற்கு, அதற்கு அதிகமாக பொன்னம்பலம் ஜூனியர் படையணி முயன்றதை இந்தத் தேர்தலை அவதானித்த யாரும் மறுக்க முடியாது. வல்வெட்டித் துறையில் வைத்துக் கட்சியின் விஞ்ஞாபனத்தை வெளியிட்டதிலிருந்து, விடுதலைப் புலிகளின் திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த முன்றலில் சுடர் ஏற்றிவிட்டு வாக்குச் சாவடிக்குச் சென்றது வரை தம்மை விடுதலைப் புலிகளின் சொந்தக் குட்டிகளாகக் காட்டிக் கொள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பெரும் சிரத்தைப்பட்டனர். இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் செய்வதறியாது திகைத்த போது தான் மட்டுமே துணை நின்றதாகவும் ஏனைய கூட்டமைப்புத் தலைவர்கள் அவர்கள் நிலையை உதாசீனம் செய்ததாகவும் சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பைக் கூட்டி தனது அம்மா மீது அடித்துச் சத்தியம் செய்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். 2004 பொதுத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் நேரடி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டவர்கள் என்பது மாத்திரமே அக்கட்சியைச் சார்ந்த குறைந்தது இருவருக்கு ஏறிய மேடையெல்லாம் ஒரே முகவரியாக இருந்தது. இது எதுவும் தமிழ் மக்களை துளியளவும் அசைக்கவில்லை என்பது தேர்தல் முடிவுகள் உணர்த்தும் உண்மை.
இரண்டாவதாக, இலங்கை இராணுவத்துடன் இணைந்து இயங்கிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவானதற்கு, குருபரன் கூறுவதைப் போன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற நாமம் அவரைப் புனிதப்படுத்தியது தான் காரணமா? அப்பெடியெனில் மஹிந்த ராஜபக்ஷவின் அனுசரனையுடன் யாழ். மாவட்டத்தைக் கலக்கிய டக்ளஸ் தேவானந்தாவின் வெற்றியை எப்படிப் புரிந்து கொள்வது? அவரை யார் புனிதப்படுத்தியது? ஏன் மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரைப் பார்க்க அதிக வாக்குகளைப் பெற்றுக் கொண்டமையை எப்படி வியாக்கியானம் செய்வது?
தேர்தல் முடிவுகள்: எண்கள் பேசும் உண்மை
எண்கள் என்றும் பொய் சொல்வதில்லை. இதனாற்தான் என்னவோ தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தோல்விக்கு பல வர்ணப் பூச்சிடும் புத்திஜீவிகள் எவரும் தேர்தல் முடிவுகளுடன் தொடர்புபட்ட எண்களை அலசத் துணியவில்லை.
2010 நடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ். மாவட்டத்தில் பதிவான செல்லுபடியான வாக்குகளில் 4.28% வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. இம்முறை தேர்தல் கால ஆரம்பத்தில் இதோ தமிழ்த் தேசிய அரசியற் கள நிலையை கவிழ்த்துப் போடுகிறோம் எனச் சூழுரைத்த முன்னணியினரால் வெறும் 5% வாக்குகளையே பெற முடிந்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சியோ தனது வாக்குப் பலத்தை கடந்த பொதுத் தேர்தலில் 43.85% என்ற நிலையிலிருந்து இம் முறை 69.12% ஆக உயர்த்தியிருந்தது.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அவரது தீவிர ஆதரவாளராக இருந்து அட்டூழியங்கள் பல புரிந்த அங்கஜன் ராமநாதனது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைக் கூட கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் விஞ்ச முடியவில்லை என்பதும் அவர் தேர்தல் காலம் முழுவதும் குறிவைத்துத் தாக்கிய கூட்டமைப்பின் வேட்பாளர் சுமந்திரன் யாழ். மாவட்டத்தில் முன்னணியினர் ஒரு கட்சியாகப் பெற்ற மொத்த வாக்குகளைக் காட்டிலும் ஏறத்தாழ நான்கு மடங்கு விருப்பு வாக்குகளை சுவீகரித்துக் கொண்டதும் கூடுதல் விசேஷம்.
யாழ். மாவட்டத்தைத் தவிர்ந்த ஏனைய தமிழ் மாவட்டங்களில் கட்டுக் காசைக் கூட எட்டிப் பறிக்க முடியா பரிதாப நிலை தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு நேர்ந்தது. இதுதான் இக்கட்சியின் அங்கத்தவர்களும், ஆதரவாளார்களும் முன்வைத்த கொள்கைகளுக்கும், தேர்தல் காலத்தில் மேற்கொண்ட விசமத்தனமான பிரச்சார நடவடிக்கைகளுக்கும் கைம்மாறாக தமிழ் மக்கள் கொடுத்த பரிசு. இறுதியில், ஆசனப் பங்கீட்டுக்கு அவசியமான 5% எல்லையை வெறும் ஆறே வாக்குகளால் கடந்து யாழ். மாவட்டத்தில் கூட்டமைப்புக்குக் கிட்ட வேண்டிய ஆறாம் ஆசனத்தைப் பிடுங்கியெடுத்து பெரும்பான்மைக் கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்குத் தாரை வார்த்ததொன்றுதான் இவர்கள் புரிந்த சாதனை. கடைசியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் பெண் வேட்பாளர் மதனி நெல்சன் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகளிலும் குறைவான விருப்பு வாக்குகளைப் பெற்ற விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்றம் சென்றார்.
யாரைப் பிரதிநிதித்துவம் செய்கின்றார்கள் என்று கூறிக் கொள்கின்றார்களோ அதே தமிழ் மக்களது அபிமானத்தையும், நம்பிக்கையையும் சொற்பளவும் வென்றெடுக்கத் தெரியாத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையை ஒட்டு மொத்த சர்வதேசத்தையே வளைக்க வல்ல ஆளுமையுள்ள தலைவர்களாக வர்ணித்து அவர்களுக்காக களத்திலும், புலத்திலும் ஒரு கூட்டம் வக்காலத்து வாங்கியமை வேடிக்கையே.
சுவரிற் தெரியும் சித்திரங்கள்
ஒவ்வொரு வாக்காளனும் தான், தன்னைச் சார்ந்த குடும்பம், சமூகம் என்பவற்றின் தேவைகள், அபிலாசைகள் மற்றும் அரசியற் போக்கு என்பவற்றுக்கிணங்கத் தன் வாக்கை அளிக்கிறான். தனிநபர் ஒருவனது தெரிவைப் புரிந்து கொள்வதே கடினமானதாகவிருக்கும் போது ஒட்டுமொத்த சமூகமொன்றின் ஜனநாயகத் தீர்ப்பிற்கு விளக்கம் கொடுப்பது சிக்கலான விடயமென்பது கண்கூடு. இந்த அடிப்படைப் புரிதலுடன் இந்தப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியலைச் சார்ந்த முடிவுகளைப் பற்றிய மூன்று கருத்துக்களை முன்மொழிகின்றேன்.
முதலாவதாக –
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி தமிழ் மக்கள் அக்கட்சியின் தலைவர் இராஜவரதோயம் சம்பந்தனது அரசியற் போக்கின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும், அவரது தலைமைக்கு வழங்கும் அங்கீகாரத்தையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. இது (i) கடந்த பொதுத் தேர்தலிலும் பார்க்க இலங்கைத் தமிழரசுக் கட்சி பெற்றுக் கொண்ட மகத்தான வெற்றியிலிருந்தும்; (ii) சம்பந்தனையொத்த அரசியற் சித்தாந்தங்களுடன் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட சுமந்திரனுக்கு மக்கள் வழங்கிய ஆதரவிலிருந்தும்; (iii) சமபந்தன் – சுமந்திரன் என்போரின் அரசியல் நிலைப்பாடுகளை கூட்டமைப்புக்குள் இருந்து தொடர்ச்சியாக விமர்சித்து வந்த சுரேஷ் பிரமச்சந்திரன், வெளியிலிருந்து சேறு பூசிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்போரின் படுதோல்வியிலிருந்தும் தெளிவாகின்றது. தமிழரது உரிமைகள் தொடர்பிலும், தமிழரது அரசியல் இலக்குகள் தொடர்பிலும் இலங்கை அரசுடன் தொடர்ச்சியாக இடைப்பட வேண்டியதன் அவசியத்தைத் தமிழ் மக்கள் நன்றே புரிந்து வைத்துள்ளார்கள். இதானாற்தான் தமிழ் மக்கள் தமிழரது உரிமைகளையும், சுயகௌரவத்தையும் அடகு வைக்காமல் இலங்கை அரசுடன் ஆரோக்கியமான ரீதியில் பேச வேண்டிய இடத்தில் பேசி, மோத வேண்டிய இடத்தில் மோதத்தக்கவர்களை தீர்க்கமாகத் தெரிவு செய்திருக்கின்றார்கள். மேலும், சர்வதேசத்தின் ஆதரவும் சம்பந்தன் -சுமந்திரன் கூட்டணியைச் சார்ந்தே தமக்குக் கிடைக்கும் என்பதும் தமிழ் மக்களுக்குத் தெரியும். சம்பந்தனது உறுதியான தலைமைத்துவத்தின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் மக்களது இருப்பு மற்றும் அரசியற் பலம் என்பன வலுப்பெற்றிருப்பதையும் தமிழ் மக்கள் உணர்ந்திருக்கின்றனர். ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி தமிழ்த் தேசிய அரசியல் வெளியினுள் மென் வலு அரசியலுக்குக் கிடைத்த உறுதியான ஆதரவு என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது.
இரண்டாவதாக –
பொதுத் தேர்தல் முடிவுகள் தமிழருக்கு அரசியற் தீர்வு, உரிமைகள் என்பவற்றுக்கு அப்பால் சந்திக்கப்பட வேண்டிய அவசரத் தேவைகள் பலவிருப்பதையும், அவற்றைப் பூர்த்தி செய்வதிலும் தமிழ்ப் பிரதிநிதிகளது பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதையும் உணர்த்தி நிற்கின்றது. வன்னித் தேர்தல் தொகுதியில் செல்வம் அடைக்கலநாதனைப் பின் தள்ளி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சியின் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிந்தெடுக்கப்பட்டதன் காரணம் அவரது சமூகப் பணி மாத்திரமே: அவரது அரசியல் ஞானமோ, போராட்ட அர்ப்பணிப்போ அல்ல. யாழ்த் தொகுதியில் முதலிடம் பெற்ற சிவஞானம் சிறீதரன் தீவிர தமிழ்த் தேசியப் பற்றாளர், விடுதலைப் புலிகளது ஆதரவாளர் என்பவை ஒரு புறமிருக்க கடந்த ஐந்து வருடங்களில் – குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் – அலுவலகம் ஒன்றை நிறுவி வாரம் தோறும் மக்களைச் சந்தித்து, தன்னைச் சார்ந்த மக்களது கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கென தன்னால் ஆன பணிகளை அர்ப்பணிப்புடன் ஆற்றி வந்திருக்கின்றார். கிளிநொச்சித் தொகுதியில் மாத்திரம் இவர் பெற்ற 28,657 விருப்பு வாக்குகளும் இந்தச் செய்தியையே உணர்த்தி நிற்கின்றன. மக்களது அன்றாடப் பிரச்சினைகளைக் கருத்திலெடுக்காமல் வறட்டுத் தேசிய வாதம் மாத்திரம் பேசிக்கொண்டிருந்த அனைவருக்கும் இன்று தமது அரசியற் போக்கை மீள ஆராய வேண்டிய தேவை நேர்ந்திருக்கின்றது.
இறுதியாக –
மீண்டுமொருமுறை தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரையும் அவர்களது கொள்கைகளையும் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமின்றி நிராகரித்திருக்கின்றனர். தமிழ் மக்கள் வழங்கியிருக்கும் இந்தத் தெளிவான செய்தியை மழுங்கடிக்கத் துடிக்கும் முன்னணி ஆதரவாளர்கள் கடைசியில் தமிழ் மக்களுக்குள் ‘முன்னேறிய வர்க்கத்தினர்’ எதிர் ‘பின்தங்கிய வர்க்கத்தினர்’ என்ற பிரிவினையை உருவாக்கி தமிழருக்குள் இந்தப் பின்தங்கிய, அரசியல் மையப்படுத்தப்படாத, அறிவற்ற பிரிவே கூட்டமைப்பை வெற்றிபெற வைத்தது என்ற செருக்கு நிறைந்த போதனையை வெளியுலகிற்குக் கொடுக்க முனைகின்றார்கள். ஜனநாயகத்தில் வெளிப்படைத்தன்மை, பன்மைத்துவத்தின் அவசியம் பற்றி சித்தாந்தம் பேசுபவர்கள் ஜனநாயகத்தின் அடிப்படையான மக்கள் ஆணைக்குச் செய்யும் மரியாதையின் இலட்சணம் இதுவே. படிப்பினைகள், வியாக்கியானங்கள், ஆய்வுக் கருத்துக்கள் என்ற போர்வையில் இவர்கள் வெளியிடும் தமிழ் வாக்கினை மழுங்கடிக்கும் கருத்துக்களையும், தமிழ் மக்களைக் கொச்சைப்படுத்தும் பேச்சுக்களையும், தமிழ் மக்களது ஜனநாயகத் தீர்ப்பை ஏற்க மறுக்கும் இவர்களது முரட்டுப் போக்கையும் நாம் கண்டுகொள்ளாது விடுவது தமிழ்த் தேசிய அரசியலின் ஜனநாயக வளர்ச்சிக்குப் பாரதூரமான விளைவுகளைக் ஏற்படுத்த வல்லன. இவர்களது போதனைகள் கடந்த ஜனவரியில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற கையோடு ‘தன்னை ஈழத்து மக்களே தோற்கடித்ததாக’ விடுத்த அறிக்கையிலும் பார்க்கக் கீழ்த்தரமானவை. இவை வன்மையாகக் கடிந்து கொள்ளப்படவேண்டியவை. இலங்கைப் நாடாளுமன்றத்தில் தமிழரது பிரதிநிதித்துவப் பலத்தைக் குறைத்தமைக்கு நேரடிப் பொறுப்பாளிகளாக இருப்பதைப் பற்றிய குற்றவுணர்வு சொற்பளவுமின்றி, இன்றும் மக்களால் தெரிந்தெடுப்பட்ட பிரதிநிதிகளைத் தூற்றத் துடிக்கும் இவர்களை என்னவென்பது? அமைதி காப்பதொன்றே இன்று இவர்களுக்கு விமோசனத்திற்கெனத் திறந்திருக்கும் ஒரே வழி. இனியாவது அதைச் செய்வார்களா?
Leave a Reply
You must be logged in to post a comment.