அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியேன்! உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்குவேன்! கோட்டபாய சூளுரை!

அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியேன்! உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்குவேன்!  கோட்டபாய சூளுரை!
நக்கீரன்

சிறிசேனா – இரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கும் இடையே வேற்றுமை இல்லை இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என தமிழர்களில் ஒரு பிரிவினர் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருக்கிறார்கள். இவர்கள் வெண்ணெய்க்கும் சுண்ணாம்புக்கும் இடையில் உள்ள வேற்றுமை தெரியாதவர்கள்.  இரண்டும் நிறத்தில் வெண்மையாக இருப்பதால் இரண்டும் ஒன்று என நினைப்பவர்கள்.

சிறிசேனா – இரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கும் சனாதிபதி கோட்டபாய இராசபக்ச ஆட்சிக்கும் இடையில் அடிப்படையில் ஒரு வேற்றுமை இருக்கிறது. நல்லாட்சி அரசில் ஒப்பீட்டளவில் சனநாயகத்துக்கான இடைவெளி இருந்தது. அது இப்போது மறுபடியும் சுருங்கி வருகிறது. Won't hesitate to withdraw Sri Lanka from bodies which target ...

ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம்  சனநாயகத்தைப் பலப்படுத்தவும் இனங்களுக்கு இடையே நல்லெண்ணத்தைக் கட்டி எழுப்பவும்  பல  முற்போக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

1) தமிழ்மக்கள் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை எந்நக் கெடுபிடியும் இல்லாம் அனுட்டிக்கும் உரிமை வழங்கப்பட்டது. இராணுவமோ காவல்துறையோ அந்த வழிபாட்டுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தவில்லை. போரில் இறந்தவர்களை நினைவு கூரல்  ஒரு சனநாயக நாட்டில்  மக்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமை.

1) இராசபக்ச அரசு இராணவத்துக்கு  வழங்கியிருந்த பொலீஸ் அதிகாரம் விலக்கப்பட்டது. இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டது.

2) மே 18 யை  முப்படைகளின் வெற்றிவிழாவாகக் கொண்டாடி வந்த வழக்கம் நிறுத்தப்பட்டது.

3) தமிழில் தேசியப் பண் பாட விதித்திருந்த தடை நீக்கப்பட்டு தமிழிலும் அது பாடப்பட்டது.

4) வெள்ளைவான் கலாசாரம் ஒழிக்கப்பட்டது.

5) ஊடகவியலாளர்கள் யாருமே கைது செய்யப்படவில்லை. கைது செய்தபின் காணாமல் போகவில்லை.

6) நிர்வாக இயந்திரத்தில் இராணுவத்தினர் பதவியில் அமர்த்தப்படவில்லை.

7) இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 30-1 க்கு சிறிலங்கா அரசு இணை அனுசரணை வழங்கியது.

ஆனால் இன்றைய  சனாதிபதி கோட்டாபய இராசபச்ச ஆட்சியில்  இவை எல்லாம் தலைகீழாக மாற்றப்பட்டுள்ளன. மாற்றப்பட்டு வருகின்றன.

கடந்த  மே 28 இல் நினைவு கூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் இராணுவம் திட்டமிட்டு பல இடைஞ்சல்களை மேற்கொண்டுள்ளது. கொரோனா தொற்று நோயை சாட்டாக வைத்து மக்கள் முள்ளிவாய்க்காலில் கூடுவதைத் தடை செய்தது. முள்ளிவாய்க்காலுக்கு வெளியில் நினைவேந்தல் நாள் அனுட்டிக்கப்படுவதற்கும் இராணுவம் தடை விதித்தது. நீதிமன்றங்களை நாடி – கொரோனாவைக் காரணம் காட்டி – தடையுத்தரவு வாங்கப்பட்டது.  முள்ளிவாய்க்காலுக்குப் பயணம் செய்தவர்கள் வழி மறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

கடந்த ஆண்டு (2019)  நொவெம்பர் மாதம் 27 இல் மன்னார் மாவட்டத்தில் ஆட்காட்டி வெளி மற்றும் பண்டிவிருச்சான் ஆகிய இரு மாவீரர் துயிலும் இல்லத்திலும்  மாவீரர்களுக்கு  அஞ்சலி செலுத்தப்பட்டது. அது தொடர்பாக அதனை  ஏற்பாடு செய்த இரண்டு செயற்பாட்டாளர்கள் கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் கடந்த புதன்கிழமை (மே 20) மன்னாரில்  தனித்தனியாக இரண்டு மணி நேரம் விசாரணைகக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.Post-War Sri Lanka: Fractured and Unjust for Tamils – The Diplomat

மேலே கூறியது போல முன்னைய  இராபக்ச ஆட்சியில் இராணுவத்துக்கு வழங்கப்பட்ட பொலீஸ் அதிகாரம் பிடுங்கப்பட்டதால்  இராணுவம் அழையா விருந்தாளிகளாக கோயில் திருவிழாக்களில் விளையாட்டுப் போட்டிகளில் மற்றும் பொது நிகழ்ச்சிகளில்  கலந்து கொண்டு மாலை மரியாதையைப் பெற முடியவில்லை. ஒரு நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு சனநாயக நாடுகளில் பொலீசுக்கே வழங்கப்படும். காரணம்  அதுவொரு சிவில் அமைப்பு. மிக அருமையாகவே – வெள்ளம், புயல்  போன்ற பேரிடர்களின் போது – இராணுவம் அழைக்கப்பட்டு நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்படும்.  கொரோனாவைக் கட்டுப்படுத்த இலங்கை நீங்கலாக வேறு எந்த நாடும் முப்படைகளைப் பயன்படுத்தவில்லை.

ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் வெற்றிவிழா கொழும்பில் கொண்டாடப்பட்டுள்ளது. போர் வெற்றிவிழாக் கொண்டாட்டத்துக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.

ஒரு நாட்டின் சுதநதிரத்தை எல்லா மக்களும் அனுபவிக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் நாடு தன்னுடையது, அதன் கொடி தன்னுடையது என்ற நினைக்க வேண்டும். அதற்குப் பெயர்தான் சனநாயகம். ஆனால் கோட்டாபய இராசபக்ச ஆட்சியில் மீண்டும் தமிழில் தேசியப் பண் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் நாட்டின் குடிமக்கள் அல்லர் என்பதே இதன் பொருள் ஆகும்.

வெள்ளைவான் கலாசாரம் மீண்டும் தலை தூக்காவிட்டாலும் தமிழ்மக்கள் இராணுவம், பொலீஸ்  தாக்குதலுக்கு அவ்வப்போது ஆளாகிவருகிறார்கள். தாக்குதலை அடுத்துச் சிலர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது சரியே. ஆனால் அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு உரிய விசாரணையின் பின்னரே தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் உரிமை கிடையாது.

ஒரு நாட்டில் சர்வாதிகர ஆட்சி நடைபெறுகிறதா? மக்கள் ஆட்சி நடைபெறுகிறதா? என்பதற்கு சாட்சியாக இருப்பது ஊடக சுதந்திரம். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் ஊடகங்கள் ஆட்சியாளரை விமர்ச்சிக்கின்றன. சனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் போன்றோரை நார்போல கிழி கிழி என்று  கிழிக்கின்றன.  ஆனால் யாருமே கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவதில்லை. ஆக மீறினால் ஊடகங்கள் மீது மான இழப்பு வழக்குத்தான் தொடர முடியும்.

சிறிலங்காவில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிரிகள் போல் இராணுவம் காவல்துறை இரண்டாலும்  பார்க்கப்படுகிறார்கள். ஊடகவியலாளர்கள் ஆங்காங்கே தாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. (https://thediplomat.com/2020/05/post-war-sri-lanka-fractured-and-unjust-for-tamils/)

கோட்டாபய இராசபக்ச ஆட்சியில்  நாட்டின் நிருவாக இயந்திரம் படிப்படியாக இராணுவமயப்படுத்தப்பட்டு வருகிறது. நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் நாட்டின் உயர் பதவிகள் இராணுவ அதிகாரிகளால் நிரப்பப்பட்டு வருகின்றன. 

இரண்டு நாள்களுக்கு முன்னர் நல்வாழ்வு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.  கடந்த பெப்ரவரி மாதம் சுங்கத் திணைக்கள இயக்குநராக மேஜர் ஜெனரல் விஜிதா இரவிப்பிரியா நியமிக்கப்பட்டார்.  கோட்டாபய இராசபக்ச சனாதிபதியானதன் பின்னர் சிவில் நிர்வாகத்தில் இராணுவ அதிகாரிகளின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்ற எதிர்பாப்பு மெய்ப்பிக்கப் பட்டுவருகிறது. 

தெற்காசியாவில் அதிக இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடாக இலங்கை இருப்பதாக நியூசிலாந்து ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கையில் போர்  11 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மூன்று இலட்சம் படைத்தரப்பினரைக் கொண்டுள்ள சிறிலங்கா அரசாங்கம் நாட்டின் குடியியல் நடவடிக்கைகளில் படைத்தரப்பினரை ஈடுபடுத்தி வருவது குடியியல் சமூகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் இவ்வூடகம் எச்சரித்துள்ளது.

கொழும்பில் நடந்த போர் வெற்றி விழாவில் பேசிய சனாதிபதி கோட்டபாய அனைத்துலக அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியேன்! உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்குவேன்!  எனச் சூளுரைத்துள்ளார்.  “நாட்டுக்காகப்  பெரும் அர்ப்பணிப்புகளைச் செய்த படையினர் தேவையற்ற அழுத்தத்துக்கு உள்ளாக நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. அதே வேளை, எமது நாட்டுக்கு அநீதியான வகையில் ஏதேனும் ஒரு பன்னாட்டு  நிறுவனம் அல்லது சர்வதேச அமைப்பு தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக்கொள்ள நான் ஒரு போதும் பின்நிற்கப் போவதில்லை” எனச் சூளுரை  எடுத்துள்ளார். இதில் வியப்பில்லை.

சனாதிபதி கோட்டபாய இராசபக்ச அவர்களின் சூளுரையை அமெரிக்கா கண்டித்துள்ளது. மா புளித்தால் அப்பத்துக்கு நல்லது என்று நினைக்கிறேன்.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

1 Comment

  1. ஆனால் சிறிசேனா முதல் 3 ஆண்டுகளில் எங்களுக்கு பல உதவிகளைச் செய்திருந்தார். அவை மறக்க முடியாதவை.
    சம்பூர் காணி (2015) தொடங்கி வலி வடக்கு மற்றும் பல பகுதிகளில் 28,991 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதில் சனாதிபதி என்ற முறையில்
    அவரது பங்கு கணிசமானது. சம்பூரில் இராசபக்ச அரசு சிறிலங்கா கேட்வே இன்டஸ்றீஸ் என்ற நிறுவனத்துக்கு 99 ஆண்டுகாலத்துக்கு கொடுத்த 818 ஏக்கா காணியை( 367 குடும்பங்கள்) திருப்பி எடுப்பதில் அவர் செய்த உதவி அளப்பரியது. அதேபோல் சம்பூரில் 237 ஏக்கர் காணியில் (617 குடும்பங்கள்) இருந்த கடற்படைத்தளத்தை அப்புறப்படுத்துவதிலும் அவர் பேருதவி செய்தார்.

    இந்தக் காணி தொடர்பாக அரை அமைச்சராக இருந்து கருணா சம்பூர் மக்களுக்குச் சொன்னது “818 ஏக்கர் காணி முழுதும் 99 ஆண்டு கால குத்தகைக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. ததேகூ காணியை திருப்பி எடுத்துத் தருவோம் எனச் சொல்லி உங்களை ஏமாற்றுகிறது!

    இது தொடர்பான வழக்கில் பல ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் சம்பந்தன் ஐயா கறுத்தக் கோட்டு அணிந்து உயர் நீதிமன்றத்தில் சுமந்திரன் உடன் தோன்றி வாதாடினார்!

    நக்கீரன்

    காலம் அரச காணி தனியார் காணி மொத்தம்
    மே 2009 – சனவரி 2015 வரை விடுவிக்கப்படாத காணிகள் 67,142 9,453 76,595
    சனவரி 2015- மார்ச் 2019 வரை விடுவித்த காணிகள் 41,677 5,927 47,604
    மே 2009 – மார்ச் 2019 விடுவிக்கப்பட்ட காணிகளின் விழுக்காடு 71.30% 88.06% 75.48%
    விடுவிக்கப்படாத காணிகள் 25,465 3,526 28,991
    விடுவிக்கப்படாத காணிகளின் விழுக்காடு 28.70% 11.94% 24.52%

Leave a Reply