நீங்கள் எல்லோரும் உத்தமர்தானா?

அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் ?

கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

லகம் கொரோனாவால் கொந்தளித்துக் கொண்டிருக்க, ஈழத்தமிழினத்தார் மத்தியில் விறுவிறுப்பாக வேறு கொந்தளிப்பு.
கொந்தளிப்பை ஏற்படுத்தி இருப்பவர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ.சுமந்திரன் அவர்கள்.சிங்களத் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அவர் வெளியிட்ட சில கருத்துக்களால்,உணர்ச்சிமிக்க (?) ஈழத்தமிழினத்தார் கொந்தளித்துக் கிடக்கிறார்கள்.

அறிக்கைகள், பேட்டிகள் இணையப் பதிவுகள் என,வெளிவரும் வீராவேசமான பலரது வெளிப்பாடுகள், கடந்த மாதங்களில் செய்தியுலகை ஆக்கிரமித்திருந்த ‘கொரோனா வைரஸ்ஸை’ ஓரளவு ஓரங்கட்டியிருக்கிறது.

பதவிப் போட்டி, ஆளுமைப் போட்டி, அறிவுப் போட்டி என, 
பல்வகையாலும் சுமந்திரனோடு கயிறிழுத்துக் கொண்டு இருந்தவர்கள்,மேற் செய்தி கிடைத்ததும்,வாழைப்பழம் வழுக்கி வாயில் தானாய் விழுந்தாற் போல, தம் இஷ்டத்திற்கு சப்பித்துப்பிச் சதிராடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில்,நீங்கள்தானே சுமந்திரனின் ‘வால்கள்’,சுமந்திரனுக்கு விருது கொடுத்து மூக்குடைபட்டீர்களா? சுமந்திரனின் மூலம் அரசியலில் நுழையும் உங்கள் கனவு ‘அம்பேலா’? என்றெல்லாம் தம் இஷ்டத்திற்கு கதை வசனம் எழுதி, துக்கம் விசாரிக்குமாற் போல், தம் சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் சில பேர்.

இவையெல்லாம் ஒன்று சேர்ந்து மீண்டும் என்னை அரசியற் கட்டுரை ஒன்றை எழுத வைத்திருக்கிறது.

சுமந்திரனின் பேட்டிபற்றிய என் எண்ணப் பகிர்வை வெளியிடுவதற்கு முன்பாக, முன்பு பலதரமாய் நான் சொன்ன சில கருத்துக்களை, மீண்டும் இங்கு பிரமாணப்படுத்த விரும்புகிறேன்.
முதலாவது விடயம், நான் சுமந்திரனின் ஆதரவாளன் அல்லன், 
எம் இனத்தின் ஆதரவாளன் என்பது.
இரண்டாவது விடயம், அரசியலினுள் மூக்கை நுழைக்கும் எண்ணம், 
எனக்கு கிஞ்சித்தும் இல்லை என்பது.
மூன்றாவது விடயம், நான் எம் இனத்தின் எந்த அரசியல் அணிக்கும் 
எதிரானவன் அல்லன் என்பது.
பாரதி தன் சுயசரிதையில் சொன்னாற் போல, மேல் உண்மைகளை,
நாற்பதாயிரம் கோயிலில் சொல்லவும் நான் தயாராய் இருக்கிறேன்.

இனி விடயத்துக்கு வருவோம்.

முதலில் சுமந்திரனின் அந்த பேட்டி பற்றிய எனது தனிப்பட்ட கருத்தை,இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
பத்திரிகா தர்மத்தை மீறி, இனங்களுக்குள் பகை மூட்டும் நோக்கத்துடனும்,சுமந்திரனை தனிப்பட்ட ரீதியில் வீழ்த்தும் நோக்கத்துடனும் எடுக்கப்பட்ட பேட்டி அது. அந்தப் பேட்டியைச், சுமந்திரன் சரியான முறையில் கையாளவில்லை என்பது என் கருத்து.
பேட்டியாளன் தன்மானத்தைத் தூண்டிவிட, அதற்குப் பலியான சுமந்திரன், தன் சமநிலைதவறி, அவசர அவசரமாய்ப் பதிலளிக்க விழைந்தமையே மேற் பிரச்சனையின் காரணம் என்று கருதுகிறேன்.

தன்னை வீழ்த்தும் நோக்கமாய்க் கேள்விகள் கேட்கப்படுவதை உணர்ந்ததும்,அவனது கேள்விகளுக்கு பதிலளிப்பதை சுமந்திரன் உடன் நிறுத்தியிருக்க வேண்டும்.

பெரும் போரால் பாதிப்புற்ற ஓர் இனத்தின் எதிர்கால எழுச்சிக்காய் முயன்று கொண்டிருக்கிறேன். இறந்தகாலச் செய்திகளைக் கிளறி விட்டு நீ இனப்பகையை ஊட்டவும், எம் மிழினத்தலைமைகளுக்குள் பகை மூட்டவும் முயற்சிக்கிறாய்.உனது நோக்கம் தவறு!அதனால் உனது கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாது!‘ என்று கூறிவிட்டு, பேட்டியை முறித்துக் கொண்டு சுமந்திரன் எழுந்திருக்க வேண்டும்.
தன்மானத் தூண்டுதலுக்கு ஆளானதால்,அடுத்தடுத்து பதிலளிக்கப் புறப்பட்டு தவறிழைத்திருக்கிறார் சுமந்திரன்.

தமிழ் நாட்டில் அண்மையில் வெளியான, ‘திரௌபதி’ என்ற திரைப்படத்தின் இயக்குநரை,’கலாட்டா’ எனும் ‘யூ டியூப் சனலின்‘ ஊடாக பேட்டி கண்ட ஒருவர்,எல்லை மீறி கேள்விகள் தொடுக்க, 
அவர் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாதெனத் துணிவாய் நிராகரித்து விட்டு,கம்பீரமாக அந்த இயக்குநர் வெளியேறிய பதிவினை, ‘யூ டியூப்பில்’ பார்க்க முடிந்தது. சுமந்திரனும் அந்தப் பேட்டியை, அவ்வாறு தான் எதிர் கொண்டிருக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

இன்னும் இரண்டு விடயங்களைச் சொல்ல வேண்டி இருக்கிறது.
ஒன்று, பேட்டியில் சுமந்திரன் சொன்ன விடயங்கள் பற்றியது.
அடுத்தது, சுமந்திரனை எதிர்ப்போர்தம் கருத்துக்கள் பற்றியது.
அவற்றை ஒவ்வொன்றாய்ப் பார்போம்.  

சுமந்திரன் சொன்ன கருத்துக்களில் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கும் விடயங்கள் மூன்று,
 1.தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்படவில்லை என்பது.
 2.ஆயுதப் போராட்டத்தை தான் ஆதரிக்கவில்லை என்பது. 
 3.சிங்கள மக்களோடு இணைந்து வாழவே விரும்புகிறேன் என்பது.
சுமந்திரனின் இம்மூன்று கருத்துக்கள் பற்றியும் ஆராய்வது அவசியமாகிறது.

கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்படவில்லை என்ற விடயத்தில்,
தேவையில்லாமல் உண்மையை மறைக்கத்தலைப்பட்டு,
முன்னுக்குப்பின் முரணாகப் பேசி, மற்றவர்கள் நகைக்கும்படியாக கருத்துக்களை வெளியிட்டு,சுமந்திரன் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டுள்ளார். கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்பட்ட உண்மை உலகறிந்தது. தன் தலைவரான சம்பந்தரைப் பின்பற்ற நினைந்து, அந்தப் பெரிய பூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்பட்டு, இழிவுபட்டிருக்கிறார் சுமந்திரன். இது அவருக்கு வேண்டாத வேலை.அரசியல்வாதியாக மட்டுமன்றி, ஓர் வக்கீலாகவும் அவர் அடைந்திருக்கும் தோல்வி இது.

அடுத்தது, ஆயுதப் போராட்டத்தைத் தான் ஆதரிக்கவில்லை என்ற அவரது கருத்து. அக்கருத்தை அவர் வெளியிட்டதில் தவறிருப்பதாக எனக்குப்படவில்லை. அது அவரது தனிப்பட்ட சொந்தக்கருத்து.
ஆயுதப் போராட்டம், நம் இனம் விரும்பி ஏற்றுக் கொண்ட ஓர் பாதை அல்ல. அந்தப் பாதை நோக்கி, எம் இனம் தள்ளப்பட்டது என்பதே உண்மை. அடுத்தடுத்து எம் எதிரிகள், எம் இனத்தின் மேல் கட்டவிழ்த்து விட்ட வன்முறைகள்தான்,எம் இளைஞர்களை ஆயுதப் போராட்டப் பாதைக்குத் திருப்பியது என்பதே வரலாறு. 
ஆயுதப் போராட்டப் பாதை எம் இனத்தின் மேல் திணிக்கப்பட்ட பாதை.
வன்முறை நிறைந்த அப்பாதை, எதிரிகளைக் கையாள அப்போது தேவைப்பட்டது, அது வேறு விடயம். அப்பாதையை எல்லோரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என வலியுறுத்தும் உரிமை எவர்க்கும் இல்லை என்றே நான் கருதுகிறேன்.

ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாது விடுவதும் அவரவர் உணர்வு சார்ந்த விடயம்.

இன உரிமைப் போராட்டத்தை நிராகரித்தால்தான் அது தவறாகும்.
போராட்டப் பாதையை அவரவர் விருப்பப்படி யாரும் தீர்மானிக்கலாம்.
முன்னர் தமிழ்த்தலைவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த சாத்வீகப் போராட்டப் பாதையை பின்னர் இயக்கத்தலைவர்கள் வன்முறைப் போராட்டப்பாதையாக மாற்றவில்லையா ?
அதுபோலத்தான் இதுவும்! எனவே அக்கருத்தை சுமந்திரன் வெளியிட்டதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.

சுமந்திரனின் மேற்கருத்துக்காய்க் கோபப்படும் அரசியற் தலைமைகளிடமும், தனிமனிதர்களிடமும் ஒன்று கேட்க வேண்டும் என மனம் தூண்டுகிறது. இக் கருத்திற்காய்க் கோபப்படும் நீங்கள், இன்றும் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா?
ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றால், அதை இன்று பகிரங்கமாக உங்களால் அறிவிக்க முடியுமா? எதிரிகளை வன்முறையால் வெல்லும் பலம் இன்று எம்மிடம் இருக்கிறதா?
ஏலவே வன்முறைப் போராட்டத்தால் அடைந்த பாதிப்புக்களில் இருந்து மீளாத நம் மக்கள்,மீண்டும் ஓர் வன்முறைப் போராட்டத்திற்கு உடன்படுவார்களா? இத்தனை கேள்விகளுக்கும் ‘இல்லை’ என்பது தான் உண்மைப் பதில்.

‘ஆம்’ என்பது போல் பேசுகிறவர்கள் பொய் பேசுகிறார்கள்.
அப் பொய், பாராளுமன்றப் பதவிகள் நோக்கியது.
மக்களும் பாவம், அவர்களின் பொய்களை நம்பி வீணாய் உணர்ச்சிவயப்படுகிறார்கள். ஆயுதப் போராட்டத்தை ஏற்பது பற்றிய தனது சொந்தக் கருத்தை,தன் உணர்வு சார்ந்து சுமந்திரன் சொல்லியிருக்கிறார்.அவர் சொன்ன பதிலில் தவறில்லை என்றே படுகிறது.நம் எல்லோரதும் உள்ளத்தில் உள்ள பதிலும் அதுவே என்பது தான் உண்மைநிலை.

அடுத்தது சிங்கள மக்களோடு இணைந்து வாழ விரும்புவதாய் 
சுமந்திரன் சொன்ன விடயம் பற்றியது ஆயுதப் போரில் தோல்வி அடைந்த பின்னர், சிங்கள மக்களோடு இணைந்து வாழ்வதைத் தவிர வேறு வழியேதும் இருக்கிறதா?இதுபற்றி, சுமந்திரனின் பேட்டி கண்டு கொந்தளிக்கும் தமிழ் அரசியல் தலைமைகள், வெளிப்படையாக மக்கள் மன்றில், இல்லை! என்ற பதிலைச் சொல்ல முடியுமா? 
இலங்கைப் பாராளுமன்றம் என்பது இலங்கையில் வாழும் அனைத்து இனங்களினதும், இணைப்பின் அடையாளமாக இருக்கும் ஒன்று.
சிங்கள மக்களோடு இணைந்து  வாழ விரும்பவில்லை என்று கூறும் அரசியற் தலைவர்கள்,நாம் பாராளுமன்றத்துக்குள் நுழையமாட்டோம், தேர்தலை நிராகரிப்போம் எனக் கூறி, பாராளுமன்றத்திற்கு வெளியே நின்று, இனவிடுதலைக்காய் போராட முன்வருவார்களா?
இவர்கள் வெளிக்காட்டும் அனைத்து உணர்ச்சிகளும்,
பாராளுமன்ற இருக்கைகளை கைப்பற்றுவதற்காகவே என்பது வெளிப்படை.

இந்நிலையில் சுமந்திரனுக்கு எதிராக அவர்கள் காட்டும் பொய் உணர்ச்சி,நகைப்பைத்தான் தருகிறது.

இனி, சுமந்திரனைத் தூற்றி நிற்கும் உள்நாட்டு, புலம்பெயர் தமிழர்களை நோக்கியும், இங்குள்ள தலைமைகளை நோக்கியும் பொதுவாகச் சிலவற்றைக் கேட்க வேண்டி இருக்கிறது.

முதலில் பொதுமக்களை நோக்கிய எனது கேள்விகள்.
மனச்சாட்சியில் கைவைத்துச் சொல்லுங்கள். உங்களில் எத்தனை பேர், புலிகளுக்கும் அவர்களின் ஆயுதப் போராட்டத்திற்கும் உண்மை விசுவாசிகளாய் இருந்தீர்கள்?

ஆயுதப் போராட்டம் நடந்து கொண்டிருந்த பொழுது, 
அதில் உங்களின் பங்களிப்பு எந்த அளவாய் இருந்தது?
ஆயுதம் வாங்கவெனப் புலிகள் பவுண் சேர்த்தபோது 
உங்களில் எத்தனைபேர் மனமொப்பி அதனை மகிழ்ச்சியோடு கொடுத்தீர்கள்?

புலிகள் அக்காலத்தில் விதித்த கட்டுப்பாடுகளை எத்தனைபேர் முழுமனதோடு ஏற்றீர்கள். புலிகள் பயணக்கட்டுப்பாடு விதித்திராவிட்டால் உங்களில் எத்தனைபேர் எம் மண்ணில் நின்றிருப்பீர்கள்?

அடுத்து, புலம்பெயர் தமிழர்களிடமும் சில கேட்க வேண்டி யிருக்கிறது. இல்லாத புலித்தொடர்பைச் சொல்லி, வெளிநாடுகளில் ‘விசா’ எடுக்க முயலாதவர்கள் உங்களில் எத்தனைபேர்?

புலிகளின் நிர்வாகத்தில் நம் மண் இருந்த காலத்தில், 
விடுமுறைக்கு இலங்கைக்கு வந்தவேளைகளில், 
புலிகளுக்குப் பணம் கொடுக்க வேண்டிவரும் என்ற பயத்தில்,
தாய் மண்ணை மிதிக்கக்கூட விரும்பாமல், வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்த உங்கள் உறவுகளைக் கொழும்பிற்கு அழைத்துப் பார்த்துவிட்டு மீண்டு ஓடாதவர்கள் எத்தனை பேர்?

இறுதிப் போர்க் காலத்தில் வன்னியில் வாழ்ந்த உறவுகளை, 
அரச செல்வாக்குகளைப் பயன்படுத்தி மீட்டெடுத்து, 
வெளிநாட்டிற்கு அழைக்காதவர்கள் எத்தனைபேர்? விதிவிலக்காக இருக்கும் ஒருசிலரைத்தவிர இவற்றையெல்லாம் நாம் செய்யவில்லை என்று, உங்களால் சொல்லமுடியுமா?

போராட்டத்திற்கு ஆதரவாளர்களாக உங்களை இனங்காட்டி,
மறைந்த போராளிகளுக்காய் உணர்ச்சிக் கூச்சலிடும் உங்களிடம், 
இன்னொன்றையும் கேட்க வேண்டி இருக்கிறது.நம் மண் மீட்பிற்காய் போராடத் தலைப்பட்ட, அத்தனை இயக்கங்களிலும் இணைந்த, அனைத்து போராளி இளைஞர்களும்,

நம் மண்ணிற்காய்ப் போராடத் தலைப்பட்டவர்கள் தானே?
அவர்கள் பற்றி என்றாவது  நீங்கள் கவலைப்பட்டதுண்டா?
தலைமைகள் தவறிழைத்திருக்கலாம். 

மண்ணிற்காய் போராடத் தலைப்பட்ட அந்த இளைஞர்கள் என்ன தவறு செய்தார்கள்?

எந்த ஆயுதக்குழுத் தலைமையாவது தன் கீழிருந்த போராளிகளின் கருத்தைக் கேட்டு, எப்போதேனும் இயங்கியது உண்டா?

அப்படி இருக்க மாற்றியக்கப் போராளிகளை நாம் மறந்தது நியாயமாகுமா?

நமது இன உணர்ச்சிகள் எல்லாம் வென்றவர்களுக்காக மட்டும்தான் குமுறும்.

வலியர்களை வழிமொழிய மட்டும்தான் பொய்யான எமது இன உணர்வு வழிவிடும்.

எமது இந்தப் பொய்மைதான், பிற்காலத்தில் இயக்கங்களையும் பற்றியது என்று நினைக்கிறேன்.

இந்த ஒழுங்கில் தாம் வாழ்ந்து கொண்டு விடுதலை உணர்ச்சி பேசுவோரைக் காண, நகைப்புத்தான் வருகிறது. 

இனி சுமந்திரன்மேல் கோபித்துக் கூச்சலிடும், மாற்றணித் தலைவர்களிடமும் சில கேள்விகளை கேட்கவேண்டி இருக்கிறது.
இயக்கங்களை நடத்தி, அவ் இயக்கங்களை அரசியற் கட்சியாக்கிய உங்களில் பலர், இன்று புலிகள் இயக்கத்தை ஆதரிக்குமாற்போல் பேசுகிறீர்கள்.

என்று நீங்கள் புலிகளின் ஆதரவாளர்கள் ஆனீர்கள்?
நீங்கள் காட்டும் ஆதரவு, பொய் என்பது உங்களுக்கே தெரியாதா?
உங்கள் இயக்கங்களை எல்லாம், புலிகள் அடக்கியதும் அழித்ததும் உலகறிந்த செய்திகள்.

உங்கள் அமைப்புக்களின் தலைவர்கள் எல்லாம் புலிகளால் அழிக்கப்பட்டதை, உலகம் இன்னும் மறக்கவில்லை.

அப்படி இருக்க, எப்படி உங்களால் அவர்களின் ஆதரவாளர்களாய் நடிக்க முடிகிறது?

ஒன்று, நீங்கள் தற்போது காட்டும் புலி ஆதரவு பொய்மையாய் இருக்க வேண்டும். 

இல்லையேல் உங்கள் தலைவர்களுக்கு அன்று நீங்கள் காட்டிய விசுவாசம், பொய்மையாய் இருக்க வேண்டும்.

அதனாற்தான் பெரியவர் ஆனந்தசங்கரி உங்களிற்சிலரை நோக்கி, 
நீங்கள் என்று புலி ஆதரவாளரானீர்கள்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.உண்மையைச் சொல்லப் போனால் உங்களது கோபக் குமுறல்களில், சுமந்திரன் மீதான எதிர்ப்போ புலிகள் மீதான ஆதரவோ இருப்பதாய்த் தெரியவில்லை,பாராளுமன்ற இருக்கைகளைப் பிடிக்கும் இலட்சியம்தான் வெளிப்படுகின்றது.

இந்த உணர்ச்சிவயப்பாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழுவினரும், தம்மை வீரியமாய் இணைத்துக் கொள்கின்றனர்.
சில காலங்களிற்கு முன்னர் திரு. சிவாஜிலிங்கம் அவர்களுக்கும்,
திரு. கஜேந்திரகுமார் அவர்களுக்கும் ஏற்பட்ட சர்ச்சை ஒன்றில், 
புலிகளிடம் இருந்து தமக்குப் பாதுகாப்பு வேண்டி,
கஜேந்திரகுமார் ரெலோ இயக்கத்தை அணுகியதாகவும்,
தம்மால் அப் பாதுகாப்பு அப்போது வழங்கப்பட்டதாகவும்அறிவித்த செய்தி, பகிரங்கமாகப் பத்திரிகையில் வெளியாகியிருந்தது.
இவ் உண்மைகள் எல்லாம், காலத்தில் கரைந்து போகும் என்று நினைக்கிறார்கள் போல! நம் மக்களின் மறதியில்த்தான் இவர்களுக்கு எத்தனை நம்பிக்கை!

ஒன்றுமட்டும் தெளிவாய்த்தெரிகிறது. நம்மில் பெரும்பாலானோர் புலிகளுக்கும் இனத்திற்கும் மட்டுமல்ல, தமக்கேகூட உண்மையற்றுத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
நம் இன உணர்ச்சியெல்லாம் பெரும்பாலும் வேஷம்தான்.
உண்மையானவர்கள் முற்றாக இல்லை என்று சொல்லவரவில்லை. 
பொய்யர்களுடனான ஒப்பீட்டில் அவர்கள் தொகை மிகமிகக் குறைவானதாகவே இருக்கிறது. இவ் உண்மைக்கு நம் போராட்டத்தின் தோல்வியை விட, வேறென்ன சான்று வேண்டும்?
நாம் உருப்பட வேண்டுமானால் புலிகள் பற்றிய பேச்சை துருப்புச் சீட்டாய்ப்பயன்படுத்தி பொய்மை செய்யும் அசிங்கத்தை உடனடியாக நம்மவர்கள் நிறுத்தியாக வேண்டும்.
தலைவர்களுக்கு மட்டுமல்ல, மக்களுக்காகவும்தான் இதனைச் சொல்கின்றேன்.
அதுதான் நாம் புலிகளுக்குச் செய்யும் உண்மை மரியாதையாய் இருக்கும்.

நிறைவாக, கூட்டமைப்புத் தலைவர்களுக்கும் சில சொல்ல வேண்டி இருக்கிறது.பல தடவை சொல்லிக் களைத்த விடயம்தான். ஆனாலும் திரும்பவும் சொல்கிறேன்.

பதவிப் போட்டியில் பாதாளத்திற்கும் கீழ் சென்று ண்டிருக்கிறீர்கள்.
சுமந்திரனின் கருத்திற்கு எழுந்த எதிர்ப்பால், மாற்றணியினர் மகிழ்ந்ததைவிட உங்களுக்குள்ளேயே பலர் மகிழ்ந்ததுதான் அதிகம்போல் தெரிகிறது. 

அதனை உங்களிற் பலரின் அறிக்கைகள் தெளிவாய் வெளிக்காட்டின.
கூட்டமைப்பு என்ற சொல்லையே கொச்சைப்படுத்துகிறீர்கள்.
சுமந்திரனின் அதிகாரத்தை வெல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல், எங்கே குழிவரும், எப்போ நரிவிழும் என்று காத்திருக்கும். 
உங்கள் இழிவை இப்பிரச்சனையிலும் காண முடிந்தது.
வெட்கக்கேடு! கட்சிக்குள்ளேயே ஒற்றுமையில்லாத நீங்களா,  
இனத்திற்குள் ஒற்றுமையை ஏற்படுத்தப் போகிறீர்கள்?
இனத்தை வைத்து விளையாடும் இந்தச் சூதாட்டத்தை உடனே நிறுத்துங்கள். இல்லாவிட்டால் மக்கள் உங்கள் விளையாட்டை நிறுத்த வேண்டிவரும்.

முடிக்குமுன், மீண்டும் ஒன்றை அழுத்தி உரைக்க வேண்டி இருக்கிறது.
சுமந்திரன்தான் தமிழர் தலைமைக்குப் பொருத்தமானவர் என்பது என் அபிப்பிராயம் இல்லை.
அவரிடமும் பல குறைபாடுகள் இருக்கவே செய்கின்றன.
எதை, எப்போது, எங்கு பேசுவது என்று அவருக்குத் தெரியவில்லை.
ஜனநாயக ரீதியாக பலரையும் ஒன்றிணைத்து இயங்க அவருக்குத் தெரியவில்லை.
எடுக்கும் முடிவுகளை மக்களின் அங்கீகாரத்தோடு செயற்படுத்த அவருக்குத் தெரியவில்லை.
தான் கூட்டமைப்பின் தலைவர் இல்லை என்பதும்கூட அவருக்குத் தெரியவில்லை.  
இப்படி, இன்னும் எத்தனையோ தெரியவில்லைகள்!
இவற்றையெல்லாம் தாண்டி அவர் வரும்வரை 
இவர்க்கு மட்டும்தான் இனத்தலைமை தாங்கும் தகுதி உண்டு என்று,
நான் ஒருக்காலும் சொல்ல மாட்டேன். ஆனால் ஒன்று,
இன்றைய நிலையில் இனத்தை வழிநடத்துவதில் இவரது தகுதிகளோடு போட்டியிட,தமிழினத்தலைமைகளுக்குள் வேறெவரும் இல்லை என்பதுதான் யதார்த்த நிலை.
மற்றவர்களது பலவீனம்தான் சுமந்திரனைப் பலப்படுத்தி வைத்திருக்கிறது. இது சுமந்திரனின் பலம் அல்ல!  இனத்தினது பலவீனம்! 

பைபிளில் ஒரு கதை உண்டு. 
ஒரு விபச்சாரியை கல்லால் எறிந்து கொல்லும்படி தீர்ப்பாக,
அவளைக் கல்லெறிந்து கொல்ல பலரும் போட்டியிட்டனராம்,
அப்போது அங்கு ஜேசுநாதர் வர, அந்த விபச்சாரி அவரிடம் சரண்புகுந்தனளாம். 
கல்லெறிய முற்பட்ட மக்களைக் கை காட்டி நிறுத்திய ஜேசுபிரான்,
உங்களில் குற்றம் செய்யாதவர்கள், அவள் மேல் முதற் கல்லை எறிவீர்களாக!’ என்று சொல்ல, நேர்மையுள்ள அக்காலத்து மக்கள், உண்மை உணர்ந்து தலை குனிந்து திரும்பினராம்.
ஏனோ தெரியவில்லை இக்கதை இப்போது ஞாபகத்திற்கு வருகிறது.

http://www.uharam.com/news/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A

சுமந்திரன் நேர்காணலை இடையில் முறித்துக் கொண்டு வெளியேறியிருக்க வேண்டும் என்பது பாமரத்தனமான கருத்து.

ஒரு சட்டத்தரணி, மற்றவர்களை குறுக்கு விசாரணை செய்யும் சுமந்திரன் ஒரு சிங்கள ஊடகவியலாளரின் கேள்விகளுக்கு பதில் அளிக்காது வெளியேறி இருக்க வேண்டும் என்பது கோழைத்தனம். சமுதித்த சமரசேகர என்ற அந்த ஊடகவியலா முன்னாள் சனாதிபதி சிறிசேனாவின் செய்தி ஊடகவியலாளர். அதில் இருந்து அவரது “அரசியல் சாயத்தை” கண்டு கொள்ளலாம். அவரது நோக்கம் சுமந்திரன் –
(1) ஒரு தமிழ் இனவாதி சிங்களவருக்கு எதிரானவர்.
(2) புலி ஆதரவாளர் அல்லது புலி ஆதரவு அமைப்புகளுக்கு ஆதரவானவர்.
(3) வன்முறையை விரும்புகிறவர்.
(4) சமஷ்டி கேட்பதன் மூலம் நாட்டை துண்டாட நினைக்கிறவர்.
என்பதாக இருந்தது. இந்தக் கேள்விகளுக்கு சரியாகவே சுமந்திரன் பதில் இறுத்தியிருக்கிறார்.

சமுதித்த: நீங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா?

சுமந்திரன்: இல்லை. நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

சமுதித்த: ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை

சுமந்திரன்: நான் இதை யாழ்ப்பாணத்திலும் சொல்லுகிறேன். ஏனைய பிரதேசங்களிலும் இதையே சொல்கிறேன். அதனால் எனக்கு எதிர்ப்புகள் இருக்கின்றன. அவர் எங்களுக்காகத்தானே போராடினார்கள், ஏன் ஏற்றுக் கொள்கிறீர்கள் இல்லை என்று என்னோடு முரண்படுகிறார்கள். அதற்கு காரணம் நான் ஆயுதப்போராட்டம் ஒன்றை ஒருபோதும் ஆதரிப்பவன் அல்லன் என்பதுதான்.

ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொன்னாரே ஒழிய அது தவறு என்று சொல்லவில்லை. ஆதரிக்கவில்லை என்று சொல்லிவிட்டு தமிழ் இளைஞர்கள் அரச அடக்குமுறை காரணமாக ஆயுதம் தூக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்ற ஒரு வசனத்தை கூட்டிச் சொல்லியிருந்தால் சுமந்திரனுக்கு எதிரான வாதப் பிரதிவாதங்கள் எழுந்திராது.

இதில் வேடிக்கை என்னவென்றால் புலம்பெயர்ந்தவர்களில் ” பாதிப்பேர் புலிகள் பணம் கேட்டு மிரட்டினார்கள். இல்லை என்று சொன்னவுடன் தலைகீழாகக் தொங்கவிட்டு அடித்தார்கள்” அல்லது “இராணுவம் என்னை புலி என்று சொல்லி பிடிக்க வந்தது. உயிருக்குப் பயந்து ஓடி வந்தேன்” என்று கதை சொல்லித்தான் ஏதிலித் தகைமை பெற்றார்கள். அது குற்றம் இல்லை ஒவ்வொருவரது வாழ்க்கை சிக்கல்.

ஆயுதப் போராட்டம் தோற்றதற்கு முக்கிய காரணம் ஆள்பற்றாக்குறை. அதனால் புலிகள் கட்டாயப்படுத்தி படையில் சேர்க்க வேண்டி வந்தது.

சுமந்திரன் மீது கணை தொடுப்பவர்களிடம் ஒரு கேள்வி. தேர்தலில் நிற்கும் ஒருவர் ஆறாவது சட்ட திருத்தத்துக்கு அமைய தனிநாடு கேட்கமாட்டேன் இலங்கையின் ஒற்றையாட்சி யாப்புக்கு விசுவாசமாக இருப்பேன் என தேர்தலுக்கு முன்னரும் தேர்தலில் வென்று வந்த பின்னரும் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ள வேண்டும்.

நாடாளுமன்றம் சிங்களவருடைய நாடாளுமன்றம் என்றால் ஏன் தேர்தலில் நின்று வென்று அங்கு போகத் துடிக்கிறீர்கள்?

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply