Territorial integrity and democracy

ஆட்புல ஒருமைப்பாடும் பிரிவினையும் ஜனநாயகமும்

என்.கே. அஷோக்பரன்  

2017 ஓகஸ்ட் 28

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 107)

ஆறாவது திருத்தமும் பிரிவினையும் ஜனநாயகமும்  

1983 ஓகஸ்ட் நான்காம் திகதி, நாடாளுமன்றம் கூடிய போது, பிரதமர் ரணசிங்க பிரேமதாஸவால், அரசமைப்புக்கான ஆறாவது திருத்தச் சட்டமூலம், அவசர சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.   

குறித்த அரசமைப்புக்கான ஆறாவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக, இலங்கையின் ஆட்புலக் கட்டுக்கோப்பை மீறுவதற்கான தடையை, அரசமைப்பில் 157அ என்ற புதிய சரத்தை உள்ளிணைப்பதினூடாக அறிமுகம் செய்யப்பட்டது.   

சுருங்கக் கூறின், இலங்கையின் ஒற்றையாட்சியை சித்தார்ந்த ரீதியில், ஜனநாயக அரசியலின் மூலம் கூட, எதிர்க்க முடியாத நிலையை உருவாக்குவதே, இந்த அரசமைப்புக்கான ஆறாம் திருத்தத்தின் நோக்கம் ஆகும்.   

இந்த ஆறாம் திருத்தத்தின் விளைவை, நாம் இன்று வரை கண்டுகொண்டே இருக்கிறோம். சந்திரசோம என்ற நபர், 2014 ஆம் ஆண்டு, இலங்கை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.   

அந்த மனுவில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர், தேர்தல் ஆணையாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்ததோடு, அவரது மனுவானது, இலங்கைத் தமிழரசுக் கட்சியானது, நாட்டில் பிரிவினையைக் கோருவதைத் தனது நோக்கமாகக் கொண்டிருப்பதால், அதற்கு எதிராக அரசமைப்புக்குச் செய்யப்பட்ட ஆறாவது திருத்தத்தின் படியாக, 154அ(4) மற்றும் 154அ(5) சரத்துகளின் கீழ், உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்ற மன்றாட்டத்தை கொண்டமைந்தது.   

சுருங்கக் கூறின், இலங்கைத் தமிழரசுக் கட்சியானது, இந்நாட்டுக்குள் தனிநாடொன்றைக் கோரும் நோக்கத்தைக் கொண்டிருப்பதனால், அது ஆறாம் திருத்தத்தின் கீழ் தடைசெய்யப்படுவதோடு, அதன் உறுப்பினர்கள் மீது, ஆறாம் திருத்தம் அறிமுகப்படுத்திய பிரிவுகளின் கீழ், தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதுதான் மனுவின் நோக்கம்.   

ஏறத்தாழ மூன்று வருடங்கள், வாதப் பிரதிவாதங்களின் பின்பு, 2017 ஓகஸ்ட் நான்காம் திகதி, பிரதம நீதியரசர் ப்ரியசத் டெபால், நீதியரசர்களான உபாலி அபேரத்ன மற்றும் அணில் குணரட்ண ஆகியோரது இணக்கத்துடன் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளான சமஷ்டியையே வேண்டுவதால் அரசியலமைப்பின் 154அ(4) சரத்தின் கீழான நடவடிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்திருந்தது.   

இந்த வழக்கை, இங்கு குறிப்பிடக் காரணம், ஜே.ஆர் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசமைப்புக்கான ஆறாவது திருத்தம், தமிழர்களின் அரசியலின் மேல் ஏற்படுத்திய கட்டமைப்பு ரீதியிலான செயலிழப்பு நிலையை (செக்மேட்) உணர்த்தவாகும்.   

ஜனநாயக அரசியல் என்பதில், எதுவிதமான அரசியல் சித்தாந்தத்தையும் ஜனநாயக விரோதமில்லாது முன்னெடுக்க அனுமதியளிக்கப்பட வேண்டும். இதற்கான பொருத்தமானதொரு உதாரணமாக, 2014 இல் ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்தில் நடந்த ‘ஸ்கொட்லாந்து சுதந்திரத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பை’ குறிப்பிடலாம்.   

ஐக்கிய இராச்சியத்தின் ஓர் அங்கமான ஸ்கொட்லாந்து, ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுதந்திரமடைய (அதாவது பிரிந்து தனிநாடாக) வேண்டுமா, இல்லையா? என்று ஸ்கொட்லாந்து மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.   

இதில், ஐக்கிய இராச்சியத்தின் தேசியளவிலான கட்சிகளான ‘டோரீஸ்’ மற்றும் ‘தொழிலாளர் கட்சி’ ஆகியன, ஸ்கொட்லாந்து சுதந்திரமடையக் கூடாது, என்பதற்கான பிரசாரத்தை முன்னெடுத்திருந்த வேளையில், ஸ்கொட்லாந்து மைய கட்சிகளான ஸ்கொட்லாந்து தேசிய கட்சி, ‘ஸ்கொட்டிஷ் பச்சைக் கட்சி’ மற்றும் ‘ஸ்கொட்டிஷ் சோசலிஸக் கட்சி’ ஆகியன, ஸ்கொட்லாந்தின் பிரிவினைக்கான பிரசாரத்தை முன்னெடுத்திருந்தன.   

இந்தச் சர்வஜன வாக்கெடுப்பு, ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் தொடர்பில், நேரடியாக விளைவைக் கொண்டிருக்காத வெறும் ‘ஆலோசனை நிலை’, சர்வஜன வாக்கெடுப்பே என்பதுதான், பிரதானமான சட்ட அபிப்பிராயமாக இருந்தது.   

இருந்தபோதிலும், ஜனநாயக ரீதியில் பிரிவினைக் கோரிக்கையை முன்னெடுக்கும், அதை வலியுறுத்தும் உரிமையையும் இடைவெளியும் ஸ்கொட்லாந்து தேசியக் கட்சிகளுக்கு தாராளமாகவே இருந்தன.   

ஆனால், மிகச் சிறியதொரு வாக்கு விகிதாசார வித்தியாசத்தில், (55.3% : 44.7%) ஸ்கொட்லாந்து ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுதந்திரமடையத் (பிரிய) தேவையில்லை என, ஸ்கொட்லாந்து மக்கள் தீர்ப்பளித்திருந்தார்கள்.  

ஆனால், தொடர்ந்தும் ஸ்கொட்லாந்தில் ஆளும் ஸ்கொட்லாந்து தேசிய கட்சி, பிரிவினையை வலியுறுத்தியதோடு, இன்னொரு சர்வஜனவாக்கெடுப்புக்கான கோரிக்கையை ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிகொலாஸ் ரேஜன் முன்வைத்திருக்கிறார்.   

இலங்கை, பிரித்தானியாவிடமிருந்து நாடாளுமன்ற ஜனநாயக முறையைப் பெற்றுக்கொண்டது என்பதை யாரும் மறுப்பாரில்லை. ஆனால், பிரித்தானியாவிடமிருக்கும் ஜனநாயக இடைவெளி, இங்கு சுருங்கிவிட்டது என்பதுதான் உண்மை.   

பிரிவினையை நோக்கமாகக் கொண்ட ஒரு கட்சி, ஸ்கொட்லாந்து நாட்டில் தமது அரசியலை முன்னெடுக்க முடியும். ஆனால், 1978 ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்புக்குச் செய்யப்பட்ட ஆறாவது திருத்தத்தின் பின்னர், இலங்கையின் எந்தவொரு கட்சியோ, அமைப்போ சட்ட ரீதியாக, சட்டவிரோமற்ற முறையில், ஜனநாயக வழியைப் பின்பற்றி பிரிவினை கோர முடியாத நிலை உருவாக்கப்பட்டது.   

பிரித்தானியாவில், சுதந்திர ஸ்கொட்லாந்து கோரிக்கை, இன்று, நேற்று உருவானதல்ல; அது மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. ஸ்கொட்லாந்து மக்கள், தம்மைத் தனித்த ஒரு தேசமாக அடையாளப்படுத்துகிறார்கள். அந்த அடையாளத்தை, ஆங்கிலேயரோ, வெல்ஷ் மக்களோ நிராகரிக்கவில்லை.  

 மாறாக, வெஸ்மினிஸ்டர் அரசாங்கமானது, ஸ்கொட்லாந்துக்கான அதிகாரப் பகர்வை, படிப்படியாக அதிகரித்தே வந்துள்ளது. இதன் முக்கிய கட்டமாக, 1999 இல் ஸ்கொட்லாந்துக்கென தனித்த ‘ஸ்கொட்டிஷ் நாடாளுமன்றம்’ ஸ்தாபிக்கப்பட்டதைக் குறிப்பிடலாம்.   

ஸ்கொட்லாந்தில் எழுந்த பிரிவினைக் கோரிக்கையை, அதிகாரப் பகர்வை அதிகரித்து, அம்மக்களை ஜனநாயக ரீதியில் திருப்திப்படுத்தியே வெஸ்மினிஸ்டர் அரசாங்கம், ஸ்கொட்லாந்தின் பிரிவினையைத் தடுத்துவருகிறதேயன்றி, சட்டங்களாலும் இரும்புக்கரத்தாலும் அல்ல.  

இதற்கு ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து பிரிவினையில், கற்ற பாடங்கள் முக்கிய காரணம் எனச் சுட்டிக்காட்டுவோரும் உளர். அந்த ஆய்வு இங்கு அவசியமில்லை. ஐக்கிய இராச்சியத்தின் ஆட்புல ஒருமைப்பாடும், ஒன்றுபட்ட ஆட்சியும் இன்றும் ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளினூடாக காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.   

ஆனால், ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான இலங்கை அரசாங்கமோ, சட்டத்தைக் கொண்டும் இரும்புக்கர அணுகுமுறையைக் கொண்டும் ஜனநாயக வெளியை அடைத்து, இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டையும் ஒற்றையாட்சியையும் காப்பாற்ற முனைந்தது. அதன், உருவம்தான் அரசமைப்புக்கான ஆறாவது திருத்தம்.   

ஆறாம் திருத்தம் மீதான நாடாளுமன்ற விவாதம் 

அரசமைப்புக்கான ஆறாவது திருத்தத்தின் மீதான விவாதம், ஏறத்தாழ 13 மணித்தியாலங்களுக்கு நடந்தது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்லிங்கம் உள்ளிட்ட, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருமே சமுகமளித்திருக்கவில்லை.  

 20 ஆம் நூற்றாண்டில் பெரும் இன அழிப்புகளிலொன்று நடந்து, ஓய்ந்து, ஒரு வாரம் கூட ஆகியிராத நிலையில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மீதான வெறுப்புணர்வும் எதிர்ப்புணர்வும் அரசாங்கத்தை சார்ந்தவர்களாலேயே பரப்பப்பட்டு வந்த நிலையில், எதுவித விசேட பாதுகாப்புகளும் வழங்கப்படாது, கொழும்பு வந்து, நாடாளுமன்றத்தில் கலந்துகொள்வதானது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சவாலான ஒன்றுதான்.   

மேலும், அவர்கள் வரவேண்டும் என்று ஜே.ஆர் அரசாங்கம் எண்ணியிருக்கவும் நியாயங்களில்லை. இந்த நிலையில், நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட, ஐக்கிய தேசியக் கட்சியின் பேரினவாதத்தின் முகமாக இருந்த அமைச்சர் சிறில் மத்தியூ, பெரும்பான்மையின் மேலாதிக்கத்தை நியாயப்படுத்திப் பேசினார்.   

அதற்கு, அவர் எடுத்துக் கொண்ட உதாரணம் மலேஷியா. தனது உரையில், “இந்நாட்டின் 70 சதவீதமானவர்கள் சிங்கள மக்களாவர். மலேசியா போன்றதொரு நாட்டில், வெறும் 53 சதவீதம்தான் மலாயர்கள். அந்நாட்டில் வாழ்ந்த சீனர்கள், மேலாதிக்கமாக நடந்துகொண்ட போது, மலாயர்கள் வெறும் ஆறு நாட்களுக்கு மட்டுமே பொறுமையாக இருந்தார்கள் (அதாவது மலேஷியாவில் நடந்த 1969 கலவரத்தை பற்றிப் பேசுகிறார்). ஆனால், இந்த நாட்டின் சிங்கள மக்கள், 10 வருடங்களாகப் பொறுமையாக இருந்திருக்கிறார்கள். சிங்களவர்கள், பெரும்பான்மை இனமென்றால், அவர்கள் ஏன் பெரும்பான்மையைப் போல நடந்துகொள்ள முடியாது?” என்று பேரினவாதம் கொப்பளிக்கப் பேசினார்.   

தொண்டாவின் எச்சரிக்கை  

ஆனால், ஜே.ஆரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இரண்டு முக்கிய சிறுபான்மை இனத்தவர்களான ஏ.ஸீ.எஸ்.ஹமீட் மற்றும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகிய இருவரும், ஆறாவது திருத்தத்தின் பாரதூரத்தன்மை பற்றி, நாடாளுமன்ற விவாதத்தின் போதான தமது பேச்சில் எடுத்துரைத்தார்கள்.   

ஆறாம் திருத்தத்தை அறிமுகப்படுத்துவதானது, நாட்டின் இன முரண்பாடு தொடர்பில் ஆரோக்கியமானதொன்றல்ல என்றே தொண்டமான் கருதினார். இதன் மூலம், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை, அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் தள்ளுவதானது, அவர்களைப் பிரிவினையை நோக்கியே மேலும் தள்ளும் என்பதே அவரது எண்ணப்பாடாக இருந்தது.   

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “நீங்கள், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைத் தடைசெய்தால், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறச் செய்தால், உங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்த யாரும் இருக்க மாட்டார்கள். பிறகு, நீங்கள் சிலவேளை இடைத்தரகர்களோடுதான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டி வரும்” என்ற எச்சரிக்கையையும் முன்வைத்தார்.   

தொழிற்சங்கவாதியான சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு, பேச்சுவார்த்தைகளினூடாக, பேச்சுவார்த்தை உபாயங்களினூடாகத் தமது கோரிக்கைகளை, அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதில் நிறைய நம்பிக்கையிருந்தது.   

வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைமைகளுக்கு, பேச்சுவார்த்தைக் கலை தெரியாது என்பது அவரது அபிப்பிராயம். வடக்கு, கிழக்கு தமிழ்த் தலைமைகள் பெரும்பாலும் சட்டத்தரணிகள்; அவர்களுக்குத் தமது தரப்பின் நியாயங்களை சிறப்பாகவும் வலுவாகவும் எடுத்துரைக்கத் தெரியுமே தவிர, பேச்சுவார்த்தைகளினூடாக, சமரசத் தீர்வுகளை எட்டும் கலை தெரியாது என்பது அவரது எண்ணம்.   

ஆனால், வடக்கு, கிழக்கு தமிழ்த் தலைமைகள் விட்டுக் கொடுப்புக்கே தயாரில்லாதவர்கள் என்று சொல்லிவிட முடியாது. ஒரு மக்கள் கூட்டத்தின் அரசியல் தலைமைகளாக தொண்டமானுக்கும், அமிர்தலிங்கத்துக்கும் இருந்த நோக்கங்கள் மற்றும் இலக்குகள் வேறுவேறு.   

ஆனால், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைத் தடை செய்வதானது, பேச்சுவார்த்தைக் கதவை அடைத்துவிடும்; அது தமிழ்த் தலைமைகளையும் தமிழ் மக்களையும் மேலும் பிரிவினையை நோக்கித் தள்ளுமே அன்றி, பிரிவினையைத் தடுக்க உதவாது என்ற தொண்டானின் எண்ணம் சரியானது என்பதை, தமிழ் மக்களின் தலைமை, அரசியல் தலைமைகளிடமிருந்து, ஆயுதத் தலைமைகளிடம் மாறிய 1983 இற்குப் பின்னரான வரலாறு சாட்சியமாக உணர்த்துகிறது.   

ஹமீட்டின் எச்சரிக்கை  

அரசமைப்புக்கான ஆறாவது திருத்தத்தை, வெளிவிவகார அமைச்சராக இருந்த, ஏ.ஸீ.எஸ்.ஹமீட்டும் ஆதரிக்கவில்லை. அவரது பார்வை வேறாக இருந்தது. அவர் சர்வதேச உறவுகளின் கண்ணாடி கொண்டு, இதன் விளைவுகளை நோக்கினார்.   

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைத் தடைசெய்தால், அது இலங்கையின் இன முரண்பாட்டு விவகாரத்தில், இந்தியா தலையிடுவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார். அவர் கூறியது, தீர்க்கதரிசனமோ, யதார்த்தத்தின் வெளிப்பாடோ என்பதை அவர் மட்டுமே அறிவார்.  

ஆனால், அவர் சொன்னது போலவேதான், காய்கள் நகரத் தொடங்கின. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை ஓரங்கட்டும் ஆறாம் திருத்தத்தின் விளைவாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர், இந்தியாவின் தலையீட்டை வேண்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதுடன், அது இலங்கை அரசியலில், இந்தியா நேரடியாக உள்நுழைவதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியது.   

ஏறத்தாழ 13 மணிநேர தொடர் விவாதத்துக்குப் பின் 1983 ஓகஸ்ட் ஐந்தாம் திகதி அதிகாலை நான்கு மணியளவில், இலங்கையின் 1978 ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்புக்கான ஆறாம் திருத்தம், இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.   

அரசமைப்பின் மீதான ஆறாவது திருத்தம் மீதான, நாடளுமன்ற விவாதத்தின் போது, 1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பின் காரணகர்த்தாக்கள் எனப் பழிபோடப்பட்டு, தடைசெய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான சரத் முத்தெட்டுவேகம, தமது கட்சிக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் எதிராக, அபாண்டமாகப் போடப்பட்ட பழி பற்றியும் இன அழப்பின் பின்னால் உண்மையில் இருந்தவர்கள் யார் என்பது பற்றியும் காரசாரமான உரையொன்றை ஆற்றியிருந்தார்.   

இதேவேளை, ஆறாம் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், 1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பு பற்றிய வேறொரு பார்வையை ஜே.ஆரின் அமைச்சரவையில் அங்கம் வகித்த, அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்தார்.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/91-202945

About editor 3092 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply