உலகின் முதல் கொரோனா நோயாளி யார்? புதிரான கேள்வியும் விடை அறியவேண்டிய அவசியமும்!
ஜெ.நிவேதா
சீனாவா, ஃப்ரான்ஸா… கலிஃபோர்னியாவா… கொரோனா எங்கிருந்து கிளம்பியது?
உலகின் மிகக் கொடிய கிருமியாகப் பரவிவரும் கோவிட் – 19 கொரோனா வைரஸ், சீனாவிலிருந்து பரவத்தொடங்கியது என்றும், சீனா அந்த விஷயத்தை மாஸ்க் போட்டு மறைக்க முற்படுகிறது என்றும் பத்திரிகையாளர் பேட்டியொன்றில் சமீபத்தில் சொல்லியிருந்தார், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
நோயால் முதன்முதலில் தீவிரமாக பாதிக்கப்பட்ட நாடுதான் சீனாவே தவிர, முதன்முதலாகத் தொற்று ஏற்பட்ட நாடல்ல
சீன அரசு
சீனாவில் முதன்முதலில் பாதிப்பு ஏற்படவில்லை என்ற கருத்து, உலக அறிவியலாளர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. `நோய் எங்கிருந்து தொடங்கியது‘ என்ற கேள்வியே இப்போது பிரதானமாக இருக்கிறது.
குழப்பங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், ஃப்ரான்ஸில் தான் முதன்முதலில் பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் எனத் தாமாக முன்வந்து கூறியுள்ளனர், அந்நாட்டு மருத்துவர்கள். டிசம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்திலேயே ஃப்ரான்ஸில் ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருந்தது எனக்கூறும் ஃப்ரென்ச் அரசாங்கம், தொற்று ஏற்பட்டிருந்த நபருக்கு, நிமோனியா காய்ச்சலுக்கான அறிகுறிகள் தெரியவந்ததால், அவருக்கு அதற்கான சிகிச்சைகள் மட்டுமே தரப்பட்டன என்றும், அதனால் அவர் அப்போதே குணமாகிவிட்டார் என்றும் கூறியுள்ளது.
தொற்று ஏற்பட்டு இரு வாரங்களுக்குப் பிறகுதான், அதன் அறிகுறிகள் தெரியவரும் என்பதால், உறுதிசெய்யப்பட்ட இவருக்கு டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்திலேயே தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும் என அனுமானித்துள்ளது ஃப்ரென்ச் அரசு.
இதன்படி பார்த்தால், சீனாவுக்கு முன்பு ஃப்ரான்ஸில்தான் கொரோனா முதன்முதலாக ஏற்பட்டுள்ளது.
அந்த நபருக்கு வெளிநாட்டுத் தொடர்பு எதுவும் இல்லையாம். இருந்தபோதிலும், இவருடைய மனைவி சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணிபுரிவதாகவும், அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளிநாட்டுப் பயணிகள் அதிகம் வருவர் என்றும், அவர்களில் யாரோ ஒருவர் மூலமாக இவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தத் தகவல் உண்மையாக இருப்பின், மனைவிதான் முதலில் தொற்றுக்கு உள்ளாகியிருக்க வேண்டும். ஆனால், அவருக்கு எந்தச் சிக்கலும் இதுவரை தெரியவரவில்லை. ஒருவேளை அறிகுறிகளற்ற நோயாளியாக அவர் இருந்து, ஓய்வு காரணமாக அப்போதே அவர் குணமாகியிருப்பாரோ என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
Also Read
The Imperfect Show |சீனா மீது ஆதாரத்தோடு குற்றம் சாட்டிய ட்ரம்ப்! | 02/5/2020
சீனாவோடு எந்தத் தொடர்பும் இல்லாத 42 வயது மதிக்கத்தக்க அந்த ஃப்ரான்ஸ் நபர், டிசம்பர் மாதத்தின் இறுதியில் பாரிஸிலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார் எனத் தகவல் வெளியிட்டுள்ளனர் ஃப்ரென்ச் சுகாதாரத்துறை அதிகாரிகள். இந்த நபர் குணமாகி ஏறத்தாழ ஒரு மாதம் கழித்து, அதாவது ஜனவரி இறுதியில்தான் ஃப்ரான்ஸில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இடையில் நோய் எங்கும் தீவிரமாகப் பரவவில்லை என்பதால், நோய் பரவியது ஃப்ரான்ஸிலிருந்து இருக்காதோ என சந்தேகிக்கின்றனர் ஆய்வாளர்கள். இப்போதைக்கு ஆய்வாளர்களின் ஒரே கேள்வி, நோயின் தொடக்கப்புள்ளி எது என்பது மட்டும்தான்.
ஃப்ரான்ஸ் என்றல்ல… எல்லா நாடுகளிலுமே நோய் அதிகரிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர், நோய் தனது தாக்கத்தை ஏதோவொரு வகையில் வெளிப்படுத்தியுள்ளது. உதாரணத்துக்கு அமெரிக்காவை எடுத்துக்கொள்வோம். அங்கும் தீவிர பாதிப்பு தெரியத்தொடங்குவதற்கு ஏறத்தாழ ஒரு மாதத்துக்கு முன்பாகவே, கலிஃபோர்னியாவில் ஒருவருக்கு பாதிப்பு தெரியவந்துள்ளது.
அறிவியலாளர்கள்
கலிஃபோர்னியாவையைச் சேர்ந்த அந்த நபர், நோயின் தீவிரத்தால் அடுத்தடுத்த நாள்களில் இறந்துவிட்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இறப்பதற்கு முன்பு, கொரோனாவுக்கான அறிகுறிகள் அவருக்குத் தெரியவந்தன என்பதால், சந்தேகத்தின் அடிப்படையில் இப்போது அவருடைய உடல் மீண்டும் எடுக்கப்பட்டு அவருக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவருக்கும், நேரடியான வெளிநாட்டுத் தொடர்புகள் இருந்திருக்கவில்லை. வேறு யார் மூலம் இவருக்கு நோய் வந்தது, அவர் எங்கிருந்து வந்தார், அவருக்கு நோய் ஏற்பட்டதா என்பதைக் கண்டறிய முடியாத சூழல் இன்றளவும் நிலவிவருகிறது.
இப்படி, ஒவ்வொரு நாட்டிலும் ஏதோவொரு விதமாக நோய் பரவியுள்ளதைப் பார்க்கும்போது, “நோயின் தொடக்கப்புள்ளி விவாதத்துக்கு உட்பட்டுக்கொண்டே போகிறது” என வேதனை தெரிவித்துள்ளனர் அறிவியலாளர்கள்.
ஆனால், இந்த தொடக்கப்புள்ளியைக் கண்டறிவதால் என்ன பயன்? அதன்மூலம், வைரஸ் பரவும் விகிதத்தை நம்மால் தெரிந்து கொள்ள முடியும் என்பதுதான் விஷயம்!
கோவிட் – 19 கொரோனா பரவுதலைத் தடுக்க, நமக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது, நோய் குறித்த சில கேள்விகள்தாம். எங்கிருந்து, எதிலிருந்து, எப்படி இந்த நோய் பரவுகிறது என்ற அந்தக் கேள்விகளுக்கு விடை கிடைத்தால்தான் நம்மால் நோய் பரவுதலை மேற்கொண்டு தடுக்க முடியும். விடை கிடைக்க, சரியான தொடக்கப்புள்ளியைக் கண்டறிவது அவசியம் என முழுமையாக நம்புகிறார்கள் அறிவியலாளர்கள்.
கோவிட் – 19 கொரோனா விஷயத்தில் மருத்துவர்கள் சொல்லும் முக்கியமான விஷயம், ஒரு நிலப்பரப்பில் ஏற்படுத்துவது போன்ற தீவிரமான பாதிப்பை மற்றொரு நிலப்பரப்பில் ஏற்படுத்துவதில்லை என்பது. உதாரணத்துக்கு, அமெரிக்காவில் ஏற்படும் அளவுக்கு, இந்தியாவில் பிரச்னை தீவிரமாக இல்லை. அதேபோல ஓரிடத்தில் லாக்டௌன் உதவுவது போல இன்னோர் இடத்தில் அது உதவுவதில்லை. இவையாவும், `இதைச் செய்தால் கொரோனாவைத் தடுக்கலாம்’ என உறுதியாகக் கூற முடியாமல் போய்விடுகிறது.
ஆனால் வைரஸ் ஏன் இப்படி மாறிக்கொண்டேயிருக்கிறது? மருத்துவரும் செயற்பாட்டாளருமான சாந்தியிடம் பேசினோம்.
“வைரஸின் இயல்பான தன்மையே மாறிக்கொண்டே இருப்பதுதான். கொரோனா வைரஸும் அதற்கு விதிவிலக்கல்ல. கொரோனா, நிலப்பரப்புக்கேற்ப – பருவநிலைக்கேற்ப மாறுகிறது என நம்மால் சொல்ல முடியாது. காரணம், அதற்கான ஆதாரம் எதுவும் நம்மிடம் இல்லை. எனில், ஏதோவொன்று வைரஸ் தாக்கத்தைக் குறைக்கிறது. அது எதுவெனக் கண்டறியும் முயற்சியில் அறிவியலாளர்கள் இறங்கியுள்ளனர். அது தெரியவரும்வரை, எப்போதும் எதற்கும் நாம் தயாராக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு இருந்தாக வேண்டும்.
Also Read
அமெரிக்காவில் ஆபத்தான `எல்’ கொரோனா… தமிழகத்தில் வீரியமற்ற `எஸ்’… தமிழகம் தப்பிக்குமா?!
ஆனால், நாம்`எதற்கும்’ தயாராகவா இருக்கிறோம்? இல்லையே! `இந்தியாவில் தீவிர பாதிப்பு இல்லை’ என்ற கருத்தை நம்பி, கொரோனாவை அலட்சியமாக எடுத்துக் கொண்டு செயல்படும் சூழலும் அபாயமும்தான் இங்கு அதிகமாக இருக்கிறது. அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டில், கொரோனாவை அலட்சியமாக அணுகுவது, தவறு. ஒவ்வொரு நாளும் தனது தன்மையை மாற்றிக்கொண்டே இருக்கும் இந்த வைரஸ் பற்றிய முழுமையான புரிந்துணர்வு, அறிவியலாளர்களுக்கே இல்லை எனும்போது, இந்தியா சிக்கலில் இல்லை என செய்தி பரப்புவது எதிர்பாரா சிக்கலுக்குள் எப்போது வேண்டுமானாலும் நம்மைத் தள்ளிவிடலாம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
இந்தியாவின் அலட்சியத்துக்கு முக்கியமான இரண்டு காரணங்கள் – `பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் இப்போதுவரை இறப்பு விகிதம் குறைவாகவே இருக்கிறது. அதேபோல வேகமாக நோய் பரவும் விகிதமும் இங்கே குறைவாக இருக்கிறது’. இது இரண்டுமே தரவுகள் வழியாக உண்மைதான் என்றபோதிலும், அலட்சியமாக அனுகும் போக்கும் இங்கு இருக்கிறது.
அப்படி அலட்சியமாக அணுகுபவர்களுக்கு சில விஷயங்களை முன்னிறுத்த விரும்புகிறேன்.
இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவு என்று சொல்பவர்கள், மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களைக் கொஞ்சம் உற்றுப் பாருங்கள். தமிழகத்தில் பூஜ்ஜியத்தை ஒட்டி இருக்கும் இறப்பு விகிதம், அங்கே ஐந்து என்ற அளவில் உள்ளது. இதன்படி பார்க்கும்போது, தமிழகத்தில் இதேநிலை நாளையும் நீடிக்குமா என்றால், கேள்விக்குறிதான். மாநிலங்கள் வாரியாக விகிதம் அதிகரித்தால், இந்தியாவிலும் விகிதம் அதிகரிக்கும் என்பதால், முன்னெச்சரிக்கையோடு நாம் செயல்படாவிட்டால் பின்னால் சிக்கல்தான்!
அதேபோல இங்கு நோயாளிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு, பரிசோதனையில் நாம் பின்தங்கியிருப்பது முக்கியமான காரணம். பரிசோதனை அதிகரிக்கப்பட்டால், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் தமிழகம்தான் என்பதால், இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து வேண்டாம்.
இந்தியாவில் கொரோனா நோயால் தீவிரமாக பாதிக்கப்படுபவர்கள் குறைவு என சிலர் சொல்வதைக் கேட்க முடிகிறது. இதையும் நம்மால் முழுமையாக ஏற்க முடியாது. காரணம், இந்தக் கருத்துக்கான முழுமையான ஆதாரம், தரவுகளாக நம்மிடம் இல்லை.
எனில், `கொரோனா வேகமாகப் பரவுகிறது, இறப்பு விகிதம் அதிகரிக்கும்’ என்றெல்லாம் சொல்லலாமா என்றால், அதுவும் தவறுதான்.
https://www.vikatan.com/health/healthy/france-reports-worlds-first-coronavirus-from-december
Leave a Reply
You must be logged in to post a comment.