கொரோனா தொற்று நோயின் பாதிப்யால் இலங்கையின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது!
நக்கீரன்
கொரோனா தொற்று நோய் உலகத்தை முடக்கிப் போட்டுள்ளது. சீனாவில் உள்ள வுகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய இந்தத் தொற்று நோய் இன்று 212 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்தப் புதிய தொற்று நோய்க்கு உலக சுகாதார நிறுவனம் “கொவிட்-19” (Covid-19) என்று பெயரிட்டுள்ளது.
இதை எழுதிக் கொண்டிருக்கும் போது (மே 06) இந்த நோயினால் உலகம் முழுதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,806, 474 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை 263,478 ஆக உயர்ந்துள்ளது. படை பலம், பண பலம், பொருளாதார பலம் எனப் பல துறைகளில் கொடி கட்டிப் பறக்கும் அமெரிக்க வல்லரசு கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையிலும் முதல் இடத்தில் இருக்கிறது. கொரோனா புள்ளிவிபர வெளீயீட்டின்படி அமெரிக்காவில் மே 06 அன்று 2528 பேர் உயிரிழந்துள்ளனர். சராசரி உயிரிழப்புக்கள் 2,400 ஆக இருந்து வருகிறது. மேலும் இறப்பவர்களில் 52 விழுக்காட்டினர் கறுப்பின மக்கள் எனத் தெரியவருகிறது. அமெரிக்காவில் கறுப்பு இனமக்கள் மொத்தக் குடித் தொகையில் 13 விழுக்காட்டினர் ஆவர்.
அட்டவணை 01
தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நாடுகள்
நாடு | நோயாளர் | இறப்பு | கண்டம் |
அமெரிக்கா | 1,256,161 | 74,807 | வட அமெரிக்கா |
இசுபானியா | 253,682 | 25,857 | ஐரோப்பா |
இத்தாலி | 214,457 | 29,684 | ஐரோப்பா |
ஐக்கிய இராச்சியம் | 201,101 | 30,076 | ஐரோப்பா |
பிரான்ஸ் | 174,191 | 25,809 | ஐரோப்பா |
ஜெர்மனி | 167,817 | 7,275 | ஐரோப்பா |
உருசியா | 165,929 | 1,537 | கிழக்கு ஐரோப்பா – வட ஆசியா |
கனடா | 63,403 | 4,223 | வட அமெரிக்கா |
இந்தியா | 52,987 | 1,785 | ஆசியா |
சிறிலங்கா | 897 | 9 | ஆசியா |
இந்தப் புள்ளி விபரத்தைப் நீங்கள் படிக்கும் போது பாதிக்கப்பட்டவர் மற்றும் இறந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும். இந்தத் தொற்று நோய் உலகத்தை முடக்கிப் போட்டுள்ளது தெரிந்ததே. குறிப்பாக மூன்றாவது உலக நாடுகள் வரலாறு காணத பாதிப்புக்கு உள்ளாக்கப் படப்போகின்றன.
விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த வேதாளத்தை எப்போது போத்திலில் அடைக்கலாம்? இந்தக் கேள்விக்கு துல்லியமான பதிலில்லை. ஒன்று இந்தக் கொரோனா கிருமி கண்ணுக்குத் தெரியாத எதிரி. குணப்படுத்துவதற்கு மருந்தும் இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லை. இந்த ஆண்டுக் கடைசியில் மருந்து கண்டு பிடிக்கப்படும் என அமெரிக்க சனாதிபதி ட்ரம்பு சொல்கிறார். அதற்கிடையில் கொரோனா மனிதர்களை ஒரு கை பார்த்துவிடும். மனிதர்களை மட்டுமல்ல நாடுகளின் பொருளாதாரத்தையும் உண்டு இல்லை என்றாக்கிவிடும்! குறிப்பாக மூன்றாவது உலக நாடுகள் வரலாறு காணத பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்கப் போகின்றன!
கொரோனா தொற்று நோயினால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள 66 நாடுகளில் இலங்கை 61 ஆவது இடத்தில் இருக்கிறது. அதாவது அங்கோலா, லெபனன், பஃரேன், சம்பியா மற்றும் வெனிசூலா ஆகிய நாடுகளே சிறிலங்காவுக்குப் பின்னால் அணிவகுத்து நிற்கும் நாடுகள் ஆகும்.
கொரோனா தொற்று நோய் வரும் முன்னரே இலங்கையின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடந்தது. இப்போது மரத்தில் இருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த மாதிரி இலங்கையின் பொருளாதாரம் மோசமான வீழ்ச்சி கண்டுள்ளது. பல காரணிகள் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அல்லது வீழ்ச்சியைத் தீர்மானிக்கின்றன.
இலங்கையின் பொருளாதாரத்தின் வளர்ச்சி விழுக்காடு, வர்த்தகப் பற்றாக்குறை (trade deficit), நாணய மாற்று விழுக்காடு (உரூபா / அமெரிக்க டொலர்) வீழ்ச்சி கண்டுள்ளது. மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன் சுமையால் நாடு மூழ்க்கிக் கொண்டிருக்கிறது.
வர்த்தக பற்றாக்குறை
வர்த்தக பற்றாக்குறை என்பது ஒரு முக்கியமான காரணியாகும், இது பரிமாற்ற வீதம் மற்றும் கடன்கள் போன்ற பல பொருளாதார குறியீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணிகளில் ஒன்று அதிகரித்து வரும் வர்த்தக பற்றாக்குறை (டி.டி) ஆகும். அட்டவணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, கடந்த ஆறு ஆண்டுகளில் டிடி தொடர்ந்து 7,609 மில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 10,343 மில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்து வருகிறது. (அட்டவணை 2 ஐப் பார்க்கவும்)
அட்டவணை 2
ஏற்றுமதி, இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை
ஆண்டு | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 |
ஏற்றுமதி | 10,394 | 11,130 | 10,546 | 10310 | 11360 | 11890 |
இறக்குமதி | 18,003 | 19,417 | 18,935 | 19183 | 20980 | 22233 |
பற்றாக்குறை | 7,609 | 8, 287 | 8,389 | 8873 | 9620 | 10343 |
ஏற்றுமதி இறக்குமதி அமெரிக்க டொலர்
பல காரணிகள் ஒரு நாட்டின் பொருளாதார உறுதித்தன்மையை தீர்மானிக்கின்றன. இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விழுக்காடு, வர்த்தகப் பற்றாக்குறை (trade deficit), நாணய மாற்று விழுக்காடு (உரூபா / அமெரிக்க டொலர்) வீழ்ச்சி கண்டுள்ளது. மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன் சுமையால் நாடு மூழ்க்கிக் கொண்டிருக்கிறது.
இந்த இருண்ட பின்னணியில் நல்லகாலமாக எரிபொருளின் விலை உலகச் சந்தையில் வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளது. 1991ஆம் ஆண்டுக்குப் பின்னர் எப்போதும் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை தற்போது கடும் சரிவைச் சந்தித்துள்ளது. 2010 ஆம் ஆண்டில் ஒரு பீப்பா கச்சா எண்ணெய் அ.டொலர் 160 க்கு விற்கப்பட்டது. இன்று அதே கச்சா எண்ணெய் அ.டொலர் 24 ஆகக் குறைந்துள்ளது. இதனால், ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக எரிபொருள், டீசல் தேவை குறைந்து வரும் நிலையில், சந்தையில் அந்த நெருக்கடியைச் சமாளிக்க உற்பத்தியை அதிகரித்து வர்த்தகத்தைக் கைப்பற்றச் சவுதி திட்டமிட்டுள்ளது.
இலங்கைத் தீவு முழுவதும் ஊரடங்கு உத்தரவின் விளைவாக பொருளாதாரம் மோசமடைந்துள்ளது. கொரோனா தொற்றுநோயின் விளைவுகள் காரணமாக வரும் மாதங்களில் தெற்காசியா நாடுகள் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க உள்ளன. இது குறித்து உலக வங்கி தனது இரு ஆண்டு வசந்த 2020 வெளியீட்டில் எச்சரித்துள்ளது. முச்சக்கர வண்டி மற்றும் பஸ் ஓட்டுநர்கள், தினசரி கூலி சம்பாதிப்பவர்கள் மற்றும் SME களில் ஈடுபடுபவர்கள் போன்ற ஆயிரக்கணக்கான மக்கள் வேலை அல்லது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர், ஊரடங்கு உத்தரவு அவர்களின் நடவடிக்கைகளை குறைத்துள்ளதால் அவர்களுக்கு எந்த வருமானமும் கிடைக்க வழியில்லாது இருக்கிறது. இது இலங்கையின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்து படுமோசமான நிலைக்குச் சென்றுள்ளது.
எனவே, நாட்டின் பொருளாதாரத்தை புதுப்பிக்க அரசாங்கம் பொருத்தமான யதார்த்தமான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
Leave a Reply
You must be logged in to post a comment.