தந்தை செல்வநாயகத்தின் 39 ஆவது நினைவு நாள்

தந்தை செல்வா அவர்களின் 39 ஆவது சிரார்த்த தினம் இன்று!

இன்று தமிழர் தலைவர் தந்தை செல்வா அவர்களின் 39 வது சிரார்த்த தினமாகும். இன்றைய நாளில் அவரை நினைவு கொள்ளவேண்டியது தமிழர் அனைவரதும் தலையாய.”

Image result for தந்தை செல்வநாயகம்

இன்று தமிழர் தலைவர் தந்தை செல்வா அவர்களின் 39 வது சிரார்த்த தினமாகும். இன்றைய நாளில் அவரை நினைவு கொள்ளவேண்டியது தமிழர் அனைவரதும் தலையாய கடமையாகும்.

ஏனென்றால் இலங்கையில் தமிழ் இனம் என்று ஒன்று இருக்கிறது என்பதை இன்றும் உயிர்த் துடிப்புடன் வைத்திருப்பதற்கு வித்திட்ட தலைவர் தந்தை செல்வா அவர்களே.

1944ம் ஆண்டில் அமரர் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களுடன் சேர்ந்து அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் தந்தை செல்வா என தமிழ் மக்களால் அறியப்படும் திரு.சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் அக்காலத்தில் தமிழர் நலன் பேணும் கட்சியாக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி விளங்கியது.

1947ல் நடைபெற்ற முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட்டு திரு.சா.ஜே.வே. செல்வநாயகம் அவர்கள் வெற்றி பெற்றார்.

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த பின் திரு.டி.எஸ். சேனநாயக்காவின் தலைமையில் அமைக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் மெல்ல மெல்ல தமிழர் விரோத நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது.

மலையகத்திலிருந்து கணிசமான அளவு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிங்களப் பேரினவாத அரசு மலையாக மக்களின் பிரஜா உரிமையைப் பறித்து அவர்களை வாக்குரிமை அற்றவர்களாக ஆக்கி அவர்களின் அரசியல் பிரதிநித்துவத்தை இல்லாதொழிக்கும் நோக்கில் இந்திய, பாகிஸ்தானிய பிரசாவுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

இச் சட்டத்திற்கு பலமுனைகளிலும் எதிர்ப்புகள் தோன்றவே இலங்கைப் பிரசா உரிமைச் சட்டம் என்ற சட்டத்தைக் கொண்டுவந்து இலங்கைப் பிரசாவுரிமை பெற வேண்டிய தகுதிகளை வரையறை செய்தது.இரண்டு தலைமுறைக்கு மேல் இலங்கையில் வசித்தவர்களுக்கே பிரசாவுரிமை என்ற நிபந்தனை பல்லாயிரக் கணக்கான இந்திய வம்சாவளியினரை நாடற்றாக்கியது.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமரர் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் இந்தச் சட்டங்களை வன்மையாக எதிக்காத நிலைப்பாட்டை எடுத்தமையால் திரு.செல்வநாயகம் அவர்கள் தலைமையிலான ஒரு குழுவினர் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களின் நடவடிக்கைகள் மீது அதிருப்தியடைந்தனர்.

தமிழ்க் காங்கிரஸ் கட்சி அரசின் தமிழர் விரோத நடபடிக்கைகளுக்கு எதிர்ப்பும் தெரிவிக்காதது மட்டுமல்லாமல் ஐக்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்து அமைச்சுப் பதவிகளை ஏற்றது ஏற்கனவே கட்சியில் இருந்த பிளவை மேலும் வலுப்படுத்தியது.

1949ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 18ம் திகதி திரு.செல்வநாயகம் அவர்கள், திருவாளர்கள் கு.வன்னியசிங்கம், ஈ.எம்.வி.நாகநாதன் போன்ற தலைவர்களுடன் சேர்ந்து புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தார்.அதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி என்று பேர் சூட்டினர். முதற் கூட்டத்திலேயே தனது அரசியற் கொள்கைகளை தெளிவாகவும் ஆணித்தரமாகவும் எடுத்துரைத்தார்.

இலங்கையில் தமிழ் பேசும் மக்களும் சிங்களம் பேசும் மக்களும் இரண்டு தனியான தேசிய இனங்கள் என்றும், சிங்களவர்களுக்கும், தமிழருக்கும் தங்களுடைய அரசியல் உரிமையைத் தாங்களே தீர்மானித்துக்கொள்ளும் சுயநிர்ணய உரிமைக்கு உருத்துடையவர் எனவும் அதனடிப்படையில் சமஷ்டி முறையிலான அரசியலமைப்பே இலங்கைக்குப் பொருத்தமானதெனவும் அதனை அடைவதற்கு அஹிம்சை வழியிலான போராட்டங்களே சரியானதெனவும் தந்தை செல்வா அவர்கள் மிகவும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் முதற் கூட்டத்திலேயே அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தினார்.

இந்த அடிப்படை மூலாதாரக் கொள்கையானது, தத்துவமானது அறுபத்தியேழு ஆண்டுகள் கழிந்த பின்பும் இன்றும் மாற்றமடையாது, பின்னால் வந்த பல கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் அடிப்படைக் கொள்கையாகத் திகழ்கிறது.

அன்று தந்தை செல்வா அவர்கள் கூறிய தமிழ் பேசும் மக்கள் தனியான தேசிய இனம் என்பது இன்றும் அதே போல எல்லோராலும் எடுத்தாளப்படுகிறது.அதேபோல தமிழருக்கு தங்கள் அரசியல் தலைவிதியைத் தாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் சுயநிர்ணயவுரிமை உண்டு என்பதும் அவ்வாறே நிலைத்து நிற்கிறது.

சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வே பொருத்தமானதாக அணுகுமுறை என்பது இடையில் மாற்றப்பட்டு தனிநாட்டுக் கோரிக்கை பதிலீடு செய்யப்பட்டாலும் அது பொருத்தமற்றது என்பது நடைமுறையில் நிரூபிக்கப் பட்டு மீண்டும் சமஷ்டித் தீர்வே சரியானதென எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.

எமது அரசியல் அபிலாசைகளை அடைவதற்கு அஹிம்சை மார்க்கத்தையே கைக்கொள்ள வேண்டும் என்று தந்தை செல்வா அவர்கள் வகுத்த பாதை பிற்காலத்தில் சிலருக்கு அலுப்புத் தட்டிய காரணத்தினாலோ என்னவோ ஆயுதப் போராட்டமாக மாற்றப்பட்டது.

அவ்வழி எமக்குப் பொருத்தமற்றது என்பது தெரிந்திருந்தும் பலரும் அதனை ஆதரித்தனர் அல்லது எதிக்காதிருந்தனர். ஆனால் முப்பது வருட போராட்டத்தின் முடிவில் மீண்டும் அஹிம்சை வழியே பொருத்தமான வழிமுறை என்பதை அனுபவங்களினுடாக ஏற்றுக்கொண்டுள்ளோம்.

இவற்றை எல்லாம் பார்க்குமிடத்து தந்தை செல்வா அவர்கள் ஒரு தீர்க்கதரிசி என்பதும் அவர் தமிழினத்தின் ஒப்பிடமுடியாத அரசியல் தலைவர் என்பதும், அழிவில்லாத அரசியல் சித்தாந்தம் ஒன்றுக்குச் சொந்தக்காரர் என்பதும் தெட்டத்தெளிவாக வெளிப்படுகிறது.

தந்தை செல்வா அவர்கள் ஒரு ராணி வழக்கறிஞர் (Q.C) குடியியல் வழக்குகளில் அவரது வாதத் திறமை அற்புதமானது.நீதிமன்றங்களில் அதிகம் அலட்டிக் கொள்ளாது சுருக்கமாக தனது கட்சிக்காரரின் நியாயங்களை முன்னிறுத்தி வெற்றி பெற்றுக் கொடுக்கும் கெட்டிக்கார வழக்கறிஞர்.

அன்னாரின் சட்ட அறிவு பற்றியும் வாதத் திறமை பற்றியும் விளங்கிக் கொள்வதற்கு எனது ஆசிரியர் ஒருவர் எனக்குக் கூரிய சிறிய சம்பவம் ஒன்றை இவ்விடத்தில் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

குடியியல் வழக்கொன்றில் பிரதிவாதிக்காக தந்தை செல்வா அவர்கள் ஆஜாராகியிருந்தார். வாதிக்காக ஆஜராகிய வழக்கறிஞர் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் தனது வாதத்தை நிகழ்த்தினார்.தந்தை செல்வா எழுந்து நாலு நிமிடத்தில் தனது வாதத்தை முடித்துக் கொண்டார். தந்தை செல்வாவின் கட்சிக்காரருக்கு பயம் தொற்றிக் கொண்டது.தனது வழக்கறிஞர் தன்னை கை விட்டுவிட்டாரோ என்று தன்னுடன் கூட வந்தவர்களிடத்தில் ஆதங்கப்பட்டுக் கொண்டார்.

இரு வாரங்கள் கழித்து தீர்ப்பு வந்தபோது பிரதிவாதிக்கு சார்பாக தீர்ப்புக் கிடைத்தது. இவ்வாறு பெரிதாக சலசலப்பில்லாது தனது வாதத் திறமையால் தன்னை நம்பிவரும் கட்சிக்காரருக்கு நீதி பெற்றுக் கொடுத்த சிறந்த வழக்கறிஞராக தந்தை செல்வா அவர்கள் விளங்கினார்.

தந்தை செல்வா அவர்கள் அரசியல் மூலம் தனக்கென எதனையும் சேர்க்காத தலைவராகத் திகழ்ந்தார். தனது சொத்துக்களை விற்று கட்சித் தேவைகளுக்குச் செலவு செய்தார். பாராளுமன்ற உறுப்பினர்களின் ஐநூறு ருபாவாக இருந்த கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும் என்று பிரேரணை ஒன்று வந்தபோது அதனை ஆதரிக்குமாறு தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தந்தை செல்வாவை அணுகிய போது நீங்கள் முன்பு பார்த்த தொழிலை விட அதிகமாகத்தானே இப்பொழுது பெறுகிறீர்கள் எனக் கூறி அதனை ஆதரிக்க மறுத்தவர் தந்தை செல்வா.

அவர் ஆடம்பரமில்லாது எளிமையான வாழ்வு வாழ்ந்து காட்டியவர். தந்தை செல்வா அவர்கள் தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைக்கும் சக்தியாகத் திகழ்ந்தார்.பிரதேச வாதங்களுக்கு அப்பால், சமயப் பிரிவினைகளுக்குள் மூழ்கிவிடாது, சாதி வேற்றுமைகளுக்கு இடம் கொடுக்காது ஒற்றுமையான தமிழ் இனமொன்றை கட்டியெழுப்ப பாடுபட்ட தலைவராகத் திகழ்ந்தார்.

தந்தையின் இந்த அணுகுமுறைதான் கிறிஸ்தவரான அவரைச் சகலரும் தமது தலைவராக ஏற்றுக் கொண்ட தலைவராக்கியது. தந்தை செல்வா தமிழின்பாலும் தமிழ்க் கலாச்சாரத்தின்பாலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். நாதஸ்வர இசை என்றால் முன் வரிசையில் இருந்து இரசிப்பதை வழக்கமாகக் கொண்டவர்.இதனை நான் பல முறை பம்பலப்பிட்டி பிள்ளையார் கோவிலில் ஆடிவேலின் பொது நேரில் பார்த்திருக்கிறேன்.

தந்தை செல்வா அவர்கள் அஹிம்சை வழியிலான போராட்டங்கள் முலம் தமிழரின் உரிமையை வென்றெடுக்கலாம் என பூரணமாக நம்பினார் என மேலே குறிப்பிட்டேன்.அதற்காக அவர் காலிமுகத் திடல் சத்தியாக்கிரகம், ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம், கச்சேரி மறியல் சத்தியாக்கிரகம், பாதயாத்திரை போன்ற சகல போராட்டங்களிலும் தலைமை தாங்கி மற்றையோருக்கு முன் மாதிரியாக விளங்கினார். 1972ம் ஆண்டு புதிய குடியரசு அரசியலமைப்பு தமிழர்களின் ஆகக்குறைந்த கோரிக்கைகளையும் நிராகரித்து சோல்பரி அரசியலமைப்பில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக வழங்கப்பட்ட 29வது சரத்தையும் நீக்கி நடைமுறைப்படுத்தப் பட்டபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தந்தை செல்வா அவர்கள் தனது காங்கேசன்துறை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்து முடியுமானால் இடைத்தேர்தலை வைத்து தன்னுடன் போட்டியிடுமாறு அரசிற்குச் சவால் விடுத்தார்.

ஆனால் அரசாங்கமோ இடைத்தேர்தலை நடாத்தாது இழுத்தடித்தது. பின்பு 1975 டிசெம்பரில் நடாத்தப்பட்ட இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை உலகுக்கு வெளிப்படுத்தினார்.

இப்படியான துணிச்சலும் மக்களுக்காக இழப்புகளைத் தாங்கிக் கொள்ளும் மனப்பாங்கும் வேறு எந்தத் தலைவருக்கும் எளிதில் வரக்கூடியதொன்றல்ல.தந்தை செல்வாவைத் தவிர வேறெந்த அரசியல் வாதியும் தாம் பிரதிநிதித்துவப் படுத்திய மக்களுக்காக தங்கள் பதவிகளைத் தூக்கி எறிந்த சரித்திரம் முன்பும் இருந்ததில்லை பின்பும் நடந்ததில்லை.

தந்தை செல்வா அவர்கள் தனது மூலக் கொள்கைகளிலிருந்து விடுபடாது தமிழ் மக்களின் நிதந்திரமான அமைதியான வாழ்வுக்காக நெகிழ்வுத் தன்மையையும் விட்டு கொடுப்புகளையும் கடைப்பிடித்த தலைவராகவிருந்தார். அதனாலேயே பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம் போன்ற உடன்படிக்கைகளை சிங்கள அரசுகளுடன் செய்து கொண்டார்.வெறுமனே அரசியல் தீர்வு பற்றி மட்டும் பேசிக் கொண்டிருக்காது மக்களின் அன்றாட தேவைகள் பற்றியும் சிந்தித்த தலைவராக இருந்தார்.

காணியற்ற, வீடற்ற பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு செல்வநாயகபுரம் வீடமைப்புத் திட்டம், தெல்லிப்பளை அரசினர் வைத்தியசாலை ஆகியவற்றறை உதாரணமாகக் குறிப்பிடலாம். தந்தை செல்வா தான் வழி நடத்திய கட்சியை சகல பிரிவினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் வழி நடத்தினர். கட்சிப் பதவிகளை எல்லாப் பிரதேசங்களுக்கும் எல்லா பகுதியினருக்கும் சென்றடையக் கூடியவகையில் பரவலாக வழங்கினார்.மலையக மக்களின் பிரச்சினையில் விசேட கவனம் செலுத்தினார். இலங்கைத் தொழிலாளர் கழகம் என்ற பெயரில் தொழிற் சங்கம் ஒன்றை நடாத்தி தோட்டத் தொழிலாளரின் தொழிற் பிணக்குகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். செனற் சபையில் கட்சி சார்பில் நியமனம் செய்வதற்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை சகலரையும் உள்வாங்கக் கூடிய வகையில் பயன் படுத்தினார்.

ஒருமுறை வடக்குக்கு சந்தர்ப்பம் வழங்கினால் மறுமுறை கிழக்குக்குச் சந்தர்ப்பம் வழங்கினார்.ஒரு முறை தமிழருக்கு சந்தர்ப்பம் வழங்கினால் அடுத்த சந்தர்ப்பத்தை இஸ்லாமியருக்கு வழங்கினார்.ஒருமுறை உயர்ந்த சமூகத்தினருக்கு வழங்கினால் அடுத்த சந்தர்ப்பத்தை பிற்படுத்தப் பட்டவர்களுக்கு வழங்கினார். இவ்வாறு சகலரையும் அரவணைத்துச் செல்லும் சிறந்த தலைவராக விளங்கினார்.அழியாத அரசியல் சித்தாந்தத்தையும், முன் மாதிரியாகக் கொள்ளத்தக்க நடைமுறைகளையும், பொதுவாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகளையும் எமக்கு வழங்கி மறைந்த அரசியல் தீர்க்கதரிசி தந்தை செல்வா அவர்களை அன்னாரின் 39வது சிரார்த்த தினத்தில் நினைவு கொண்டு மரியாதை செலுத்துவது ஒவ்வொரு தமிழனதும் தலையாய கடமையாகும். .ஆ.ந.இராசேந்திரன்

தந்தை செல்வநாயகம்

ஈழத்தமிழரின் வாழ்விற்காய் குரல்கொடுத்தும், அரசியல் ரீதியாக பல முன்னெடுப்புக்களை தலைமை தாங்கி வழிநடத்தியவருமான தந்தை செல்வா (செல்வநாயகம்) அவர்களின் (31.03.1898 – 26.04.1977) 38 ஆவது நினைவு வணக்கநாள் இன்றாகும்.

Audio Player00:0000:00Use Up/Down Arrow keys to increase or decrease volume.

ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வநாயகம் (செல்வா)

தொல்புரத்தைச் சேர்ந்த சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளைக்கும் அன்னம்மா கணபதிப்பிள்ளைக்கும் மூத்த மகனாக எமது செல்வநாயகம் மலேசியாவின் மிகவும் தூய்மையான நகரமான இல்போ நகரில் 1898ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி பிறந்தார். அவருக்குப் பின் வேலுப்பிள்ளை தம்பதியருக்கு இரண்டு புத்திரர்களும் ஒரு மகளும் பிறந்தார்கள். வேலுப்பிள்ளை தம்பதியினர் தமது மழலைச் செல்வங்கள் கல்வி கற்று மேன் மக்களாக விளங்க வேண்டும் என ஆசைப்பட்டார்கள்.

தந்தை செல்வநாயகம் – Maatram

அக்காலகட்டத்தில் பாடசாலைகள் குறைவு. இருந்த சில நல்ல பாடசாலைகளும் அரச குடும்பத்தினரையும் பெரிய பணக்காரக் குழந்தைகளையுமே அனுமதித்தன. எனவே, வேலுப்பிள்ளை தம்பதியினர் தமது மழலைச் செல்வங்களை கல்வி கற்பதற்காக மலேசியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பினார்கள். அப்பொழுது எமது கதாநாயகன் செல்வநாயகத்திற்கு வயது நான்கு.

தனது இரண்டு சகோதரர்களுடனும் ஒரு சகோதரியுடனும் மலேசியாவிலிருந்து கொழும்புக்கு கப்பலில் வந்திறங்கினான் பாலகன் செல்வநாயகம். அப்போது கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கு புகையிரத சேவை ஆரம்பிக்கப்படாமையினால் மீண்டும் கப்பலிலேயே காங்கேசன்துறைக்கு வந்து தமது சொந்த ஊரான தெல் லிப்பழைக்கு வந்தார். அங்கு அமெரிக்க மிஷன் பாடசாலையில் 5 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றார். இந்த அமெரிக்க மிஷன் பாடசாலை தான் பின்பு யூனியன் கல்லூரியாகத் தரமுயர்த்தப்பட் டது கவனத்திற்குரியதாகும். சிறு வயதிலே செல்வநாயகம் பெண் வேடம் பூண்டு நாடகங்களில் நடித்தாராம்.

ஐந்தாம் வகுப்பிற்குப் பின்னர் செல்வநாயகம் யாழ்ப்பாணம் சென்று சென்.ஜோன்ஸ் கல்லூரியில் சேர்ந்து சீனியர் கேம்பிரிட்ஜ் பரீட்சைக்குப் படிக்கத் தொடங்கினார். பின்னர் மாமனார் எஸ்.கே. பொன்னுசாமியின் உதவியுடன் கொழும்பு சென். தோமஸ் கல்லூரியில் சேர்ந்து தமது கல்வியைத் தொடர்ந்தார்.

சென். தோமஸ் கல்லூரியில் ஏறத்தாழ ஒன்றரை வருட காலம் கல்வி கற்று இன்டர்சயன்ஸ் பரீட்சையில் தேறிய செல்வநாயகம் தனது தம்பிமாரைப் படிப்பிப்பதற்காக 1917ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார்.

ஆசிரியராக இருந்துகொண்டே இலண்டன் பல்கலைக்கழக பி.எஸ்.ஸி. விஞ்ஞானப் பட்டப் பரீட்சைக்கு வெளிவாரி மாண வனாகத் தோற்றி அடுத்த ஆண்டே அதாவது, 1918இல் சித்தி எய்தினார்.

இத்தருணத்தில் மலேசியாவிலிருந்த அவரது தந்தையார் சுகவீனமுற்றிருந்தமையால் அவரைப் பார்க்க மலேசியா சென்று சுமார் ஒரு மாதம் வரை தங்கியிருந்து மீண்டும் திரும்பினார். ஆனால், என்ன பரிதாபம்! செல்வநாயகம் இலங்கை திரும்பி வந்த ஓரிரு வாரங்களிலேயே அன்னாரது தந்தையார் மலேசியாவில் காலமானார்.

அதனால் குடும்பப் பொறுப்பு அனைத்தும் இளைஞரான செல்வநாயகத்தின் மேல் சுமத்தப்பட்டது. தமது பிற்காலத்தில் இலங்கைத் தமிழினத்தின் பொறுப்பெல்லாவற்றையும் சிரமேற் கொண்ட தமிழ்த் தந்தைக்கு தந்தையில்லாத குடும்பத்தின் பொறுப்பைச் சுமப்பதா பெரிய காயம்! இரண்டு தம்பிமாரையும், அருமைத் தங்கையையும் அரவணைத்துக் கொண்டு கொழும்பு சென்ற்.தோமஸ் கல்லூரியில் தமது ஆசிரியப் பணியைத் தொடர்ந்தார்.

எனினும், அன்னாருக்கு சோதனை தொடர்ந்தது. யாழ்ப்பாணத்தில் அவரது இளைய சகோதரருக்கு கடும் சுகவீனம்.

அவரைப் பார்ப்பதற்கு தெல்லிப்பழை செல்ல லீவு கேட்டார், லீவு மறுக்கப்பட்டது. ஆசிரியர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு தெல்லிப்பழைக்குச் சென்றார்.

தம்பியை நன்கு பராமரித்தும் என் செய்வது? பலனில்லாமல் போய்விட்டது. அருமைத்தம்பி இராஜசுந்தரம் தமது பதினைந் தாவது வயதில் காலமானார்.

தம்பியின் இறுதிச் சடங்கு முடிந்து மீண்டும் கொழும்பு வந்த செல்வநாயகம், வெஸ்லி கல்லூரியில் ஆசிரியரானார். எஸ்.ஜே.வி. ஆசிரியனாக இருந்த காலத்தில் ~நல்லாசிரியன்| என்ற பெயரை பெற்றோர், ஆசிரியர், மாணவர்களிடம் பெற்றார். பிற்காலத்தில் நல்ல, நேர்மையான சட்டத்தரணி என்று பெயரும் புகழும் பெற்றாரோ, அரசியலில் நுழைந்த பின்னர் எவ்வாறு உலக மக்கள் அனைவராலும் தமிழ் பேசும் மக்களின் தன்னிகரில்லாத் தலைவன் என்றும், நேர்மையான அரசியல்வாதி என்றும் பெயரும் புகழும் பெற்றாரோ அதே போல அவர் நல்லாசிரியன் என்று பெயரும் புகழும் பெற்றதில் எவ்வித ஆச்சரியமும் இருக்க முடியாது என்பது திண்ணம்.

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply