மக்களும் தொற்றுக் கிருமிகளும்
(‘வெள்ளிக்கிழமை மன்றம்’ என்பது சனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்றவற்றில் ஈடுபாடுள்ள ஒரு முறைசாரா மற்றும் சுயநிதிக் குழு ஆகும். இது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக குடிமக்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பொதுமக்களை எச்சரிக்க முயன்று வருகிறது. இந்த அமைப்பு பாகுபாடற்ற அடிப்படையில் செயல்படுவதாகவும், அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் விமர்சித்து வருகிறது. கடந்த ஏப்ரில் 28, 2020 அன்று ‘மக்களும் தொற்று நோய்க் கிருமிகளும்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் மூவினத்தையும் சேர்ந்த அறிவுப் பிழைப்பாளர்கள் கையெழுத்திட்டுள்ளார்கள். தமிழாக்கம் நக்கீரன்.)
கோவிட் 19 தொற்றுநோய் தேசிய இடைவெளிகளையும் மற்றும் பெருங்கடல்களையும் தாண்டி எங்களது வாழ்வியலில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள், சனாதிபதி மற்றும் நல்வாழ்வு அமைச்சர் ஆகியோரின் தலைமைத்துவமும் அனைத்து மட்டங்களிலும் பொதுமக்கள் நல்வாழ்வு அமைப்பு மருத்துவ நிபுணர்களின் அர்ப்பணிப்பும் சில வளர்ந்த நாடுகளை விட இந்த நெருக்கடிக்கு மிகச் சிறப்பான முறையில் எதிர்கொள்ள எங்களுக்கு உதவியுள்ளது. கோவிட் 19 தொற்று இல்லாதவர்களுக்குச் சேவை செய்வதில் தனியார் துறையும் பங்களித்துள்ளது. பொதுமக்கள் நல்வாழ்வு அமைப்பு எதிர் கொண்ட நெருக்கடியை தமது தொழில்முறை நிபுணத்துவத்தை வழங்கி ஆதரிப்பதன் மூலமும் தனியார் துறை பங்களித்துள்ளது. பொதுமக்கள் நல்வாழ்வு கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்ப்படுத்த அரசாங்கத்திற்கு உதவுவதில் இராணுவமும் காவல்துறையும் முக்கிய பங்களிப்புகளை நல்கியுள்ளன. மிக முக்கியமாக, குடிமக்களாகிய நாம் சமூக விலகல் குறித்த அரசாங்க வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வருகிறோம். எங்கள் ஒருங்கிணைந்த முயற்சிகள் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த உதவியுள்ளது. மேலும் தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவுகளை எதிர்காலத்தில் அகற்ற அல்லது திருத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியது.
இன்று நாம் எதிர்கொள்ளும் அரசியல், பொருளாதார மற்றும் பொதுமக்கள் நல்வாழ்வுச் சிக்கல்களுக்கு சனநாயக ரீதியில் திறம்பட முகம் கொடுக்க வேண்டுமானால், இந்த நேர்மறையான அனுபவம் குடிமக்களாகிய எம்மீது தொடர்ந்து பொருந்தக்கூடிய தேசிய அக்கறைகளைப் பிரதிபலிக்க வேண்டிய ஒரு பொறுப்பைச் சுமத்துகிறது. மற்ற நாடுகளில் உள்ள கருத்துரையாளர்கள் இந்த அனுபவம் நமது வளர்ச்சி முன்னுரிமைகளை மீள் பரிசீலனை செய்வதற்கான வாய்ப்பையும் தருகிறது என்பதில் கவனம் செலுத்தியுள்ளனர். நல்வாழ்வு, கல்வி மற்றும் வீட்டுவசதி, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு இது மிகவும் முக்கியமானது.
சனநாயக மற்றும் பொறுப்புணர்வு நிர்வாகத்தின் சிக்கலான பிரச்சினைகள் பொதுமக்கள் மற்றும் தனியார் அரங்குகளில் விவாதிக்கப்பட வேண்டும். அவை தொடர்ந்து நம் கவனத்தை ஈர்க்க வேண்டும்.
பின்வரும் விடயங்கள் அனைத்து குடிமக்களுக்கும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை என்று வெள்ளிக்கிழமை மன்றம் பரிந்துரைக்கிறது:
1. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற சனநாயக முறைக்கு தொடர்ந்து அர்ப்பணிப்போடு இருத்தல். பலமுள்ள தலைமை என்ற பெயரில் சனநாயகத்தை நிராகரித்து வலுவான சர்வாதிகாரத்தை மாற்றீடாகக் கொண்டுவருவதற்கான நேரம் இது அல்ல. கோவிட் 19 தொற்றுநோய்க்கான பிரதிபலிப்பு, முடிவுகளை எடுப்பதில் தொடர்புடைய பங்குதாரர்களின் பங்களிப்புக்கான இடத்துடன் இணைந்தால், குறிப்பாக தேசிய நெருக்கடியின் போது, பயனுள்ள அரசியல் தலைமைத்துவத்தை வழங்க முடியும் என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகிறது.
உலக வரலாறு மற்றும் இலங்கையின் சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாறு, ஒரு மிகப் பெரிய பெரும்பான்மையுடன் (2/3) தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் விரைவில் “மக்கள்” என்ற பெயரில் ஒரு சர்வாதிகார ஆட்சியாக தன்னை எவ்வாறு மாற்றிக் கொள்ள முடியும் என்பதைக் காட்டுகிறது. சனநாயகம் என்பது பெரும்பான்மையினரின் ஆதிக்கம் என்ற கருத்தோடு குழப்பக் கூடாது. ஏனென்றால் சனநாயகம் என்பது பெரும்பான்மையினருக்கு மட்டுமல்ல ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமைகளுக்கும் மதிப்பளிப்பதாக இருக்க வேண்டும். ஒரு மையக் கருத்து என்னவென்றால், ஒரு நாட்டின் அரசியலமைப்பின் அடிப்படை சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்ட அனைத்து உரிமைகளுக்கும் மதிப்பளிக்க அனைத்து மக்களுக்கும் உரிமை உண்டு.
கடந்த ஆண்டு வரை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம், ஒரு பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் ஒரு ஆட்சி முறையை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற ஒருமித்த கருத்து இருந்தது. முன்னைய நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பு இது நிறைவேற்றப்படவில்லை. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தால் வாக்குறுதியளிக்கப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தம், பொறுப்புணர்வு ஆளுகைக்கான சனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்தல் வேண்டும். மேலும் அடிப்படை தேவைகளுக்கான அணுகலை உள்ளடக்கிய அடிப்படை உரிமைகள் குறித்த வலுவான உத்தரவாதங்களையும் அரசியல் அமைப்பு உள்ளடக்கும் என்ற ஒரு உறுதி எங்களுக்குத் தேவை. தேர்தல் பெரும்பான்மை மூலம் தங்களை ஒரு சர்வாதிகார அரசாங்கமாக மாற்ற மாட்டார்கள் என்று அனைத்து கட்சிகளும் குடிமக்களாகிய எங்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். சனநாயகம் பெரும்பான்மையினருக்கு மட்டுமே உரிய அரசாங்கம் என்ற கோட்பாட்டோடு ஒருபோதும் குழப்பக்கூடாது. மேலும் “மக்கள் விருப்பம்” என்ற பெயரில் அதனை நியாயப்படுத்தப்படக் கூடாது. அரசு ஆட்சியில் அதிகாரம் செலுத்த வேண்டும் என்பதை சனநாயகம் ஒத்துக் கொள்கிறது. ஆனால் மக்களின் நலன்களுக்காக அந்த ஆட்சி அதிகார வரம்புகளை வரையறுக்கிறது. எழுதப்பட்ட அரசியலமைப்பு அடைய முயற்சிக்கும் சமநிலை இதுதான். இந்தத் தேர்தலில் அனைத்துத் தரப்பினராலும் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தம் வாக்காளர்கள் ஆகிய எங்களுக்கு இந்த சமநிலை பராமரிக்கப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.
2. கடந்த சில ஆண்டுகளாக ஒரு காலத்தில் மதிப்பிற்குரிய சட்ட அமைப்பின் வீழ்ச்சியை நாங்கள் கண்டிருக்கிறோம். அதில் குடிமக்கள் ஒரு நாட்டின் அரசு அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கு எதிராக தங்கள் உரிமைகளைக் கோரி அதனைச் செயல்படுத்தினர். கைது செய்யப்பட்டவர்கள் (பெரும்பாலும் குற்றச்சாட்டுகள் இல்லாமல்) வெற்றிகரமாக அல்லது தோல்வியில் முடிந்த பிணை விண்ணப்பங்கள் மற்றும் பொலிஸ் விசாரணைகளில் அரசியல் தலையீடு ஆகியவற்றுடன் மக்கள் இன்று (இந்த பயங்கரமான நெருக்கடியின் போது கூட) பழக்கமாகிவிட்டனர். கடுமையான குற்றச் செயல்களில் தண்டனை பெற்றவர்கள் அல்லது தற்போதைய நீதிமன்ற நடவடிக்கைகளில் இதுபோன்ற குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள், உயர் பதவிகளை வைத்திருப்பவர்களாக மிக இலகுவாக மாறிவிட்டனர். இதில் சனாதிபதியின் ஆலோசகர்களும் அடங்குவர். கொலை குற்றவாளிகளுக்கு சனாதிபதியால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளது முறையீடுகளை மிக உயர்ந்த அதிகாரம் கொண்ட எங்கள் நாட்டின் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இவை அனைத்தும் நீதித்துறை மீது குடிமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் சட்டத்தின் முன் சகலரும் சமம் என்ற கோட்பாடுகளையும் விதிகளையும் கீழறுக்கச் செய்துள்ளன.
அரசியலமைப்புச் சீர்திருத்தம் இந்தப் புற்றுநோயை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் அரசியல் தலையீட்டிலிருந்து நீதித்துறையையின் சுதந்திரத்தை மீள் வலுப்படுத்தி அதனைத் திறம்படப் பாதுகாக்க வேண்டும் என்றும் நாம் கோர வேண்டும்.
3. இந்த நோக்கங்களை அடையப்பட வேண்டுமானால், நமது வாக்குகளின் மூலம் பொருத்தமான ஆட்களை நாம் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீளக் கூட்ட வேண்டும் என்ற கூக்குரல் “இதே ஆட்களை மீண்டும் நாங்கள் விரும்பவில்லை!” என்ற பொதுமக்கள் கூக்குரலுடன் எதிர்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், கெட்ட காலமாக பாரிய ஊழல், நாடாளுமன்றத்தில் கட்சி தாவிகளை விலைக்கு வாங்குதல், ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தல் மற்றும் அற்ப அரசியல் காரணத்துக்காக குடிமக்களின் உயிரைப் பாதுகாப்பதில் கிரிமினல் அலட்சியம் ஆகியவற்றுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் மீண்டும் அரசியல் கட்சிகளால் வேட்பாளர்களாக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இப்படிப்பட்டவர்கள் நாடாளுமன்றத்திற்குத் திரும்பி வந்தால் மாற்றத்தை எதிர்பார்க்கலாமா? மக்களுக்காகப் பணி செய்யத் தமது இயலாமையை மீண்டும் மீண்டும் எண்பித்த இந்த அரசியல்வாதிகளை நிராகரிக்க நாங்கள் எங்கள் வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும். எந்தவொரு கட்சியிலிருந்தும் நம் நாட்டிற்கு மிகவும் தேவைப்படும் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் புதிய பாதையில் ஒரு பயணத்தைத் தொடங்க எங்களுக்கு உதவக் கூடியவர்களை நாங்கள் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
4. நெருக்கடிக்குப் பதிலளிப்பதற்கு அரசாங்கம் இராணுவத்திற்கு முக்கியமான பொறுப்புகளைக் கையளித்துள்ளது. நாட்டின் நலன் கருதியே இராணுவம் சிவில் நிர்வாகத்தையும் பொதுமக்கள் நல்வாழ்வு அமைப்பையும் ஆதரிக்கிறது. எவ்வாறாயினும் அந்த வகிபாகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு நிலையை அவர்களால் பெற முடியாது என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டியது முக்கியமாகும். ஊடகங்கள் சனநாய நல்லாட்சியின் தரத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடாது என்பதும் தேசத்திற்கு மிகவும் முக்கியமானது. இதேபோல், குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பொறுத்து தங்கள் அதிகாரங்களையும் பொறுப்புக்களையும் பயன்படுத்துவது காவல்துறையின் பொறுப்பு ஆகும். எங்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்புக்களில் காவல்துறையின் பொறுப்பை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்கள்.
இணையத்தில் பொதுமக்கள் நல்வாழ்வு நெருக்கடிக்குப் பதிலளிக்கும் அதிகாரிகளை விமர்சித்ததற்காகக் கைது செய்யப்பட்டதாக காவல்துறையின் ஊடகப் பிரிவு அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பு பேச்சு மற்றும் தகவல் சுதந்திரத்திற்கான குடிமக்களின் உரிமைகள் குறித்து கடுமையான பிரச்சினைகளை எழுப்புகிறது. இது, ஊடகங்கள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் கவனத்திற்கு ஆளாகவில்லை. குடிமக்களின் பேச்சு மற்றும் தகவல் சுதந்திரத்திற்கான உரிமைகள் நமது அரசியலமைப்பு மற்றும் நீதிமன்ற முடிவுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை பொதுமக்கள் உண்மையான உண்மைகளைக் கண்டறிய முடியும் என்பதை உறுதிப்படுத்துவதற்கு அவசியமானவை என அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் அனைவரின் வாழ்க்கையையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பொதுமக்கள் நல்வாழ்வு குறித்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன. உண்மையில் அரசியலமைப்பு உறுப்புரை 15 (7) மற்றும் 14 (ஏ) இன் கீழ் பொதுமக்கள் நல்வாழ்வின் அடிப்படையில் இந்த உரிமைகளை கட்டுப்படுத்தும் நிர்வாக முடிவுகளை மறு ஆய்வு செய்வதற்கான அதிகாரத்தை உச்ச நீதிமன்றத்திற்கு வழங்குகிறது. இது, ஒரு பொதுமக்கள் நல்வாழ்வு நெருக்கடியில் அரசின் கட்டுப்பாட்டு அதிகாரம் முறைதவறிப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதாகும்.
5. சனாதிபதி, அவர் பதவியேற்றபோது, தனக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல நாட்டின் அனைத்து மக்களுக்கும் தான் சனாதிபதி என்று நம் அனைவருக்கும் உறுதியளித்தார். இந்த அறிக்கை இந்த நாட்டிற்கு தேவையான அரசியல் தலைமை எப்படி இருக்க வேண்டும் என்பதை எண்பித்தது. அதாவது கடந்த காலங்களில் உட்பொதியப்பட்ட மோதல்களின் வடுக்களைக் குணப்படுத்த உதவியது. கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக அரசு மற்றும் தனியார் ஊடகங்கள் மற்றும் சில நல்வாழ்வு அதிகாரிகள் விளம்பரப்படுத்திய விதம் அவர்களது குடும்பங்கள் மற்றும் இருப்பிடங்கனளின் இனத்தை நமது சமூகங்களில் இனவெறி மற்றும் தப்பெண்ணத்தை ஊக்குவித்துள்ளது என்பதை நினைவூட்ட விரும்புகிறோம். முஸ்லீம் சமூகங்களில் இறந்தவரை அடக்கம் செய்யும் நடைமுறை பற்றி ஊடகங்களில் சித்தரிக்கப்பட்ட விதம் வருந்தத்தக்கது. பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் தனியுரிமைக்கு முழு மரியாதை இல்லாத நிலையில் இந்த நபர்களின் தகனங்கள் தொலைக்காட்சி செய்தி அறிக்கைகளில் வெளியிடப்பட்டன. இறுதிச் சடங்குகள் எங்களது பன்முகத்தன்மை வாய்ந்த எங்களது சமூகங்களுக்கு முக்கியமானது ஆகும். அது அன்புக்குரியவர்களின் இழப்புக்களோடு இணைக்கப்பட்டுள்ளன. தொற்று நோய்க் கிருமியில் இருந்து பொதுமக்கள் மக்களைப் பாதுகாப்பது தொடர்பான மருத்துவ மற்றும் விஞ்ஞான அடிப்படையில் இந்த நடைமுறைகளை ஒழுங்குபடுத்த அரசு விரும்பினால், முடிவெடுப்பது மதகுருமார் மற்றும் சமூகத் தலைவர்களுடனான ஆலோசனையின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்பின் அடிப்படையிலும் இருக்க வேண்டும். அரசாங்கத்தின் துரதிர்ஷ்டவசமான தோல்விகளை மீண்டும் செய்யக்கூடாது. மதம் மற்றும் இனத் தீவிரவாதத்தை நிராகரிக்க வேண்டும். மறுபுறம் நமது கூட்டு நலனுக்காக மக்களிடையே ஒற்றுமையையும் பச்சாத்தாபத்தையும் ஊக்குவிப்பதில் முக்கியமான அரசியல் தலைமையை வழங்க வேண்டிய நேரம் இது.
பேராசிரியர் சாவித்ரி குனேசேக்கர,
கலாநிதி உஸ்வத்த – ஆராட்சி,
பேராசிரியர் அர்ச்சுனா அலுவிஹாரே,
சார்பாக:
திரு பைஸ்சர் இரஹ்மான், திரு தனேஷ் காசி செட்டி, கலாநிதி இராதிகா குமாரசாமி, பேராசிரியர் கமெனா குனரத்ன, கலாநிதி ஏ.சி. விஸ்வலிங்கம், பிஷப் துலீப் டி சிக்கேரா, பேராசிரியர் கமீலா சமரசிங்க, பேராசிரியர் கணநாத் ஒபயசேகர, பேராசிரியர் இரஞ்சினி ஒபயசேகர, திரு திஸ்ஸா ஜெயதிலக்கா, வண கலகாநிதி ஜெயசிறி பீரிஸ், திரு சஞ்சயன் இராஜசிங்கம், திரு சந்திர ஜெயரத்ன, திரு பிரியந்தா கமகே, திரு எஸ்.சி.சி. இளங்கோவன், திரு தம்மபாலா விஜயானந்தனா, திரு ஜாவிட் யூசுப், திரு பிரஷான் டி விஸர் & திருமதி சாந்தி டயஸ்
Leave a Reply
You must be logged in to post a comment.