சங்க இலக்கிய நூல்கள்

சங்க இலக்கிய நூல்கள்

 பத்துப்பாட்டு 

என்பதுசங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும் , பத்துப்பாட்டு,எட்டுத்தொகை, இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும் இவற்றுள்  திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறு பாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு,பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் இன்று ஒரே தொகுப்பாகக் குறிப்பிடப்படுகின்ற போதிலும், இவை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை, வெவ்வேறு ஆசிரியர்களால் பல்வேறு கால கட்டங்களில் இயற்றப்பட்டவை. பத்துப்பாட்டு எனச் சேர்த்துக் குறிப்பிடும் வழக்கமும் பிற்காலத்தில் எழுந்ததென்பதே பலரது கருத்து. இந்த அரிய தொகுப்பிற்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.

இத் தொகுதியிலுள்ள நூல்கள் சங்க இலக்கியங்களுள் சிறப்பிடம் பெறுபவை. இவற்றில் பழந்தமிழ் நாட்டின் வாழ்க்கை முறை, பண்பாடு பற்றிய பல அரிய தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன. வரலாற்றுச் சம்பவங்கள், அரசர்களினதும் வள்ளல்களினதும் இயல்புகள், பொது மக்களின் காதல் வாழ்க்கை,அக்காலக் கலைகள், நகரங்கள் பற்றிய தகவல்கள், இயற்கை பற்றிய வருணனைகள் போன்றவை தொடர்பான பல தகவல்களை இவற்றிலிருந்து பெற முடிகின்றது. பத்துப் பாட்டு நூல்களில் இயற்கைக்கு முரண்பட கற்பனைகளோ பொருந்தா உவமைகளோ காணப்பெறவில்லை. பண்டைத் தமிழ்ர் வாழ்வை உள்ளது உள்ளபடிக் கட்டும் காலக் கண்ணாடியாக இவை விளங்குகின்றன.

“‘முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
கோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சிப்பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து”

என வரும் பழம்பாடல், பத்துப் பாடு நூல்கள் எவை என்பதை மிகத் தெளிவாகக் காட்டும்.

இத் தொகுப்பிலுள்ள பத்து நூல்களும் நீண்ட அகவற் பாக்களால் ஆனவை. இவற்றுள் 103 அடிகளைக் கொண்டமைந்த முல்லைப் பாட்டுக்கும், 782 அடிகளையுடைய மதுரைக் காஞ்சிக்கும் இடைப்பட்ட நீளங்களைக் கொண்டவையாக ஏனைய நூல்கள் அமைந்துள்ளன.

நூறடிச் சிறுமை நூற்றுப் பத்தளவே
ஏறிய அடியின் ஈரைம் பாட்டு
தொடுப்பது பத்து பாட்டெனப் படுமே

அதுவே, அகவலின் வருமென அறைகுவர் புலவ்ர்”.-(பன்னிருபட்டியல் 266-267) என்பது இதன் இலக்கணமாகும்.

சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந் நூல்கள் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1889 ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறும் பலர் முழுத் தொகுதியாகவும், இதிலுள்ள நூல்களிற் சிலவற்றைத் தனித் தனியாகவும் புதிய உரைகளுடன் வெளியிட்டுள்ளனர்

பத்துப்பாட்டு

திருமுருகாற்றுப்படை குறிஞ்சிப் பாட்டு
மலைபடுகடாம் மதுரைக் காஞ்சி
முல்லைப்பாட்டு நெடுநல்வாடை
பட்டினப் பாலை பெரும்பாணாற்றுப்படை
பொருநராற்றுப்படை சிறுபாணாற்றுப்படை

திருமுருகாற்றுப்படை – நெடுநல்வாடை (ஒப்புநோக்கம்)

திருமுருகாற்றுப்படை

1 ஞாயிறு தோன்றுவதைக் காட்டிக்கொண்டு தொடங்குகிறது.

2 அருளைப் பெற ஆற்றுப்படுத்துகிறது. பிற ஆற்றுப்படைகள் பொருளைப் பெற ஆற்றுப்படுத்துகின்றன.பொருளைப் பெற ஆற்றுப்படுத்தும் பிற ஆற்றுப்படைகள்; பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, மலைபடுகடாம்

3 தொல்காப்பிய மரபு – 1037 | பாடாண் திணையின் துறைகளில் ஒன்று ஆற்றுப்படை. ‘கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ சென்று பயன் எதிரச் சொன்ன பக்கம்’ திருமுருகாற்றுப்படை முதுவாய் இரவலனை ஆற்றுப்படுத்துகிறது. ‘அளியன் தானே முதுவாய் இரவலன்'(முருகு 384) இவனுக்கு அருள்புரிய வேண்டும் என்று கூளியர் முருகனுக்குப் பரிந்துரைப்பர் என்று குறிப்பிடப்படுவதால் இதனைப் ‘புலவர் ஆற்றுப்படை’ என்றும் கூறுவர். இது மலைபடுகடாம் நூலைக் ‘கூத்தர் ஆற்றுப்படை’ என்று கூறுவது போன்றது.

நெடுநல்வாடை

1 குளிர் நடுக்கத்தைக் காட்டிக்கொண்டு தொடங்குகிறது

2 பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியதாக அதன் கொளுக்குறிப்பு கூறுகிறது. பாடலில் அவன் பெயர் இல்லை. ‘வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகம்’ஒன்றை வைத்துக்கொண்டு அவனது மெயக்காப்பாளன் அவனுடன் வந்தான் என்று கூறப்படுவது ஒன்றே பாண்டியன் என்று கொள்வதறகான அடிப்படை. அரண்மனையில் அரசி பிரிவால் வாடுகிறாள். இது பாலை. பாசறையில் பாண்டியன் போரில் காயம் பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிக்கொண்டு காயம் பட்ட குதிரைகளையும், யானைகளையும் தேற்றிக்கொண்டிருக்கிறான்.வாடைக்காற்று இருவரையும் வருத்துகிறது.

3 தொல்காப்பிய மரபு | ‘வாகை தானே பாலையது புறனே’ – தொல்காப்பியம் 1019 ‘கூதிர் வேனில் என்று இரு பாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணிய மரபு’ மேல் வாகைத்திணைப் பாடல் வரும் – தொல்காப்பியம் 1022 இந்த நெறியில் அமைந்துள்ளது நெடுநல் வாடை

திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரரும் நெடுநல்வாடை பாடிய நக்கீரரும் ஒருவரா வெவ்வேறு புலவர்களா என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

 திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. மதுரையைச் சேர்ந்த நக்கீரன் என்னும் புலவரால் இது இயற்றப்பட்டது.இதுகடைச்சங்கநூல்களில் ஒன்றுஎன்பது மரபுவழிச்செய்தியாகும். இதுபிற்காலத்தில் எழுந்தநூல் என்று கருதுவாருமுண்டு; எனினும், ஆய்வறிஞர்களில் பெரும்பாலானோர் கருத்து, இது சங்கநூல் என்பதேயாம். முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. “ஆற்றுப்படுத்தல்” என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். “முருகாற்றுப்படை” எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று.

திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது. இவற்றுள் முதற்பகுதியில் திருப்பரங்குன்றமும், இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் எனப்படும்திருச்சீரலைவாயும், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் பகுதிகளில் முறையே திரு ஆவினன்குடி(இந்நாளில் பழநி என்றுவழங்கப்படுவது), திருவேரகம்(சுவாமிமலை) , குன்றுதோறாடல், பழமுதிர் சோலை ஆகிய படைவீடுகளும் பேசப்படுகின்றன.

பொருநராற்றுப்படை

பொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரிகால் வளவன் எனப்படும் சோழ மன்னனைப்பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது. முடத்தாமக் கண்ணியார் என்பது இதன் ஆசிரியர் பெயர். இது 248 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவாலானது.

சிறுபாணாற்றுப்படை

நத்தத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது சிறுபாணாற்றுப்படை எனும் இந்நூல். இது 269 அடிகளாலமைந்தது. ஒய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் என்பவனைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல், அம்மன்னனிடம் பரிசு பெற்ற சிறுபாணன் ஒருவன் தான் வழியிற் கண்ட இன்னொரு பாணனை அவனிடம் வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

பெரும்பாணாற்றுப்படை

500 அடிகளைக் கொண்டு அமைந்தது பெரும்பாணாற்றுப்படை. பேரியாழ் வாசிக்கும்பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனைத் தொண்டைமான் இளந்திரையன்என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது இந்த ஆற்றுப்படை நூல். இதை ஆக்கியவர்கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர்.

நெடுநல்வாடை

பாண்டிய மன்னன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டுமதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல். இதுசங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.

இது ஒரு புறப்பொருள் நூலாகக் கொள்ளப்படினும் இதில் பெருமளவு அகப்பொருள் அம்சங்கள் பொதிந்துள்ளன. இந் நூல் அகப் பொருளையே பேசினாலும் புறப்பொருள் நூல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ்ப் புலவர்(கள்) தம் அகப் பாடல்களில் தலைவன் தலைவி ஆகியோரின் அடையாளத்தை வெளிப்படுத்தாத கண்ணியத்தைக் காத்து வந்தனர். புறவாழ்வை அனைவருக்கும் கூறலாம். அகவாழ்வை அகிலமே அறியச்செய்வது அறிவுடைமை அன்று என்பது அவர்தம் அறிவுமுடிவாய் இருந்திருக்கிறது. ஆனால் நெடுநல்வாடையில் பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு நக்கீரரால் சுட்டப்பட்டுள்ளது. ஆகவே தான் தலைவன் பாண்டிய மன்னனாய்க் கொள்ளப்பட்டான். இந்நூலும் புறப் பொருள் நூலாயிற்று.

குறிஞ்சிப் பாட்டு

குறிஞ்சிப் பாட்டு கபிலர் என்னும் புலவர் பாடியது இப்பாடல். 261 அடிகளாலான இப் பாடல் அகப்பொருள் சார்ந்த பாடலாகும்.

தினைப்புலம் காக்கச் சென்ற தலைவி ஒரு ஆண் மகனிடம் மனதைப் பறி கொடுக்கிறாள். பல காரணங்களினால் அவனைச் சந்திக்க முடியாமல் தவிக்கும் தலைவியின் நிலையை, அவள் தாய்க்கு எடுத்து விளக்குகிறாள் அவள் தோழி. இதுவே குறிஞ்சிப் பாட்டின் உள்ளடக்கம்.

முல்லைப்பாட்டு

சங்கத் தமிழ் இலக்கியத்தில் பத்துப்பாட்டு என அழைக்கப்படும் தொகுதியின் ஒரு பகுதியே முல்லைப் பாட்டு. இத் தொகுதியுள் அடங்கியுள்ள நூல்களுள் மிகவும் சிறியது இதுவே. 103 அடிகளைக்கொண்டஆசிரியப்பா வகையில் இயற்றப்பட்டது. பாண்டிய  அரசனான நெடுஞ்செழியனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு எழுதப் பட்டதாகக் கருதப்படினும், தலைவனுடைய பெயர் பாட்டில் குறிப்பிடப்படவில்லை.

முல்லைப்பாட்டு முல்லைத் திணைக்குரிய நூல்,  அகப்பொருள் பற்றியது. மழைக்காலத்துக்குமுன் திரும்பிவருவதாகச் சொல்லிப் போருக்குச் சென்ற தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை. தலைவியோ பிரிவுத் துயரம் தாழாமல் உடல் மெலிந்து வாடுகிறாள். விபரமறியச் சென்று வந்த தோழியரின் உற்சாக வார்த்தைகள் அவள் ஏக்கத்தைக் குறைக்கவில்லை. போரில் வெற்றி பெற்றுத் தலைவன் திரும்பியதும் தான் தலைவி ஆறுதலடைந்து இன்பமுறுகிறாள்.

இந்த நிகழ்ச்சிகளைக் கருவாகக் கொண்டு நப்பூதனார் என்னும் புலவர் கவிநயத்தோடு எழுதியதே முல்லைப்பாட்டு.

மதுரைக் காஞ்சி

சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக் காஞ்சி. இத் தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது இதுவே. மாங்குடி மருதனார் என்னும் புலவர் இந் நூலை இயற்றியுள்ளார். இப்பாடலில் 782 அடிகள் உள்ளன. பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்குஉலகியல் உணர்த்துவதாய் இப்பாடல் பாடப்பட்டுள்ளது. பாண்டி நாட்டின் தலைநகரமான மதுரையின்அழகையும், வளத்தையும் கூறுகின்ற இந்நூல், அந்நாட்டின் ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது. இப் பாட்டின் தொடக்கத்தில் தி‌ரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப் பாடும் புலவர் பிறகு தேன் கூடுகள் நிறைந்திருக்கும் மலையுச்சிகளைப் பற்றியும் கூறுகிறார். இந்த உவமைகள் இயற்கை வளம் குறித்துப் பாடும் பொருட்டு அமைந்தவை அல்ல. வாழ்க்கை அலை போன்று நிலையில்லாதது. எனவே நல்லறங்கள் செய்து மலை போல் என்றும் அழியாப் புகழைத் ‌தேடிக்கொள் என்று மன்னனுக்கு மறைமுகமாய்க் கூறுகிறார்.

போரின் கொடுமையை விளக்குதல்

பெரும்பாலான புலவர்கள் மன்னனின் போர்த்திறத்தையும் போரில் பகைவரைக் கொன்றழித்ததையும் கொன்றழித்த நாட்டுக் கோட்டை‌யை அழித்து அங்கே எள் மற்றும் திவசங்கள் விதைத்ததையும் பாடுவர். மருதனாரோ போரின் கொடுமையையும் போரினால் நாடு பாழாவதையும் பாடுகிறார்.

நாடெனும்பேர் காடுஆக
ஆசேந்தவழி மாசேப்ப
ஊர் இருந்தவழி பாழ்ஆக

போரினால் நாடாக இருந்த இடம் காடாகும். பசுக்கள் திரிந்த வழியில் புலிகள் உலவும். ஊர் முழுதும் பாழாகும் என்று சொல்கிறார்.

நாளங்காடி அல்லங்காடி

சங்க காலத்திலும் மதுரை தூங்கா நகராய் விளங்கியதை மருதனார் மூலம் அறிய முடிகிறது. பகல் நேரக் கடைகளாகிய நாளங்காடி பற்றியும் இரவு நேரத்தில் திறக்கப்படும் அல்லங்காடி (அல் – இரவு; அல்லும் பகலும்) பற்றியும் விளக்குகிறார். கடல் நீர் ஆவியாகி மேகமாவதால் கடல் வற்றிவிடுவதில்லை. ஆறுகள் பல கடலில் வந்து கலப்பதால் கடல் பொங்கி வழிவதுமில்லை. அது போல் மக்கள் திரளாக வந்து பொருட்களை வாங்குவதால் பொருட்கள் தீர்ந்து விடுவதும் இல்லை; பல இடத்திலிருந்தும் வணிகர்கள் விற்பனைக்குப் பொருட்களைக் கொண்டு வருவதால் பொருட்கள் மிகுந்து விடுவதும் இல்லை என்கிறார்.

மழைகொளக் குறையாது, புனல்புக மிகாது
கரைபொருது இரங்கும் முந்நீர் போல,
கொளக்கொளக் குறையாது. தரத்தர மிகாது.

ஓர் இரவு

ஓர் இரவு முழுதும் மதுரை நகரில் நடக்கும் செயல்கள் யா‌வற்றையும் மருதனார் கூறுகிறார். குலமகளிர் பண்புகள், விலைமகளிர் வேலைகள், கள்வர் திறம், காவலர் மறம் ஆகியவற்றைக் கூறி நிறைவாக மன்னன் இரவில் துயில் கொள்ளல், காலையில் பள்ளியெழுச்சி, அவனது கொடை, அறம் ஆகியவற்றை விளக்கி அவனை வாழ்த்திப் பாடலை நிறைவு செய்கிறார்.

பட்டினப் பாலை

பட்டினப்பாலை என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல் .பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவரே இதனையும் இயற்றியுள்ளார். பண்டைய சோழ நாட்டின் சிறப்பு, சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு,அதன் செல்வ வளம், கரிகாலனுடைய வீரச்செயல்கள், மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை எடுத்து இயம்பும் இப் பாடல் 301 அடிகளால் அமைந்துள்ளது. இப் பாடலில் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் பெருமைகளை எடுத்துக்கூறுகிறார் புலவர். கரிகால் சோழன் திரைக்கடலில் நாவாய்கள் பல செலுத்தி, சுங்க முறையை ஏற்படுத்தி, வெளிநாடுகளுடன் வாணிபத்தொடர்பு ஏற்படுத்தி தமிழகத்திற்கு உலகப்புகழை ஏற்படுத்தியவன். அவன் ஆண்ட சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது காவிரிப்பூம்பட்டினம். கரிகால் சோழனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருஞ்சிறப்பைச் சொல்வதே பட்டினப்பாலை ஆகும்.

சங்க நூலாகிய பத்துப்பாட்டு வரிசையில் ஒன்பதாவது பாட்டு பட்டினப்பாலையாகும். பட்டினப்பாலையின் செய்யுள்கள் இடையிடையே வஞ்சிப்பாவின் அடிகள் விரவி இருந்தாலும் ஆசிரியப்பாவால் இயன்றவை.

பட்டினம்

துறைமுகத்தை ஒட்டியுள்ள பெரு நகரங்கள் பட்டினம் என அழைக்கப்பட்டன. காவிரிப்பூம்பட்டினம் சோழ நாட்டின் பழம்பெரும் நகரமாகும். தலைநகரமாக விளங்கிய துறைமுகப்பட்டினம். இதுதமிழகத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கீழ்க்கோடியிலே காவிரி நதி கடலோடு கலக்கும் இடத்தில் உள்ளது. இப்போது இது ஒரு சிறிய ஊராகும். ஏறக்குறைய ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த நகரம் கடலிலே மூழ்கி விட்டதாகச் சொல்லப்படுகிறது. ஐம்பெருங்காப்பியங்களிலே ஒன்றானமணிமேகலையில் காவிரிப்பூம்பட்டினம் கடலில் மூழ்கிய செய்தி காணப்படுகிறது.

பாலை

பாலை என்பது பாலைத்திணை ஆகும். பிரிவைப் பற்றிக் கூறுவது பாலைத்திணையாகும் . கணவன் தன் மணைவியை விட்டுப் பிரிந்து போவது- அல்லது பிரிந்து போக நினைப்பது- அல்லது பிரிந்து போக வேண்டுமே என நினைத்து வருந்துவது இவை பாலைத்திணையின்கண் அடங்கும். கணவன் தான் பொருள் தேடப் பிரிந்து செல்வதைத் தன் மணைவிக்கு அறிவிப்பதும், அதை அவள் தடுப்பதும் பாலைத் திணையில் அடங்கும்.
பட்டினப்பாலை என்பது பட்டினம்- பாலை என்ற இரு சொற்களைக் கொண்ட தொடர். ” பட்டினத்தின் சிறப்பைக் கூறிப் பிரிவின் துன்பத்தை உணர்த்துவது” என்பது இதன் பொருளாகும்.

பாட்டின் அமைப்பு

பொருள் தேடப் பிரிந்து செல்ல நினைக்கின்றன் தலைவன். பிரிந்து சென்றால் தன் காதலியின் நிலை என்ன அகும்? அவள் தன் பிரிவைப் பொறுப்பாளா? தான் திரும்பும் வரை அவள் உயிர்கொண்டு உறைவாளா? என்ற ஐயம் அவன் உள்ளத்திலே எழுந்து அவனை வாட்டுகின்றன. பிரிந்து சென்றால் தானும் மன அமைதியோடு சென்ற இடத்தில் செயலாற்ற முடியாது. வேதனைதான் மிஞ்சும்; வேதனையோடு செய்யும் செயலில் வெற்றிகாண முடியாது. ஆகையால் பிரிவு காதலிக்குத் துன்பம் தருவதோடு தனக்கும் துன்பத்தைத் தரும் என நினைக்கிறான் இதனால்

” நான் பிரிந்து செல்ல நினைக்கும் காட்டு மார்க்கம், கரிகாற்சோழன் தன் பகைவர்களின் மேல் வீசிய வேல்படையைக் காட்டினும் கொடுமையானது. என்காதலியின் மெல்லிய தோள்கள் அந்தக் கரிகாற்சோழனுடைய செங்கோலைக் காட்டினும் குளிர்ச்சியைத் ( நன்மையை, இன்பத்தை)தருவன. ஆதலால் நீங்காத சிறப்பினையுடைய காவிரிப்பூம்பட்டினமே கிடைப்பதாஇருந்தாலும் கூட என் காதலியை விட்டுப் பிரிந்து வரமாட்டேன். என் மனமே! பிரிந்து போகவேண்டும் என எண்ணுவதை மறந்துவிடு”.

என்ற முடிவுக்கு வருகிறான். இதுவே பட்டினப்பாலையின் அகப்பொருள்கருத்தாகும். இதனை

” திருமாவளவன்
தெவ்வர்க்கு ஓங்கிய
வேலினும் வெய்ய கானம்;
அவன், கோலினும் தண்ணிய
தடம்மெல் தோளே.
முட்டாச் சிறப்பின்
பட்டினம் பெறினும்
வாரிரும் கூந்தல்
வயங்கிழை ஒழிய
வாரேன் வாழிய செஞ்சே.”

என்று வரும் பட்டினப்பலை அடிகளால் அறியலம்.

நூலின் பொருள்

காவிரியாற்றின் சிறப்பு; சோழநாட்டின் நிலவளம்; காவிரிப்பூம்பட்டினத்தின் சுற்றுப்புறங்களின் செழிப்பு; காவிரித்துறையின் காட்சி; செம்படவர்களின் வாழ்க்கை; பொழுதுபோக்கு இவைகளை இந்நூல் விரிவாகக் கூறுகிறது. காவிரிப்பூம்பட்டினத்திலே அக்கலத்தில் நடைபெற்ற வாணிகம்; அந்நகரத்திலே குவிந்திருந்த செல்வங்கள்; அங்கு நடைபெற்ற ஏற்றுமதி இறக்குமதி வாணிகம்; வாணிகர்களின் நடுவுநிலைமை; பண்டங்களைப் பாதுகாக்கும் முறை இவைகளையெல்லாம் இந்நூலிலே காணலாம்.

இந்த நகரத்தின் தலைவனான கரிகாற்சோழனின் பெருமை, வீரம், கொடை முதலியவற்றையும் இந்நூல் எடுத்துரைக்கிறது. இந்நூல் பாலைத்திணை என்னும் அகப்பொருளைப் பற்றியதாயினும் புறப்பொருள் செய்திகளே இதில் மிகுதியாகக் காணப்படுகின்றன.

கரிகாற்சோழன்

பட்டினப்பாலையில் குறிப்பிட்டிருக்கும் கரிகாற்சோழன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வழ்ந்தவன். காவிரிப் பூம்பட்டினமே இவனுடைய தலைநகரமாக இருந்தது. இவன் இளைஞனாய் இருந்தபோது பகைவரால் சிறை பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.எப்படியோ சிறைலிருந்து தப்பி தனக்குரிய அரசாட்சியையும் கைப்பற்றினான். பிறகு தன் பகைவர்களின் மேல் படை திரட்டிச் சென்று அவர்களையெல்லாம் வீழ்த்தி வெற்றிபெற்றான். இச்செய்தி பட்டினப்பாலையின் இறுதியில் கூறப்பட்டுள்ளது.இவனைப் பற்றி மேலும் பழமொழி, பொருநராற்றுப்படை, புறநானூறு,சிலப்பதிகாரம் போன்றவற்றில் பல செய்திகள் காணக்கிடைக்கின்றன.
கரிகால் சோழன் சிறுவனாய் இருந்த போது அவனைக் கொல்ல பகைவர்கள் சூழ்ச்சி செய்தனர். அவனிருந்த இல்லத்திற்குத் தீ வைத்தனர். கரிகாலன் அஞ்சாமல் தீயினின்றும் வெளிவந்து தப்பித்துக்கொண்டான்.அவன தீயிலிருந்து வெளிவரும் போது அவனுடைய கால் தீப்பட்டுக் கரிந்து போனது. இதனால் இவனுக்குக் கரிகால்சோழன் என்று பெயர் வந்தது.

இவன் வெண்ணி என்னும் ஊரின் பக்கத்திலிருந்த போர்க்களத்தில் சேரமான் பெருஞ்சேரலாதன் என்பவனோடு போர் செய்து வென்றான். அப்பொது அதே போர்க்களத்தில் சேரலாதனுக்குத் துணையாக வந்த பாண்டியனையும் எதிர்த்துப் போர் செய்து வென்றான். ஆகவே பாண்டியன், சேரன் இருவரையும் வென்றவன் இவன். இவன் இமயம் வரை படையெடுத்துச் சென்றான். இடையிட்ட மன்னர்களை எல்லாம் வென்று இமயத்தில் புலிக்கொடியையும் நாட்டினான். இவன் இளையோனாய் இருந்த போது நரை முடித்து நீதி கூறிய கதையும் வழங்குகிறது.

கரிகால் சோழன் தமிழன்பன். தமிழ்ப்புலவர்களை ஆதரித்தவன். இரும்பிடர்த்தலையார் என்னும் புலவ்ர் இவனது தாய்மாமன். பட்டினப்பாலையைப் பாடிய உருத்திரன்கண்ணனாருக்கு பதினாறு நூறாயிரம் கழஞ்சு (பொன்)பரிசளித்தான் என்ற செய்தி இவனுடைய தமிழ்ப்பற்றை விளக்குவதாகும்.

ஆசிரியர் வரலாறு

பட்டினப்பாலையை இயற்றிய ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஆவார்.  பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை என்ற நூலினையும் இவர்தான் இயற்றியுள்ளார். பெரும்பாணாற்றுப்படை தொண்டைமான் இளந்திரையன் என்னும் அரசன் மீது பாடப்பட்டது. பட்டினப்பாலை கரிகால்சோழன் மீது பாடப்பட்டது. ஆகவே இவர் கரிகாலன், இளந்திரையன் என்ற இரண்டு மன்னர்களின் அன்புக்குரியவராக வாழ்ந்தார் என்பதை அறியலாம். இவரின் வரலாற்றினை அறிவதற்கான சான்று எதுவும் இல்லை. கடியலூர் என்பதை இவர் புறந்த ஊராகக் கருதுகின்றனர். இவ்வூர் எதுவெனத் தெரியவில்லை. இவர் தொண்டைமானையும், சோழனையும் பாடியிருப்பதால் இந்த ஊர் சோழ நாட்டிலோ, அல்லது தொண்டை நாட்டிலோதான் இருந்திருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். இவர் கூறியிருக்கும் இயற்கை நிகழ்ச்சிகளும் உவமைகளும் அக்கால காவிரிப்பூம்பட்டினத்தை நம் மணக்கண்ணால் அப்படியே படம் பிடித்துக் காட்டுவது போல் அமைந்துள்ளது. தமிழ்நாடின் பெருமை, தமிழர் நாகரிகத்தின் உயர்வு, தமிழர்களின் வீரம், பண்பாடு இவையெல்லாம் இந்தப் பட்டினப்பாலையில் காணலாம்.

உசாத்துணை

பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை. சாமி சிதம்பரனார். இலக்கிய நிலையம். இரண்டாம் பதிப்பு. 1973.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால்ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். 

நவிர மலையின் தலைவனான நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல். நவிர மலை மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் தலைவனின்கொடைத் திறத்தையும் புகழ்ந்து பாடும் இந் நூற் பாடல்களில், அக்காலத் தமிழரின் இசைக்கருவிகள்பற்றியும் ஆங்காங்கே குறிப்புக்கள் காணப்படுகின்றன. நன்னனைப் பாடிப் பரிசு பெறச்செல்லும் பாணர், நெடுவங்கியம், மத்தளம், கிணை, சிறுபறை, கஞ்சதாளம், குழல், யாழ் போன்ற பலவகை இசைக் கருவிகளை எடுத்துச் செல்வது பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.

https://tnpscbooks.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0


 எட்டுத்தொகை நூல்கள்

June 6, 2018
 சங்க இலக்கியங்கள்

கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தினைச் சங்க காலம் என்பர். இக்காலத்தில் வாழ்ந்த புலவர்களே சங்கப் புலவர்கள். இவர்களால் இயற்றப்பெற்றவை சங்கப் பாடல்கள் எனப்படும்.

சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும்.

சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது.

சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன.

பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் அறியத்தருகின்றன.

சங்க இலக்கியங்கள் பதினெண் மேற்கணக்கு நூல்கள் ,பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பெரும்பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

பதினெண் மேற்கணக்கு நூல்கள்

பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் நிலவிய கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் பதினெண் மேற்கணக்கு நூல்கள்.

பதினெண்மேற்கணக்கு நூல்களின் இலக்கணம் கூறும் நூல் பன்னிரு பாட்டியல்.

பதினெண் மேற்கணக்கு நூல்கள் இருவகைப்படும்.அவை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் ஆகும்.

எட்டுத்தொகை நூல்கள்

எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு.இது சங்க இலக்கியம். இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும் பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டது.

தொழில், அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால் தொகுக்கப்பட்டமையால் தொகை எனப் பெயர் பெற்றது.

எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர்.

இத்தொகையுள் ஏறத்தாழ 2352 பாடல்களை 700 புலவர்கள் பாடியுள்ளனர்.

இவர்களில் 25 அரசர்களும், 30 பெண்பாற்புலவர்களும் உண்டு.ஆசிரியர் பெயர் தெரியாப் பாடல்கள் 102.

கலிப்பா வகையால் ஆன நூல் கலித்தொகை.

பரிபாட்டு வகையால் ஆன நூல் பரிபாடல்.

மற்ற ஆறு நூல்களும் ஆசிரியப்பாவால் ஆனது.

எட்டுத்தொகை நூல்களுள் காலத்தால் முந்தியது புறநானூறு.

எட்டுத்தொகை நூல்களுள் காலத்தால் பிந்தியது பரிபாடல்,கலித்தொகை.

எட்டுத்தொகை நூல்களுள் முதன் முதலாக தொகுக்கப்பட்ட நூல் குறுந்தொகை.

எட்டுத்தொகை நூல்கள் வகை:

அகம்,புறம் மற்றும் இரண்டும் சார்ந்தவை என்று மூன்று வகையாக உள்ளது.

அக நூல்கள்: 

நற்றிணை

குறுந்தொகை

அகநானூறு

ஐங்குறுநூறு

கலித்தொகை

புற நூல்கள்

புறநானூறு

பதிற்றுப்பத்து

அகமும் புறமும் உடைய நூல்கள்:

பரிபாடல்

எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய வெண்பா :

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை

எட்டுத்தொகை நூல்களின் சிறப்பு பெயர்கள்:

About editor 3124 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply