காப்பியக் கதைகள்: ஆபுத்திரன் – பகுதி 1 & 2

மணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் – 1

 rajam rajam@earthlink.net

Mon, Dec 6, 2010

பொருளடக்கம்

 [மறை

1 மணிமேகலை

1.1 ஆபுத்திரன் கதை – பகுதி 1

1.2 ஆபுத்திரன் – அமுதசுரபி

1.3 மிகச் சுருக்கமாக … அமுதசுரபியின் வரலாறு

மணிமேகலை

ஆபுத்திரன் கதை – பகுதி 1

“மணிமேகலை” என்று சொன்னவுடனே “அமுதசுரபி” என்ற சொல்லும் சிலர் நினவுக்கு வரும்.

“அமுத சுரபி”

நம்மில் பலர் பொதுவாகவும் எளிமையாகவும் புரிந்துகொண்டிருக்கும் வகையில் சொல்லப் போனால்… “அமுத சுரபி” ஒரு பிச்சைப் பாத்திரம். அந்த “அமுத சுரபி”யில் இடப்பட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும்.

அந்தப் பாத்திரத்தில் பிச்சை பெற்று, அதிலிருந்து கிடைத்த உணவைக் கொடுத்துத்தான் மக்களின் பசிப்பிணியைத் தீர்த்தாள் மணிமேகலை.

மணிமேகலை கைக்கு அமுதசுரபி எங்கேயிருந்து வந்தது?

ஆபுத்திரன் என்பவனிடமிருந்து வந்தது. நேரடியாகவா? இல்லை… . சுற்றுவழியில் வந்தது. அந்தச் சுற்றுவழி எது?
தென்மதுரைச் சிந்தாதேவி –> ஆபுத்திரன் –> மணிபல்லவத் தீவில் கோமுகி –> மணிமேகலை

சிந்தாதேவி யார்? ஆபுத்திரன் யார்? கோமுகி என்றால் என்ன? என்று பல கேள்விகள் எழும். பார்க்கலாம்.

ஆபுத்திரன் – அமுதசுரபி

வாராணசியில் வேதம் ஓதுகிற அபஞ்சிகன் என்பவனுக்குச் சாலினி என்று ஒரு மனைவி. சாலினி இல்லறவழி தவறிவிடுகிறாள்; அந்தக் குற்றம் தீர்ப்பதற்காகத் தென் திசையில் உள்ள குமரியில் தீர்த்தமாட வருகிறாள். வழியில் ஆண் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையை ஒரு தோட்டத்தில் போட்டுவிட்டுத் தன் பயணம் தொடர்கிறாள். அழுகின்ற குழந்தையை ஒரு பசு பாதுகாக்கிறது; ஏழு நாட்கள் அருகே இருந்து பாலூட்டிக் காக்கிறது. அப்போது அந்த வழியில் தன் மனைவியோடு போய்க்கொண்டிருந்த பூதி என்ற அந்தணன் அழுகின்ற குழந்தைக் குரல் கேட்டு அங்கே வந்து குழந்தையைக் கண்டு “இவன் பசுவின் மகனில்லை; என் மகன்” என்று அன்போடு சொல்லி எடுத்துக்கொண்டுபோய் வளர்க்கிறான். “பசுவின் மகன்” என்பது “ஆபுத்திரன்.”

பூதியின் மகனாய் வேதம் ஓதி வளரும் சிறுவன் ஆபுத்திரன் ஒரு நாள் ஓர் அந்தணரின் வேள்விச்சாலையில் நுழைகிறான். அங்கே வேள்விக்காகக் கட்டிப்போட்டிருந்த பசுவைப் பார்த்து இரக்கம் கொள்கிறான். அந்தப் பசுவைக் காப்பாற்றவேண்டி, யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்து இரவில் கடத்திக்கொண்டு செல்கிறான். பசுவைக் காணமல் தேடிப் போன அந்தணர்கள் பசுவைக் கடத்திச் சென்ற சிறுவனைக் “கையும் களவுமாக”ப் பிடித்துவிடுகிறார்கள். ஆபுத்திரனை அலைக்கோலால் அறைந்து …

“புலை-ச்-சிறுமகனே போக்கப்படுதி” என்று வெருட்டுகிறார்கள்.

சிறுவனை நையப்புடைத்த வேத வாத்தியாரை அந்தப் பசு முட்டி, அவர் குடலைக் கிழித்துவிட்டுக் காட்டுக்குள் ஓடிவிடிகிறது.

ஆபுத்திரன் சொல்கிறான்:

“நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின்
விடு நில மருங்கின் படு புல் ஆர்ந்து
நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம்
பிறந்த நாள் தொட்டும் சிறந்த தன் தீம்பால்
அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும்
இதனொடு வந்த செற்றம் என்னை”

[“நொந்து போக வைக்கும் செயல்களைச் செய்யாதீர்கள். நான் சொல்வதைக் கேளுங்கள். தன்னை விட்ட நிலத்தில் விளைந்து கிடக்கும் புல்லைத் தின்று, பரந்த உலகில் உள்ள மக்களுக்கெல்லாம் பிறந்த நாள் முதல் தன் பாலைக் கொடுத்துக் காக்கும் இந்தப் பசுவின் மேல் உங்களுக்கு என்ன கோபம்?”]

அந்தணர்களுக்கும் ஆபுத்திரனுக்கும் இடையே மிக நல்ல வாக்குவாதம் நடக்கிறது. அந்த வாக்குவாதம் ஆபுத்திரன் பிறப்புப் பற்றி அந்த அந்தணர்கள் ஏசுவதாகவும் அதற்கு ஈடாக ஆபுத்திரன் பல முனிவர்களின் பிறப்புப் பற்றிச் சாடுவதாகவும் அமைகிறது.

அந்தணர்:

“பொன் அணி நேமி வலம் கொள் சக்கரக்கை
மன்னுயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய
அருமறை நன்னூல் அறியாது இகழ்ந்தனை …
… … நீ அவ்-
ஆ மகன் ஆதற்கு ஒத்தனை; அறியா
நீ மகன் அல்லாய்”

[“சக்கரத்தை வலக்கையில் தாங்கி மன்னுயிர் காக்கும் முதல்வனின் [திருமாலின்] மகன் [பிரமன்] எமக்கு அருளிய அருமையான நல்ல மறை நூலைத் தெரிந்துகொள்ளாமல் எங்களைப் பழிக்கிறாய். உனக்கு அறிவுக்குழப்பம். நீ அந்தப் பசுவின் மகன் என்பது பொருத்தமே. நீ ஒரு மகன் இல்லை.”]

ஆபுத்திரன் பல முனிவர்களின் பெயர்களை அடுக்குகிறான்.

“ஆ மகன் அசலன்; மான் மகன் சிருங்கி
புலி மகன் விரிஞ்சி; புரையோர் போற்றும்
நரி மகன் அல்லனோ கேச கம்பளன்
ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று
ஓங்குயர் பெரும் சிறப்பு உரைத்தலும் உண்டால்
ஆவொடு வந்த அழி குலம் உண்டோ?”

“அந்த ஒவ்வொரு முனிவனின் பிறப்பிலும் ஒரு விலங்கிற்குப் பங்கு உண்டு, அப்படி இருக்கையில் பசுவிற்கு மகனாகிய எனக்கு என்ன குறை?” என்பது அவன் கேள்வி.

அப்போது ஓர் அந்தணன் ஆபுத்திரனின் தாய் சாலி பற்றிச் சொல்கிறான் — அவள் இல்லற வழியில் தவறியவள்; அப்படிப் பிறந்தவன் ஆபுத்திரன் என்று. ஆபுத்திரன் சிரிக்கிறான். பிறகு கேட்கிறான்: “திலோத்தமைக்கும் பிரமனுக்கும் பிறந்தவர்கள் வசிட்டர், அகத்தியர் என்ற இருவரும். அது பொய்யா? அப்படியிருக்க, சாலி மேல் என்ன தவறு?”

“மா மறை மாக்கள் வரு குலம் கேண்மோ
முது மறை முதல்வன் முன் முன்னர்த் தோன்றிய
கடவுள் கணிகை காதலம் சிறுவர்
அருமறை முதல்வர் அந்தணர் இருவரும்
புரி நூல் மார்பீர் பொய் உரை ஆமோ
சாலிக்கு உண்டோ தவறு?”

இந்த உரையாடல் கேட்டு வருந்திய பூதி “ஒதும் அந்தணர்க்கு இவன் ஒத்துவராதவன்” என்று சொல்லி அவனை வீட்டைவிட்டு விரட்டிவிடுகிறான்.

ஆபுத்திரன் பிச்சை எடுக்கிறான். “பசுவைத் திருடின கள்வன்” என்று சொல்லி ஆபுத்திரனுக்கு யாரும் நல்ல பிச்சை இடாமல் அவனுடைய பிச்சைப்பாத்திரத்தில் கல்லைப் போடுகிறார்கள்.

மனம் நொந்த ஆபுத்திரன் தென்மதுரைக்கு வருகிறான். சிந்தாதேவியின் கோயிலின்முன் இருந்த அம்பலத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்டு, ஊரில் வாங்கிய பிச்சையைப் பிறருடன் பகிர்ந்து காலம் கழிக்கிறான். ஒரு நள்ளிரவில் சிலர் அங்கே வந்து ஆபுத்திரனிடம் தங்கள் பசிக்கு உணவு கேட்கிறார்கள். அப்படிக் கேட்டவர்களின் பசித்துன்பத்தைப் போக்கமுடியாமல் ஆபுத்திரன் தவிக்கிறான். நள்ளிரவில் பிச்சைக்கு எங்கே போவது? அப்போதுதான் சிந்தாதேவி தோன்றி அவனுக்குத் தன் கையிலிருந்த பாத்திரத்தை [“அமுதசுரபி”யைக்] அவனுக்குக் கொடுக்கிறாள். “நாடு முழுவதும் வறுமை அடைந்தாலும் இந்த ஓடு வறுமை அடையாது” என்று உறுதியும் சொல்கிறாள்.

“கேள் இது … கெடுக நின் தீது என
யாவரும் ஏத்தும் இருங்கலை நியமத்துத்
தேவி சிந்தா விளக்குத் தோன்றி
ஏடா! அழியல்! எழுந்து இது கொள்ளாய்
நாடு வறம் கூரினும் இவ்-ஓடு வறம் கூராது
வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது
தான் தொலைவு இல்லாத் தகைமையது”

ஆபுத்திரன் அவளை வாழ்த்தி வேண்டுகிறான்:

“சிந்தா தேவி! செழுங்கலை நியமத்து
நந்தா விளக்கே! நாமிசை-ப்-பாவாய்!
வானோர் தலவி! மண்ணோர் முதல்வி!
ஏனோர் உற்ற இடர் களைவாய்!”

அது முதல் அந்த ஓட்டில் பிச்சை எடுத்து மக்கள், விலங்கு, பறவை என்று எல்லார்க்கும் உணவளிக்கிறான் ஆபுத்திரன்.

ஆபுத்திரனின் இந்த நல்ல செய்கை தேவேந்திரனுக்கு நடுக்கம் தருகிறது. இந்திரன் ஆபுத்திரன் முன்னர் வருகிறான். “உன் புண்ணியச் செயலுக்கு வரம்கொடுக்க வந்தேன். என்ன வரம் வேண்டும்?” என்று கேட்கிறான்.

இந்திரனை எள்ளி நகையாடுகிறாண் ஆபுத்திரன்:

“ஈண்டுச் செய்வினை ஆண்டு நுகர்ந்திருத்தல்
காண் தகு சிறப்பின் நும் கடவுளர் அல்லது
அறம் செய் மாக்கள், புறம் காத்து ஓம்புநர்
நல் தவம் செய்வோர், பற்று அற முயல்வோர்
யாவரும் இல்லாத் தேவர் நன்னாட்டுக்கு
இறைவனாகிய பெரு விறல் வேந்தே!”

[“இந்த உலகத்தில் செய்யும் நல்ல செயல்களின் பயனைத் தானே உங்கள் கடவுள்கள் அந்த உலகத்தில் நுகர்கிறார்கள்! அது தவிர, அறம் செய்பவர்களோ, பிறரைப் பாதுகாப்பவர்களோ, நல்ல தவம் செய்பவர்களோ, பற்றை அறுப்பதற்காக முயல்பவர்களோ, … இப்படி யாரும் இல்லாத நல்ல ஒரு நாட்டுக்குத் தலவனே!”]

“வருந்தி வந்தோர் அரும் பசி களைந்து அவர்
திருந்து முகம் காட்டும் என் தெய்வக் கடிஞை;
உண்டி கொல்லோ உடுப்பன கொல்லோ
பெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ
யாவை ஈங்கு அளிப்பன தேவர் கோன்?”

[“பசி வாட்டுகிறது என்று வருந்தி வந்தவருடைய பசியைப் போக்கி, அவருடைய திருந்திய முகத்தைக் காட்டக் கூடிய தெய்வத் தன்மை பொருந்தியது என் பாத்திரம். தேவர் தலைவனாகிய நீர் இங்கே தருவது என்ன? உணவா? உடுப்பவையா? பெண்டிரா? பிறரைப் பாதுகாப்பவரா?”]

தொடர்ந்து “பசி தீர்ந்த மக்களின் இனிய முகத்தைக் காணச் செய்யும் இந்தப் பாத்திரம் ஒன்றே எனக்குப் போதும்” என்று சொல்லி ஆபுத்திரன் இந்திரனை விரட்டிவிடுகிறான்.

காட்டம் கொண்ட இந்திரன் 12 ஆண்டுகளாக மழையில்லாமல் வருந்திய பாண்டிய நாட்டில் வறுமை நீங்கும் வண்ணம் மழை பெய்யவைத்துச் செல்வம் பெருக்கி, ஆபுத்திரனுடைய உதவி யாருக்குமே தேவையில்லாதபடிச் செய்துவிடுகிறான். செல்வக்களிப்பால் யாருக்கும் ஆபுத்திரனுடைய பாத்திரத்திலிருந்து கிடைக்கும் உணவு தேவையில்லாமல் போகிறது; ஆபுத்திரன் மிகவும் வருந்துகிறான்.

அப்போது சாவக நாட்டிலிருந்து வந்த சில வணிகர்கள் சாவக நாட்டில் வறுமையால் மக்கள் பசிப்பிணியால் இறந்ததுபற்றிச் சொல்கிறார்கள். அதைக் கேட்ட ஆபுத்திரன் சாவக நாட்டுக்குச் செல்ல நினைத்துக் கப்பலேறுகிறான். அந்தக் கப்பல் மணிபல்லவத்தீவில் ஒரு நாள் தங்குகிறது. ஆபுத்திரன் அத்தீவில் இறங்குகிறான். தொடர்ந்த பயணத்துக்காக ஆபுத்திரன் ஏறாமலே கப்பல் புறப்பட்டுப் போய்விடுகிறது.

ஆபுத்திரன் மணிபல்லவத்தீவில் தனித்து விடப்படுகிறான். “யாருமில்லாத தீவில், பலருக்கும் உணவளிக்க வேண்டிய இந்தப் பாத்திரத்தினால் எனக்கு என்ன பயன்?” என்று வருந்துகிறான். அங்கே இருந்த கோமுகிப் பொய்கையில், “மிகவும் கருணையோடு தருமம் செய்வதையே மேற்கொண்டு எல்லா உயிர்களையும் பாதுகாப்பவர் யாராவது வந்தால் அவர் கைக்குக் கிடைப்பாய்” என்று சொல்லி அந்தப் பாத்திரத்தைப் போட்டு …

“ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று என விடுவோன்
அருள் அறம் பூண்டு ஆங்கு ஆருயிர் ஓம்புநர்
உளர் எனில் அவர்கைப் புகுவாய்”

என்று விதிக்கிறான்.

பிறகு உண்ணாநோன்பு இருந்து உயிர்விடுகிறான்.

ஆபுத்திரன் கோமுகிப் பொய்கையில் விட்ட அந்தப் பாத்திரம்தான் பின்னர் ஒரு நல்ல நாளில் [கௌதம புத்தன் பிறந்த வைசாக பௌர்ணமி நாளில்] மணிமேகலை கைக்குக் கிடைத்தது.

மிகச் சுருக்கமாக … அமுதசுரபியின் வரலாறு

அமுதசுரபி … தென்மதுரைச் சிந்தாதேவி கையிலிருந்து ஆபுத்திரனுக்குப் போனது; ஆபுத்திரன் கையிலிருந்து மணிபல்லவத் தீவில் இருந்த கோமுகிப் பொய்கையில் விடப்பட்டது; பிறகு அது மணிமேகலை கையில் புகுந்தது.

அன்புடன்,
ராஜம்

Ksubashini 20:28, 6 டிசம்பர் 2010 (UTC)


 

காப்பியக் கதைகள்: ஆபுத்திரன் – பகுதி 2

பேராசிரியர் க. பூரணச்சந்திரன்

Oct 22, 2016

புண்ணியராஜன் சாவக நாட்டில் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தபோதுதான் சோழநாட்டில் பூம்புகார் நகரில் கோவலனுக்கும் மாதவிக்கும் மகளாக மணிமேகலை பிறந்து வளர்ந்து வந்தாள். தன் தந்தை கோவலன் மதுரையில் பாண்டிய அரசனால் கொலையுண்ட செய்தி கேட்டு அவள் வருந்திக் கொண்டே இருந்ததை மாற்ற நினைத்த அவளுடைய தாய் மாதவி, ஒரு நாள் அவளை ஒரு மாறுதலுக்காக வெளியே அனுப்ப நினைத்தாள். “நீ தொடுக்கும் பூமாலை உன் கண்ணீரால் நனைந்து பூசைக்கு ஆகாததாயிற்று. ஆகவே நீ சோலை சென்று புதுமலர் பறித்துக் கொண்டுவா” என்று அவளை அனுப்பினாள். மணிமேகலை, தன் தோழி சுதமதியோடு பூப்பறிப்பதற்காக உபவனம் என்ற சோலைக்குச் சென்றாள்.

முன்னரே மணிமேகலையை விரும்பியிருந்த அந்நகரத்தரசன் கிள்ளி வளவனுடைய மகன் உதயகுமரன் என்பவன் இதைத் தன் தோழர் மூலமாக அறிந்தான். மணிமேகலையைச் சோலையில் வலிந்து கொண்டுசென்று விடலாம் என்ற எண்ணத்தோடு தேரில் ஏறிவந்தான். சோலையில் அவன் புகுந்ததைக் கண்ட சுதமதி, மணிமேகலையை அங்கிருந்த ஒரு பளிங்கு அறையில் புகச்செய்தாள். (பளிங்கறை என்பது இக்காலத்திலுள்ள கண்ணாடி பதித்த குளிர்சாதன அறையை நமது நினைவுக்குக் கொண்டுவருகிறது. அதற்குள் இருப்பவரை வெளியிலிருந்து பார்க்கமுடியும். ஆனால் அவர்கள் பேசுவதைக் கேட்க முடியாது.) வெளியிலிருந்த சுதமதி, உதயகுமரனுக்குப் பலவிதமான நீதிகளையும் கூறி அவனைத் தடுத்தாள். ஆனால் அவள் நல்லுரைகள் உதயகுமரன் மனத்தில் ஏறவில்லை. “நான் இவள் பாட்டி சித்திராபதி மூலமாக இவளை அடைவேன்” என்று கூறியவாறு அவன் சென்று விட்டான்.

உதயகுமரன் சென்றதும் மணிமேகலை, பளிங்கறையிலிருந்து வெளிவந்து சுதமதியோடு உரையாடிக் கொண்டிருந்தபோது அங்கு மணிமேகலா தெய்வம் வந்தது. (இந்தத் தெய்வம், கோவலனின் குலதெய்வம். இதன் பெயரைத்தான் மணிமேகலை பிறந்தபோது அவளுக்குக் கோவலன் இட்டான்.) தன்னிடம் பக்தி பூண்டிருந்த கோவலனின் மகளைக் காக்கவேண்டும், அவள் மனம் உலகியலில் ஈடுபடலாகாது, உதயகுமரனிடம் சென்றுவிடலாகாது என்று அத் தெய்வம் கருதியது. எனவே ஒரு பெண் உருவத்தில் அவர்களிடம் வந்தது. அவர்களை நோக்கி, “நீங்கள் இங்கிருந்தால் உதயகுமரனால் உங்களுக்குத் துன்பம் உண்டாகும், ஆகையால், முனிவர்கள் வசிக்கும் சக்ரவாளக் கோட்டத்திற்குச் செல்லுங்கள்” என்று கூறியது. அங்குச் சென்ற மணிமேகலையும் சுதமதியும் பொழுது சாயவே உறங்கலாயினர். மணிமேகலா தெய்வம், அப்போது மணிமேகலையை மட்டும் மயங்குமாறு செய்து அவளை எடுத்துக்கொண்டு ஆகாயவழியில் தெற்கில் முப்பது யோசனை தூரம் சென்றது. அங்கே மணிபல்லவம் என்னும் தீவில் அவளை விட்டுவிட்டுத் திரும்பியது. சுதமதியிடம் வந்து, மணிமேகலையைத் தான் மணிபல்லவத் தீவில் விட்டதைக் கூறி, “கவலைப்படாதே, மணிமேகலை பூர்வஜென்ம நிகழ்ச்சிகளை அறிந்துகொண்டு, ஏழாம் நாள் திரும்பி வருவாள்” என்று சொல்லிச் சென்றது. சுதமதியும் மாதவியிடம் சென்று நிகழ்ந்ததைக் கூறவும், இருவரும் மணிமேகலையின் நினைவாகக் காத்திருக்கலானார்கள்.

உறக்கம் நீங்கி எழுந்த மணிமேகலை, தான் இருக்கும் இடமும் தோற்றமும் வேறாக இருக்கக் கண்டாள். எனவே மனத்தில் திகைப்புடன் அந்தத் தீவில் எங்கேனும் சுதமதி இருப்பாளோ என்று கருதி, அவளைத் தேடி அலைந்தும், காணாமல் வருந்தி, தன் தந்தை கோவலனின் நினைவாகப் புலம்புபவள் ஆயினாள். அப்போது அவள் கண்முன்பு புத்த பீடிகை (புத்தரின் பாதப்பதிவுகள் கொண்ட பீடம்) ஒன்று தோன்றியது. அது முன்பு இந்திரனால் இடப்பட்டது. பழம்பிறப்பை உணர்த்துகின்ற தன்மை உடையது. இதைக் கண்ட மணிமேகலை விம்மிதம் எய்தி, கைகளைத் தலைமேல் குவித்து, அதை மும்முறை வலம் வந்து தொழுதாள். அதனால் அவளுக்குத் தனது முற்பிறவி நிகழ்ச்சிகள் தோன்றின. தன்னை மணிமேகலா தெய்வம் அங்குக் கொண்டு வந்ததையும் அறிந்துகொண்டாள். அதனால் அந்த தெய்வம் மறுபடியும் தன்னிடம் வரும் என்று காத்திருந்தாள்.

மணிமேகலை தன் முற்பிறவி வரலாற்றை அறிந்ததனால் பக்குவ நிலை பெற்றிருப்பதை அறிந்த மணிமேகலா தெய்வம் அவளிடம் வந்தது. முற்பிறவியில் அவளுடைய கணவனாக இருந்த ராகுலன் என்பவனே இப்போது உதயகுமரனாகப் பிறந்திருக்கிறான் என்பதைச் சொல்லிவிட்டு, மணிமேகலை, ஆகாய வழியில் பறந்து செல்லவும், உணவின்றியே உயிர்வாழவும், எந்த உருவத்தையும் எடுத்துக் கொள்ளவும் ஆகிய மூன்று வரங்களை அவளுக்கு அளித்துவிட்டுச் சென்றுவிட்டது.

அப்போது அத்தீவில் ஒரு பெண் மணிமேகலையின் எதிரில் வந்தாள். “மிகுந்த துயரத்தோடு இத்தீவில் திரிந்துகொண்டிருக்கும் நீ யார்?” என்று கேட்டாள். மணிமேகலை, தன்  முற்பிறவி, இப்பிறவி வரலாறுகளைக் கூறிவிட்டு, “நீ யார்?” என்று அவளைக் கேட்டாள். “இத்தீவின் அருகில் ரத்தினத் தீவு என ஒன்று இருக்கிறது. அதில் சமந்த கூட மலை என்ற உயர்ந்த மலை ஒன்றிருக்கிறது. அதன் உச்சியில் உள்ள புத்த தேவனின் பாதங்களை தரிசித்து விட்டு இத்தீவுக்கு முன்ஒரு காலத்தில் நான் வந்தேன். அது முதல் இந்திரனின் கட்டளையினால் இங்குள்ள புத்த பீடிகையைக் காத்துவருகிறேன். என் பெயர் தீவதிலகை” என்று அவள் கூறினாள். பிறகு மணிமேகலையை நோக்கி, “இந்த புத்தபீடிகைக்கு முன்னே குவளை மலர்களும் நெய்தல் மலர்களும் மிகுந்த கோமுகி என்னும் பொய்கை இருக்கிறது. அப்பொய்கைக்குள் அமுதசுரபி என்னும் அட்சய பாத்திரம் ஒன்று அமிழ்ந்து கிடக்கிறது. அது ஒவ்வொரு ஆண்டும், புத்தருடைய பிறந்த நாளாகிய வைகாசிப் பௌர்ணமி அன்று  மட்டும் மேல் எழுந்து வரும். இன்று புத்த பூர்ணிமை நாள். அது தோன்றுகின்ற வேளையும் இதுவே. இப்போது அப்பாத்திரம் உன் கைக்கு வரும். அதில் எடுக்கும் உணவு அள்ள அள்ளக் குறையாமல் வந்தவாறிருக்கும், அதன் வரலாற்றைப் பின்னர் அறவண அடிகளிடம் கேட்டறிவாயாக” என்று கூறினாள். அதன்படியே மணிமேகலை அப்பொய்கையை வலம் வர, அட்சய பாத்திரம் அவள் கையில் வந்து சேர்ந்தது. அதைக் கண்ட தீவதிலகை, மணிமேகலையிடம், பசித் துயரத்தின் கொடுமையை எடுத்துரைத்து,

ஆற்றுநர்க்கு அளிப்போர், அறவிலை பகர்வோர்,
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை.

மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

என்று பசியை ஆற்றுபவர்களின் சிறப்பையும் எடுத்துரைத்தாள்.

இதன்பின் மணிமேகலை சிறிதுநேரம் தீவதிலகையோடு அளவளாவி யிருந்து, பிறகு அவளைப் பணிந்து விடைபெற்றாள். ஆகாயவழிச் செல்லும் மந்திரத்தை உச்சரித்து, பறந்துசென்று புகார் நகரத்தை அடைந்தாள். தன் வருகையை எதிர்பார்த்திருந்த மாதவி, சுதமதி ஆகியோர் முன்னிலையில் சென்று தோன்றினாள். தனது முற்பிறப்புக் கதையை அவர்களுக்குக் கூறி, கையிலிருந்த அட்சய பாத்திரத்தையும் காட்டி, “இது ஆபுத்திரனின் திருக்கரத்தில் இருந்த அமுதசுரபி. இதை வணங்குங்கள்” என்று கூறி வணங்கச் செய்தாள். பின்னர் தவவழியை மேற்கொள்ளும் பொருட்டு, அறவண அடிகளை அடைந்தாள். தனக்கு தர்ம உபதேசம் புரிந்து, ஆபுத்திரன் வரலாற்றையும் கூறவேண்டும் என்று கேட்டாள். அவர், ஆபுத்திரன் வரலாற்றை அவளுக்குக் கூறிவிட்டு, “சிலநாட்கள் கழித்து உனக்கு தர்மோபதேசம் அளிக்கிறேன், அதுவரை நீ இந்த அமுதசுரபியைக் கொண்டு இங்கு பசிப்பிணியை நீக்குவாயாக” என்று உரைத்தார்.

அதன்பின் மணிமேகலை, புகார் நகரத்திலிருந்த ஆதிரை என்னும் கற்புடைய மங்கையின் கையால் அட்சய பாத்திரத்தில் முதன்முதலில் பிச்சைபெற்று, அதிலிருந்து வளரும் உணவினைக் கொண்டு பசித்துவந்தோர் பசியைப் போக்கிவரலானாள். காயசண்டிகை என்னும் வித்தியாதர மங்கையின் யானைத்தீ (பஸ்மக நோய்) எனப்படும் தீராப் பசிநோயையும்  தீர்த்தாள். பிறகு பல விசேட நிகழ்ச்சிகள் அவள் வாழ்க்கையில் நடந்தேறின.

பின்னர் அவள் அறவண அடிகளிடம் விடைபெற்று, ஆகாய வழியே சென்று சாவக நாட்டில் ஒரு நகர்ப்புறத்தில் ஒரு சோலையில் இருந்தாள். அங்கிருந்தோரிடம், அது நாகபுரம் என்னும் நகரத்தின் புறத்திலிருந்த சோலை என்றும், அதை ஆள்பவன் புண்ணிய ராஜன் என்றும் அறிந்து இருந்தாள். “புண்ணிய ராஜன் பிறந்த நாளாக, இந்நாட்டில் மழைவளம் பிழைத்ததில்லை. பூமியும் மரமும் தங்கள் பலன்களைத் தக்கவாறு அளிக்கின்றன. உயிர்கள் நோயின்றிச் சுகமாக வாழ்ந்து வருகின்றன” என்று மேலும் அந்த அரசனின் பெருமைகளைக் கூறினர். அச்சமயம், புண்ணிய ராஜன், தன் தேவியோடு அந்தச் சோலைக்கு வந்தான். அங்கே தர்ம சாவகன் என்ற முனிவனிடம் தர்மோபதேசம் கேட்டு, அவனருகிலிருந்த மணிமேகலையைப் பற்றி வினவினான்.

அப்போது  அருகிலிருந்த அமைச்சன், “முன்னொரு காலத்தில் கிள்ளிவளவன் என்னும் அரசனோடு  நட்புக்கொள்ள அறவண அடிகள் காவிரிப்பூம்பட்டினம் சென்றார். அவர் திரும்பியபோது இப்பெண்ணின் வரலாற்றை விளக்கி உரைத்தார் என்று முன்னரே உங்களுக்குக் கூறியிருக்கிறேன், அந்தப் பெண்ணே இவள்” என்று கூறினான்.

உடனே மணிமேகலை, “அரசே, முற்பிறப்பில் உன் கையிலிருந்த அட்சய பாத்திரம்தான் இப்பிறப்பில் என்னிடம் வந்து சேர்ந்தது. நீ இப்போது முற்பிறப்பை அறியாமையினால் தடுமாறுகின்றாய். மணிபல்லவம் சென்று அங்குள்ள புத்தபீடிகையைத் தொழுதால் உன் முற்பிறப்பை அறியலாம். உடனே வருவாயாக” என்று சொல்லிவிட்டு, தான் மட்டும் ஆகாய மார்க்கமாக முன்னதாக மணிபல்லவத்திற்குச் சென்றுவிட்டாள்.

புண்ணிய ராஜன், அரண்மனைக்குச் சென்று தன்னை வளர்த்த தாயாகிய அமர சுந்தரி என்பாளிடம் தன் வரலாற்றைக் கேட்டான். அவள் அவன் பிறப்பு வரலாற்றைக் கூற, அவன் வருத்தமடைந்து, அரசாட்சியில் வெறுப்புக் கொண்டு தான் துறவு எய்தி, மணிபல்லவம் செல்லவேண்டும் என்ற ஆசையை வெளியிட்டான்.

அதைக் கேட்ட ஜனமித்ரன் என்ற மந்திரி, “அரசே! வாழ்க! என் சொற்களைக் கேட்டருள வேண்டும். உன்னை நமது முன்னாள் அரசர் பெறுவதற்கு முன்பு இந்நாட்டில் பன்னிரண்டு ஆண்டுகள் மழைபெய்யாமல் பஞ்சமாக இருந்தது. அப்போதுதான் நீ கோடைகாலத்தில் மழைபெய்தாற்போல இங்கே தோன்றினாய். நீ தோன்றியபின் இந்நாட்டில் எல்லா வளங்களும் நிரம்பின. அதிலிருந்து இன்றுவரை எல்லாவகைச் சுகங்களோடும் இந்நாட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நீ இப்போது நீங்குவாயானால் எல்லா உயிர்களும் தாயைப் பிரிந்த கன்றுகளைப் போல் வருந்தும். நீ உன் நலம் ஒன்றை மட்டுமே கருதி நாட்டைவிட்டுப் பிரிவது நன்றல்ல” என்று கூறினான். புண்ணிய ராஜன், “மணிபல்லவத்திற்குச் சென்று புத்தபீடிகையை வணங்க வேண்டும் என்ற ஆவல் கரைகடந்து என் உள்ளத்தில் எழுகிறது. ஆகவே அங்கு நான் சென்று திரும்பிவரும் காலம்வரை நீ எனது சார்பாக இந்நாட்டைப் பாதுகாப்பாயாக” என்று கூறிக் கப்பலேறிச் சென்று மணிபல்லவத்தையும் அடைந்தான்.

அங்கு மணிமேகலை அவனுக்கு புத்தபீடிகையைக் காட்ட, அவன் அதனை வலம் வந்து துதித்துத் தன் முற்பிறவி வரலாற்றை அறிந்தான். தனக்கு அமுதசுரபியை அளித்த சிந்தாதேவியைத் துதித்தான். பிறகு அங்கிருந்து சென்று ஒரு புன்னை மர நிழலில் இருந்தான். அப்போது அத்தீவின் காவல் தெய்வமான தீவதிலகை, ஆபுத்திரனிடம் வந்தாள். “அக்காலத்தில், இத்தீவில், உன்னைத் தனியே விட்டுவிட்டுக் கப்பல் ஏறிச்சென்ற ஒன்பது செட்டிமார், பின்பு உன்னைக் காணாமல் இத்தீவுக்கு வந்தார்கள். நீ இறந்து போன வரலாற்றை அறிந்து, அவர்களும் உண்ணாவிரதம் இருந்து இறந்துபோனார்கள். அவர்களுடைய உடல் எலும்புகள் இவை. அவர்களுடன் வந்தவர்கள் சிலரும் பிரிவாற்றாமையால் உயிர்துறந்தார்கள். இவை அவர்களுடடைய எலும்புகள். இதோ இந்தப் புன்னைமர நிழலில்தான் உனது எலும்புகளும் புதையுண்டிருக்கின்றன. இவ்வாறு, உன் உயிரையும் போக்கிக் கொண்டு, உனக்கு இரங்கிய பிறஉயிர்களையும் கொலைக்கு ஆளாக்கிய நீ அல்லவா இப்போது புண்ணிய ராஜன் எனச் சாவக நாட்டை ஆளுகின்றாய். இது என்ன வியப்பு!” என்று கூறினாள்.

இவற்றைக் கண்ட புண்ணிய ராஜன் ஆச்சரியமும் துக்கமும் கொண்டு மயங்கி நின்றான். தீவதிலகை, பின்னர் மணிமேகலையை நோக்கிக் கூறலாயினாள். “மணிமேகலையே! உனது பிறப்பிடமாகிய பூம்புகாரைக் கடல் கொண்டது. சில நாட்களுக்கு முன்னர் காவிரிப்பூம்பட்டினத்து அரசனான கிள்ளிவளவன், நாகநாட்டரசன் வளைவணன் என்பவனின் மகளாகிய பீலிவளையைக் காதலித்துக் கந்தர்வ மணம் புரிந்துகொண்டான். ஒரு நாள் பீலிவளை, அரசனிடம் சொல்லாமல் தன்னிடத்திற்குச் சென்றுவிட்டாள். அரசன் வருந்தி அவளை எங்குத் தேடியும் காணாமல் திகைத்திருந்தான். அப்போது முக்காலமும் உணர்ந்த சாரணன் ஒருவன் அங்கு வர, அவனைக் கண்டு வினவினான். அவன், ‘பீலிவளை இனி உன்னிடம் வரமாட்டாள். உனக்கு அவள் வயிற்றில் பிறக்கும் மகன்தான் உன்னிடம் வருவான். ஆகவே நீ  இது பற்றி வருந்தாதே’ என்று கூறினான்.

அரசனைப் பிரிந்த பீலிவளை, ஓர் ஆண் மகவைப் பெற்றாள். அக்குழந்தையோடு சில நாட்களுக்கு முன் இத்தீவுக்கு வந்தாள். புத்தபீடிகை யை வலம் வந்து தொழுதுகொண்டிருக்கும்போது, கம்பளச் செட்டி என்னும் வணிகனின் கப்பல் இந்தத் தீவுக்கு வந்தது. பீலிவளை அவனிடம் சென்று, குழந்தையைக் கொடுத்து, “இவன் சோழ அரசனின் மகன். இவனை அரசனிடம் சேர்ப்பது உன் கடமை” என்று கூறினாள். அவன் மகிழ்ச்சியுடன் அக்கடமையை ஏற்றுக்கொண்டான். பிறகு அவன் கப்பலைச் செலுத்திக் கொண்டு சோழநாட்டை நோக்கி வரும் வேளையில், இடைவழியில் கப்பல் உடைந்து போயிற்று. பலர் மாண்டு போயினர். தப்பிப் பிழைத்த சிலர் காவிரிப் பூம்பட்டினம் வந்து, குழந்தையைப் பீலிவளை செட்டியிடம் ஒப்படைத்ததையும் கப்பல் உடைந்த விஷயத்தையும் கூறினர். அரசன் மிக வருத்தமடைந்து கடற்கரை ஓரமெல்லாம் ஓடித் தேடித் திரிந்துகொண்டிருந்தான்.

அதனால் இந்திரவிழா எடுக்க வேண்டிய காலத்தில் எடுக்காமல் தவறிப்போயிற்று. இதனால் மணிமேகலா தெய்வத்தின் சாபத்தினால், கடல் பொங்கிவந்து புகார்நகரத்தை அழித்தது. அரசன் முதலானோர் வேறிடம் சென்றனர். உன் தாயும் தோழியும் அறவண அடிகளோடு வஞ்சி நகரத்திற்குச் சென்றிருக்கிறார்கள். ஆகவே நீ வஞ்சிமா நகரம் செல்வாயாக” என்று கூறினாள். அதன்படியே மணிமேகலையும் வஞ்சிமாநகரம் சென்று அங்கு அறவண அடிகளைக் கண்டு, அறவுரை பெற்று, அங்கிருந்த பல மதத்தினரையும் தன் வாதத்திறமையால் வெற்றிகொண்டு வாழ்ந்திருந்தாள்.

ஏறத்தாழ இங்குச் சொல்லப்பட்ட ஆபுத்திரன் கதை, மணிமேகலைக் காப்பியக் கதையையும் உள்ளடக்கியிருக்கிறது. இதில் வருகின்ற மீயியற்கைச் செய்திகளை விட்டு விட்டாலும் நமக்குச் சில செய்திகள் தெளிவாகின்றன.

அக்காலத்தில் அரசர்களை (அல்லது தெய்வங்களை) மட்டுமே காப்பியத் தலைவர்களாகக் கொண்டு காப்பியம் படைப்பது வழக்கம். அறிஞர்கள் எல்லாருமே மணிமேகலை என்ற பெண்ணை, அதுவும் கணிகை குலப்பெண்ணைச் சீத்தலைச் சாத்தனார் தலைவியாகக் கொண்டு காப்பியம் வரைந்த புரட்சியைப் பாராட்டியுள்ளனர். அது மட்டுமன்று. அந்தக் காலத்திலேயே சிறைச்சாலையில் உள்ளவர்களுக்கும் பசியாற உணவு தந்து அதை அறச்சாலையாக மாற்றலாம் என்று சிந்தித்தவர் சீத்தலைச் சாத்தனார்தான்.

மணிமேகலை வாழ்ந்த காலத்தில்தான், சோழன் கிள்ளிவளவன் காலத்தில்தான் பூம்புகார் நகரம் கடற்கோளால் அழிந்தது என்பது. சிலப்பதிகாரக் காப்பியத்தில் பெருமையுடன் விளங்கிய இந்த நகரம், மணிமேகலைக் காப்பியக் காலத்தில் அழிந்துவிட்ட செய்தியைக் கேள்விப் படுகிறோம்.

கிள்ளிவளவன், பீலிவளை என்னும் நாகநாட்டரசியைச் சேர்ந்து ஓர் ஆண்குழந்தையைப் பெற்றான் என்ற செய்தி. இந்தக் குழந்தைதான் பின்னர் தொண்டைமானாக (பல்லவ அரசனாக)த் தொண்டை மண்டலத்தை ஆளலாயிற்று என்பது செய்தி. தொண்டைமான் அல்லது பல்லவன் என்ற பெயருக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.

பௌத்த மதம் பசிப்பிணியைத்  தீர்ப்பதில் காட்டிய அக்கறை. சீத்தலைச் சாத்தனார் உலகத்தின் பெரும்பான்மைத் துன்பங்களுக்குக் காரணம், பசி என்பதை உணர்ந்தார் ஆகவே ஏழைபாழைகளுக்கு எவ்விதமேனும் உதவ வேண்டும் என்றும் கருதினார். ஆனால் அக்காலத்தின் போக்குப்படி அவரால் அட்சய பாத்திரம் என்ற ஒன்றைக் கற்பனை செய்து அதன் வாயிலாக ஏழைகள் யாவருக்கும் சோறிட்டு அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் சிந்திக்கமுடிந்தது. ‘உடோபியா’ போன்ற ஒரு கற்பனைத் தீர்வுதான் இது. ஆனால் இந்த அளவுகூட இந்தியாவில் வேறெந்த மொழிக் கவிஞனும் ஏழைகளின் நிலையைப் பற்றி எண்ணவும் இல்லை, அதற்கு ஒரு தீர்வுகாண வேண்டும் என்று கருதவும் இல்லை. அவர்கள் எல்லாம் அரசர்களைப் புகழ்ந்துபாடிப் பரிசு வாங்கிக் கொண்டு (உதாரணத்திற்கு, காளிதாசனைப் போல) பெருஞ்செல்வத்தோடு அரசவைகளில் மிகச் சுகமாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இந்த வகையில் சீத்தலைச் சாத்தனாரின் தனி மாண்பு போற்றத்தக்கதாகிறது.

பொதுவாக இந்தக் காப்பியத்தில் பிராமணர்களின் இழிகுணங்களும், யாகங்களும் வெறுக்கப்படுகின்றன. செட்டியார்கள் காப்பியம் முழுவதும் முக்கியத்துவம் பெறுகின்றனர். முக்கியமாக, மணிமேகலை அட்சய பாத்திரத்தில் முதன்முதல் உணவு பெறுவது ஆதிரை என்ற கற்புக்கரசியிடத்திலிருந்து. கடல்கடந்து வணிகம் செய்வதற்காகச் சென்ற ஒரு செட்டியாரின் மனைவி அவர் என்பது கருதத் தக்கது. கடற் பயணங்களும் கடல்வணிகமும் காப்பியம் முழுவதும் நிறைந்துள்ளன. அக்கால வைதிக மதம் கடற்பயணங்களைத் தடுத்தது என்பதும் நினைக்கத் தக்கது.

கடைசியாக, பௌத்த மதத்திற்கென்றே உலகம் முழுவதிலும் உள்ள ஒரே பழைய காப்பியம் இதுதான். இந்தியாவிலோ, பௌத்த மதம் பரவிய பிற நாடுகளிலோ அதற்கான காப்பியம் ஒன்று தோன்றவில்லை. இதனால் மணிமேகலைக் காப்பியத்தின் பெருமை மேலும் பொலிவு பெறுகிறது.

http://siragu.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/



About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply