ஜெனிவா: எப்பவோ முடிந்த காரியம்

ஜெனிவா: எப்பவோ முடிந்த காரியம்

ஜூட் பிரகாஷ் – மெல்பேர்ண்

மார்ச 01, 2020

8bbu92EXuWG_zngAAhpo5I4ouitM-1VeKt3m_92v

கடைசியாக நாங்கள் நினைத்தது எதுவோ அதுவே நடந்து விட்டது. 2015ம் ஆண்டு ஜெனிவாவில் இலங்கையின் அனுசரணையோடு நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானத்தில் இருந்து இலங்கை ஒரு தலைப்பட்சமாக வெளியேறி விட்டது.
ஐந்தாண்டுகளிற்கு முன்னர் இலங்கை இணை அனுசரணை வழங்கும் போது உயர்ந்த எங்கள் நெற்றிப் புருவங்கள், இன்று அதே ஜெனிவா முன்றலில் வைத்து ஐநா தீர்மானத்தில் இருந்து விலகுவதாக சண்டித்தனமாக இலங்கை அரசாங்கம் அறிவித்ததோடு ஓய்வு நிலைக்கு வந்து விட்டன.
தமிழர்களிற்கு தாங்கள் பெரிய கெட்டிக்காரன்கள் என்று இருக்கும் மிதப்பு கொஞ்ச நஞ்சமல்ல. தமிழர்களின் இந்த மிதப்பில் சிங்களவர்களை மடையனாக பார்த்த, பார்க்கும் மனநிலையும் கலந்தே இருக்கிறது.
எங்கட கெட்ட காலம், இந்தக் கெட்டிக்காரன்களை அந்த மோடையன்கள் சகல களங்களிலும், எல்லாத் தளங்களிலும் தோற்கடித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்ற கசப்பான வரலாற்றுப் பதிவுகளைத் தான் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற இலங்கையின் வரலாறு சான்றாக விட்டுச் சென்று கொண்டிருக்கிறது.
ஒப்பந்தங்கள் போடுவதும் அதை பின்னர் ஒரு தலைப்பட்சமாக மீறுவதும் சிங்கள பெளத்த பேரினவாத அரசாங்கங்களிற்கு சும்மா வெற்றிலை சாப்பிடுவது மாதிரி தான். எட்டப்படும் உடன்படிக்கைகளை கடித்து குதைத்து துப்பி விட்டு போய்க் கொண்டேயிருப்பார்கள்.
சிங்கள பெளத்த மேலாதிக்க அரசாங்கங்களின் இந்த இராஜதந்திர விளையாட்டில் முதலில் தோற்றுப் போனது தமிழர் தரப்பில் களமாடிய தமிழரசுக் கட்சியின் செல்வநாயகத்தார் தான். செல்வநாயகம் ஒரு முறையல்ல இருமுறை, இரு வேறு சிங்கள தலைவர்களால் ஏமாற்றப்பட்டார்.
1957 ஜூலை 26ல்  கைச்சாத்தான பண்டா-செல்வா ஒப்பந்தம், தமிழர் தாயகம் வடக்கும் கிழக்கும் என்பதை ஏற்றல், வடக்கிலும் கிழக்கிலும் தமிழில் நிர்வாகத்தை ஏற்படுத்த வகை செய்தல், இலங்கையின் தேசிய சிறுபான்மையினரின் மொழியாகத் தமிழை அங்கீகரித்தல், இந்திய வம்சாவழியினரின் பிரஜாவுரிமைப் பிரச்சினையை மீளாய்வு செய்யச் செய்தல் என்ற நான்கு பிரதான அம்சங்களை கொண்டிருந்தது.
பண்டா-செல்வா ஒப்பந்தத்தில் பொதிந்திருந்தது சமஷ்டியல்ல, இது தமிழரசுக் கட்சியின் (Federal Party) கொள்கையை விட்டுக் கொடுப்பதாகி விடும் என்று தமிழர் தரப்பில் இருந்து எதிர்ப்புக் குரல்கள் கிளம்பிக் கொண்டிருக்க, ஜே ஆர் ஜெயவர்தன என்ற ஐதேக தலைவர், தமிழர்களிற்கு நாட்டை விற்கும் பண்டாவின் ஒப்பந்தத்தை கிழித்தெறியச் சொல்லி கொழும்பில் இருந்து கண்டிக்கு பாதயாத்திரை போகத் தொடங்கினார்.
பண்டாவை ஆட்சியில் இருத்தி சிங்களத்தை தேசிய மொழியாக்கிய பெளத்த பிக்குகளும் ஒப்பந்தத்திற்கு எதிராக களமிறங்கியதால், தென்னிலங்கையில் ஏற்பட்ட கொதிநிலைக்கு அடிபணிந்து, ஏப்ரல் 8, 1958ல் தனது இல்லத்தின் முற்றத்தில் வைத்து பெளத்த பிக்குகளின் முன்னிலையில் தான் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தை தனது கையாலேயே கிழித்து எறிந்தார் இலங்கையின் பிரதமாரன SWRD பண்டாரநாயக்க.
1965 மார்ச் 22 தேர்தலில் இரு பிரதான கட்சிகளும் பெரும்பான்மை பெறாத நிலையில், ஆட்சியமைக்க தமிழரசு கட்சியின் 14 உறுப்பினர்களின் ஆதரவை SLFPயும் UNPயும் வேண்டி நின்றனர்.
தமிழரசு தனக்கு ஆதரவளித்தால், பண்டா-செல்வா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த பண்டாவின் மனைவி சிறிமா உறுதியளித்தும், அந்த உறுதியை உதறித் தள்ளிய செல்வா, ஐதேகவின் டட்லியோடு 24 மார்ச் 1965ல், டட்லி – செல்வா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.
மாவட்ட சபைகளை நிர்வாக அலகாகக் கொண்ட அதிகார பரவலாக்கத்தையும் தமிழ் மொழிப் பயன்பாடு மற்றும் சிங்கள குடியேற்றங்களைத் தடுப்பது என்பவை டட்லி- செல்வா ஒப்பந்தத்தின் அடிப்படைகளாக இருந்தன.
ஐதேகவின் தேசிய அமைச்சரவையில் இணைந்த தமிழரசின் திருச்செல்வம், மாவட்ட சபைகளை அமைக்கும் சட்டமூலத்தை உருவாக்கும் உள்ளூராட்சித் துறைக்கு அமைச்சராகவும் பதவியேற்றார்.
மாவட்ட சபைக்களை அமைப்பதற்கான வெள்ளையறிக்கை ஜூன் 1968ல் அமைச்சர் திருச்செல்வத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கட்டது. ஐதேகவிற்குள்ளேயே அந்த சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு இருந்ததால், மாவட்ட சபைத் திட்டம் கைவிடப்பட்டதோடு டட்லி- செல்வா ஒப்பந்தமும் இல்லாமல் போனது.
1987 ஜூலை 29ல், இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இலங்கை வந்த இந்திய பிரதமருக்கு, ஒப்பந்தம் கைச்சாத்தான அன்றே பிடரியில் அடித்து அனுப்பியது இலங்கை.
ஒரு புறம் ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்தாமல் இழுத்தடித்துக் கொண்டு , மறுவளமாக இந்திய இராணுவத்தை புலிகளுடன் மோத வைத்து, இந்திய அரசின் மூக்கையும் உடைத்தனுப்பியது சிங்கள இராஜதந்திரம்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பலனான 13வது திருத்தச்சட்டத்தின் அதிகாரங்கள் காணாது என்று நாங்கள் குறைசொல்லிக் கொண்டிருக்க, சிங்களமோ இந்தியாவின் அழுத்தத்தால் தாங்கள் மாற்றிய தங்களது அரசியல் யாப்பையே முழுமையாக அமுல்படுத்தாமல் இன்றுவரை இந்தியாவை பேய்க்காட்டிக் கொண்டிருக்கிறார்கள், அதில் வெற்றியும் பெற்றுள்ளார்கள்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இருந்து இலங்கை விலகி எத்தனையோ ஆண்டுகள் கடந்து விட்டாலும், அன்றிருந்த நரசிம்ம ராவிலிருந்து இன்றிருக்கும் மோடி வரை அந்த ஒப்பந்தத்தை கோடிட்டு காட்டுவதும், இந்தியத் தலைவர்களை சந்திக்கும் இலங்கைத் தலைவர்கள் மண்டையை மண்டையை ஆட்டுவதும் ஒரு சம்பிரதாயம் போலவே இன்றுவரை அரங்கேறிக் கொண்டிருக்கும் நாடகங்களே.
2002 பெப்ரவரி 22ல் தேசியத் தலைவர் பிரபாகரனிற்கும் இலங்கையின் பிரதமர் ரணிலிற்கும் இடையில் கைச்சாத்தான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்தும், 2006ம் ஆண்டில் ஒரு தலைப்பட்சமாக விலகியது என்னவோ இலங்கை அரசாங்கம் தான்.
2002 செப்டெம்பரில் புலிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைகளை இழுத்தடித்து, பேச்சு மேசையில் எட்டிய இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்தாமல் சாக்கு போக்கு சொல்லி, புலிகளின் பொறுமையை சோதித்தது ரணிலின் அரசாங்கம்.
(பாலஸ்தீனர்களிற்கும் இஸ்ரேலிய அரசிற்கும் இடையில் நோர்வேயின் அனுசரணையில் தொண்ணூறுகளில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் பற்றிய Gaza First என்ற புத்தகத்தை வாசித்தால், அரசு – புலிகள் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளில் நடந்தது வரிக்கு வரி படமாக்கப்பட்டது போலிருக்கும்.)
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளை புனரமைக்கவும், இறுதித் தீர்வை எட்டுவதற்கான confidence building measure ஆகவும், உருவாக்கப்பட்ட SIHRN கட்டமைப்பை, அரசியல் யாப்பைக் காரணம் காட்டி முடக்கியதும் இலங்கை அரசாங்கமே.
முதல் கோணலே முற்றும் கோணல் ஆனது போல், SIHRN பின்னடைவிற்குப் பின்னர் எட்டப்பட்ட எந்த முடிவுகளும் நடைமுறைப்படுத்தப்படாமலே போக, புலிகள் ISGA எனும் இடைக்கால தன்னாட்சி அரசிற்கான வரைபை நோக்கித் தாவினார்கள், இல்லை தள்ளப்பட்டார்கள்.
புலிகளின் இடைக்கால ஆட்சி வரைபை அடிப்படையாக ஏற்று ரணில் அவர்களோடு பேச்சுவார்த்தை நடாத்தப் போகிறார் என்ற இல்லாத ஒரு பயத்தை சாட்டாக வைத்து, ரணிலின் ஆட்சியை கலைத்து, மகிந்தவை பிரதமராக்கி நாட்டை அழிவுக்கு இட்டுச் சென்றது, 1994ல் சமாதான தேவதையாக களம் புகுந்த சந்திரிக்கா அம்மையார் தான்.
2004 Boxing Day சுனாமியால் ஆசிய கண்டத்தின் பெரும்பகுதிகள் பேரழிவை சந்தித்திருக்க, புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் நடந்த உடனடி மீட்புப் பணிகளை உலகமே மெச்சிக் கொண்டிருந்தது. சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த ஐநா செயலாளர் கோபி அன்னனை புலிகளின் பகுதிகளிற்கு போக விடாமல் தடுத்த ஈனச் செயலை சந்திரிக்கா செய்த போதும் உலகம் தட்டிக் கேட்கவில்லை.
பின்னர் 2005ம் ஆண்டு நடுப்பகுதியில், புலிகளிற்கும் அரசிற்கும் இடையில் எட்டப்பட்ட P-TOMS என்ற சுனாமிக்கு பின்னரான புனரமைப்பு புனருத்தாரண நடவடிக்கைகளுக்கான செயலணியை, அரசில் பங்காளியாக இருந்த JVP உயர்நீதிமன்றில் நீர்த்து போகச் செய்ததும் ஒரு வகையில் இன்னுமொரு ஒப்பந்த மீறலே.
2009 யுத்தம் முடிவடைந்த பின்னர், 2011ம் ஆண்டளவில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மகிந்தவின் இலங்கை அரசாங்கம் 18 சுற்று பேச்சு வார்த்தைகள் நடாத்தியது. பேச்சுவார்த்தைகளின் minutesம் தயாரிக்கப்பட்டு கொழும்பில் இருந்த மேற்கத்திய நாடொன்றின் தூதுவராலயத்தில் பத்திரமாகவும் வைக்கப்பட்டது.
அப்படியிருந்தும் கடைசியில் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று அழைத்து விட்டு, பேசுவதற்கு போகாமலே அளாப்பி ஆட்டம் ஆடி, TNAயுடனான பேச்சுவார்த்தையில் இருந்து ஒரு தலைப்பட்சமாக திமிராக வெளியேறியது மகிந்தவின் இலங்கை அரசாங்கம்.
2015ல் தமிழர்களின் வாக்கு பலத்தால் ஆட்சிக்கு வந்த மைத்ரி-ரணில் அரசாங்கம், இந்தா தீர்வைத் தருகிறேன் அந்தா தீர்வைத் தருகிறேன் என்று காலத்தை இழுத்தடித்து, தமிழர் தரப்பை மீண்டும் ஓருமுறை ஏமாற்றி விட்டுத் தான் கலைந்து சென்றது.
ஆட்சியை ஏற்படுத்த மட்டுமல்ல, அடாத்தாக கலைத்த ஆட்சியை மீட்டுக் கொடுத்த தமிழர் தரப்பிற்கு நன்றிக் கடனாக அவர்களால் செய்ய முடிந்தது, நில விடுவிப்பு, அரசியல் கைதிகள் குறைப்பு, கம்பரெலிய புனரமைப்பு  மற்றும் புதிய அரசியல் வரைபிற்கான இடைக்கால நகல் பாராளுமன்றில் தாக்கல் செய்யப்பட்டது என்பவை மட்டுமே.
ரணிலின் ஆட்சியில் தான் UNHCRல் 30/1 தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. மகிந்த ஆட்சியில் இருந்த போது 2012,2013,2014ம் ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற போர்குற்றங்களை விசாரிக்க கோரி நிறைவேற்றப்பட்ட கடுமையான தீர்மானங்களை நீர்த்து போகச் செய்த, 2015ன் 30/1 தீர்மானத்தை நல்ல பிள்ளையாக நடித்து இலங்கையின் நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக்  கொண்டு இணை அனுசரணையும் வழங்கியது.
மகிந்த ராஜபக்‌ஷவை மின்சாரக் கதிரையில் இருந்து காப்பாற்றியது 30/1 தீர்மானமே என்று அன்றைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூட அண்மையில் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
2015ல் இலங்கையின் அனுசரணையில் நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானம், இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர்குற்றங்களிற்கான பொறுப்புக் கூறலை நிறைவேற்ற கலப்பு முறையிலான ஒரு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறையை அமைத்தல் தொடர்பானதாகவும், மீளவும் இனப்பிரச்சினை நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்த இலங்கை அரசு எடுக்க வேண்டிய கடப்பாடுகள் தொடர்பானதாகவும் அமைந்திருந்தது.
எட்டிய ஒப்பந்தங்களை எட்டி உதைத்துப் பழகிய இலங்கை அரசாங்கம், உலக அரங்கில் செய்து கொண்ட உடன்படிக்கையை என்ன செய்யப் போகிறது என்ற அவநம்பிக்கையோடு பார்த்திருந்த தமிழர் தரப்பின் கணிப்பை இலங்கை அரசாங்கம் மெய்யாக்கும் செயற்பாடுகளிலேயே அன்றிலிருந்து ஈடுபட்டது.
ரணிலின் அரசாங்கம் கனகச்சிதமாக காலத்தை வேண்டுமென்றே இழுத்தடித்து, தீர்மானத்தை நிறைவேற்ற 2017லும் 2019லும் இரண்டு தரம் கால நீடிப்பை பெற்றுத் தனது ஆட்சிக் காலத்தை ஒப்பேற்றி விட்டு ஓய்ந்து போனது. காலத்தை இழுத்தடித்து தனது இருப்பை தக்க வைப்பது ரணிலிற்கு கை வந்த கலையாச்சே.
சிங்கள பெளத்த மேலாண்மை வாக்குபலத்தில் 2019 இறுதியில் ஆட்சிக்கு வந்த கோத்தா-மகிந்த ஆட்சியோ, அவர்களிற்கே உரித்தான சண்டித்தனத்துடன் ஜெனிவாக்கு நேரடியாக சென்று “நாங்கள் 30/1 தீர்மானத்தில் இருந்து விலகுகிறோம், நீங்கள் சொல்வதை நாங்கள் செய்ய மாட்டோம், ஏலுமென்றா பண்ணிப் பாருங்கோ” என்று ஐநாவிற்கு விளாசி விட்டு வந்து விட்டார்கள்.
ஒப்பந்தங்களை மீறுவதில் தமிழர்களிடம் பயிற்சி பெற்று, உடன்படிக்கைகளை உடைத்து இந்தியாவையே பேய்க் காட்டி, சமாதானம் ஏற்படுத்த வந்த நோர்வேக்காரனையே நாட்டை விட்டுத் துரத்திய சிங்கள பெளத்த பேரினவாதம், இன்று உலக அரங்கில் மனித உரிமைகளை காக்கும் காவலனான UNHCRற்கு நடுவிரலை காட்டி விட்டு எக்காளம் இட்டுச் சிரிக்கிறது.
அகிம்சைவழியிலும் ஜனநாயக விழுமியங்களை பின்பற்றியும் தங்களது நியாயமான அரசியல் உரிமைகளை அடைய முடியாமல் போனதாலேயே தமிழ் இளைஞர்கள் தங்களது இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்று உலகிற்கு உரக்கச் சொல்லி சொல்லி நாங்கள் களைத்துப் போய் விட்டோம்.
2001 இரட்டைக் கோபுர தாக்குதலிற்குப் பின்னர் மாறி விட்ட உலக அரங்கில், தமிழர்களின் ஆயுதப் போராட்டமும் பயங்கரவாதமாக வரையறுக்கப்பட்டு, சர்வதேச நாடுகள் அனைத்தும் இணைந்தே புலிகள் இயக்கத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்து விட்டார்கள்.
தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டு பத்தாண்டுகள் கடந்தும், தமிழர் தரப்பு இதயபூர்வமாக முயற்சித்தும், தமிழர்களின் பிரச்சினைகள் இன்று வரை தீர்க்கப்படவில்லை, தீர்த்து வைக்கும் நோக்கமும் இலங்கை அரசிற்கு இல்லை.
இறுதி யுத்தத்தில் நடந்த போர்க்குற்றங்களை விசாரித்து, தமிழர்களிற்கு நியாயமான தீர்வை வழங்குங்கள் என்று கடந்த எட்டாண்டுகளாக ஐநா தீர்மானங்கள் ஊடாக வேண்டுகோள்கள் விடுத்துக் கொண்டிருந்த சர்வதேசத்தையும் இலங்கை உதைத்துத் தள்ளிவிட்டது.
இனி என்ன நடக்கப் போகிறது? சர்வதேசம் இலங்கைப் பிரச்சினையில் தலையிடுமா? தமிழர்களிற்கு நீதி கிடைக்குமா? இந்தியாவை இராஐதந்திரத்தில் தோற்கடித்த சிங்கள இராஜதந்திரம் இந்த முறை சர்வதேசத்தையும் விஞ்சுமா? என்ற கேள்விகளிற்கு அப்பால், இந்த சவால்களை எதிர்கொள்ள தமிழர்கள் தயாராக இருக்கிறோமா என்ற கேள்வியும் மெலெழுகிறது.
ஐநா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவும், ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகமும் இதுவரை நடாத்திய விசாரணைகளின் அடிப்படையில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட இலங்கை இராணுவத் தளபதிக்கு அமெரிக்கா அரசு பயணத் தடை விதித்திருக்கிறது.
ஆனால் நம்மில் சிலரோ “சர்வதேச விசாரணை” என்று ஒன்றும் நடைபெறவில்லை என்று பறைந்து கொண்டு திரிகிறோம். கையில் இருக்கும் சர்வதேச நிறுவனங்கள் மேற்கோண்ட குறைந்த பட்ச விசாரணை அறிக்கைகளையே முழுமையாக பயன்படுத்த தெரியாத வெங்கிளாந்திகளாக இருக்கும் எங்களின் இந்த நிலமையை என்னவென்று சொல்லுவது? இந்த லட்சணத்தில் எங்கட பிரச்சினையை எவ்வாறு அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது?
செல்வநாயகத்தாரின் காலத்தில் இருந்து சம்பந்தனின் காலம் வரை, சிங்கள அரசாங்கங்கள் கிழித்தெறிந்த ஒப்பந்தங்களை பார்த்துப் பழகிய தமிழ் சனமாகிய எங்களுக்கோ , ஐநாவில் உலகையே எதிர்த்து நின்று இலங்கை அரசாங்கம் அரங்கேற்றும்  கூத்துக்களைக் காணும் போதும், எங்களது அரசியல் தலைமைகள் தங்களுக்குள் அடிபடுவதைப் பார்க்கும் போதும்,
யாழ்ப்பாணத்து “விசர்” செல்லப்பா சுவாமிகள் தனது ஒரே சீடரான யோகர் சுவாமிகளிற்கு அருளி விட்டுச் சென்ற நான்கு மகா வாக்கியங்கள் தான் நினைவில் வந்து ஆறுதலளிக்கும்.
“ஒரு பொல்லாப்புமில்லை”
“நாம் அறியோம்”
“முழுதும் உண்மை”
“எப்பவோ முடிந்த காரியம்”
இந்த நான்கு மகா வாக்கியங்களுக்குள் எமது வரலாறும் அடங்கும், எமது தலைவிதியும் அடங்கும் என்று சொன்னால் மிகையல்ல அல்லவா?

About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply