குகதாசனை ‘கனடாவில் இருந்து இறக்குமதி’ செய்யப்பட்வர்,  சம்பந்தன் ஐயாவின் “புரொக்ஸி’ என வித்தியாதரன் எள்ளல் செய்வதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்!

பெப்ரவரி 23, 2020

செய்தி அறிக்கை

குகதாசனைகனடாவில் இருந்து இறக்குமதிசெய்யப்பட்வர்சம்பந்தன் ஐயாவின்புரொக்ஸிஎன வித்தியாதரன் எள்ளல் செய்வதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்!

பெப்ரவரி 21, 2020 இல்  வெளிவந்த காலைக்கதிர் இ இதழில் மின்னல் என்ற புனைபெயரில் அதன் ஆசிரியர் வித்தியாதரன் ஒரு பந்தி எழுதியுள்ளார்.

இந்தப் பந்தி பெரும்பாலும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் இரகசிய  செய்திகளை வைத்து வரையப்படுகிறது. குறிப்பாக கொழும்பு அரசியலில் பேசப்படும் செய்திகளுக்குப் பின்னால் உள்ள உண்மை, பொய் பற்றி எழுதப்படுகிறது. இராசபக்ச குடும்பத்தோடு உள்ள நெருக்கம் காரணமாக அவர்கள் வீட்டு அரசியலும் அலசப்படுகிறது.

கனடா  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தலைவர் உட்பட பல பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருந்த கதிரவேலு குகதான் அவர்கள் கனடாவில்  தான் செய்த வேலையைக் கைவிட்டு 2017 ஆம் ஆண்டு  நாடு  திரும்பினார். அவரைச்  சம்பந்தன் ஐயா தனது தனிச் செயலாளராக வைத்துக் கொண்டிருக்கிறார்.

குகதாசன் திருகோணமலை மாவட்டத்  தமிழ் அரசுக் கிளைகளை மீள்சீராக்கி அதன் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். மாவட்டக் கட்சித் தலைமையகத்தில் நான்கு ஐந்து முழுநேர ஊழியர்களாகப் பணியில் உள்ளார்கள். வட – கிழக்கில் உள்ள தமிழ் அரசுக் கட்சிப் பணிமனைகளில் முதல் இடத்தில் அந்தப் பணிமனை இருக்கிறது. குகதாசன்  நாடு திரும்பு  முன்னர் சம்பந்தன் ஐயா அவர்களது வீடே கட்சி அலுவலமாகவும் இருந்தது.

இப்போது கிழக்கு மாகாண பொருளாதார மேம்பாட்டுச் செயலணியின் செயலாளராகவும் குகதாசன் பணியாற்றுகிறார்.  பொருளாதார மேம்பாட்டுக்குத் தேவைப்படும் திட்டங்களைத் தயாரித்து அதற்கான ஒப்புதலையும் நிதியையும் பிரதமர் மற்றும் நிதி அமைச்சில் இருந்து பெறுவதும் குகதாசனின் கடமையாக  இருந்து வருகிறது. கடந்த நொவெம்பர் 16 ஆம் நாள் நடந்த ஆட்சி மாற்றம் காரணமாகப்  புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பல மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்த பழைய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது.

குகதாசனைப் பற்றிக் குறிப்பிடும் போது அவர் “கனடாவில் இருந்து இறக்குமதி” செய்யப்பட்டவர் என எள்ளுவதை வித்தியாதரன் வழக்கமாகக் கொண்டுள்ளார். இப்போது  ” சம்பந்தனின் புரொக்ஸியாக” குகதாசன் விளங்குகிறார் என்றும் ‘நக்கலாக’ எழுதியிருக்கிறார். Proxy என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் பதிலி அல்லது பதிலாள் என்று பொருள். இது குகதாசனுக்குப் பொருந்தாது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

குகதாசன் சம்பந்தன் ஐயாவின் பதிலாள் இல்லைஅவர் சம்பந்தன் ஐயாவின்  தனிச் செயலாளர். அவர்  கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் அல்ல. அவரது சொந்த மாவட்டம் திருகோணமலை. சொந்த ஊர் திரியாய். அவரது உறவினர்கள் அந்த மாவட்டத்தில்தான் வாழ்கிறார்கள்.

ஒரு புறம் புலம் பெயர் தமிழர்கள் தாயகம் திரும்பி நாட்டை வளம்படுத்த வேண்டும் தொழில்களைத் தொடங்கி வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் –  முப்பது ஆண்டுகாலக் கொடிய போரினால்  நொடிந்த போன எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் –  என அங்குள்ள தலைவர்கள் வேண்டுகோள் விடுகிறார்கள்.

அந்த வேண்டு கோளுக்குச்   செவிசாய்த்து  தாயகம் திரும்பிய குகதாசனைக் “கனடா இறக்குமதி”  சம்பந்தன் ஐயாவின் “புரொக்ஸி”  என்று எள்ளல் செய்வது வித்தியாதரன் போன்ற மூத்த ஊடகவியலாளருக்கு அழகல்ல. அதிலும் கொழும்புத்  தமிழ் அரசுக் கட்சிக் கிளையின் செயலாளராக இரண்டு ஆண்டுகள் இருந்த ஒருவர் இப்படி நையாண்டியாக எழுதுவது அழகும் அல்ல. அறமும் அல்ல.

எங்களுக்கும் அவர் பற்றிய “இரகசியம்” எழுதத் தெரியும். ஜனநாநாயகப் போராளிகள் கட்சியின் முதன்மை வேட்பாளராக அவர் 2015 தேர்தலில் போட்டியிட்ட போது அந்தக் கட்சிக்கு விழுந்த வாக்கு எண்ணிக்கை எமக்குத் தெரியும்! கட்டுக்காசு இழந்த வரலாறு தெரியும்!

தமிழ் அரசுக் கட்சியின் பொருளாளர் கணக்குக் காட்ட வேண்டும் என அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமே கேட்க முடியும்.  தமிழ் அரசுக் கட்சியின் கணக்கு வழக்கு உறுப்பினர்களுக்கு மட்டும் அல்ல இலங்கை தேர்தல் ஆணையாளருக்கும் அனுப்பப்படுகிறது என கட்சியின் பேச்சாளர்  சுமந்திரன் ஒருமுறைக்குப் பலமுறை சொல்லியிருக்கிறார் .

இல்லை, தெரியாமல்தான் கேட்கிறோம் வித்தியாதரன் கொழும்புக் கிளையின் செயலாளராக இருந்த போது அந்தக் கிளையின் பொருளாளர் தெருவால் போகிற – வருபவர்களுக்கு எல்லாம் கணக்குக் காட்டிக் கொண்டிருந்தாரா?

குகதாசன் சொல்லியது போல 2009 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாநகர சபை, வவுனியா நகர சபை போன்றவற்றுக்கு நடந்த தேர்தல் தொடங்கி இற்றைவரை  நாடாளுமன்ற, மாகாண சபை, உள்ளுராட்சி மன்ற தேர்தல் செலவுக்கு   கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில கோடிகளைக் கொடுத்து உதவியிருக்கிறது. அதில் குகதாசனின் முயற்சி அளப்பரியது

தேர்தலுக்கு மட்டுமல்ல வட – கிழக்கில் வாழும் தமிழ் மக்களது பொருளாதார மேம்பாட்டுக்கும் சில கோடிகளை இதுவரை கனடா ததேகூ  திரட்டிக் கொடுத்துள்ளது.

மாதம் ரூபா 750,000 சம்பளம் எடுத்துக் கொண்டிருந்த குகதாசன் நாடு திரும்பிக் கட்சிப் பணியில் ஈடுபடுவது போற்றத்தக்கது. அவரது முடிவை நாங்கள் பாராட்ட வேண்டும்.  வரவேற்க வேண்டும்.  மற்றவர்களுக்கு அவர் சிறந்த எடுத்துக் காட்டாக   இருக்கிறார்.  அவரைப் போற்ற மனம் இல்லாது விட்டாலும் தூற்றாதாவது இருக்க வேண்டும்.

குகதாசன் இவ்வாறான தூற்றல்களைக் கண்டு துவண்டு போகமாட்டார். அரசியலுக்கு வந்தால் கல்லெறி விழும்  என்பதும் அவருக்குத் தெரியும். அவர் சங்க இலக்கியங்களை நன்கு பயின்றவறவர். தமிழ் மொழியை ஒரு பாடமாக  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகப் பட்டப்படிப்பு மாணவர்களுக்குப்  படிப்பித்தவர்.

குடி செய்வார்க்கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்  (அதிகாரம் 103 – குடிசெயல்வகை  – குறள் 1028)

தாம் பிறந்த குடியை  உயர்த்த விரும்புபவர்கள் காலம் கருதிக் காத்திருக்க மாட்டார்கள், குடி வளர்வதற்குரிய பணிகளைச் செய்வதில் ஒருபோதும் சோம்பல் காட்ட மாட்டார்கள். பெருமையை ஒரு பொருளாக எண்ண மாட்டார்கள்.

தலைவர்
கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
கனடா

About editor 3046 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply