‘தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான் தமிழர்களின் ஒற்றுமைக்குச் சாபக்கேடு’ விக்னேஸ்வரன் கடும் தாக்கு!
சரமாரியான கேள்விக் கணைகள்!
நக்கீரன்
விக்னேஸ்வரனின் தலைமையை ஏற்கத் தயார் என்று சொன்ன தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாருக்கும் முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான விக்னேஸ்வரனுக்கும் இடையில் குடுமிப் பிடிச் சண்டை நடைபெறுகிறது! ஆளை ஆள் சேற்றை அள்ளி வீசுகிறார்கள். தமிழ்த் தேசியத்தை நாசமாக்கிப் போட்டார், விக்னேஸ்வரன் ஒரு மாயமான் என்று கஜேந்திரகுமார் திட்ட, உன்னையும் உனது கட்சியையும் எனக்குத் தெரியாதா? தமிழ்க் காங்கிரஸ் கட்சி இன்னமும் ஒற்றையாட்சியை அரசியல் முறைமையை விட வில்லை. தொடர்ந்து அந்தக் கட்சி அந்தக் கோட்பாடுடன்தான் இருக்கிறது எனப் பதிலுக்கு விக்னேஸ்வரன் திட்டுகிறார்!
ததேகூ முன் வைத்த நிபந்தனையை ஏற்றுக் கொள்வாதாகக் கூறிவிட்டு அடுத்த திங்கட்கிழமை திரும்பி வருவதாகக் கூறிவிட்டுப் போனார் கஜேந்திரகுமார். போனவர் போனவர்தான் அதன் பின்னர் அவர் வரவே இல்லை!
இதற்கிடையில் செல்வராசா கஜேந்திரன் மற்றும் பத்மினி சிதம்பரநாதன் இருவருக்கும் தேர்தலில் நியமனம் கொடுக்க வேண்டும் என்று கோரி விடுதலைப் புலிகளின் நிழல் அமைப்பைச் சார்ந்தவர்கள் என்னை வந்து சந்தித்தார்கள். எமக்கும் (கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) நியமனங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, அதில் நாங்கள் தலையிடுவதில்லை என்று சொன்னேன். சந்திக்க வந்தவர்கள் விடவில்லை. ஒருதரம் ததேகூ இன் தலைவர் சம்பந்தன் ஐயாவோடு தொலைபேசியில் பேசுமாறு வற்புறுத்திக் கேட்டார்கள். சரியென்று சம்பந்தன் ஐயாவை தொலைபேசியில் அழைத்து விடயத்தைச் சொன்னேன். அவர் சுருக்கமாகப் பதில் அளித்தார். கஜேந்திரனைப் பொறுத்தவரையில் ‘அவரோடு வேலை செய்ய முடியாது’ என்றார். சரி பத்மினி என்று இழுத்தேன். “போர்க்காலத்தில் அவர் இலண்டன் போய் நின்றுவிட்டார். பதவி பறிபோகப் போகிறது என்ற காரணத்தால்தான் நாடு திரும்பியவர். அவருக்கு நியமனம் கொடுப்பதை யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சார்ந்த பெண்கள் அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்” என்றார்.
அவர் சொன்னது எனக்கு நியாமாகப்பட்டது. வந்தவர்களுக்கு சம்பந்தன் ஐயா சொன்னதைத் சொன்னேன். அவர்கள் போய்விட்டார்கள். அவர்களுக்கு நாட்டிலிருந்து நெருக்கடி. அதிலிருந்து தப்பவே என்னைக் கண்டு பேசினார்கள். ‘சம்பந்தரோடு பேசினோம் முடியவில்லை’ என்று சொல்லலாம் அல்லவா?
இதன் பின்னர்தான் கஜேந்திரகுமார் அவசர அவசரமாகத் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற ஒரு பினாமி அமைப்பை உருவாக்கி விட்டதாக அறிவித்தார். கஜேந்திரகுமார் புத்திசாலி. ஒற்றையாட்சிக் காங்கிரஸ் கட்சியில் கேட்டால் கரைசேர முடியாது என்பது அவருக்குத் தெரியும். அதற்கு மேலாக அந்தக் கட்சிக்கு ஒரு கறைபடிந்த வரலாறு இருந்தது.
ததேமமு யின் உருவாக்கத்துக்குப் பின்னால் நின்றவர்கள் புலத்தில் இருந்த வன்னியின் எச்சங்களே. அவர்களுக்குத் தங்கள் சொற்படி தலையாட்டக் கூடிய தலைமை தேவைப்பட்டது. சம்பந்தன் ஐயா அப்படியான தலைவர் அல்லர் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். எனவே ‘நீங்கள்தான் தமிழினத்தின் அடுத்த தலைவர்’ என கஜேந்திரகுமாருக்கு வேப்பிலையடித்து பப்பாசி மரத்தில் ஏற்றிவிட்டார்கள்! அவரும் ஏமாந்து விட்டார். 2004 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கஜேந்திரன், பத்மினி, கஜேந்திரகுமார் ஆகியோருக்கு விழுந்த வாக்குகள் முறையே 112, 077 பத்மினி 68,240 கஜேந்திரகுமார் 60,770 மொத்தம் 341,087 வாக்குகள். இதில் பாதி வாக்குகள் (170,544) விழுந்திருந்தால் ததேமமு ஒன்பது இருக்கைகளையும் வென்றிருக்கும். ஆனால் கிடைத்த வாக்குகள் 6,362 (4.28 விழுக்காடு) மட்டுமே. இதனால் கட்டுக்காசும் போய்விட்டது!
ததேகூ இல் இருந்து பிரிந்து போனதற்குக் காரணம் கொள்கை என கஜேந்திரகுமார் சொல்கிறார். ஆனால் கொள்கை வேறுபாடு இருந்திருந்தால் “இது நல்லாயிருக்கிறது. இதில் கூறப்பட்டவை கிடைத்தாலே பெரிய காரியம்” என்று சொல்லியிருப்பாரா? “திங்கட்கிழமை திரும்பி வருகிறேன் மேலும் பேசலாம்” எனச் சொல்லியிருப்பாரா?
இவ்வளவிற்கும் வேறு எந்த மாகாண முதலமைச்சருக்கும் இல்லாத அதிகாரம், நிருவாக சுதந்திரம் விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட்டது. வழங்கியவர் ததேகூ இன் தலைவர் சம்பந்தன் ஐயா ஆவர். அமைச்சர்கள் நியமனம் அவரது விருப்பத்துக்கு விடப்பட்டது.
2015 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விக்னேஸ்வரன் வீட்டுக்கு வெளியே வந்து (சைக்கிளுக்கு) வாக்களியுங்கள் என்று ஒன்றுக்கு இரண்டு அறிக்கைகளை அடுத்தடுத்து விட்டார். இருந்தும் தேர்தலில் ததேகூ யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 7 இடங்களில் 5 இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தம் 16 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
அன்று விக்னேஸ்வரனைக் காப்பாற்றியவர் வேறு யாருமில்லை இன்று அவரை மாயமான் என்று திட்டும் சாட்சாத் கஜேந்திரகுமார்தான்! ஆமாம் அவர்தான் நூறு இளைஞர்களை வரவழைத்து கொண்டு விக்னேஸ்வரன் பதவி விலகக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்வித்தார். செத்தேனே சிவனே என்று வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த விக்னேஸ்வரனுக்கு அப்போதுதான் உயிர் வந்தது.
“மக்களாகிய உங்களது பலம் எனக்கு இருக்கும் போது நான் தொடர்ந்து மாகாண சபையை ஆட்சி செய்வேன்” என்று மேடைகளில் முழங்கினார்.
தமிழரசுக் கட்சி அவரைக் கைகழுவி விட்ட நிலையில் அவருக்கு இன்னொரு கைப்பிடி தேவைப்பட்டது. அதுதான் தமிழ் மக்கள் பேரவை என்ற பினாமி அமைப்பு. அதன் இணைத் தலைவராக இன்றுவரை விக்னேஸ்வரன் இருக்கிறார். அந்த அமைப்புக்கு யாப்பு ஏதும் கிடையாது. அந்த அமைப்பில் இருந்து கஜேந்திரகுமார் வெளியேறிவிட்டார். இந்த அமைப்பே இப்போது தமிழ் மக்கள் கூட்டணியாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது!
இன்று விக்னேஸ்வரன் – கஜேந்திரகுமார் ஆகிய இரண்டு “அரசியல்வாதிகளும்” ஆளை ஆள் மண் அள்ளித் திட்டுகிறார்கள். இந்த இரண்டு பேருமே எந்த முகாந்திரமும் இல்லாமல் ததேகூ க்குள் இருந்து வெளியேறியவர்கள். அப்படி வெளியேறியவர்கள் ஒற்றுமை பற்றி ஒப்பாரி வைக்கிறார்கள். ஒற்றுமை பற்றிப் பேச கஜேந்திரகுமாருக்கோ அல்லது விக்னேஸ்வரனுக்கோ அருகதையில்லை. தங்கள் சுயநலத்துக்காக, நாற்காலிக் கனவுக்காக ஒற்றுமையை உடைத்தவர்கள்!
நாற்காலிக்கு ஆசைப்பட்டுக் கூட்டு வைத்தால் அது நிலைத்து நீடித்து நிற்காது. மண் குதிரை போல் கரைந்துவிடும்.
அவரது ஐந்து சீடர்கள் யோதிலிங்கம், நிலாந்தன், யதீந்திரா, கருணாகரன், தயாபரன் ஆவர்.
இதில் நிலாந்தன் என்பவர் ததேகூ யின் நா. உறுப்பினர்கள் தமிழ்மக்களைப் பிரதிநித்துவப்படுத்துபவர் இல்லையாம். அவர்கள் அப்படிக் கருதப்படுபவர்களாம். இந்த ஒரு சொல்லில் எவ்வளவு வன்மம், அழுக்காறு இருப்பது துல்லியமாகத் தெரிகிறது. உண்மையில் அவர் ததேகூ இன் நா.உறுப்பினர்களை அவமானப்படுத்தவில்லை. அவர்களுக்கு வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பிய மக்களை அவமானப்படுத்துகிறார்! அவ்வளவுதான்.
மாற்றுத் தலைமையை உருவாக்குவதற்குப் புலத்தில் இருக்கும் புல்லுத் தின்னும் புலிகளும் மெத்தவும் பாடுபட்டார்கள். என்ன பாடுபட்டாலும், யார் கழுத்தை முறித்தாலும் விக்னேஸ்வரன் – கஜேந்திரகுமார் இருவருக்கும் கட்டாயத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று தலைகீழாக நின்றார்கள். டொலரை, டொலர் என்று பாராமல் வாரி இறைத்தார்கள். பணத்தை இறைத்தால் மாற்றுத் தலைமை உருவாகிவிடும் என்று பகல் கனவு கண்டார்கள். அரசியலில் பழமும் தின்று கொட்டையும் போட்ட அரசியல் சாணக்கியரான சம்பந்தன் ஐயா இடத்தில் விக்னேஸ்வரனை கொலு வைக்க நினைத்தார்கள்.
விக்னேஸ்வரன் தான் சலுகைக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டிருந்தால் ததேகூ இல் நீடித்து இருந்திருப்பாராம். இதன் மூலம் தான் சலுகைக்கும் பதவிக்கும் ஆசைபடாத அரசியல்வாதி என்கிறார்.
விக்னேஸ்வரன் சம்பளம் வாங்காமலா முதலமைச்சராக ஐந்து ஆண்டுகள் இருந்தார்? அரசு கொடுத்த வண்டிவாகனங்களைப் புறக்கணித்துவிட்டு மாட்டு வண்டிலா பயணம் செய்தார்? நா.உறுப்பினர்களது சம்பளம் மாதம் ரூபா 54,285 மட்டுமே. ஆனால் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடைய மாதச் சம்பளம் ரூபா 64,950! அதாவது ஒரு மத்திய அமைச்சரது சம்பளத்தை விட ரூபா 50 குறைவு. இதைவிட வண்டி வாகனம், காசில்லாத வீடு (மாதம் ரூபா 75,000) விமானப் பயணம் என பல்வேறு சலுகைகள் கொடுக்கப்படுகின்றன.
இருந்தும் தான் பதவிக்கும் சலுகைகளுக்கும் ஆசைப்படவில்லையாம்! கேழ் வரகில் நெய்வடிகிறது என்றால் கேட்பவர்களுக்கு மதியில்லை என்று விக்னேஸ்வரன் நினைக்கிறார்.
அரசியல் தலைமை என்பது கடையில் காசு கொடுத்து வாங்கும் பொருளல்ல. அது சமூகவெளியில் இருந்து படிமுறையாக வரவேண்டும். தந்தை செல்வாவின் உறுதி, கடின உழைப்பு, நேர்மை, நாணயம் , நேர்படப் பேசல், தியாகம் போன்றவையே அவரைத் தமிழ் மக்களின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவன் ஆக்கியது.விக்னேஸ்வரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையில் நடக்கும் அறிக்கைப் போர் ஒரு தொடக்கமே! மிக விரைவில் ஒருவரது அழுக்குத் துணிகளை மற்றவர் மாறி மாறி பொதுவெளியில் வைத்துத் துவைக்கப் போகிறார்கள். காணத் தவறாதீர்கள்!
‘தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான் தமிழர்களின் ஒற்றுமைக்கு சாபக்கேடு’ விக்னேஸ்வரன் தாக்கு!
கேள்வி :- “தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி’ யினர் நீங்கள் ஒற்றையாட்சி அரசமைப்புக்குள் தமிழ் மக்களை ஏமாற்றி முடக்குவதற்கு ஈ.பி. ஆர்.எல்.எவ். கட்சியுடப் இணைந்துள்ளீர்கள் எனக் கூறுகின்றனரே? உங்கள் கருத்தென்ன?
பதில்: – யார் இந்தத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர்? அந்தப் பழைய தமிழ் காங்கிரஸ் சின்னத்தில் பயணிப்பவர்களைத்தானே நீங்கள் கூறுகின்றீர்கள்?
ஊடகவியலாளர்:- ஆம்.
பதில்: – அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியினர் தமது யாப்பை மாற்றி விட்டார்களா? எனக்குத் தெரிந்த வரையில் ஒற்றையாட்சிக்குள் ஐம்பதுக்கு ஐம்பது என்றுதான் ஜீ.ஜீ. கூறிவந்தார். இப்போதைய முன்னணியினர் அதனை மாற்றி விட்டார்களா? அப்படியானால் என்னவென்று? இப்பொழுது அவர்கள் சமஷ்டி என்று மாற்றியிருந்தால் ஜீ.ஜீ. தனது கட்சியில் இருந்த தந்தை செல்வாவிடம் மண்டியிட்டார் என அர்த்தமாகும். தனித் தமிழ் ஈழம் என்று மாற்றியிருந்தால் அவர் சி.சுந்தரலிங்கம், வி.நவரத்தினம் ஆகியோரின் கருத்துக்களை ஏற்றார் என முடியும். ஜீ.ஜீ. சிங்களவரிடம் மண்டியிட்டாலும் இன்னொரு தமிழரிடம் மண்டியிடமாட்டாரே!
எனக்குத் தெரிந்த வரையில் அகில இலங்கைத்க் தமிழ் காங்கிரஸ் இன்று வரையில் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட ஒரு கட்சிதான்! அவ்வாறான கட்சியின் சின்னத்தையும் பதிவையும் தொடர்ந்தும் பாவிக்கும் முன்னணியினர் எவ்வாறு மற்றவர்களைத் தமிழ் மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சிக்குள் முடக்க எத்தனிக்கின்றார்கள் என்று கூறலாம்? நாங்கள் கேட்பது சமஷ்டி. அது எல்லோருக்கும் தெரிந்த விடயம். நாங்கள் ஒற்றையாட்சிக்குள் மக்களைக் கொண்டு செல்ல எத்தனிக்கின்றோம் என்றால் எமக்கும் மத்திய அரசாங்கங்களுக்கும் இடையில் ஏதோ வொரு கரவான இணக்கப்பாடு இருப்பதாகக் கூறுகின்றார்களா?
ஊடகவியலாளர்:- ஆமாம். அவ்வாறுதான் கூறுகின்றார்கள்!
பதில்:- சரி! எங்களுக்கு அவ்வாறான உறவு இருப்பதானால் நாங்கள் தமிழ் மக்களிடையே ஒற்றுமையை உண்டு பண்ண எத்தனித்திருக்க மாட்டோம் அல்லவா?
ஊடகவியலாளர்: – விளங்கவில்லை.
பதில்:- அதாவது நாங்கள் மத்திய அரசாங்கங்களுடன் கரவான உறவு வைத்திருப்பது உண்மையானால் நாங்கள் என்ன செய்வோம்? எந்தத் தருணத்திலும் தமிழ் மக்களோ மக்கல் தலைவர்களோ ஒன்று சேர விடாது தடுப்போம் அல்லவா? அதாவது தமிழ் மக்களிடையே ஒற்றுமை ஏற்படுவதால் மத்திய அரசாங்கத்திற்கு ஏற்படக் கூடிய பாதிப்பைத் தடுப்போம் அல்லவா?
ஊடகவியலாளர்: – ஆமாம்.
பதில்:-நாம் அப்படியயான்றும் செய்யவில்லையே! இன்றும் நாங்கள் தமிழர் ஒற்றுமைக்காக கஜேந்திரகுமாரை எங்களுடன் சேருமாறுதானே கூறிவருகின்றோம்? அவரின் மூன்று தலை முறையினரைத் தெரிந்த என்னால் என் மகனுடன் இறுதிச் சட்டப் பரீட்சை செய்த மற்றும் என் நண்பர் தர்மராஜா தன் மகன் போல் அரவணைத்த கஜேந்திரகுமாரை விமர்சிப்பது எனக்குச் சங்கடமாக இருக்கின்றது. ஆனால் உண்மைகளை வெளியிட வேண்டிய தருணம் வந்துவிட்டது.
1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்று மையை முதலில் 2009 இல் குலைத்தவர் யார்?
2. தமிழ் மக்கள் பேரவையின் ஒற்றுமையைக் குலைத்து அதன் முக்கியத்துவத்தை மழுங்கச் செய்தவர் யார்?
3. பல்கலைக்கழகத்தில் ஆறு கட்சிகள் சேர்ந்து தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஆவணப்படுத்த எத்தனித்த போது அதன் ஒற்றுமையைக் குலைத் தவர்கள் யார்?
4. காணாமல் போனோரின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து தமக்குள் ஒரு ஐக்கியத்தைத் தேடிய போது தம் கட்சிக்கென வேறு ஓர் அலகை உண்டு பண்ணி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவி னர்களை இரண்டு அணிகளாகப் பிரித்து, அவர்கள் போராட்டத்தைத் திட்டமிட்டு மழுங்கடிப்பவர் யார்?
5. யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்காக தமிழர் அனைவரும் உணர்வெழுச்சியுடன் பங்குகொள் ளும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு களில் தாம் மட்டும் வேறான இடத்தில் தமது நிகழ்வை நிகழ்த்திப் பிரிவினையை வளர்ப்போர் யார்?
6. ஈ.பி.ஆர்.எல்.எவ். உடன் கூட்டுச் சேருவ தாகக் கூறி காலத்தைக் கடத்தி அவர்கள் கூட்டைச் சிதைத்தவர்கள் யார்?
7. எமது இரண்டாவது ‘எழுக தமிழ்’ நிகழ்வை எப்படியாவது குலைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஒற்றுமையைச் சிதைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியவர்கள் யார்?
8. தமது கொள்கை ஒற்றையாட்சியா, சமஷ்டியா, தனிநாடா என்பதை வெளிப்படுத்தாமல் ஒற்றை யாட்சி காங்கிரஸ் சின்னத்தையும் கட்சியையும் தொடர்ந்து பாவித்து வருபவர்கள் யார்?
9. இந்தியா வழி நடத்துகின்றது என்று மற்றக் கட்சிகளைக் கண்டித்துக் கொண்டு, இரவில் ஜெட் விங்ஸில் சீனப் பிரதிநிதிகளைக் கரவாகக் கண்டு வந்தவர்கள் யார்?
10. கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது தமது சகோதரனை விடுவிக்க கோட்டாபயவுடன் கரவான ஒப்பந் தங்களில் ஈடுபட்டவர் எந்தக் கட்சி யைச் சேர்ந்தவர்?
11. தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பில் விரக்தி கொண்ட மக் களை அவர்கள் நேசித்த தமிழ் மக்கள் பேரவை மூலம் தமக்கு ஆதரவைப் பெறத் தமிழ்த் தேசியப் பேரவை என்ற ஒன்றை உருவாக்கி தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதர வான மக்களின் வாக்குகளை 2015ல் ஏமாற்றிப் பெற்றவர்கள் யார்?
12. பேசுவது முன்னணி, தஞ்சமடைவது காங்கிரஸ் என்ற ரீதியில் தம்மை ஒற்றையாட்சிக் காங்கிரஸினுள் இணைத்து வைத்து அரசாங்கத்திற்கு ஒற்றை யாட்சி என்ற தலை யையும், தமிழ் மக்களுக்கு இன்னொரு முகமாக வாலையும் விலாங்கு மீன் போலக் காட்டும் கட்சி எந்தக் கட்சி?
13. ஈ.பி.ஆர்.எல்.எவ்.ஐ வெளியேற்று, இல் லையேல் நாங்கள் உங்கள் கூட்டில் இணைய மாட்டோம் என்று எங்களுடன் இன்று வரையில் அடம் பிடிப்பவர்கள் யார்?
14. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெற்கில் சோரம் போன நிலையில், அரசியலை கொண்டு செல்ல வலுவானதொரு அரசியல் கூட்டு உரு வாகும் போது தேசிய நலன் கருதி தாமும் கை கொடுத்து இணையாமல் மக் களுக்குத் துரோகம் செய்பவர்கள் யார்? ஆகவே தமிழ் மக்களின் ஒற்று மையை இதுவரையில் திட்டம் போட்டுக் குலைத்து வருபவர்கள் யார் என்று நான் உங்களுக்குக் கூறத்தேவையில்லை. நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகின்றேன். தமிழ் மக்களின் பிளவு அல்லது ஒற்றுமையின்மை யாருக்கு நன்மை அளிக்கும்?
ஊடகவியலாளர்: – அரசாங்கத்திற்கும், பேரினவாதிகளுக்கும்!
பதில்: – சரியாகச் சொன்னீர்கள்! அரசாங்கத் திற்கும் பேரினவாதிகளுக்கும் நன்மை அளிப்பதற் காக இவ்வாறான செயல்களில் தொடர்ந்து ஒரு கட்சி ஈடுபட்டு வருகின்ற தென்றால் தமிழ் மக்களை ஏமாற்றி வருவது நாங்களா? அவர்களா? அத்துடன் இத்தனை தரம் மக்களைப் பிரித்துப் பிரித்து செயல்பட்டமை தற்செயலாக நடந்த நிகழ்வுகளாக இருக்க முடியாது. யாரோ ஒருவரின் அல்லது பலரின் வழி நடத்தலில்தான் இவர்கள் இவ்வாறு நடக்கின்றார்கள் என்பது எனது சந்தேகம். எனது சந்தேகம் பிழையயன்றால் இப்பொழு தாவது தமது குலைக்கும், சிதைக்கும் சிந்தனை களை மூடை கட்டி வைத்துவிட்டு ஒற்றுமையின் பேரில் எம்முடன் சேர்ந்து பயணிக்கச் சொல்லுங் கள் காங்கிரஸாரை!
Leave a Reply
You must be logged in to post a comment.