காப்பாற்ற வேண்டியவற்றை  கூட்டமைப்பு கட்டாயம் காப்பாற்றும் கவலை வேண்டாம்!

நக்கீரன்

ம்பரெலியாவும் ஜே.பி விண்ணப்ப படிவங்களும் கூட்டமைப்பை காப்பாற்றுமா? இந்தத் தலைப்பில் திலீபன் என்பவர் எழுதிய கட்டுரையை தமிழ்நாடு  தந்தி நாளேட்டின் பாணியில் – பிள்ளையைப் பெற்ற இளைஞன், அதிர்ச்சி கொடுத்த தாய், தினமும் ஒரு கைப்பிடி அளவு இதை சாப்பிட்டுங்க.. உடம்புக்குள் என்ன நடக்கும் தெரியுமா? – இப்படி நரகல் நடையில் பரபரப்புக்காக  செய்திகளை வெயிடும் தமிழ்வின் இணையதளம் வெளியிட்டுள்ளது.  அந்தக் கட்டுரைக்கான எதிர்வினை இது.

(1) கடந்த ஐந்து வருடகாலம் ரணில் – மைத்திரி அரசாங்கத்தை போர்குற்றம், மனித உரிமை மீறல்கள், பொறுப்புக் கூறலிலிருந்து காப்பாற்றி ஆட்சியை தக்கவைப்பதற்கு உதவியதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு பரிசாக வழங்கப்ட்டது தான் கம்பரெலியாவும், சமாதான நீதவான் விண்ணப்ப படிவங்களுமாகும்.

இந்த சலுகைகளை பெற்று கூட்டமைப்பினர் திருப்திப்பட்டுக் கொண்டனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட கம்பரெலியா நிதியில் பத்துவீத தரகுப் பணம் பெற்று கூட்டமைப்பு எம்.பிக்களால் செய்யப்பட்ட தரமற்ற வேலைத்திட்டங்கள் தொடர்பான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது யாவரும் அறிந்ததே.

பதில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகிறது.  அதே கம்பெரெலியா போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் மூலம்   அவர்களது பொருளாதார மேம்பாட்டுக்கும் உழைத்து வருகிறது.  இரண்டையும் சமாந்தரமாக எடுத்துச் செல்வதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  கோட்பாடாகும். 

கம்பெரெலியா  போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை, அடிப்படை வசதிகளை நிறைவு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டம் ஆகும். இதனையும் இதுபோன்ற திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வட கிழக்கில் செயலணிகள் உருவாக்கப்பட்டன. இதற்காக அரசு ரூபா 25 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியிருந்தது.

போர்க்குற்றம் தொடர்பாக  ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் 2015 இல் 30/1 தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அதற்கான உலக நாடுகளின் ஆதரவை ததேகூ கேட்டுப் பெற்றுக் கொண்டது. அதனை முழுமையாக அரசாங்கம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது உண்மை. ஆனால் அதற்கான அழுத்தத்தை நாட்டுக்கு உள்ளேயும் சர்வதேச மட்டத்திலும் ததேகூ கொடுத்து  வருகிறது. காணாமல் போனோர் தொடர்பாக இரண்டு ஆணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவை இயங்கிவருகிறது. அதற்கான சட்ட மூலங்கள் திருப்தி  இல்லாவிட்டாலும் எமது மக்களுக்கு அது முடிந்த மட்டும் உதவியுள்ளது, உதவி வருகிறது என்பதே யதார்த்தம்.

ததேகூ நா.உறுப்பினர்கள் 10 வீத தரகுப் பணம் பெற்றார்கள் என்பது உமது கற்பனை. அவர்கள் மீது சேறு பூசும் கயமைத்தனம். நிதி மட்டுமே அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அதனை நடைமுறைப்படுத்துபவர் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள். அதாவது அரசாங்க அதிபர்கள். எடுத்துக்காட்டாக சாலை போடுவது என்றால் அதற்கான கேள்விப் பத்திரத்தைக் கேட்டு அதனை நடைமுறைப்படுத்துபவர்கள் மாவட்டச் செயலாளர்கள்.

வேலை தரமற்றது என்று குற்றச்சாட்டை கட்டுரையாளர்தான் முதன்முறையாக அரசியல் உள்நோக்கோடு முன்வைக்கிறார். எந்த சமூக வலைத்தளங்களில் ஊடகங்களில் அப்படியான செய்திகள் வந்தன என்பதற்கான சான்றுகளை  தர முடியுமா? எதுவானாலும் வேலை தரமற்றது என்றால் அதற்கான பொறுப்பு மாவட்டச் செயலாளர்கள் ததேகூ இன் நா.உறுப்பினர்கள் அல்ல.

(2) தமிழ் மக்கள் கடந்த எழுபது வருட காலமாக தமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக சாத்வீக வழியிலும், ஆயுதப்போராட்டத்திற்கு ஊடாகவும் போராடிய இனம் பல்லாயிரக்கணக்கான போராளிகளையும், பொதுமக்களையும் இழந்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் நாடாளுமன்றத்திற்குள்ளும், வெளியிலும் சர்வதேச ரீதியிலும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஒரு பலமான அரசியல் கட்சி தேவை என்ற தீர்க்கதரிசனத்தின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்.

பதில் – இதில் பாதிதான் உண்மை. மீதி பொய். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு சிவராம், துரைரத்தினம், நடேசன் போன்ற கிழக்கிலங்கை ஊடகவியலாளர்கள் தான் காரணம். அவர்கள்தான் அடித்தளம் இட்டார்கள். அதனை ஏற்றுக் கொண்டு அதற்கென ஒரு கட்டமைப்பை புலிகள் உருவாக்கினார்கள். இதுதான் உண்மை.

(3) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டு இரண்டு தசாப்தங்களை நெருங்கிக்கொண்டு இருக்கும் நேரத்தில் வடக்கு – கிழக்கில் நடைபெற்ற அத்தனை தேர்தல்களிலும் (நாடாளுமன்றம், மாகாணசபை, உள்ளூராட்சி மன்றம்) தமிழ் மக்கள் மிகப்பெரிய பலத்தை கூட்டமைப்பிற்கு வழங்கியிருந்தார்கள்.

தமிழரசுக் கட்சி தலைமையிலான இந்தக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான கொள்கை சார்ந்த அரசியல் உரிமையிலும் போரினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களின் அன்றாட பிரச்சினைகளிலும் கவனம் செலுத்துவதற்கு பதிலாக தமது சுயலாப தேர்தல் அரசியலிற்காக ரணில் – மைத்திரி அரசாங்கத்தினுடைய ஆளுங்கட்சி பங்காளிகளாகவும், எதிர்கட்சி தலைவர் பதவி, மாவட்ட ஒருங்கிணைப்புத் தலைவர்கள் பதவி, சொகுசு பங்களாக்கள் மற்றும் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட பல மில்லியன் பணத்திற்காகவும் அத்தோடு அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தல் தாம் வெல்ல வேண்டும் என்பதற்காகவும் கம்பரெலியா, சமாதான நீதவான் போன்ற அற்பசொற்ப விடயங்களுக்காக தமிழ் மக்களை நட்டாற்றில் விட்டுள்ளார்கள்.

பதில் – இப்படித் துளியும் அடிப்படை இல்லாத குற்றச்சாட்டுக்களை அடுக்கும் கட்டுரையாளரின் நோக்கம் பற்றிய ஐயம் எழுகிறது. உமது நோக்கம் எப்பாடுபட்டாலும் ததேகூ இன் பிம்பத்தை அழிக்க வேண்டும் என்பதே. நாடாளுமன்றத்தில் இரணில் – மைத்திரி அரசாங்கத்தை ஆதரித்தது உண்மை. கட்டுரையாளர் சொல்லும் பதவிகள், பதவி வழி வந்தவை. நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக ததேகூ இருந்த காரணத்தாலேயே சம்பந்தர் எதிர்க்கட்சித் தலைவரானார். மாவட்ட ஒருங்கிணைப்புத் தலைவர்கள் பதவி போன்றவை நா.உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் கிடைத்தவை.  சொகுசு பங்களாக்கள்  என்று பன்மையில் சொல்லப்படுகிறது. அவை எவை என்று சொல்ல முடியுமா? இரண்டு ஆண்டுகள் கழித்து எதிர்க்கட்சித் தலைவருக்கு அரசாங்கம் ஒரேயொரு வீடு ஒதுக்கியது. அது அவருக்கு பதவி வழி – எதிர்க்கட்சித் தலைவர் – கிடைத்தது. பதவி போன பின்னரும் சென்ற அரசாங்கமும் இன்றைய அரசாங்கமும்  சம்பந்தர் ததேகூ இன் தலைவராக இருக்கும் வரை அதில் குடியிருக்கலாம் என்று தீர்மானித்திருக்கின்றன. இதையிட்டு வயிற்றெரிச்சல் படுவது கட்டுரையாளரது சின்னத்தனத்தைக் காட்டுகிறது. அது சரி. தேர்தல் காலத்தில் பல மில்லியன் பணத்தை யார் ததேகூ கொடுத்தது? அரசாங்கம் கொடுத்ததா?

(4) போரினால் பாதிக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஆயிரத்து அறுபத்துஐந்து நாட்களை கடந்து வீதியோரங்களில் தமது போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள் இவர்களை ஒரு நாள்கூட கூட்டமைப்பினர் எட்டிப்பார்க்கவில்லை.காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகள் OMP வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் கூட்டமைப்பினர் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகளுடன் கலந்தாலோசிக்காமல் அரசாங்கத்திற்கு நற்சான்றிதழ் வழங்குவதற்காக நாடாளுமன்றத்தில் OMP வேண்டும் என்ற சட்டமூலத்திற்கு கை உயர்த்தி ஆதரவு அளித்திருக்கின்றார்கள். மாறாக அரசாங்கத்துடனும், புலனாய்வுத்துறையினருடனும் இணைந்து இவர்களது போராட்டத்தையும் அந்த அமைப்புக்களையும் சிதைத்து சின்னாபின்னப்படுத்தியுள்ளார்கள்.

பதில் – இது நல்ல கேள்வி. காணாமல் போனவர்களது உறவினர்கள் நடத்தும் போராட்டம் நல்லது. தேவையானது. ஆனால் அவர்களில் ஒரு சாரார்  அரசியல் உள்நோக்கோடு ததேகூ எதிரானவர்களால்  இயக்கப்படுகிறார்கள். ததேகூ இன் தலைவர் சம்பந்தர், பேச்சாளர் சுமந்திரன் ஆகியோரது உருவப் பொம்மைகளைக் கொளுத்தி காடாத்துச் செய்பவர்களுக்கு, செருப்பு வீசுகிறவர்களுக்கு ஆதரவு வழங்க முடியுமா? OMP வேண்டாம் என்று சொல்பவர்களை விட வேண்டும் என்று சொல்பவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். அதில் குறைபாடுகள் இருந்தாலும் அதனை இயங்க வைப்பதுதான் புத்திசாலித்தனம்.  இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் ததேகூ குரல் கொடுத்து வருகிறது.

(5) அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கத்துடன் எந்தவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாமல் ரணில் – மைத்திரியினுடைய அரசாங்கத்திற்கு பல சந்தர்ப்பங்களில் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தார்கள்.

பதில் – போருக்குப் பின்னர் தமிழ்மக்கள் சொல்லி மாளாத துன்பங்களை அனுபவிக்கிறார்கள். அவர்கள்  இரண்டொரு பிரச்சனைக்களுக்கு அல்ல நூறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். முக்கியமாக வீடு, வேலை வாய்ப்பு, நல்ல சாலைகள், குடிதண்ணீர் போன்ற பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். அரசியல் கைதிகளின் பிரச்சனை ஒன்றை மட்டும் வைத்து அரசாங்கத்துக்கு கொடுத்த ஆதரவை விலக்கிக் கொள்ள முடியாது. இரணில் – சிறிசேனா அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது  217 அரசியல் கைதிகள் இருந்தார்கள். இப்போது இந்த எண்ணிக்கை 80 ஆகக் குறைந்துள்ளது. இவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று ததேகூ அரசாங்கத்தைக் கேட்டு வருகிறது.

(6) குறிப்பாக ஐ.நா மனித உரிமை பேரவையில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு மூன்று தடவைகள் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுடைய கையெழுத்துடன் 2021ஆம் ஆண்டு வரை காலநீடிப்பை பெற்றுக்கொடுத்தார்கள்.

பதில் –  இது அப்பட்டமான பொய். கால நீடிப்பை ததேகூ அல்ல, தீர்மானத்தைக் கொண்டு வந்து ஐநாமஉ அவையில் நிறைவேற்றிய நாடுகளே  வழங்கின. கால நீடிப்பு வழங்காவிட்டால் சிறிலங்கா அரசு தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடி விடுவார்கள். இப்போது ஐநாமஉ அவை வழங்கிய காலக் கெடு அரசின் தலையில் தொங்கும் கத்தியாக இருக்கிறது.

(7) நல்லாட்சி அரசாங்கத்தின் நான்கு வரவு செலவுத் திட்டத்திலும் பாதுகாப்பு செலவீனத்திற்கு யுத்த காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை விட இரண்டு மடங்காக அதிகரித்த நிதி ஒதுக்கப்படும்போது ஏன் என்று கேள்வி கேட்காமல் கண்ணை மூடிக்கொண்டு கையை உயர்த்தி ஆதரவு தெரிவித்தார்கள்.

பதில் – பாதுகாப்புக்கு அரசு பெருந்தொகைப் பணம் ஒதுக்கி வருகிறது உண்மையே.  வி.புலிகள் மீள உயிர்  பெற்று விடுவார்களோ என்ற அச்சம் அரசாங்கத்துக்கு இருக்கிறது. இப்போது இஸ்லாமிய பயங்கரவாதமும் சேர்ந்து கொண்டுள்ளது. இதனால் பாதுகாப்புக்கு அரசாங்கம் பெருந்தொகைப் பணத்தை செலவழிக்க வேண்டியுள்ளது.

(8) இரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும்போது கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எந்தவித நிபந்தனைகளும் இன்றி இரணிலுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள்.

பதில்: உமது மரமண்டை எதனையும் புத்திசாலித்தனத்தோடு பார்க்கத் தடுக்கிறது. ஆயிரம் குற்றச்சாட்டுக்கள்  சொன்னாலும் விக்கிரமசிங்க அவர்கள் ஒப்பீட்டளவில்  ஒரு சனநாயகவாதி. அவரோடு எமது மக்களின் பிரச்சனைகள் பற்றி எந்த நேரத்திலும் பேசலாம். அவரது முயற்சியால்தான் நீர் நொட்டை சொல்லும் கம்பெரேலிய திட்டம் அமுல் படுத்தப்பட்டது. அவரது ஆட்சியில்தான்:

(அ) வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கென பனை நிதியம் என்ற திட்டம் உருவாகியது. அதற்கு 2019 இல் ஐந்து பில்லியன் (ஐந்நூறு கோடி) ரூபா நிதி ஒதுக்கப்பட்டது.  அதன்படி இவ்வாண்டு 2.5 பில்லியன் (அதாவது 2,500 கோடி) ரூபா செலவிடப்பட்டிருக்க வேண்டும்.

(ஆ) இதுவரை திருகோணமலை மாவட்டத்துக்கு மட்டும் இரா.சம்பந்தன் எம்.பியின் கோரிக்கையின் பேரில் இத்திட்டத்தின் கீழ் இரு நூறு கோடி ரூபா செலவிடப் பட்டது. அதாவது இந்த ஆண்டில் எட்டுத் தமிழ் மாவட்டங்களுக்கும் பனை நிதியத்தின் கீழ் ஆக 625 கோடி ரூபா ஒதுக்கீடுதான் கிடைக்கும். அதில் 200 கோடி ரூபா செலவிடப்பட்டுவிட்டது.

(இ) மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம்

ததேகூ யின் முயற்சியால் மயிலட்டி மீன்பிடித்துறைமுகம்  40 கோடி ரூபா செலவில் 2 கட்டங்களாக நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படுகிறது. இதில் முதல் கட்டம்  15 ஓகஸ்ட், 2019 அன்று  நிறைவடைந்து மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்  மொத்த முதலீடு உரூபா 395 மில்லியன்  அதில் முதல் கட்ட வேலைக்கு  சுமார் 150 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.  மயிலிட்டி துறைமுகத்தின் புனரமைப்பு பணிகளை 22 ஓகஸ்ட், 2018 ஆம் ஆண்டு சனாதிபதி  மயித்திரிபால சிறிசேன தலைமையில்  தொடங்கப்பட்டது.

(ஈ) பருத்தித்துறை மீன்பிடித்  துறைமுகம்

பருத்தித்துறை மீன்பிடித்  துறைமுகம் சனாதிபதி சிறிசேனா கடந்த 30 ஓகஸ்ட், 2019 இல் தொடக்கி வைக்கப்பட்டது. இலங்கையில் இதுவரை நிர்மாணிக்கப்பட்ட மிக விசாலமான மீன்பிடித் துறைமுகமாகும். இதற்காக 12,600 மில்லியன் உரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

உலகிலுள்ள நவீன ரக மீன்பிடிப் படகுகளைப் பாதுகாப்பாக பயன்படுத்தல், பிடிக்கப்படும் மீன்களைக் கரை சேர்த்தல், எரிபொருள் மற்றும் ஏனைய வசதிகளைப் பெற்றுக்கொள்ளல், படகுகளை பழுதுபார்த்தல், பனிக்கட்டி மற்றும் குளிர்சாதன வசதிகள், படகுகளுக்கான இயந்திரங்களைப் பெற்றுக் கொள்ளல், மீன் விற்பனை, வலை தயாரிப்பு, கடைத்தொகுதி, கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான வசதிகள், கரையோரப் பாதுகாப்பு சேவைகள், மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளின் சேவைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இந்த மீன்பிடித் துறைமுகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

(உ) காங்கேசன்துறைத் துறைமுகம்

காங்கேசன்துறைத் துறைமுகம் அ.டொலர் 45.27 மில்லியன் (உருபா 792 கோடி) செலவில்  மேம்படுத்தப்பட்டு வருகிறது.  இதற்குத் தேவையான நிதியை இந்தியா கொடுத்து உதவும். இது ஒரு மூன்றாண்டு கால மேம்பாட்டுத் திட்டமாகும்.  இதற்குத் தேவையான 15 ஏக்கர் நிலம் காங்கேசன்துறையைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து  பெறப்படும். இதன்  அடுத்த கட்ட மேம்பாட்டில் 50 ஏக்கராக விரிவாக்கப்படும். காங்கேசன்துறை  ஒரு வாணிகத்  துறைமுகமாக கட்டியெழுப்பப்படும்.  இதனால் தென்னிந்தியா –  இலங்கைக்கு இடையான வாணிகளம்  அதிகரிக்கும். தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இந்துமாக் கடலில்  ஒரு வாசலாக அமையும்.

கொழும்புத் துறைமுகம் காரணமாகக் கொழும்பு நகரும், கட்டுநாயக்க விமான நிலையம் காரணமாக கம்பாஹா மாவட்டமும் பொருளாதாரத்தில் முன்னேறியதைப் போலவே இந்த இணைப்பு நடவடிக்கைகள் வடக்குக்குக்குப் பெரிய  கொடையாக  இருக்கும்.

(ஊ) பலாலி விமான நிலையம்

பலாலி விமான நிலையம் மூன்று கட்டங்களின் கீழ்  மேம்பாடு செய்யப்படவுள்ளது. முதற்கட்ட பணிகளுக்காக சுமார் உரூபா 2.25 பில்லியன் (உருபா2250 மில்லியன்) செலவிடப்படும். இதில் இலங்கை அரசாங்கத்தின் பங்காக  1950 மில்லியன் உரூபாவும் இந்திய நிதியுதவியின் ஊடாக உரூபா 300 மில்லியன்  எனப் பங்கிடப்படும்.  பல ஆண்டுகளாக இழுபறி நிலையில் இருந்த பலாலி விமான நிலையம் எதிர்வரும் செப்தெம்பர்  தொடக்கம் பிரதேச பறப்புகளுக்கும் ஒக்தோபர் முதல் நாள் தொடக்கம்  பன்னாட்டு பறப்புகளுக்கும் திறந்துவிடப்பட இருக்கிறது. இந்த விமான நிலையத்தை மேம்படுத்தும் கட்டுமானப் பணிகள்  கடந்த யூலை மாதம் தொடங்கப்பட்டன. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ச்சுன இரணதுங்க அதனைத் தொடக்கி வைத்தார்.

( அ அ) கிளிநொச்சி  பொது மருத்துவமனை

கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய சநல்வாழ்வு அமைச்சர் இராஜித சேனாரத்ன மேற்கொண்ட முயற்சி காரணமாக  உரூபா 4,474 மில்லியன்  செலவில் சகல வசதிகளுடனும் நிர்மாணிக்கப்படவுள்ள கிளிநொச்சிப் பொது வைத்தியசாலையின் கட்டடம் இரண்டின் பணிகளுக்கான அடிக்கல்  பிரதமர் இரணில் விக்கிரமசிங்க அவர்களால்  வைபவ ரீதியாக 15  பெப்ரவரி, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதில் 1974 மில்லியன் நெதர்லாந்து அரசின் நிதி உதவியாகவும், மிகுதி 2500 மில்லியன் இலங்கை அரசின் பாதீட்டின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

(ஆஆ) வட மாகாண மருத்துவ மனைகள்

வடமாகாணத்தின் 5 மாவட்டங்களின் மருத்துவ சேவைக்கென, நெதர்லாந்து நாட்டிலிருந்து 60 மில்லியன் யூரோக்கள் ( ரூபா 12,000 மில்லியன்) நிதி பெறப்பட்டது.

(இஇ) பின்தங்கிய மாவட்டங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு வீதிகள், குளங்கள், அணைக்கட்டுகள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றின் சீரமைப்புக்கு மேலதிகமாக உரூபா 3,402 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

(உஉ) போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10,000 கல் வீடுகளை கட்டிக் கொடுக்கும் திட்டம்  வட – கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  இந்த 10,000 வீடுகளில் 4,750 வீடுகள் சனவரியில் தொடங்கப்பட்டு முடிவுற்றுள்ளது. இந்தியா 40,000 வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது. மேலும் 25,000 வீடுகளைக் கட்டிக் கொண்டிருக்கிறது.

(9) தொடர்ந்து நல்லாட்சி அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்து கொண்டு அரசைக் காப்பாற்றிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் கைதிகளின் விடுதலை காணாமல் ஆக்கபட்டவர்கள் இருக்கின்றார்களா? இல்லையா? உட்பட காணி விடுவிப்பு போன்ற எந்த நிபந்தனையையும் இன்றி அரசுக்கு முண்டு கொடுத்தார்கள்.

பதில் – முண்டு கொடுத்தது உண்மை. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் தக்க காரணங்களின் அடிப்படையிலேயே முண்டு கொடுத்தோம். 2015 ஆம்  ஆண்டுக்குப் பிறகு பாதிக்கு மேலான அரசியல் கைதிகள் விடுவிக்கப் பட்டுள்ளார்கள். காணாமல் போனவர்கள் தொடர்பாக இரண்டு ஆணைக் குழுக்கள் இயங்குகின்றன.

(10) தற்போது இரண்டு மாதங்களாக கோட்டாபய இராசபக்சவை சந்தித்து கம்பரெலியாவின் மிகுதிப் பணத்தை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கின்றார்கள்.

பதில் – வேண்டாப் பெண்ணுக்கு கால் பட்டாலும் குற்றம் கைபட்டாலும் குற்றம் என்பார்கள். இந்தக் கட்டுரையாளர் அந்தப் பெண்ணின் ரகம். மத்திய அரசிடம் இருந்து நிதி கேட்டுப் பெறுவது ததேகூ இன் கடமை. உரிமையும் கூட.  தமிழ்மக்கள் வரி கட்டுகிறார்கள் என்பது நினைவிருக்கட்டும்.

(11) பாதுகாப்புத் தரப்பால் வடக்கு – கிழக்கில் முப்பது வருடகாலமாக யுத்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள், ஊனமுற்ற போராளிகள் – பொதுமக்கள், யுத்த விதவைகள் தாய் தந்தையை இழந்த பிள்ளைகள், தமிழ் மக்களுக்கு சொந்தமான பல்லாயிரம் பில்லியன் சொத்தழிவுகள் ஆகியவற்றிற்கான நஷ்ட ஈடுகளை பெற்றுக்கொடுப்பது பற்றியோ அல்லது தமிழ் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய அடிப்படை பிரச்சினைகளான வீட்டுத்திட்டம், பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு கிராமப்புற உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் போன்ற எதிலும் கவனம் செலுத்தாமல் ரணில் – மைத்திரி அரசாங்கத்தை சர்வதேச ரீதியிலும் இலங்கைக்குள்ளும் பாதுகாப்பதில் அதிகூடிய கவனம் செலுத்தினார்கள்.

பதில் – இவை அடிப்படையில்லாத முட்டாள்த்தனமான குற்றச் சாட்டுக்கள். போர் முடிந்து 10 ஆண்டுகள் முடிந்த நிலையில் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னரே போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள் கிடைத்துள்ளன. போரினால் அழிவுண்ட ஒரு  வீட்டைத்தன்னும் திருத்துவதற்கு அரசிடம் பணமில்லை என்று சொன்னவர் பசில் இராசபக்ச. வீடுகளை மீளக்,  குறிப்பாக 2017-2019 நிதி ஆண்டுகளில்,  வட கிழக்கு அபிவிருத்திக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டது. சனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசா தோற்றதற்கு வட – கிழக்குக்கு அரசு வாரி வழங்கிய நிதியுதவிதான் காரணம் எனச் சரத் பொன்சேகா பேசியிருக்கிறார்.

(12) பல தேர்தல்களில் கூட்டமைப்பை நம்பி வாக்களித்த தமிழ் மக்களை நிர்க்கதியற்ற நிலைமைக்கு தள்ளியது மட்டுமல்லாமல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எதிரும் புதிருமாக இருந்தவர்களை எந்த நோக்கத்திற்காக கூட்டமைப்பை உருவாக்கினாரோ அந்த நோக்கத்தை சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு கடந்த இரண்டு தசாப்தங்களாக சரியான சந்தர்ப்பங்களில் தவறான முடிவுகளை எடுத்து இராஜதந்திர ரீதியாக மிக மோசமான ஒரு தோல்வியை சந்தித்துள்ளது.

பதில் – உம்முடைய வாதத்தின்படி சரியான சந்தர்ப்பங்களில் தவறான முடிவுகளை எடுத்து இராஜதந்திர ரீதியாக மிக மோசமான ஒரு தோல்வியை சந்தித்துள்ளது என்றால் அதற்குப் புலிகளுந்தானே   (2009 வரை)காரணம்? உமது வாதம் சரியானால் எப்படி  2010, 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலும் 2012 மற்றும் 2013 இல் நடந்த மாகாண சபைத் தேர்தலிலும்  பெரும்பான்மையான  மக்கள் ததேகூ க்கு இரண்டு கைகளாலும் வாக்களித்தார்கள்? ஏரணம் (logic) எங்கேயோ இடிக்கிறதே?

(13) இவ்வாறான மக்கள் விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டமையால் கூட்டமைப்பானது தமிழ் மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்குள்ளாகி கூட்டமைப்பிற்குள்ளும், வெளியிலும் பதவி சண்டையால் சிதைந்து சின்னாபின்னப்பட்டுப்போய் இருக்கின்றது.

பதில் – இது உமது வயிற்றெரிச்சலைக் காட்டுகிறது.  நடந்து முடிந்த சனாதிபதித் தேர்தலில் ததேகூ சுட்டிக் காட்டிய வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு 80 விழுக்காடு தமிழர்கள் வாக்களித்துள்ளார்கள்.

(14) கடந்த எழுபது வருடகாலமாக தமிழ் மக்களை காலத்திற்குகாலம் ஏமாற்றிய தமிழரசுக் கட்சியினர் ஆளுங்கட்சியுடன் கூடிக் குலாவி தமது பதவிகளுக்காகவும் சந்தர்ப்பவாத அரசியலிற்காகவும் தமிழ் இளைஞர்களை உசுப்பேற்றி இவர்களின் இராஜதந்திரம் அற்ற நடவடிக்கைகளால் இறுதியாக முள்ளிவாய்க்காலில் மிகப்பெரும் மனித பேரவலம் வரை கொண்டு சென்றார்கள்.போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தன்னந்தனியே வீதியோரங்களில் தமது உறவுகளிற்காக போராடிக்கொண்டு இருக்கும் போது, இராஜதந்திர ரீதியில் தோற்றுப்போன கட்சியும் அதன் தலைவர்களும் தமது கட்சியின் எழுவதாவது வருட நிறைவையொட்டி கேக்வெட்டி மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாடிவருகின்றனர்.

பதில் – ஒரு கணம் வி.புலிகளைப் பாராட்டி விட்டு மறுகணம் அவர்களைக் கட்டுரையாளர் தூற்றுகிறார். இறுதியாக முள்ளிவாய்க்காலில் மிகப்பெரும் மனித பேரவலம் வரை கொண்டு சென்றவர்கள் விடுதலைப் புலிகள். தமிழ் அரசுக் கட்சி அல்ல.  கடந்த எழுபது ஆண்டு காலமாக  தமிழ் அரசுக் கட்சி மக்களை ஏமாற்றிவிட்டது என்பது சரியானால் ஏன் மக்கள் அதே கட்சிக்குத் தவறாது வாக்களிக்கிறார்கள்? மக்களை  மடையர்கள், பேயர்கள் என கட்டுரையாளர் நினைக்கிறாரா?

(15) தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கம்பரெலியாவிற்காகவும் சமாதான நீதவான் விண்ணப்ப படிவங்களுக்காகவும் இந்த கூட்டமைப்பை உருவாக்கவில்லை என்று தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும் என்பதுடன் தமிழ் மக்கள் உரிய நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளிப்பதற்கு காத்திருக்கின்றார்கள் என்பது மட்டும் தான் நிதர்சனமான உண்மை.

பதில் – காகம் திட்டி மாடு சாகாது. கட்டுரையாளர்கள் போன்றவர்கள் திட்டி தமிழ் அரசுக் கட்சி மாளாது.  கட்டுரையாளர் போன்ற ஈணவும் தெரியாத,  நக்கவும் தெரியாத போலித்  தேசியவாதிகளுக்குத்தான் அதிர்ச்சி வைத்தியம் அளிக்க மக்கள்  காத்திருக்கிறார்கள். பொறுத்திருந்து பாருங்கள்.


About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply