தைத் திங்களுக்குள்ள சிறப்பு  பொங்கல் மட்டுமல்ல அது தமிழரின் புத்தாண்டு என்பதும் சிறப்பாகும்!

தைத் திங்களுக்குள்ள சிறப்பு  பொங்கல் மட்டுமல்ல அது தமிழரின் புத்தாண்டு என்பதும் சிறப்பாகும்!

ஆண்டு தோறும் கனடிய தமிழர் பேரவையால் நடத்தப்படும் பொங்கல் விழாவில் மருத்துவர் சத்தியமூர்த்திக்கு அவரது சமூகப் பணியைப் பாராட்டி பணிச் சிறப்பு விருது (Service Excellence Award) வழங்கப்பட்டது.  சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான மதி கனிமொழி அவர்களுக்கும்  மாற்றத்துக்கான தலைவர்கள் விருது (Leaders for Change Award)  வழங்கப்பட்டது.

தமிழர்  நாகரிகத்தின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடி அகழாய்வைப் பாதுகாக்கும் பொருட்டு  சட்ட ரீதியாகத் தலையிட்டு அதனைக் காப்பாற்றியவர் (Legal intervention  to protect Keezgadi site, a place of archeological relevence which has unearthed the antiquity of Tamil civilization)) என்ற பெருமை வழங்கறிஞர் மதி கனிமொழியைச் சாரும்.

இந்தப் பொங்கல் விழா கடந்த சனவரி 18 அன்று மார்க்கம் நகரில் அமைந்துள்ள Hilton Toronto / Markham Suites Conference Centre இல் நடைபெற்றது.  அடாது  மழை பெய்தாலும்  விடாது நாடகம் நடத்தப்படும் என்பது போல நாள் முழுதும் கடும் பனிப் புயல் வீசினாலும் அதனைப் பொருட்படுத்தாது தமிழ் உணர்வாளர்கள், கலைஞர்கள், தொழில் முனைவோர், தொழில்சார் நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், அமைச்சர்கள்,  மேயர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மார்க்கம் – தோர்ண்கில் நா.உறுப்பினரும் சிறு வணிக, ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் அனைத்துலக வணிக மத்திய அமைச்சருமான (Small Business, Export Promotion and International Trade)  Mary Ng கனடிய பிரதமர் யஸ்ரின் ரூடோ சார்பாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தைப் பொங்கல் திருநாளை – தமிழர் திருநாளை –  சீரோடும் சிறப்போடும் பேரோடும் புகழோடும் நடத்தி  முடித்த கனடியத் தமிழர் பேரவையின் தலைவர், செயலாளர், பொருளாளர், நிறைவேற்று இயக்கினர் மற்றும் இயக்கினர் அவை உறுப்பினர்கள்  எல்லோரதும் பாராட்டுக்கு உரியவர்கள்.

கனடாவில் நுழைவாயிலில் நுழைவுச் சீட்டுக்களை விற்காது விழாவுக்கு முன்னரே ஆயிரம் சீட்டுக்களை விற்றுச் சாதனை படைக்கும் ஒரே அமைப்பு கனடியத் தமிழர் பேரவை மட்டுமே. ஒவ்வொரு ஆண்டும் தக்காரை அழைத்து விருது வழங்கி மேன்மைப் படுத்துவதும்  தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை நிமிர்த்துவதிலும் கனடியத் தமிழர் பேரவை உழைத்து வருகிறது.

முல்லைத்தீவில் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கு ஒரு கடை கட்டப்பட்டு வருகிறது. அது போலவே தென்னமரவடியில் போர்க் காலத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றி அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த  ஒரு  பால் பண்ணையை நிறுவுவதற்கான திட்டமும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு வேண்டிய காணியை முன்னைய அரசிடம் இருந்து குத்தகைக்கு எடுத்து அதனைப் துப்பரவாக்கி யானை வேலி அடைத்து அதில் மாடு, ஆடு, எருமை போன்றவற்றை வளர்க்கும் பால் பண்ணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்கு கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கனடா திருகோணமலை நலன்புரிச் சங்கமும் பங்களிப்புச் செய்துள்ளன. இதனால் மீள் குடியேறிய 80  க்கும் அதிகமான குடும்பங்கள் பயன் அடைவார்கள். இதே போன்ற ஒரு பால் பண்ணையை மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடக்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேடையில் பேசியவர்கள் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள். ஒரு சிலரே பொங்கல் வாழ்த்தோடு தைப் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்கள். அதில் மருத்துவர் சத்தியமூர்த்தியும் ஒருவர். Image result for jaffna teaching hospital

தை மாதத்தை தமிழர்களின் மரபுத் திங்களாக அறிவிக்கப்படுவதற்கு பொங்கல் மற்றும் பட்டிப் பொங்கல்  ஆகியன மட்டும் காரணமல்ல. தை முதல் நாளில்  புத்தாண்டு – திருவள்ளுவர் தொடராண்டு – பிறப்பதும் அந்த மாதத்துக்குள்ள சிறப்பாகும்.

மேடையில் தொங்கவிடப்பட்ட  பதாதை  ஆங்கிலத்தில் மட்டும்  பொங்கல் என  எழுதப்பட்டிருந்தது. தமிழ்மொழி முற்றாக மறக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்டிருந்தது. இந்த விடயத்தில் தமிழர்கள் சீனர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இருக்கிறது.

சீனர்களுக்குச் சொந்தமான கடைகள், அலுவலகங்கள் போன்றவற்றின் பெயர்களை சீன மொழியில்  பெரிதாக எழுதி வைக்கிறார்கள். ஆங்கிலத்தில் சின்னதாக எழுதி வைக்கிறார்கள். சீனர்கள் செறிந்து வாழும் இடங்களில் தனியே சீன மொழியில் மட்டும் பெயர்களை எழுதி வைக்கிறார்கள். கனடாவின் அரச மொழிகளான ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழியில் ஏன் எழுதி வைக்கவில்லை என்று கேட்டால் தமது வாடிக்கைகாரர்கள் சீனர்கள் என்று சொல்கிறார்கள்.

சீனர்களுக்கு இயற்கையாகவே மொழிப்பற்று இருக்கிறது. இரண்டு சீனர்கள் சந்தித்துக் கொண்டால் சீனமொழியில்தான் பேசிக் கொள்வார்கள். தங்களது பெயர்களை சீன மொழியில் வைத்துக் கொள்கிறார்கள். முதற் பெயர் ஆங்கிலத்தில் இருந்தாலும் குடும்பப் பெயரை மாற்ற மாட்டார்கள்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் மருந்துக்கேனும் தமிழில் பேசவில்லை. தமிழ்த் தெரியாத அரசியல்வாதிகள், பிரமுகர்கள் வருகை தந்திருந்தார்கள் என்பது உண்மை. அதற்காகத் தமிழ்மொழி ஒதுக்கப்படுவதை மன்னிக்க முடியாது! அதுவும் தை மாதம் தமிழர்களுடைய மரபுரிமைத் திங்கள் என உலகத்துக்கு தண்டோரா போட்டு அறிவித்து விட்டு தமிழை ஓரங்கட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. (நக்கீரன்)

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply