மருத்துவர் சத்தியமூர்த்தியின் கல்வித் தொண்டைப் பாராட்டி ஈகை அறக்கட்டளை மதிப்பளிப்பு!
வறியேர்ர்க்கு தேவையாவற்றை வழங்குவதே ஈகை என்னும் அறச் செயலாகும். ஏனையோர்க்குக் கொடுப்பது அனைத்தும் பயனை எதிர்பார்த்துக் கொடுப்பதாகும்.
இந்தக் குறட்பாவை நோக்காகக் கொண்டு ஈகை அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. இதுவொரு இலாப நோக்கம் இல்லாத அமைப்பாகும். இது நிதி, அறிவாற்றல், தன்னார்வ அணுகல், செயல்பாட்டு நிபுணத்துவம் போன்ற துறைகளில் ஏனைய நிறுவனங்களோடு சேர்ந்து பணியாற்றும்.
தமிழ்ச் சமூகத்துக்குச் சொந்தமான அதனால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தொலைக் காட்சியின் உரிமையை விற்றதன் மூலம் வந்த ஒரு மில்லியன் டொலர் நிதியை முதலாகக் கொண்டு ஈகை அறக்கட்டளை இரண்டாட்டுக்கு முன்னர் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிதி மாதம் 7,000 டொலர் வீதம் இன்றைய தமிழ்த் தொலைக் காட்சி உரிமையாளர்களால் ஈகை அறக்கட்டளைக்குமச் செலுத்தப்படும்.
ஈகை அறக்கட்டளையின் கூட்டம் ஒன்று கடந்த சனவரி 17 இல் J & J Swagat Banquet Hall இல் இடம் பெற்றது. ஏராளமான நண்பர்கள், கொடையாளர்கள் இதில் கலந்து கொண்டார்கள். இதன் போது தாயகத்தில் இருந்து கனடாவுக்கு வருகை தந்திருந்த மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்களின் மக்கள் தொண்டைப் பாராட்டு முகமாக அவருக்கு அறக்கட்டளை சார்பில் மருத்துவர் வி. சாந்தகுமார் கேடயம் வழங்கி மேன்மைப் படுத்தப்பட்டார். மருத்துவர் சத்தியமூர்த்தி தற்போது யாழ்ப்பாணம் கற்கை நெறி மருத்துவமனையின் முதன்மை இயக்குநராக கடமையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவர் சத்தியமூர்த்தி கிளிநொச்சி மாவட்டத்தில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பின்னேர வகுப்புகளை நடாத்தி பாடங்களைக் கற்பித்துக் கொடுக்கும் 10 பின்நேரப் பள்ளிகளை நடத்தி வருகிறார். இதற்கான நிதியை கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளை மூலம் திரட்டுகிறார். இதற்காக மருத்துவர் சத்தியமூர்த்தி கடந்த எட்டு ஆண்டுகளாக கனடாவுக்கு வருகை தந்திருகிறார்.
வன்னி மாவட்டத்தில் மேலும் ஒரு பின்நேரப் பள்ளியைத் தொடக்குவதற்கான நிதியை ஈகை அறக்கட்டளை கொடுத்து உதவியுள்ளது. விரைவில் இந்தப் பின்னேரப் பள்ளி திறந்து வைக்கப்படும்.
இந்தக் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை பல்கலைக் கழக மாணவர்களுக்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு கடன் வழங்குகிறது. நடந்து முடிந்த போர் காரணமாக ஏற்பட்ட கல்வித் தேக்க நிலையை மீள் நிலைப்படுத்தும் நோக்கமாக கிளிநொச்சி கல்வி அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. அதன் முக்கிய செயல்த் திட்டமான உயர் கல்வி கற்கும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு கடன் வழங்கும் திட்டத்துக்கு நன்கொடையாக கடந்த 2012 ம் ஆண்டு கிளிநொச்சி மக்கள் ரூபா 720,000.00 வழங்கினார்கள். ஆண்டு தோறும் பல்கலைக் கழகம் புகும் மாணவர்களுக்கு தலைக்கு ரூபா 5000.00 இந்த நிதியில் இருந்து கடனாக வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இறுதியில் இலங்கையின் நேர்மையான, ஊழலற்ற முதற்தர அதிகாரி உயர் விருது மருத்துவர் சத்தியமூர்த்திக்கு வழங்கப்பட்டது தெரிந்ததே. அங்கிங்கு இல்லாதவாறு ஊழல் மலிந்து கிடக்கும் அரச சேவையில் மருத்துவர் சத்தியமூர்த்தி போன்றவர்களைக் காண்பது அரிதாகும். யாழ்ப்பாணம் கற்றல் மருத்துவனையின் முதன்மை இயக்குநராகப் பணியாற்றும் மருத்துவர் சத்தியமூர்த்தி கால நேரம் பாராது, சிறந்த முகாமைத்துவம், விடாமுயற்சி, கடின உழைப்பு, ஊழலற்ற நிருவாகம், பாகுபாடற்ற மருத்துவமனையாக மாற்றிக் காட்டியுள்ளார்.
போர்க்காலத்தில் மிகவும் நெருக்கடிகளின் மத்தியில் மருத்துவப் பணியாற்றிய மருத்துவர் சத்தியமூர்த்தி, வன்னி மண்ணில் வாழ்ந்து மக்கள் தொண்டாற்றி வருகின்றார். இவருக்குக் கிளிநொச்சி மக்கள் அமைப்பு மண்ணின் மைந்தன் என்ற விருதை வழங்கியமை இங்கு நினைவுகூரத்தக்கது. (நக்கீரன்)
Leave a Reply
You must be logged in to post a comment.