அரசமைப்பு உருவாக்க முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து  அதனைப் பூர்த்தி செய்யுங்கள்!

அரசமைப்பு உருவாக்க முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து  அதனைப் பூர்த்தி செய்யுங்கள்!

ஜனாதிபதி கோட்டாவிடம் சுமந்திரன் நாடாளுமன்றதில் கோரிக்கை

கொழும்பு, ஜன. 08, 2020

கடந்த அரசின் காலத்தில் இந்த நாடாளுமன்றமே ஏகமனதான தீர்மானம் மூலம் அரசமைப்புப் பேரவையாக மாறி, புதிய அரசமைப்பு உருவாக்க நடவடிக்கைகளை ஆரம்பித்தது. அது கணிசமான அளவு முன்னேறியுள்ளது. அந்தப் பணியை அப்படியே முன்னெடுத்து, இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் ஏற்புடையதான புதிய அரசமைப்பு உருவாக்கத்தைப் பூர்த்தி செய்யுங்கள்.

– இப்படி புதிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை நேற்று நாடாளுமன்ற உரை மூலம் கோரியிருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்.

கடந்த மூன்றாம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஆற்றிய அவரது கொள்கை விளக்க உரை மீதான விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அந்த உரையில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

எனது இந்த அறிக்கையானது கடந்த ஜனவரி மூன்றாம் திகதி அன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் முன்வைக் கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பானதாகும். இக்கொள்கை பிரகடனமானது கடந்த மூன்று தசாப்தங்களாக ஆட்சி புரிந்த அரசாங்கங்களின் பொதுவான திசையிலிருந்து விலகிச் செல்லுகின்ற அறிகுறிகளைக் கொண்டிருப்பதினால் இது மிக அவதானமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஜனாதிபதி கடந்த நவம்பர் 16, 2019 அன்று மிக முக்கியமான வெற்றியை பெற்றுக் கொண்டார். இந்தப் பாரிய வெற்றியில் காணப்படும் பிரச்சினைக்குரிய விடயம் யாதெனில் பெரும்பான்மை யான சிங்கள,பெளத்த மக்களை தவிர ஏனைய மக்கள் ஜனாதிபதி அவர்களில் நம்பிக்கை வைப்பதற்கு தயாராக இல்லை என்பதாகும். இதை எவ்விதத்திலும் ஜனாதிபதி மீது அவதூறு கொண்டு வரும் நோக்கில் நான் கூறவில்லை. மாறாக, தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒன்றிணைந்த நாடாக நாம் இருக்கவேண்டுமன்பதில் கரிசனையாக இருந்தால், இத்தகைய ஒரு முக்கியமான அம்சத்தினை நாம் புறக்கணிக்க முடியாது என்பதனை சுட்டிக்காட்டவே இந்தக் கருத்தினை முன்வைக்கின்றேன்.

ஒரு நாட்டின் செல்வாக்கு மிக்க தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்விலே அவரது சொந்த மக்கள் அவரில் நம்பிக்கை வைக்கிறார்களா என்பது முக்கியமானது அல்ல. மாறாக, ஏனைய மக்கள் அவரில் நம்பிக்கை வைக்கத் தயாராக உள்ளார்களா என்பதே முக்கிய மாகும். துரதிஷ்டவசமாக இது இன்னும் நடைபெறாத ஒன்றாகவே காணப்படுகின்றது.

ஜனாதிபதி தனது வெற்றிக்குபின் வெளியிட்ட இரண்டு கருத்துக்களில் இந்த விடயம் தொடர்பில் தாம் தெளிவான விளக்கத்தோடேயே உள்ளார் என்பதை வெளிப்படுத்தியிருந்தார். ருவன்வெலிசாயவில் இடம் பெற்ற பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி இதனைக் கூறியிருந்த அதேவேளை மிகத்தெளிவாக தான் முழு நாட்டிற்கும் ஜனாதிபதி என்றும், தனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் தானே ஜனாதிபதி என்பதனையும் சேர்த்தே கூறியிருந்தார்.

எமது நாடானது பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள், சமயங்கள், இனங்கள் என்பவற்றை பிரதிபலிக்கும் பன்முகத்தன்மை கொண்ட மக்களைக் கொண்ட ஒரு நாடு என்பதை ஏற்றுக்கொண்டு, ஜனாதிபதி இந்த இடை வெளியைக் குறைக்க நடவடிக்கை எடுப்பார் என்பது எமது எதிர்பார்ப்பாகும். இந்த ஒவ்வொரு மக்களின் சமத்துவம் என்பது அவர்களின் எண்ணிக்கையின் பலத்திலே தங்கியிருக்கவில்லை. ஜனநாயகமானது தப்பிப்பிழைக்க வும், செழிப்படையவும் வேண்டுமேயன்றி வெளிப்படையான பேரினவாதத்தை நோக்கி செல்லாமல் இருக்க வேண்டுமென்றால், இந்த கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் கவலைக்கிடமாக ஜனவரி மூன்றாம் திகதி 2020, நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் அத்தகைய பின்னடைவான ஒரு நிலைப்பாட்டினை ஜனாதிபதி தெரிவித்திருந்தார். பிரச்சினை உருவாவதற்கு வழி சமைத்து, அது ஆயுதப் போராட்டமாக உருவெடுத்து, மூன்று தசாப்தங்களாக பல தீமைகளை கொண்டு வருவதற்கு காரணமாக இருந்த எமது நாட்டின் தலைவர்களின் பின்னடைவான சிந்தனைக்கு ஒத்த சிந்தனையாக அது அமைந்திருந்தது.

எமது கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சி அல்லது பெடரல் கட்சி என அறியப்பட்ட கட்சி குடியுரிமை சட்டத்தின் விளைவாக பிறந்த ஒரு கட்சியாகும். இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம் ஆனது முதலாவது பாராளுமன்றத்தில் 7 அங்கத்தவர்களை கொண்டிருந்த கிட்டத்தட்ட 8 லட்சம் மக்களின் வாக்குரிமையை ரத்து செய்தது. பெரும்பான்மையினரின் விருப்பம் என்ற பெயரிலேயே ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையை இது பறித்தது. மேலும் அவர்களுடைய குடியுரிமையையும் அதை இல்லாமல் செய்தது. சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தின் பேரினவாத செயற்பாடு காரணமாகவே இலங்கை தமிழரசுக் கட்சி எனும் இன அடிப்படையிலான ஒரு கட்சி உருவாவதற்கான தேவை உண்டாகியது என்பதனை இந்த நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

1956 ஆம் ஆண்டு அரச மொழிகள் சட்டமானது சிங்கள மொழியினை மாத்திரம் அரச கருமமொழியாக ஏற்றுக் கொண்டதை அடுத்து இந்த பேரினவாதம் மேலும் புலப்படும் வகையில் உருப்பெற்றதை நாம் கண்டோம். நமது தலைவர்கள் அமைதியான முறையிலே காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட பொழுது தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது. அது பின்னர் தொடர்ச்சியான அவ்வப்போது படுகொலைகளாக மாறியது.

முதலாவது குடியரசு யாப்புவரையப்பட்ட பொழுது மொழிகள் தொடர்பில் இருந்த அநீதியை திருத்துவதற்கு எமது கட்சி முயற்சி செய்தது J.A.L. குரே அவர்கள் இலங்கையின் அரசமைப்பு மற்றும் நிர்வாக சட்டங்கள் என்னும் தனது ஆய்வுக் கட்டுரையின் 81ஆவது பக்கத்திலே பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

அரசமைப்பு சபையானது 1971ம் ஆண்டு ஜூன் 28 ஆம் திகதி மொழி தொடர்பிலான சட்டத்தினை 88 வாக்குகளினால் நிறைவேற்றியது (10 அங்கத்தவர்கள் வாக்களிக்க வில்லை), அச்சட்டமானது பின் வருமாறு அமைந்திருந்ததது,

அனைத்து சட்டங்களும் சிங்கள மொழியில் இயற்றப்பட்ட வேண்டும், அவ்வாறு இயற்றப் படுகின்ற ஒவ்வொரு சட்டத்திற்கும் தமிழாக்கம் இருத்தல் வேண்டும். பெடரல் கட்சி பின்வரும் திருத்தங்களை முன்மொழிந்திருந்தது:-

சிங்களமும் தமிழும் –

a) சட்டங்கள் இயற்றப்படும் மொழிகளாக இருத்தல் வேண்டும்
b) அரச கரும மொழிகளாக இருத்தல் வேண்டும்
c} நீதிமன்றங்களின் மொழி களாக இருத்தல் வேண்டும்
d) அனைத்து சட்டங்களும் வெளியிடப்படும் மொழிகளாக இருத்தல் வேண்டும்.

– இந்த முன்மொழிவுகள் அனைத்தும் 88 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டன. இவற்றிக்கு ஆதரவாக 13 வாக்குகள் கிடைத்தன. இந்த திருத்தங்களின் விவாதங்களின் பின்னர் பெடரல் கட்சியின் தலைவரான எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் சபையில் உரையாற்றியிருந்தார். அந்த உரையில், முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியல் யாப்பிலே தமிழ் பேசும் மக்களின் மொழி உரிமை திருப்திகரமாக அமையவில்லை என்பதினாலே இந்த சபையின் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுவது நன்மையளிக்காத விடயமாகும் என்றும், அன்றைய தினம் சபையின் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுகின்ற வேளைக்கு பின்னர் தாம் சபைக்கு சமுகமளிக்க போவதில்லை என்றும் தெரிவித்தார்.

எமது கட்சியின் முயற்சிகள் வீண்போன அதேநேரம், பேரினவாத அரசமைப்பு சட்டம் 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.  இது 1978 ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு யாப்பு உருவாக்கப்பட்டபோதும் நடைபெற்றது. இதன் பிற்பாடே ஆயுதம் ஏந்தாத தமிழ் மக்கள் பெருவாரியாக கொலைசெய்யப்பட்ட 1983ஆம் ஆண்டு கருப்பு யூலைச் சம்பவங்கள் இடம்பெற்றன.

இதன்போது இந்தியா தனது நன்னோக்கான ஈடுபாடு காரணமாக இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதற்கமைய இங்கு சம்பந்தப்பட்டு தமிழர்களிற்கு வரலாற்று ரீதியாக நடந்த அநீதிகளை சரி செய்யமுன்வந்தது.

1987ஆம் ஆண்டு நாட்டிலுள்ள மக்களின் பன்முகத் தன்மையினை ஏற்றுக்கொண்டு அரசமைப்பைச் சீர்திருத்துகின்ற சரியான திசையில் நாடு பயணிக்க ஆரம்பித்தது. எண்ணிக்கையில் குறைவாக உள்ள மக்களும் தமது பிராந்தியங்களில் நிர்வாகத்தினை மேற்கொள்ளக் கூடிய அதிகாரங்களை கொண்ட மாகாண சபைகள் உருவாக்கப் பட்டன. சிங்கள மொழியோடு கூட தமிழும் அரச கரும மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.

இந்த ஆரம்ப நடவடிக்கைகள் நாங்கள் விலக்கிவைக்கப் பட்டிருந்த தேசிய நீரோட்டத்தில் மீண்டும் இணைய வழிவகுத்தது. தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன.

ஜனாதிபதி பிரேமதாசாவின் காலத்தில் மங்கள முனசிங்க தலைமையிலான நாடாளுமன்றத் தெரிவுக்குழு, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் கொண்டு வரப்பட்ட ஓகஸ்ட் 2000 அரசியல் யாப்பு பத்திரம் மற்றும் ஜனாதிபதி மஹிந்த இஇராஜபக்சவின் காலத்தில் சர்வ கட்சி அங்கத்தவர் குழுவின் நடவடிக்கைகள் போன்றன இவற்றுள் உள்ளடங்கும்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான இறுதிப் போரின்போது, யுத்தம் முடிவடைந்ததும் இந்தியா உட்பட சர்வதேச சமூகத்திற்கு தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை அரசியல் ரீதியாக அதிகாரப் பரவலாக்கத்தின் ஊடாக தீர்க்கப்படும் என்ற உறுதியை ஜனாதிபதி இராஜபக்ச அரசாங்கம் வழங்கியிருந்தது. இந்த உறுதிமொழி குறைந்தது மூன்று தடவை இந்தியாவிற்கு வழங்கப்பட்டது, அதிலே 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை அடையும் நோக்கில் 13 ஆவது திருத்தச்சட்டம் மேலும் கட்டியெழுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதிலே 13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை அடையும் நோக்கில் 13ஆவது திருத்தச் சட்டம் மேலும் கட்டியெழுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.13ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் என்பது தேசிய மொழியான தமிழ்மொழியின் முழுமையான அமுலாக்கத்தையும் உள்ளடக்குகின்றது.

2015 ஆம் ஆண்டு சிறிசேன – விக்கிரமசிங்க அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 2016 ஆம் ஆண்டு மார்ச் நாடாளுமன்றத்தை அரசியல் சாசன சபையாக மாற்றும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  உள்ளடங்கலாக அனைத்து கட்சிகளின் பங்குபற்றுதலோடு வழிகாட்டல் குழு மற்றும் ஏனைய உப குழுக்கள் இது தொடர்பில் அநேக காரியங்களை முன்னெடுத்து வந்துள்ளன.

இந்த நாட்டின் நன்மையைக் குறிக்கோளாக கொண்டு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் இந்த நடவடிக்கைகளில் நாம் பூரணமான ஒத்துழைப்பை வழங்கியிருந்தோம். எமது மக்கள் அனைத்து மக்களினதும் பன்முகத்தன்மையையும் சமத்துவத்தையும் அங்கீகரிக்கும் ஒன்றிணைந்த, பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டுக்குள் தீர்வொன்றை எட்ட இன்னமும் தயாராக இருக்கின்றார்கள். அதனடிப்படையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படவேண்டும் என்கின்ற ஜனாதிபதியின் கருத்தோடு நாம் உடன்படுகின்றோம்.

சுதந்திரமடைந்ததன் பிற்பாடு எமது சமூகத்தின் பன்முகத்தன்மையினை அர்த்த முள்ளவகையில் அங்கீகரிக்க முடியாமல் இருந்த பின்னணியினை கடந்த 30 வருடங்களில் நாம் எடுத்து வரும் பல்வேறு சாதகமான நடவடிக்கைகளால் மாற்ற முயன்று வருகின்றோம். நாம் இன்னும் பயணிக்க வேண்டியிருக்கின்றது. இந்த நாடு செழிப்படைய வேண்டும் என்றால் நாம் அதே நோக்கில் பயணிக்க வேண்டும். மாறாக அந்த பாதை யில் இருந்து விலகும் எத்தகைய நடவடிக்கையும் எம் அனைவரையும் பாரிய அழிவிற்கே இட்டுச் செல்லும்.

இந்த அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படும் அநேகர் சிங்கப்பூரானது எவ்வாறு தம் மக்கள் மத்தியில் தேசிய நல்லிணக்கத்தினையும் செழிப்பினையும் அடைந்துள்ளது என கூறுவ தனை அவதானித்துள்ளேன். நாம் விரும்புவதை மாத்திரம் பொறுக்கிக்கொள்ளாமல் இருப்போமேயாகில் சிங்கப்பூர் ஒரு நல்ல உதாரணம். சிங்கப்பூர் நான்கு தேசிய மொழிகளை கொண்ட நாடு, அவர்களின் தேசிய கீதமானது மொத்த சனத் தொகையில் 15 வீதத்தை மாத்திரம் கொண்ட மலே மக்களின் மொழியில் இசைக்கப்படுகிறது. நவீன சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்படும் லீ குவான் யூ வின் அறிவுரைக்கு செவிமடுப்பது சாலத் தகுந்தது எனக் கருதுகிறேன்.

“பிரித்தானியாவின் மாதிரி பொதுநலவாய நாடு சிலோன் ஆகும். சுதந்திரத்தினை நோக்கி மிக அவதானமாக தயார்படுத்தப்பட்ட ஒரு நாடாகும். யுத்தத்தின் பின்னர் 10 மில்லியனிற்கும் சற்று குறைவான மக்களை கொண்ட ஒரு நடுத்தரளவிலான நாடு.1948 இல் சிலோன் சுதந்திரம் பெற்ற போது சுதந்திரத்தின் பரிணாம வளர்ச்சிக்கு மிகத் துல்லியமான ஒரு மாதிரியாக அது விளங்கியது. ஆனால் அது அவ்வாறு செயற்படவில்லை. ஒரு வளமிக்க நாடு வீணாய் போய்க் கொண்டிருப்பதனை எனது விஜயங்களின் போது நான் கண்டேன்.

 “ஒரு மனிதன் – ஒரு வாக்கு’ என்ற அடிப்படையினால் ஓர் அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை; தீர்க்க முடியாது. 8 மில்லியன் சிங்கள மக்கள் 2 மில்லியன் தமிழ் மக்களை தேசிய மொழியான ஆங்கிலத்திலிருந்து சிங்களத்திற்கு மாறும்படிக்கு வாக்குகளினாலே தோற்ககடித்தார்கள். இது தமிழ்  மக்களிற்கு பாரிய பின்னடைடைவை ஏற்படுத்தியிருந்தது. எந்தவொரு அரச மதமும் இல்லாமல் இருந்த ஒரு நாட்டிலே சிங்களவர்கள் பெளத்த மதத்தினை தேசிய மதமாக மாற்றினார்கள். இதனால் தமிழர்களும் இந்துக்களும் நிராக ரிக்கப்பட்டதனை உணர்ந்தார்கள்.” – என்று குறிப்பிட்டார் லீ குவான்யூ.

ஜனாதிபதியின் கொள்கை விளக்கத்தின் படி அவர் தவறான திசையில் – பெரும்பான்மைவாதப் பாதையில் – செல்கின்றார் என்பது தெரிகின்றது. அது இந்த நாட்டுக்குப் பெரும் பாதிப்பைத் தரும். எம்மைப் பொறுத்தவரை பிளவுபடாத, பிரிக்க முடியாத, ஐக்கிய நாட்டுக்குள் ஒன்றுபட்டு வாழ்வதற்கு நாங்கள் இன்னும் சித்தமாயுள்ளோம் – அதுவும் சமனான பிரஜைகளுக்கான உரிமைகளோடு, சமமான மத, மொழி, கலாசார உரிமைகளோடு, ஒரு தரப்பாரை விட இன்னொரு தரப்பார் உயர்ந்த நபர்கள் அல்லர் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சேர்ந்து வாழ நாம் தயாராக இருக்கின்றோம். சகல பிரஜைகளுக்கும் சமத்துவமான உரிமை என்பது அர்த்தமுள்ள வகையில் நடைமுறைப் படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஆட்சி அதிகாரங்கள் பகிரப்பட்டிருக்க வேண்டும்.

புதிய ஜனாதிபதி கோட்டாபய  இராஜபக்சவை ஆதரிக்கும் இந்த அரசுக்கு இந்த நாடாளுமன்றம் அரசமைப்புப் பேரவையாக மாறி புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தெரியும். அந்த முயற்சிகள் இன்னும் உயிரோட்டமாக உள்ளன. அவை முடிந்து விடவில்லை. இந்தச் சபை ஏகமனதாகக் கூடித்தான் அத்தகைய அரசமைப்பை உருவாக்குவதற்கும் தீர்மானித்தது. அதில் நீங்கள் அனைவருமே பங்கு பற்றியிருந்தீர்கள்.

இங்கு பேசிய ஜனாதிபதி புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்கப் பட வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த அரச மைப்பில் இடம் பெற வேண்டிய மூன்று விடயங்களை அவர் குறிப்பிட்டிருந்தார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி, தேர்தல் முறைமை, மாகாண சபைகள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த மூன்று விடயங்கள் தான் இந்த நாடாளுமன்றம் அரசமைப்புச் சபையாக மாற் றப்பட்ட போதும் அதனால் அடை யாளம் காணப்பட்டன. அது தொடர்பில் உங்கள் ஒவ் வொரு வரினதும் பங்களிப்புடனும் அனேக விடயங்கள் இங்கு செய்யப்பட்டிருக்கின்றன.

ஆகையினால், அந்த முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து அதனைப் பூர்த்தி செய்யும்படி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுகின்றேன். “எனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் நானே ஜனாதிபதி’  என்று ஜனாதிபதி கோட்டபாய இராஜபக்ச கூறியிருக்கின்றமை யால், அதனடிப்படையில் இந்த நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பினரதும் அபிலாசைகளையும் பூர்த்தி செய்யும் விதத்தில் அவர்கள் அனைவருக்கும் திருப்தி தரும் வகையில் இந்த அரசமைப்பு உருவாக்க முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து பூர்த்தி செய்யுமாறு நான் விநயமாக ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply