சர்வதேச ஒப்பந்தங்களின் அடிப்படையில் எமக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையுண்டு, அது மறுக்கப் பட்டால் வெளியக சுயநிர்ணய உரிமை கேட்போம்!
தமிழ் அரசுக் கட்சியின் 70 ஆவது ஆண்டு விழாவில் இரா சம்பந்தன்
நக்கீரன்
சர்வதேச ஒப்பந்தங்களின் அடிப்படையில், எமக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையுண்டு, அது மறுக்கப்பட்டால் அதற்கு வெளியக சுயநிர்ணய உரிமையைக் கேட்போம். எதிர்காலத்தில் சர்வதேச ரீதியாக மற்றும் உள்நாட்டில் நிறைவேற்ற வேண்டிய நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என்றால் தமிழ் மக்கள் தமது ஆணையை முழுமையாக எங்களுக்கு வழங்கவேண்டும். மக்களின் ஆணையில் ஒரு பகுதி கூட வேறு யாருக்கும் போகக் கூடாது. இவ்வாறு யாழ்ப்பாணத்தில் டிசெம்பர் 18, 2019 அன்று இடம் பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இரா சம்பந்தன்வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் பேசும் போது,
” முக்கியமாக எமது மக்களை எதிர் நோக்குகின்றது உங்கள் எல்லோரையும் எதிர்நோக்குகின்றது எங்களது எதிர்காலம். எங்களது எதிர்காலத்தில் நாங்கள் எப்படிச் செயல்படப் போகிறோம், இலங்கை தமிழ் அரசுக் கட்சி தன்னுடைய கொள்கைகளை நிறைவேற்றுவதற்கு தங்களுடைய இலக்கை அடைவதற்கு எதிர்காலத்தில் நாம் என்னவிதமாகச் செயல்ப்படப் போகிறோம் என்பதுபற்றி எமது கருத்துக்களை அறிவதற்கு நீங்கள் ஆவலாக இருக்கிறீர்கள். நீங்கள் எங்களுடைய கருத்தைச் அறிந்தால்தான் உங்களுடைய கருத்தை எமக்குச் சொல்லி அதன் அடிப்படையில் நாம் எதிர்காலத்தில் செயற்படலாம்.
“1987 ஆம் ஆண்டு ஆடி மாதம் 29 ஆம் திகதி இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அது ஒரு சர்வதேச ஒப்பந்தம். தன்னிச்சையாக ஒரு நாடு அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலக முடியாது. அது நிறைவேற்றப்படவேண்டும். அது ஒரு சர்வதேசக் கடமை. 1988 ஆம் ஆண்டு 13 ஆம் திருத்தச் சாசனம் நிறைவேற்றப்பட்டது. அதுதான் அரசியல் சாசன ரீதியாக ஏற்பட்ட முதல் ஆட்சி அதிகாரங்களைப் பொறுத்தவரையில் முதல்த் திருத்தம். அது இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அது முழுமையாக நிறைவேற்றப்படவேண்டும். அது நிறைவேற்றப்படுமென்ற பல வாக்குறுதிகளைப் பல அரசுகள் கொடுத்திருக்கின்றார்கள். அவற்றை அவர்கள் இன்னமும் நிறைவேற்றவில்லை.
13 ஆவது அரசமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட பிறகு அது ஒரு முழுமையான அரசியல் தீர்வாக அமையவில்லை என்ற காரணத்தினால், விசேசமாக அந்தத் திருத்தத்தின் அடிப்படையில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி பங்குபற்றிக் கொள்ளாத காரணத்தின் நிமித்தம் அதற்குப் பிறகு வந்த அரசாங்கங்கள், அதில் ஜனாதிபதி இரணசிங்க பிரேமதாச காலத்திலிருந்த அரசாங்கம், மங்கள முனசிங்க தெரிவுக் குழுவின் மூலமாக அந்த 13 ஆவது அரசியல் சாசனத்தை முன்னேற்றுகின்ற ஒரு பிரேரனையை முன் வைத்திருக்கின்றார்கள். அதற்குப் பிறகு ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தன்னுடைய காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த புதிய அரசியல் சாசனம் (சிறிலங்கா ஒன்பது பிராந்தியங்களைக் கொண்ட குடியரசு). அதில் உள்ளடங்கியிருக்கின்ற அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக ஒரு பரிந்துரைப்பு வைக்கப்பட்டிருக்கின்றது.
மூன்றாவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினுடைய காலத்தில் நிபுணர் குழுவை நியமித்து ஒரு சர்வகட்சி மாநாட்டை அமைத்து அதற்குப் பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்களைத் தலைவராக நியமித்து அவர்கள் தங்களது அறிக்கைகயைச் சமர்ப்பித்திருந்தார்கள்.
மகிந்த இராசபக்சா தனது ஆரம்ப உரையில் கூறியது என்னவென்றால் அதியுச்ச அதிகாரப் பகிர்வு நடைபெறவேண்டும். அந்தந்தப் பகுதியில் வாழுகின்ற மக்கள் தங்களுடைய தலைவிதியைத் தாங்களே நிர்ணயிக்கக் கூடிய நிலைமைகள் இருக்கவேண்டும். அவ்விதமான அதிகாரப் பகிர்வு உருவாகவேண்டும். உலகத்தில் பல்வேறு நாடுகளில் இந்த விடயம் சம்பந்தமாக வெவ்வேறு முறையில் அதிகாரப் பகிர்வு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. அவற்றையெல்லாம் படித்து ஓர் அறிக்கையை நீங்கள் சமர்ப்பிக்கும் படியாகக் (மகிந்த) கேட்டிருந்தார்.
அதனை நிபுணர் குழுவும் அறிவித்திருக்கின்றார்கள். போராசிரியர் திஸ்ஸ விதாரணவும் அறிவித்திருக்கின்றார். இவை மூன்றும் 13 ஆம் அரசியல் சாசனத்தை நியாயமான அளவிற்கு முன்னேற்றுகின்ற முயற்சிகள். இவை பதிவில் இருக்கின்றன. அடுத்தடுத்து வந்த அரசாங்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்த விடயங்கள். ஒரு முப்பது கால எல்லைக்குள் 88 ஆம் ஆண்டு முதலாவது அரசியல் திருத்த சாசனம் உருவாக்கப்பட்டது. இவை மூன்றும் 13 ஆவது அரசியல் சாசனத்தை நியாயமான அளவுக்கு முன்னேற்றுகின்ற முயற்சிகள், முடிவுகள் பதிவில் இருக்கின்றன.
அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள். ஒரு முப்பது வருட கால எல்லைக்குள் நடந்தன. அதாவது 88 ஆம் ஆண்டு முதலாவது சாசனத் திருத்தம் நிறைவேற்றப் பட்டது. நாங்கள் தற்போது 2019 ஆம் ஆண்டில் இருக்கின்றோம். இந்த முயற்சிகள் 30 ஆண்டுகளாக முன் எடுக்கப் பட்டு வந்திருக்கின்றன. இவை நிறைவேற்றப்பட வேண்டும். புதிய பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்ட பிறகு ஒரு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அந்தத் தீர்மானத்தின் அடிப்பைடயில் அதிகாரப் பகிர்வை ம் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்கள். முப்பது கால எல்லைக்குள் எடுத்து வரப்படுகின்றது. இவை நிறைவேற்றப்படவேண்டும். இவற்றில் காணப்படுகின்ற முன்னேற்றங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.
புதிய நாடாளுமன்றம் (2015) கூடிய போது ஏகமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வை கையாளக்கூடிய வகையில் ஒரு புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும். பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஏகமனதான பிரேரணை அந்தப் புதிய அரசியல் சாசனத்தில் வரவேண்டும். அந்தப் புதிய அரசியல் சாசனத்தில் நான் கூறிய சகல விடயங்களும் உள்ளடக்கப்பட வேண்டும். இது அரசின் கடமை.
அரசாங்கம் சர்வதேச ரீதியாகச் சில வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கின்றது. அதைப் பாரதப் பிரதமர் மோடிக்கும் கொடுத்திருக்கிறது. பாரதப் பிரதமர் இந்த விடயம் சம்பந்தமாக தன்னுடைய கருத்துக்களைத் தெளிவாகக் கூறியிருக்கின்றார். இலங்கையில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் அத்துடன் முடிவடையவில்லை. தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் இரண்டாம் தரப் பிரஜைகளாகக் கணிக்கப் படுகின்றார்கள். அதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களுக்குச் சமத்துவ அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வு கொடுக்கப்படவேண்டியது அத்தியாவசியம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அவருடைய வெளிவிவகாரச் செயலாளர் பேராசிரியர் ஜி.எல். பீரீசும் இந்திய அரசுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கின்றார்கள். நாங்கள் 13 ஆவது அரசியல் சாசனத் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவோம். அதற்கு மேலதிகமாக அதைக் கட்டியெழுப்பி அர்த்த பூர்வமான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்துவதற்கு நாங்கள் வழிசெய்வோம் என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அது நடைபெற வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. இது விடயம் சம்பந்தமாக இந்திய வெளிவிவகார அமைச்சர், இலங்கை வெளிவிவகார அமைச்சர், இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்கள் பல முறை பேசியிருக்கின்றார்கள். பல வாக்குறுதிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டும்.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பிறகு நியமிக்கப்பட்ட ஒரு முக்கியமான குழு Lessons Learnt and Reconciliation கற்ற பாடங்களும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு. படித்தவர்கள், பெரியவர்கள், நேர்மையானவர்கள், பக்குவமானவர்கள் மகிந்த ராஜபக்சாவால் தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்பட்ட குழு. அந்தக் குழு நாட்டினுடைய முக்கியமான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்திருக்கிறது. நாட்டினுடைய முக்கிய பிரச்சினை என்னவென்றால், இன்றைக்குச் சமத்துவமாக எல்லா இனங்களும் வாழவில்லை. நல்லிணக்கம் ஏற்படுவதற்கு அதியுச்ச அதிகாரப் பகிர்வு இடம்பெறவேண்டும் என்று அந்த நல்லிணக்கக் குழு சிபாரிசு செய்திருக்கின்றது. அதைப்பற்றி இப்போதுதான் பேசுகின்றார்கள்.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பொழுது அதில் இலங்கை அரசு அதியுச்ச அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் ஒரு தீர்வைக் காண்பதற்கு இணங்கியிருக்கின்றது. அதை நாங்கள் வரவேற்கின்றோம். அது நிறைவேற்றப்பட வேண்டுமென்று கூறப்பட்டிருக்கின்றது. ஆகவே அது நிறைவேற்றப்பட வேண்டும்.
கூட்டுக் கதிரைகள் – Co-chairs – இலங்கை அரசுக்கும் வி.புலிகளுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடந்த பொழுது உதவிய நாடுகள் நோர்வே, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு இலங்கை அரசு வாக்குறுதி கொடுத்திருக்கின்றது. அதாவது அதிகாரப் பகிர்வின் ஊடாக நாட்டில் சமத்துவமாக மக்கள் வாழக் கூடிய வகையில் ஓர் அரசியல் தீர்வை ஏற்புடுத்துவோம் என்று சொல்லியுள்ளது.
அந்த நாடுகளும் தங்களுடைய கருத்துகளைக் கூறியிருக்கின்றார்கள். அமைப்பு ரீதியாக மாற்றங்கள் ஏற்பட வேண்டும். ஆழமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அவ்விதமான மாற்றங்களின் ஊடாக ஒரு நியாயாமான, நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்படவேண்டும் எனக் கூட்டுக் கதிரைகள் கூறியிருக்கின்றார்கள். அதே நேரத்தில் அமெரிக்கா தனிப்பட்ட முறையிலும் இலங்கைக்குக் கூறியிருக்கின்றது. அதாவது உங்களுடைய பழைய நிலைமைகளில் உள்ளக சுயநிர்ணய உரிமையைப் பற்றிப் பேசியிருக்கின்றார்கள், சமஷ்டியைப் பற்றி பேசியிருக்கின்றார்கள், அதியுச்ச அதிகாரப் பகிர்வைப் பற்றி பேசியிருக்கின்றாகள். ஆனபடியால் அந்த அடிப்படையில் ஒரு தீர்வு வர வேண்டுமென்றும் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். இவை நிறைவேற்றப் படவேண்டும். இவற்றை நிறைவேற்றுவதற்கு நாங்கள் திட்டங்களை வகுத்து உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் என்னவிதமாகச் செயற்படப் போகின்றோம் என்பதை முடிவெடுத்து அதைச் செய்ய வேண்டும். அதுதான் எங்களுடைய கடமை. அதுதான் எங்களுடைய எதிர்காலம்.
ஓர் அரசியல் தீர்வைப் பேணிப் கொள்ளாத அரசியல்வாதிகள் இன்றைக்கு எங்களுக்குத் தேவையில்லை. கற்பனையில் வாழ்கின்ற அரசியல்வாதிகள் எமக்குத் தேவையில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளிக்கின்ற அரசியல்வாதிகள் எமக்குத் தேவையில்லை. இது ஒரு நீண்ட பயணம். நீண்ட தூரம் நாங்கள் பயணித்திருக்கின்றோம். அதிகாரப் பகிர்வின் அடிப்படையில், அதியுச்ச அதிகாரப் பகிர்வின் அடிப்படையில், பல தேவையான அதிகாரங்களை நாங்கள் பெற்று எமது மக்கள் சமத்துவமாக, நீதி பெற்றவர்களாக, சமாதானமாகவும் கெளரவமாகவும் வாழக் கூடிய நிலைமை ஏற்படவேண்டும்.
இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பிறகு இந்தியாவினுடைய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியன் ஜெயசங்கர் இலங்கைக்கு விஜயம் செய்த பொழுது, இரண்டு நாள்களுக்குப் பிறகு அவர் ஜனாதிபதி கோட்டாபயவுக்குக் கூறிய செய்தி என்ன வென்றால், இந்தியா எதிர்பார்க்கின்றது, இந்தியப் பிரதமர் எதிர்பார்க்கின்றார் நீங்கள் சமத்துவத்தின் அடிப்படையில் (equality) – நீதியின் அடிப்படையில் (justice) – கெளரவத்தின் (dignity) அடிப்படையில் – சமாதானத்தின் (peace) அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும்.
இது சாதாரணமான சொற்கள் அல்ல. ஜனாதிபதி கோட்டாபய இராசபக்ச ஒரு வாரத்திற்குள் இந்தியாவிற்குச் சென்றபோது அவருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சின் பொழுது ஒரு கூட்டாக ஊடக சந்திப்பு நடைபெற்றது. அந்த ஊடக சந்திப்பின் போது இவ்விதமான ஒரு தீர்வை ஏற்படுத்தித் தமிழ் மக்கள் இலங்கையில் கெளரவமாக வாழக் கூடிய சூழ்நிலை ஏற்பட வேண்டுமென்று நாங்கள் இலங்கை அரசிடம் கூறியிருக்கின்றோம். அதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று பிரதமர் மோடி கூறியிருக்கின்றார்.
இவை நடைபெற வேண்டும். இவற்றை நிறைவேற்றுவதுதான் எங்களது கடமை. இவற்றை எவராலும் நிறைவேற்ற முடியாது என்றில்லை. கற்பனையில் வாழ்கின்றவர்களால் நிறைவேற்ற முடியாது. எமது மக்களுடைய அரசியல் தீர்வு சம்பந்தமாக – எமது மக்களுடைய அரசியல் பிரச்சினைகள் சம்மந்தமாக – இதுவரையில் தீவிரமாக, ஆழமாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஈடுபடாதவர்கள் இந்தக் கருமங்களைக் கையாள முடியாது.
அதை எமது மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். எங்களுடைய மக்களுடைய ஒற்றுமை எங்களது முக்கியமான பலம். தந்தை செல்வாவின் முக்கியமான கொள்கைகளைப் பற்றிய நான் இரண்டொரு வார்த்தைகளை இங்கு பேச விரும்புகின்றேன். தந்தை செல்வா தமிழ் பேசும் மக்களை ஒற்றுமைப்படுத்தினார். காரியப்பர், மொகமட், முஸ்தாபா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள். தந்தை செல்வா தமிழ் மக்கள் கெளரவமாக, பாதுகாப்பாக இந்த நாட்டில் வாழ்வதாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கிறார்
தமிழ் மொழிக்கும் தமிழ் மக்கள் வாழுகின்ற பிரதேசத்திற்கும் இடையில் ஒரு பிரிக்க முடியாத தொடர்பு இருக்கின்றது.அவை இரண்டும் ஒன்றாகப் பிணைந்த பொருட்கள். அவை இரண்டும் தமிழ் மக்களுக்குரியவை. தமிழ் பேசும் மொழி எங்கு நிலவுகிறதோ அந்தக் காணி தமிழ் மக்களுக்குரியது. அந்த அடிப்படையில்தான் பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம், இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டன. அவைதான் அடிப்படை. மொழி, தமிழ் மொழி, தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசம் அவர்களுடைய காணி வடகிழக்கு, இதை எமது முஸ்லீம் மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். அது பெரியவருடைய முக்கியமான கொள்கை.
மூன்றாவது இந்தக் கொள்கையின் அடிப்படையில் தமிழ் மக்கள் விசேசமாக வடகிழக்கில் தம்மை ஆதரித்துத் தமிழ் மக்களுடைய ஆணையை பெற்ற தலைவர் தந்தை செல்வா என்பதையும் தமிழரசுக் கட்சி என்பதையும் நிரூபித்தார். அது தொடர வேண்டும். நாங்கள் எமது மக்களுக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.
56 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற ஒவ்வொரு தேர்தல்களிலும், பாராளுமன்றத் தேர்தலிலோ, மாகாண சபைத் தேர்தலிலோ எமது மக்கள் எமது கட்சியை ஆதரித்திருக்கின்றார்கள். அது தொடர வேண்டும். நான் உங்களுக்கு சொல்லிய கடமைகள், நாங்கள் கையாள வேண்டிய கடமைகள். நாங்கள் பொறுப்பெடுக்க வேண்டிய கடமைகள். எதிர் காலத்தில் சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் நாங்கள் நிறை வேற்ற வேண்டிய விடயங்களை நாங்கள் நிறைவேற்றுவது என்றால் உங்களுடைய ஆணையை உறுதியாக நாங்கள் பெற வேண்டும். அந்த ஆணையின் ஒரு பகுதியேனும் வேறு எவருக்கும் போகக் கூடாது. அது முக்கியம். அத்தியாவசியம். இதுதான் எங்களுடைய நிலைப்பாடு.
நாங்கள் தந்தை செல்வா 49 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த காலம் தொடக்கம் இன்றைக்கு நாங்கள் 2019 ஆம் ஆண்டில் இருக்கிறோம். ஆக 70 ஆண்டுகாலமாக ஒரு நீண்ட பயணத்தில் ஈடுபட்டிருக்கின்றோம். நாங்கள் எங்கே போகின்றோம் என்று எங்களுக்கு தெரியும். அந்த இலக்கை அடைவதற்கு எதைச் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நாங்கள் வாக்குறுதிகள் பெறப்பட்டிருக்கின்றன. அவை நிறை வேற்றப்பட வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக சர்வதேச சமூகம் விசேசமாக இந்தியா உட்படப் பல்வேறு நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்கு உதவி புரிந்தார்கள். ஒரு நிபந்தனையின் அடிப்படையில். தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பிறகு நாங்கள் ஒரு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வைக் காண்போம் என்று. தற்பொழுது அந்த வாக்குறுதிகளில் இருந்து (இலங்கை அரசதரப்பினர்கள்) தப்பிக்க முயற்சிக்கின்றார்கள். அதற்கு சர்வதேச சமூகம் இடமளிக்கக் கூடாது. அதற்கு சர்வதேச சமூகம் இடமளித்தால் அதனுடைய அர்த்தம் என்னவென்றால் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு அவர்களும் உதவுகின்றார்கள் என்பதுதான். அந்த நிலைமை இருக்க முடியாது. அந்த நிலைமை இருக்கக் கூடாது. உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையினுடைய தீர்மானங்கள், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் (Civil and Political Rights) பொருளாதார சமூக, கலாசார உரிமைகளின் (Economic,Social and Cultural Rights) அடிப் படையில், அந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில், எமக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையுண்டு. அது மறுக்கப்பட்டால் அதற்கு வெளியான சுயநிர்ணய உரிமையுண்டு. இதைச் சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும்.
நாங்கள் எவரையும் பகைக்க வில்லை. நாங்கள் எவருடனும் மோத விரும்பவில்லை. எங்களுக்கு பெரியவர் நெடுகச் சொல்லுவார் சம்பந்தன் நாங்கள் சிங்கள மக்களைப் பகைக்கக் கூடாது, சிங்களத் தலைவர்களை நாங்கள் பகைக் கூடாது என்றுதான். எந்த சிங்களத் தலைவர் சிங்கள மக்களின் ஆதரவைக் கூடுதலாப் பெறுகின்றாரோ அவருக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு நட்புறவு எப்போதும் இருக்க வேண்டும். நாங்கள் இன்றைக்கும் ஒருத்தரையும் பகைக்கவில்லை. நாங்கள் பகைக்க மாட்டோம். பகைமை எங்களுக்கு வேண்டாம். ஆனால் எமது மக்களின் உரிமைகளைக் கடைசி வரையிலும் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனபடியால் எமது எதிர்கால நடவடிக்கைகள் சம்பந்தமான சிந்தனைகள் பற்றி நாங்கள் உங்களுக்கு கூறியிருக்கின்றோம். நாங்கள் பலமான இடத்தில் இருக்கின்றோம். உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் நாங்கள் ஒப்புதல்களைப் பெற்றிருக்கிறோம். அவை எல்லாம் எழுத்தில் இருக்கின்றன. அவை நிறைவேற்றப்பட வேண்டும். தமிழ்மக்கள் தீர்வொன்றைப் பெறுவதற்கு சர்வதேச சமூகம் ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.
இன்று யாரைப் பார்த்தாலும் எந்தச் செய்தித்தாளைப் பிரித்தாலும் மாற்றுத் தலைமை பற்றியே பேசுகின்றன. அதை உருவாக்க நாயாய் பேயாய் அன்ன விசாரம் அதுவே விசாரம் என அலைகிறார்கள். மாற்றுத் தலைமைக்கு அலைகிறவர்கள் கொள்கை அடிப்படையில் வேறுபடவில்லை. தமிழ் அரசுக் கட்சி கேட்கின்ற இணைப்பாட்சியைத்தான் அவர்கள் கேட்கிறார்கள். அதனை அடைவதற்கு, தமிழ்க் காங்கிரஸ் நீங்கலாக, இந்தியா உதவ வேண்டும் என்கிறார்கள். சர்வதேசநாடுகள் உதவ வேண்டும் என்கிறார்கள். இதையே தமிழ் அரசுக் கட்சியும் ஆதியில் இருந்து சொல்லிவருகிறது. பின் எதற்காக அவர்கள் தமிழ் அரசுக் கட்சியைத் திட்டித் தீர்க்கிறார்கள்? பதவி. பதவி ஆசைதான் காரணம். ஓர் அணியில், ஒரு குடையின் கீழ் அணிதிரள வேண்டியவர்கள் ஆளுக்கொரு கட்சி தொடங்கியுள்ளார்கள். அந்தத் திருப்பணியில் கடைசியாக ஈடுபட்டவர்கள் ஸ்ரீ காந்தா மற்றும் சிவாஜிலிங்கம் சோடி.
இந்தக் காளான் கட்சிகளது தொடக்கக் கூட்டத்தை செய்தியாக்கும் பத்திரிகைகள் ‘ மண்டபம் நிரம்பி வழியும் மக்கள் வெள்ளத்தைக்” காட்டுவதில்லை. மேடையில் வீற்றிருக்கும் தலைவர், செயலாளர் நாயகம் மிஞ்சினால் பரப்புரைச் செயலாளர் படங்களை மட்டும் பிரசுரிக்கின்றன.
தந்தை செல்வநாயகம் தொடக்கிய தமிழ் அரசுக் கட்சியே கடந்த 70 ஆண்டு காலமாகக் கொண்ட கொள்கையைக் கைவிடாது, பதவிகளுக்கு அலையாமல், வந்த பதவிகளை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு 1949 ஆம் ஆண்டு தொடக்கம் உறுதியோடும் விடாமுயற்சியோடும் அகிம்சை வழியிலும் தனது பயணத்தைத் தொடர்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி இரா.சம்பந்தன் தமிழ் அரசுக் கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பேசிய பேச்சை தமிழ் அரசுக் கட்சியின் எதிரிகள் திரித்துப் பரப்புரை செய்கிறார்கள். வட கிழக்கு அபிவிருத்திக்கு அரசாங்கம் கொடுத்த நிதி ததேகூ நாடாளுமன்றத்துக்குக் கொடுத்த இலஞ்சம் எனப் பச்சைப் பொய் சொன்னார்கள். இந்த நிதி அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நா.உறுப்பினர்கள் கொடுத்த அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்றச் செலவழிக்கப்பட்டது. அந்த நிதியை நா.உறுப்பினர்கள் பார்த்ததே இல்லை.
அது போல இப்போது இரா.சம்பந்தன் தமிழ் அரசுக் கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பேசிய பேச்சை சில ஊடகங்கள் திரித்துப் பிரசுரித்திருக்கின்றன. சுரேஸ் பிறேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ஸ்ரீகாந்தா போன்றோர் திரித்துப் பேசியிருக்கிறார்கள். பிறேமச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இரா. சம்பந்தன் தனது பேச்சில் பேசியது இதுதான்:
“பாரதப் பிரதமர் மோடி இலங்கை அரசுக்கு சொல்லி இருக்கிறார், உங்களுக்கும், போரை முடிவுக்கு கொண்டுவர உதவிய எங்களுக்கும் வேண்டுமென்றால் இலங்கையில் விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடையமாக இருக்கலாம், ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் அத்துடன் முடிவடைய வில்லை”ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் அத்துடன் முடிவடைய வில்லை……….”
ததேகூ இன் தலைவர் இரா.சம்பந்தன் பேசும் போது பொருத்தமான சொற்களைத் தெரிந்தெடுத்து இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுபவர். குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் அளிப்பவர். இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்துபவர். மற்றவர்கள் போல் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பவர் அல்லர்.
பொய்யை மெய்போல் எழுதக் கூடிய இன்றைய ஊடக உலகில் உண்மையை உண்மையாகவே எழுதும் ஊடகங்களும் உண்டு. இரா. சம்பந்தன் ஆற்றிய உரைபற்றிய விமர்சனத்தை தமிழ்க் குரல் ஆசிரிய பீடம் தலையங்கம் ஒன்றைத் தீட்டியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது –
குறித்த உரையில் இரா. சம்பந்தன், பல்வேறு விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்ட பின்னரான சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உரையாக அதனைக் கருத்தில் கொள்ளவே வாய்ப்புக்கள் உள்ளன. இலங்கை ஜனாதிபதி அண்மையில் கருத்துக் கூறிய போது அதிகாரப் பகிர்வு சாத்தியமற்றது என்றும் அதனை பெரும்பான்மையின மக்கள் எதிர்ப்பதாகவும் கூறினார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக மாத்திரமின்றி, உலக நோக்கு நிலையில் இருந்து தமிழர்களின் பிரச்சினைகளுக்கு உலகம் முன்வைக்க முயன்ற தீர்வுகளை வலியுறுத்தும் விதமாகவுமே அப் பேச்சு அமைந்தது. இலங்கை அரசைப் பொறுத்தவரையிலும் இந்தியாவைப் பொறுத்தவரையிலும் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்லதாக இருக்கலாம். ஆனால் தமிழர்களின் பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை என்பது தான் அவர் வலியுறுத்தும் விடயம்.
அத்துடன் விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்த போகிறோம் என்று இந்தியாவுக்கு அன்றைக்கு மகிந்த ரதஜபக்ச வாக்குறுதி அளித்துவிட்டே போரை நடாத்தினார். இன்று போர் முடிக்கப்பட்டு பத்து வருடங்களைக் கடந்தும் தீர்வு முயற்சிகள் ஏதும் இடம்பெறவில்லை. அத்துடன் அண்மையில் இலங்கை வந்து புதிய ஜனாதிபதியை சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலாளர் கூறிய வார்த்தைகளையும் சம்பந்தன் நினைவுபடுத்தியுள்ளார்.
தமிழர்களுக்கு சமத்துவமான தீர்வை வழங்க வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தியதையும் இந்தியா சென்ற கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்தியப் பிரதமர் மோடி நேரில் வலியுறுத்திய விடயங்களையும் நினைவுபடுத்தியே அவ்வாறு சம்பந்தன் பேசியுள்ளார். அது மாத்திரமல்ல, எவரையும் தாம் பகைக்கவில்லை என்றும் ஆனாலும் தமிழ் மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் ஐநாவின் கோட்பாட்டின்படி உள்ளக சுயநிர்ணய உரிமை தமிழர்களுக்கு உண்டு என்றும் அதனை வழங்க மறுத்தால் வெளியக சுயநிர்ணய உரிமையை கோரும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு என்றும் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளற்ற இன்றைய சூழ்நிலையில் சர்வதேச நாடுகளுக்கு இலங்கை அரசு அன்று அளித்த வாக்குறுதிகளையாவது இன்று நிறைவேற்ற வேண்டும். அதனை வலியுறுத்துவதே சம்பந்தனது பேச்சின் சாரம். இதனை திசை திருப்புகின்ற செயற்பாடுகளில் சில இணையங்கள் மாத்திரமல்ல, சர்வதேச புகழ்பெற்ற பாரம்பரிய ஊடங்கள் கூட ஈடுபட்டிருப்பது ஈழ மக்களையும் அவர்களின் போராட்டத்தையும்தான் பாதிக்கும்.
உண்மையில் ‘முன்பின்னாக வெட்டி’ ஊடக பரபரப்பிற்காக உருவாக்கப்படும் இந்தச் செய்திகள், விடுதலைப் புலிகளுக்கும் அவர்களின் கனவுகளுக்கும் அவர்கள் சார்ந்த மக்களுக்கும் எதிரானதாகவே அமையும் என்பதை நினைவிற் கொள்ளுங்கள். 2009இற்குப் பின்னரான இந்த கால கட்டத்தில் தமிழ் சூழல் இத்தகைய செயற்பாடுகளால்தான் துண்டுது ண்டுகளாக சிதைக்கப்பட்டு வருகின்றன என்பதனை மறவாதீர்கள்.
விமர்சனங்களுக்கு அப்பால் தமிழ் சூழலில் ஒரு இனமாக பேசுகின்ற ஆளுமையை கொண்டிருப்பவர் இரா. சம்பந்தன் மாத்திரமே. அவரை விடுத்தால் ஏனைய தலைவர்கள் பலரும் செய்தி சொல்லும் தலைவர்களாகவும் தமது பதவிகளை தக்க வைக்கவும் தம்மை அடுத்த இடங்களுக்கு நகர்த்தும் பதவிநிலை அரசியல்வாதிகளாகவுமே உள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளேயே இவ்வாறு கட்சி நோக்கம் கருதிய திரிவுபடுத்தல்களும் திசை திருப்பல்களும் இடம்பெறுவதாகவே சொல்லப்படுகின்றது.(http://thamilkural.net/?p=15434)
ஊடக அரசியல் பசிக்குத் தீனியாக்கப்படும் சம்பந்தன்!
இலங்கையில் இப்போது அரசியல் கட்சிகளின் பசியும் ஊடகங்களின் பசியும் பெரிய வினைகளை உருவாக்குகின்றன. தமிழ் மக்கள் பெரும் ஒடுக்குமுறைகளையும் பெரும் பின்னடைவுகளையும் சந்தித்து வருகின்ற காலத்தில் தனிப்பட்ட நலன்கள் கருதிய இப் பசிகள் ‘பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த’ கதையாய் ஈழத் தமிழ் இனத்தை வேட்டை ஆடுகின்றது. அறிவாலும் போராட வேண்டிய ஒரு இனமாக இருப்பதனால் இது குறித்து சிந்திக்கவும் உரையாடவும் இடித்துரைக்கவும் தலைப்பட்டுள்ளோம்.
சம்பந்தன் அன்றைய இலங்கை தமிழரசுக் கட்சியின் எழுபதாவது ஆண்டு நிறைவு விழா யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனது பேச்சானது, ஒரு சில ஊடகங்களால் ‘வெட்டிக் கொத்தி’ தமது ஊடக அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்துவதை அவதானிக்க முடிகின்றது. அத்துடன் சிலர் அதனை தமது கட்சி நோக்கங்களுக்காகவும் திரிவுபடுத்தி பயன்படுத்துவதுகூட அபத்தத்தின் பாற்பட்டதே.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில செயற்பாடுகளின்மீதும் இரா. சம்பந்தனது சில கருத்துக்களில் கூட விமர்சனங்கள் உள்ளன. தமிழ்க்குரல் கூட அதனை சுட்டிக்காட்டப் பின்நிற்கவில்லை. ஆனால் ஒன்றை வேறொன்றாக திரிப்பது மிகவும் தவறான செயற்பாடாகும். தகவல் தொடர்பாடல் மிகவும் உச்சம் கண்டிருக்கக்கூடிய காலகட்டத்தில்கூட இத்தகைய குறுக்கு வழிகளை பயன்படுத்த ஊடகங்கள் முனைவது மிகவும் பின்னுதாரணமானது.
குறித்த உரையில் இரா. சம்பந்தன், பல்வேறு விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்ட பின்னரான சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உரையாக அதனை கருத்தில் கொள்ளவே வாய்ப்புக்கள் உள்ளன. இலங்கை ஜனாதிபதி அண்மையில் கருத்து கூறிய போது அதிகாரப் பகிர்வு சாத்தியமற்றது என்றும் அதனை பெரும்பான்மையின மக்கள் எதிர்ப்பதாகவும் கூறினார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக மாத்திரமின்றி, உலக நோக்கு நிலையில் இருந்து தமிழர்களின் பிரச்சினைகளுக்கு உலகம் முன்வைக்க முயன்ற தீர்வுகளை வலியுறுத்தும் விதமாகவுமே அப் பேச்சு அமைந்தது. இலங்கை அரசைப் பொறுத்தவரையிலும் இந்தியாவைப் பொறுத்தவரையிலும் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்லதாக இருக்கலாம். ஆனால் தமிழர்களின் பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை என்பது தான் அவர் வலியுறுத்தும் விடயம்.
அத்துடன் விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்த போகிறோம் என்று இந்தியாவுக்கு அன்றைக்கு மகிந்த ரதஜபக்ச வாக்குறுதி அளித்துவிட்டே போரை நடாத்தினார். இன்று போர் முடிக்கப்பட்டு பத்து வருடங்களைக் கடந்தும் தீர்வு முயற்சிகள் ஏதும் இடம்பெறவில்லை. அத்துடன் அண்மையில் இலங்கை வந்து புதிய ஜனாதிபதியை சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலாளர் கூறிய வார்த்தைகளையும் சம்பந்தன் நினைவுபடுத்தியுள்ளார்.
தமிழர்களுக்கு சமத்துவமான தீர்வை வழங்க வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தியதையும் இந்தியா சென்ற கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்தியப் பிரதமர் மோடி நேரில் வலியுறுத்திய விடயங்களையும் நினைவுபடுத்தியே அவ்வாறு சம்பந்தன் பேசியுள்ளார். அது மாத்திரமல்ல, எவரையும் தாம் பகைக்கவில்லை என்றும் ஆனாலும் தமிழ் மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் ஐ.நாவின் கோட்பாட்டின்படி உள்ளக சுயநிர்ணய உரிமை தமிழர்களுக்கு உண்டு என்றும் அதனை வழங்க மறுத்தால் வெளியக சுயநிர்ணய உரிமையை கோரும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு என்றும் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளற்ற இன்றைய சூழ்நிலையில் சர்வதேச நாடுகளுக்கு இலங்கை அரசு அன்று அளித்த வாக்குறுதிகளையாவது இன்று நிறைவேற்ற வேண்டும். அதனை வலியுறுத்துவதே சம்பந்தனது பேச்சின் சாரம். இதனை திசை திருப்புகின்ற செயற்பாடுகளில் சில இணையங்கள் மாத்திரமல்ல, சர்வதேச புகழ்பெற்ற பாரம்பரிய ஊடங்கள் கூட ஈடுபட்டிருப்பது ஈழ மக்களையும் அவர்களின் போராட்டத்தையும்தான் பாதிக்கும்.
உண்மையில் ‘முன்பின்னாக வெட்டி’ ஊடக பரபரப்பிற்காக உருவாக்கப்படும் இந்தச் செய்திகள், விடுதலைப் புலிகளுக்கும் அவர்களின் கனவுகளுக்கும் அவர்கள் சார்ந்த மக்களுக்கும் எதிரானதாகவே அமையும் என்பதை நினைவிற் கொள்ளுங்கள். 2009இற்குப் பின்னரான இந்த கால கட்டத்தில் தமிழ் சூழல் இத்தகைய செயற்பாடுகளால்தான் துண்டுது ண்டுகளாக சிதைக்கப்பட்டு வருகின்றன என்பதனை மறவாதீர்கள்.
விமர்சனங்களுக்கு அப்பால் தமிழ் சூழலில் ஒரு இனமாக பேசுகின்ற ஆளுமையை கொண்டிருப்பவர் இரா. சம்பந்தன் மாத்திரமே. அவரை விடுத்தால் ஏனைய தலைவர்கள் பலரும் செய்தி சொல்லும் தலைவர்களாகவும் தமது பதவிகளை தக்க வைக்கவும் தம்மை அடுத்த இடங்களுக்கு நகர்த்தும் பதவிநிலை அரசியல்வாதிகளாகவுமே உள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளேயே இவ்வாறு கட்சி நோக்கம் கருதிய திரிவுபடுத்தல்களும் திசை திருப்பல்களும் இடம்பெறுவதாகவே சொல்லப்படுகின்றது.
எப்படி இருப்பினும் ஈழப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே தனிப்பட்ட நலன்கள் சார்ந்த பிளவுகளால்தான் போராட்டம் பெரும் பின்னடைவை சந்தித்தது. ஆனாலும் அதனைக் கடந்து எமக்கொரு அடையாளம் இருந்தது. தற்போதைய சூழலிலும் இவ்வாறு இனத்தை சிதைக்கும் வேலைகள் பல நோக்குநிலைகளில் இருந்து பலரால் செய்யப்படுகின்றன. அதனை ஊடகங்களும் செய்வது அநாகரிகமானது. ஊடங்கள் கொண்டிருக்க வேண்டிய கருத்து சுதந்திர மற்றும் ஜனநாயக விழுமியப் பண்புகளுக்கு எதிரான செயல்களாகும்.
எனவே, கட்சிகள், தலைவர்கள்மீதான விமர்சனங்களை மக்களின் குரலின் அடிப்படையில் முன்வைப்போம். முக்கியத்துவமாக தருணங்களின் ஒரு இனத்தின் அரசியல் செயற்பாடுகளை பலவீனப்படுத்தாத வகையில் ஒரு இனத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தாத வகையில் தமது செய்தி உருவாக்காகங்களையும் அறிக்கையிடல்களையும் செய்வோம். குறிப்பாக அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து ஊடகங்கள் தம்மை விலக்கிக்கொண்டால், கட்சி மற்றும் ஊடக வியாபாரப் பசிகளை தவிர்த்து ஊடக விழுமியங்களின் அடிப்படையில் இயங்க முடியும்.
– தமிழ்க்குரல் ஆசிரியர் பீடம்
(19.12.2019)
http://thamilkural.net/?p=15434
ததேகூ இல் இருந்து வெளியேறியவர்கள் சின்ன சின்னக் கட்சிகளை உருவாக்கினாலும் தேர்தலில் கூட்டமைப்புக்கே தமிழ் மக்கள் ஆதரவு வழங்குவார்கள்! – இரா சம்பந்தன்
நக்கீரன்
இலங்கையின் வடக்கு – கிழக்கில் பன்றி குட்டிகள் ஈணுவது போன்று புதுப் புதுக் கட்சிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் மழைக்குப் பெய்த காழான்கள் போல் முளைத்த வண்ணம் உள்ளன.
அதிலும் ஆட்சிமாற்றத்தின் பின் இதுவரை காலமும் தலை மறவாக இருந்த சின்னக் சின்னக் கட்சிகள் வெளியில் வந்து தங்கள் தலையைக் காட்டுகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய மற்றும் வெளியேற்றப்பட்டவர்கள் புதிய கட்சிகள் ஊடாக தங்களை அடையாளப்படுத்தியுள்ளார்கள். அதன் விபரம் வருமாறு,
(1) கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (2010)
(2) சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.) (2017)
(3) சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி (ஒக்தோபர் 24, 2018)
(4) பொ.ஐங்கரநேசன் தலைமையிலான தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்
(5) அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழ மக்கள் சுயாட்சிக் கழகம். (2019)
(6) வி.எஸ்.சிவகரன் தலைமையிலான தமிழரசுக் கட்சி ஜனநாயக அணி.
(7) எஸ்.வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்குத் தமிழர் கட்சி (2019)
(8) எஸ்.ஜெயானந்தமூர்த்தி, விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி.
(9) கனகரத்தினம், பியசேன, கிஷோர் உட்பட்டவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் அங்கத்துவம்.
(10) என்.ஸ்ரீகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி. (2019)
(11) முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராயா தலைமையில் “அகதேசிய முற்போக்கு கழகம்” எனும் அரசியல் கட்சி உருவாக்கப்படுள்ளது. இதன் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவற்றை விட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இபிஆர்எல்எவ் வரதர் அணி, ரெலோ சிறீ அணி போன்ற அணிகளும் வெளியே வந்துள்ளன.
என்.ஸ்ரீகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம் இருவரும் இது போன்ற அக்கினிச் சோதனை நடத்துவது இது இரண்டாம் முறை. 2010 தேர்தலில் இந்த இருவருக்கும் ததேகூ வேட்பு மனு கொடுக்கவில்லை. இதனை அடுத்து இந்த இருவரும் ரெலோ மற்றும் ததேகூ இரண்டிலும் இருந்தும் விலகி, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்கள். இது 2010 இல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் படு தோல்வியடைந்து. யூன் 2011 இல் இந்தக் கட்சியைக் கலைத்து விட்டு மீண்டும் ரெலோ, மற்றும் ததேகூ இல் இருவரும் இணைந்தனர்.
சிவாஜிலிங்கம் தனி ஆவர்த்தனம் வாசிப்பதில் வல்லவர். 2010 அரசுத்தலைவர் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு 9,662 வாக்குகளைப் பெற்று (0.09%) ஒன்பதாவதாக வந்து தோல்வியடைந்தார். இந்த ஆண்டு மீண்டும் அரசுத்தலைவர் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு 12,256 (0.09%) வாக்குகள் பெற்று 11 ஆவது இடத்தைப் பிடித்தார். 2015 பொதுத் தேர்தலில் குரணாக்கல் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டுக் கட்டுக்காசை இழந்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் ஆகிய ஐந்து கட்சிகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்கள் தற்போது 10 கட்சிகளைத் தோற்றுவித்திருப்பது தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தைத் தோற்றுவித்துள்ளதாக சமூகச் செயற்பாட்டாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இப்படிப் பன்றி குட்டி போட்டதைப் போல கட்சிகளை உருவாக்குவதால் யாருக்கு என்ன இலாபம் என்ற கேள்வி எழலாம். இலாபம் இருக்கிறது. ஒவ்வொருவரும் தாங்களை கட்சிகளின் தலைவர், செயலாளர்கள் நாயகம், பரப்புரைச் செயலாளர், தேசிய அமைப்பாளர் எனச் சொல்லிக் கொண்டு ஊர்வலம் வரலாம்.
இந்தக் கட்சிகள் பெரும்பாலும் லெட்டர் பாட் கட்சிகளாகவே கடைசிவரை இருந்து விடுகின்றன. கட்சிகளின் தொடக்கத்தை அறிவிப்பவர்கள் மூடுவிழாக்களை அறிவிப்பதில்லை.
இப்படி ஆளுக்கொரு கட்சியை உருவாக்கியவர்கள் தமிழ்மக்களின் ஒற்றமை பற்றிப் பேசுகிறார்கள் என்பது நல்ல நகைமுரண் ஆகும்.
சரி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்போது முரண்பட்டு வெளியேறிய இந்த உத்தமர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்கிறார்களா என்றால் அப்படியும் இல்லை. ததேகூ இல் இருந்து எந்தக் காரணமும் இல்லாமல் பிய்த்துக் கொண்டு 2010 இல் வெளியேறிய கஜேந்திரகுமார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தனது கட்சியையும் தவிர மற்றவை எல்லாம் போலிகள் என்கிறார்!
ஆயுதக் குழுக்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க மாட்டேன் என்று தொடக்கத்தில் முரண் பிடித்த முன்னாள் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இப்போது இபிஆர்எல்எவ் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளார். அவர் எந்தப் பிசாசுடனும் கூட்டுச் சேரத் தயாராக இருக்கிறார் இபிடிபி யைத் தவிர!
தனிக்கட்சி தொடங்கிய விக்னேஸ்வரன் தன்னைத்தானே செயலாளர் நாயகமாக நியமித்துக் கொண்டார். கட்சியின் அடுத்த ஆண்டுக் கூட்டத்தில் கட்சியின் தலைவர், துணைத்தலைவர், செயலாளர் நாயகம், செயல் குழு, பொதுக்குழு தெரிவு செய்யப்படும் என்றார். ஓராண்டு முடிந்து இரண்டு மாதங்களாகி விட்டன. பொதுக் கூட்டமும் இல்லை, தேர்தலும் இல்லை.
மக்கள் கூட்டணிக் கட்சிக்கு இதுவரை 3 கட்சிக் கிளைகளே திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த இலட்சணத்தில் விக்னேஸ்வரன் முதலமைச்சர் கனவில் தொடர்ந்து இருந்து வருகிறார்.
நடந்து முடிந்த தமிழ் அரசுக் கட்சியின் 70 ஆவது ஆண்டு விழாவில் ததேகூ இன் தலைவர் இரா. சம்பந்தன் பேசும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் சின்ன சின்னக் கட்சிகளை உருவாக்கினாலும், தேர்தலில் கூட்டமைப்புக்கே தமிழ் மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
“ஓர் அரசியல் தீர்வைப் பேணிப்கொள்ளாத அரசியல்வாதிகள் இன்றைக்கு எங்களுக்குத் தேவையில்லை. கற்பனையில் வாழ்கின்ற அரசியல்வாதிகள் எமக்குத் தேவையில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளிக்கின்ற அரசியல்வாதிகள் எமக்குத் தேவையில்லை. இது ஒரு நீண்ட பயணம். நீண்ட தூரம் நாங்கள் பயணித்திருக்கின்றோம். அதிகாரப் பகிர்வின் அடிப்படையில், அதியுச்ச அதிகாரப் பகிர்வின் அடிப்படையில், பல தேவையான அதிகாரங்களை நாங்கள் பெற்று எமது மக்கள் சமத்துவமாக, நீதி பெற்றவர்களாக, சமாதானமாகவும் கெளரவமாகவும் வாழக் கூடிய நிலைமை ஏற்படவேண்டும்.
இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பிறகு இந்தியாவினுடைய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியன் ஜெயசங்கர் இலங்கைக்கு விஜயம் செய்த பொழுது, இரண்டு நாள்களுக்குப் பிறகு அவர் ஜனாதிபதி கோட்டாபயவுக்குக் கூறிய செய்தி என்ன வென்றால், இந்தியா எதிர்பார்க்கின்றது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்பார்க்கின்றார் நீங்கள் சமத்துவத் தின் அடிப்படையில் (equality) – நீதியின் அடிப்படையில் (justice) – கெளரவத்தின் (dignity) அடிப்படையில் – சமாதானத்தின் (peace) அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டுமென்று இந்தியப் பிரதமர் எதிர்பார்க்கிறார் என இலங்கை ஜனாதிபதியிடம் கூறியிருக்கின்றார்.
இது சாதாரணமான சொற்கள் அல்ல. ஜனாதிபதி கோட்டாபய இராசபக்ச ஒரு வாரத்திற்குள் இந்தியாவிற்குச் சென்றபோது அவருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சின் பொழுது ஒரு கூட்டாக ஊடக சந்திப்பு நடைபெற்றது. அந்த ஊடக சந்திப்பின் போது இவ்விதமான ஒரு தீர்வை ஏற்படுத்தித் தமிழ் மக்கள் இலங்கையில் கெளரவமாக வாழக் கூடிய சூழ்நிலை ஏற்பட வேண்டுமென்று நாங்கள் இலங்கை அரசிடம் கூறியிருக்கின்றோம். அதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று மோடி கூறியிருக்கின்றார்.
இவை நடைபெற வேண்டும். இவற்றை நிறைவேற்றுவதுதான் எங்களது கடமை. இவற்றை எவராலும் நிறைவேற்ற முடியாது என்றில்லை. கற்பனையில் வாழ்கின்றவர்களால் நிறைவேற்ற முடியாது. எமது மக்களுடைய அரசியல் தீர்வு சம்பந்தமாக – எமது மக்களுடைய அரசியல் பிரச்சினைகள் சம்மந்தமாக – இதுவரையில் தீவிரமாக, ஆழமாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஈடுபடாதவர்கள் இந்தக் கருமங்களைக் கையாள முடியாது.
அதை எமது மக்கள் புரிந்த கொள்ளவேண்டும். எங்களுடைய மக்களுடைய ஒற்றுமை எங்களது முக்கியமான பலம். தந்தை செல்வாவின் முக்கியமான கொள்கைகளைப் பற்றியும் நான் சில விடயங்களை இங்கு பேச விரும்புகின்றேன். தந்தை செல்வா தமிழ் பேசும் மக்களை ஒற்றுமைப்படுத்தினார். வடக்கில், கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் எல்லாரையும் ஒற்றுமைப் படுத்தினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயரில், சின்னத்தில் போட்டியிட்டு அவர்கள் தெரிவு செய்யப்பட்டவர்கள். தந்தை செல்வா தமிழ் மக்கள் கெளரவமாக, பாதுகாப்பாக இந்த நாட்டில் வாழ்வதாக இருந்தால் என்ன செய்ய வேண்னனடும் எனக் கூறியிருக்கிறார்.
தமிழ் மொழிக்கும் தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசத்திற்கும் இடையில் ஒரு பிரிக்க முடியாத தொடர்பு இருக்கின்றது. அவை ஒன்றாகப் பிணைந்த பொருள்கள். அவை இரண்டும் தமிழ் மக்களுக்குரியவை. தமிழ் பேசும் மொழி எங்கு நிலவுகிறதோ அந்தக் காணி தமிழ் மக்களுக்குரியது. அந்த அடிப்படையில்தான் பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம், இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டன. அவைதான் அடிப்படை. மொழி தமிழ் மொழி, தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசம் அவர்களுடைய காணி வடகிழக்கு, இதை எமது முஸ்லீம் மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். அது பெரியவருடைய முக்கியமான கொள்கை.
மூன்றாவது இந்தக் கொள்கையின் அடிப்படையில் தமிழ் மக்கள் விசேசமாக வடகிழக்கில் தம்மை ஆதரித்துத் தமிழ் மக்களுடைய ஆணையை பெற்ற தலைவர் தந்தை செல்வா என்பதையும் தமிழரசுக் கட்சி என்பதையும் நிரூபித்தார். அது தொடர வேண்டும். நாங்கள் எமது மக்களுக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.
56 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற ஒவ்வொரு தேர்தல்களிலும், பாராளுமன்றத் தேர்தலிலோ, மாகாண சபைத் தேர்தலிலோ எமது மக்கள் எமது கட்சியை ஆதரித்திருக்கின்றார்கள். அது தொடர வேண்டும். நான் உங்களுக்கு சொல்லிய கடமைகள், நாங்கள் கையாள வேண்டிய கடமைகள். நாங்கள் பொறுப்பெடுக்க வேண்டிய கடமைகள். எதிர் காலத்தில் சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் நாங்கள் நிறை வேற்ற வேண்டிய விடயங்களை நாங்கள் நிறைவேற்றுவது என்றால் உங்களுடைய ஆணையை உறுதியாக நாங்கள் பெற வேண்டும். அந்த ஆணையின் ஒரு பகுதியேனும் வேறு எவருக்கும் போகக் கூடாது. அது முக்கியம். அத்தியாவசியம். இதுதான் எங்களுடைய நிலைப்பாடு” என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.