ஆனந்தசங்கரியின் நிலைமை  அடியேன்னு கூப்பிட ஆம்படையான் கிடையாதாம், பிள்ளைக்கு முத்தம் கொடுக்க ஆசைப்ட்டாளாம் ஒருத்தி என்ற கதை போன்றது!

ஆனந்தசங்கரியின் நிலைமை  அடியேன்னு கூப்பிட ஆம்படையான் கிடையாதாம், பிள்ளைக்கு முத்தம் கொடுக்க ஆசைப்ட்டாளாம் ஒருத்தி என்ற கதை போன்றது!

நக்கீரன்

திருவாளர் ஆனந்தசங்கரி தான் அரசியலில் இருப்பதை மற்றவர்களுக்கு நினைவூட்ட இரண்டு காரியங்களை ஒழுங்காகச் செய்து வருகிறார்.

(1) மாதம் ஒரு கடிதம் எழுதித் தனது மனப்புழுக்கத்தை – விரக்தியை – இறக்கி வைப்பார்.

(2) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இரா.சம்பந்தன், ம.ஏ. சுமந்திரன், மாவை சேனாதிராசா மூவரும் அரசியலில் இருந்து விலக வேண்டும் அல்லது ஒதுங்கியிருக்க வேண்டும் என மாதம் ஒருமுறை அவரால் கூட்டப்படும் செய்தியாளர் மாநாட்டில் தனது வயிற்றெரிச்சலை வெளிப்படுத்துவார்.

“இடம்பெற்ற மூன்று ஜனாதிபதித் தேர்தல்களின் போதும், கூட்டமைப்பு தூரநோக்குடன், தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி செயற்பட்டிருக்கவில்லை. தமிழ் மக்களை ஒரு ஆட்டு மந்தைக் கூட்டம் போலவே மேய்த்திருந்தது. ஆடுகளாக இருப்பதற்கு தமிழ் மக்கள் தயாராக இருக்கின்ற போது, அவர்களை மேய்ப்பதிலும் எவருக்கும் சங்கடங்கள் இருக்கப் போவதில்லை” எனச் சொல்லி தமிழ்மக்களை மந்தைக் கூட்டம் எனப் பச்சையாகக் கொச்சைப்படுத்தியிருக்கிறார். இப்படி அவர் சொல்வது இது முதல் தடவை அல்ல. முன்னரும் இப்படிப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். இனிமேலும் எழுதுவார்.

விடுதலைப்புலிகள் அழிக்கப் பட வேண்டியவர்கள்  என்ற தொனிப்பட பல கடிதங்களைச்  சிங்கள தலைவர்களுக்கும் சர்வதேச அமைப்புக்களுக்கும் எழுதித் தமிழின அழிப்புக்கு  வழி சமைத்தவர் ஆனந்தசங்கரி.

போராட்ட காலத்தில் ஆனந்தசங்கரி இராசபக்சாவின் செல்லப்பிள்ளையாக விளங்கினார்.  இராணுவத்துக்குக் குறுக்கு வழிகளைச் சொல்லிக் கொடுத்தார். தவிகூ இன் பெயரில் யாழ்ப்பாணத்தில் இருந்த இரண்டு கட்டிடங்களை ரூபா 20 கோடிக்கு விற்றுத் தனது மடியில் கட்டிக் கொண்டார்.Image result for சம்பந்தன் மாவை சேனாதிராசா சுமந்திரன்

தவிகூ இன் பெரும்பான்மை உறுப்பினர்களது  சனநாயக முடிவை ஏற்றுக் கொள்ளாது நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறித் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் அதன் உதயகசூரியன் சின்னத்தையும் தன்னோடு  வைத்துக் கொண்டவர் ஆனந்தசங்கரி. அதன் பின்பு அவர் போட்டியிட்ட எல்லாத் தேர்தல்களிலும்  கட்டுக்காசை இழந்து தோல்விக்கு மேல் தோல்வியை தழுவிக் கொண்டிருக்கிறார். சென்ற ஓகஸ்ட், 2015 இல் நடந்த தேர்தலில் ஆனந்தசங்கரி கொழும்பு மாவட்டத் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு கட்டுக் காசை இழந்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 1,515 வாக்குகள் பெற்று தவிகூ  கட்டுக்காசை இழந்தது.  ஏனைய மாவட்டங்களில் (திருகோணமலை 273 வாக்குகள்)  மிகக் குறைந்த வாக்குகளையே தவிகூ  பெற்றிருந்தது.

ஆனந்தசங்கரி தவிகூ  தலைவராக வந்தது ஒரு விபத்து.  மு. சிவசிதம்பரம் யூன் 2002 இல் மறைந்த போது அந்த இடத்துக்கு ஆனந்தசங்கரி தெரிவு செய்யப்பட்டார்.  தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவர் கட்சியின் கொள்கைக்கு முரணாகச் செயற்படுகிறார், 2001ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கைக்கு எதிராகச் செயற்படுகிறார்,  தமிழர்களின் அபிலாசைகளுக்கு முரணாகச்  செயற்படுகிறார் எனக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து கட்சிக்குள் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

தமிழ் மக்களுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளைக் கண்டித்தும் விமர்சனம் செய்தும் தொடர்ச்சியாக அறிக்கை விட்டும் வருகிறார் என்றும் ஆனந்தசங்கரி மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. வெளிநாட்டு இராசதந்திரிகளைச் சந்தித்து விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகிறார் என்றும் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் கிடையாது என்ற கருத்தை வலியுறுத்தி வருகிறார் போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இருந்தும் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் கடுமையாக விமர்ச்சித்து வந்தார். வி.புலிகளை தமிழர்களது ஏகப் பிரதிநிதியாக அங்கீகரிக்க  ஆனந்தசங்கரி மறுத்து விட்டார்.

இதன் காரணமாக  ஆனந்தசங்கரிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒள்று  கொழும்பில் நொவெம்பர் 30, 2001  ஆம் திகதி நடந்த த.வி.கூ இன்   செயல்குழுக்  கூட்டத்தில்  கொண்டு வரப்பட்டது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு  ஆதரவாக  25 பேரும்  எதிர்த்து 11 பேரும் வாக்களித்தனர். ஆதரவாக வாக்களித்தவர்கள் மீது ஆனந்தசங்கரியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

ஆனால்  தவிகூ இன்  செயல் குழுவில்  பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றிய சனநாயக முடிவைத்  தன்னை ஒரு சனநாயகவாதி, சனநாயக விழுமியங்களைப் பேணிக் காக்கும் கட்சியின் தலைவர்  என்று பிதற்றிக்  கொள்ளும் ஆனந்தசங்கரி ஏற்க மறுத்தார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மதிக்காது ஆனந்தசங்கரி நீதிமன்றம் சென்றார்.  சனநாயகத்தை மதிப்பவர், நேர்மையானவர், நாணயமானவர்  என்றால்  அவர் தனது பதவியை உதறித்தள்ளிவிட்டு வெளியேறியிருப்பார். ஆனால் ஆனந்தசங்கரி அப்படிச் செய்யவில்லை. அவரது பதவி ஆசை அப்படிச் செய்ய விடவில்லை!

ஒரு புதிய தலைவரை தெரிவு செய்ய  தவிகூ இன் பொதுச் செயலாளர் சம்பந்தன்  அம்பாரை திருக்கோயிலில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அதற்கு எதிராக ஆனந்தசங்கரி  நீதிமன்றம் சென்று 17 டிசெம்பர், 2001 அன்று தடையுத்தரவு வாங்கினார்.

இதனை அடுத்து ஆனந்தசங்கரியோடு மல்லுக்கு நிற்க விரும்பாத த.வி.கூட்டணியினர் பழைய தமிழ் அரசுக் கட்சியை மீளமைத்தனர். இதனை அடுத்து ஆனந்தசங்கரி தமழ்த் தேசியக் கூட்டணியில்  இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அன்று தொடங்கி இன்றுவரை  ஆனந்தசங்கரி அரசியல் பாலைவனத்தில்   விடப்பட்டுள்ளார். போட்டியிட்ட எல்லாத் தேர்தல்களிலும் த.வி.கூ  மண்ணைக் கவ்வியுள்ளது. 2013  வட மாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட ஆனந்தசங்கரி கட்டுக்காசை இழந்தார்.

இன்று த.வி.கூ ஆனந்தசங்கரியின் சொந்தச்  சொத்தாக மாறிவிட்டது. அவர்தான் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் எல்லாமே அவர்தான்.

ஓகஸ்ட் 06, 2017 இல் தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் சகோதரர் பொன் சிவசுப்பிரமணியம் தவிகூ யின்  தலைவராகத்  தெரிவு செய்யப்பட்டார். இவரது குடும்பத்தினர்  தமிழரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்கள். இலண்டனில் இருந்து வந்து தவிகூ இன் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்ட பொன் சிவசுப்பிரமணியம்  அந்தப் பதவியில்  நீண்ட காலம்  நிலைத்திருக்கவில்லை.

அடுத்த ஆண்டே பொன் சிவசுப்பிரமணியம் – ஆனந்தசங்கரி இருவருக்கும் இடையில் முரண்பாடு  தோன்றியது.  ஓகஸ்ட் 02, 2018 இல் இருவருக்கும் இடையில்  நடந்த  வாய்த்தர்க்கம் அடிபிடியில் முடிந்தது. இதையிட்டு காவல்துறையில் முறையிட்ட பொன் சிவசுப்பிரமணியம்  “தற்போது கட்சியின் செயற்பாடுகள் தன்னிச்சையான முடிவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகவும் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாகத் தமக்கு தெரியப்படுத்தப்படவில்லை எனவும் இவ்வாறான நிலையிலேயே இன்றைய (நேற்றைய) சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.”

இப்படியான சாமுத்திரிகா இலட்சணங்களைக் கொண்ட ஆனந்தசங்கரி சனநாயகம் பற்றிப் பேசுவது வேடிக்கையானது. அதைவிட பொதுத் தேர்தலில் போட்டியிட்டுப் பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்ட இரா. சம்பந்தன், சுமந்திரன், சேனாதிராசா போன்றவர்களைப் பார்த்து பதவியிலிருந்து ஒதுங்கியிருப்பது தமிழ் மக்களிற்கு செய்யும் பெரும் உதவியாக இருக்கும் என்று தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி கூறுவது வாலறுந்த நரியின் கதையாகவே இருக்கிறது!

காட்டின் வழியே ஒரு நரி சென்று கொண்டிருந்தது. அங்கு அரிவதற்காக ஆப்பு வைத்த மரங்களைக் கண்டது. அந்த ஆப்பை குரங்கு இழுத்த போது அதன் வால் அகப்பட்டுக் கொண்டது. அது வேகமாக வாலை விடுவிக்க முயன்ற போது அதன் வால் அறுந்து போய் விட்டது.

நரிக்குத் தனது வாலை இழந்தது மிகவும் அவமானமாகப் போய்விட்டது. அனைத்து நரிகளுக்கும் தன்னைப் போலவே வாலில்லாமல் போய் விட்டால் தன்னை யாரும் குறைபாடாகப் பார்க்க மாட்டார்கள் என்று நினைத்தது.

எனவே ஒரு நாள் அது அனைத்து நரிகளையும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து வரவழைத்தது.

அந்தக் கூட்டத்தில் அந்த வாலறுந்த நரி, “உறவினர்களே, வாலை வைத்துக் கொண்டு தவிக்கும் உங்களைப் பார்த்து நான் மிகவும் பரிதாபப்படுகிறேன். இந்த வால் இருப்பதால் நாம் எத்தனை இன்னல்களுக்கு ஆளாகிறோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். நம்மைப் பின் தொடரும் நாய்கள் நம் வாலைக் கொண்டே நம்மைப் பிடித்து விடுகின்றன. கீழே உட்கார்ந்து பேசலாமென நினைத்தால் அதற்கு இந்த வால் இடையூறாக இருக்கிறது. உண்மையில் இந்த வாலினால் ஏதாவது பயனிருக்கிறது என்றால் மனிதனுக்கு கடவுள் ஏன் வாலைப் படைக்கவில்லை? எனவே நீங்கள் அனைவரும் உங்களுடைய வாலை வெட்டிக் கொண்டால் மிகவும் நன்றாக என்னைப் போல் செயல்பட முடியும். நான் இதை என் அனுபவத்தினால் உணர்ந்து சொல்கிறேன்” என்று நீண்ட பிரசங்கம் செய்தது.

அப்பொழுது கூட்டத்திலிருந்து ஒரு கிழ நரி எழுந்து, “வாலில்லாத நரியே, வால் வேண்டாம் என்கிற பிரசங்கத்தை உனக்கு வாலிருக்கும் போதே செய்திருந்தால் நாங்கள் உன்னை நம்பி இருப்போம். வாலில்லாத நீ செய்யும் பிரசங்கத்தை எங்களால் ஏற்க இயலாது. எங்களை ஏமாற்ற வேண்டாம்” என்றது.

ஆனந்தசங்கரியும் இந்த வாலறுந்த நரி போன்றவர்தான். தனக்குப் பதவியில்லை என்ற காரணத்துக்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட இரா.சம்பந்தன், சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா  ஆகியோரைப் பார்த்து பதவியிலிருந்து ஒதுங்கியிருப்பது தமிழ் மக்களிற்கு செய்யும் பெரும் உதவியாக இருக்கும் என்று அவர்  சொல்கிறார். இது வாலறுந்த நரியின் கதையாகவே இருக்கிறது. தமிழ்மக்களால் ஒருமுறை அல்ல பல முறை நிராகரிக்கப்பட்ட ஆனந்தசங்கரி  அந்த மக்களின் சார்பில் பேசுவதற்கு எந்த அருகதையும் அற்றவர் ஆவர்.   தமிழ் மக்கள்  போர்  காரணமாகச் சந்தித்து வரும் பேரழிவுகளுக்கு அடிப்படைக் காரணம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்தான் என்று  தொடர்ச்சியாக குற்றம் சாட்டிவந்த ஆனந்தசங்கரி இன்று தமிழ் மக்களின் அழிவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் காரணமல்ல அன்றிருந்த அரசியல் தலைவர்களே காரணம் எனத் தட்டை மாற்றிப் பேசுகிறார் (https://jaffnazone.com/news/10573)Image result for சம்பந்தன் மாவை சேனாதிராசா சுமந்திரன்

பிரபாகரன் ஓர் சிறந்த மனிதன்,  சிங்களத் தலைவர்களை விடவும் பிரபாகரன் சிறந்த தலைவர்,  கடந்த காலத்தில் உள்ளுர் வெளிநாட்டு ஊடகங்கள் சில ஒத்துழைத்திருந்தால் இன்று பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார் என்பது மட்டுமல்ல வட மாகாணத்தின் முதலமைச்சராகக்  கூட வந்திருக்கலாம், பிரபாகரனின் பெருந்தன்மை எந்த தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் இல்லை, அவர் நல்லதொரு தலைமைப்துவ பண்பு கொண்டவர்  என வஞ்சகப் புகழ்ச்சி பாடும் ஆனந்தசங்கரி அன்று  தமிழீழ விடுதலைப் புலிகள்தான் தமிழ்மக்களின் ஏகப் பிரதிகள் என்பதை ஏன் ஏற்க மறுத்தார்? சிங்கள அரசோடு ஏன் ஒட்டிக் கொண்டார்? போர்க்காலத்தில் பாதை தெரியாமல் முன்னேற முடியாத  சிங்களப் படையினருக்கு ஏன் பாதை காட்டிக் கொடுத்தார்?

தமிழ் தேசிய கூட்டமைப்பினை நாங்கள்தான் உருவாக்கினோம். புலிகள் உருவாக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக நான்தான் இருந்தேன் என்று பெருமை பேசுவதிலும் ஆனந்தசங்கரி தவறுவதில்லை. அதே நேரம் தமிழ்தேசிய கூட்டமைப்பு அழிக்கப்படவேண்டும் என்றும் பேசி வருகிறார். (https://mulakkam.com/archives/862)

ஆனந்தசங்கரி தன்னை ஒரு யோக்கியன், நாணயஸ்தன் எனச் சொல்லிக் கொள்கிறார். ஆனால் தனது கல்முனைக் கட்சி உறுப்பினர்களிடம் ஐந்து இலட்சம் கேட்டு அது கொடுக்கப்படாத போது அவர்களைக் கட்சியில் இருந்தே நீக்கிவிட்டார்!

“தமிழர் விடுதலைக்கூட்டணியின் கொள்கை பரப்பு செயலாளர் சங்கையா எங்களை தொடர்பு கொண்டு 5 இலட்சம் ரூபா கேட்டார். நாம் இல்லையென்றோம். அதனால்தான் எங்களைக் கட்சியை விட்டு நீக்கியுள்ளனர்” என தவிகூ இல் இருந்து நீக்கப்பட்டுள்ள கல்முனை பிரதி மேயர் காத்தமுத்து கணேஸ் மற்றும் சுமித்ரா ஜெகதீசன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து இந்தப் பரபரப்புக் குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்கள்.  (https://www.tamilnaatham.org/2019/06/blog-post.html)

இப்போது “அரசாங்கத்தின் அத்துமீறல்கள் மற்றும் சனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை சனநாயகத்திற்காக போராடும் அமைப்பினால் மாத்திரமே தட்டிக்கேட்க முடியும் என்பதை பல்கலைக்கழக மாணவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புபவதாக”  என ஆனந்தசங்கரி முழங்குகிறார்.

வெறும் அறிக்கைகளிலும் செய்தியாளர் மாநாடுகளிலும் மட்டும் அரசியல் செய்யும் லெட்டர் பாட் கட்சியான தவிகூ க்கு பல்கலைக் கழக மாணவர்கள் எந்த அடிப்படையில் அழைப்பு விடுக்க முடியும்?

2004 இல் நடந்த தேர்தலில் தவிகூ சின்னமான உதயசூரியன் சின்னத்தைப் பயன்படுத்த ஆனந்தசங்கரி மறுத்துவிட்டார்.

மேவே சுட்டிக் காட்டியவாறு 2004 இல் சுயேட்சையாகக் கேட்டு அவரும் அவரது கூட்டாளிகளும் தோல்வி அடைந்தனர்.  அரசியலில் தன்னை ஒரு பத்தினி விரதன் என்று சொல்லிக்கொள்ளும் ஆனந்தசங்கரி   2018 இல்  நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் இபிஆர்எல்எவ் கட்சியோடு கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டார். 2010 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில்  போட்டியிட்ட தவிகூ படுதோல்வி அடைந்து கட்டுக்காசையும் இழந்தது.

2010 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தவிகூ

தேர்தல் மாவட்டம் வாக்குகள் % இருக்கை வாக்களித்தவர்கள்
மட்டக்களப்பு 4,424 14.0 0 58.56%
கொழும்பு 834 0.09 0 65.03%
யாழ்ப்பாணம் 2,892 1.95 0 23.33%
வன்னி 1,073 1.00 0 43.89%
மொத்தம் 9,223 0.11 0 61.26%
Source:“Parliamentary General Election – 2010”. Department of Elections, Sri Lanka. Archived from the original on 2010-04-14.

இப்படித் தொடர்ந்து தோல்விக்கு மேல் தோல்வியைத் தழுவி வரும் மூன்றாம் தர அரசியல்வாதி ஆனந்தசங்கரிதான் இன்று “சனநாயகத்திற்கு எதிரான செயற்பாட்டைத் தட்டிக்கேட்கும் தகுதியும் துணிவும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு உள்ளதாக”  மார் தட்டுகிறார்.  இது  முடாக் குடிகாரன் மதுவிலக்கைப் பற்றிப்  பேசுவது போல் இருக்கிறது.  இறைச்சிக் கடைக்கார முதலாளி  காந்தி சேவா சங்கத்தில் கொல்லாமை பற்றிச்  சொற்பொழிவு ஆற்றுவது போல் இருக்கிறது.Image result for தமிழர் விடுதலைக்கூட்டணியின்

தந்தை செல்வநாயகத்தைப் போற்றுகிற ஆனந்தசங்கரி அவர் உயிரோடு இருந்த காலத்தில் தவிகூ இல் தொண்டையில் அகப்பட்ட முள்மாதிரி நடந்து கொண்டவர்.

எப்போது  தவிகூ அடாத்தாகத்  தன்னோடு வைத்துக் கொண்டாரோ அன்று முதல்  அது குரங்கு கைப் பூமாலையாகி விட்டது. அந்தக் கட்சியின்  கூட்டத்தில் கேள்வி கேட்பவர்கள் அடியுதை வாங்கி மருத்துவமனைக்குப் போகத் தயாராக இருக்க வேண்டும்.

இப்போது கனடாவில் இருக்கும் ஒருவரிடம் “தம்பி, எனக்கு வயது போய்விட்டது.   அரசியலில் இருந்து ஓய்வு பெற நினைக்கிறேன். நீ ஊருக்கு வந்து கட்சியைப் பாரம் எடு” என்று கேட்கிறார். தவிகூ யை சந்தையில் விற்கும்  தேங்காய் மாங்காய் என ஆனந்தசங்கரி நினைக்கிறார்.

இதேவேளை, 1972 ஆம் ஆண்டு தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் நடத்தப்பட்ட தேர்தல்களில் பெரும்பான்மையான தமிழர்கள் உதய சூரியன் சின்னத்திற்கே வாக்களித்ததாகச் சொல்கிறார். அது உண்மையும் கூட.

ஆனால்  2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர்  ஆனந்தசங்கரியையும் அவரது கட்சியையும் தமிழ்மக்கள் அடியோடு நிராகரித்து வந்துள்ளார்கள். இதனால் அவருக்கு ஏற்பட்டிருக்கும் விரக்தி எமக்குப் புரிகிறது. மக்களை மந்தைகள் என்றும் சம்பந்தனும்  சுமந்திரனும் அரசியலைவிட்டு ஒதுங்க வேண்டும் என்று வசைபாடுகிறார்.

ஆனந்தசங்கரியின் நிலைமை  அடியேன்னு கூப்பிட ஆம்படையான் கிடையாதாம், பிள்ளைக்கு முத்தம் கொடுக்க ஆசைப்பட்டாளாம் ஒருத்தி என்ற கதை போன்றது!


ஆனந்தசங்கரியின் நிலைமை அடியேன்னு கூப்பிட ஆம்படையான் கிடையாதாம், பிள்ளைக்கு முத்தம் கொடுக்க ஆசைப்ட்டாளாம் ஒருத்தி என்ற கதை போன்றது!

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply