நாங்கள் நாங்களாக வாழ்வது எப்பொழுது?
இன்று உலக நகரங்கள் பல்வேறு வளர்ச்சியுடனும் வேகத்துடனும் பயணித்துக்கொண்டிருக்கின்றன. பிரமிப்பையும் கவர்ச்சியையும் பெருக்கிக் கொண்டிருக்கின்றன. அழகும் கொண்டாட்டங்களும் நிறைந்த நகரங்களை மனிதர்கள் சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழர்களின் நகரங்கள் பயங்கரங்களை உருவாக்கும் வன்முறை நகரங்களாகவே மாறிக் கொண்டிருக்கின்றன. யாழ்ப்பாண நகரம் எத்தனை எத்தனை மக்களின் கனவுகளாய் விரிந்திருக்கிற நகரம். வரலாற்றுத் தொன்மையும் அரசியல் முக்கியத்துவமும் பெற்ற இந்த நகரம் ஓர் அச்சப் பிராந்தியமானது எப்பொழுது? இந்த நகரத்தின் மக்கள் தங்கள் வாழ்வை தொலைத்தது எப்பொழுது? யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது என்று இன்று உலகின் கண்கள் திரும்பும் அளவில் இங்கொரு ஆட்சியும் அதிகாரத்தின் நடவடிக்கையும் நிகழ்கின்றது.
1995 அக்டோபர் 17 அன்று அதாவது இதே நாட்களில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் சூரியக் கதிர் (ரிவிரெச) இராணுவ நடவடிக்கையை இராணுவத்தினர் ஆரம்பித்தார்கள். இன்றைய காலம் யாழ்ப்பாணத்தின் வீழ்ச்சியை நினைவுக்கு கொண்டு வருகிறது. அன்று முதல் யாழ்ப்பாணம் பெரும் யுத்தத்தை எதிர்கொண்டது. உலகில் எந்தவொரு இனமும் எதிர்கொண்டிராத பாரிய யுத்தத்தையும் இடப்பெயர்வையும் யாழ்ப்பாணத்து மக்கள் எதிர்கொண்டார்கள். 1995 டிசம்பர் வரை சூரியக் கதிர் நடவடிக்கை நடைபெற்றது. புலிகளிடமிருந்த யாழ். நகரையும் குடா நாட்டின் ஒட்டுமொத்த பகுதிகளையும் படையினர் கைப்பற்றிக் கொண்டார்கள். யாழ்ப்பாணத்தை முழுமையாக கைப்பற்றியதையடுத்து டிசம்பர் மாதம் சூரிய கதிர் நடவடிக்கை முடிவுக்கு வந்தது. யாழ்ப்பாணம் இலங்கைப் படையினரின் ஆட்சியின் கீழ் வந்து இன்றைய காலத்தோடு பதினாறு ஆண்டுகளாகின்றன.
சூரிய கதிர் நடவடிக்கை யாழ்ப்பாண மக்களை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கியது. அக்டோபர் 30 அன்று யாழ். இடப்பெயர்வு என்ற பேரவலம் நிகழ்ந்தது. யாழ்ப்பாண மக்கள் வன்னிக் காடுகளிலும் இடம்பெயர்ந்து அலைந்ததுடன் உலக நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சிதறுண்டு போனார்கள். அத்தகையொரு இடப்பெயர்வால் யாழ். மக்கள் வேரறுந்த நிலையை அடைந்தார்கள். யாழ்ப்பாணத்தின் வீழ்ச்சி இலங்கை இராணுவத்தைப் பொறுத்தவரையிலும் இலங்கை அரசைப் பொறுத்தவரையிலும் மாபெரும் வெற்றியாக கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாண மக்களைப் பொறுத்தவரையில் அது மாபெரும் துயரத்தை கொடுத்த வீழ்ச்சியானது.
யாழ்ப்பாணம் இலங்கையின் வடக்கில் உள்ள முக்கியமான நகரம். தமிழர்கள் செறிந்து வாழுகின்ற நகரம். தமிழர்களின் வரலாறும் தொன்மையும் நிறைந்த நகரம். ஈழப்போராட்டம் தொடங்கும் காலத்தில் வடக்கு கிழக்கு என்கிற தமிழர் தாயக மக்களின் உரிமைகள் தொடர்பான முக்கிய அரசியல் நிகழ்வுகளும் மாற்றங்களும் இங்கு இடம்பெற்றன.
ஈழப் போராட்டம் ஆரம்பித்த கால கட்டத்தில் இலங்கை இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தின் இராணுவ முற்றுகையை அதிகப்படுத்தியிருந்ததுடன் வன்முறைகளும் வெடிக்கத் தொடங்கின. யாழ். நூலக எரிப்பு போன்ற தொன்மைகள் மீதான வன்முறைகளும் யாழ்ப்பாணத்தை 1980 களின் தொடக்கத்தில் காயப்படுத்தியிருக்கின்றன. விடுதலைப் புலிகள் திருநெல்வேலி தபால் பெட்டிச் சந்தியடியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் ஒன்றை நடத்தியதைத் தொடர்ந்து தெற்கில் இனக் கலவரம் மூண்டதுடன் யாழ்ப்பாணத்திலும் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. பின்னர் இந்திய அமைதிப் படையின் வருகையுடன் இந்திய இராணுவத்தினருடனான போரும் யாழ்ப்பாணத்திலும் நடந்தது. பவான் நடவடிக்கை போன்ற போர் நடக்கைகளை இந்திய இராணுவத்தினர் மேற்கொண்டனர். யாழ் வைத்தியசாலை உட்பட பல இடங்களில் படுகொலைகளை நடத்தியிருந்தனர். இந்திய இராணுவத்தினரும் மக்களைக் கொன்று பெண்களை பாலியல் வல்லுறவு புரிந்து வன்முறையில் ஈடுபட்டார்கள். இந்திய இராணுவத்தினரின் வருகைக் காலத்திலும் யாழ்ப்பாணம் பயங்கரங்களில் தவித்தது.
யாழ்ப்பாணம் கடந்த முப்பது ஆண்டுகளாக தொடர்ச்சியாக பல்வேறு பயங்கரங்களை எதிர்கொண்டபடியிருக்கிறது. மரணங்களும் படுகொலைகளும் இந்த நகரத்தை தொடர்ந்து உலுப்பிக் கொண்டிருக்கின்றன. அடக்குமுறைகள் தொடர்ச்சியாக பல்வேறு வடிவங்களில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 1990 களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்த பொழுது தொடர் விமானத் தாக்குதல்களும் ஷெல் வீச்சுக்களும் யாழ்ப்பாணத்தின் அமைதியை குலைத்து பயங்கரங்களை உருவாக்கின. யாழ்ப்பாணம் வரலாற்றில் கண்டிராத மரணங்களையும் இரத்தத்தையும் எதிர்கொண்டது. நாகர்கோவில் விமானத் தாக்குதல், நவாலி தேவாலய விமானத் தாக்குதல், நந்தாவில் அம்மன் கோயில் விமானத் தாக்குதல் உட்பட உதிரியாக மக்கள் வாழ்ந்த கிராமங்கள் மீதும் மக்கள் அதிகமாய் நடமாடும் நகரங்கள் மீதும் தொடர்ந்தும் பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
1995இல் தமிbழ விடுதலைப் புலி களுடனான சமாதானப் பேச்சுவார்த்தை முறிவடைந்ததையடுத்து யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் யுத்தத்தை ஜனாதிபதி சந்தி ரிகா தலைமையிலான அரசு தொடங்கியது. இராணுவத்தினர் குடிகொண்டிருந்த பலாலி, காங்கேசன்துறை போன்ற படைத் தளங் களிலிருந்து முழு யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றும் நோக்கில் படைத் தரப்பினர் நகரத் தொடங்கினார்கள். எங்கும் வான் வழித் தாக்குதல்களும் ஷெல் வீச்சுக்களும் துப்பாக்கிச் சூடுகளும் நடத்தப்பட்டன. உலகின் எந்த இனமும் சந்தித்திராத இடப்பெயர்வை யாழ்ப்பாண மக்கள் சந்தித்தார்கள். ஆறு இலட்சம் மக்கள் ஒரே தடவையில் இடம்பெயர்ந்து யாழ். நகர்த்தெருவுக்கு வந்தார்கள். யாழ்ப் பாணம் வெறிச்சோடியது. நகரங்களும் கிராமங்களும் தெருக்களும் மக்களற்று உறைந்துபோக யாழ்ப்பாணத்தை அரச படைகள் முழுமையாக கைப்பற்றின. 1980களில் காங் கேசன்துறை பலாலி போன்ற இடங்களை படையினர் கைப் பற்றியதைத் தொடர்ந்து மக்கள் இடம்பெயர்ந்தார்கள். இன்று வரையில் முப்பதாண்டுகளாக அந்த மக்கள் அகதிகளாக இருக்கிறார்கள்.
1995 சூரியக் கதிர் நடவடிக்கை என்ற அந்தக் கொடிய யுத்தத் துடன் யாழ்ப்பாணம் தீவிர யுத்த காயங்களுக்கு உள்ளானது. இன்றுவரை ஆறாத காயங்களும் சிதைவுகளும் ஏற்பட்டன. யாழ்ப்பாணத்தின் தொன்மை மிகுந்த சுவர்களும் கட்டடங் களும் இன்றுவரை அந்த சிதைவுகளும் அழிவின் தட யங்களும் ஆறாத நிலையி லிருக்கின்றன. 1995இல் படை களிடம் யாழ்ப்பாணம் வீழ்ந்த பொழுது யாழ். நிலத்தின் இளைஞர்களும் யுவதிகளும் கடத்தப்பட்டார்கள்.
இனந்தெரியாத நபர்கள் என்கிற போர்வையில் பல நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். சந்திகளும் தெருக்களும் எப்பொழுதும் துப்பாக்கிகள் ஆட்களை கொல்லும் என்ற பீதியுடன் கழிந்தன. ஈழப் போரில் 2006 ஆகஸ்ட் 12 வடக்கில் யுத்தம் மீண்டும் வெடித்தது. யுத்தம் வெடித்த சம யத்தில் யாழ்ப்பாணத்தின் வாசல் மூடப் பட்டது. வன்முறைகள் பெரியளவில் அதிகரிக்கத் தொடங்கின. நாள்தோறும் பத்துப் பேர் வரை தெருக்களில் கொன்று போடப்பட்டார்கள். வெள்ளை வான்களில் கடத்தப்பட்டார்கள்.
1987இல் இந்திய அமைதிப்படை யுத்த த்தை தொடங்கியபொழுது 35 நாட்கள் தொடர் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்த ஊரடங்கில் வெளியில் வந்த தமி ழர்கள் வயது வேறுபாடற்ற நிலையில் இந்திய அமைதிப்படைகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அதற்குப் பின்னர் மிகக் கொடிய ஊரடங்கை 2006 இல் யாழ்ப்பாண மக்கள் சந்தித்தார்கள்.
யாழ்ப்பாணத்தின் அன்றைய பயங்கரங்களை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எதிர்த்தது. யாழ்ப்பாண மக்கள் மீதான தாக்குதல்களையும் யாழ்ப்பாணத்திற்கு வெளியில் நடந்து கொண்டிருந்த யுத்த களங்களையும் மூட வேண்டும் என்று யாழ் பல்கலைக்கழக சமூகம் கோரிக் கொண்டிருந்தது. அந்நாட்களில் பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் கொல்லப்பட்டார்கள்.
யாழ்ப்பாணத்தின் பயங்கரங்களை யாழ். பல்கலைக்கழக சமூகம் எப்பொழுதும் எதிர்த்துக் கொண்டிருக்கிறது. யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், ஊழியர்களுக்கு பலமுறை கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இந்த அச்சுறுத்தலும் அடக்குமுறையும் நிகழ்த்தப்படும் பொழுது புலிகளுக்கு ஆதரவளிக்கிaர்கள் என்ற குற்றச்சாட்டையே காட்டி வந்தார்கள். 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் யாழ். பல்கலைக்கழகத்தின் மீது மிகவும் தீவிரமான கண்காணிப்பு செலுத்தப்பட்டது. அப்பொழுது வன்னி யுத்தம் நடந்து கொண்டிருந்தது. வன்னி யுத்தத்திற்கு எதிராக யாழ். பல்கலைக்கழக சமூகம் எதிர்தெழக் கூடாது என்று அடக்கி வைக்க முற்பட்ட நடவடிக்கையை மீறி யாழ். பல்கலைக்கழகம் யுத்தத்திற்கு எதிரான தனது எதிர்க்குரலை வெளிப்படுத்தியது. என்ன செய்வது என்று தெரியாது யாழ்ப்பாணம் உறைந்திருந்த பொழுது யாழ் ஆயர். யாழ். கஸ்தூரியார் வீதியில் உள்ள அந்தோனியார் சபை, யாழ். பல்கலைக்கழகம் என்பன மெளனப் போராட்டங்களை நடத்தியிருந்தன.
கிறிஸ் பூதங்கள் யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கையை உலுப்பின. இந்தப் பூத விவகார அரசியலை மக்களே வெளிக்கு கொண்டு வந்தார்கள். பூதங்கள் என்பது யார் என்றும் அதன் அரசியல் இலக்கு என்ன என்றும் அது எந்த அடக்குமுறை வடிவத்தின் தொடர்ச்சி என்றும் மக்கள் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். தெற்கில் புறப்பட்ட பூதங்கள் வடக்கில் யாழ்ப்பாணத்தில் நாவாந்துறையில் முழுமையாக தோற்கடிக்கப்பட்டன. இராணுவமயங்களும் அதன் அடக்கு முறைகளும் எப்பொழுதும் அடிநிலை மக்களையும் மாணவர்களையும் இளைய தலைமுறையையுமே அதிகமாக அச்சுறுத்தி வாழ்க்கை பற்றிய பயங்களை விரிக்கின்றன.
அதேவேளை பூதங்களுக்கு எதிரான போராட்டங்களில் நவாந்துறை கடல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் துணிவோடு ஈடுபட்டிருக்கிறார்கள். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இத்தகைய போராட்ட களங்களை பூதங்கள்தான் திறந்திருக்கின்றன.
எங்கள் நிலத்தில் எப்பொழுது நிம்மதி உருவாகும் என்றும் அழுத்தமாக கேட்க வேண்டியிருக்கிறது. இன்று தமிழ் மக்கள் எப்பொழுது விடிவு வரும் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஏக்கத்திற்குள் எப்பொழுது தீர்வு கிடைக்கும்? எங்கள் மீதான வன்முறைகள் எப்பொழுது முடி வுக்கு வரும்? நாங்கள் நாங்களாக வாழ் வது எப்பொழுது? என்ற ஏக்கம் நிறைந்த பல கேள்விகளுடன் வாழ்கிறார்கள். தமிழ் மக்கள் அமைதியையும் வன்முறையற்ற வாழ்வையும்தான் விரும்புகிறார்கள். அமைதி என்பது எப்படியிருக்கும்? வன் முறையற்ற வாழ்வு என்பது எப்படியிருக்கும்? அழகான வாழ்வு என்பது எப்படியிருக்கும்? என்ற ஏக்கங்களுடன் வரலாறு கழிந்து கொண்டிருக்கிறது. இயல்பை தின்று பயங்கரங்களை உலுப்பும் இந்த வன்முறைகள் எதற்காக நிகழ்த்தப்படுகின்றன.
பிரசுரித்த நாள்: Dec 11, 2011
Leave a Reply
You must be logged in to post a comment.