அரசாங்கம் பணத்தைக் கொடுத்து  தமிழ் அரசுக் கட்சி நா.உறுப்பினர்களைத் தங்கள் பக்கத்துக்கு  இழுத்து விட்டது என்பது தலை கால் இல்லாத பொய்!

அரசாங்கம் பணத்தைக் கொடுத்து  தமிழ் அரசுக் கட்சி நா.உறுப்பினர்களைத் தங்கள் பக்கத்துக்கு  இழுத்து விட்டது என்பது தலை கால் இல்லாத பொய்!

நக்கீரன்

எதிர்வரும் சனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது பற்றி வவுனியாவில் தமிழ் அரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கடந்த வாரம் நடந்தது. நீண்ட ஆராய்வின் பின்னர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது என ஒருமனதாக ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. அதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயாவுக்கு அனுப்பி வைத்தார்கள்.

இந்தத் தீர்மானம் பற்றி முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் அவரது  கருத்தை ஊடகவியலாளர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் ” இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆதரவைப் பணத்தை வழங்கியே அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது” எனக் குற்றம் சுமத்தினார்.

இந்தச் செய்தியை நம்பாத காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரன் அதுபற்றி விசாரித்து அந்தச் செய்தி உண்மைதான் என உறுதி செய்து கொண்டார். அதனை அவர் ‘இனி இது இராகசியம் இல்லை’ என்ற பத்தி மூலம் வாசகர்களோடு பகிர்ந்து கொண்டுள்ளார். அதனை அப்படியே கீழே தரப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் என்ற முறையில் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் மீது சில சமயங்களில் எனக்கு எரிச்சல் வருவதுண்டு. யாராவது ஊடகவியலாளர்கள் அவரிடம் பேட்டி என்று கேட்டால் – அதுவும் குறிப்பாகத் தொலைக்காட்சிப் பேட்டி என்று கேட்டால் – முதலில் கேள்வியை எழுத்தில் தாருங்கள், நான் பதிலை எழுதிக் கொண்டு வருகிறேன் என்பார்.

“என்னடா, இவர் அரசியல்வாதி….;’ -என்று நானே என்னை நொந்து கொள்வதுண்டு.

ஆனால், அவரின் அந்தப் போக்கும் சரியானதுதான் என்று நிரூபிக்கும் வகையில் எனது சகோதர ஊடகவியலாளர்கள் நடந்து கொள்வதுதான் வேதனையிலும் வேதனை. நேற்று நீதியரசர் விக்னேஸ்வரனைப் பற்றி ஒரு செய்தி சில ஊடகங்களில் வெளியானது.

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆதரவைப் பணத்தை வழங்கியே அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வீ.விக்னேஸ்வரனே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.”

– இந்தச் சாரப்பட அந்தச் செய்தி அமைந்திருந்தது. பணத்துக்கு தமிழரசு விலை போனது – ஊழலுக்கு இடமளித்தது – என்ற மனப்பதிவை அந்தச் செய்தி எனக்குத் தந்தது. விக்னேஸ்வரன் அப்படிக் கூறினாரா என்று தேடிப்பார்த்தேன்.

விக்னேஸ்வரன் புத்திசாலி. தமது வீட்டின் – அலுவலக அறையில் – தம்மைச் சந்திக்கும் நபர்களுடனான உரையாடல்களை அப்படியே பதிவு செய்யும் விதத்திலான வசதியை வைத்திருப்பார் போலும். மேற்படி செய்தியாளருக்கு அவர் வழங்கிய பேட்டியில் அவர் கூறிய கருத்துக்களின் பதிவைக் கேட்டேன். அதனை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவு குறித்து விக்னேஸ்வரனிடம் கேட்கப்பட்டது. “தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையிலே அவர்களுக்கு சில கடப்பாடுகள் இருக்கின்றன. கடந்த ஒரு வருடத்தை எடுத்துப் பார்த்தீர்களேயானால் தற்போதைய அரசாங்கம் வெகுவாகப் பணத்தைக் கொடுத்து மக்களுக்கு சேவை செய்யுங்கள் என்ற முறையிலே நாடாளுமன்ற அங்கத்தவர்களுக்குப் பெருவாரியான பணம் கொடுத்திருக்கின்றார்கள். சில, சில வீதிகளைத் திருத்துகின்றார்கள்.

ஏதேதோ வேலைகளை எல்லாம் செய்கின்றார்கள். ஆகவே, ஒரு விதத்திலே அவர்கள் பணத்தைக் கொடுத்து தங்கள் பக்கத்துக்கு இவர்களை இழுத்து விட்டார்கள் போன்று எங்களுக்குத் தெரிகின்றது” –  இதுதான் விக்னேஸ்வரன் கூறிய வார்த்தைகள்.

அதாவது, மக்கள் நலத்திட் டங்களை முன்னெடுங்கள் என்று கூறி, இந்த எம்.பிக்கள் ஊடான செயற்றிட்டங்களுக்கு இந்த அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்திருக்கின்றது. அதன்மூலம் சில வீதிகள் அமைப்பு என்று ஏதோ திட்டங்கள் செய்கின்றார்கள் என்பதுதான் விக்னேஸ்வரனின் கருத்து. இந்த நிதி ஒதுக்கீடுகளைக் கொடுத்து கூட்டமைப்பினரைத் தங்கள் பக்கத்துக்கு அரசாங்கம் இழுத்து விட்டது போன்றே தங்களுக்குத் தெரிவதாக அவர் சுட் டிக்காட்டினார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆதரவைப் பணத்தை வழங்கியே அரசு பெற்றுக் கொண்டது என விக்னேஸ்வரன் கூறினார் என மொட்டையாக சுட்டினால் அது எத்தகைய அர்த்தத்தைத்தரும்?

தமது செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் கொஞ்சம் பொறுப்பாக நடந்து கொண்டால்தான் எமது ஊடகத்துறையின் மதிப்புப் பேணப்படும் என்பது எனது அனுபவப் பாடம். அடுத்த தலைமுறை -இளம்- ஊடக வியலாளர்கள் கவனிக்க வேண்டிய விடயம் இது.

காக்கைக்குக் கனவிலும் ஏதோ தின்னுகிற எண்ணந்தானாம். அது போல விக்னேஸ்வரன் தமிழ் அரசுக் கட்சியைப் பற்றியே கெட்ட கனவுகள் கண்டு கொண்டிருக்கிறார். அவரது கெட்ட கனவுகளில் ஒன்று
‘அரசாங்கம் பணத்தைக் கொடுத்து தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைத்  தங்கள் பக்கத்துக்கு  இழுத்து விட்டார்கள்’ என்பதாகும்.

இப்படி விக்னேஸ்வரன் தமிழ் அரசுக் கட்சியைப் பார்த்துத் தூற்றுவது இதுதான் முதல் தடவையல்ல. முன்னரும் பல தடவைகள் இப்படித் தூற்றியுள்ளர். “நாங்கள் (தமிழ் அரசுக் கட்சி / ததேகூ எங்கள் மக்களுக்கு உங்கள் பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிடுவோம். அதாவது எம் மக்களுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களை வாங்கிவிடுவோம்” எனக் கூறியுள்ளார். (https://www.bbc.com/tamil/sri-lanka-47269202).

இதன் பொருள்  வடக்கு – கிழக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மக்களுக்கு தமிழ் அரசுக் கட்சி நா.உறுப்பினர்கள் கொடுக்கும் இலஞ்சமாகும். இப்படி அவர் சொல்வது தமிழ்மக்களை அவமானப்படுத்துவதாகும். போர் முடிவுக்கு வந்த பின்னர் 2010, 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் பெரும்பான்மை (70 விழுக்காடு) தமிழ்மக்கள் தமிழ் அரசுக் கட்சி இடம்பெற்றுள்ள ததேகூ க்குத்தான் வாக்களித்தார்கள். 2015 இல் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் நடந்த தேர்தலில் முதல் மூன்று இடங்களில் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர்களும், நான்காவது இடத்தில் புளட் கட்சி வேட்பாளரும் அடுத்த ஐந்து மற்றும் ஆறாவது இடங்களில் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர்கள் அதிகளவு விருப்பு வாக்குகளை  பெற்றிருந்தார்கள். அந்தத் தேர்தலிலும் தமிழ் அரசுக் கட்சி “லஞ்சம்”  கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கியதா?

விக்னேஸ்வரன் “லஞ்சம்” எனக் குறிப்பிடுவது அரசு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் வடக்கிலும் – கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுத் திட்டங்களே! இதில மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம், காங்கேசன்துறை துறைமுகம், பருத்தித்துறை துறைமுகம், சர்வதேச யாழ்ப்பாண விமான நிலையம், வீடுகட்டும் திட்டங்கள், சாலை அபிவிருத்திகள், கல்வி, மருத்துவம் போன்ற கட்டுமானங்களும் அடங்கும்.

பிரதமர் இரணில் விக்கிரமசிங்கவின்  அமைச்சான தேசியக் கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம்,  புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, திறன்கள் அபிவிருத்தி, தொழிற் பயிற்சி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சுக்குப் பொறுப்பாக இருக்கிறார். இந்த அமைச்சின் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் (Department of National Planning)  ஊடாக  (1) பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு நிகழ்ச்சித் திட்டம், (2) கிராமிய உட்கட்டு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், (3)  கம்பெரலிய துரித  கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்,   (4) மதசார் நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான நிகழ்ச்சித் திட்டம் ஆகிய வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பனம்பொருள் அபிவிருத்தி வாரியமும் இந்த அமைச்சின் கீழ்த்தான் வருகிறது.

கம்பெரலிய, என்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டங்கள் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஊடாக கிராமிய அபிவிருத்திக்கு ரூபா 6450 கோடியிலும் அதிக தொகை வழங்கப்பட்டுள்ளது.

கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்காக “கம்பெரலிய”திட்டத்தின் கீழ் ரூபா 4881 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

6,936 கிராமப்புற வீதிகள் மேம்பாட்டுக்கு ரூபா 13,872  மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

1,300 கிராம குளங்கள் மற்றும் அணைகளுக்கு ரூபா 4,550 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

நகர மற்றும் கிராமப்புற வீட்டுத் திட்டத்துக்கு ரூபா 13,872 ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அபிவிருத்தியை பலப்படுத்துவதற்கு அமெரிக்காவிடமிருந்து  உதவித் தொகையாக ரூபா 8000 கோடி கிடைத்துள்ளது.

மேலே கூறப்பட்டுள்ள கம்பெரலிய திட்டத்தின் கீழ்த்தான் ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிராமிய அபிவிருத்திக்கு பல கோடி பணம் கொடுக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 11 தேர்தல்  தொகுதிகளுக்கும் ரூபா 33 கோடி ஒதுக்கப்பட்டது.

திருகோணமலையில் தேசிய வீடமைப்புத் திணைக்களம் தமிழகத்தில் இருந்து நாடு திரும்பிய 651 குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளது.

வடக்குக்  கிழக்கில் இந்த ஆண்டு 25,000 வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். பதினாயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

கிராமிய அபிவிருத்திக்காக கம்பெரலிய வேலைத் திட்டத்தின் கீழ் 2018 இல் நாடு பூராவும் மேற்கொள்ளப்பட்டுவரும் 30840 துரித அபிவிருத்தித் திட்டங்களுக்காக ரூபா 1328 கோடியிலும் அதிக தொகை வழங்கப்பட்டுள்ளதென தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்திருந்தார்.

கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட துரித அபிவிருத்தியின் நிமித்தம்  தொடங்கப்பட்ட கம்பெரலிய வேலைத் திட்டம் நாடு பூராவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மத வழிபாட்டுத் தலங்கள் புனரமைப்பு, மின்சாரம் வழங்குதல், பசுமைப் பூங்காக்களை உருவாக்குதல், குளங்களின் அணைக்கட்டுக்களைப் புனரமைத்தல், பாடசாலைகளைப் புனரமைத்தல் உட்பட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் இதன் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. மாவட்டச் செயலாளர்கள் ஊடாகப் பிரதேச செயலாளர்களுக்கு நேரடியாக நிதியை வழங்குவதற்குத் தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிதி நாடு பூராவும்  வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியினைத் துரிதப்படுத்தும் முகமாக, இரண்டு வருட காலப்பகுதியில் 5000 மில்லியன் முதலீட்டில் துரித அபிவிருத்திக்காக ‘பனை நிதியம்” அமைக்கும் திட்டம் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாகவே மேலும் 7 பில்லியனை ஒதுக்குவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

பனை நிதியம் என்று சொல்லுகின்ற போது அது பனைக்கான நிதியம் அல்ல. அது உண்மையில் வட, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்கான நிதியம். இதன் கீழ் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படலாம். ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு தேவையான முன்னுரிமைப்படுத்தப்பட்ட கருத்திட்டங்கள் இனம் காணப்பட்டு, அந்தக் கருத்திட்டங்களைத் தயாரிக்கின்ற வேலைத்திட்டங்களின் செயற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன என வட மாகாண அபிவிருத்தி செயலாளர் வி. சிவஞானஜோதி குறிப்பிட்டார்.

அதற்கமைய சிறிலங்காவிலுள்ள 25 மாவட்டங்களின் துரித அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் துரித அபிவிருத்திக்கும்   நிதி   ஒதுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் 299 கருத் திட்டங்களுக்கு ரூபா 278 மில்லியன்,    திருகோணமலை மாவட்டத்தின் 270 கருத் திட்டங்களுக்கு ரூபா 297 மில்லியன்,   மட்டக்களப்பு மாவட்டத்தின் 169 கருத் திட்டங்களுக்கு ரூபா 203 மில்லியன்,   மன்னார் மாவட்டத்தின் 39 கருத் திட்டங்களுக்கு ரூபா 59 மில்லியன், முல்லைத்தீவு மாவட்டத்தின் 19 கருத் திட்டங்களுக்கு ரூபா 21 மில்லியன், வவுனியா மாவட்டத்தின் 19 கருத் திட்டங்களுக்கு ரூபா 18 மில்லியன் என்ற ரீதியில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தவிர, ஒரு இலட்சம் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும். என்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்கா அரசாங்கத்தின் சலுகை வட்டிக் கடன் திட்டத்தின் கீழ் 22,957 நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க மற்றும் தனியார் வங்கிளின் ஊடாக நடைமுறைப் படுத்தப்படும் இந்தக் கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள கடன் தொகையின் மொத்தப் பெறுமதி ரூபா 4917 கோடியிலும் அதிகமாகுமென இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் ரூபா 2250 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனூடாக 14,328 கருத்திட்டங்களுக்காக ரூபா 194 கோடி நிதி அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் விழுக்காடாக நோக்கும்போது அது 86  விழுக்காடு எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். அதற்கமைய, கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதி ரூபா 6450 கோடியிலும் அதிகமென இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா மேலும் தெரிவித்தார்.

இந்தத் திட்டங்களால் வடக்கு கிழக்கு மக்கள், குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பயன் அடைவார்கள். ஊரெழுச்சி திட்டங்கள் சரி, ஏனைய திட்டங்கள் சரி எல்லாமே அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலமே நடைமுறைப் படுத்தப்படுகிறது.

ஊரெழுச்சித் திட்டத்தில் (கம்பெரலிய) பணிகளைப்  பொறுப்பெடுத்துள்ள சிவில் அமைப்புக்கள் தாமதமின்றி இறுதிக் கொடுப்பனவுகளை பெறத்தக்க வகையில் செயற்படவேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். வலிகாமம் கிழக்கில் இந்த ஆண்டில் பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் சிபாரிசில் 300 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைகள் நடைபெறுகின்றன.

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் “இந்த அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பணத்தைக் கொடுத்துத் தங்கள் பக்கத்துக்கு இவர்களை இழுத்து விட்டார்கள் போன்று எங்களுக்குத் தெரிகின்றது” என ஒப்பாரி வைக்கிறார். விக்னேஸ்வரன் அபிவிருத்தியல்ல தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகள்தான் முக்கியமானது என்ற கொள்கையை வைத்துக் கொண்டிருப்பவர்.

விக்னேஸ்வரன் வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதில்  கலந்து கொள்ளப் போவதில்லை எனவும் அதில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டாம் எனக்கோரி இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்தக்  கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதில் கலந்து கொள்ளாவிட்டால் யாருக்கு இழப்பு என்பதை விக்னேஸ்வரன் கிஞ்சித்தும் கவலைப் படவில்லை.  வடக்கு மற்றும் கிழக்கு செயலணிகளுக்கு ரூபா 25,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது! வடக்கு அபிவிருத்திச் செயலணிக்கு முன்னாள் அரச சேவை அதிகாரி செல்வின்    செயலாளராகவும் கிழக்கு அபிவிருத்திச் செயலணிக்கு கதிரவேலு குகதாசனனும் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களின்  தமிழ் பிரதேச அபிவிருத்திக்கு கிடைத்திருக்கும் ஒரு அரிய சந்தர்ப்பம் இதுவாகும். துரிதமாகவும் வினைத்திறனோடு செயல்பட வேண்டிய பொறுப்பு வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணிக்கு உரியதாகும்.

 மாகாண சபைக்கு அதிகாரம் கிடையாது என்று சொல்லும் விக்னேஸ்வரன் மீண்டும் ஏன் அதே மாகாண சபையின் ஆட்சியைப் பிடிக்க ஆலாய்ப் பறக்கிறார்?

ஒரு மாகாண முதலமைச்சர் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருப்பது அசிங்கம் இல்லையா? ஒட்டு மொத்த தமிழ்மக்களுககுத் தலைக்குனிவு இல்லையா? முன்னாள் நீதியரசருக்குச் சட்டம் தெரியாதா?

ததேகூ நா.உறுப்பினர்கள் பதவிக்காக அலைகிறார்கள். சலுகைகளுக்கு கையேந்துகிறார்கள் என விக்னேஸ்வரன் குற்றம் சாட்டுகிறார். அது நியாயம் என்றால் அவர் ஏன் தனக்கு அ.டொலர் 40,000 ர் பெறுமதியான வாகனம் வேண்டாம் எனது தகைமைக்கு அமைய  அ.டொ 65,000 பெறுமதியான சொகுசு வாகனம் வேண்டும் என்று அரசிடம் மன்றாடுகிறார்? பதவி போன பின்னரும் தனது பாதுகாப்புக்கு பொலீஸ் வேண்டும் என்று கெஞ்சுகிறார்?

இப்படி அரசிடம் மன்றாடும் ஒருவர்  சலுகைகள் பற்றிப் பேசலாமா? சி.ஏ.சந்திரசிறி ஆளுநராக இருந்த காலத்தில்தான் கொழும்பு – யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் பயணம் செய்ய ஓசியில் விமானச் சீட்டுக் கொடுக்கப்பட்டது. கடந்த 2013 -2018  காலப்பகுதியில்   25 இலட்சம் இந்த விமானச் சீட்டுக்குச் செலவழிக்கப்பட்டு இருக்கிறது! இது சலுகை இல்லையா?

விக்னேஸ்வரன்  முதலமைச்சராக இருந்த போது சம்பளம் வாங்காமலா பணி செய்தார்? வீட்டு வாடகை (ரூபா 70,000) தனது பைக்குள் இருந்தா கொடுத்தார்?

அவரது முதல் தனிச் செயலாளர் அவரது மைத்துனன் மன்மதராசா தானே? இரண்டாவது தனிச் செயலாளர், அரசியல் ஆலோசகர் அவரது மருமகன் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நிமலன்தானே? இது உறவினர் ஆதரவுக்  கொள்கை (nepotism) இல்லையா?

பொருளாதார அபிவிருத்தி வேண்டாம் எனக் கூவும் விக்னேஸ்வரன் இலண்டன், ரொறன்ரோ போன்ற நகரங்களுக்குச் சென்று அபிவிருத்தி என்று சொல்லி நிதி திரட்டவில்லையா? அந்த நிதிக்கு என்ன நடந்தது என்பது தனிக் கதை.

அவர் முதலமைச்சராக இருந்த போது சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் மத்திய அரசின் சுகாதார அமைச்சர் இராஜீத சேனரத்தினா அவர்களோடு பேசி வடக்கு மகாணத்தில  உள்ளள ஆறு நிருவாக மாவட்டங்களில் உள்ள மருத்துவ மனைகளை மேம்படுத்த உதவி கேட்டார். அவர்  அப்போது இலங்கைக்கு வருகை தந்திருந்த  நெதெலாந்து நாட்டுத் தூதுக் குழுவோடு  மருத்துவர் சத்தியலிங்கத்தை சந்திக்க வைத்தார். அவர்களோடு பேசியதன் பலனாக நெதெலாந்து நாடு  யூரோ 60 மில்லியனை (ரூபா 12,000 கோடி) மருத்துவமனைகள் கட்டுமானத்துக்கு நன்கொடையாகக் கொடுத்தது. இப்போது  நெதெலாந்து கொடுத்த நிதியைப் பயன்படுத்தி வடக்கில் உள்ள மருத்துவமனைகளை மேம்படுத்தும் பணி நடந்து கொண்டிருக்கிறது.

அப்போது முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் மருத்துவர் சத்தியலிங்கத்தின் முயற்சியை மெச்சி அவரது  முதுகைத் தட்டிப் பாராட்டுத் தெரிவித்திருந்திருப்பார் என்றுதான் யாரும் நினைப்பார்கள். ஆனால் விக்னேஸ்வரனின் அப்படி எதுவும் செய்யவில்லை. அப்படியான பெருந்தன்மை அவரது பரவணியில் இல்லை. அவது எதிர்வினை எவ்வாறு  அமைந்திருந்தது? “என்னைக் கேட்காமல் சில அமைச்சர்கள்  பின் கதவால் மத்திய அரசோடு பேசி நிதி பெறுகிறார்கள்” என அங்கலாய்த்துக் கொண்டார்.

 2015 இல் யூஎன்டிபி நிறுவனம் அ.டொலர் 150 மில்லியன் (ரூபா 3,204 கோடி) நிதியுதவியை கொடுக்க முன்வந்தது. இந்த நிதியின் மூலம் வடக்கு மாகாண விவசாயிகள், தோட்டக்காரர்கள் போறோரின் வாழ்வாதாரத்தை நிமிர்த்துவதே அதன் நோக்கம். விக்னேஸ்வரன் அந்த நிதியை இரண்டு கைகளையும் நீட்டி வாங்கிக் கொண்டாரா?

தனது மருமகன் நிர்மலனுக்கு அந்தத் திட்டத்தில் மாதம் அ.டொலர் 5,000 சம்பளத்தில் வேலை கேட்டு அதனை அந்த நிறுவனம் கொடுக்க மறுத்தபோது அந்த நிதியே வேண்டாம் என்று விக்னேஸ்வரன் கையை உதறிவிட்டார்.  அந்தப் பணத்தில் பாதி சந்திரிகா குமாரதுங்கா நடத்தும் ஒரு தொண்டு நிறுவனத்துக்கு மடைமாற்றுச் செய்யப்பட்டது.

முப்பது ஆண்டு காலப் போரினால் நொந்து நூலாகிப் போன எமது மக்களுக்கு  அடிப்படை வாழ்வாதார உதவி தேவை. வீடுகள், சாலைகள், பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள், வேலை வாய்ப்புக்கள், உணவு, உடை  தேவை.

தமிழ்மக்களுக்கு அரசியல் வேணவாக்கள் போல்  பொருளாதார அபிவிருத்தியும்   தேவைப்படுகிறது. இரண்டும் தேவை. இரண்டும் சமாந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும். இந்தக் கொள்கையே ததேகூ  இன் அடிப்படை அரசியல், பொருளாதாரக் கோட்பாடாகும்.

வடக்கு கிழக்கு மாகணங்களின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி தமிழ்மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் இருந்தும் வருகிறது. எனவே அரசாங்கம் பணத்தைக் கொடுத்து  தமிழ் அரசுக் கட்சி நா.உறுப்பினர்களைத் தங்கள் பக்கத்துக்கு  இழுத்து விட்டது என்பது தலை கால் இல்லாத பொய்!


அரசு கூட்டமைப்புக்கு பணம் கொடுத்தா ஆதரவு பெற்றது? என்ன சொல்கிறார் விக்கி ஐயா


கோட்டாவின் வெற்றிக்காக விக்கி கொடுத்த அஸ்திரம்!

 

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

1 Comment

 1. வணக்கம் அண்ணா…
  ஒவ்வொரு பிரதேச செயகங்களுக்கும் 300 மில்லியன் இலங்கை ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கோப்பாய்க்கும் வலிகாமம் வடக்கிற்கும் 400 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. காரணம் 52 நாட்கள் இடம்பெற்ற பிரதமர் கவிழ்ப்பில் நாம் ஏதோ ஒருவகையில் வேலையினை நிறுத்தவில்லை. சில சமயங்களில் அக் காலப்பகுதிக்கு முன்னரான திகதிகளை இட்டு கூட நாம் வேலையினை மேற்கொண்டு விட்டோம். ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் இருக்கும் அபிவிருத்திக் குழுக்களுக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமை தாங்குகின்றனர். அவர்களது சிபாரிசில் வீதிகள் பெயரிடப்படுகின்றன. பிரதேச சபைகள் நாம் பணிகளை நடைமுறைப்படுத்துகின்றோம்.

  மு. முதலமைச்சர் கூறுவதில் மக்கள் நலன்கள் அற்ற வங்குரோத்து அரசியலைiயே நாம் காண்கின்றோம். மக்களின் அபிவிருத்திக்காக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச நிர்வாக தாபனங்களின் ஊடாக திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஒதுக்கீடுகளை பெறுவதை விலை போதல் என்று சொல்வதில் என்ன நியாயம்? பணம் எதுவும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சட்டைப்பைகளுக்கு வழங்கப்படவில்லை. மாறாக சுற்றுநிருபங்களின் பிரகாரம் அரச தாபனங்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. செலவிடப்படும் பணத்திற்கு மத்திய மற்றும் மாகாண கணக்காய்வுகள் இருக்கின்றன.

  அபிவிருத்தியை சிபாரிசு செய்வதற்கான உரிமை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்றது. இது அபpவிருத்திக்காக வரி செலுத்தும் எமது மக்களுக்கு உரிய உரிமை . அரசியல் தீர்விற்காக முயற்சிகள் எடுக்கப்படுகின்ற அதேசமயம் அபவிருத்திக்காகவும் முயற்சி எடுப்பது அவசியம் அல்லவா? இனத்தின் இருப்பினை பாதுகாப்பதற்கு எமது பிரதேசங்களின் இருப்பும் அவசியமானது.
  அபிவிருத்தி பற்றி சிந்தனை இன்றி முன்னாள் மு.அமைச்சர் பதவியில் இருந்துள்ளார் என்பதை அவரது இக்கருத்து தெளிவாக புடம்போடுகின்றது.
  நன்றி அண்ணா….

  On Wed, 6 Nov 2019 at 20:34, Thanga wrote:
  திரு நிரோஷ்

  ஏனைய நா.உறுப்பினர்களது பரிந்துரையில் ஊரெழுச்சித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி விபரங்களைத் தர முடியுமா?
  ததேகூ னருக்கு அரசாங்கம் பணம் கொடுத்து வாங்கிவிட்டது என்று விக்னேஸ்வரன் அவர்கிளடம் கேட்ட ஒரு கேள்விக்குப் பதில் அளித்துள்ளார்.

  நக்கீரன்

Leave a Reply