நீதித்தராசில் கூட்டமைப்பு –  கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் நக்கீரன் மறுப்புரை

நீதித்தராசில் கூட்டமைப்பு –  கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

நக்கீரன் மறுப்புரை

இலங்கை ஜெயராஜ் “நீதித்தராசில் கூட்டமைப்பு” என்ற ஒரு தொடர் அரசியல் கட்டுரையைத் தனது இணைய தளத்தில் எழுதிவந்தார். அதன் இறுதிப் பகுதி 5 இந்த வாரம் முடிவுக்கு வந்தது. ஜெயரரஜ் அவர்களின் புலமை இலக்கியம் பற்றியது. இலக்கியம் என்றால் சங்க இலக்கியம், ஐம்பெருங்காப்பியங்கள் போன்ற வற்றில் அல்ல. கம்பர் எழுதிய இராமாயணம் பற்றியது. தமிழ்நாட்டில் உள்ள கம்பதாசர்கள் மத்தியில் கம்பராமாயணம் பற்றி மேடையில் பேசிக் கைதட்டு வாங்குகிறார். அதனை மறுப்பதற்கில்லை. கம்பன் எழுதிய இராமாயணம் இராமனை அவதாரமாகவும் இலங்கை வேந்தன் இராவணனை இரக்கமில்லா அரக்கனாகவும் சித்திரிக்கிறது. இதனை ஏற்றுக்கொள்ளாத தமிழ் அறிஞர்கள் பலர் தமிழ்நாட்டில் இருக்கிறர்கள்.

இராவணனுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஞானசம்பந்த நாயனார் “இராவணன் மேலது நீறு” எனத் திருநூற்றுப் பதிகத்தில் சிறப்பித்துப் பாடியிருக்கிறார். அதாவது திருநூற்றுக்குச்  சிறப்பே அது இராவணனது மேனியை அலங்கரிப்பதுதான்.

இராவணன் சிறந்த சிவபக்தன்,  இசை வல்லுனன், வீணைக்கொடியோன், முக்கோடி வாழ்நாள் ஆயுளை உடையவன், கடும் முயற்சிகள் எடுத்து தவங்கள் செய்தவன், முக்கடவுள்களில் முதல் கடவுளாகிய பிரம்மனிடம் அரக்கர் தேவர் முதலானவர்கள் யாராலும் வெல்லப்படாத வரத்தை வாங்கியவன்.  உலகையே அடக்கி வைத்த வலிமையுடைவன் என்ற பெருமைகளை யெல்லாம்  உடையவனாக இருந்தவன். அவன் வேதங்களைக் கற்றுத் தேர்ந்தவன். அதனால் வேத வித்தகன் என்று போற்றப்படுபவன். பல கலைகளில் வல்லமை பெற்றவன். நாட்டு மக்களை செல்வச் செழிப்புடன் வைத்திருந்தவன். இப்படி எத்தனையோ சிறப்புகளை அவன் பெற்றிருந்தாலும் அவனுக்குக் கடைசி வரை பெருஞ்சிறப்பைக் கொடுத்தது அவனது வீரமே.

இப்படிப்பட்ட ஒருவனை இரக்கமில்லாத அரக்கன் என கம்பன் வருணிப்பதை பெரும்பான்மை  தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இராவணன் மட்டுமல்ல அவனது பட்டத்தரசி மண்டோதரியையும் போற்றப்படுகிறாள். யாரால்? தித்திக்கும் தமிழில் பக்திச் சுவை சொட்டச் சொட்ட  திருவாசகம் பாடிய  மாணிக்கவாசகர் அவர்களால். இவர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர்.

மாணிக்கவாசகர்  பாடிய குயில் பாட்டில் –

ஏர்தரும் ஏழுல கேத்த
எவ்வுரு வுந்தன் னுருவாம்
ஆர்கலி சூழ்தென் னிலங்கை
அழகமர் வண்டோ தரிக்குப்
பேரரு ளின்ப மளித்த
பெருந்துறை மேய பிரானைச்
சீரிய வாயாற் குயிலே    
தென்பாண்டி நாடனைக் கூவாய்
(எட்டாம் திருமுறை                        – (குயில் பத்து – இரண்டாம் பாடல்)

மண்டோதரிஅழகில் சிறந்தவள், மயனின் மகள், கற்புக்கரசி, இராவணனின் மனைவி என்ற அளவில்தான் பொதுவாகத் தெரியும். ஆனால், அவள் சிவ சிந்தனை கொண்டு எப்போதும் சிவ பூசை செய்து தவத்தை நாடுபவள் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இராமாயணம் ஆரிய இராமனுக்கும்  திராவிட இராவணனுக்கும் இடையில் நடந்த போர். இப்படிச் சொன்னவர் ஜெவர்லால் நேரு. நூல் Discovery of India. இராமனுக்குத் தமிழ்நாட்டில் கோயில் இல்லை. இது பற்றி இன்னொருதரம் வாதிக்கலாம். இப்போது இலங்கை ஜெயராஜ் எழுதிய விமர்சனத்துக்குள் நுழைவோம்.

(1) இங்ஙனமாய் அவர் பெற்ற வெற்றிகள், அவரின் சட்ட அறிவுக்காம் சான்றுகளாய்த் திகழ்கின்றன. அதில் சந்தேகமில்லை. ஆனால் இச்சாதனைகள் அவரை ஓர் சட்டவல்லுனராய் நிரூபித்திருக்கின்றனவே யன்றி, அவரை ஒரு மக்கள் தலைவனாய் நிரூபித்ததாய்ச் சொல்லமுடியாது. தன் அறிவுச் சக்தியை வைத்தே மேல் விடயங்களை அவர் சாதித்திருக்கிறார். மக்கள் சக்தியை வைத்து அவர் சாதித்த விடயங்கள் மிகமிகக் குறைவுதான். மேல் விடயங்களால் ஓர் வக்கீலாய் வெற்றி பெற்றிருக்கும் சுமந்திரன், அவற்றைக் கடந்து ஒரு மக்கள் தலைவனாய்ச் சாதிக்கவேண்டிய  விடயங்கள், வரிசையில்  காத்திருக்கின்றன.

பதில்: மக்கள் தலைவனுக்கு என்ன இலக்கணம்? என்ன வரையறை? மாபெரும் சபையில் அவன் நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்….. ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் அவன் என்று போற்றிப் புகழவேண்டும் என்பது சரியானால் சுமந்திரனுக்கு மாலைகள் விழுகின்றன. அவரது பரம எதிரிகள் தவிர மற்றவர்கள்  சுமந்திரன் அவர்களது ஓயாத உழைப்பு, பசி நோக்காது, கண்துஞ்சாது கருமத்திலே கண்ணாக இருப்பவர்கள் போற்றுகிறார்கள்,

 மக்களாட்சி முறைமையில் மக்களது பேரளவு ஆதரவைப் பெற்றுத் தெரிவு செய்யப்படுபவர் மக்கள் தலைவன் இல்லையா? சென்ற தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 58,043 விருப்பு வாக்குகளைப் பெற்று அந்தத் தேர்தல் தொகுதியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தாரே? இது அவர் மக்கள் தலைவன் என்பதைக் காட்டவில்லையா? 

(2) உலகம் அறிய  அண்மைக்காலத்தில், இரணிலின் ஆதரவாளராகத் தன்னை வெளிப்படையாகப் பதிவு செய்கிறார் சுமந்திரன். அந்த ஆதரவுத்தன்மையால் நம் இன நன்மை நோக்கி, அவர் பெற்ற பலன்கள் எவை? எனும் கேள்விக்கு பெரும்பாலும் பூச்சியமே விடையாகிறது. அரசியல் கைதிகள் விடுவிப்பு, நில விடுவிப்பு, கல்முனை நிர்வாகம் எனப் பலவிடயங்களிலும், ரணில் ஆதரவுக் கொள்கையை வைத்து, வெளிப்பட்ட வெற்றிகள் எதனையும் சுமந்திரனால் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

பதில்: ஜெயராஜ் கம்பராமாயணச் சொற்பொழிவாளர். ஆனால் அவர் அரசியல் விற்பன்னர் அல்லர். அதில் அவரது அறிவு, அனுபவம் இரண்டும் பூஜ்ஜியம்! முஸ்லிம் ஊரான  கிண்ணியாவையும் தமிழர்களின் பாரம்பரிய தமிழ் ஊரான கன்னியாவையும்  ஜெயராஜ் போட்டுக் குழப்புகிறார். கிண்ணியா வேறு. கன்னியா வேறு. இரண்டும் வெவ்வேறு.

“வெளிப்பட்ட வெற்றிகள் எதனையும் சுமந்திரனால் பெற்றுக் கொள்ள முடியவில்லை” என்பது சரியா? சுமந்திரனால் முழுவதையும் பெற்றுத்தரவில்லை என்று சொன்னால் அதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் எதனையும் பெற்றுக் கொள் முடியவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அரசியல் கைதிகள்

2015 தொடக்கத்தில் அரசியல் கைதிகளின்  எண்ணிக்கை 217 ஆகும். இப்போது அதன் தொகை 70 ஆகக் குறைந்துள்ளது. இது முன்னேற்றமா இல்லையா? ஒருமுறை சுமந்திரன் 40 விசாரணைக் கைதிகளின் விடுதலைபற்றிச் சட்டமா அதிபரோடு பேசிக் குறிப்பிட்ட கைதிகள் நீதிமன்றத்தில் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வதென்றும் நீதிமன்றம் அவர்களுக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்குவதென்றும் அதன் பின் சிறிது காலம் புனர்வாழ்வு முகாமில் இருந்து விட்டு அவர்கள் வீட்டுக்குப் போகலாம் என்பதுதான் சுமந்திரன் சட்டமா அதிபரோடு எட்டிய உடன்பாடு. ஆனால் நீதிமன்றத்தில் இந்தக் கைதிகள் சார்பாகத் தோன்றியிருந்த சட்டத்தரணி இரத்தினவேல் கைதிகளிடம் இருந்து சுமந்திரன் வற்புறுத்தி (under duress)  கடிதங்களை  வாங்கியிருக்கிறார் எனவே அவற்றை  நீதிமன்றம் ஏற்கக் கூடாது என வாதிட்டார். அந்த வாதத்தை நீதிபதி ஏற்றுக் கொண்டார். சட்டத்தரணி இரத்தினவேல் அதனை எதிர்க்காது இருந்திருந்தால் அந்தக் கைதிகள் எப்போதோ விடுதலையாகி வீட்டுக்குச் சென்றிருப்பார்கள்.

நில விடுவிப்பு

ஜெயராஜ் அவர்கள் நிலம் விடுவிக்கப்படவில்லை எனப் பொத்தாம் பொதுவாகக் குற்றம் சாட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜெயராஜ் மற்றவர்கள் சொல்வதைக் கிளிப்பிள்ளை போல் ஒப்படைக்கிறார். அவராக அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. அவரது கருத்தை எண்பிக்க அவரிடம் எந்தப் புள்ளிவிபரமும் இல்லை. முயற்சி செய்திருந்தால் உண்மை தெரிந்திருக்கும்.

அரசாங்க புள்ளிவிபரங்களின் படி  போர் முடிந்தபோது (மே 2009) அரசிடம் இருந்த அரச மற்றும் தனியார் காணிகள், பின்னர் விடுவிக்கப்பட்ட – பெரும்பாலும் சனவரி 2015 தொடக்கம் 2019 மார்ச் வரை விடுவிக்கப்பட்ட காணிகள்-  இறுதியாக இன்று இராணுவத்தின் பிடிக்குள் இருக்கும் அரச மற்றும் தனியார் காணிகள் பற்றிய விபரம் பின்வருமாறு-

அட்டவணை 1

 மே 01, 2009  –  மார்ச் 20,  2019  வரை விடுவிக்கப்பட்ட  அரச மற்றும் தனியார் காணிகள்

அரச காணி ஏக்கர் தனியார் காணி ஏக்கர் மொத்த ஏக்கர்
முப்படைகளின் வசம் மே 2009 இல் இருந்த காணி 88,722 29,531 118,253
மே 2009 தொடக்கம் மார்ச் 2019 வரை முப்படைகளினால் விடுவிக்கப்பட்ட காணி 63,258 26,005 89,263
விடுவிக்கப்பட்ட காணிகளின் விழுக்காடு 71.30% 88.06% 75.48%
விடுவிக்கப்படாத காணிகள் 25,464 3,526 28,990
விடுவிக்கப்பட்ட காணிகளின் விழுக்காடு* 28.70% 11.94% 24.52%

   *மூலம் – நல்லிணக்க வழிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம்

வெளியுறவு அமைச்சர் திலக்  மாரப்பன ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில்  மார்ச் 20, 2019 அன்று பேசும் போது அரசாங்கம்  விடுவித்த அரச மற்றும் தனியார் காணிகளின் பரப்பளவைக்  கூட்டிச் சொன்னார்.

அட்டவணை 2

மே 01, 2009  –  மார்ச் 20,  2019  வரை விடுவிக்கப்பட்ட  அரச மற்றும் தனியார் காணிகள்

அரச காணி ஏக்கர் தனியார் காணி ஏக்கர் மொத்தம்
முப்படைகளின் வசம் மே 2009 இல் இருந்த காணி 71,173 28,215 99,388
மே 2009 -மார்ச் 14, 2019 வரை முப்படைகளினால் விடுவிக்கப்பட்ட காணி 63,258 26,005 89,263
விடுவிக்கப்பட்ட காணிகளின் விழுக்காடு 88.87% 92.18% 89.81%
விடுவிக்கப்படாத காணிகள் 7,920 2,205 10,125
விடுவிக்கப்படாத காணிகளின் விழுக்காடு 11.13% 7.82% 10.19%

சொன்னாலும் இதுவரை அண்ணளவாக 75 விழுக்காடு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன!  இந்த வாரம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 150.15 ஏக்கர் காணி இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளது. எனவே படியாதவர்கள் போல ஊகத்தின் அடிப்படையில்  ஜெயராஜ் எழுதக் கூடாது. புள்ளி விபரத்தோடு எழுத வேண்டும்.

கல்முனை வடக்கு பிரதேச சபை தரம் உயர்த்தல்

இது பல சகாப்தங்களாக  தமிழர்களுக்கும் முஸ்லிம்கள் இடையில் தொடர்ந்து வரும் சிக்கல். இந்தச் சிக்கல் கவனமாகக் கையாளப்பட வேண்டும். முஸ்லிம் தரப்பு நியாயமாக நடக்கவில்லை என்பதற்காக நாமும் அப்படி நடக்கக் கூடாது.

(3) அது மட்டுமல்லாமல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியாளர்களாய்க் குதித்த, இரணில், கோத்தபாய, சஜித் ஆகிய மூவரில்,கோத்தபாய, சஜித் ஆகியோரை நிராகரித்து வெளிப்படையாக ரணிலுக்குக் காட்ட நினைத்த ஆதரவு என்பது, இன நன்மை நோக்கிய தீர்க்க தரிசனமுள்ள ஒருமுடிவாய்க் கருதப்பட முடியாமலே இருக்கிறது.

பெரும்பான்மை இனத்தாரின் ஆதரவைப் பொறுத்தவரை ஜனாதிபதித் தேர்தலில் முன்னிற்பவர்கள் சஜித், கோத்தபாய அணியினரே என்பது வெளிப்படை. இந்நிலையில் இவர்களில் ஒருவரை ஆதரிக்காமல், இரணிலுக்கான ஆதரவை வெளிப்படுத்த நினைத்தமை வருங்காலத்தில் தமிழினத்தின் மீதான மற்றவர்களின் வெறுப்புக்கு வழிகோலும் எனபலரும் கருதுகின்றனர்.

வெளிப்பட இரணிலுக்கான ஆதரவை சுமந்திரன் தெரிவிக்காவிட்டாலும்,  வெளிவந்த அவரது அறிக்கைகள் பல இரணில் ஆதரவு வாசனையோடு இருந்தது, மறுக்கமுடியாத உண்மையேயாம். கடந்த பாராளுமன்ற காலப்பகுதியில் இரணில் ஆதரவால், தமிழர் சார்பான சாதனைகள் எதுவும் நிகழ்த்தப்படாத நிலையில்,சுமந்திரனின் இந்த ஆதரவு (இவ் ஆதரவு இலக்கணப் பிழை) எது நோக்கியது? என்பதான கேள்விக்கணைகள் பலரிடம் இருந்தும் ஏவப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

பதில்: இதிலும் ஜெயராஜ் தனது தனிப்பட்ட அறியாமையை பொதுவெளியில் அம்பலப்படுத்துகிறார். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நடந்த உட்கட்சிப் போராட்டத்தில் எந்தக் கட்டத்திலும் சுமந்திரன் இரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. சுமந்திரனுக்கு இரணிலிடம் எந்தக் காதலும் இல்லை. அது போல ததேகூ க்கும்  இரணில் மீது எந்தக் காதலும் இல்லை. இடைக்கால அறிக்கையைக் அரசாங்கம் கைவிட்ட போது இரணிலுக்கு ‘முதுகெலுப்பில்லை’ என்று சொன்னவர் சுமந்திரன்.

(4) ஏற்கனவே மஹிந்த அணி பாராளுமன்றக் கலைப்பில், இரணிலுக்கு ஆதரவளித்த சுமந்திரன்மேல் பெருங்கடுப்பில் இருப்பது உண்மை. அவர்கள் வெற்றி பெற்றால் சுமந்திரன்மீது ஏற்பட்ட அந்தக் கடுப்பினை, நிச்சயம் தமிழினம்தான் பெறவேண்டியிருக்கப் போகிறது. மஹிந்த அணியின் வெற்றியும் ஓரளவு எதிர்பார்க்கப்படும் ஒன்றாகவே இருக்கும் நிலையில், சுமந்திரனின் மேற் சாதனைகள் அவரது பெருமைக்கன்றி, தமிழினத்தின் நன்மைக்கு எவ்விதத்திலும் உதவப் போவதில்லை என்பது உறுதி.

பதில்: 2010 ஆம் ஆண்டில் ஜெயராஜ் எந்த உலகில் இருந்தார்? அப்போதும் ததேகூ கேட்டுக் கொண்டதற்கு இணங்க மகிந்தாவுக்கு எதிராகவும் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாகவும்  தமிழ்மக்கள் வாக்களித்தார்கள். வெற்றி பெற்ற மகிந்தா என்ன  செய்துவிட்டார்? சனநாயக முறைமையில் சுதந்திரமாக வாக்களிக்கத் தமிழ்மக்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் உரிமை உண்டு. மகிந்தா கோபித்துக் கொள்வார் என்பதற்காக ததேகூ தனது முடிவை மாற்றாது.

நாடாளுமன்றக் கலைப்பில் சனநாயகம் படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்துத்தான் சுமந்திரன் நீதிமன்றம் சென்றார். இரணில் விக்கிரமசிங்கவைப் பாதுகாக்க அல்ல. ஆனால் அந்தப் பொதுநலத்திலும் சுயநலம் இருந்திருக்கலாம். இரணிலா அல்லது மகிந்தாவா என்று வந்தால் ததேகூ இன் தெரிவு இந்தக் கணம்வரைஇரணில் – சஜித் பக்கம்தான் இருக்கிறது. ஆனால் இருதரப்போடும் பேசுவேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

(5) நடந்து முடிந்த இறுதிப்போரில் மஹிந்த அணியினரால் விளைந்த பாதிப்புகள், கடந்தகால அரசியல் வரலாற்றில் தன் தூய்மையை நிறுவத்தவறிய, இரணிலின் அரசியல் போக்கு என்பவற்றால், வெறுப்புற்றிருக்கும் தமிழ் மக்களுக்கு, கடந்தகால அரசியல் வரலாற்றுப் பாதிப்பு ஏதும் இல்லாமல், புதியவராய் பெரும் மக்கள் ஆதரவோடு, ஜனாதிபதித் தேர்தல் களத்தில் குதித்திருக்கும் சஜித் பிரேமதாசாவையே, ஜனாதிபதிக்கான உகந்த தேர்வாய்ப் பல தமிழர்களும் கருதுகிறார்கள். இந்த மக்கள் உணர்வினை உள்வாங்காமல்,ரணிலை ஆதரித்து  அவர் பக்கம் நிற்க நினைந்த சுமந்திரனின் கருத்தில்,அரசியல் தீர்க்கதரிசனம் இல்லை என்பது நிதர்சனமாம்.ஆதரவு கேட்டு யாழ் மக்களைத் தேடி வந்த சஜித்தை, கூட்டமைப்பு கையாண்டவிதம் ரசிக்கத்தக்கதாய் இல்லை எனவும் பலரும் கருதினர்.

பதில்: ஜெயராஜ் அவலை நினைத்து உரலை இடிக்கிறார். மேலே கூறியவாறு சனாதிபதி வேட்பாளர் இரணிலா? சஜித்தா என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் உட்கட்சிச் சிக்கல். இன்று சஜித்தான் சனாதிபதி வேட்பாளர் என முடிவு செய்யப்பட்ட பின்னர் (அவரை இரணிலே முன்மொழிந்தார்) எல்லோரும் ஒரே மேடையில் பேசுகிறார்கள். மேலும் “இந்த மக்கள் உணர்வினை உள்வாங்காமல், இரணிலை ஆதரித்து  அவர் பக்கம் நிற்க நினைந்த சுமந்திரனின் கருத்தில்,அரசியல் தீர்க்கதரிசனம் இல்லை என்பது நிதர்சனமாம்” இது ஜெயராஜ்ஜின் கற்பனை. இந்தக்  கணம் மட்டும் மக்கள் விருப்பத்தை வெளிப்படுத்தும் ஒரே கட்சி ததேகூ த்தான்! ததேகூ தலைவர்கள், தொண்டர்களை விட கொழும்பில் வாழும் ஜெயராஜ் அவர்களால் மக்களின் நாடித்துடிப்பைப் பிடித்துப்  பார்க்க முடியுமா?

(6) இவ்விடயத்தில் முஸ்லிம் தலைவர்கள் காட்டிய நிதானத்தையும் நிதர்சனச் செயற்பாட்டையும், பலரும் வியந்து நிற்கின்றனர்.அவ்விடயத்தில் சுமந்திரனின் தூரப்பார்வையற்ற பக்கச்சார்புள்ள செயற்பாடு தவறென்பதே,பலரதும் முடிவாய் இருக்கிறது.

பதில்:  முஸ்லிம்களுக்கு அதிக சிக்கல்கள் இல்லை. மதம் ஒன்றே சிக்கல். சிங்களக்  குடியேற்றம், காணிவிடுவிப்பு, தமிழ்மொழிப் பயன்பாடு, அரசியல் கைதிகள் விடுதலை, வலிந்து காணாமல் போனோர் போன்ற சிக்கல்கள் இல்லை. அதனால் விரைந்து முடிவு எடுக்கிறார்கள். நாங்கள் அப்படியில்லை.  ஆழமாக, நிதானமாக, பக்குவமாக யோசித்து மக்களது கருத்தை அறிந்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது.

(7) வருகின்ற ஜனாதிபதித் தேர்தல் என்பது, தமிழினத்தின் பலத்தைக் காட்ட மீண்டும் கிடைத்திருக்கும் ஓர் சந்தர்ப்பமாம். இனத்தின் ஏகப்பிரதிநிதிகள் என தம்மை அறிவித்துக் கொண்ட கூட்டமைப்பினர்,இந்தச் சந்தர்ப்பத்தை சரிவரப் பயன்படுத்தும் கடமை பெற்றுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையிலாவது, தனிப்பகைகள், கட்சிப்பகைகள், போர்க்கால அரசியல் என்பவற்றைக் கடந்து, தமிழ்த் தலைமைகளை ஒன்றுபடுத்தி, ஒட்டுமொத்தத் தமிழர்களினதும் வாக்குகளை ஒன்று திரட்டி, அப்பலத்தை வைத்து தமிழின உரிமை பற்றிய பேரம் நிகழ்த்தி,இனத்திற்கான நன்மை பெறவேண்டியது மிக மிக அவசியமாம். கூட்டமைப்பின் எழுதப்படாத தலைவராய் இயங்கும் சுமந்திரன், அவ்வுண்மையை உணர்ந்து இதுவரை செயற்படத் தொடங்காதது, பலருக்கும் வருத்தம் தந்துள்ளது.

பதில்: நாய்க்கு கல்லெறிந்தால் அது எங்கு பட்டாலுல்  நாய் காலைத்தான் தூக்கும். ஜெயராஜ் அவர்களுக்கு என்ன நடந்தாலும் அல்லது நடக்காவிட்டாலும் சுமந்திரனைத்தான் விமர்ச்சிக்கிறார். இதில் இருந்து ஒன்று தெரிகிறது. சுமந்திரன் உண்மையிலேயே ஒரு விவேகமுள்ள, சட்டம் படித்த, அரசியல் சாணக்கியம் தெரிந்த, தூரநோக்குள்ள  கெட்டிக்கார அரசியல்வாதி!

(8) மேற் சொன்னவை எல்லாம் சம்பந்தன், சுமந்திரன் பற்றிய எதிர்க் கருத்துக்கள். ஆதரவுக்கருத்துக்களும் இல்லாமலில்லை. சம்பந்தனின் அரசியல் அனுபவம்,பாராளுமன்றில் அவரது ஆளுமைமிக்க உரைகள், பிரச்சினைகளின் போது அவர்காட்டும் நிதானம்,பேரினத்தலைவர்களாலும் மதிக்கப்படும் தன்மை,வெளிநாட்டுத் தலைவர்களின் மரியாதையைப் பெறும் தகுதி, இன்றைய நிலையில் அவருக்கு ஒப்பான ஒரு தலைவர் கட்சிக்குள் இல்லாமை என்பவை சம்பந்தனைப் பொறுத்தவரை,  இன்றைய நிலையில் நிராகரிக்க முடியாத தகுதிகளாய்க் கருதப்படுகின்றன.

அதுபோலவே சுமந்திரனின் ஆதரவாளர்களால் இன்றைய நிலையில் வெறுமனே உணர்ச்சி அரசியல் பேசி மக்களை கிளரச் செய்யாமல் யதார்த்தம் உணர்ந்து அரசியல் செய்யும் ஆற்றல், உலகநாடுகளின் அங்கீகரிப்பைத் தன்வயப்படுத்தி இயங்கும் தன்மை, தேசிய அரசியலிலும் காட்டும் அறிவு வலிமை,தனது சட்ட ஆற்றலால் நம் இனத்தார்க்கு மட்டுமன்றி பேரினத்தார்க்கும் பயன் விளைக்கும் பெருமை, தமிழ்த்தலைவர்களுள் சம்பந்தனுக்கு அடுத்தபடியாய் பாராளுமன்றில் மதிப்புப் பெற்றிருக்கும் நிலை,கூட்டமைப்புக்கான உலக நாடுகளினதும் பேரினத்தாரினதும் இன்றைய அங்கீகரிப்பிற்கு, வழிகாட்டும் ஆற்றல் என்பவை சுமந்திரனின் தனித்தகுதிகளாய் எடுத்துக் காட்டப்படுகின்றன.அவர்தம் கருத்தில் உண்மை இல்லாமலில்லை.

மேற்சொன்னவை கூட்டமைப்புப் பற்றிய ஓர் பருந்துப்பார்வை. தமக்கு எதிரியாய் வளர்ச்சிபெற்ற முன்னாள் முதலமைச்சரின் ஆதரவாளர்களால்,அண்மையில் நடத்தப்பட்ட ‘எழுகதமிழ் ஊர்வலம்’ பெரிய அளவில் வெற்றி பெறாததில் கூட்டமைப்பினர் இன்று,சற்று மகிழ்ந்திருக்கின்றனர். ஆனால் அது அவர்களுக்கான மகிழ்ச்சிச் செய்தி இல்லை என்பதே நிஜம். கஜேந்திரகுமார், சுரேஷ் ஆகியோர்க்கு இடையிலான முரண்பாட்டில்,அவர்தமக்குள் ஏற்பட்டிருக்கும் உட்பகையின் விளைவே, ‘எழுகதமிழின் தோல்வியாமேயன்றி, அத்தோல்வி கூட்டமைப்பின் ஆதரவுப் பெருக்கத்தால் விளைந்ததொன்றில்லை என்பது,சர்வ நிச்சயமாம்.

பதில்: இது என்ன சப்புக்கட்டு? கஜேந்திரகுமார் பங்குபற்றவில்லை என்ற ஒரே காரணத்தால் ‘எழுக தமிழ்’ தரையில் படுத்ததா? ததேகூ பொறுத்தளவில் எப்போதும் போல எழுக தமிழ்  நிகழ்ச்சியை  அது எதிர்க்கவில்லை. ததேகூ எந்த இடையூறும் செய்யாது என்றுதான் சம்பந்தர் ஐயா சொன்னார். எழுக தமிழ் இம்முறை படுத்ததற்குக் காரணம் செயலின்மை. ஆட் பற்றாக் குறை. பெருத்த பொருட் செலவில் (உரூபா 80 இலட்சம்) நிகழ்ச்சியை நடாத்திவிட்டு விக்னேஸ்வரன் நித்திரைக்குப் போய்விடுவார். அப்படிப் பட்டவரால் ஒரு கட்சியை நடத்த முடியாது. ஊர் ஊராய் திரிந்து மக்களைச் சந்திக்க  முடியாது. ஆதரவாளர்களைத்  திரட்ட முடியாது. அவர் விரும்பினாலும் அவரது அகவை அதற்கு இடம் கொடுக்காது. பலரது பகையைத் தாமாகவே வலிந்து சென்று  தேடி வைத்திருக்கிறார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்நோக்குகிறார். விசாரணை நொவெம்பர் 19, 20, 21 நாட்களில் கொழும்பில்  நடக்க இருக்கிறது.  இவற்றால் ‘எழுக தமிழ்’ இம்முறை தோல்வியில் முடிந்து விட்டது.

(9) இந்நிலையில்,தமது கட்சியின் வளர்ச்சி நோக்கி அவர்கள் இன்னும் வேகமாய் இயங்க வேண்டும் என்பது நிதர்சனம். கூட்டமைப்பைப் பொறுத்தவரை, அவர்கள் அவசரமாய் விடைகாண வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன. அவற்றைக் கீழே வரிசைப் படுத்துகிறேன்.

தமிழரசுக்கட்சியினர் வருங்காலத்தில் தனித்து இயங்கப் போகின்றனரா? அன்றேல் பல கட்சிகளின் இணைப்பாகத் தொடர்ந்து இயங்கப் போகின்றார்களா? என்பதற்கான விடை தேடல்.கட்சியின் தலைமையை வலிமையுள்ள ஒரு தலைமையாய் மாற்றுதல்.தனி ஒரு மனிதனின் ஆற்றலை மட்டும் நம்பி, ஒரு கட்சி இயங்குவதின் குறைபாடு பற்றி ஆராய்ந்து அதை நிவர்த்தி செய்தல். கட்சியில் இணையும் அடிமட்டத் தொண்டன் ஒருவன் உயர்மட்டத் தலைவனாய் மாறுதற்கான சரியான படிமுறையுற்ற வழியை கட்சிக்குள் அறிமுகம் செய்தல்.கட்சிக்குள் தகுதி கருதிய தரவரிசையை (list of rank) நிர்ணயித்தல்.

கட்சிக்குள் வெளிப்படையாக ஜனநாயகத்தன்மையைப் பேணுதல்.பாராளுமன்றம், மாகாணசபை, உள்ளூராட்சி உறுப்பினர் தேர்வுகளில் தியாகம், திறமை, தொண்டு மனப்பான்மை, இனப்பற்று ஆகியவற்றின் அடிப்படையில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தல்.

ஒரு பதவிக்காலத்தில் சாதனைகள் ஏதும் செய்யாதவர்களின் இடத்துக்கு புதியவர்களைக் கொணர்தல்.பாராளுமன்றம், மாகாணசபை, உள்ளூராட்சிசபை ஆகியவற்றில் அடுத்தடுத்த இரண்டு பதவிக்காலத்திற்கு மேல் ஒருவர் பதவிவகிக்காத வண்ணம் யாப்பினை சரிசெய்தல்.கட்சிக்கு மாறாய் செயற்படும் உறுப்பினர்களை விசாரித்து தண்டிக்கும் குழு ஒன்றினைத் தெரிதல்.கூட்டமைப்பாய் இயங்கப்போகும் பட்சத்தில் மாற்றணியினருடன் பேசி கொள்கை விடயத்தில் தெளிவான முடிவெடுத்தல், உண்மையாய்  அதைப் பின்பற்றுதல்.கூட்டமைப்பாய் இயங்கப்போகும் பட்சத்தில் பதவிப்பங்கீடு பற்றிய உறுதியான ஓர் முடிவெடுத்து அதனைக் கடைப்பிடித்தல்.ஒட்டுமொத்த தமிழினத் தலைவர்களாய் அன்றி மதம் சார்ந்த, பிராந்தியம் சார்ந்த தலைவர்களாய் இயங்குவதைத் தடைசெய்தல்.தமிழ்ச்சமூகத்தின் அறிவுமிக்க நேர்மையான, சமூக உணர்வுள்ள ஓர் குழுவை நியமித்து, தமது செயற்பாடுகளை அக்குழுவோடு ஆராய்தல், மத்திய அரசுடனான உறவுநிலை பற்றி அக்குழுவின் கருத்தைப் பெற்று இயங்குதல்.

கல்வி, பண்பாடு, பொருளாதாரம் போன்ற முக்கிய விடயங்களுக்கான ஆலோசகர்களை உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் தேர்ந்து நியமித்தல்.

சமயப்பிரச்சினைகள் எழும்போது அவற்றைத் தீர்க்க தகுதி மிக்க பல் சமயம் சார்ந்த நடுநிலையான குழு ஒன்றை நியமித்தல்.

புலம்பெயர் தமிழர்களின் ஆதரவைப் பெற்று, பொருளாதாரம், கல்வி, சமயம், பண்பாடு, சமூக வளர்ச்சி ஆகிய விடயங்களில் தீர்க்க தரிசனமிக்க திட்டங்களை நிறைவேற்ற முயற்சி செய்தல்.

போரால் பாதிப்புற்றவர்களுக்கான திட்டமிடுதலில் இறந்தகால, நிகழ்கால ஆதரவளிப்பதோடு நின்றுவிடாமல் வருங்கால வாழ்வுக்கான திட்டமிடுதலையும் நிர்ணயித்தல்.

கட்சி, இனம் ஆகியவற்றின் முன்னேற்றம் நோக்கிய பணிகளுக்கான நிதி அமைப்பொன்றை பெரிய அளவில் உருவாக்குதல்.

இங்ஙனமாய் கூட்டமைப்பினர் தம்மை வலிமைப்படுத்த, பலகாரியங்களைச் சாதிக்கவேண்டியிருக்கிறது.

பதில்: இது இலவச ஆலோசனைகள். கம்பராமாயணத்தில் ஜெயராஜ் அவர்களுக்கு புலமை இருக்கலாம். திருக்குறளிலும் ஓரளவு புலமை இருக்கலாம். எனவே திருக்குறள் ஒன்றை மட்டும் அவருக்கு சொல்லி வைக்க விரும்புகிறேன்.

சொல்வது யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செய்தல் 
(குறள் 664)

(10) போர் முடிந்ததன் பின்னான கடந்த பத்து ஆண்டு காலத்தில், தமது கட்சி வளர்ச்சி நோக்கியோ, இனவளர்ச்சி நோக்கியோ, இவர்கள் திட்டமிட்டு செயற்படவில்லை என்பது வெட்கப்படவேண்டிய விடயமாம். இக்காலகட்டத்தை வெறுமனே பதவிப்போட்டிகளுக்கும் கட்சிப் போட்டிகளுக்கும்,தேவையற்ற சண்டைகளுக்குமாய் மட்டுமே கூட்டமைப்பு பயன்படுத்தியிருக்கிறது. இப்போக்கு உடனடியாக மாறவேண்டும். இன்றைய நிலையிலும் தமிழ்மக்களின் ஆதரவுப் போட்டியில்,தமிழர் விடுதலைக் கூட்டமைப்பே முதல் நிலை பெற்றிருப்பதாய் ஊகிக்கப்படுவது உண்மையே. அதன் உண்மைத்தன்மையை அடுத்துவரும் தேர்தலே நிச்சயப்படுத்தவேண்டும். அதற்கு முன்பாக கூட்டமைப்புத் தலைவர்கள், தமக்குள்ளும் தமது கட்சிக்குள்ளும் சீர்திருத்தங்களைக் கொணரத் தவறுவார்களேயானால்,முயல்களை ஆமைகள் வெல்லும் வாய்ப்பும் இருக்கவே செய்கிறது.

பதில்: இது ஜெயராஜ் அவர்களது பெட்டைப் புலம்பல். இப்படி உபதேசம் செய்கிற இவர் எதனை எழுதி எதனைக் கிழித்துவிட்டார் என நாம் திருப்பிக் கேட்கலாம். ஆனால் கேட்க மாட்டோம். ஒன்று மட்டும் உண்மை. எந்தக் கட்சியும் நூறுக்கு நூறு நினைப்பதை அல்லது சொல்வதைச்  செய்து முடிக்க முடியாது. போர் காரணமாக கடந்த ஐந்து சகாப்தமாக 10 இலட்சம் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள். போரினால் உயிரழிவுகள் ஏற்பட்டன. இன்று இலங்கையில் ஆகக் குறைந்த குடித்தொகை கொண்ட மாகாணம் வடக்கு மாகாணம் ஆகும். ஆகக் குறைந்த குடித்தொகை கொண்ட மாவட்டம் முல்லைத்தீவு ஆகும். மொத்தம் 2,270,937 குடித்தொகையில் வட – கிழக்கில் வாழும் 1,597,276 தமிழ் மக்களை வைத்துத்தான் அரசியல் செய்ய வேண்டியுள்ளது. 1981 ஆம் ஆண்டு  வடக்கு மாகாணத்தில் மொத்தத் தொகையில்  54.12 விழுக்காடு தமிழ்மக்கள் வாழ்ந்தார்கள். 2012 இல் இந்த விழுக்காடு 43.49 ஆகக் குறைந்துவிட்டது.

2012 ஆம் ஆண்டு நடந்த குடித்தொகைக் கணக்கின்படி இலங்கைத் தமிழர்களின் வடக்கு – கிழக்கு – ஏனைய 7 மகாணங்களில் வாழும் மக்களின்  குடித் தொகை பின்வருமாறு-

இலங்கைத் தமிழர்களின் குடித்தொகை

அட்டவணை 3

2012 1981
மாகாணம்  தொகை  விழுக்காடு தொகை விழுக்காடு
வடக்கு 987,692 43.49 1,021,006 54.12
கிழக்கு 609,584 26.84 410,156 21.74
மொத்தம் 1,597,276 70.33 1,431,162 75.86
ஏனைய 7 மாகாணங்கள் 673,648 29.67 455,510 24.14
மொத்தம் 2,270,927 100 1,886,672 100

சிறிசேனா நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவார் என்று யாராவது எதிர்பார்த்தார்களா? மனிதர் 2015 இல் எடுத்த நிலைப்பாட்டில் இருந்து 180 பாகை திரும்பி விட்டார். படையினர் எவரும் போர்க்குற்றம் இழைக்கவில்லை, அவர்கள் யாரையும் கொல்லவில்லை, தான்தான் போரின் இறுதிக் காலத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்ததாகவும் அதனால் தனக்கு எல்லாம் தெரியும் என சனாதிபதி சிறிசேனா கூறிகிறார். எனவே ஒரு இராணுவ சிப்பாயைத் தன்னும் நீதிமன்றத்தில் நிறுத்தவோ மின்சார நாற்காலியில் அமர்த்தவோ  அனுமதிக்க மாட்டேன் என்று அவர் சூளுரைக்கிறார். இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. எனவே நாம் எதிர்பார்ப்பதற்கும்  நடைமுறை அரசியலுக்கும் (Realpolitick)  வேறுபாடு உள்ளது.

விமர்சனங்களை ததேகூ வரவேற்கிறது. ஆனால் அந்த விமர்சனங்கள் அறம் சார்ந்ததாக இருக்க வேண்டும். உண்மைக்கான தேடலாக இருக்க வேண்டும். ததேகூ ஒன்றுமே செய்யவில்லை என்று ஈனக்குரலில் ஒப்பாரி வைப்பது அறமாகாது.

நீதித்தராசில் கூட்டமைப்பு – கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் நக்கீரன் மறுப்புரை

About editor 3046 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply