பவுத்த தேரர்களுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு வேறொரு நீதி என அரச யந்திரம் செயல்படுகிறது!
நக்கீரன்
பாம்புக்கு பல்லில்தான் நஞ்சு, கலகொட அத்தே ஞானசார தேரருக்கு உடம்பெல்லாம் நஞ்சு. கடந்த மே மாதம் சனாதிபதி சிறிசேனா ஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு அளித்து அவரை விடுதலை செய்யப்பட்ட போது “சனாதிபதி கடி நாய் ஒன்றை அவிட்டு விட்டுள்ளார்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நா.உறுப்பினருமான எம் ஏ சுமந்திரன் கருத்துத் தெரிவித்தார். சுமந்திரனின் எதிர் கூறல் இப்போது உண்மையாகிவிட்டது.
ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து ததேகூ அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. அதில் அரசியலமைப்பில் சனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தியே, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அந்த அறி்கையில் சுட்டிக்காட்டப் பட்டிருந்தது.
நீதிமன்ற அவமதிப்புத் தொடர்பில் ஹோமகம நீதிபதியினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, ஞானசார தேரருக்குத் தனது தரப்பு நியாயத்தை வெளிப்படுத்துவதற்கான அனைத்து சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்ட பின்னரே உயர் நீதிமன்றம் தண்டனை வழங்கியது. ஞானசார தேரரினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் நிராகரிக்கப்பட்டது.
இலங்கையில் பவுத்தர்கள் அல்லாத ஏனைய மதத்தவர்கள் மீது வன்முறைகளைத் தூண்டிவிடும் ஞானசார தேரரின் நடவடிக்கைகள் மீது ஒருபோதும் சட்ட நடவடிக்கைகள் எடுத்திராத சந்தர்ப்பத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாத்திரமே அவர் சட்டத்திற்கு உட்படுத்தப் பட்டிருந்தார்.
இனவெறி மற்றும் மதவெறி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி வைப்பதன் ஊடாக எல்லாக் குடிமக்களும் சமமாக நடப்படும் ஒரு நாடு என்ற கோட்பாட்டுக்கு சவால் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி, கடும்போக்காளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கை வலியுறுத்தியிருந்தது.
ததேகூ மட்டுமல்ல ஞானசார தேரரால் நீதிமன்ற வளாகத்தில் வைத்து மிரட்டப்பட்ட சந்தியா எக்னெலிகொட பொது மன்னிப்பின் கீழ் தேரரை விடுதலை செய்ய அனுமதிக்கக் கூடாது என சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் பட்சத்தில், தனது கணவர் காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் மற்றும் ஏனைய வழக்கு விசாரணைகளுக்கு, அவரினால் அச்சுறுத்தல் விடுக்க வாய்ப்புக் காணப்படுவதாகவும் சந்தியா எக்னெலிகொட கூறியிருந்தார்.
ஹோமகம நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர், நீதிமன்ற வளாகத்திற்குள் அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் ஞானசார தேரர் செயற்பட்டிருந்தார். இதையடுத்து, ஹோமாகம நீதிமன்றத்தின் அப்போதைய நீதிபதி இரங்க திஸாநாயக்கவினால் இந்தச் சம்பவம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டன.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு, உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்,கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நீதிமன்றம் 6 ஆண்டுகால ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
ஆனால் சனாதிபதி சிறிசேனா கல்லுளிமங்கன் போல எதற்கும் செவிசாய்க்காது, யார் சொல்லையும் கேட்காது ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு அளித்துவிட்டார். அப்படிப் பொதுமன்னிப்பு அளித்திராவிட்டால் செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோயில் வளாகத்தில் ஞானசார தேரருக்கும் தமிழர் தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருக்காது. சட்டவிரோத விகாரையின் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் சடலத்தை செம்மலை – நீராவியடிப் பிள்ளையார் ஆலயவளாகத்தில் அமைந்துள்ள தீர்த்தக்கரையில் எரித்திருக்க மாட்டார்கள்!
இதில் வேடிக்கை என்னவென்றால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இலங்கை இந்து சம்மேளனம் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தது. அதற்கு அந்த அமைப்புச் சொன்ன காரணம் மதமாற்றத்திற்கு எதிரான ஞானசார தேரரின் எழுச்சிமிக்க உரைகள் இலங்கைப் பவுத்தர்களை மாத்திரமன்றி, இலங்கை இந்துக்களையும் மதமாற்றத்தில் இருந்து பாதுகாத்தது என்பதாகும்.
விடுதலை செய்யப்படுகின்ற தேரர் கட்சி அரசியலுக்கு அப்பால் தேசத்திற்காக பல உயரிய கடமைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனவே சுதந்திர தினத்திற்கு முன்னர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்.
இதே இந்து சம்மேளனம்தான் கல்முனை வடக்கு பிரதேச சபை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று கோரி கடந்த யூன் 22> 2019 முதல் ஓர் உண்ணா விரதப் போராட்டத்தை நடத்தியது. உண்ணா விரதப் போராட்டம் நடந்த 4 ஆவது நாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய இரத்ன தேரர் கல்முனைக்கு நேரில் வருகை தந்து போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினார்.
ஆடு நனைகிறது என்று ஓநாய் கண்ணீர்விட்டு அழுத கதையாக அல்லது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என நினைத்த கொக்குப் போல அவரது அன்றைய பேச்சு அமைந்திருந்தது. அதன் முக்கியத்துவம் கருதி அதுனை கீழே தரப்படுகிறது.
“கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு 2014 ஆம் ஆண்டு எல்லா அதிகாரமும் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் அதனை முஸ்லிம் அரசியல்வாதிகள் தடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதாவது உங்களுக்கு இந்தப் பிரதேச செயலகம் தொடர்பாக கல்முனை தெற்குப் பிரதேச செயலகத்தின் கீழ் நீங்கள் ஆள வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. அதைத் தவிர்க்கும் முகமாக நீங்கள் அது தொடர்பில் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்.
கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை உருவாக்க வேண்டும் என்று, அதில் உங்களுக்குத் தேவையான முக்கியமான அதிகாரங்களான காணி அதிகாரங்கள், நிதி அதிகாரங்கள் என்பன உங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. எனவே அது தொடர்பாகத் தான் இன்று நீங்கள் உண்ணாவிரதம் இருக்கின்றீர்கள்.
இன்று இந்தப் பிரதேச செயலகம் தொடர்பாக பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழ்ந்துக் கொணடிருக்கின்ற பிரதேசத்திலே அவர்களுக்கு அதிகாரத்தை வழங்காமல் அவர்களுக்குத் தேவையான காணி, நிதி அதிகாரங்கள் என்பவற்றை வழங்காமல் அதனைத் தடுத்து வைத்துக் கொண்டு முஸ்லிம்கள் செயற்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
உங்களுக்கு ஒரு பிரதேச செயலகம் ஒன்று இருக்கின்றது. அதைத் தரம் உயர்த்த வேண்டும் என்பதற்காக தான் எங்களது ஒரு தேரர் உட்பட பல பேர் இங்கு உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இங்கு பெரும் அநீதியிழைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
நாங்கள் அனைவரும் இது தொடர்பாக ஆராய இருக்கின்றோம்.
அதாவது இந்தப் பிரதேச செயலகம் தொடர்பாக 2014ஆம் ஆண்டு இதனைக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி எல்லா அதிகாரமும் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அதனை தடுத்து வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இதற்கு தடையாய் இருப்பவர்கள் இந்த பிரதேசத்தில் இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்.
இந்த விடயம் தொடர்பாக அறிக்கை சமர்பிப்பதற்கு மாவட்ட அரசாங்க அதிபருக்கு அதிகாரம் இருக்கிறது எனப்படுகிறது.
மாவட்ட அரசாங்க அதிபருக்கு முடியும். இரண்டு நாட்களில் இந்த சம்பவங்கள் உண்மையா என்பது உறுதிப்படுத்தக்கூடியன. ஆனால் அவர் இந்த விடயம் சம்பந்தமாக அவருக்கு விளங்கியிருக்கும் மக்கள் கூறுவது உண்மையா? இது நடைபெறுவது உண்மையா என்று? அவருக்குத் தெரியும்.
அவர் தான் இந்த அறிக்கையை மிக இலகுவாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கக் கூடிய ஓர் உத்தியோகத்தராக இருக்கின்றார்.
இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் பங்கெடுத்தார்கள் என்பது தெரிந்ததே.
கல்முனை வடக்குத் தமிழ்ப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்குரிய தீர்வை 24 மணித்தியாலத்திற்குள் பெற்றுத் தருவேன்.
இந்த நாடு ஒரு அழகான நாடு இந்த நாட்டை இந்தியர்களுக்கோ அமெரிக்கர்களுக்கோ விற்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. திருகோணமலைத் துறைமுகத்தை வெளிநாட்டவர்களுக்கு விற்பதற்கு தயாராகி வருகின்றார்கள்.
இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே இன்று நடைபெறுகின்ற இந்தப் போராட்டம் ஒரு நியாயமான போராட்டம் என்பதை எங்களுக்கு விளங்குகின்றது.
மட்டக்களப்பு பல்கலைக் கழகம் என்ற ரீதியில் பின்னர் சாரியா பல்கலைக்கழகம் என மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இன்னும் 3 மாத காலத்திற்குள் எமது ஆட்சியைக் கொண்டு வந்து சாரியா பல்கலைக் கழக காணியை விடுவித்து, அதிலே பாதுகாப்புப் பல்கலைக் கழகத்தை உருவாக்கவுள்ளோம்.
எதிர்காலத்தில் மூவின மக்களும் ஒன்று சேர்ந்து வாழக்கூடிய தழிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என வேறுபடுத்தி காணிகளை வழங்காமல் ஒரே இடத்தில் ஒற்றுமையுடன் வாழக் காணிகளை வழங்க எதிர்பார்க்கின்றோம்.
இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் அனைத்தையும் முற்று முழுதாக இந்நாட்டிலிருந்து ஒழிப்போம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 வீதமான தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். எனவே அங்குள்ள 75 வீதமான தமிழ் மக்களுக்கும் 3 நாடாளுமன்றப் பிரதிநிதிகள், 25 வீதமான முஸ்லிம் மக்களுக்கு 2 அமைச்சர்களும் அதில் ஒருவர் முன்னாள் ஆளுனராகவும் உள்ளார்.
இலங்கையில் 75 சதவீத சிங்கள மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இலங்கையில் முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களும், சிங்கள மக்களும் ஒன்றிணைந்தால் 90 வீதமாகி விடுவோம். நாங்கள் 90 வீதமானவர்களும் ஒன்றிணைந்து எமக்குத் தேவையான அனைத்தையும் ஒன்றிணைந்து செய்வோம்.
தமிழர்களும், சிங்களவர்களும், இந்த நாட்டிலே ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற சமூகங்களாகும். பவுத்தர்களினதும் இந்துக்களினதும் கலாசாரம் ஒரே ரீதியான கலாசாரமாகும். எங்களது பவுத்த விகாரைகளில் பிள்ளையார், முருகன், சரஸ்வதி, போன்ற பல இந்துக் கடவுள்களை வைத்து வணங்கி வருகின்றோம். இந்நிலையில் தமிழர்களையும் சிங்களவர்களையும் பிரிப்பதற்கு அரசியல்வாதிகள் முற்படுகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்மைப்பையும் எம்மையும் பிரிப்பதற்கு நாங்கள எந்த வித்திலும் இடமளிக்கப் போவதில்லை என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன். அனைவருக்கும் அல்லாதான் பெரியவன் என்கிறார்கள், ஆனால் முருகனும் புத்தரும்தான் அனைவருக்கும் பெரியவன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
முருகனும், புத்தரும் ஒரே இடத்தில் இருக்க முடியுமாக இருந்தால் ஏன் மனிதர்களாகிய நாமும் ஒரே இடத்தில் இருக்க முடியாது.
முஸ்லிங்கள் எங்களுக்கு எதிரிகள் அல்ல நாங்கள் முஸ்லிம்களின் தீவிரவாதத்தைதான் எதிர்க்கின்றோம். எனவே தமிழர்களும். சிங்களவர்களுமாக நாங்கள் 90 வீதம் இருக்கின்றோம். எனவே தீவிரவாதம் இல்லாத முஸ்லிங்கள் அனைவரும் எம்முடன் வந்து இணைந்து கொள்ளுங்கள்.
அவ்வாறு இணைந்து கொண்டால் உங்களுடைய வியாபரமும் சிறப்பாக அமையும். நாங்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்களல்ல ஆனால் எதிர்காலத்தில் இந்த நாட்டிலே சிங்கள – தமிழ் கலவரம் ஒன்று இடம்பெறாது என்பதை உறுத்தியாக கூறுகின்றேன்.
இந்த நாடு ஒரு அழகான நாடு இந்த நாட்டை இந்தியர்களுக்கோ அமெரிக்கர்களுக்கோ விற்பதற்கு நாங்கள் தயாராக இல்லை.
திருகோணமலைத் துறைமுகத்தை வெளிநாட்டவர்களுக்கு விற்பதற்குத் தயாராகி வருகின்றார்கள். இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே இன்று நடைபெறுகின்ற இந்தப்போராட்டம் ஒரு நியாயமான போராட்டம் என்பது எங்களுக்கு விளங்குகின்றது. இதற்குரிய தீர்வை 24 மணித்தியாலத்திற்குள் தீர்வுப் பெற்றுத் தருவேன்” என அவர் தெரிவித்தார்.
ஆறு நாட்கள் நடந்த அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஞானசார தேரர் “நான் நினைத்தால் ஐந்து நாட்களில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த முடியும். ஆனால் அப்படிச் செய்தால் விளைவுகள் படுமோசமாக இருக்கும் என கல்முனையில் வைத்து எச்சரிக்கை விடுகிறேன். ஒரே நாட்டின் தாய் பிள்ளைகளை போல நாம் செயற்படவேண்டும். விரைவில் இந்தச் சிக்கலை முடித்து பிரதேச செயலகத்தை தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பேன். விரைவில் உங்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வரும்” என ஞானசார உறுதிமொழி வழங்கினார்.
இதனை அடுத்து ஞானசார தேரர் அங்கு உண்ணாவிரதம் இருந்த நால்வருக்கு பழச்சாறு கொடுத்து ஆறு நாட்களாக நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தார். (http://athavannews.com/6%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/)
இதில் சோகம் என்னவென்றால் தமிழர் தரப்புக்கு அத்துலே இரத்தின தேரர் மற்றும் கலகொட அத்தே ஞானசார தேரர்களது சூழ்ச்சி, தந்திரோபாயம் தெரிந்திருக்கவில்லை. இலங்கை இந்து சம்மேளனத்துக்குத் தெரிந்திருக்கவில்லை. முஸ்லிம்களைத் தனிமைப்படுத்த, அவர்களுக்கு எதிராகத் தாக்குதல் தொடுக்க இந்துத் தமிழர்களைப் பயன்படுத்துவதே அவர்களது கபட நோக்கமாக இருந்தது. அதில் இருவரும் தற்காலிக வெற்றியும் பெற்றார்கள்.(https://youtu.be/YNTB4GHufBs)
இது நடந்தது யூன் 22, 2019 இல். ஆனால் கெட்டிக்காரன் புளுகு எட்டுநாட்களில் தெரியும் என்ற பழமொழிக்கு ஒப்ப ஞானசார தேரரின் சுயரூபம் செப்தெம்பர் 23, 2019 அன்று வெளியானது.
நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறிப் புற்றுநோய் காரணமாக உயிரிழந்த மேதாலங்கார கீர்த்தி தேரரது சடலத்தை ஞானசார தேரரும் மற்றவர்களும் செம்மலை நீராவியடி பிள்ளையார் கோயில் வளாகத்தில் தகனம் செய்தார்கள். “ஒரே நாட்டின் தாய் பிள்ளைகளை போல நாம் செயற்படவேண்டும்” என்ற ஞானசார தேரரது உபதேசம் காற்றில் பறந்தது.
ஞானசார தேரரும் மற்றவர்களும் சட்டத்தையும் ஒழுங்கையும் கையிலெடுத்து அடாத்தாக நடந்து கொண்டதை போலிஸ் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றது. சட்டத்தின் முன் சகலரும் சமம் என்று சொல்லப்பட்டாலும் பவுத்த தேரர்களுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு வேறொரு நீதி என அரச யந்திரம் செயல்படுகிறது. (தொடரும்)
Leave a Reply
You must be logged in to post a comment.