பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகம்; பாதிக்கப்படும் மெதடிஸ்த பெண்கள் கல்லூரி
பெற்றோரின் அச்சம் களையப்படுமா?
சாரா இம்தியாஸ்
வட பகுதியில் உள்ள கடைசி நகரம் என்று பருத்தித்துறையை சொல்லலாம். அது ஒரு பெரிய நகரம் அல்ல. ஒரு மணிநேர சைக்கிள் பயணத்தில் முழு நகரத்தையும் சுற்றி விடலாம். எனவே எந்தவொரு மாற்றமும் அது சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அது நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் கட்டப்படும் பருத்தித்துறை மீன்பிடித்துறைமுகம் இந்த சிறிய நகரத்துக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 15 மீற்றர் தூரத்தில் உள்ள மெதடிஸ்த பெண்கள் கல்லூரியே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது-.
பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் கல்லூரி 195 வருடங்கள் பழைமையானது. இந்து சமுத்திரத்தை நோக்கியுள்ள இந்த பாடசாலை கடந்த பல வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்திருந்தது. முப்பது வருடங்களுக்கு மேல் இடம்பெற்ற யுத்தத்தின் போதும் சுனாமி அனர்த்தத்தின் போதும் இந்த கல்லூரியின் கதவுகள் திறந்தே இருந்ததென்றால் நம்புவீர்களா?. ஆனால் தற்போது இப் பிரதேசத்தில் உள்ள பெரிய மீன்பிடி துறை முகம் சரியாக கல்லூரிக்கு நேராக சில மீற்றர் தூரத்தில் அமைவது கல்லூரிக்கு பிரச்சினையாக உள்ளது.
எனவே, துறைமுகத்தை சில மீற்றர்கள் தூரத்துக்காவது நகர்த்துமாறு கல்லூரியின் மாணவியரும் அவர்களது பெற்றோரும் கோரி-க்ைக விடுக்கின்றனர். இக்கல்லூரியில் 1234 மாணவியர் கல்வி பயிலும் நிலையில் மேற்படி மீன்பிடித்துறைமுக திட்டம் பற்றி முதலில் தெரிய வந்தபோதே அதனை ஓரளவு தூரத்துக்கு நகர்த்துமாறு நூற்றுக்கு மேற்பட்ட பெற்றோர் முறைப்பாட்டுக் கடிதமொன்றில் கையெழுத்திட்டு சமர்ப்பித்திருந்தனர்.
ஒரு துறைமுகமானது அனைத்து வகையான சமூக தீங்குகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும். அனைத்து வகை மனிதர்களும் அங்கு வந்து போகின்றனர். திருட்டு, போதைவஸ்து மற்றும் ஏனைய தீமை பயக்கும் விடயங்களும் அங்கு இடம்பெறக்கூடும். எனவே எங்கள் கல்லூரிக்கு வரும் பெண் பிள்ளைகள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும் என்று பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த மீன்பிடித்துறைமுகத்தை முழுமையாக கட்டிமுடிக்க இன்றும் ஐந்தாண்டு காலம் வரை செல்லும். அதன் நிர்மாண காலத்தில் இடம்பெறக்கூடிய மாசுக்கள் மற்றும் தூசு என்பன மேற்படி கல்லூரியின் மாணவியருக்கு சுகாதார ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதே நேரம் மேற்படி துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டதும் அதில் இருந்து வரும் சத்தம், நாற்றம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை மேற்படி மாணவியரின் கல்வி நடவடிக்கைகளை பாதிக்கும் என்றும் பெற்றோல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இந்த திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்பதே எமது விருப்பமாகும். அதே நேரம் இந்த துறைமுகம் காரணமாக மேற்படி பாடசாலை பாதிக்கப்படக்கூடாது என்று பெற்றோர் ஒருவர் கூறினார். மேற்படி மீன்பிடிதுறைமுகம் பற்றி மீன்பிடி அமைச்சு 2017 நவம்பர் மாதத்திலேயே தமக்கு முதன் முதலில் அறிவித்திருந்ததாக கல்லூரியின் ஆசிரியை ஒருவர் குறிப்பிட்டார். துறைமுகத்தின் வரை படத்தை காட்டிய அதிகாரிகள் குறிப்பிட்ட மீன்பிடித்துறைமுகம் இலங்கையில் பெரிய மீன்பிடி துறைமுகங்களில் ஒன்றாக இருக்கும். அத்துடன் இது ஆசிய அபிவிருத்தி வங்கி திட்டம் என்பதால் அதனை இவ்வருடம் ஆரம்பித்தாக வேண்டும். இல்லாவிட்டால் குறைந்த வட்டியுடன் கூடிய கடனை இழக்க வேண்டியிருக்கும் என்று கூறியதாக அந்த ஆசிரியை குறிப்பிட்டார்.
மேற்படி துறைமுகத்தை திட்டமிட்டபோது அது பற்றி சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடியிருக்க வேண்டும். ஆரம்பித்த பின்னர் பேசுவதில் பயனில்லை. திட்டமிட்டு ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அவர்கள் மாற்றம் செய்வதை விரும்பவில்லை என்று இன்னொரு பெற்றோர் கூறுகிறார்.
மீன் பிடித்துறைமுக திட்டம்
பருத்தித்துறையில் மொத்தம் 14,057 குடும்பங்கள் உள்ளன. 35 கிராம சேவகர் பிரிவுகளில் இவர்கள் வசிக்கின்றனர். இந்த குடும்பங்களில் 2900 குடும்பங்கள் மீனவ குடும்பங்களாகும். 30 வருடங்களுக்கு மேலாக இப்பிரதேசத்தின் மீன்பிடிக் கைத்தொழில் பெருமளவு நலிவுற்றிருந்தது. இதனை மேம்படுத்துவது எளிதான விடயமல்ல. பெரிய படகுகளும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமும் இதற்கு தேவைப்படுகின்றன.
1980களில் இலங்கையின் மீன் பிடியில் 40 சதவீதம் வடக்கிலேயே கிடைத்தது. யுத்த காலத்தில் இருந்து 4 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்தது. கடந்த சில வருடங்களாக மிகவும் சிரமப்பட்டு 17சத வீதம் என்ற அளவுக்கு இதனை அதிகரித்துள்ளோம். ஆனால் இப்போது எமக்குள்ள வசதிகள் மூலம் எட்டக் கூடிய அதிக பட்ச அளவு இதுதான் என்று கூறுகிறார் நீர் வள அமைச்சின் திட்ட அதிகாரியான பிரபாத் ரணவீர. பழைய பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தை நவீனமயப்படுத்தும் இந்த திட்டத்துக்கு இவர்தான் பொறுப்பாக இருக்கிறார்.
வேலைகள் அனைத்தும் முடிவுற்றதும் இந்த மீன்பிடித்துறைமுகத்தில் 27அடி நீளம் கொண்ட 150 படகுகளை நிறுத்தி வைக்க முடியும். தெற்கில் 20 மீன்பிடித் துறைமுகங்கள் உள்ளன. வடக்கில் மீன்பிடி கைத்தொழிலை அபிவிருத்தி செய்ய வேண்டுமானால் அங்கும் இது போன்ற மீன்பிடி துறைமுகங்கள் தேவைப்படுகின்றன.
பருத்தித்துறையில் அமையவுள்ள புதிய மீன்பிடிதுறைமுகம் 6.4 ஹெக்டயர் பரப்பில் அமைகிறது. இங்கு 75 மீட்டர்
நீளமான படகுகளையும் கையாள முடியும். துறைமுகத்துடன் இணைந்ததாக பிரமச்சாரிகளுக்கான விடுதிகள், துறைமுக நிர்வாகியின் பங்களா, கண்காணிப்பு மண்டபம், மீன்களை ஏலம் விடும் இடம், வாகன நிறுத்துமிடம், கழிவு நீர் சுத்திகரிப்பு வசதிகள். பாதுகாப்பு வசதிகள். கட்டுப்பாட்டறை எரிபொருள் நிலையம், பொருட்களை இறக்கும் வசதிகள், ஜெனரேட்டர் மின் வசதிகள், பாரந்தூக்கிகள் ஆகிய வசதிகளும் உள்ளடங்கும் என்று அவர் மேலும் கூறினார்.
இந்த மீன்பிடித்துறைமுக திட்டத்தை ஆரம்பிக்கும் முன்னர் இத்திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களுடன் நாம் பேச்சுவாத்தை நடத்தினோம். இதில் 13 மீனவ குடும்பங்கள் ஒரு புறமும் பிரதேசத்தில் உள்ள மெதடிஸ்த பெண்கள் கல்லூரி, ஹார்ட்லி ஆண்கள் கல்லூரி, பருத்தித்துறை சித்தி விநாயகர் வித்தியாலயம் ஆகியவை ஒரு புறமும் எனப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. மேற்படி பாடசாலைகள் துறைமுகத்துக்கு முறையே 15 மீட்டர், 100 மீட்டர் மற்றும் 275 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மகளிர் கல்லூரியே அதிக அளவில் பாதிக்கப்படவுள்ளது.
துறைமுகத்தில் இருந்து வரும் பாதிப்புகள் என அப்பாடசாலை குறிப்பிடும் சத்தம், நாற்றம், போக்குவரத்து மற்றும் கடலின் தோற்றத்தை மறைத்தல் ஆகிய விடயங்கள் பற்றி நாம் பரிசீலித்தோம்.
அத்துடன் மீன் பிடித்துறைமுகம் பற்றிய மேலதிக விளக்கத்தை வழங்கவும், நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் பேருவளை, காலி, திக்கோவிட்ட ஆகிய மீன்பிடித்துறைமுகங்களுக்கு பயணமொன்று மேற்கொள்ளப்பட்டது. பருத்தித்துறை நகர சபை, மேற்படி மூன்று பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவ மாணவியரின் பெற்றோர், ஹார்ட்லி கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மீனவக் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கிய 34 பேர் இந்த பயணத்தில் சேர்ந்து கொண்டனர்.
திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்துக்கு அருகிலும் ஒரு பெண்கள் பாடசாலை உள்ளது. ஆனால் துறைமுகம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையும் அந்த பாடசாலைக்கு இருக்கவில்லை. காரணம் சாதாரண துறைமுகங்களைப் போல் இதுவும் அசுத்தமாகவும், மணம் வீசும் வகையிலும் இருக்கும் என்று நினைக்கக் கூடாது நவீன மீன்பிடி துறைமுகங்கள் அவ்வாறு மோசமாக இருப்பதில்லை. நவீன மீன்பிடி துறைமுகங்களை பார்ப்பதற்காக இந்த பயணத்தில் சேர்ந்து கொள்ளுமாறு நாம் மெதடிஸ்த பெண்கள் கல்லூரியின் அதிபரை அழைத்தோம். ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டார். எனினும் திக்கோவிட்ட மீன்பிடித்துறைமுகத்துக்கு அருகில் உள்ள பாடசாலை மெதடிஸ்த பெண்கள் பாடசாலையைப் போல் துறைமுகத்துக்கு அண்மித்ததாக இல்லை. அது துறைமுகத்துக்கு 110மீட்டர் முதல் 200 மீட்டர் தூரத்தில் உள்ளது. அதே நேரம் மெதடிஸ்த பெண்கள் பாடசாலைக்கு முன்னால் உள்ள காணியை பாவிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை செய்து கொள்ள நாங்கள் தயராக உள்ளோம். அத்துடன் துறைமுகம் என்று கூறும்போது சுங்கம் மற்றும் ஏனைய பாதுகாப்பு செயற்பாடும் இடம்பெறும் என்பதால் அப்பிரதேசத்தில் சட்ட விரோத கடத்தல் செயற்பாடுகள் தடுக்கப்படும்.
சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்கள் அலைதாங்கி (Break water) அமைக்கப்படுவதன் மூலம் தடுக்கப்படும். எனவே இங்கு மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படுவதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது என்று புரியவில்லை என்று ரணவீர மேலும் கூறுகிறார்.
மெதடிஸ்த பெண்கள் கல்லூரி மாணவியரின் பெற்றோரின் கோரிக்ைகக்கு அமைய மீன்பிடித்துறைமுகத் திட்டத்தில் சில மாறுதல்களை மேற்கொள்வது தொடர்பாக ரணவீரவிடம் கேட்டபோது குறிப்பிட்ட மீன்பிடித்துறைமுக திட்டத்தை மாற்றினால் அது பொருளாதார ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் மேற்படி துறைமுக நிர்மாணங்கள் 20 வருடங்கள் நிலைபெறும் வகையில் அமைக்கப்படுகின்றன. அத்துடன் மீன்பிடி கைத்தொழிலின் வளர்ச்சியும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.
3000 சதுர மீட்டர் காணியை நாம் மேற்படி பாடசாலைக்கு இலவசமாக வழங்குகிறோம். அந்த காணி பெறுமதியானது. எனினும் நாம் அவ்வாறான காணியை கொடுக்கிறோம் என்றபோதும் அவர்கள் அதை நம்புவதாக இல்லை. பாடசாலைக்கு முன்னால் உள்ள அந்த காணியை நாம் கொடுப்பதாக கூறினாலும் அவர்கள் அது தொடர்பாக உறுதியொன்றையும் கேட்கின்றனர் என்று திட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு அதிகாரி கூறுகிறார்.
அதேநேரம் பாடசாலை அதிகாரிகளுடன் இவ் விடயம் தொடர்பாக நாம் ஐந்து முறை பேசியுள்ளோம் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுடனும் அது பற்றி பேசியுள்ளோம். துறைமுகத்தை சுற்றி மதில் சுவர் ஒன்றை எழுப்புவதாகத்தான் முதலில் திட்டமிட்டிருந்தது. எனினும் அது கடலை மறைப்பதாக அமையும் என்று பாடசாலை தரப்பில் கூறப்படுவதால் வலைச் சுவர் ஒன்றை அமைப்பதன் மூலம் எமது திட்டத்தை மாற்றிக் கொண்டோம் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
எவ்வாறெனினும் அடுத்த சில மாதங்களில் திட்டம் ஆரம்பிக்கப்படவிருப்பதால் இத்திட்டம் தொடர்பாக தமது இறுதி முடிவினை பாடசாலை நிர்வாகம் விரைவிலேயே எடுக்கவேண்டும் என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார் எனினும் இத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் வெளிப்படைத்தன்மையுடனும் பகிரங்கமாகவும் நடத்தப்பட்டிருந்தால் இதற்கு தகுந்த தீர்வொன்றை மேற்கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மீன்பிடித்துறைமுகம் தொடர்பான குறைகளை கேட்டறியும் குழுவொன்று கடந்த அக்டோபர் மாதம் அமைக்கப்பட்டது. வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் இந்த குழு பல கூட்டங்களை நடத்தியபோதும் அக் கூட்டங்கள் ஒன்றுக்கும் மெதடிஸ்த மகளிர் பாடசாலை அதிகாரிகள் அழைக்கப்படவில்லை என தெரிய வருகிறது. கடந்த நவம்பரில் நடைபெற்ற மேற்படி குறைகேட்டறியும் குழுவின் கூட்டமொன்றில் மீன்பிடிதுறைமுக திட்டம் காரணமாக தமது காணிகளை இழக்கும் ஒன்பது மீனவக் குடும்பங்கள் அழைக்கப்பட்டு அவர்களது காணிகளுக்கான நஷ்ட ஈட்டை வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் மேற்படி மீன்பிடி துறைமுக திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மீது மாகாண கல்வி அமைச்சு எதிர்ப்பு நடவடிக்ைககளை மேற்கொண்டு வருவதாக தெரிய வருகிறது. மெதடிஸ்த கல்லூரிக்கு நேர் எதிரே மீன்பிடி துறைமுகம்
அமைக்கப்படும் விடயத்தில் தலையிடுமாறும் கல்லூரியின் அதிபரை உரிய காலத்துக்கு முன்னரே இடம் மாற்றும் நடவடிக்கையை நிறுத்துமாறும் கூறி பருத்தித்துறை வாசியான டாக்டர் முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றை கடந்த மாதம் (டிசம்பர்) அனுப்பியிருந்தார்.
மீன்பிடி துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோருக்கு ஆதரவு வழங்கியதன் காரணமாக வட மாகாண பிரதான செயலாளரும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளரும் குறிப்பிட்ட அதிபரை உரிய காலத்துக்கு முன்னரே இடமாற்றம் செய்ய முயற்சித்து வருவதாக அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதே நேரம் இப் பிரச்சினை தொடர்பாக பேசிய எஸ் சத்தியசீலன் மேற்படி பாடசாலை அதிபரை இடம்மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார். மீன்பிடித்துறைமுக திட்டத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் ஆசிய அபிவிருத்தி வங்கி, மீன்பிடி அமைச்சு, குறிப்பிட்ட பாடசாலை மற்றும் மீனவ சமூகத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கடந்த டிசம்பர் 15ஆம் திகதி நடைபெற்ற இந்த கூட்டத்தில் குறிப்பிட்ட திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது எப்படி என்பதைப் பற்றி சிபாரிசு மேற்கொள்ள மீன்பிடி அமைச்சு குழுவொன்றை நியமித்தது. அதே நேரம் பாடசாலைக்கு முன்னால் இருந்த காணியை பாடசாலை பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்துள்ளதாகவும் மேற்படி மீன் பிடித்துறைமுகம் சமூகத்துக்கு அவசிமானது என்றும் அவர் மேலும் கூறினார்.
அதேநேரம் மீனவ சமூகத்தை சேர்ந்த அண்ணாமலை இத்திட்டம் பற்றி கூறும்போது அப் பிரதேசத்தில் உள்ள மீனவர்களுக்கு உதவும் வகையிலான திட்டங்களை அரசாங்கம் வகுத்துள்ள போதிலும், தமது படகுகளை மேம்படுத்திக் கொள்ள தேவையான கடனை பெறுவதில் வங்கிகள் பல சிக்கல்களை ஏற்படுத்தி வருவதாக குறிப்பிட்டார். பணத்துடன் வெளியில் இருந்து வருபவர்களே புதிய துறைமுகத்தினால் பயன் பெறுவார்கள் என்று அவர் கூறுகிறார். அவர்கள் படகுகள் குளிரூட்டிகள் ஆகியவற்றுடன் வந்து மீன்களை எடுத்துச் செல்வார்கள். நாங்கள் அவர்களுக்கு டீசலையும் ஐஸையும் தான் விற்க வேண்டும் என்று அவர் ஆதங்கத்துடன் கூறிகிறார்.
இந்திய இழுவைப் படகுகள் மற்றும் வேறு இடங்களில் இருந்து வரும் மீனவர்களினால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இன்னும் சில வருடங்களில் இங்குள்ள மீனவளம் குறைந்துவிடும். அப்போது எமது சிறுவர்கள் பாடசாலை செல்ல வேண்டிய காலமாக இருக்கும் என்று அவர் மேலும் கூறுகிறார். கந்தவனம் சூரிய குமாரன் என்ற மற்றொரு மீனவர் பேசியபோது தனது இரண்டு மகள்மார் மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் கல்வி கற்பதாகவும், குறிப்பிட்ட மீன்பிடி துறைமுகம் பிரதேசத்தின் மீனவ சமூகத்துக்கு எவ்வளவு அவசியமானது என்பதை பாடசாலை அதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
எமக்கு பல நாட்கள் கடலில் தரித்து நிற்கக் கூடிய படகுகள் இருந்தால்தான் மீன் பிடித்தல் மூலம் நாங்கள் லாபம் பெறலாம். ஆனால் இப்போதைய நிலையில் நான் பெரிய படகொன்றை வாங்கினாலும் அதனை நிறுத்தி வைக்க இடமில்லை. மீன்பிடிதுறைமுகம் இருந்தால்தான் இது சாத்தியப்படும். மெதடிஸ்த பாடசாலையில் உள்ள மாணவியரின் பெற்றோரில் அரசாங்க அதிகாரிகளும் உள்ளனர். ஆனால் மீனவ சமூகத்தின் தேவையை அவர்கள் கண்டும் காணாமல் இருப்பது கவலை தருகிறது என்று அவர் மேலும் கூறினார். சூரிய குமாரனின் அதே கருத்தை வடமராட்சி கிழக்கு மீனவ கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் எஸ். நற்குணமும் அமோதிக்கிறார். எதிர்காலத்தில் இங்கு மீன் பிடிதுறைமுகம் இன்றி நாம் மிகவும் சிரம்படுவோம். அதே நேரம் பாடசாலையும் பாதிக்கப்படக்கூடாது.
ஏனைய மீன்பிடி துறைமுகங்களை பார்த்த பின் அவ்வாறான ஒரு துறைமுகம் இந்த பிரதேசத்துக்கு அவசியம் என்பதே எனது கருத்து என்று அவர் கூறுகிறார். மீன்பிடி துறைமுகத்துடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினரும் கலந்து கொண்ட மேற்படி குறைகளை கேட்டறியும் கூட்டத்தில் பருத்தித்துறையில் மீன்பிடி துறைமுகம் அமைய வேண்டியதன் அவசியம் பற்றி விளக்கிக் கூறப்பட்ட போதும் அக் கூட்டத்தில் அமளிதுமளி நிலை ஏற்பட்டதுடன் கூட்டத்தில் கலந்து கொண்டோர் இரண்டு தரப்பாக பிளவுபட்ட நிலையும் ஏற்பட்டது.
பாடசாலைக்கு வழங்கப்பட்ட காணியை ஏற்றுக் கொள்வது என ஒரு தரப்பினரும், குறிப்பிட்ட காணியை விஸ்தரிக்குமாறு இன்னொரு தரப்பினரும் அக்கூட்டத்தில் பிரஸ்தாபித்ததையடுத்தே இவ்வாறான குழப்பநிலை தோன்றியது. எனினும் குறிப்பிட்டகாணியை விஸ்தரிப்பதால் மீன் பிடித்துறைமுக திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் அதனை நிராகரித்துவிட்டனர். எனினும் கூட்டத்தில் கலந்துகொண்ட தொழில்நுட்ப அதிகாரிகள் அவ்வாறான விஸ்தரிப்பை மேற்கொள்ள முடியும் என்று கூட்டத்தில் கூறியதாகவும், ஆனால் அந்த யோசனைக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
இந்நிலையிர் பாடசாலை அபிவிருத்தி குழு கடந்த டிசம்பர் 17ஆம் திகதி மீண்டும் கூடியபோது பாடசாலைக் காணியை விஸ்தரிக்கும் இரண்டாவது திட்டத்தை அமுல்படுத்த தீர்மானித்திருப்பதாக தெரிய வருகிறது. எவ்வாறெனினும் அரசாங்கமும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் இணைந்து மேற்கொள்ளும் பருத்தித்துறை மீன்பிடித்துறைமுகம் அப்பிரதேசத்துக்கு அவசியமானது என்ற கருத்தை மறுப்பதற்கில்லை. அதே நேரம் இத்துறைமுகத்தின் காரணமாக அதற்கு நேரே அமைந்துள்ள பாடசாலைக்கு பாதிப்பு வராமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும் வேண்டும்.