இறுதிப் போரின் போது தமிழகத்திலிருந்து கொழும்பை தகர்க்கும் திட்டம் இருந்தது” – இலங்கை ஜனாதிபதி
இலங்கைப் போரின் இறுதி வாரங்களில் தமிழகத்தில் இருந்து வான்வழி மூலம் கொழும்பைத் தாக்கும் திட்டம் விடுதலைப் புலிகளுக்கு இருந்ததாக தமக்கு தகவல்கள் கிடைத்திருந்தது என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமெரிக்க வாழ் இலங்கையர் மத்தியில் பேசியபோது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
போரின் இறுதித் தருவாயில் பதவியில் இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரதமர், இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா, பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் இலங்கையில் இருக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
”போரின் இறுதி இரண்டு வாரங்களில் பதில் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றினேன். தென் இந்தியாவின் தமிழகத்திலோ அல்லது வனப் பகுதியிலிருந்தோ விடுதலைப் புலிகள் கொழும்பு நகர் மீது விமானக் குண்டுத் தாக்குல்களை மேற்கொள்ளும் திட்டம் இருந்தமை குறித்து தகவல்கள் கிடைத்திருந்தன. அதனாலேயே முக்கியமானவர்கள் நாட்டை விட்டுச் சென்றிருந்தனர்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எனினும், போரின் இறுதி வாரங்களில் விடுதலைப் புலிகள் வான் வழியாக கொழும்பைத் தாக்கும் திட்டம் குறித்து தான் அறிந்திருக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தமக்கு கிடைத்துள்ள புதுத் தகவல் எனவும், போரின் இறுதி நாட்களில் தான் வெளிநாடு சென்றிருக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
இலங்கை போரில் காணாமல் போனோர் பற்றி அறிய ஆர்.டி.ஐ. உதவுமா? அருணா ராய் பதில்
இலங்கை தலைவர்களை கொல்ல சதி செய்ததாக வழக்கு: இந்தியரை 3 மாதம் விசாரிக்க அனுமதி
இதுகுறித்து பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியில் கோட்டாபய ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
”நான் அறிந்திராத தகவல் ஒன்றை ஜனாதிபதி கூறியுள்ளார். உலகே அறிந்திராத தகவல் ஒன்றை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். நான் அப்படியொரு தகவலை அறிந்திருக்கவில்லை. நான் இலங்கையிலேயே இருந்தேன். நான் எங்கும் செல்லவில்லை.” என்றார் கோட்டாபய ராஜபக்ச.
”இலங்கையில் இராணுவத்தினர் போர்க் குற்றங்களைப் புரிந்ததாக பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகிறது. தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதில் பாதுகாப்பு அமைச்சராக அரசியலில் தலைமையேற்றிருந்த தினங்களில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்தே இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. சர்வதேசத்தின் இந்த போர்க் குற்றச்சாட்டுக்கள் பொய் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கு இருக்கிறது” என்று கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
”இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என ஜெனீவாவில் யோசனை முன்வைக்கப்படுகிறது. இந்த யோசனைகளை வெளிவிவகார அமைச்சர் ஏற்றுக்கொள்கிறார். தற்போதைய ஜனாதிபதி கூறுவதைப்போல இறுதிப் போரில் அவ்வாறு போர்க் குற்றங்கள் நடக்கவில்லை என்பதை ஜனாதிபதி அறிந்திருப்பதால், இந்த யோசனைகளை ஏற்க வேண்டாம் என வெளிவிவகார அமைச்சருக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.”
”இறுதிப் போரில் போர்க் குற்றங்கள் நடந்திருந்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். எனினும், அவ்வாறு போர்க் குற்றங்கள் நடக்கவில்லை என்பதை நான் அறிவேன்.”
இலங்கை: சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தல்
மண்டேலா பாதையில் பயணிக்க உலகத் தலைவர்களுக்கு சிறிசேன அழைப்பு
போரின் இறுதித் தருணத்தில் தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
”போரின் இறுதித் தருணத்தில் நான் கொழும்பில் இருக்கவில்லை. நான் இருக்கும் இடத்தை அறிந்துகொள்ளக் கூடும் என்பதால் இறுதி இரண்டு வாரங்களில் நான் பல இடங்களில் மாறி மாறி இருந்தேன்.” என்று மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இந்தத் தருணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவதைப் போல அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாக தெரிவித்த கருத்துக்கு பதிலளிப்பதை கோட்டாபய ராஜபக்ச நிராகரித்தார்.
முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், இராணுவத்தளபதி ஆகியோர் குறித்து ஜனாதிபதி சிறிசேன தெரிவித்த கருத்துக்கள் குறித்து கோட்டாபய ராஜபக்சவிடம் கேட்டபோது, ”என்னைக் குறித்து மட்டுமே நான் பேசுகிறேன்” என்று பதிலளித்துள்ளார்.
போரின் இறுதித் தருவாயில் வெளிநாடு சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச 2009ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி இலங்கை திரும்பியிருந்தார்.
நியூயோர்க் நகரில் மேலும் கருத்து தெரிவித்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ”விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிட்ட இராணுவச் சிப்பாய் முதல் உயர் நிலை இராணுவ அதிகாரி வரை அனைவரும் சிரேஷ்ட போர் வீரர்கள்.” என கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிட்டமை குறித்து தமது அரசாங்கம், எவரையும் குற்றஞ்சாட்டவில்லை எனக் கூறிய ஜனாதிபதி, எவ்வாறாயினும், போரின்போது அல்லது போரின் பின்னர் போருடன் தொடர்புபடாத பல கொலைகள் நடந்துள்ளதாக குறிப்பிட்டார்.
”அப்போதிருந்த முப்படைகளுடன் இருந்த தனிப்பட்ட தொடர்புகளினால் இராணுவ அதிகாரிகளைப் பயன்படுத்தியிருந்தால் அது பாரிய குற்றம்” எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இவ்வாறான சில சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் இராணுவத்தில் பணியாற்றிய சிலர் எதிராளியாக குறிப்பிடப்படுகின்றனர். குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவது உண்மையான இராணுவ வீரர்களுக்கு கொடுக்கப்படும் கௌரவம் என்று ஜனாதிபதி மைத்திரிபால கூறியுள்ளார்.
போரின் பின்னர் இராணுவ வீரர் என்ற பதத்தைப் பயன்படுத்தி, மேற்கொள்ளப்படும் தவறான செயல்கள் இராணுவத்தினருக்கு களங்கம் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க பி.பி.சி. சிங்கள சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் போர்க் குற்றம் செய்யவில்லை என்பதே தனது நிலைப்பாடு எனவும், ஏதாவது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுமாயின், இதுகுறித்து விசாரிக்கப்படுவதில் எவ்வித பயமும் இல்லை எனவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
”குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுமாயின், அதுகுறித்த விசாரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது எமது கடமை. அதற்கு நாம் தயாராக இருக்கிறோம். ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருந்தால் அதனை மறைப்பதற்கான தேவை இராணுவத்திற்கு இல்லை. இவ்வாறு நான் கூறக் காரணம், எந்தவொரு சம்பவம் நடக்கவில்லை என்பதை அறிந்திருப்பதால்தான்” என்றார் தற்போதைய இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க.
இதேவேளை, 2008ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் குறித்த குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளில் சந்தேக நபர் ஒருவருக்கு இந்தக் குற்றங்களைச் செய்ய உதவியதாக பாதுகாப்புப் படையணியின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவிற்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அட்மிரல் ரவீந்திரவிற்கு எதிராக சாட்சியமளித்த கடற்படை அதிகாரி லெப்டினன் கமாண்டர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக போலீசார் நீதிமன்றில் தெரிவித்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.
https://www.bbc.com/tamil/sri-lanka-45690957
Leave a Reply
You must be logged in to post a comment.