காணி விடுவிப்பில் வாக்குறுதியை மீறி தமிழ் மக்களை ஏமாற்றினார் மைத்திரி
சீற்றத்துடன் சுமந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு பிரதமர், ஆளுநர் முன்னிலையில் தெரிவிப்பு
யாழ்ப்பாணம், ஓகஸ்ட் 17
இராணுவம் ஆக்கிரமித்துள்ள தனியாரின் காணிகள் அனைத்தையும் விடுவிப்பேன் என எழுத்து மூலம் தமிழ் மக்களுக்குத் தான் வழங்கிய உறுதிமொழியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தானே தூக்கிக் கடாசிவிட்டார் என்று நேற்றுப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் முன்னிலையில் வைத்துப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டிய சுமந்திரன் எம்.பி., இது விடயத்தில் ஜனாதிபதி தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார் என்றும் விசனம் தெரிவித்தார்.
நேற்று யாழ். செயலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு பகிரங்க மாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சாடினார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். காணி விடுவிப்பு விவகாரம் நேற்றைய கூட்டத்தில் ஆராயப் பட்ட போது இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தனியார் காணிகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்று சுமந்திரன் சுட்டிக்காட்டினார். விடுவிக்கப்படாமல் எஞ்சியுள்ள காணிகள் தொடர்பில் பாதுகாப்பு நிலைவரங்களை ஆராய்ந்தே அவற்றை விடுவிப்பது தொடர்பில் இராணுவம் தீர்மானம் எடுக்கும் என்று இராணுவத் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து சீற்றத்துடன் கருத்து வெளியிட்டார் சுமந்திரன் எம்.பி.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளர் என்ற முறையில் பல உறுதிமொழிகளை வாய்மூலம் மைத்திரிபால சிறிசேன விடுத்தாராயினும், அவர் எழுத்து மூலம் தந்த உறுதிமொழி ஒன்றே ஒன்றுதான்.
அது படையினர் ஆக்கிரமிப்பில் இருக்கும் சகல தனியார் காணிகளும் அவற்றின் சொந்தக்காரர்களிடம் மீளளிக்கப்படும் என அவர் எழுத்து மூலம் ஒப்பமிட்டு உறுதியளித்தார்.
அவர் தமிழ் மக்களுக்கு எழுத்து மூலம் அளித்த அந்த வாக்குறுதியை அவர் தூக்கி கடாசி, தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டார் என்பதையே படைத்தரப்பின் இந்தப் பதில் உறுதிபடுத்துகின்றது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இந்த வாக்குறுதியை எழுத்து மூலம் வழங்கிய ஜனாதி பதியிடம், அதனைப் பல தடவைகள் சுட்டிக்காட்டி, நினைவுபடுத்தினோம். இதன் பின்னர், படை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளை எல்லாம் கூட்டி வைத்து அவர் சந்திப்புகள், மாநாடுகளை நடத்தினார். படைகள் வசம் இருக்கும் தனியார் காணிகள் எல்லாம் 2018 டிசெம்பர் 31 இற்கு முன்னர் கையளிக்கப்படும் என்று
காலக்கெடு குறிப்பிட்டு அங்கு அறிவிப்புக்களை எல்லாம் விடுத்தார்.
படை அதிகாரிகளும் அதை செவிமடுத்து இசைவு தெரிவித்தனர். இவ்வளவு எல்லாம் நடந்த பின்னர், இன்னும் விடுவிக்கப்படாமல் இருக்கும் காணிகள் தொடர்பில், பாதுகாப்பு நிலைவரங்களை ஆராய்ந்த பின்னர் அவற்றை விடுவிப்பதா என்பது குறித்துப் படை அதிகாரிகள் தீர்மானிப்பர் என்று கூறுகின்றமை, தமிழ் மக்களுக்குத் தாம் எழுத்து மூலம் வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி மைத்திரிபால தூக்கிக் கடாசி, தமிழர்களை ஏமாற்றிவிட்டார் என்ற அர்த்தத்தையே தந்து நிற்கின்றது.
படையினரால் ஆக்கிரமிக்கப் பட்ட தனியார் காணிகளை விடுவிப்பது என்பது அரசின் கொள்கை ரீதியான தீர்மானம். அரசின் கொள்கை ரீதியான முடிவை நடைமுறைப்படுத்துவதுதான் படைத்தரப்பு உட்பட அரசுக் கட்டமைப்புகளின் கட்டாயப் பொறுப்பு. அரசின் கொள்கை ரீதியான தீர்மானத்தை செயற்படுத்தாமல் அரச பிரிவு ஒன்று அதைக் கேள்விக்கும் சவாலுக்கம் உட்படுத்த முடியாது. (காலைக்கதிர்)
உயர் பாதுகாப்பு வலையமாக இருந்த மயிலிட்டி துறைமுகம் புனரமைப்பு செய்யப்பட்டு நேற்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது
வடக்கிற்கு மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த மயிலிட்டி துறைமுகம் முதற்கட்டப் புனரமைப்புக்களுடன் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
நேற்று காலை நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டிருந்த நிலையில் காலை 10.30 மணியளவில் மயிலிட்டித் துறைமுக திறப்புவிழாவிலும் அதன் பின்னர் மயிலிட்டி வீட்டுத்திட்டத்தினையும் மக்களிடம் கையளித்தார். அதனைத் தொடர்ந்து நண்பகல் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் விவசாய ஆராய்ச்சி திறப்புவிழாவிலும் கலந்துகொண்டு திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து குருநகர் இறங்குதுறைக்கு அடிக்கலை நாட்டு நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தார்.
சுமார் 150 மில்லியன் ரூபா செலவில் மயிலிட்டி துறைமுகத்தின் புனரமைப்பு பணிகளை 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த புனரமைப்பு பணிகளின் முதல் கட்டம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் பொதுநோக்கு மண்டபம் எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன், இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராச்சி, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த்தேசியக் கூட்டமை்பபு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராசா, எம்.ஏ. சுமந்திரன், த.சித்தார்த்தன், ஈ.சரவணவன், வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வட மாகாண சபையின அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாநகர சபை முதல்வர் ஆனோல்ட், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், பிரதேச செயலகர்கள், பிரதேச தவிசாளர்கள், உறுப்பினர்கள், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் மயிலிட்டி வாழ். மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மக்களின் நிலம் மக்களிற்கு எனவும் அவை 2018-12-31ற்கு முன்னர் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா வாக்குறுயளித்தார்
Thayalan Thaya
பலாலி விமான நிலைத்தின் மேற்குத் திசையின் பல நிலங்களை இராணுவம் விடுவித்தபோது அங்கிருந்த இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு கிழக்கே நகர்த்தப்பட்டது. அதனால் தற்போது கிழக்கில் உடனடியாக நிலம் விடுவிக்க முடியாது என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தலமையில் யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது வலி. வடக்கில் மயிலிட்டி மற்றும் பலாலி வீதிக்கு கிழக்குத் திசை காணிகள் விடுவிப்பதாக படையினர் முன்னர் இணங்கியிருந்தனர். இருப்பினும் தற்போது அது தொடர்பில் எந்த ஏற்பாடும் இன்றிக் கானப்படுகின்றது. எனவே மக்களின் நிலத்தை விடுவிக்க ஆவண செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராயா கோரிக்கை விடுத்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மக்களின் நிலம் மக்களிற்கு எனவும் அவை 2018-12-31ற்கு முன்னர் விடுவிக்கப்படும் எனவும் 2018ன் நடுப்பகுதியில் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா வாக்குறுயளித்தார். இருப்பினும் அதனையும் அவர. நிறைவேற்றவில்லை. என்றார். குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஓர் நினைவூட்டல் கடிதம் அனுப்புவதாக ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் படைத்தரப்பின் பதிலைக் கோரியபோதே கட்டளைத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அதாவது பலாலி விமான நிலைத்தின் மேற்குத் திசையில் இருந்த பல நிலங்களை இராணுவம் மக்களிடம் விடுவித்தது. இவ்வாறு அந்த நிலங்களை விடுவிப்பதற்காக அங்கிருந்த இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டன. அவை பலாலி வீதிக்கு கிழக்கே அமைக்கப்படுகின்றன. அவை அமைத்து நிறைவுற்ற பின்பே எவ்வளவு நிலம் விடுவிக்க முடியும் என கூறலாம் அதனால் தற்போது கிழக்கில் உடனடியாக நிலம் விடுவிக்க முடியாது.
அதேபோன்று மயிலிட்டிப் பகுதி மக்களின் நிலம் தொடர்பில் பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுகின்றன. அவ்வாறு இடம்பெறும் கணிக்காகவும் விமான ஓடுதளம் மேலும் ஒரு கிலோ மீற்றர் நீடிக்கப்படுகின்றது. அதன் பணிகள் திறைவுற்ற பின்பே மயிலிட்டி தொடர்பில் கவனம் செலுத்த முடியும். இதேநேரம் பலாலி விமான நிலையம் ஓர் சர்வதேச விமான நிலையமாக த.ம் உயருமானால் அதன் பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். எனவும் தெரிவிக்கப்பட்டது.
உலகில் பல சர்வதேச விமான நிலையத்திற்கு அண்மையிலும் மக்கள் உள்ளனர். ஏன் இலங்கையின் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் மக்கள் உள்ளனர். அந்த நிலையில் பலாலியை மட்டும் அவ்வாறு நோக்க முடியாது. என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
https://www.virakesari.lk/article/62728
Leave a Reply
You must be logged in to post a comment.