ஒற்றுமை குலைந்தால் பலத்தை இழப்போம்! எச்சரிக்கின்றார் சுமந்திரன்

ஒற்றுமை குலைந்தால் பலத்தை இழப்போம்!
எச்சரிக்கின்றார் சுமந்திரன்

எஸ். நிதர்ஷன் 


தொண்டமானாறு,

ஓகஸ்ட் 15

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து நாங்கள் யாரையும் விலகிப் போகுமாறு கூறவில்லை. விலகிப் போகிறவர்களை நாங்கள் பிடித்து எம்முடன் கட்டி வைக்கவும் முடியாது எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், இருக்கின்ற ஒற்றுமையில் குளறுபடி நடந்தால் எம்மிடமுள்ள பலம் பாதிப்படையும் என்பதால் அதற்கு இடங்கொடுக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் யாரையும் கண்டு நாம் விசனம் கொள்ளத் தேவையில்லை. அவசரப்படாமல், நிதானமாகச் சிந்தித்து, பேச்சு நடத்தி, மக்களுக்கு நன்மை பயக்கத்தக்கதான முடிவை நாங்கள் எடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொண்டமானாறு கலைவாணி சனசமூக நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா திறப்பு விழா நிகழ்வில் நேற்றுப் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி உழைத்தோம். இந்த ஆட்சியை நாங்கள் கொண்டு வந்தோம். இந்த ஆட்சியின் மூலமாக எங்கள் மக்களின் நீண்ட கால அபிலாசைகளைப் பூர்த்தி செய்யலாம் என்ற ஒரே நோக்கோடுதான் இந்த ஆட்சியைக் கொண்டு வந்தோம். அதற்கான முயற்சியையும் நாங்கள் முழுமையாக எடுத்திருந்தோம். புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் மூலமாகத் தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கு முற்றுமுழுதான ஒரு தீர்வைக் காணலாம் என்று 2015 ஆம் ஆண்டிலிருந்த நாங்கள் முழுமையாக உழைத்து வந்திருக்கிறோம்.

அதில் முன்னேற்றங்கள் பல இருக்கின்றன. ஆனால் அது இன்னமும் செய்து முடிக்கப்படவில்லை. செய்து முடிக்கப்படாமல் அது இப்பொழுது கிடப்பிலே போடப்பட்டிருக்கிறது. அது சம்பந்தமாக நாங்கள் சென்ற முறை நாடாளுமன்றத்திலே ஒத்திவைப்பு வேளையில் பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்து கேள்வி யெழுப்பினோம். இரண்டு நாள் விவாதமாக அது நடைபெற்றது.

தற்போது உலக நாடுகளுடைய கவனத்தை இதன்பால் நாங்கள் ஈர்த்திருக்கிறோம்.

போர்க்காலத்திலே ஆயுதப் போராட்டம் முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டும், அதை முடிவிற்கு கொண்டு வந்த பிறகு அரசியல் தீர்வொன்றைக் கொடுக்க முடியுமென்று இலங்கை அரசாங்கம் உலக நாடுகளுக்கு வழங்கிய வாக்குறுதியை மையமாக வைத்துத்தான் போரை முடிவிற்கு கொண்டு வருவதற்கு உலக நாடுகள் இலங்கை அரசிற்கு உதவி செய்தன.

அந்த வாக்குறுதியின் அடிப்படையில் அவர்கள் உதவி செய்ததால் போரை முடிவிற்குக் கொண்டு வர முடிந்தது. அதன் காரணத்தினால்தான் அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் காப்பாற்ற வேண்டியிருக்கின்றது. ஆனால், பலவிதமான சாக்குப் போக்கைச் சொல்லிச் சென்ற அரசாங்கம் அதனைச் செய்ய வில்லை.

இந்த நாட்டின் சரித்திரம் – ஆட்சியில் இருக்கும் கட்சி ஒரு முன் மொழிவை வைத்தால் எதிர்த் தரப்பில் இருக்கின்ற கட்சி அதை எதிர்ப்பது என்பதுதான் வழமை. ஆனபடியினால்தான் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றாக வருகிற ஒரு சந்தர்ப்பம் வந்த போது நாங்கள் அந்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பை வழங்கினோம். ஆனால்,இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆட்சியாளர்களிடம் அரசியற் துணிவும் இல்லை. அதற்கான எண்ணமும் இருக்க வில்லை.

புதிய அரசமைப்பு உருவாக்கத்திற்கு நாங்கள் முழுவதுமாக எங்களுடைய பங்களிப்பைச் செய்தோம். எவரும் எதிர்பார்த்ததற்கு மேலாகச் செய்தோம்.

சென்ற வாரத்திலே அமெரிக்க உதவி இராஜங்கச் செயலாளர் தலைமையிலான குழுவினரைச் சந்தித்திருந்தோம். அதன் போது, ”இந்த விடயத்தில் எங்களது பங்களிப்பில் ஏதாவது குறை இருக்கின்றதா?அவ்வாறு குறை யைக் கண்டீர்களா?” – என்று எங்கள் கட்சியின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்களிடத்தே கேட்டார்.  அதற்கு அவர்கள் இல்லை என்றனர்.

“”நாங்கள் எதிர்பார்த்ததை விட நீங்கள் கூடுதலாக – முழுமூச்சாக – இதிலே பங்கெடுத்துள்ளீர்கள். உங்களில் எதுவித தவறையும் இதில் நாங்கள் காணவில்லை. அதற்கு மாறாக நீங்கள் கூடுதலாகவே பங்களித்திருக்கின்றீர்கள்” என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

“”இவ்வாறு நாங்கள் ஒத்துழைத்து,பங்களிப்பை வழங்கியும் இது முடிவிற்கு வராமல் இருக்கிறதே!” – என்று அதன் போது ஐயா திருப்பிக் கேட்டார். “”மேலும், நாங்கள் எங்களால் இயன்றதைச் செய்திருக்கின் றோம். இதை முடிவிற்குக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு உங்களுடையது இல்லையா?” – என்றும் ஐயா கேட்டார்.

“”நீங்கள்தான் எங்களை இந்தப் பேச்சுகளில் கலந்து கொள்ளச் சொன்னீர்கள், நீங்கள்தான் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை சம்பந்தமாகத் தீர்மானங்களைக் கொண்டு வந்து இலங்கையையும் அதற்கு இணங்கப் பண்ணிணீர்கள். ஆகவே நாங்கள் எங்களுடைய பங்கைச் சரியாகச் செய்திருக்கிறோம்.

ஆனால் இலங்கை அரசாங்கம் தன்னுடைய பங்கைச் சரியாகச் செய்யவில்லை. அதற்கான அரசியல் துணிவு அவர்களிடத்தே இல்லை. அதற்கான எண்ணமும் அவர்களிடத்தே இருப்பதாகத் தெரியவில்லை” – என்று ஐயா கூறினார்.

அதற்கு “”நாங்கள் எங்களால் இயன்றதைத் தொடர்ந்து செய்வோம், உங்களோடு தொடர்ந்து பயணிப்போம், மாற்று வழிகளைக் குறித்து சிந்திப்போம்” – என்று அவர்கள் எங்களிடத்தே உறுதியளித்துள்ளனர்.

எங்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்பது தவறான சிந்தனை. இந்த சர்வதேசப் பலம் தொடர்ந்து நாங்கள் எங்களோடு வைத்திருக்க வேண்டியதொன்று. எங்களுடைய ஒற்றுமை எங்களுக்கு இன்னொரு பலமாக இருக்கிறது. பல இடங்களுக்கு நாங்கள் செல்கிற பொழுது தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்று பலர் எங்களைக் கேட்கின்றார்கள். அது தவறான எண்ணம். நாங்கள்தான் இந்த நாட்டிலே வாழ்கின்ற சமூகங்களில் கூடுதலான பங்கு ஒற்றுமையாக இருக்கிறோம்.

எங்களது அரசியல் ஒற்றுமைக்கு நிகரான அரசியல் ஒற்றுமை மற்ற சமூகங்களிடத்திலே இல்லை. இன்றைக்கு நாடாளுமன்றத்திலே வடக்கு கிழக்கிலே இருந்து தெரிவு செய்யயப்பட்ட 18 பிரதிநிதிகளில் 16 பேர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். அதைவிடக் கூடுதலான ஒற்றுமையை எங்கேயும் நீங்கள் பார்க்க முடியாது. ஆனால் அதில் இருந்து 2 பேர் தற்போது விலகி நிற்கின்றார்கள். என்றாலும் 14 பேர் ஒன்றாக நாங்கள் நிற்கின்றோம்.

விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார், சுரேஷ் பிரேமச்சந்திரனை நாங்கள் விலக்கவில்லை. ஒற்றுமை இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் எங்களில் இருந்து விலகிப் போனவர்கள்தான். அதுவும் தாங்களாக விலகிப்போனவர்கள். அவர்கள் ஒருவரையும் நாங்கள் விலகிப் போகச் சொல்லிச் சொல்லவில்லை.

அது விக்கினேஸ்வரன் ஐயா உட்பட கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தில் ஆரம்பித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் வரை தாங்களாக விலகிப் போனவர்கள்தான். இவர்கள் எவரையும் நாங்கள் விலகிப் போங்கள் என்று சொல்லவில்லை. ஆகவே ஒற்றுமையாக இருங்கள் என்று எங்களிடத்தே சொல்கின்றவர்களுக்கு நான் இப்போது அண்மைக்காலத்திலே பல இடங்களிலும் சொல்லி வருவது எங்களுக்கு அதைச் சொல்லிப் பிரயோசனமில்லை என்றும், அதை அவர்களிடத்தே நீங்கள் சொல்ல வேண்டுமென்றும் கூறி வருகிறேன். அதாவது விலகி போனவர்களிடத்தே சொல்ல வேண்டும்.

போகின்றவர்களை இழுத்துப் பிடித்து வலுக்கட்டாயமாக எங்களால் கட்டி வைக்க முடியாது. ஆகவே போகின்றவர்களைப் போக விடத்தான் வேண்டும். ஆனாலும் ஒருவரைக்கூட – அது ஆனந்தசங்கரியாகக் கூட இருக்கலாம் – யாரையேனும் போங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை.

ஆகையினாலே ஒற்றுமைக்கு நாங்கள் மாறாக இருக்கிறோம் என்பது ஒரு தவாறன சிந்தனை. ஒற்றுமை குலைந்திருப்பதாக நினைப்பதும் ஒரு தவறான சிந்தனை. ஏனென்றால் மக்களுடைய மனதிலே ஒன்று திடமாக இருக்கிறது. அதாவது நாங்கள் ஓரணியாக நின்றால் மட்டும்தான் இன்றைக்கு நாங்கள் ஏதாவது சாதிப்பதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது என்பதுதான் அது. எங்கள் ஒற்றுமையில் குளறுபடி நடந்தால் எங்கள் பலம் பாதிப்படையும்.

ஆகவே சரியான தேர்தல்களில், சரியான நேரங்களில் எங்கள் மக்கள் அந்தத் தவறை விடுவதில்லை. நாடு முழுவதும் நடக்கின்ற தேர்தல்களில் – அது நாடாளுமன்றத் தேர்தலாக அல்லது ஜனாதிபதித் தேர்தலாக இருக்கட்டும் – எங்களுடைய மக்கள் அப்படி எதனையும் இது வரைக்கும் செய்யவில்லை. அது (அந்நிலைமை)தொடர்ந்து இருக்க வேண்டும். ஏனென்றால் அதிலே ஒரு குளறுபடி வருமாக இருந்தால் எங்களுடைய பலம் மிகவும் பாதிப்படையும். அதற்கு நாங்கள் இடங்கொடுக்கக் கூடாது.

இங்கே சுகிர்தன் பேசுகின்ற பொழுது ராஜபக்ஷ குடும்பத்தைப் பற்றிச் சொன்னார். அந்த ராஜபக்r குடும்பத்தை ஆட்சியில் இருந்த அகற்றிய பெருமை எங்களுடைய மக்களைத்தான் சாரும். திரும்பவும் அவர்கள் பின்கதவால் வந்த ஆட்சியைக் கைப்பறிய பொழுது கூட நீதிமன்றத்திற்குச் சென்று அவர்களைத் துரத்தியடித்த பெருமையும் எங்கள் மக்களைத்தான் சாரும்.

தீர்மானிக்கின்ற சக்தி எங்கள் மக்கள்தான் என்பதால் ஆழமாகச் சிந்தித்து செயற்பட வேண்டியது அவசியம்.

ஆனபடியால், இனி வரப்போகின்ற தேர்தலிலும் கூட எங்கள் மக்களுடைய கைகளிலே நிறையப் பலம் இருக்கிறது. தீர்மானிக்கிற சக்தியாக நாங்கள் இருக்கிறோம். ஆனால் வெறுமனே ராஜபக்r குடும்பத்தை அகற்றி வைப்பது மட்டும்தான் எங்களுடைய நோக்கமாக இருக்குமாக இருந்தால் நாங்கள் எதையும் சாதிப்பதாக இருக்க முடியாது.

ஆகையினாலே வரப் போகின்ற நாள்கள் தீர்மானமான நாள்கள். மிகவும் கவனமாகச் சிந்தித்து செயலாற்ற வேண்டிய நாள்கள். எங்கள் மக்களே இந்தத் தீர்மானத்தைச் செய்கிறவர்கள், அவர்கள்தான் தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட நாங்கள் – எங்களுடைய கட்சி – எப்படியாக இந்த விடயங்களைக் கையாள வேண்டுமென்று ஆழமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டிய ஒரு காலகட்டம் வந்திருக்கிறது.

இதை நாங்கள் செய்கின்ற பொழுது எங்களுடைய மக்கள் முழுமையாக எங்களுடன் நிற்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஆனாலும் குழப்ப நினைப் பவர்கள் குழப்புவார்கள். அவர்களைக் குழப்புவதற்குத் உந்துபவர்களும் பிரதானமாகச் செயற்படுவார்கள். ஆனால் எங்களுடைய மக்கள் ஒருபோதும் தேர்தல்களிலே இவ்வாறான தவறான சிந்தனைகளுக்கு இடம்கொடுத்ததில்லை. அதுவே தொடரும்.

விசேடமாக ஜனாதிபதித் தேர்தல் என்று வருகிற பொழுது நாங்கள் இப்போது அறிவித்ததைப் போல அனைத்து வேட்பாளர்களும் யார், யார் என்பதை முதலிலே நாங்கள் அறிந்த கொள்ள வேண்டும். அவர்களுடைய வேலைத் திட்டங்கள் என்ன என்று எங்களுக்குத் தெரிய வேண்டும். நாங்கள் அவசரப் படமாட்டோம்.  யார் வந்தாலும் விசனப்பட வேண்டிய அவசியம் கிடையாது.

ஆகவே நிதானித்த செயற்படுவோம். அவர் வந்தவிட்டார், இவர் வந்துவிட்டாரென்று நாங்கள் விசனப்பட வேண்டிய அவசியம் கிடையாது. எவர் வந்தாலும் அவர் களைக் கையாளக் கூடிய திறன் எங்களுடைய ஜனநாயக சக்தியாக நாங்கள் ஒன்றாகச் செயற்பட வேண்டியதில் இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் நாம் செல்ல வேண்டும். – என்றார். (நன்றி – காலைக்கதிர்)

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply