திருநிறைசெல்வன் செந்தில் குமார் திருநிறைசெல்வி பரணிகா
தமிழ்முறைத் திருமண விழா
திருநிறைசெல்வன் செந்தில் குமார் திருநிறைசெல்வி பரணிகா இருவரதும் தமிழ்முறைத் திருமணம் சென்ற நொவெம்பர் மாதம் 23 ஆம் நாள் மிகச் சிறப்பாக பாபா திருமண அரங்கில் நடந்தேறியது. திருமண விழாவுக்கு தமிழ்ப் படைப்பாளிகள் கழகத் தலைவர் திரு நக்கீரன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மங்கல விளக்கு ஏற்றல் தமிழ்தாய் வணக்கம் இரண்டையும் தொடர்ந்து திரு.தணி குமார் சேரன் திருமணத்துக்கு வருகை தந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திரு நக்கீரன் தனது தலைமையுரையில்; இத் திருமணம் மூலம் தமிழகமும் தமிழீழமும் இணைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். மங்கல நாணை தலைவர் எடுத்துக் கொடுக்க மணமகன் செந்தில் அதனை மணமகள் பரணிகா கழுத்தில் அணிந்தார். தொடர்ந்து திருக்குறள் ஓதி மணமக்கள் வாழ்க்கை உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். . திரு. வை.க.தேவ், திருமதி ரேணுகா குமாரசாமி, திருமதி ராதா முருகேசன், திரு.சு.இராசரத்தினம் ஆகியோர் வாழ்த்துரை வளங்கினர்.
மணமக்கள் செந்தில் – பரணிகா அனைத்துலக மருத்துவ நலவாழ்வு அமைப்புக்கு அமெரிக்க டொலர் 2,000 க்கு ஆன காசோலையை மருத்துவர் ரகுராஜ் அவர்களிடம் கையளித்தனர். திரு. இடைக்காடர் ஈசுவரன் நன்றியுரையோடு திருமணவிழா இனிது நிறைவேறியது. தமிழ்முறைத் திருமணத்தைக் காண்பதற்கும் மணமக்களை வாழ்த்துவதற்கும் அமெரிக்காவில் இருந்து ஏராளமான தமிழ் உறவுகள் வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பதிவுத் திருமணத்தை திரு.எஸ்.ஆர். சண்முகரத்தினம் நடத்தி வைத்தார். அவருக்கு மணவீட்டார் கொடுத்த 201 டொலர்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தலைவர் திரு.இரா.குணநாதன் அவர்களுக்கு அன்பளிப்புச் செய்தார்.
திருநிறை செல்வன் செந்தில்குமார் – திருநிறைசெல்வி பரணி திருமணவிழா
நக்கீரன் தலைமை உரை
திருநிறை செல்வன் செந்தில்குமார் திருநிறைசெல்வி பரணி இருவரதும் தமிழ்முறை அல்லது தமிழ்முறைத் திருமண விழாவுக்கு வருகை தந்திருக்கும் பெரியோர்களே. தாய்மார்களே, உடன் பிறப்புக்களே, நண்பர்களே உங்கள் எல்லோருக்கும் முதற்கண் என் தமிழ் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். மணமகன் செந்தில் மணமகள் பரணி இருவரும் .ஒருவராக இணையும் இந்த மணவிழாவிற்கு தலைமை தாங்கி நடத்தி வைப்பதில் பெரு மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இதற்கு முன்னால் இவர்களுக்கு தனித்தனி இரண்டு மனங்கள் இருந்தன. ஆனால், இனறு முதல் இந்த மணவிழா நிகழ்ச்சியின் மூலமாக இவர்கள் ஒரு மனத்தர் ஆகின்றனர். இதனை பாரதிதாசன் “ஒரு மனதாயினர் தோழி மணமக்கள் நீடூழி வாழ்க” எனச் சொல்வார்.
இருவீட்டார் அறிமுகம்
சாதாரணமாக நான் திருமணங்களை நடத்தி வைக்கும் போது மணமகன் வீட்டாரை அல்லது மணமகள் வீட்டாரை மட்டும் தெரிந்திருக்கும். சில சமயம் இரு வீட்டாரையுமே முன்னர் பின்னர் தெரியாமல் இருக்கும். ஆனால் இந்தத் திருமணம் அப்படியல்ல. மணமகன் மணமகள் இரு வீட்டாரையும் எனக்கு நீண்டகாலமாகத் தெரியும். அதிலும் மணமகன் வீட்டாரோடான எனது நட்பு குறைந்தது 14 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. எனவே இந்தத் திருமணத்தை நடத்தி வைப்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இந்தத் திருமணம் தமிழீழத்தையும் தமிழகத்தையும் இணைக்கும் பாலமாகவும் விளங்குகிறது. அதனால் நான் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன்.
ஓதுவார் செய்து வைத்த திருமணம்
பொதுவாக இப்படியான திருமணங்களுக்கு தலைமை தாங்கி நடத்தும் போது தமிழ்முறைத் திருமணம் செய்ய முன்வந்த மணமகன் – மணமகன் வீட்டாரைப் நான் பாராட்டுவதுண்டு. ஆனால் இந்தத் திருமணம் அப்படியல்ல. மணமகனது தந்தையார் தணிசேரன், தாயார் கலைச்செல்வி திருமணம் ஓதுவார்களைக் கொண்டு தேவாரம் திருவாசகம் ஓதி செய்து கொண்ட திருமணமாகும். அதே போல் மணமகளது தந்தையார் ஒரு தேங்காயை உடைத்து பத்துப்பேருக்கு முன்னால் தனது துணைவியார் கழுத்தில் தாலி கட்டியவர்.
சமய நம்பிக்கையுள்ளவர்கள் ஓதுவார்களைக் கொண்டு தேவாரம் திருவாசகம் ஓதி தாராளமாகத் திருமணம் செய்து கொள்ளலாம். அப்படியான தமிழ்முறைத் திருமணங்களை தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் செய்து வைக்க அணியமாக இருக்கிறது. எமது குறிக்கோள் தமிழர் வீட்டுத் திருமணங்கள் தமிழில் – எமது தாய்மொழியில் – நடைபெற வேண்டும் என்பதே!
எனவே தணிசேரன் – கலைச்செல்வி மற்றும் இடைக்காடர் ஈஸ்வரன் – குகமலர் அவர்களது பிள்ளைகள் தமிழ்முறைத் திருமணம் செய்து கொள்வதில் யாருக்கும் எந்த வியப்பும் இருக்கவேண்டியதில்லை. இவர்களைப் பின்பற்றி இன்னும் அதிக எண்ணிக்கையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ்மரபுத் திருமணங்களை நடத்தி வைக்க முன் வரவேண்டும். எந்தத் தெட்சணையும் வாங்காமல் இப்படியான திருமணங்களை செய்து வைக்க தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் அணியமாக இருக்கிறது.
செந்தில்
இந்த இடத்தில் மணமகன் செந்தில்குமார் பற்றி ஒரு வார்த்தை சொல்லவேண்டும். ஒரு நான்கு அய்ந்து ஆண்டுகளுக்கு முன்னர் ரொறன்ரோவில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் அவரை அடிக்கடி அவரைச் சந்திப்பேன். மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவன் ரொறன்ரோவில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என எனக்குள் நான் கேள்வி எழுப்புவதுண்டு. சில சமயம் அவரிடமே “படிப்பெல்லாம் எப்படிப் போகிறது” என்று யாழ்ப்பாணத் தமிழில் கேட்பேன். அவர் சொல்வார் “பருவாயில்லை போகுது” என்பார். பின்னர்தான் அவர் ரொறன்ரோவிற்கு ஏன் அடிக்கடி வந்தார் என்பது தெரிந்தது. அல்லது புரிந்தது. அவரது பெற்றோர்களுக்கு முன்னரே எங்களில் சிலருக்கு அந்த இரகசியம் தெரிந்திருந்தது.
சங்க காலத்துத் தமிழர் வாழ்க்கையை அகம் புறம் என வகுத்தார்கள். பின்னர் அக வாழ்க்கையை களவியல் கற்பியல் எனப் பிரித்தார்கள். தலைவனும் தலைவியும் மறைந்து ஒருவரை ஒருவர் சந்தித்து உறவாடுவது களவியல் எனப் பட்டது. பின்னர் அவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு வாழ்வதை கற்பியல் எனச் சொல்லப்பட்டது.
மணமகன் செந்தில்குமார் இளைய தலைமுறையினருக்கு ஒரு எடுத்துக்காட்டாக (சழடந அழனநட) ஆக விளங்குகிறார். புலம் பெயர் தமிழர்களின் எதிர்காலம் அவர் போன்றவர்களது கையில்தான் இருக்கிறது.
தமிழ்முறைத் திருமணம் அருமையாக நடக்கிறது
இப்படியான திருமணங்கள் இங்கே மிக அருமையாக அங்கொன்று இங்கொன்றாக நடைபெற்றாலும் தமிழ்நாட்டில் பெரியார் காலந்தொட்டு சுமார் 80 ஆண்டுகள் இவ்வாறான திருமணங்கள் பரந்தளவில் நடைபெற்று வருகின்றன. பெரியாருக்கு அடுத்து அண்ணா தலைமையிலும், அதனை அடுத்து கலைஞர் கருணாநிதி, நெடுஞ்செழியன், அன்பழகன், வைகோ போன்றோர்களது தலைமையிலும் இலட்சக்கணக்கான திருமணங்கள் நடந்துள்ளன. அண்ணா முதலமைச்சராக வந்தபோது சீர்திருத்தத் திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்ற சட்டத்தை தமிழ்நாடு சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
என் தகைமைகள்
எனக்கு இந்த திருமணவிழாவை நடத்திவைக்க என்ன தகைமைகள் இருக்கின்றன என நீங்கள் எண்ணக் கூடும்.
46 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த எனது திருமணம் தமிழ்முறைத் திருமணமாகவே நடந்தேறியது. எனது திருமணத்தை அன்றைய வட்டுக்கோட்டைத் தொகுதி நா.உறுப்பினர் திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இரண்டு மாலை, மூன்று சொற்பொழிவாளர், பத்துத் திருக்குறளோடு மிக எளிமையாக எனது திருமணம் நடந்தேறியது.
எனது திருமணத்தின் போது அய்யர் இருக்கவில்லை, அக்னி வளர்த்தல் இல்லை, கும்பங்கள் இல்லை, அம்மி இருக்கவில்லை, அருந்ததி பார்த்தல் இல்லை, வடமொழி மந்திரங்கள் இருக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சி இல்லை. உடல் முழுதும் ஆயிரம் யோனி கொண்ட இந்திரன் சாட்சி இல்லை.
தமிழ்முறைத் திருமணங்கள் செய்து கொண்ட எங்களது வாழ்க்கை நன்றாகவே அமைந்துள்ளது. நான் சரி எனது இணையர் சரி எனது பிள்ளைகள் சரி ஓகோ என்று வாழாவிட்டாலும் ஆகா என்று மற்றவர்கள் சொல்லும் அளவுக்கு வாழ்கிறோம். எங்களுக்கு ஆறு பிள்ளைகள். எல்லோருக்கும் திருமணமாகிவிட்டது. அவர்களில் இருவர் அய்யர் இல்லாமல், அம்மி மிதிக்காமல் தமிழ்முறைத் திருமணம் செய்து கொண்டார்கள். 12 பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். எல்லோருக்கும் தூய தமிழ்ப்பெயர்கள் வைத்திருக்கிறோம்.
திருமணம் என்ற சொல்லின் பொருள்
திரு என்றால் அழகு, செல்வம், மேன்மை, பொலிவு, கவர்ச்சி, விரும்பும் தன்மை எனப் பலபொருள் தரும் சொல் ஆகும். மணம் என்பது மகிழ்ச்சி, கூட்டம், கூடுதல், சேர்க்கை, என்னும் பல பொருள் தரும் சொல். திருமணம் ஆணும் பெண்ணும் சேர்வதால் பெறும் மகிழ்ச்சி ஆகும்.
தொல்காப்பியர் சொல்லும் பொருத்தம்
தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் தலைவன் – தலைவிக்கு இடையில் இருக்க வேண்டிய பத்துப் பொருத்தத்தை பின்வருமாறு கூறுவார்.
பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு,
உருவு, நிறுத்த காமவாயில்,
நிறையே, அருளே, உணர்வொடு, திருஎன
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே
(தொல். பொருள்- மெய்ப்பாட்டியல் 6, சூத்திரம் 25)
1. குலப்பிறப்பு 2. அந்த குலத்துக்குரிய ஒழுக்கம் – பண்பாடு 3.ஆள்வினையுடைமை 4. அகவை 5. வடிவம் -வனப்பு 6.காம ஒழுக்கத்திற்குரிய உள்ளக் கிளர்ச்சி 7.சால்பு – கல்வி 8. அருளுடைமை 9. உள்ளக் குறிப்பை அறிந்தொழுகும் நுண்ணறிவு 10. தெய்வப்பொலிவு என்ற பத்துப் பொருத்தம்)
பிறப்பென்பது குடிப்பிறத்தல். அதற்குத்தக்க ஒழுக்கம் குடிமை எனப்படும்.
எனவே தொல்காப்பியர் வகுத்த இலக்கணத்திற்கு அமைய நல்ல குடிமை, நல்ல பண்பு, நல்ல திரு, நல்ல கல்வி நல்ல குணம் நல்ல ஒழுக்கம் இவற்றைப் பெற்றுள்ள இந்த இரு வீடும் திருமணம் மூலம் இணைவதை இட்டு மெத்த மகிழ்ச்சி அடைகிறேன்.
எனவே இந்தப் பொருத்தங்கள் இருந்தால் உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வையுங்கள். சோதிடம் சொல்லும் பொருத்தத்தை புறக்கணித்து விடுங்கள். அதற்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் இல்லை.
தாய்மொழி தமிழின் சிறப்பு
‘எதனை விரும்புகிறோமோ அது தோன்றுகிறது!
‘எதை ஆதரிக்கிறோமோ அது வளர்ச்சி பெறுகிறது!
பேணாத பண்டம் அழிந்து போகும்! தேக்காத நீர் வீணாகி விடும்!
தமிழ்முறைத் திருமணத்தில் இரண்டு அம்சங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம். ஒன்று எமது தாய் மொழிக்கு சிறப்பிடம் கொடுக்கிறோம். இNதுபோன்று தமிழ்முறைத் திருமணத்தில் தமிழ்மறை என்று சிறப்பித்துக் கூறும் திருக்குறளுக்கும் சிறப்பிடம் கொடுக்கிறோம்.
தமிழர்களுடைய வாழ்வியலில் எங்கள் தாய்மொழியான தமிழ்மொழிக்கே சீரும் சிறப்பும், பேரும் புகழும் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுப்பதன் மூலமே எங்களை நாங்கள் உயர்த்திக் கொள்ளலாம். எப்போது செந்தமிழை ஒதுக்கிவிட்டு பிறமொழிகளுக்கு இடம் கொடுக்குறோமா அப்போது நாங்கள் எங்களையே தாழ்த்திக் கொள்கிறோம்.
தமிழ்மொழி தொன்மையான மொழி. இலக்கிய வளம் நிறைந்த செம்மொழி. சீர் இளமையோடு வாழும் மொழி. ஆரியம்போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து இறந்துவிட்ட மொழி அல்ல. எனவே எங்களது தாய்மொழி தமிழுக்கு சீரும், சிறப்பும் முதன்மையும் கொடுக்கிறோம். அப்படிக் கொடுப்பதன் மூலமே எங்களை நாங்கள் உயர்த்திக் கொள்ளலாம். எப்போது செந்தமிழை ஒதுக்கிவிட்டு பிறமொழிகளுக்கு இடம் கொடுக்குறோமோ அப்போது நாங்கள் எங்களையே தாழ்த்திக் கொள்கிறோம்.
இன்று உலகில் பேசப்படும் பழையமொழிகள் நான்கில் தமிழ்மொழியும் ஒன்று. தமிழ் மொழிக்குள்ள இலக்கிய இலக்கணச் சிறப்பு வேறு எந்த மொழிக்கும் கிடையாது. தமிழில் இன்றுள்ள மிகப் பழைய நூல் தொல்காப்பியம். எழுத்து, சொல், பொருள் இந்த மூன்றுக்கும் இலக்கணம் சொல்லும் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல் வேறு எந்த மொழியிலும் கிடையாது.
சமஸ்கிருதம் தேவபாஷை என்பதையோ, இந்துசமயக் கடவுளர்க்கு வடமொழிதான் தெரியும் அவர்களுக்குத் தமிழ்த் தெரியாது என்பதையோ மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் வி.க. போன்றோர் ஒப்புக்கொள்ள வில்லை. வடமொழி தேவபாஷை தமிழ்மொழி நீச பாஷை என்பதை நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம். அப்படிச் சொல்வது தமிழினத்தை இழிவுபடுத்தும் செயலாகும்.
திருக்கோவில் திருக்கதவுகள் திறக்கப் பாடியதும், அரவம் தீண்டி இறந்த பூம்பாவை என்ற பெண்ணை உயிர்ப்பித்து எழ வைத்ததும் தமிழ் மொழியே. வடமொழி அல்ல!
தமிழுக்கு உள்ள அடைமொழிகள் போல் வேறு எந்த மொழிக்கும் வடமொழி உட்பட இல்லை. செந்தமிழ், முத்தமிழ், சங்கமலி செந்தமிழ், பைந்தமிழ், தீந்தமிழ், பூந்தமிழ், தண்டமிழ், வண்டமிழ், ஒண்டமிழ், தண்ணார் தமிழ், நற்றமிழ், இசைமலி தமிழ், மூவாத்தமிழ், தேமரு தமிழ், ஞானத்தமிழ் …….. இப்படி அடிக்கிக் கொண்டு போகலாம்.
பாரதியாருக்கு அவரது தாய்மொழியான தமிழைவிட வடமொழி தெரிந்திருந்தது. புதுச்சேரியில் பல ஆண்டு வாழ்ந்ததால் அவருக்கு பிரஞ்சு மொழி தெரிந்திருந்தது. காசி சர்வகலாசாலையில் ஆசிரியராகப் பணியாற்றியபோது இந்திமொழி படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஆங்கில மொழியில் புலமை இருந்தது. இருந்தும் பல மொழி கற்றுத் தெரிந்த பாரதியார் “நாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று அறுதியிட்டுக் கூறியிருக்கிறார்.
”சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத்
தொழுது படித்திடடி பாப்பா”
என்று சொன்னவரும் பாரதியார்தான். மங்கை தரும் சுகமும் எம்மாத்திழுக்கு ஈடோ என்றும் தமிழுக்கு அமுதென்று பெயர் அத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் போற்றியிருக்கிறார்.
தமிழ் இனிமையான மொழி என்ற காரணத்தாலேயே “இருந்தமிழே உன்னால் இருந்தேன், உம்பர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்” என்று தமிழ்விடு தூது எழுதிய புலவர் சிறப்பித்தார். கல்வியில் பெரிய கம்பன் “என்றுமுள்ள தென்தமிழ்” என்று சிறப்பித்தார்.
மேலும் சமய குரவர்கள் நால்வர் இயற்றிய தேவார திருவாசகங்கள் முதலிய பாடல்கள் எல்லாம் மெய்க்காப்பாளர் போல் உன்னைச் சூழ்ந்திருக்க அரியாசனம் வீற்றிருக்கும் தமிழே உனக்கு இவ்வுலகில் சரியாரும் உண்டோ?
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ்செய்யுமாறே என்று திருமூலர் பிறவி எடுத்ததன் பலன் தமிழை ஓதுவதே என்கிறார்.
மேலும் சைவ சமய குரவர்கள் ஆன அப்பர், சுந்தரர், ஆளுடைப்பிள்ளையார், அருமணிவாசகர் இயற்றிய தேவார திருவாசக பாடல்கள் தமிழை ஏற்றியும் போற்றியும் பாடியிருக்கிறார்கள்.
அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழில் பாடுக என சிவனாரே சுந்தரரிடம் விரும்பிக் கேட்டுக் கொண்டதாக பெரிய புராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகிறார். சேக்கிழார் செப்பிய செந்தமிழில் இத் திருமணம் நடக்கிறது. தமிழோடு இசை பாடல் மறந்தறியேன் என அப்பர் போற்றிய தமிழில் இத்திருமணம் நடக்கிறது. தமிழுக்கு அமுதென்று பெயர் அத்தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று புரட்சிக் கவிஞா கவிஞர் பாரதிதாசன் பாராட்டிய தமிழில் இத்திருமணம் நடக்கிறது. “நாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று மகாகவி பாரதியார் பாராட்டிய தமிழில் நடக்கிறது. ஆரியம்போல் உலக வழக்கொழிந்து சிதையாது சீரிழிமைத் திறத்தோடு வாழும் தமிழில் நடக்கிறது.
தமிழ்த்தாய் எங்கள் தாய்க்கு ஒப்பானவள்
இலக்கியச் செழுமையும் வளமும் வாய்ந்த மொழியின் சொந்தக்காரர்கள் நாம். எனவே தமிழர் வீட்டுத் திருமணங்கள் தமிழ்மொழியிலேயே நடைபெறுதல் வேண்டும். எங்களுக்குப் புரியாத, அதுவும் வழக்கொழிந்த ஒரு மொழியில் திருமணம் நடைபெறுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒவ்வொருவனுக்கும் அவனைப் பத்துமாதம் வயிறு நொந்து பெற்றெடுத்து பாலூட்டி, சீராட்டி, தாலாட்டி வளர்த்த தாயே அவனுக்கு முன்னறி தெய்வம். எம்மைப் பெற்ற தாய் அழகில்லை என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும் அதற்காக அடுத்த வீட்டு அம்மாவை எங்கள் அம்மா என்று கொண்டாட முடியாது!
அது போலவே தமிழர்களுக்குத் தமிழே தாயாவாள். திருமண வீடுகளில் மட்டுமல்ல திருக்கோவில்களிலும் தமிழே ஒலிக்கவேண்டும். இந்த நிலை இப்போது முழுமையாக இல்லை. ஆனால் அந்த நிலை மாறவேண்டும்.
திருக்குறள்
அடுத்ததாக திருவள்ளுவர் செய்த திருக்குறளுக்கு சிறப்பிடம் கொடுக்கிறோம். தமிழர்கள் திருக்குறளை தங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்தும் பொதுமறையாகக் கொள்ளவேண்டும். ஜி.யூ. போப் ஐயர் போன்ற பிறநாட்டார் திருக்குறளைப் போற்றுகிறார்கள். மேல் நாட்டு அறிஞர்கள் திருக்குறளை தனித்து ஒருவரே எழுதி இருக்க முடியாது என நினைக்கிறார்கள். ஆன காரணத்தால்தான் திருக்குறளில் எல்லாப் பொருளும் உளதால் அதில் இல்லாத பொருளில்லை என்று புலவர்கள் போற்றி இருக்கிறார்கள்.\
சங்கம் மருவிய காலம்
வைதீகத் திருமணம்
சங்கம் மருவிய காலத்தில் (கி.பி. 2ம் நூற்றாண்டு) எழுந்த சிலப்பதிகாரத்தில் தமிழர் திருமணம் சங்ககால மரபை மீறி வைதீக நெறிப்படி நடந்தேறியதை முதன் முதலாகப் பார்க்கிறோம்.
நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்
வானூர் மதியஞ் சகடணைய வானத்துச்
சாலி யொருமீன் றகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலஞ் செய்வது காண்பார் கண் … (சிலப்பதிகாரம் 1:1:49)
வைதீகத் திருமணத்தின் போது அய்யர் வடமொழி மந்திரங்களைச் சொல்லும் போது அதன் பொருள் யாருக்கும் புரிவதில்லை. மணமக்களுக்குப் புரிவதில்லை. பெற்றோர்களுக்குப் புரிவதில்லை. அல்லது வந்திருக்கின்ற அவையோருக்குப் புரிவதில்லை.
புரோகிதர் அவர்களை வாழ்த்துகிறாரா அல்லது திட்டுகிறாரா என்பது கூடத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் அந்த மந்திரத்தைச் சொன்னால்தான் திருமணம் நிறைவேறியது என்று ஒரு தவறான மூடநம்பிக்கைக்குத் தமிழர்கள் ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.
புரோகிதர் சொல்லும் மந்திரம்
புரோகித திருமணத்திலே மணமக்களை வைத்து தாலி கட்டுவதற்கு முன்னாலே அவர்கள் சொல்லுகின்ற மந்திரம் “சோமோ, பிரதமோ, விவேதே கந் தர்வோ, விவித உத்ர, திரிஜ்ஜியஷ்டே அக்னிஷ் டபதி, துரிஜியஸ்தே மனுஷ்யஜா” என்பதாகும்.
அதன் பொருள் “முதலில் இந்த மணப்பெண் சோமனுக்கு மனைவியாக இருந்தாள், இரண்டாவது கந்தர்வனுக்கு மனைவியானாள். மூன்றாவது இந்திரனுக்கு மனைவியானாள், நான்காவது அக்னிக்கு மனைவியானாள், அய்ந்தாவதாக என் மூலமாக உனக்கு மனைவியாகிறாள்” என்று அந்த மந்திரத்திற்கு பொருள் சொல்லுகின்றார்கள்.
எனவே அய்யரில்லாமல், அம்மி மிதிக்காமல் திருமணம் செய்து கொண்டால் தெய்வக் குற்றம் ஏற்படும் சாமி கோபிக்கும் என்று யாரும் பயப்படவோ நினைக்கவோ தேவையில்லை.
இப்படி நான் சொன்னால் திருமண வெற்றிக்கு தமிழ்த் திருமணம் செய்து கொண்டால் போதும் என்று நினைத்துவிடக் கூடாது. அப்படி நினைப்பது மூடநம்பிக்கை ஆகிவிடும். திருமண வெற்றிக்கு பல காரணங்கள் – அகக் காரணங்கள் புறக்காரணங்கள் இருக்கின்றன. தமிழ்முறைத் திருமணம் செய்து கொள்பவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையோடு நடந்து கொள்கிறார்கள். தெய்வ நம்கிக்கைக்குப் பதில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறார்கள். அத்தோடு ஊடல், உரசல் என வரும்போது வள்ளுவரிடம் ஆலோசனை கேட்டு அவரது அறிவுரைப்படி நடந்துகொள்கிறார்கள்.
சங்க காலமே தமிழர்களது பொற்காலம்
சங்க காலமே தமிழர்களது பொற்காலம் என தமிழ் அறிஞர்கள் சொல்லி வருகிறார்கள்.
தமிழர் வரலாற்றில் சங்க காலமே அவர்களது பொற்காலம் என ஆணித்தரமாகச் சொல்லி வருகிறோம். அது பெறும் புகழ்ச்சி அல்ல. காரணம் சங்க காலத்தில் தமிழ்மக்களை தமிழ்மன்னர்களே ஆண்டார்கள். சாதி பேதம் இருக்கவில்லை. ″பாணர், துடியர், பறையர், கடம்பர் அன்றி வேறு குடிகள” இல்லை என கபிலர் பாடிய சங்கப் பாடல் கூறுகிறது. சமய வேற்றுமை பாராட்டப்படவில்லை. பால் அடிப்படையிலும் வேற்றுமை இருக்கவில்லை.
கல்வி ஆண், பெண் இருபாலாருக்கும் வாய்த்திருந்தன. பல்வேறு துறையில் புலமை வாய்ந்த புலவர்கள் இருந்தார்கள். இதனை சங்க காலப் புலவர்களின் வரலாற்றில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
சங்கப் பாடல்கள் உயர்ந்த இலக்கியத் தகைமை வாய்ந்தவை அவை அன்றைய தமிழ்மக்களின் உயர்ந்த கல்வி அறிவை, பண்பாட்டை விளக்கியன. அவற்றைப் பாடியவர்கள் வரிசையில் அரசாளும் மன்னர்கள் இருந்தார்கள். அந்தணரும் வணிகரும் வேளாண்மக்களும், கணித விற்பன்களும் இருந்தார்கள்.
பிற்காலத்தில் சமூகப் படிக்கட்டில் மிகவும் கீழே தள்ளப்பட்ட குயவர் குலத்தில் புலவர்கள் அதுவும் பெண்பாற் புலவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது மிகவும் வியப்பாக இருக்கிறது.
சங்கப் புலவர்களில் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், காவல்காரன் காலம் தாழ்த்திக் கொடுத்த நீரை மானம் காரணமாகக் குடியாது வடக்கிருந்து உயிர் நீத்த சேரமான் கணைக்கால் இரும்பொறை, ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன், பாண்டியன், பாண்டியன் நெடுஞ்செழியன், சோழன் நற்கிள்ளி, சோழன் குளமுற்றத்துக்துஞ்சிய கிள்ளிவளவன், பெருங்கடுங்கோ, பாண்டியன் அறிவுடை நம்பி, இளம்பெருவழுதி ஆதிமந்தியார் பெருங்கோப்பெண்டு, பாரிமகளிர் போன்றோர் அரச குலத்தவர் ஆவர்.
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், கடியலூர் உருத்திரங்க் கண்ணனார், கபிலர் போன்றோர் அந்தணர்கள் ஆவர்.
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் போன்றோர் வணிகப் பெருமக்கள் ஆவர்.
அரிசில்கிழார், ஆவூர்கிழார் போன்றோர் வேளாண் மக்களாவர்.
அவ்வையார் மற்றும் இளவெயினி குறவர் குடியில் பிறந்தவர். வெண்ணிக்குயத்தியார் குயவர் குடியில் பிறந்தவர்.
எட்டுத்தொகைப் பாடல்களின் மொத்த எண்ணிக்கை 2426 ஆகும். அவற்றைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 473 ஆகும். இவர்களில் 50 க்கும் மேற்பட்டவர்கள் பெண்பால் புலவர்கள் ஆவர். பத்துப்பாட்டின் அடி அளவு 3552 ஆகும். ஒன்பது புலவர்கள் அவற்றைப் பாடியுள்ளார்கள். சில புலவர்களது இயற்பெயர் தெரியவில்லை. அவர்கள், அவர்கள் பாடிய பாடலில் கண்ட உவமை அல்லது சொல்லாட்சியைக் கொண்டு சுட்டப்படுகிறார்கள்.
சோழர் காலம் தமிழர் வரலாற்றில் ஒரு பொற்காலம் எனக் கருதப்பட்டாலும் தமிழ் உயர் கல்விகூடங்களில் ஊக்கிவிக்கப்படவில்லை. தமிழ்மொழி கற்பிக்க ஒரு சிறிய பள்ளியேனும் இருந்ததாகவோ அதற்கு சமற்கிருத கல்லூரிகளுக்குக் கொடுக்கப்பட்டது போல் நிவந்தம் அல்லது மானியம் எதுவும் கொடுக்கப்பட்டதாகவோ கல்வெட்டுச் சான்று ஒன்றேனும் இல்லை. பல்லவர் காலத்தில் காணப்பட்ட சமற்கிருத மேலாண்மை சோழர் காலத்தில் மேலும் வலுவடைந்தது. அதனால் கல்வியைப் பொறுத்தளவில் சோழர் காலம் இருண்ட காலமாகவே கருதப்பட வேண்டும்.
இன்று முதல் பெண்ணின் தாய் தந்தையருக்கு ஒரு மருமகன் கிடைத்திருக்கிறார். அதே போல மாப்பிள்ளை வீட்டாருக்கும் ஒரு மருமகள் கிடைத்திருக்கிறார்.
மருமகன் மருமகள் இந்த இரண்டு சொற்களும் தமிழில் உள்ள அழகான சொற்கள். தமிழ்மொழிக்கே உரித்தான பொருள் பொதிந்த சொற்கள். தொல்காப்பியர் சொல்வார் ‘எல்லாச் சொல்லும் பொருள் உடைத்தே” என்று. அதாவது எல்லாச் சொற்களுக்கும் காரண காரிய அடிப்படையில் பொருள் இருக்கும். தமிழில் மரு என்றால் நெருங்கிய என்று பொருள். மருமகன் என்றால் நெருங்கிய மகன் என்று பொருள். ஆங்கில மொழியில் இப்படியான பொருள் தரும் சொற்கள் இல்லை. சன் இன் லோ டோட்டரின் லோ என்ற சொற்கள்தான் உண்டு.
சங்க காலத் தமிழர் திருமணம்
சங்க காலத் தமிழர்களது திருமணம் எளிமையாகவும், பகுத்தறிவுக்கு ஒவ்வாத சடங்குகள் அற்றதாகவும் இருந்தது. தீ வலம் இல்லை. அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக புரோகிதரும் வடமொழிக் கூச்சலும் இல்லவே இல்லை.
அகநானூற்றில் காணப்படும் இரண்டு பாடல்கள்கள் (86, 136) பழந்தமிழரின் திருமணமுறையை வர்ணிக்கின்றன. அவற்றுள் ஒன்று (86) மைப்பு அறப் புழுக்கு நெய்க்களி வெண் சோறு எனத் தொடங்கும் நல்லாவூர் கிழார் என்ற செந்தமிழ்ப் புலவர் பாடிய பாடல். பிரிந்து வந்த தலைமகனைத் தோழி வாயிலில் வழி மறித்த போது பண்டு நிகழ்ந்த தனது திருமணநாள் நிகழ்ச்சியை தலைவன் தோழிக்கு எடுத்துச் சொல்கிறான்.
‘எங்கள் திருமணநாளன்று உழுந்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த, பக்குவமாகக் குழைந்த பொங்கலோடு, மலைபோல் குவிந்த பெருஞ் சோற்றினை உண்பவர்கள் கூட்டம் நிறைந்திருந்தது.
வரிசையாக கால்களை நட்டுக் குளிர்ந்த மணப் பந்தல் முழுதும் வெளியிலிருந்து கொண்டுவந்த வெண்மணல் பரப்பப் பட்டிருந்தது.
மனையில் விளக்கு ஏற்றி மலர் மாலைகளை பந்தல் முழுதும் நெருக்கமாகத் தொங்க விட்டு மிகஅழகாக அலங்கரித்துள்ளார்கள். திருமண வீட்டில் மனைவிளக்குகளை ஏற்றி வைத்து ஒளிபெறச் செய்துள்ளார்கள்.
புகழினையுடைய திங்களுடன் கூடிய உரோகிணி நன்னாள் குற்றமற்றதும் வாழ்விற்கு நல்லது பயக்கும் அடர்ந்த இருள் நீங்கி, விடியல் தொடங்கும் வனப்பு மிகு நேரத்தில் திருமண விழா தொடங்குகிறது.
தலையில் நன்நீர்க் குடத்தினைத் தாங்கியும், கையில் அகன்ற பாத்திரத்தை ஏந்திக் கொண்டும், திருமணத்தை செய்து வைக்கும், கலகலப்புடன் கூடிய முதிய மங்கல வாழ்வரசியர் நீர்க் குடங்களை முன்னேயும் பின்னேயும் முறைமுறையாகத் தந்திட மணமகளை நன் நீராட்டினர்.
நல்ல மக்களைப் பெற்று அடி வயிற்றில் வரி வரியாகத் தழும்புகள் கொண்ட மணிவயிறு வாய்ந்த மங்கல மகளிர் நால்வர் தூய ஆடைகளையும் அணிகளையும் அணிந்து கூடிநின்ற மணமகளிடம் ‘உன்னை அடைந்த கணவனை விரும்பிக் கூடிக் “கற்பு நெறியின்றும் தவறாமல் நல்லறங்களைச் செய்து, கணவன் விரும்பத்தக்க மனைவியாhக அவனை வாழ்நாள் முழுதும் நன்கு பேணிக் காத்து வாழும் எண்ணத்தைக் கைக் கொண்டு வாழ்வாயாக!” என்று நீருடன் குளிர்ந்த இதழ்கள் உள்ள பூக்களையும் புதிய நெல்லையும் தூவி வாழ்த்தியதால் மணமளின் அடர்த்தியான கரிய கூந்தலில் அவை தோற்றமளிக்க, திருமணம் இனிதே நிகழ்கிறது.
அதன்பின் ஆர்வத்துடனும், ஆரவாரத்துடனும் சூழ்ந்த உறவினர் ‘இன்று முதல் நீயும் பெரிய மனைக் கிழத்தி ஆகிவிட்டாய்’ என்று கேலி பேசி மணமகளுக்கு கோடியுடுத்தி மெல்லிய அலங்காரங்களைச் செய்து, வனப்புடன் கூடிய முதலிரவு அறைக்குள் உடன் கூடிய புணர்ச்சிக்குரிய அன்றிரவே அவளை அனுப்பி வைத்தனர். அவ்வறைக்குள் நுழையும் மணமகள் உடுத்திய புதிய புடவைக்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு, தன் இனிய கணவன் இருக்கும் இடம் நோக்கிச் செல்கின்றாள்.
அப்போது அவள் புத்தாடையில் ஒடுங்கி முகம் புதைத்துக் கிடந்தாள். அவளைத் தழுவும் விருப்பத்தோடு முகத்தை மூடிய துணியைச் சற்றே விலக்க அவள் அதற்கு அஞ்சி பெருமூச்சு விட்டாள். நடுங்கி ஒடுங்கினாள். “ஏன் பயந்தனை, உன் மனதில் உள்ளதை உள்ளவாறு என்னிடம் கூறு” என வினாவினேன். அப்போது மானைப்போல் மடமை கொண்டவளும், செருக்கினையுடைய நோக்கினையுடையவளும், குளிர்ந்த கூந்தலையுடையவளும், மாநிறத்தினையுடையவளுமாகிய மணமகள், அகம் மலர்ந்த மகிழ்ச்சியளாய் முகம் தாழ்த்தி என் காதலி மெலிந்த மடல் கொண்ட காதில் அணிந்திருந்த சிவந்த மணிகள் பதித்த அழகிய குழைகள் அசைய விரைந்து வந்து தனக்குரியவனை வணங்கினாள். ஆதலால் அவள் எக்காலத்தும் என்பால் அன்புடையவள். அதனை நீ அறியாய்” என்று தோழியிடம் கூறினான்.
‘We are just friends’
இந்தக் காலத்தில் கணவன் மனைவிக்கு இடையில் உள்ள இணைப்பை வெறுமனே நட்பு என்று கூறத் தொடங்கியுள்ளார்கள். குறிப்பாக மேற்குலக பண்பாட்டில் இந்தக் கருத்தியல் வளர்ந்து வருகிறது. ஆணும் பெண்ணும் திருமணம் செய்யாமலே நாங்கள் நண்பர்கள் ‘றுந யசந தரளவ கசநைனௌ’ என்று சொல்லிக் கொண்டு ஒன்றாக வாழ்கிறார்கள். இந்தக் கலாச்சாரம் மௌ;ள மௌ;ள தமிழ்க் கலாச்சாரத்துக்குள்ளும் ஊடுருவும் அபாயம் இருக்கிறது. இதனை நாம் தவிர்க்க வேண்டும்.
கணவன் மனைவிக்கு இடையில் உள்ள உறவு வெறுமனே நட்புத்தானா? அல்லது காதல் என்பது வெறும் உடற் காமம் மட்டுமா? இல்லை. இவை அதனையும் கடந்து நிற்பது, மனத்தளவில் உயர்ந்து நிற்பது. தெய்வீகமானது.
வள்ளுவர் கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் உறவு எத்தகையது என்பதனை மிக அழகாக காமத்துப் பாலில் சொல்லியிருக்கிறார். காமம் என்றவுடன் யாரும் முகத்தை சுழிக்கத் தேவையில்லை. வள்ளுவர் காமம் என்ற சொல்லை காதல் என்ற பொருளில்தான் கையாண்டு இருக்கிறார். இன்று காமம் என்ற சொல் மிகு காதல் அல்லது பொருந்தாக் காதலைக் குறிக்கும் சொல்லாகி விட்டது.
உடம்பொடு உயிரிடை என்ன மற்றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு. (குறள் 1122)
உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு எத்தன்மையானவோ, அத்தன்மையனவே இப் பெண்ணோடு எமக்கு உள்ள நட்பாகும் என்பது இதன் பொருளாகும்.
குறுந்தொகை
குறுந்தொகையில் ஒரு பாடல் தலைவன் தலைவிக்கு இடையில் இருக்கும் அல்லது இருக்க வேண்டிய அன்பைப்பற்றிப் பேசுகிறது. அந்தப் பாடல் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த பாடல். திரைப்படப் பாடல் ஆகவும் வந்திருக்கிறது.
யாயும் ஞாயும் யாரா கியரோ!
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்!
யானும் நீயும் எவ்வழி அறிதும்!
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே (குறுந்தொகை – பாடல் 40)
இந்தப் பாடலைப் பாடிய புலவர் பெயர் செம்புலப் பெயல் நீரார். இது அவரது இயற்பெயரல்ல. காரணப் பெயர். பாட்டெழுதிய புலவரது இயற்பெயர் தெரியாதவிடத்து அவர் பாடிய பாடலில் வருகிற பாட்டின் அடி அல்லது உவமை ஒன்றினால் அவர் அழைக்கப்படுவது மரபு. தலைவனும் தலைவியும் சந்தித்துக் கூடிய பின்னர், இவன் தம்மைப் பிரிவானோ என்று எண்ணி ஏங்குகிறாள் தலைவி. அவள் உள்ளக் குறிப்பை உணர்ந்த தலைவன் அவளுக்கு “செந்நிலத்திலே பெய்த மழைத் தண்ணீர் எப்படி அதனோடு கலந்து விட்டதோ அந்தத் தண்ணீரைப் போல அன்பு நிறைந்த நம் உள்ளங்கள் இரண்டும் தாமாகவே கலந்து விட்டன. ஆதலால் இனிப் பிரிய மாட்டோம்” என உறுதி மொழி பகர்கிறான்.
திணைவகையால் இது குறிஞ்சித்திணை. குறுந்தொகைப் பாடல்கள் நாநூறிலும் இது ஒரு ஒளி விளக்கு. பண்டைத் தமிழரின் நாகரிகச் சிறப்புக்குப் கட்டியம் கூறும் பாடல்.பதவுரை:
யாயும் – என்னுடைய தாயும்.
ஞாயும் – உன்னுடைய தாயும்
யார் ஆகியர் – எந்த வகையில் உறவினர் ஆவார்.
எந்தையும் – என்னுடைய தந்தையும்.
நுந்தையும் – உன்னுடைய தந்தையும்.
எம் முறை கேளிர் – எந்த முறையிலே உறவினர்.
யானும் நீயும் – இப்பொழுது ஒன்று சேர்ந்திருக்கும் நானும் நீயும்,
எவ்வழி அறிதும் – இதற்கு முன்னர் எந்த இடத்தில் பார்த்துப் பழகி
அறிந்திருக்கிறோம்?
செம்புலம் – செம்மண் நிலம், செம்பாடு.
பெயல்நீர் போல – பெய்த மழைத் தண்ணீரைப் போல.
அன்பு உடை நெஞ்சம் – அன்புள்ள நமது உள்ளம்.
தாம் கலந்தனவே – தாமாக ஒன்றோடு ஒன்று கலந்து விட்டன.
சாதலை நான் அஞ்சவில்லை
நற்றிணையில் ஒரு பாடல். தலைவன் பிரிவால் தலைவி வருந்துகிறாள். நாட்கள் செல்கின்றன. அவளது நீள் இடை மெலிகிறது. அறிவு மயங்குகிறது. கண்ணால் பார்க்கும் காட்சிகள் தெளிவற்றதாக இருக்கின்றன. மாலை வந்தது. காதல் நோய் அதிகரிக்கிறது. ‘நான் என்ன செய்வேன்? சாதலை நான் அஞ்சவில்லை. நான் அஞ்சுவது ஒன்று இருக்கின்றது. அது நான் இறந்தபின் அடுத்த பிறவி ஒன்று இருந்தால் அப்போதும் எனது கணவனையே வரிப்பேனா?’
அன்னாய் வாழி
இன்னொரு பாடல். அய்ங்குறுநூற்றில் உள்ளது. செல்வச் செழிப்போடு வாழ்ந்த தலைவி திருமணமாகி தனது தலைவன் ஊருக்குச் சென்று வாழ்கிறாள். கணவன் வீடு அவள் வாழ்ந்த வீடுபோன்று அதிகம் செழிப்பில்லாதது. அந்த வீட்டின் அருகில் உள்ள குட்டையில் இலைகுழை வீழ்ந்து அழுகி நாற்றமெடுக்கும் சிறு நீர் நிலையுண்டு. அதிலுள்ள நீரை மான்கள் குடித்துவிட்ட நிலையில் எஞ்சியுள்ள நீரையே அவள் உண்கிறாள்.
அப்புறம் ஒருநாள் அவள் தனது சொந்த ஊருக்கு பெற்றோர் உற்றோரைப் பார்க்க வருகிறாள். அவளைக் கண்ட அவளது தோழி, ”உன் தலைவன் ஊரில் குடிப்பதற்குக் கூட நல்ல தண்ணீர் இல்லையாமே! எப்படி சமாளிக்கிறாய்” என்று கேட்கிறாள்.
அதற்கு அவள் சொல்கிறாள். ‘நீ சொல்வது உண்மைதான். ஆனால் எனது தலைவன் வாழும் அந்த ஊர்க் குளத்துத் தண்ணீர் எனக்கு என் தாய் வீட்டில் நான் உண்ட தேன்கலந்த பாலினினும் மிகத் தித்திப்பாக இனிக்கிறது’ என்று சொல்கிறாள்.
அன்னாய் வாழி வேண் டன்னை நம் படப்பை
தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு
உவலைக் கூவற் கீழ
மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே (கபிலர், அய்ங்குறுநூறு 203)
(தோழி கேள். நமது தோட்டத்துத் தேன் கலந்த பாலைவிட இனி தானது அவரது நிலத்தின் வற்றும் நிலையில் இருக்கும் இலைகள் மிதக்கும் நீர் நிலையில் மிருகங்கள் பருகி எஞ்சிய கலங்கல் நீர். உவலை – சருகு, கூவல் – ஒருவகை மரம், கலிழி – கலங்கிய)
மணவாழ்க்கை மாறிவிட்டது
இப்போது வாழ்க்கை முறை மாறிவிட்டது. அதனால் அதற்கு ஏற்றவாறு வாழ நாம் கற்றுக் கொள்ள வேண்டும். முன்னர் கணவன் ஊர்விட்டு ஊர் சென்று பொருள் தேடி வருவான். அதனை வைத்து மனைவி குடும்பம் நடத்துவாள். சமையல் செய்து கணவன் குழந்தைகளுக்குக் சாப்பிடக் கொடுத்து அவர்கள் உண்ட பின்னர் தானும் உண்பாள். அதனால்தான் அவள் இல்லக்கிளத்தி என்று அழைக்கப்பட்டாள். இல்லத்தரசன் என்று கணவன் அழைக்கப்படுவதில்லை.
ஆனால் இன்று கணவன்; – மனைவி இருவரும் வேலைக்குப் போய் பொருள் ஈட்டி வந்து குடும்பம் நடத்த வேண்டிய சமூக சூழ்நிலையில் இருக்கிறார்கள். எனவே சமையல் கலையை கணவனும் கற்றுக் கொள்ள வேண்டும். யார் முதலில் வேலை விட்டு வீட்டுக்கு வருகிறார்களோ அவர்தான் சமைக்க வேண்டும். எனது நண்பர் குணநாதன் வீட்டில் இந்த முறைதான் இருக்கிறது. முழக்கம் ஆசிரியர் திரு வீட்டிலும் அப்படித்தான். அவரது துணைவியார் அன்பரசி தன்னைவிட திரு நன்றாகச் சமைப்பார் என்று வேறு சான்றிதழ் கொடுக்கிறார்.
அறிவுரை
மணமகன் செந்தில் – மணமகள் பரணி உங்கள் இருவருக்கும் நான் சொல்லக் கூடியது உங்கள் மணவாழ்க்கையை திருவள்ளுவர் சொல்லும் அறிவுரைக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் இல்லற வாழ்க்கையின் வெற்றி உங்கள் கையில்தான் இருக்கிறது. நாங்கள் வழிகாட்டலாம், அறிவுரை சொல்லலாம் ஆனால் வாழ்க்கைப் பாதையில் நடக்க வேண்டியவர்கள் நீங்கள் தான். எதையும் பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்காமல், சகித்தன்மையோடு, விட்டுக் கொடுக்கும் தன்மையோடு, அன்போடு வாழ நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
வளைய வேண்டிய நேரத்தில் ஒருவர் கொஞ்சம் வளையவேண்டும் குனிய வேண்டிய நேரத்தில் கொஞ்சம் குனியவேண்டும் விட்டுக்கொடுக்க வேண்டிய நேரத்தில் விட்டுக் கொடுக்கவேண்டும் புரிந்துணர்வோடு அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பழகவேண்டும். நண்பர்களோடு பழகவேண்டும். அவர்கள் தங்களுடைய குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பவர்களாக இருக்கவேண்டும். மனித நேயத்தோடு வாழுங்கள். தொண்டுள்ளத்தோடு வாழுங்கள். தன்னம்பிக்கையோடு வாழுங்கள். அறம்செய்து வாழுங்கள். அறம் எனப் படுவது யாதெனக் கேட்பின் மறவா இது கேள் மன்னுயிர்க்கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டில என மணிமேகலையில் சாத்தனார் கூறுகிறார். உங்கள் இல்லற வாழ்க்கையை நல்லறமாகக் கொண்டு வாழ்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய உண்டு.
வாழ்த்து
முடிவாக நீங்கள் இருவரும் நீலவானும் நிலவும் போல, மலரும் மணமும் போல, தமிழும் சுவையும் போல, நகமும் தசையும் போல, கண்ணும் இமையும் போல, உடலும் உயிரும் போல, வீரனும் போர்வாளும் போல, தலைவர் பிரபாகரனும் புலிப்படையும் போல, தமிழீழமும் தமிழகமும் போல, வள்ளுவனும் வாசுகியும் போல இன்று போல் என்றும் அகிலமதில் நோயின்மை, கல்வி, பொருள், அழகு, புகழ், பெருமை, இளமை, அறிவு, மகப்பேறு, வலிமை, துணிவு, வாழ்நாள் வெற்றி, நல்லூழ் என அனைத்துச் செல்வங்களும் பெற்று இனிது வாழ்க வாழ்க என வாழ்த்தி எனது உரையை முடித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.
Leave a Reply
You must be logged in to post a comment.