தமிழர்களது பூர்வீக நிலங்களில் விகாரைகள் முளைப்பதைத்  தடுக்க  நிரந்தரத் தீர்வொன்றைப் பெறுவதற்கான காலம் நெருங்கியுள்ளது! நக்கீரன்

தமிழர்களது பூர்வீக நிலங்களில் விகாரைகள் முளைப்பதைத்  தடுக்க  நிரந்தரத் தீர்வொன்றைப் பெறுவதற்கான காலம் நெருங்கியுள்ளது!

நக்கீரன்

கன்னியா வெந்நீரூற்று பகுதி தொடர்பாக சனாதிபதி சிறிசேனாவுடன் ஒரு சந்திப்பை மிகக் குறுகிய கால அவகாசத்தில்  அமைச்சர் மனோ கணேசன் கூட்டியிருந்தார். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நா.உறுப்பினிர்கள் கலந்து கொள்ளவில்லை. இதை வைத்து ததேகூ திட்டித் தீர்க்கிற ஊடகங்கள் “பார், பார்  சனாதிபதி சிறிசேனாவைச் சந்திப்பதற்குக் கூட்டப்பட்ட  கூட்டத்தை ததேகூ புறக்கணித்து விட்டது என வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார். அதற்கான காரணத்தை  கூழுக்குப் பாடும் ஒரு ஊடகவியலாளர் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்.  கன்னியாச் சிக்கலை மனோ கணேசனும்  மைத்திரி சிறிசேனவும் தீர்த்து வைத்தால்  அந்தப் புகழ் மனோ கணேசனைச் சார்ந்துவிடும் என்ற அழுக்காறு காரணமாகவே  ததேகூ அவர் கூட்டிய கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டதாம்.  இது அந்த ஊடகவியலாளரது அற்ப புத்தியைத்தான் காட்டுகிறது.  யார் குத்தினாலும் நெல் அரிசியாக  மாறினால் சரி என நினைப்பவர்கள் ததேகூ  இன்  தலைவர்கள்.

இந்த சந்திப்புப்பற்றி கடந்த  யூலை 17 (புதன்கிழமை) இரவு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மனோ கணேசனால் அறிவிக்கப்பட்டது. எனினும் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எந்தவொரு தரப்பினரும் கூட்டத்துக்கு நேரடியாக  அழைப்பு விடுக்கவில்லை. அதன் காரணமாகவே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் சனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இப்போது அமைச்சர் மனோ கணேசன் அவசரமாகக் கூட்டிய கூட்டத்துக்கு சம்பந்தன் ஐயாவுக்கு  அழைப்பு விடுவிக்கப் படவில்லை என்பதை அமைச்சர் மனோ கணேசன் ஒப்புக் கொண்டுள்ளார். சனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குத் தான் நேரடியாக அழைப்பு விடுக்கவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தான் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு சனாதிபதியுடனான சந்திப்பு குறித்து தெரியப்படுத்தவில்லை என்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு அறிவித்ததாகவும் தெரிவித்துள்ளார். அத்தோடு, அதை அந்தக் கட்சியின் உத்தியோகபூர்வ அழைப்பாக எடுத்துக்கொள்வார்கள் என்று தான் நினைத்ததாகவும் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் மனோ கணேசன் அவசரமாகக் கூட்டிய கூட்டத்தில் ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாவிட்டாலும் அதுபற்றிய ஒரு முடிவை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா எட்டியிருக்கலாம். ஆனால் ஒரு முடிவும் இல்லாமல் கூட்டம் கலைந்துள்ளது. இதுவொரு கண்துடைப்புக்காக கூடிக் கலைந்துள்ளார்கள் போல் தெரிகிறது.

இப்போது மனோ கணேசன்   இனிமேல் தான் வட கிழக்குச் சிக்கல்களில் ஈடுபடப் போவதில்லை எனத் திருவாய் மலர்ந்துள்ளார். கன்னியா சிக்கல் சமயம் சார்ந்தது. கன்னியா இந்துக்களால் இதிகாச காலம்தொட்டு  ஒரு புனித  பூமியாகப் கருதப்பட்டு வந்துள்ளது. அதனை இன்று சிங்கள- பவுத்த மேலாண்மை சிந்தனையாளர்கள் கைப்பற்றப்  பார்க்கிறார்கள். பவுத்த  தேரர்கள் அதனை பவுத்த மயமாக்கப் பாடுபடுகிறார்கள்.

மனோ கணேசன் இந்து சமய விவகார அமைச்சர் என்ற தோரணையில் வேறு யாரையும் விட  கன்னியாவை  சிங்கள – பவுத்த  மேலாண்மையில் இருந்து  காப்பாற்றுகிற பொறுப்பு  மனோ கணேசனது தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது. அதனை அவர் தட்டிக் கழிக்க முடியாது.  அவர்  வட இலங்கைக்கு மட்டுமல்ல முழு இலங்கைக்கும் அமைச்சராவர். இந்து சமய விவகார அமைச்சுப் பொறுப்பும் அவரிடம்தான் உண்டு.

இந்துக்களுக்கு புனிதமான கன்னியா வெந்நீரூற்றுப் பகுதி திருகோணமலை பட்டினமும் சூழலும்  பிரதேச சபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். அங்கு காணப்பட்ட பழைய அறிவிப்புப் பலகையை அகற்றிவிட்டு புதிதாக ஒரு அறிவிப்புப் பலகை நாட்டப்பட்டது.  திருகோணமலை மாவட்டத்திலுள்ள 13 உள்ளூராட்சி சபைகளில் திருகோணமலைப் பட்டினமும் சூழலும் ஒன்றாகும். 

இதனைக் கேள்விப்பட்ட திருகோணமலை அரசாங்க அதிபராக இருந்த  முன்னாள் கடற்படை அதிகாரி ஆர்.ரி.டி சில்வா என்பவர்  அந்தப் பகுதிக்குச் சென்று அந்த அறிவிப்புப் பலகையை ஒரே நாளில் (ஒக்தோபர் 5, 2010) புடுங்கி எறிந்து விட்டு  அந்தப் பகுதி தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்மானது என அறிவித்தார்.  அந்தப் பெயர்ப்பலகை பொதுமக்களுக்குத்  தவறான வரலாற்றுத் தகவலைக் கொடுப்பதாக அரசாங்க அதிபர் கூறினார்.  அவர்  வெந்நீரூற்றுக்கு வருபவர்களிடம் பிரதேச சபை பணம்  அறவிடுவதை தடை செய்தார். அதற்கான கட்டளையையும் பிறப்பித்தார்.

இது தொடர்பாக பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முயன்ற போது அரசாங்க அதிபருக்கு  எதிராக முறைப்பாடு செய்ய முடியாது என்று  சொல்லி பொலீஸ் அவர்களை விரட்டிவிட்டது. அந்தக் காலப்பகுதியில்  மகிந்த இராசபக்சா ஆட்சியில் இருந்தார். அவரது காட்டாச்சியில் சட்டத்தின் ஆட்சி முடக்கப்பட்டிருந்தது தெரிந்ததே.

அரசாங்க அதிபர் இரஞ்சித் சில்வாவின் தடாலடி  நடவடிக்கை பவுத்த தேரர்கள் மற்றும் கொழும்பில் உள்ள சிங்கள – பவுத்த இனவாதிகளின் தூண்டுதலின் பேரில் இடம்பெற்றது என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம்.  சிங்கள – பவுத்த இனவாத அமைப்புக்களான  ஜாதிக்க ஹெல உறுமய,  விமல் வீரவன்சாவின் தேதிய சுதந்திர முன்னணி, கலகொட அத்தே ஞானசேரரின் பொதுபல சேனா, இராவண  சேனா இந்துக்களின் வரலாற்றுப் புகழ் வாய்ந்த  இடங்களை அடாத்தாகக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் நீண்டகாலமாக ஈடுபட்டு வருகின்றன. அண்மையில் ஞானசேரதேரர்  இலங்கை சிங்கள – பவுத்தர்களுக்குச் சொந்தமானது என்றும் சிங்கள – பவுத்த இராச்சியம் ஒன்றை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும் தமிழர்கள் அதையிட்டுக் கோபிக்கக் கூடாது என்றும் கண்டியில் நடந்த பொது பல சேனாவின் பொதுக் கூட்டத்தில் கூறியிருந்தது  நினைவு கூரத்தக்கது.கன்னியா பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த பிரதேசத்தில் விகாரை அமைக்க இடைக்காலத் தடை

ஒரு மதத்தின் புனிதத்தன்மையினை மதித்து நடக்கவேண்டியது அனைத்து மதங்களையும் பின்பற்றும் ஒவ்வொருவருவரினதும் கடமையாகும்.அந்தவகையிலே திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிரதேசமானது மிகவும் காலத்தால் முற்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புனித பிரதேசமாகும்.

கன்னியாவில்  இயற்கையாகவே 7 கிணறுகள் உள்ளதுடன், அதில் இருந்து வரும் வெந்நீர் வெவ்வேறான சுடு நிலைகளைக் கொண்டதாகவும்  காணப்படுகிறது. கன்னியா வெந்நீரூற்றுககு அருகில் ஒரு பிள்ளையார் கோவிலும் சிவன் கோவிலும் காணப்பட்டன. தற்போது பிள்ளையார் கோவில் உடைக்கப்பட்டும் சிவன் ஆலயம் பராமரிப்பாரற்றும் காணப்படுகின்றன.

தீவிர பவுத்த தேரர்கள் தலைமை தாங்கும் பொது பல சேனா, சிகல இராவய, இராவண சேனா போன்ற அமைப்புகளுக்கு தென்னிலங்கையில்  மிகக் குறைந்தளவு ஆதரவு இருந்தாலும் அவற்றின் பின்னால் இராசபக்சே குடும்பத்தின் ஆதரவு இருக்கிறது.

பொது பல சேனாவின் காலி மாவட்ட அலுவலகத்தை அன்றைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாய இராசபக்சா மார்ச் 09, 2013 அன்று வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.

காலி தென்மாகாணத்தின் தலைநகராகும். தென் மாகாணம்  இன்று உருகுண எனவும் அழைக்கப்படுகிறது.

பொது பல சேனா பவுத்த மதத்தின் மேலாண்மையை இலங்கையில் நிலைநாட்ட மெத்தவும் பாடுபட்டு வருகிறது. இந்த அமைப்பும் ஏனைய பவுத்த மேலாண்மை சிந்தனையுடைய இயக்கங்களும் சிறிலங்கா முஸ்லிம்கள், அவர்களது மசூதிகள், வாணிகக் கடைகள் ஆகியவற்றுக்கு எதிராக நேரடியாகவும் மறைமுகமாகவும் குறிவைத்துத் தாக்கி வருகின்றன.

பொது பல சேனாவின் நிறுவனர்கள் பவுத்த தேரர்கள் ஆன விமலசோதி மற்றும் கலகொட அத்தே  ஞானசாரர் ஆவர்.

கன்னியா வெந்நீரூற்றுக் கிணறுகளும் அங்கிருந்த பிள்ளையால் கோயிலும் திருகோணமலை மடத்தடி முத்துமாரியம்மன் கோயில் நிருவாகத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெந்நீரூற்றுக் கிணறுகள் இலங்கை மன்னன் இராவணன் காலத்தில் இருந்து இந்துக்கள் இறந்தவர்களுக்கு பிதிர்க் கடன் செய்யப் பயன்பட்டு வந்திருக்கிறது. இராவணன் தனது தாய்க்கு இறுதிக்கிரியைகள் செய்வதற்காக தனது உடைவாளை உருவி ஏழு இடங்களில் குத்தியதாக ஐதீக, புராணக் கதைகள் மற்றும் செவி வழிக்கதைகள் உள்ளன.

மறுமுனையில் திரிபுபடுத்தப்பட்ட பௌத்த வரலாறுகளை இதனுடன் தொடர்பு படுத்தி அரசியல் மயமாக்கல் இடம்பெற்று வருகின்றது. தொல்துறைத் திணைக்களத்தில்   பேரால் அரசு அதனை கைப்பற்றி வைத்திருக்கிறது.

கன்னியா மட்டுமல்ல வட கிழக்கு மற்றும் மலையகத்தில் காணப்படும் இந்துக் கோயில்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றன. அதோடு நின்றுவிடாமல் இந்துக் கோயில்களை அகற்றிவிட்டு அந்த இடங்களில் விகாரைகள் கட்டும் திருப்பணிகளும் முடுக்கி விடப்படுகின்றன.

மலைநாட்டில் கந்தப்பளை – கோட்லோஜ் தோட்டத்தில் அமைந்துள்ள முனி கோவிலில் பெளத்த கொடியை அங்குள்ள விகாராதிபதி ஏற்றியுள்ளார்.  சட்டத்தைக் கையில் எடுக்கும் விகாராதிபதி மீது சட்டம் பாய்ந்ததாகச் செய்தியில்லை.

முல்லைத்தீவில் அமைந்துள்ள நீராவியடிப் பிள்ளையார் கோயிலில் புனருத்தாரணம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அங்கு ஒரு பெளத்த விகாரையைக் கட்ட எத்தனிப்புக்கள் இடம் பெறுகின்றன. இந்த மாதத் தொடக்கத்தில் (யூலை 05) அன்று  முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாத்தாக விகாரை அமைத்துள்ள பவுத்த  தேரரின் ஏவலால்  நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் நந்திக் கொடிகளை காடையர்கள் அறுத்தெறிந்துள்ளனர்.

முல்லைத்தீவு – நீராவியடிப் பிள்ளையார்  கோயிலிலுள்ள  நந்திக் கொடிகள் அறுத்தெறியப்பட்டன.

வவுனியாவில் வெடுக்குநாரி மலையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த சிவன்கோயிலை புனருத்தாரணம் செய்து மக்கள் வழிபடுவதற்கு அனுமதிக்காமல் விகாரை கட்ட  முயற்சிகள் நடைபெறுகின்றன.

இதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் அரச நிதியில் ஒரு கோடி ரூபாவிற்கு மேற்பட்ட பண ஒதுக்கிட்டில் ஒரு ஏக்கர் காணியில் பெரியளவிலான விகாரை ஒன்றை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதாக அறியமுடிகின்றது. à®¯à®¾à®´à¯. நாவற்குழியில் சமித்தி சுமண விகாரை திறப்பு-Jaffna Navatkuli Sammidhi Sumana Vihara Opening

இராணுவம் உட்பட முப்படைகளின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணம், நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில், யாழ்ப்பாண நகரின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள சிங்கள குடியேற்றத்திற்கு அருகில் கட்டப்பட்ட மிகப்பெரிய விகாரையான சமித்தி சுமண விகாரை யூலை 13, 2019  அன்று  திறந்து வைக்கப்பட்டது. இராணுவம் உட்பட முப்படைகளின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணம், நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில், யாழ்ப்பாண நகரின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள சிங்கள குடியேற்றத்திற்கு அருகில் கட்டப்பட்ட மிகப்பெரிய விகாரையான சமித்தி சுமண விகாரை  யூலை 13, 2019 அன்று திறந்து வைக்கப்பட்டது. விகாரைக்கான புனித தாது குருணாகல் நெவகட செல்கிரி விகாரையில் இருந்து எடுத்து வரப்பட்டது.

நாவற்குழியாழ். நாவற்குழியில் சமித்தி சுமண விகாரை திறப்பு-Jaffna Navatkuli Sammidhi Sumana Vihara Opening சந்தியில் இருந்து, விகாரைக்கான புனித தாது மற்றும், பௌத்த மத அனுஷ்டான முறைப்படி, தீப் பந்தம், பௌத்த கொடி, ஆலவட்டங்களுடன், பிக்குகளின் தலைமையில் புனித தாது, விகாரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

வடக்கில் யாழ்ப்பாண மாவடத்தில் 06 பவுத்த விகாரைகள்இ கிளிநொச்சி மாவட்டத்தில் 03 விகாரைகள், மன்னார் மாவட்டத்தில் 20 விகாரைகள், வன்னி மாவட்டத்தில் 35 விகாரைகள், முல்லைத்தீவு மாவட்டத்தில் 67 விகாரைகள் என மொத்தம் 131 விகாரைகள்  வடக்கில்  உள்ளதாகவும் அல்லது இருந்ததாகவும்  தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கில் 131 விகாரைகள் என்றால் கிழக்கில் 1,000 விகாரைகளை தொல்பொருள் திணைக்களம் அடையாளம் கண்டுள்ளது. அந்த இடங்களை அளக்கும் பணி மும்மரமாக நடக்கிறது.யாழ். நாவற்குழியில் சமித்தி சுமண விகாரை திறப்பு-Jaffna Navatkuli Sammidhi Sumana Vihara Opening

வட கிழக்கில் பவுத்த மத எச்சங்கள் காணப்படுவது உண்மை. ஆனால் அவை சிங்கள மன்னர்களால் கட்டப்பட்ட விகாரைகள் அல்ல.  அவை பவுத்த சமய தமிழர்களுக்கு தமிழ் மன்னர்கள் கட்டிக் கொடுத்த விகாரைகள். எடுத்துக்காட்டாக முதலாம் இராசராச சோழன் (கிபி 985-1014)    திரியாயில்  இராசராச பெரும்பள்ளி என்ற பவுத்த விகாரையை நிறுவினான். அது இன்று வெல்கம் விகாரை என அழைக்கப்படுகிறது.

தமிழர்களில் பெரும்பாலோர் கிபி இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி ஒன்பதாம் நூற்றாண்டுவரை சமணம், பவுத்தம்  என இரண்டு சமயங்களையும் தழுவி இருந்தனர். ஐம்பெரும் காப்பியங்களில் மணிமேகலை மற்றும்  குண்டலகேசி பவுத்த காப்பியங்களாகும்.

முல்லைத்தீவில் போர் காரணமாக தமிழ் மக்கள் இடம்பெயருமட்டும் அங்கு ஒரு விகாரை  கூட இருந்ததில்லை. இப்போது விகாரைகள் புற்றீசல் போல் பவுத்தர்கள் இல்லாத இடத்தில்  தொடங்கப்படுகின்றன.  சிறிது காலத்துக்கு முன்னர் வவுனியாவுக்கு வருகை தந்த இரணில் விக்கிரமசிங்க வட க்கில் 1,000 விகாரைகள் கட்டப்படும் எனப் பகிரங்கமாக அறிவித்தார்.யாழ். நாவற்குழியில் சமித்தி சுமண விகாரை திறப்பு-Jaffna Navatkuli Sammidhi Sumana Vihara Opening

வடக்கை ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவம்  முகாம்களுக்கு  உள்ளேயும் வெளியேயும் விகாரைகள் அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த இராணுவத்தில் இருப்பவர்களளளில்  99 விழுக்காடு சிங்கள பவுத்தர்கள் என இராணுவ தளபதி மமேஷ்  சேனநாயக்கா மார் தட்டுகிறார். வட – கிழக்கை பவுத்த மயமாக்குவதில்   கல்கொட அத்த ஞானசேரரை விட  சிங்கள – பவுத்த இராணுவம் அதிக தீவிரம் காட்டுகிறது.

குறித்த குடியேற்றத்தில் தோராயமாக  9 சிங்கள குடும்பங்களே வாழ்வதாக குறித்த பகுதியின் கட்டுப்பாட்டிலுள்ள தென்மராட்சி பிரதேச சபையின் தலைவர் வாமதேவன் கந்தையா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள குடியேற்றத்தில் இராணுவத்தினால் 28 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அதில் அண்ணளவாக  20 பயன்பெறும் குடும்பங்கள் அங்கு தங்கியிருப்பதில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது கன்னியா, வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோயில் விவகாரம் தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது என்ற செய்தி வந்துள்ளது.          கன்னியா, வெந்நீரூற்று பகுதியில் அத்துமீறி நுழைந்து சில அடாவடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கோகில ரமணி எனும் பெண் எழுத்தாணை விண்ணப்பமொன்றை தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு திருகோணமலை மாவட்ட செயலாளர், கொழும்பு தொல்பொருள் திணைக்களம் பணிப்பாளர் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கு இன்றைய நாள்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது முறைப்பாட்டாளர்  தரப்பில் சட்டதரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டதரணி கேசவன் சயந்தன் ஆகியோர் முறைப்பாட்டாளர் சார்பில் தோன்றியிருந்தனர். (https://youtu.be/9btDQlw7jsc?t=3)

அவர்களது வாதத்தை அடுத்து வெந்நீரூற்று பகுதிக்கு அருகாமையில் பிள்ளையார் கோயில் இருந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதேவேளை, முறைப்பாட்டளரையோ அல்லது மற்றைய பக்தர்களையோ கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோயிலுக்கு அல்லது அதனை அண்மித்த பகுதிக்கோ செல்ல தடுக்கக் கூடாது எனவும், அப்பகுதியில் பற்றுச் சீட்டுக்கள் அதாவது அனுமதிச் சீட்டுக்கள் விற்பதை தடை செய்யுமாறும் எதிர்மனுதாரர்கள் மாரியம்மன் கோயிலுக்கு உரித்தான ஆதனங்களை நிர்வகிப்பதை தடுக்கக் கூடாது எனவும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று இடைக்கால தடை உத்தரவினை விதித்துள்ளார்.

இது நல்ல செய்திதான் ஆனால் நீதிமன்றங்களை அணுகினால்தான் நீதி கிடைக்கும் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. அதை ஏற்றுக் கொண்டால் சுமந்திரன் நீதிமன்ற வாசல்களில் நிரந்த முகாம் அமைக்க வேண்டி வரும்.(https://youtu.be/9btDQlw7jsc?t=14)

வரலாற்றுக் காலம் தொட்டு தமிழர்களுக்கு சொந்தமான நிலத்தில் தொல்பொருள் தடயங்கள் இருக்கின்றன என்ற சாட்டில் சைவக் கோயில்களை அகற்றி அவ்விடத்தில் விகாரைகள் அமைப்பதை அரசாங்கம் நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும். சைவக் கோயில்கள் இல்லாத இடங்களிலும் விகாரைகள் முளைக்கின்றன.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இல்லாத அதிகாரம் மஞ்சள் சீருடை அணிந்த பவுத்த தேரருக்கு இருக்கிறது. இந்தத் தேரர்களின் முதுகில் வட – கிழக்கில் 1,000 விகாரைகள் கட்டப்படும் என நாட்டின் பிரதமரே தட்டிக் கொடுக்கிறார். சும்மாவே சாமி ஆடுபவனுக்கு சாம்பிராணி காட்டினால்  எப்படி இருக்கும்?

பிரதமர் இரணில் விக்கிரமசிங்கி  ததேகூ இன் ஆதரவு  தனது ஆட்சிக்கு நிரந்தரமாக இருக்கும் என எடுத்துக் கொள்வது  (taking for granted) போல் தெரிகிறது. போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதாரத்தை நிமிர்த்த,  அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க பொருளாதார மேம்பாடு அத்தியாவசியம் என்பது சரியே. ஆனால் அதற்காக தமிழ்மக்களின் பூர்வீக நிலங்களில்  விகாரைகள் ஈசல் போல் முளைப்பதை அனுமதிக்க முடியாது. இந்தச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வொன்றைப் பெறுவதற்கான காலம் நெருங்கியுள்ளது.

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply