தமிழகம் என்ன சொல்கிறது?

தமிழகம் என்ன சொல்கிறது?
சுகுணா திவாகர்சுகுணா திவாகர்

‘தமிழகம் எப்போதுமே தனித்துவமான மாநிலம்’ என்பதைத் தேர்தல் முடிவுகள் நிரூபித்திருக்கின்றன. ஒட்டுமொத்த இந்தியாவும் மோடியின் பக்கம் சாய, தமிழகமோ எதிர்த்திசையில் நின்று குரலெழுப்பியிருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் மோடி ஆட்சிக்கு எதிரான மனநிலை தமிழகத்தை முழுவதுமாக ஆக்கிரமித்தது. நீட், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மட்டுமல்லாமல், உத்தரப்பிரதேசத்தில் மாட்டுக்கறிக்காக அக்லக் கொல்லப்பட்டாலும், காஷ்மீரில் ஆசிபா என்ற சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டாலும் அவற்றுக்கு எதிர்க்குரலை, தமிழகம் பதிவுசெய்தது. இதுவரை சமூக வலைதளங்களில் ‘கோ பேக் மோடி’ சொல்லி, சர்வதேச டிரெண்டு ஆக்கிய தமிழர்கள் தங்கள் வாக்குகள் மூலம் ‘கோ பேக் மோடி’ சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவோ, ‘கம் பேக் மோடி’ சொல்லியிருக்கிறது.

எப்படியிருந்தபோதும் இந்த வெற்றிக்குத் தி.மு.க தலைவர் ஸ்டாலினின் உழைப்பு முக்கியமானது. இந்தியா முழுவதும் மாயாவதி, மம்தா, கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆளுக்கொரு திசையில் திரும்பிக்கொண்டபோது, தமிழகத்தில் மட்டும்தான் தேர்தலுக்கு முன்பிருந்தே எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணியை அமைத்தார் ஸ்டாலின். அதேபோல் மோடிக்கும் இந்துத்துவத்துக்கும் எதிராகத் தொடர்ந்து ஒலித்த குரல் அவருடையது. ‘என்னதான் இருந்தாலும் கருணாநிதி அளவுக்குத் திறமையில்லை’, ‘கருணாநிதியின் இடத்தை ஸ்டாலினால் நிரப்ப முடியாது’ என்ற வாதங்களை முறியடித்து, தமிழக அரசியலில் தனக்கான இடத்தை நிறுவியிருக்கிறார் ஸ்டாலின். ஆனால், ‘ஆபரேஷன் சக்சஸ்; பேஷன்ட் இறந்துவிட்டார்’ என்பதைப்போல் நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி, இடைத் தேர்தலில் கணிசமான வெற்றி பெற்றபோதும் ஸ்டாலினால் எடப்பாடி அரசை வீழ்த்த முடியவில்லை.

இன்னும் இரண்டாண்டு காலம் அவர் காத்திருக்கத்தான் வேண்டும்.

ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டாலும் இது அ.தி.மு.க-வுக்கு அசிங்கமான தோல்வி.

ஜெயலலிதா இறந்த இரண்டாண்டுகளில் அ.தி.மு.க-வில் நடந்தவை எல்லாமே அரசியல் நாகரிகத்துக்கு அப்பாற்பட்டவை. பன்னீர்செல்வத்தின் தர்மயுத்த நாடகம், ‘அமைதிப்படை’ அமாவாசையாக சசிகலா காலில் விழுந்து முதல்வரான எடப்பாடி, தினகரனையும் சசிகலாவையும் ஓரங்கட்டியது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, கருத்துச் சுதந்திர மறுப்பு, தாங்கள் ஒரு திராவிடக் கட்சி என்பதையே மறந்து, ‘கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும்’ என்று ராஜேந்திர பாலாஜி போன்ற அமைச்சர்கள் காக்கி டிரவுசர் மாட்டியது, ‘அம்மா இட்லியும் சாப்பிடவில்லை; சட்னியும் சாப்பிடவில்லை’ என்று ஒவ்வொரு அமைச்சரும் உளறுவதில் போட்டிபோட்டது, குட்கா ஊழல், ஒப்பந்தப் பணிகளில் ஊழல், அடுக்கடுக்கான ரெய்டுகள்… என்று பட்டியல் போட்டால் பக்கங்கள் நீளும். அரசு எந்திரத்தை முடுக்கிவிட்டும், பணத்தை வாரியிறைத்தும், தேர்தல் ஆணையம் வளைந்து கொடுத்தும், வலுவான கூட்டணி அமைத்தும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில்தான் அ.தி.மு.க வெற்றிபெற்றிருக்கிறது. இடைத்தேர்தலில் ஒன்பது தொகுதிகளில் வெற்றிபெற்று பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொண்டாலும் அ.தி.மு.க தான் வென்ற 12 தொகுதிகளை தி.மு.க-விடம் இழந்திருக்கிறது என்பது எடப்பாடி அரசின் தார்மிகத் தோல்விதான்.

அ.தி.மு.க-வுக்கு அரசியல் தோல்வி என்றால், பா.ஜ.க சித்தாந்தரீதியாகவும் தமிழகத்தில் தோற்றிருக்கிறது. ஜெயலலிதா இறந்த மறுநாளிலிருந்து காய் நகர்த்தி, தமிழகத்தில் காலூன்றத் திட்டமிட்டது பா.ஜ.க.
ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம், தினகரன் வெளியேற்றம், அ.தி.மு.க அணிகள் இணைப்பு எல்லாமே பா.ஜ.க அரசின் திருவிளையாடல்தாம் என்பதைச் சொல்லாமல் சொன்னது, கவர்னர் எடப்பாடியையும் பன்னீர்செல்வத்தையும் பாசத்துடன் கைசேர்த்துவைத்த காட்சி. கருணாநிதி மரணத்துக்குப் பிறகு, ‘தமிழகத்தைத் தங்கள் பிடிக்குள் கொண்டுவருவது இன்னும் சுலபம்’ என்று நினைத்தது பா.ஜ.க.

அ.தி.மு.க அரசு தங்களுக்கு எதிராகப் பேசியவர்களை மட்டுமல்ல, பா.ஜ.க-வை விமர்சித்தவர்களையும் உள்ளே தள்ளியது. பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ஆணவத்தின் உச்சிக்கே போய் நாலாந்தரப் பேச்சாளராக நாலாபுறமும் சேற்றை வாரி வீசினார். எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகை யாளர்கள் குறித்து அவதூறாக எழுதினார். தமிழிசைக்கு எதிராக முழக்கமிட்ட சோபியாவின் மீது வழக்குப் பதிந்த தமிழக அரசு, ஹெச்.ராஜாவையும் எஸ்.வி.சேகரையும் பிடிக்க தனிப்படை அமைத்து கடைசிவரை தேடிக்கொண்டேயிருந்தது.

ஒருபுறம், ‘இது பெரியார் மண் அல்ல, பெரியாழ்வார் மண்’ என்று பா.ஜ.க சொல்ல, ‘பெரியார் பூமி… எங்கே காமி’ என்று சீமான் இன்னொருபுறம் சொல்ல, ‘இது பெரியார் மண்தான். இங்கே இந்துத்துவ அரசியலுக்கு இடமில்லை’ என்று முகத்தில் அறைந்து சொல்லியிருக்கிறது தமிழகம். ஒரு பத்திரிகை, ‘பெரியார், பெண் விடுதலை பேசியதுதான் பொள்ளாச்சி சம்பவத்துக்குக் காரணம்’ என்று எழுத, `அதற்கு பதிலடி கொடுக்கிறேன்’ என்ற பெயரில் இந்துக் கடவுள் கிருஷ்ணன் குறித்து கி.வீரமணி சர்ச்சைக்குரிய வகையில் பேச, அதைக் கையிலெடுத்துக்கொண்ட பா.ஜ.க., ‘இந்து விரோதிகளுக்கா உங்கள் வாக்கு?’ என்று சமூக வலைதளங்களில் பரப்புரை செய்தது. ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து’ என்று கமல்ஹாசன் பேசியதையும் கையிலெடுத்தது பா.ஜ.க. ஆனால், பா.ஜ.க-வின் இந்தப் பிரசாரத்தை முற்றிலுமாகப் புறக்கணித்திருக்கிறார்கள் தமிழர்கள். ‘மத நம்பிக்கை வேறு, மதத்தின் அடிப்படையிலான அரசியல் வேறு’ என்பதுதான் தமிழர்கள் பா.ஜ.க-வுக்குச் சொல்லியிருக்கும் பதில். ‘தங்களால் இப்போதைக்கு தமிழகத்தில் காலூன்ற முடியாது. தங்கள் அரசியலுக்கு எதிரானது தமிழகம்’ என்று புரிந்ததால்தான் ‘இப்படியிருந்தால் எப்படி தமிழகத்துக்கு மத்திய அரசு உதவும்?’ என்று மென்மையாக மிரட்டுகிறார் தமிழிசை. ‘தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டது’ என்று ட்விட்டரில் கிண்டலடிக்கிறார் எஸ்.வி.சேகர்.

தமிழகத்தில் வெற்றி பெற்றாலும், காங்கிரஸின் நிலையும் ஒருவகையில் பரிதாபமானதுதான். ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்று காங்கிரஸை எதிர்த்து முழங்கித்தான் தி.மு.க ஆரம்பிக்கப்பட்டது. இப்போது காங்கிரஸே வடக்கில் தேய்ந்திருக்கிறது; தெற்கில் வாழ்ந்திருக்கிறது. ஒரு தேசியக் கட்சியான காங்கிரஸ், 18 மாநிலங்களில் பூஜ்ஜியம் வாங்கி மாநிலக் கட்சியாகச் சுருங்கிப்போயிருக்கிறது. மோடியின் இந்துத்துவ அரசியலுக்குப் போட்டி என்று நினைத்து ராகுல் ‘நானும் சிவபக்தன்தான்’ என்றார். ‘இதோ பூணூல் போட்டிருக்கிறேன், பாருங்கள்’ என்றார். ஆனால் தமிழகத்திலோ காங்கிரஸ், திராவிட அரசியல் பாணியில் இந்துத்துவ எதிர்ப்பை முன்வைத்தது.
காங்கிரஸைப்போலவே காம்ரேட்களின் நிலைமையும் பரிதாபம்தான். கால் நூற்றாண்டுகாலம் ஆட்சிபுரிந்த மேற்கு வங்கத்திலும் இப்போது ஆண்டுகொண்டிருக்கும் கேரளத்திலும் பரிதாபமாகத் தோற்றிருக்கிறார்கள்

கம்யூனிஸ்ட்டுகள். ஆனால், காங்கிரஸைப்போலவே கம்யூனிஸ்ட்டுகளையும் கரையேற்றியிருக்கிறது தமிழகம். 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடித்தபோது, தேர்தல் முடிவுகள் குறித்து கருணாநிதியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். ‘இது பணநாயகம்’ என்றெல்லாம் அவர் சொல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கருணாநிதி சொன்னார், ‘சுதந்திரத்துக்குப் பிறகு கம்யூனிஸ்ட்டுகளே இல்லாத முதல் சட்டமன்றம் அமையப்போகிறது என்பதை நினைத்தால் கவலையாக இருக்கிறது’ என்று. அப்போது கம்யூனிஸ்ட்டுகள் அவருடன் கூட்டணியிலும் இல்லை. கருணாநிதியின் கவலையை இப்போது, கருணாநிதியால் கம்யூனிஸ்ட் தலைவர் பெயர் சூட்டப்பட்ட ஸ்டாலின் தீர்த்திருக்கிறார். இந்தியாவிலேயே கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிக உறுப்பினர்கள் கிடைத்திருப்பது தமிழகத்தில்தான்.

இழுபறியின் முடிவில், தமிழகத்திலேயே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார் திருமாவளவன். `அவரை தலித் அரசியலுக்கு அப்பாற்பட்ட பொதுத் தலைவராக ஏற்றுக்கொள்ள தமிழக மக்கள் தயாராக இல்லையா அல்லது பேச்சாற்றலும் தலைமைப் பண்பும்கொண்ட ஒரு தலைவர் தாழ்த்தப்பட்டவர் என்பதாலேயே அவரை ஏற்றுக்கொள்ள மறுப்பது சாதிய மனநிலையா?’ என்ற கேள்வி சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது. எப்படியிருந்தபோதும் தனக்கான தனிச் சின்னத்துடன் போராடிக் கிடைத்த வெற்றி, திருமாவளவனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி.

அ.தி.மு.க., பா.ஜ.க-வுக்குக் கிடைத்ததைவிட மோசமான தோல்வி, பாட்டாளி மக்கள் கட்சிக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கும்தான். கடைசிகட்ட சந்தர்ப்பவாதத்துக்கு பலத்த அடி கொடுத்திருக்கிறார்கள் தமிழக மக்கள். கூட்டணி அமைவதற்கு சில மாதங்களுக்கு முன்னர்கூட ‘டயர் நக்கிகள்’, ‘மானங்கெட்டவனுக’ என்றெல்லாம் கடுமையாக விமர்சித்துவிட்டு, யாரை விமர்சித்தார்களோ அதே அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்ததை சாதிய அரசியலைத் தாண்டிய சந்தர்ப்பவாத அரசியலாகவே பார்த்து அன்புமணிக்குத் தோல்வியைப் பரிசளித்திருக்கிறார்கள். உடல்நலம் சரியில்லாத விஜயகாந்தை முன்வைத்து பிரேமலதா அ.தி.மு.க., தி.மு.க என இரண்டு கட்சிகளுடனும் ஒரே நேரத்தில் கூட்டணி பேரம் பேசி அம்பலப்பட்டுப்போனது, பொதுவெளியில் அரசியல் நாகரிகமின்றி பத்திரிகையாளர்களை ஒருமையில் விளித்தது ஆகியவற்றை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் தே.மு.தி.க-வுக்கு ‘முரசு’ அறைந்து சொல்லியிருக்கின்றன.

‘அ.தி.மு.க-வில் எங்களுக்கு ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள்’ என்று தொடர்ந்து சொல்லிவந்தார் தினகரன். தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், ‘அ.ம.மு.க.வில்தான் அ.தி.மு.க ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்களோ?’ என்று தோன்றுகிறது. இடைத் தேர்தலில் ஓரிரு தொகுதிகளையாவது அ.ம.மு.க கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 19 தொகுதிகளில் மூன்றாவது இடத்தையாவது தக்கவைத்துக்கொண்ட அ.ம.மு.க., நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது இடத்தைக்கூட பல தொகுதிகளில் மக்கள் நீதி மய்யத்திடமும், நாம் தமிழர் கட்சியிடமும் பறிகொடுத்தது. இனி தமிழக அரசியலில் அவருக்கான இடம் என்ன என்பதை எதிர்காலம்தான் சொல்ல வேண்டும்.
தொடர்ச்சியாகத் தனித்து நின்று தமக்கான வாக்காளர்களை உருவாக்கிவைத்திருக்கும் நாம் தமிழர் கட்சி, புதிதாகக் களத்துக்கு வந்த கமல்ஹாசனின், மக்கள் நீதி மய்யம் – இரண்டு கட்சிகளுமே தங்களைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன.

நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யத்தைவிட கொஞ்சம் அதிகமாகவே வாக்கு சதவிகிதம் பெற்றாலும் மய்யம், நாம் தமிழரைவிட அதிகமான தொகுதிகளில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் 11 தொகுதிகளில் மய்யம் மூன்றாமிடம். நாம் தமிழரோ ஏழு இடங்களில்தான் மூன்றாமிடம். அதேபோல் இடைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மய்யம் மூன்றாமிடம். நாம் தமிழரோ புதுவையில் நடைபெற்ற இடைத் தேர்தலில்தான் மூன்றாமிடம். தினகரனின் கட்சி அ.தி.மு.க வாக்குகளைப் பிரிக்கும் என்பது எப்படி பொய்ப்பித்துப்போனதோ, அதைப்போல மக்கள் நீதி மய்யமும் நாம் தமிழர் கட்சியும் தி.மு.க கூட்டணியின் வாக்குகளைப் பிரிக்கும் என்பதும் பொய்த்துப்போனது. ஆனால் இரண்டு கழகங்கள், தேசியக் கட்சிகளுக்கு மாற்றுகளைத் தேடும் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பதையே இரண்டு கட்சிகளின் வாக்குகளும் காட்டுகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை நாடாளுமன்றம் மற்றும் இடைத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க., அ.தி.மு.க., தி.மு.க மூன்று கட்சிகளுக்குமே ஒரேவித உணர்வையே தந்திருக்கின்றன, ‘இந்த வெற்றியைக் கொண்டாடுவதா, வேண்டாமா?.’
சுகுணா திவாகர், படம்: க.பாலாஜி

https://www.vikatan.com/anandavikatan/2019-jun-05/politics/151465-discuss-about-parliament-election-in-tamil-nadu.html


About editor 3118 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply