பிரபஞ்சத்தில் அறிந்த உண்மைகளை விட அறியாத இரகசியங்களே மிக அதிகம்

பிரபஞ்சத்தில் அறிந்த உண்மைகளை விட அறியாத இரகசியங்களே மிக அதிகம்

 கிமு  500 இல் ஹெக்காடியஸ் என்ற கிரேக்கர் பூமி ஒரு வட்டம் என்ற கருத்தை முன்வைத்தார். இக்கருத்தினின்று சற்றே மாறுபட்டு கி.மு. 550 இல் அனாக்ஸிமாண்டர் முரண்பாடான பூமி உருளை வடிவமானது என்று கூறினார்.

இது சற்று முரண்பாடான கருத்தாகத் தோன்றியது. காரணம் கிரகணத்தின் போது சந்திரன் மீது விழும் வட்டவடிவ நிழல் பூமியின் நிழலோ என்ற சந்தேகம்தான். பூமி உருண்டை என்று முதன் முதலாக கூறியவர் ஃபைலோலாஸ் என்பவர்தான். கி.மு. 450 இல் அரிஸ்டாட்டில் போன்றவர்கள் இக்கருத்தினை ஆமோதித்து ஏற்றுக்கொண்ட பின்னர் இக்கருத்து இன்றுவரை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் உண்மையாகவே இருந்து வருகிறது.

பூமி உருண்டையின் அளவை கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த எரட்டோஸ்தனிஸ் எளிய முறையில் கண்டுபிடித்தார். ஒரு இடத்தில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக இருக்கும் போது அவ்விடத்திலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் ஒரு குச்சியின் மீது விழும் சூரியக்கதிர்கள் உண்டாக்கும் நிழல் விழும் சாய்வை கணக்கிட்டு பூமியின் சுற்றளவு 2500 மைல். அதன் விட்டம் 8000 மைல் என்றார். இது சற்று ஆச்சர்யமூட்டும் கணக்குதான். இன்றைய கணக்கு பூமத்திய ரேகையில் பூமியின் சுற்றளவு 24902.4 மைல். விட்டம் 7917.48 மைல்.

தன் இருப்பிடத்தை அறிந்து கொண்ட பண்டைய கிரேக்க அறிவியலர்களுக்கு வானில் நட்சத்திர அழகைப் பார்த்து இருப்புக் கொள்ளவில்லை. இரவில் தெரிந்த நட்சத்திரங்கள் பகலில் மறைந்து கண்ணாமூச்சி காட்டின. அவர்களின் மூளையை கிளறியது. வானில் நட்சத்திரங்கள் இடம்பெறவில்லை. ஆனால் பெரிய நட்சத்திரமாக தெரிந்த கோள்கள் இடம்பெயர்ந்து செல்கின்றன என்பது புரியத்தொடங்கியது.

நமக்கு அருகில் உள்ள கோள் சந்திரன் தான். எனவே சந்திரனைச் சுற்றி கிரேக்கர்களின் சிந்தனை சுழலத் தொடங்கியது. அரிஸ்டார்க்கஸ் (கி.மு. 320-250) முதன் முறையாக சந்திரனின் தூரத்தை அளக்க முயற்சி மேற்கொண்டார். கிரகணத்தின் போது சந்திரன் மேல் விழும் பூமியின் நிழல் இவ்வளவு சிறியதாக இருப்பின் அது எவ்வளவு தொலைவில் இருக்க வேண்டும் என்று அதிசயித்தார் அரிஸ்டார்க்கஸ். அவருக்குப் பின் வந்த ஹிப்பார்க்கஸ் (கி.மு. 190-120) என்ற மிகச் சிறந்த கிரேக்க வானியலர் சந்திரனின் தூரத்தை நுட்பமாக கணக்கிட்டு பூமியின் விட்டத்தைப்போல் முப்பது மடங்கு இருக்கலாம் என்றார். சுமார் 24000 மைல் இருக்கலாம் என்று கணக்கிட்டார். (தற்போதைய கணிப்பு 238,854.7 மைல்). பிறகு சந்திரனின் விட்டமும் தெரியவந்தது. சுமார் 2160 மைல்.

முக்கோணவியலில் கிரேக்கர்கள் அபார திறமை படைத்தவர்கள். அரிஸ்டார்க்கஸ், “சந்திரன் முதல் கால் பாகத்தில் இருக்கும் போது பூமி, சூரியன், சந்திரன் மூன்றும் ஒரு நேர்கோண முக்கோணமாக இருக்கிறது. பூமியிலிருந்து சந்திரனின் தொலைவு தெரிந்த ஒன்று. இவற்றிற்கிடையேயான ஒரே ஒரு கோணத்தை கண்டுபிடித்து விட்டால் சூரியனின் தொலைவை கண்டுபிடித்து விட முடியும்” என்று முக்கோணவியல் மூலம் சூரியனின் தொலைவு சுமார் 50 இலட்சம் மைல் என்று தவறாக கணக்கிட்டார். இவருடைய கணக்கீடு பிழையானதுதான். ஆனால் இவர் உபயோகப்படுத்திய முக்கோணவியல் முறை மிகச் சரியான ஒன்று.

இந்திய வானியல் சரித்திரம் தொடங்கியது ஏறத்தாழ இதே காலகட்டத்தில்தான். பண்டைய சமணர்களின் பிரபஞ்சவியல் கருத்துகள் வானியலில் இன்றைக்கும் பொருந்தக்கூடியவை, ‘முடிவிலி’ என்றொரு கருத்தாக்கத்தினை முதன் முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் சமணர்களே. பிரபஞ்சம் ஒரு முடிவிலி என்ற சிந்தனையை இவர்களிடமிருந்துதான் உலகம் அறியத் தொடங்கியது.

சமணர்களின் பிரபஞ்சவியல் கருத்துகளை கவர்ந்தெடுத்துத்தான் பின்னாளில் வந்த ஆரியப்பட்டர் வானியலுக்கு வலுசேர்த்தார். இவருடைய வானியல் சிந்தனை அன்றைய ஆரிய சிந்தனைக்கு மகுடம் சூட்டியது. “துருவராகு, பர்வராகு என்னும் அரக்கர்களின் செயல்களே சந்திரனில் ஏற்படும் மாற்றங்களுக்கு காரணம். துருவராகு சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய் பிறைக்கு காரணம். மேலும் பர்வராகு சந்திரன் அல்லது சூரியனை மறைப்பதால் கிரகணங்கள் ஏற்படுகிறதென்று கூறிய ஆரியப்பட்டரின் பெயரால்தான் நாம் பின்னாளில் விண்கலங்களை ஏவி பெருமைப்பட்டுக் கொண்டோம்.

அதேசமயம் ஆரியப்பட்டர் வானியல் கணக்கீடுகள் செய்வதற்கு உபயோகப்படுத்தியது கிரேக்கர்களின் எபிசைக்கிளிக் (Epicyclic) கோட்டுபாடு” என்பது மறுக்க இயலாத உண்மை. அதேபோல ரோமக சித்தாந்த என்ற நூலை வராமிருகிறர் ரோமர்களின் வானியல் கொள்கைகளை கொண்டு எழுதினார். யவனா ஜாதகா என்ற யவனர்கள் என்றால் கிரேக்கர்கள். கிரேக்கர்களின் படைப்புகளை தழுவி ஸ்புஜிதவாஜா என்ற இந்தியர்எழுதினார். இந்த நூல்களின் கருத்துக்கள் கொண்டு மெல்ல இந்திய வானியல் கொள்கை உருவானது.

இதன் பிறகு சுமார் 1800 வருடங்களுக்கு மேலாக வானியலில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் நிகழ்ந்ததற்கான எவ்வித சான்றும் இல்லை. நவீன வானியல் 1543 இல் கொபர்நிக்கஸ் என்னும் போலந்துகாரரின் புத்தகக் குறிப்பிலிருந்தே தொடங்குகிறது. விண்வெளியின் மையம் பூமியல்ல சூரியன் என்று எழுதியிருந்தார் கொபர்நிக்கஸ்.

சூரியனை கிரகங்களும் பூமியும் வட்டமாக சுற்றி வருகின்றன என்று விண்வெளியின் மையத்தை பூமியிலிருந்து சூரியனுக்கு மாற்றி எழுதினார் நிக்கஸ். இவருக்கு அடுத்து வந்த கெப்ளர் (ஜெர்மனி) 1609 இல் செவ்வாய்க்கிரகத்தை மாதக் கணக்கில் கவனித்து “கிரகங்கள் சூரியனைச் சுற்றுவது வட்டவடிவில் இல்லை. நீள்வட்ட வடிவில்” என்றார். கெப்ளரின் கோள்களில் இயக்க விதி இன்றும் பயன்படக்கூடியது. கெப்ளரின் ஆய்வுகள் கோள்கள் ஒன்றுக்கொன்று எத்தனை மடங்கு தூரத்தில் உள்ளன என்பது நுட்பமாக கண்டுபிடிக்க உதவின. ஆனால் சரியான தொலைவை கண்டறிய இயலவில்லை. இந்தத் தூரங்களை அளக்கத்தான் பின்னாளில் பாரலாக்ஸ் (ஜிarallax) என்கிற முறையை பயன்படுத்தினார்கள்.  

 

இதன் பிறகு சுமார் 1800 வருடங்களுக்கு மேலாக வானியலில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் நிகழ்ந்ததற்கான எவ்வித சான்றும் இல்லை. நவீன வானியல் 1543 இல் கொபர்நிக்கஸ் என்னும் போலந்துகாரரின் புத்தகக் குறிப்பிலிருந்தே தொடங்குகிறது. விண்வெளியின் மையம் பூமியல்ல சூரியன் என்று எழுதியிருந்தார் கொபர்நிக்கஸ்.

சூரியனை கிரகங்களும் பூமியும் வட்டமாக சுற்றி வருகின்றன என்று விண்வெளியின் மையத்தை பூமியிலிருந்து சூரியனுக்கு மாற்றி எழுதினார் நிக்கஸ். இவருக்கு அடுத்து வந்த கெப்ளர் (ஜெர்மனி) 1609 இல் செவ்வாய்க்கிரகத்தை மாதக் கணக்கில் கவனித்து “கிரகங்கள் சூரியனைச் சுற்றுவது வட்டவடிவில் இல்லை. நீள்வட்ட வடிவில்” என்றார். கெப்ளரின் கோள்களில் இயக்க விதி இன்றும் பயன்படக்கூடியது. கெப்ளரின் ஆய்வுகள் கோள்கள் ஒன்றுக்கொன்று எத்தனை மடங்கு தூரத்தில் உள்ளன என்பது நுட்பமாக கண்டுபிடிக்க உதவின. ஆனால் சரியான தொலைவை கண்டறிய இயலவில்லை. இந்தத் தூரங்களை அளக்கத்தான் பின்னாளில் பாரலாக்ஸ் (parallax) என்கிற முறையை பயன்படுத்தினார்கள்.

1608 இல் கலிலியோ டெலஸ்கோப் (தொலைநோக்கி) என்னும் மாபெரும் அற்புதத்தைக் கண்டுபிடித்து நவீன வானியலின் முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்டார். தொலைநோக்கியின் மூலம் விண்வெளியில் நிகழும் சிறுசிறு மாற்றங்களைக்கூட கூர்ந்து கவனிக்க முடிந்தது. வானியலர்களுக்கு மீண்டும் பாரலாக்ஸ் முறையே உதவிக்கு வந்தது.

சனிகோள் வரை மனிதனின் தொலை நோக்குப் பார்வை சென்றடைந்தது. அதற்கும் அப்பால் விஞ்ஞானப் பார்வையை வீசியவர் சேர் வில்லியம் ஹெர்செல் என்பவரே. 18ம் நூற்றாண்டின் புகழ் மிக்க வானவியலர். விண்வெளியின் ஏழாவது கோளான யுரேனஸ் 1781 ஆம் ஆண்டு இவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு முன்னர் 1690 இல் யுரேனஸ் என்பதை ஒரு நட்சத்திரமாகவே கருதி வந்தனர்.

1846 ஆம் ஆண்டு நெப்டியூன் கோள் ஜோன் காலே என்பவரால் கண்டறியப்பட்டது. இவருக்கு முன்னர் விண்வெளியில் எட்டாவது கோள் இருக்கிறதென்ற கணிப்புகள் அறிவியலாளர்களால் கூறப்பட்டு வந்த போதிலும் அதிகாரபூர்வமான கண்டுபிடிப்பு இவருடையதே. விண்வெளியில் சூரியக் குடும்பத்தை பற்றி சுமாரான ஒரு வடிவம் கிடைத்துவிட்டது.

18 ஆம் நூற்றாண்டிலும் 19 ஆம் நூற்றாண்டிலும் கெப்ளர் மற்றும் நியூட்டனின் வானியல் விதிகளே ஆதிக்கம் பெற்று விளங்கின. அதிக தொலைவிலுள்ள நட்சத்திரங்களின் தொலைவை கண்டறிய பாரலாக்ஸ் முறை உதவாது என்று தெரிந்து போனது. தொலை நோக்கிகள் பெரியதாக வடிவமைக்கப்பட்டன. அதன் தொலை நோக்கு எல்லைகள் விரிவாக்கப்பட்டன. அதன் வழியே தொலை தூர நட்சத்திரங்களின் தூரம் மற்றும் இயக்கங்களை அளவிட்ட போதுதான் அவை எண்ணால் எழுத முடியாத அளவிற்கு தூரத்திலிருப்பது புலனாயிற்று.

அறிவியல் உலகம் கண்டுபிடிப்பு புரட்சியின் உச்சக்கட்டத்தில் இருந்த சமயம், 1887 இல் மைக்கேல்சன் என்ற விஞ்ஞானி ஒளியின் வேகத்தை கண்டுபிடித்து விட்டார். ஒளியின் வேகம் வினாடிக்கு 1,86,282 மைல்.

இந்த வேகம் எந்த இடத்திலும் மாறவில்லை. எந்த திசையில் அளந்து பார்த்த போதும் ஒரே மாதிரி இருந்தது. சாதாரணமாக ஓடும் வாகனத்திலிருந்து ஒருவர் 10 கி.மீ. வேகத்தில் ஒரு பொருளை எறிகிறார். அவர் அப்பொருளை எறியும் அவ்வினாடியில் வாகனம் 10 கி.மீ. வேகத்தில் நகருகின்றது. இந்நிகழ்வை தரையிலிருந்து ஒருவரும், வாகனத்திலிருந்து ஒருவரும் பார்க்கிறார்கள் இப்போது வாகனத்திலிருப்பவருக்கு பொருள் செல்லும் வேகம் 10 கி.மீ. ஆகவும் தரையிலிருப்பவருக்கு 20 கி.மீ. வேகமாகவும் இருக்கும்.

ஆனால், ஒளியின் வேகத்தில் இவ்வாறு இரண்டு விதமான வேகம் தெரிவதில்லை. விந்தையாகத்தானிருந்தது. இந்நிலையில் 1905 இல் ஐன்ஸ்டைன் சிறப்பு ஒப்புமைக்கோட்பாடு (Theory of relativity) என்ற புதிய கொள்கையை வெளியிட்டு உலக விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தினார்.

அவர் கூறியது இதுதான். ஒளியின் வேகம் எங்கிருந்து அளவிடினும் மாறவில்லை என்பது பரிசோதிக்கப்பட்ட உண்மை. ஏன் மாறவில்லை என்பதற்கு விளக்கம் வேண்டுமானால் முதலில் சில கொள்கைகளை ஒப்புக்கொள்ள வேண்டும். ஒளியின் வேகத்தில் செல்லும் போது அளவில் சுருக்கம் ஏற்படும். எடைகூடும். காலம் சுருங்கும் என்ற வினோ தங்கள் நடைபெறும் என்றார். இந்த கொள்கை பைமெசான் என்ற நுண்ணிய துகளை ஒளியின் வேகத்தில் செலுத்தும் போது நிகழத்தான் செய்தது.

ஆகவே ஒளியின் வேகம்தான் வேகத்தின் எல்லை. அதற்கு அப்பால் ஒரு வேகமில்லை என்ற கருத்து வலுப்பட்டது. வேகம் மாறுவதில்லை என்பது நிரூபணமான உண்மையாகிவிட்டது. எனவே ஒளி ஒரு வருடத்தில் பயணிக்கும் தொலைவினை ஒரு ஒளியாண்டு என்று வைத்துக் கொண்டு நட்சத்திரங்களின் தொலைவினை ஒளியாண்டுகளில் அளவிடலானார்கள்.

இந்த விதத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நட்சத்திரங்களின் தூரத்தைக் கண்டுபிடித்தாயிற்று. சட்சத்திரக் கூட்டங்களுக்கு அப்பால் என்ன என்ற கேள்வி எழுந்த போது அறிவியல் உலகம் மறுபடியும் மூளையை கசக்கிக்கொண்டது. நட்சத்திர கூட்டங்களுடன் நம்முடைய பால் வீதி முடிந்து விட்டால் அதற்கு அப்பால் வேறு ஏதேனும் இருக்க வேண்டுமல்லவா?

1920 இல் தூரத்தில் இயங்கிவரும் நட்சத்திரங்களின் பிறப்பிடமான நெபுலாக்களை கண்காணித்து அவை மற்றொரு பால் வீதிக்கு சொந்தமானது என்றார் எட்வின் ஹப்பிள் என்ற அறிவியலர். 46 புதிய பால்வெளிகளை கண்டுபிடித்தார். அவ்வகை கேலக்சிகளில் கோள்கள் நட்சத்திரங்கள், சூரியன் என அனைத்தும் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர் வானியல் அறிஞர்கள். இதனை உறுதிப்படுத்த தேவையான உபகரணம் விஞ்ஞான உலகில் இல்லை.

முடிந்த தொலைவு வரை மனித மூளையை செலுத்தியாகிவிட்டது. எவ்வாறு பூமி மற்றும் கோள்கள் அனைத்தும் விண்வெளியில் கீழே விழாமல் சுற்றி வருகின்றன என்ற கேள்விக்கு நியூட்டனின் ஈர்ப்பு விசையும், ஐன்ஸ்டீனின் ஒப்புமைக் கோட்பாடும் விளக்க மளித்தன. பிரபஞ்சத்தில் எந்தப் பொருளும் ஒன்றை ஒன்று கவர்கின்றது. அவற்றின் கவரும் சக்தி அவற்றுக்கிடை யேயான நெருக்கத்தைப் பொறுத்து அமையும். சூரியனுக்கும் பூமி கோளுக்கும் இடையேயான கவர்ச்சி விசைதான் பூமி விண்வெளியில் வீழாமல் இருக்கக் காரணம். நாம் வாழும் இப்பிரபஞ்சத்தில் கணக்கிலடங்காத அறிவியல் இரகசியங்கள் அடங்கியுள்ளன.

அவற்றில் நாமறிந்த, அறிவியலர்களால் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகள் மிகக் குறைவே. சுருங்கக் கூறின் அறிந்த உண்மைகளைவிட அறியாத இரகசியங்களே அதிகம். ஒவ்வொரு காலகட்டத்திலும் அறிவியலர்களின் பல்வேறு கண்டுபிடிப்புகளும் வெளிப்படுத்துதல்களும் அறிவியல் உண்மைகளை அறிந்துகொள்ள வழிவகை செய்துள்ளது. மனித அறிவினைப் பெருக்கிட தூண்டுகோலாக அமைந்துள்ளது. 
(http://www.thinakaran.lk/node/4137)

About editor 3085 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply