காதலிக்கு கோயில் நிர்வாகம்…15 பாட்டில் விஷம்… 15 உயிர்கள் பலி! – மடாதிபதியின் குரூரம்
சுலவாடி மாரம்மா கோயிலின் அறக்கட்டளைத் தலைவராக சாளூர் மடத்தின் இளைய மடாதிபதி மகாதேவசாமி இருந்துள்ளார். அறக்கட்டளை நிர்வாகியாக சின்னப்பி என்பவரும் அவரின் ஆதரவாளர்களும் இருந்துள்ளனர். சாளூர் மடத்தில் பெரிய மடாதிபதி குருசாமிக்கும் இளைய மடாதிபதிக்கும் மோதல் இருந்து வந்துள்ளது. இளைய மடாதிபதிக்கும் மாரம்மா கோயில் நிர்வாகிகளுள் ஒருவரான மாதேஷ் என்பவரின் மனைவி அம்பிகாவுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. கோயில் நிர்வாகத்தைக் கைப்பற்றி காதலி அம்பிகாவிடம் கொடுக்க இளைய மடாதிபதி திட்டமிட்டுள்ளார். சாளூர் மடத்துக்கும் பெரிய மடாதிபதிக்கும் அவப் பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற எண்ணமும் இளைய மடாதிபதிக்கு இருந்துள்ளது.
மாரம்மா கோயில் நிர்வாகம் முழுவதையும் சின்னப்பி என்பவர் பார்த்து வந்துள்ளார். சமீபத்தில், தன் காதலி அம்பிகாவின் கணவர் மாதேஷை நிர்வாகியாக இளையமடாதிபதி நியமித்துள்ளார். சில நாள் கழித்து அம்பிகாவை கோயில் மேற்பார்வையாளராக நியமித்தார் இளைய மடாதிபதி ‘சின்னப்பியை கோயில் நிர்வாகத்தில் இருந்து முற்றிலும் நீக்கிவிட வேண்டும். அப்போதுதான், நீங்கள் சொல்கிற மாதிரி நான் நடப்பேன் ‘ என்று அம்பிகா ஒரு கட்டத்தில் மகாதேவசாமிக்கு ஆசை காட்டியுள்ளார். தொடர்ந்து, கடந்த 14-ம் தேதி நடந்த விழாவின்போது, அம்பிகா, மாதேஷ், தொட்டையா ஆகியோர் கோயிலுக்கு விஷ பாட்டில்களுடன் வந்துள்ளனர். மற்றவர்களின் கவனத்தை திசை திருப்பி விஷத்தைத் தண்ணீரில் கலக்கி அன்னதானத்துக்காக வைத்திருந்த தக்காளி சாதத்தில் கலந்துவிட்டு வெளியேறியுள்ளனர். சிறிது நேரத்தில் பக்தர்கள் இறந்த தகவல் கிடைத்ததும் அம்பிகாவே போலீஸைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இளைய மடாதிபதிக்கும் போன் செய்து திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாகக் கூறியுள்ளார். அன்னதான உணவில் 15 பாட்டில் விஷம் கலக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்தக் கோயில் இளைய மடாதிபதியின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. கோயில் கோபுரம் கட்டுவதற்காக ஏராளமான நன்கொடை குவிந்துள்ளது. கோயிலில் இருந்து ஆண்டுக்கு ரூ.3 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதனால், கோயில் நிர்வாகத்தை முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர மடாதிபதி முயன்றுள்ளார். மடாதிபதியின் போக்கு பிடிக்காத கிராம மக்கள், அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து நிர்வகித்துள்ளனர். வரவு செலவை சின்னப்பி கவனித்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.1.5 கோடி செலவில் கோயில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில்தான் அன்னதான சாதத்தில் விஷம் கலக்கப்பட்டு 15 பேர் பரிதாபமாக இறந்தனர். 100 பேரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. 26 பேரின் உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேட்டூர் தொட்டையா, மாரம்மா கோயிலில் நாகசிலைகள் வைத்து பூஜை செய்து பணம் வசூலிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். சின்னப்பி, அவரை அங்கிருந்து விரட்டியுள்ளார். இதனால், தொட்டையாவும் சின்னப்பியை பழி வாங்கக் காத்திருந்துள்ளார். இதை அறிந்த அம்பிகா அவரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு இத்தகைய பாதகச் செயலை செய்துள்ளார். போலீஸ் விசாரணையில் உண்மை அனைத்தையும் அம்பிகா தெரிவித்ததையடுத்து இளைய மடாதிபதி மகாதேவசாமி அதிரடியாக கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கெனவே பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் இருந்துள்ளன.
அம்பிகா உள்ளிட்டோர் விஷம் கலந்த பிறகு சமையல் அறைக்கு வந்த சமையல்காரருக்கு ஏதோ ஒரு மோசமான வாடை அடிப்பதை உணர்ந்தும் அசட்டையாக இருந்துள்ளார். சமையல்காரர் சுதாரித்திருந்தால்கூட அப்பாவிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.
https://www.vikatan.com/news/india/145140-details-behind-karnataka-temple-tragedy.html
சர்ச்சைகளின் ‘நாயகன்’ ஜெயேந்திர சரஸ்வதி
காஞ்சி ‘சங்கரமடத்தின்’ 69-வது பீடாதிபதி என அந்த மடத்தினால் குறிப்பிடப்படும் ஜெயேந்திர சரஸ்வதி புதன்கிழமை காலமானார். சமய மடாதிபதிகளின் வழக்கமான பிம்பத்துக்கு மாறாக பெரும் அரசியல் செல்வாக்கோடு விளங்கியவர் இவர்.
அதே நேரம் கொலை வழக்கில் கைது உள்ளிட்ட சர்ச்சைகளிலும் சிக்கியவர்.
ஜெயேந்திர சரஸ்வதியின் இயற்பெயர் (பூர்வாசிரமப் பெயர்) சுப்ரமணியன். இவரது தந்தை ரயில்வே துறையில் பணியாற்றியவர்.
ஆறு ஆண்டுகள் சங்கரமடத்தின் வேதபாட சாலையில் பயின்ற சுப்ரமணியன், 1954ல் ஜெயேந்திர சரஸ்வதி எனப் பெயர் மாற்றம் பெற்று சங்கர மடத்தின் பீடாதிபதியானார்.
தொடக்க காலத்தில், பெரிதாக செய்திகளில் அடிபடாத ஜெயேந்திர சரஸ்வதி, 80களிலிருந்தே மடத்தின் சமயச் செயல்பாடுகளுக்கு மாறான செயல்களில் ஈடுபட்டதாகக் கருதப்பட்டவர்.
குறிப்பாக தமக்கு முந்தைய மடாதிபதியான சந்திரசேகர சரஸ்வதி இருக்கும்போதே, தமக்கு இளைய பீடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதியை இவர் நியமித்தார்.
ஜெயேந்திர சரஸ்வதி சம்பந்தப்பட்ட மிகப்பெரிய சர்ச்சை 1987ல் வெடித்தது.
அந்த ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி யாரிடமும் சொல்லாமல், மடத்தைவிட்டு வெளியேறினார் ஜெயேந்திரர்.
சங்கராச்சாரியாராக இருப்பவர்கள் எப்போதும் தன் தண்டத்தை (சங்கராச்சாரியார் கையில் வைத்துள்ள ஒரு புனிதக் கழி) பிரியக் கூடாது என்பது மரபு.
ஆனால், ஜெயேந்திரர் மடத்தைவிட்டு வெளியேறியபோது, தன் தண்டத்தையும் கமண்டலத்தையும் விட்டுவிட்டே வெளியேறினார்.
சாதுர்மாஸ்ய பூஜை காலத்தில் பீடாதிபதிகள் வெளியேறக்கூடாது என்ற விரதத்தையும் மீறி அவர் வெளியேறியது மடத்தின் பக்தர்களுக்கு பெரும் துக்கத்தை ஏற்படுத்தியது.
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி காலமானார்
’தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒன்றா?’: சங்கரமடம் கேள்வி
இந்த சம்பவம் அந்த காலகட்டத்தில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து மூத்த சங்கராச்சாரியாரான சந்திரசேகர சரஸ்வதி, மடத்தின் பூஜைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக புதிய மடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதியை நியமித்தார் (அதற்கு முன்பே, விஜயேந்திர சரஸ்வதி ஜெயேந்திர சரஸ்வதிக்கு அடுத்த நிலையில் இருந்துவந்தார்.).
மூன்று நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, கர்நாடக மாநிலத்தின் தலைக்காவிரியில் ஜெயேந்திர சரஸ்வதி கண்டுபிடிக்கப்பட்டார்.
தண்டத்தைவிட்டு வெளியேறியது குறித்து அந்தத் தருணத்தில் செய்தியாளர்கள் கேட்டபோது, தண்டத்தின் சக்தியை தன் உடலில் ஏற்றிக்கொண்டதாக பதிலளித்தார் ஜெயேந்திரர். விஜெயேந்திரர் பொறுப்பேற்றுக்கொண்டதில் தனக்கு மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்குப் பிறகு செப்டம்பர் 17ஆம் தேதியன்று காஞ்சி மடத்திற்குத் திரும்பிய ஜெயேந்திரர், மீண்டும் மடாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதற்கு அடுத்த இரு வாரங்களிலேயே, அதாவது அக்டோபர் 2ஆம் தேதியே ஜன கல்யாண், ஜன ஜாக்ரண் என்ற புதிய இயக்கங்களை ஆரம்பித்தார் ஜெயேந்திரர்.
மக்களுக்கு சேவை செய்வதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இதன் இரண்டு நோக்கங்கள் என்று இதன் துவக்கவிழாவில் பேசினார் ஜெயேந்திரர்.
இந்த இயக்கத்திற்கும் மடத்திற்கும் சம்பந்தம் இல்லையென்றாலும் சந்திரசேகர சரஸ்வதியின் ஆசிகள் இதற்கு உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால், ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அந்த இயக்கத்தை பெரிய அளவில் முன்னெடுத்துச் செல்லவில்லை.
காஞ்சி சங்கர மடத்திற்கு குடியரசுத் தலைவர் போன்ற உயர் பதவிகளை வகிக்கக்கூடியவர்கள் வருவது வழக்கம்தான் என்றாலும் 1998ல் மத்தியில் பா.ஜ.க. அரசு ஏற்பட்ட பிறகு இது பெரிய அளவில் அதிகரித்தது.
மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள பல பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர்கள் காஞ்சி மடத்திற்கு வந்து ஜெயேந்திர சரஸ்வதியைச் சந்தித்துச் சென்றனர்.
2001-2006 காலகட்டத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியின் துவக்க ஆண்டுகளில் தமிழக அரசில் பெரும் செல்வாக்குடன் ஜெயேந்திர சரஸ்வதி விளங்கினார்.
கோவில் தொடர்பான எல்லா அரசு விழாக்களுக்கும் அவர் அழைக்கப்பட்டார். கோவில் சொத்துக்களை பாதுகாப்பது தொடர்பான மாநில அளவிலான குழுவின் தலைவராகவும் அவர் நியமனம் செய்யப்பட்டார்.
2002ல் தமிழக அரசு கொண்டுவந்த கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தின் பின்னணியிலும் ஜெயேந்திரர் இருந்ததாகக் கூறப்பட்டது.
இந்த காலகட்டத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலின் வழிபாட்டு நடைமுறைகளில் சில மாற்றங்களை பரிந்துரைத்தார் ஜெயேந்திர சரஸ்வதி.
இதற்கு வைணர்களிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது. சங்கராச்சாரியார் ஸ்ரீவைஷ்ணவ மரபைச் சார்ந்தவர் இல்லை என்பதால், வைஷ்ணவ விவகாரங்களில் தலையிட வேண்டாமென த்ரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் தெரிவித்தார்.
ஜெயேந்திரரின் இந்த செயல்பாடுகள், இந்து மதம் முழுமைக்கும் ஒரு தலைவரைப்போல ஆக அவர் விரும்புகிறாரோ என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தியது.
கூதிரம்பாக்கத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள், கிராமத்துக் கோவிலுக்குள் நுழைவதற்கு தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் ஜெயேந்திரர் அதற்கு உதவ வேண்டுமென்றும் கேட்டபோது, குளித்து, சுத்தமாகிவிட்டு கோவிலுக்குள் நுழையும் அனுமதியைக் கோர வேண்டுமென ஜெயேந்திரர் அந்தத் தருணத்தில் கூறியதாகச் சொல்லப்பட்டது.
இதனை எதிர்த்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
2004ல் கொலைவழக்கில் சங்கராச்சாரியார் கைதுசெய்யப்பட்டதும், அவர் மீது பாலியல் ரீதியான புகார்களும் சொல்லப்பட்டன. சில பெண்கள் வெளிப்படையாக, அவர் மீது புகார்களை முன்வைத்தனர்.
பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன், பத்திரிகையாளர்களைச் சந்தித்து சங்கராச்சாரியார் தன்னிடம் முறைகேடாக நடந்துகொண்டதாகக் குற்றம்சாட்டினார்.
சங்கரமடத்தின் சார்பில் பத்திரிகை ஒன்று துவங்கப்போவதாகக் கூறி, தான் அழைக்கப்பட்டதாகவும் அப்போது தனிமையில் தன்னிடம் பேசிய ஜெயேந்திர சரஸ்வதி முறைகேடாக நடக்க முயன்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
2004ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி தோல்வியடைந்தபோது, ஜெயலலிதாவின் அகங்காரமே அதற்குக் காரணம் என்று ஜெயேந்திரர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.
இந்தப் பேட்டிக்குப் பிறகுதான் ஜெயேந்திரருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான விலகல் துவங்கியது.
ஜெயேந்திரர் மீதான சர்ச்சைகளின் உச்சகட்டமாக, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலின் மேலாளராகப் பணிபுரிந்த சங்கரராமன் என்பவர், அந்தக் கோவில் வளாகத்திலேயே 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதியன்று கூலிப்படையினரால் வெட்டிக்கொல்லப்பட்ட விவகாரத்தில், அவர் தொடர்புபடுத்தப்பட்டார்.
இதையடுத்து, நவம்பர் 11ஆம் தேதியன்று ஆந்திராவில் முகாமிட்டிருந்த ஜெயேந்திர சரஸ்வதியும், விஜயேந்திர சரஸ்வதியும் தமிழகக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கையை அடுத்து, சங்கர மடத்தின் மடாதிபதிகள் இருவர் மீதும் பல்வேறு பாலியல் புகார்கள் கூறப்பட்டன.
சங்கரராமன் கொலை வழக்கு 2005ல் புதுவை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை நடந்துவந்த காலகட்டத்தில், வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பணம் கொடுத்து சங்கராச்சாரியார் தீர்ப்பை மாற்ற முயல்வதாக 2011 ஆகஸ்டில் ஒரு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது.
சங்கராச்சாரியாரும் நீதிபதியும் பேசுவதாகக் கூறப்பட்ட ஒலிநாடாக்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
2013ல் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது. ஜெயேந்திரரும் விஜயேந்திரரும் இந்தக் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஆனால், இந்தக் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைதுசெய்யப்பட்டதிலிருந்து அரசின் உயர் மட்டத்தில் மடத்தின் செல்வாக்கு குறைய ஆரம்பித்ததாகவே கருதப்படுகிறது.
பிற செய்திகள்
சிரியா: போருக்கு மத்தியிலும் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகும் பெண்கள்
திருமணங்களால் அழிவின் விளிம்புக்கு சென்ற பழங்குடியின மொழி
“பாகிஸ்தானில் சர்வாதிகாரத்தை சமாளிக்க ஸ்ரீதேவி எப்படி உதவினார்?”
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி காலமானார்
https://www.bbc.com/tamil/india-43231196
Leave a Reply
You must be logged in to post a comment.