கரைகிறதா கருணாநிதியின் கடவுள் மறுப்பு கொள்கை?

கரைகிறதா கருணாநிதியின் கடவுள் மறுப்பு கொள்கை?

Sumithiran

ஹிந்து என்றால் திருடன்; நெற்றியில் குங்குமத்தை பார்த்தால் ரத்தம் வடிவது போல் தெரிகிறது; ராமன் எந்தக் கல்லுாரியில் படித்தார்’ இப்படி பல சர்ச்சைக்குரிய ‛பொன்மாெழி’களை உதிர்த்தவர் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவராகவும் இருந்த கருணாநிதி.

பெரியார் என அழைக்கப்படும், ஈ.வெ.ராமசாமியின் கொள்கைகளை இம்மி பிசகாமல் கடைபிடிப்பவராக தன்னை காட்டிக்கொண்ட அவர், சிறுபான்மை மதம், ஜாதியினரின் கடவுளாக… மன்னிக்கவும், காவலராகவே தன்னை காட்டிக்கொண்டார்.

மேடை தாேறும், ஹிந்து மத துவேசம், ஹிந்து கடவுளையும், அதை வணங்குவபவரையும், வழிபாட்டு நடைமுறைகளையும் கொச்சைபடுத்தி பேசுவதே அவரது வாடிக்கையாக இருந்தது.

ஆனால், அவரது மனைவியும், துணைவியும், அவருக்கு நேர் எதிரானவர்கள். அவர் வீட்டு பெண்மணிகள் நெற்றி நிறைய குங்குமம் வைத்திருப்பர். கோவில், குளங்களுக்கு செல்லாமல் இருந்தால் அது அதிசயம். அவ்வளவு கடவுள் பக்தி அவர்களுக்கு. மனைவி தயாளு ஆகட்டும், மருமகள் துர்கா ஆகட்டும், இருவரும் செல்லாத கோவில் இல்லை, வழிபடாத தெய்வம் கிடையாது.

கேட்டால், அது அவர்களின் தனிப்பட்ட நம்பிக்கையாம். தனி மனித நம்பிக்கைகளில், தி.மு.க.,வினர் தலையிடுவது கிடையாதாம். தன் வீட்டில் உள்ளவர்களையே மாற்ற முடியாத, அதாவது தன் வீட்டாரே தன் பேச்சை கேட்காத நிலையில் தான், ஊருக்கு உபதேசம் செய்ய கிளம்பினார், மாண்புமிகு முன்னாள் முதல்வர் கருணாநிதி.

சரி இந்தக் கதை எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால், அவரின் நேரடி வாரிசுகளான ஸ்டாலின், கனிமொழி ஆகியோர், தந்தையின் வழியைத்தானே பின்பற்றி வருகின்றனர்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஸ்ரீரங்கம் செல்வார், அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படும். கோவில் பட்டர், ஸ்டாலினின் நெற்றியில் கும்குமம், சந்தனம் இட்டு விடுவார். அதை அனைத்தையும் ஏற்கும் ஸ்டாலின் இறுதியில், அதை துடைத்துவிட்டு, திராவிடக் கொள்கையை நிலைநாட்டுவார்.

வைணவக் கோவிலுக்கு சென்று வந்து, அங்குள்ள சிற்பத்தை பார்த்ததாக பெருமை பேசுவார். இதை நாமும் நம்புவோமாக! சரி அண்ணன் தீவிர கொள்கைக்காரர். தங்கை ஆன்மிகவாதியாக இருப்பாரோ என்றால், அவர், அண்ணனுக்கு சற்றும் சளைக்காதவர்.

திருப்பதி ஏழுமலையானையே தரக்குறைவாக பேசி, தி.க., அறிவு ஜீவிகளிடம் கைதட்டல் பெற்றவர். ஏழுமலையானுக்கு உண்மையில் சக்தி இருந்தால், இங்கு எதற்கு இவ்வளவு பாதுகாப்பு எனக் கேட்டவர். மிக அருமையான கேள்வி.

மக்களின் நம்பிக்கையை பெற்று தானே நாடாளுளுமன்றத்துக்கு செல்கின்றனர். அப்படியானால், அவர்களுக்கு எதற்கு பாதுகாப்பு? மக்களோடு மக்களாக வலம் வர வேண்டியது தானே?

சரி போகட்டும். இருப்பதை விடுத்து பறப்பதற்கு ஆசைப்படும் கதையாய், கருணாநிதி கெஞ்சி கூத்தாடி வாங்கித் தந்த ராஜ்யசபா பதவி இருக்கையில், லோக்சபாவில் நுழைய வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது அவரது மகள் கனிமொழிக்கு.

துாத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அவர் வெற்றி பெற வேண்டும் என, அவரது தாய் ராஜாத்தி அம்மாள், திருச்செந்துார் முருகனிடம் மனமுருக வேண்டுகிறார்.

நெற்றியில் சந்தனம், விபூதி. கழுத்தில் மாலை அணிவிக்கப்படுகிறது. கோவிலை வலம் வந்து பிரார்த்திக்கிறார். இத்தனையும் ஊடக வெளிச்சத்துடன்.

இதற்கெல்லாம் என்ன அர்த்தம். நான் அடிப்பது போல் அடிக்கிறேன், நீ அழுவது போல் அழு, நானே மீண்டும் தடவிக் கொடுக்கிறேன் என்ற நாடகம் போல் உள்ளது.

ஹிந்துக்களுக்கு எதிராக பேசுவதாக கூறி, சிறுபான்மை மதத்தினரின் வாக்குகளை பெற, மகள் போடுவது ஒரு வேஷம். அதே சமயம், எங்கள் குடும்பம் தீவிர கடவுள் பக்தி உடையவர்கள் என காட்டிக் கொள்ளும் அவரது தாய் போடுவது மற்றொரு வேஷம்.

கனிமொழியின் தாய், ஸ்டாலினின் தாய், மனைவி, அவரது குடும்பத்தார் என பலரும் கடவுள் நம்பிக்கை உடையவர்களாகவே தங்களை காட்டிக் கொண்டுள்ளனர். ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினோ, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில், பழனி முருகன் கோவில் ஆகிய இடங்களுக்கு அடிக்கடி சென்று வழிபாடு நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

துர்கா ஸ்டாலின் மற்றும் தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள் ஆகியோர் சாமி கும்பிடுவதும், கோவிலுக்கு வருவதும் வழக்கமான செயல்பாடுகளே என, தி.மு.க., மூத்த நிர்வாகிகளே விளக்கம் அளிக்கின்றனர்.

இவர்கள் மட்டுமன்றி, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் பலரும், சாமி கும்பிடுவதும், நெற்றியில் விபூதி, குங்குமம் வைப்பதும் வழக்கமான ஒன்றாகவே மாறிவிட்டது. குறிப்பாக, ஸ்டாலின் கூடவே சுற்றும் எம்.எல்.ஏ., சேகர் பாபு, அடிக்கடி சபரிமலைக்கு மாலை அணிந்து செல்வதும், தாடியுடனும், நெற்றியில், சந்தனம், குங்குமம், கழுத்தில் துளசி மாலையுடனும் காட்சி அளிப்பார்.

இன்றைய திமுகவினரின் செயல்பாடுகள், குடும்பத்தில் ஒருவர் ஆத்திகம் பேசுவதும், இன்னொருவர் நாத்திகம் பேசுவதும் தான் இன்றைய திராவிடக் கொள்கையாக மாறிவிட்டதோ என்ற ஐயப்பாட்டை எழுப்பியுள்ளது.

ஏன் இந்த வெட்டி வீராப்பு?, பேசாமல், ஆம்… நாங்களும் ஹிந்துக்கள் தான், எங்களுக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. நாங்களும் வழிபட உரிமை உள்ளது. நீங்கள் யார் கேள்வி கேட்க… என நேரடியாக அறிவித்து விட்டு, நீங்களும் கோவிலுக்கு வந்தால், யார் உங்களை தடுத்து நிறுத்த முடியும் இல்லை கேள்வி தான் கேட்க முடியும்?

இப்படி முழுக்க நனைந்த பின் முக்காடு போடாமலும், கடலில் கரைத்த பெருங்காமயமாய் மாறிவிட்ட கடவுள் மறுப்பு கொள்கையை கைவிட்டாலுமே, அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறுவதோடு, மக்கள் மனதில் தி.மு.க., எளிதில் நீங்கா இடம் பெற்றுவிடலாம் என்பதை, அதன் முக்கிய தலைவர்கள் உணரும் நேரம் வந்துவிட்டதாகவே தெரிகிறது.

நன்றி – newstm

About editor 3092 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply