குறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா?
***கலி.பூங்குன்றன்***
மனுதர்மத்தின் சாரம் திருக்குறள் (Tirukkural an Abridgement of Sastras) என்று பார்ப்பன நாகசாமியால் எழுதப்பட்ட ஆங்கில நூலுக்கான மறுப்புக் கூட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவருக்கே உரித்தான முறையில் ‘நச்சு நச்சு’ என்று கொடுத்தார் சாட்டையடி!
வரவேற்புரையாற்றிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் குறிப்பிட்ட ஒரு தகவலைத் தெடர்ந்து நாகசாமியை எம்.ஜி.ஆர். மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் என்றார்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் அப்படி என்ன தான் கூறினார்?
எம்.ஜி.ஆர். தொடக்கத்தில் பகுத்தறிவுவாதியாகத்தான் நடந்து கொண்டார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டபொழுது பலகீனமானார். பார்ப்பன வட்டாரம் அவரைச் சூழ்ந்து கொண்டுவிட்டது. காஞ்சிப் பெரியவாளை சந்தித்து விட்டு வரலாம் என்று ‘ஆனந்த விகடன்’ மணியன் சொல்ல, முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரும் கிளம்பி விட்டார்.
அங்குப் போய் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியைச் சந்தித்தனர். உடல் நலனை விசாரித்துக் கொண்டனர்.
அப்பொழுது சங்கராச்சாரியார் முதல் அமைச்சரிடம் மூன்று வேண்டுகோள்களை வைத்தார்.
ஒன்று – பல கோயில்களில் ஒருவேளை விளக்குக் கூட ஏற்ற முடியாத நிலை – அதற்கு வழி செய்ய வேண்டும்.
கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு
நாகசாமியின் திருக்குறள் பற்றிய நூலுக்கு மறுப்பு நூல் ஒன்றை முனைவர் மறைமலை இலக்குவன் எழுதுவார் என்று கூட்டத்தில் அறிவிப்பு.
இரண்டாவது – பழம்பெரும் கோயில்கள் எல்லாம் இடிந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் புதுப்பித்து கும்பாபிசேகம் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு மூன்றாவதைச் சொல்லுவதற்கு கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டார். சிறிது நேரங்கழித்து திருவாய்த் திறந்தார், “நாகசாமியை மன்னிச்சிடுங்கோ!” என்றதும், முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அதிர்ந்து போனார்.
தொல்லியல் துறை இயக்குநரான நாகசாமி தொல்லியல் துறையின் கண்டுப்பிடிப்புகள், பெறும் புதிய தகவல்களை முதலில் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் தானே ஏடுகளுக்குப் பேட்டி கொடுத்து வந்தார். இந்த ஒழுங்கு மீறலுக்குத் தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதைத்தான் மன்னிக்க வேண்டும் என்று சங்கராச்சாரியார் சொன்னார் முதல் அமைச்சரிடம்.
(சங்கரமடம் எப்படியெல்லாம் அவாளுக்காக வேலை செய்கிறது பார்த்தீர்களா?)
சற்றுத் தயங்கிய முதல் அமைச்சர் சரி என்று தலையாட்டினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் (ஆதாரம்: குமுதம் லைஃப், 27.12.2017 பக். 180, 182) சொன்னதைத் தொடர்ந்துதான் பேராசிரியர் சுப.வீ. அவர்கள் நாகசாமியை எம்.ஜி.ஆர். மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க முடியாது என்றார்.
நாகசாமி என்ற தனி மனிதன் எழுதிய நூலாக இதனைக் கருத முடியாது. இவர் பின்னணியில் ஒரு வலைப் பின்னல் இருக்கிறது. இதே நாகசாமி 2012இல் Mirror of Tamil and Sanskrit எனும் நூலினை எழுதினார். அதில் பிராமி என்பது பிராமணர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்று எழுதினார். பிராமி என்பதால் பிராமணர்களால் கண்டுபிடிக் கப்பட்டது என்பது நல்ல நகைச்சுவை.
5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது சமஸ்கிருதம். அதிலிருந்து 2000 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் திருகுறளை எழுதினாராம். என்ன ஆதாரம் என்றெல்லாம் கேட்டு விடக் கூடாது அவர்களிடம்.
அடுத்து அதே ஆண்டு இன்னொரு நூலையும் எழுதினார். “Tamil Nadu A Land of Vedas” என்பதாகும் அது. தமிழ்நாடு வேத நாடா? (அப்படி என்றால் வேதங்கள் தமிழில் தானே இருக்க வேண்டும்).
திருக்குறளுக்கு நாகசாமி என்ன விளக்கம் எழுதுகிறார்? அறிவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது – என்பது குறள்.
அதற்கு நாகசாமியின் விளக்கம் என்ன தெரியுமா? “பார்ப்பானின் காலைத் தொட்டு வணங்காதவர் சொர்க்கம் போக மாட்டார்கள்” என்று எழுதியுள்ளார்.
அந்தணர் என்றால் பார்ப்பனரா? அந்தணர் என்பவர் யார் என்பதற்குத் திருவள்ளுவர் அழகாக விளக்கம் சொல்லியுள்ளாரே?
அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மைப் பூண் டொழுகலான்.
என்பது தான் அந்தணருக்கு திருவள்ளுவர் சொல்லும் விளக்கமாகும்.
நாகசாமியின் இந்த நூல் விமர்ச்சிக்கப்படுவதைவிட கொளுத்தப்பட வேண்டும் (பலத்த கர ஒலி).
எல்லாக் குறளுக்கும் விளக்கம் எழுதிய நாகசாமி ஒரே ஒரு குறளுக்கு மட்டும் விளக்கம் எழுதவில்லை.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
என்ற குறளுக்கு அவரால் ஒன்றும் எழுத முடியவில்லை.
ஒரு செய்தி: திருநாவலூரில் இன்று (7.11.2018) காலை சுந்தரர் கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் என்று அறிவிப்பு. அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லுகிறார்கள். நீதிபதி மகாதேவன் கேட்டார். சுந்தரர் தேவாரத்தை எந்த மொழியில் பாடினார்? ‘பித்தா பிறை சூடிய பெருமானே’ என்று சுந்தரர் தமிழில் தானே பாடினார் என்று நீதிபதி கேள்விக்குப் பதில் இல்லை.
இன்று காலை தமிழில் அங்கு குடமுழுக்கு நடைபெற்று விட்டது என்று சுப.வீ. சொன்னபோது – ஆரவாரம் மக்களிடையே!
(கரூர் அருகே உள்ள திருமுக்கூடலூர் சிவன் கோயில் குடமுழுக்கு 9.9.2002இல் தமிழில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரியார் கூறினார். “நாத்திகம் பேசும் கருணாநிதிக்கு இதில் தலையிட உரிமை இல்லை” என்றார். குடமுழுக்கு செய்த பின்னர் கோயில் நடை இழுத்துச் சாத்தப்பட்டு சுத்திகரிப்பு நடந்தது என்பதை நினைவூட்டுகிறோம்.)
இதில் வேதனை என்னவென்றால் தருமபுரம், திருப்பனந்தாள், திருவாவடுதுறை ஆதினகர்த்தாக்கள் தமிழில் குடமுழுக்கு ஆகமத்துக்கு விரோதம் என்பார்கள்.
(“சைவமும் தமிழும் தழைத்தோங்குக” என்ற வாசகங்கள் இந்த ஆதினங்களின் வளாகங்களுக்குள் காணப்படும்).
இந்தியப் பண்பாட்டுக்குரிய நூல் திருக்குறள் என்று எழுதுகிறாரே திருவாளர் நாகசாமி.
இந்தியா முழுவதும் ஒரே பண்பாடா இருக்கிறது? என்ற வினாவை சுப.வீ. தொடுத்தபோது கரஒலி தான்.
கடைசியாக என்ன சொல்லி நூலை முடிக்கிறார் தெரியுமா?
திருகுறள் தானாக எழுதப்பட்டதா? தழுவி எழுதப் பட்டதா? என்பதை எதிர்காலம் முடிவு செய்யும் என்கிறார். அப்படி யென்றால் எதற்கு இப்படியொரு நூல் என்ற சுப.வீ.யின் கேள்வி அர்த்தமுள்ளது.
பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்
இவர் உரை ஓர் ஆய்வுரையாக அமைந்திருந்தது என்றே சொல்லவேண்டும். நாகசாமி நூலுக்கு ஒரு மறுப்பு நூல் எழுத வேண்டும் என்று தாய் உள்ளக் கனிவோடு ஆசிரியர் பெருந்தகை எனக்கு அன்புக் கட்டளை இட் டுள்ளார் – அந்தப் பணியை விரைவில் முடிப்பேன் என்று சொன்னபோது மிகப் பெரிய வரவேற்பு பார்வையாளர்கள் மத்தியில்.
ஆரியப் பண்பாட்டுக்கு எதிர்ப்புத் தொடங்கிய காலந்தொட்டு அவ்வப்பொழுது எதிர்ப்பு முனைகள் இருந்தபோதிலும் தந்தை பெரியார்தான் அதன் குடலை உருவிக் காயப் போட்டார்.
– நீதிக்கட்சி ஆட்சி பெரியார் வழிகாட்ட காமராசர் ஆட்சி எல்லாம் பெரியார் கொள்கை வழி ஆட்சிகள்தான். வடக்கே வி.பி.சிங் பிரதமராக இருந்து பெரியார் கொள்கையைப் போற்றினார்.
தர்ம சாத்திரங்களை எழுதியவர்கள் பார்ப்பனர்கள். அற நூல்கள் தமிழருக்குரியவை. சமஸ்கிருதத்தில் தர்க்க நூல்கள் உண்டு. அவை எல்லாம் மறைக்கப்பட்டு – தர்ம சாஸ்திரங்கள் என்னும் வருணதர்மத்தை வலியுறுத்தும் நூல்களை தூக்கிக் பிடிக்கக் கூடாது என்றார் பேராசிரியர் மறைமலை இலக்குவனார்.
எழுத்தாளர் பழ.கருப்பையா
எழுத்தாளர் பழ. கருப்பையா அவர்களின் பேச்சு ஒரே கலகலப்புதான். பல வரலாற்றுத் தகவல்களைக் கூறினார்.
2100 ஆண்களுக்கு முன் சிந்து சமவெளி நாகரிகம் தொடர்ந்து பெரியார் காலம் வரை ஆரிய எதிர்ப்புத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது! பெரியார் காலத் தோடு இந்த இனப் போர் முடியும் என்று எதிர்பார்த்தோம். ஆசிரியர் வீரமணி காலத்திலும் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது.
தமிழனுக்கு மெய்யியல் இல்லையாம். அதைச் சரி செய்ய வள்ளுவர் வேதங்களிலிருந்து கடன் பெற்று எழுதினாராம்.
இன்றைக்கு நாகசாமிகள் எழுதுகிறார்கள் என்றால் இதற்கு மூலம் பரிமேலழகர்தான். பரிமேலழகர் மிகச் சிறந்த உரை ஆசிரியர்தான். ஆனாலும் பார்ப்பனத் தனத்துடன் பல இடங்களில் நடந்து கொண்டுள்ளார்.
‘அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழித்தலுமாம்’ என்று பரிமேலழகர் எழுதுகிறார் என்று பழ.கருப்பையா குறிப்பிட்டார்.
ஆரியம் வேறு, திராவிடம் வேறு – இரண்டும் இரு வேறு பண்பாட்டு நிலைப்பாடுகள்.
உயிர்க்கொலை புரிந்து யாகம் நடத்துவது ஆரியம்.
ஆனால் திருவள்ளுவர் நமது தமிழ்ப் பண்பாட்டைச் சேர்ந்தவர் ஆதலால் என்ன பாடுகிறார்?
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்சொரிந்து உண்ணாமை நன்று.
என்று ஆரியத்துக்கு எதிரான கருத்தை முன் வைக்கிறார் வள்ளுவர்.
(பெரும்புலவர் சீனிவாசன் பல குறள்களைச் சுட்டிக்காட்டி, பரிமேலழகர் தவறான உரையை எழுதியுள்ளதாகக் குறிப்பிடுகிறார். வடமொழி நூல்களைத் தழுவி எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் குறள்களின் எண்ணிக்கையையும் பெரும்புலவர் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். 434, 501, 648, 924, 993, காமத்துப் பால், அவதாரிகை 1330 ஆக ஏழு இடங்கள்.
சில இடங்களில் அரசன் புரோகிதர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும் என பரிமேலழகர் எழுதுகிறார். புரோகிதர்கள் தெய்வத்தால் வரும் குற்றங்களைத் தீர்த்து வைப்பார்களாம். 425, 45, 501 ஆகிய குறள்களுக்கு பரிமேலழகர் இவ்வாறு பொருள் கூறுவதாக புலவர் சீனிவாசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளது இவ்விடத்தில் சுட்டிக் காட்டத் தகுந்தது.
ஆரிய – திராவிட வேறுபாட்டைச் சுட்டிக் காட்டுவதற்கு உழவுத் தொழிலைப்பற்றி மனுதர்மம் கூறியதையும், திருவள்ளுவர் கூறியதையும் ஒப்பிட்டு காட்டினார் எழுத்தாளர் பழ.கருப்பையா.
பயிர்த் தொழிலைப் பற்றி மனுதர்மம் என்ன சொல்லுகிறது?
“சிலர் பயிரிடுதலை நல்ல தொழிலென்று நினைக் கிறார்கள். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப் பட்டது – ஏனெனில் இரும்பை முகத்திலே உடைய கலப்பையும், மண் வெட்டியும் பூமியையும், பூமியிலுண்டான பல பல ஜெந்துக்களையும் வெட்டுகிறதல்லவா!”
மனு அத்தியாயம் 10 சுலோகம் 841
இது ஆரியத் தத்துவம் – கலாச்சாரம்; ஆனால் திருவள்ளுவர் என்ன சொல்லுகிறார்?
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்
இது திராவிடத் தத்துவம்.
இப்படி இருக்கும்போது திருக்குறள் மனுவின் சாரம் என்று நாகசாமி எழுதுவது எப்படி? பார்ப்பனத் தனம்தானே!
நாகசாமியின் இந்த நூலைப் பற்றி – பார்ப்பன ஆதிக்கப் பண்பாட்டைப் பற்றி எல்லாக் கட்சித் தலைவர்களும் பேச வேண்டும். எல்லாக் கட்சிகளிலும் உள்ள இலக்கிய அணிகளும் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் எழுத்தாளர் பழ.கருப்பையா. அவர் உரை ஒரே கலகலப்பாகவே அமைந்திருந்தது.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
நாகசாமிக்கு இவ்வளவுப் பச்சையாக தமிழர்களை எதிர்த்து உண்மைக்குப் புறம்பாக பச்சைப் பார்ப்பனத் தனத்துடன் நூல் எழுதும் துணிவு எப்படி வந்தது?
நாகசாமி என்ற ஒரு தனி மனிதர் இப்படியொரு நூலை எழுதியுள்ளார் என்று தவறாகக் கருதக்கூடாது.
திட்டமிட்டே ஒரு வட்டாரம் – ஒரு லாபி இதனைச் செய்கிறது. இந்த வேலையைச் செய்வதற்காகவே கோடிக்கணக்கில் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனுதர்மத்தையே இந்திய அரசமைப்புச் சட்டமாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இந்தத் திராவிட மண்ணை – பெரியார் மண்ணை வேத மண் என்கிறார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் இந்த மண்ணுக்கு சட்டரீதியாக ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியுள்ளார். இதனை மாற்றி வேத நாடாக ஆக்கப் பார்க்கிறார்கள் – நாகசாமிகளின் வேலை என்பது இதில் ஒன்றுதான்.
ஏன் ஆங்கிலத்தில் திருக்குறளைப் பற்றிப் பொய்யும், புனை சுருட்டுமாக எழுதுகிறார்? உலகம் பூராவும் பரப்புவதற்குத்தான். பார்ப்பனர்களின் இந்த சூழ்ச்சிகளை எல்லாம் பெரியாரின் ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால்தான் புரியும்.
குறளில் கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை, கோயில் என்ற வார்த்தை இல்லை. சங்க இலக்கியங்களிலும் முப்பால், நாற்பால் கிடையாது.
மனுதர்ம சாஸ்திரத்தில் கடைசிக் கடைசியாக சாஸ்திரத்தின் இரகசியம் சொல்லப்பட்டுள்ளது.
“இந்த சாஸ்திரத்தில் எல்லாத் தருமத்தையும் சொல்லி இராத்தினாலும்,சொல்லப்பட்ட தருமங்களுக்குள் தேச கால பேதத்தால் யாதாவதொரு சந்தேகம் நேரிடுமாதலாலும் அந்த விஷயத்தில் மேற்சொல்லும் குணமுள்ள பிராமண ருள் எந்தத் தருமத்தை ஏற்படுத்துவார்களோ அதே நிச்சய மான தருமமாகும். (மனு அத்தியாயம் 12, சுலோகம் 108).
இதைவிட பச்சையான பார்ப்பனத்தனம் வேறு ஒன்று இருக்க முடியுமா?
குறளுக்கு மரியாதை வந்துவிடக் கூடாது. குறள் மூலம் தமிழினத்துக்கு சிறப்பு ஏற்பட்டு விடவும் கூடாது.
அதற்கு ஒரே வழி அந்தக் குறள் என்பது மனுதர்மத்தைப் பார்த்துக் காப்பியடித்தது என்று சொல்லிவிட்டால் தீர்ந்தது கதை – இதுதான் பார்ப்பனர்களின் அணுகுமுறை – சூழ்ச்சி முறை என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
(முழு உரை பின்னர்)
http://viduthalai.in/component/content/article/171577.html
Leave a Reply
You must be logged in to post a comment.