கோடி கொடுத்தாலும் கோடீஸ்வரனை மறவோம்!

எல்லாப் போர்களும் நிலப்பறிப்புப் பற்றியதுதான்!

(2)

நக்கீரன்

திரு வன்னியசிங்கம் அவர்கள் அப்போது கோப்பாய்த் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். திருகோணமலையில் இடம்பெறுகிற குடியேற்றத்திட்டங்களில் பெருந்தொகையான சிங்களவர்கள் குடியேற்றப்படுவதையும் தமிழர்கள் அப்படியான திட்டங்களில் புறக்கணிக்கப்படுவதையும் சுட்டிக் காட்டி அவருக்கு ஒரு அஞ்சல் அட்டை அனுப்பினேன். எவ்வளவோ வேலைப் பளுவுள்ள வன்னியசிங்கம் அவர்கள் திருமலைக்கு வருவது சாத்தியமில்லை என்றுதான் நான் மனதில் நினைத்துக் கொண்டேன். என்ன ஆச்சரியம் அஞ்சலட்டை கிடைத்த அடுத்த நாள் காலை வன்னியசிங்கம் அவர்கள் திருமலைக்கு பேருந்தில் வந்து சேர்ந்துவிட்டார்.  அவரிடம் புள்ளி விபரங்களோடு திருகோணமலையில் நடைபெறும் குடியேற்றங்கள் பற்றி நானும் கோடீஸ்வரனும் விளக்கினோம்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர். இராசவரோதயம் மிகவும் நல்லவர். எந்தக் காரியம் என்றாலும் மென்மையோடு கையாள்கிறார். அவரது இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தி அரசாங்க அதிபர் மக்கேய்சர் தான் நினைத்தபடி நடந்து கொள்கிறார் என வன்னியசிங்கம் அவர்களுக்கு  எடுத்துச் சொன்னோம். ஒருவிதத்தில் அரசாங்க அதிபர் அவரைப் பயமுறுத்துகிறார் ( bullying) என்றோம்.  ” கவலை வேண்டாம், அரசாங்க அதிபரை எப்படிப் பயமுறுத்துவது என்பது எனக்குத் தெரியும்” (Don’t worry, I know how to bully the GA) என்றார். அன்று காலையே  வன்னியசிங்கம் அவர்கள் அரசாங்க அதிபரைச் சந்தித்துப் பேசினார். பலத்த வாதங்களின் பின்னர் தமிழ்க் குடும்பங்களுக்கு ஒதுக்கிய காணித் துண்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்க அதிபர் சம்மதித்தார். அன்று பின்னேரம் திருமலையில், தமிழ் அரசுக் கட்சி சார்பில் ஒரு பொதுக் கூட்டம் நடந்தது. அதில் திரு வன்னியசிங்கம் அவர்கள் திருகோண மாகாண தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் பற்றிப்  பேசினார்.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்துக்கு எதிரான இப்படிப்பட்ட முயற்சிகள் ஓடி வரும் காட்டாற்றை கைகளால் தடுக்கும் முயற்சியாகவே இருந்தன. அசுர அரச இயந்திரத்துக்கு எதிராக போராடுவது எளிதான காரியமல்ல.

தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் தென்னிலங்கைச் சிங்களவர்களைக் குடியேற்றுவதை  தொடக்கி வைத்தவர்  டிஎஸ் சேனநாயக்கா.  சட்டசபைக் காலத்தில் அவரே காணி அமைச்சராக இருந்து வந்தார். அவர் மறைவுக்குப் பின்னர் தலமை அமைச்சர்  பதவிக்கு வந்த அவரது மகன் டட்லி சேனநாயக்கா சரி, அதற்குப் பின்னர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த சிங்கள அரசுகள் பெரிய சேனநாயக்காவின்  குடியேற்றத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அசாதாரண அக்கறை காட்டினார்கள். ஐக்கிய தேசியக் கட்சி 1956 இல் ஆட்சி இழந்த போது எஸ்டபுள்யூஆர்டி பண்டாரநாயக்க அவர்களின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வந்தது.  ஆட்சி மாறினாலும் பண்டாரநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியின் சிங்களக் குடியேற்றக் கோட்பாட்டை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தார்.   இந்தக் கோட்பாடு இந்தக் கணம் வரை ஏதோ ஒரு போர்வையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தமிழர்களைப் பொறுத்தளவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ஒரு புற்று நோய். இந்தப் புற்று நோய்க்கு தமிழர்களின் தாயக பூமி இரையாகி வருகிறது. கிழக்கில் ஏற்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் எண்பதுகளில் இருந்து வடக்கிலும் இடம்பெற்று வந்தது.  அதற்கு நல்ல எடுத்துக்காட்டு மணலாற்றுச் சிங்களக் குடியேற்றம். இது 1984 அளவில் மகாவலி துரித மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது.

இந்த இடத்தில் மகாவலி துரித சிங்களக் குடியேற்றத் திட்டத்தின் வரலாறு பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும். கடந்த ஆண்டு மகாவலி துரித திட்டத்தின் 40 ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. ஜேஆர்  ஜெயவர்த்னா அவர்களது ஆட்சிக்  காலத்தில் 30 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய மகாவலி அபிவிருத்தித் திட்டம் 1977 ஆம் ஆண்டு மீளமைக்கப்பட்டு துரித மகாவலி அபிவிருத்தித் திட்டமென பெயரிடப்பட்டது.  விக்டோரியா கொத்மலை, ரன்தெனிகல, மதுறுஓயா நீர்த்தேக்கங்கள் உட்பட நீர்ப்பாசன திட்டங்கள் ஏககாலத்தில் ஒருமித்துத் தொடங்கப்பட்டன. இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அப்போது காணி அமைச்சராக இருந்த காமினி திசநாயக்கா அதீத அக்கறை எடுத்துக் கொண்டார்.

ஹோட்டன் சமவெளியில் ஊற்றெடுத்து திருகோணமலையை அண்டிய கடலில் சங்கமிக்கும் 331 கி.மீ. நீளமான மகாவலி கங்கை 10327 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பை தன்னகத்தே கொண்டுள்ளதுடன் இலங்கையின் மிக நீளமான நதியாகவும் பரிணமிக்கின்றது.

1970 பெப்ரவரி 28ம் திகதி மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் பொல்கொல்லை மற்றும் பொவதென்ன எனும் இடங்களிலிருந்து ஆரம்பிக்கப்பட்டன. முப்பதாண்டு அபிவிருத்தித் திட்டமாக வடிவமைக்கப்பட்ட இத்திட்டம் ஆறாண்டுகளில் நிறைவு செய்யப்படும் வண்ணம் ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்தி சபையின் கீழ் இயங்கிவந்த உடவளவைத் திட்டம் 1982 லும் எல் வலையம் எனப்படும் வெலிஓயா பிரதேசம் 1987 ம் ஆண்டிலும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டன. மகாவலித் திட்டம் தனது இலக்கை நிறைவேற்றிய வகையில் இதுவரை 162,932 குடும்பங்களை குடியமர்த்தியுள்ளது. இதில் 96,835 விவசாயக் குடும்பங்கள் அடங்குகின்றன. ஏனையோர் வேறு தொழில்களில் ஈடுபடுவோராவர்.

மகாவலி மூலம் உற்பத்தி செய்யப்படும் நீர் மின்சக்தியின் கொள்ளளவு 671 மெகா வோட்களாகும். மகாவலி வலய விவசாயிகள் ஆண்டில் 150,598 ஹெக்டயர் நிலத்திற்கு பாசன வசதியைப் பெற்று 707,836 மெற்றிக் தொன் நெல்லை தேசத்திற்கு வழங்குகின்றனர்.

மகாவலி திட்டத்தின் தேசிய மட்டத்திலான அபிவிருத்திகளாக நீர் மின்உற்பத்தி மேலதிக நீரைச் சேமித்தல் மூலம் மீன்பிடிக் கைத்தொழில், சரணாலயப் பாதுகாப்பு, மரமுந்திரிகைச் செய்கை, ஏற்றுமதிப் பயிர்ச் செய்கை, புதிய பழைய விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம்,  நகரங்களையும் நிறுவுதல், உட்கட்டமைப்பு வசதிகள்,  புதிய வாய்ப்புக்களை உருவாக்குதல் போன்றனவற்றையும் குறிப்பிடலாம்.

மகாவலி துரித அபிவிருத்த்தி திட்டத்தின் 40 ஆண்டு நிறைவு கடந்த ஆண்டு  கொண்டாடப்பட்டது. அதில் சனாதிபதி சிறிசேனா கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். அவரது உரை “40 வருட மகாவலி மகிமை, தேசிய விழாவில் சனாதிபதி ஆற்றிய உரை” என்ற தலைப்பில் சனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டிருந்தது. அந்த உரையின் வரலாற்று முக்கியத்துவம் கருதி அதன் முக்கிய பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

“நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு மகாவலி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் மற்றுமொரு வரலாற்று முக்கியத்துவமிக்க பணியை நிறைவேற்றும் உன்னத சந்தர்ப்பத்தில் உங்களைச் சந்திப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

மகாவலி அபிவிருத்தித்திட்டம் குறித்து நாட்டிலுள்ள பாடசாலைப் பிள்ளைகள் முதல் அனைத்து மக்களும் அறிவார்கள். 1930, 1940 களிலேயே மகாவலி இயக்கம் குறித்து நாட்டின் அரசியல்வாதிகள், கல்விமான்கள் பேசத் தொடங்கினர்.

அப்போது சட்ட சபையில் டாக்டர் எஸ்.கே.விக்கிரமசிங்க மகாவலியை வடக்கிற்கு திருப்புவது குறித்துப் பேசியுள்ளார். அக்கலந்துரையாடல்களின் பெறுபேறாகவே மகாவலி அபிவிருத்தி இயக்கம் குறித்து மொரகஹகந்த உள்ளிட்ட அடிப்படை சாத்தியவள ஆய்வுகள்  1954 இல்   மேற்கொள்ளப்பட்டன. அதேபோன்று மொரகஹகந்த திட்டத்தை எடுத்துக்கொண்டால் அது தொடர்பாக மூன்று சாத்தியவள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மைத்திரிபால சேனநாயக்க, காமினி திசாநாயக்க ஆகியோரையடுத்து 2000 ஆம் ஆண்டு நான் மகாவலி அமைச்சராக இருந்தபோது இறுதி சாத்தியவள ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன்னர் 50 மற்றும் 60 களிலும் இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

1970 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதன்மை அமைச்சர்  டட்லி சேனாநாயக்கவின் அரசாங்கத்தில் பொலனறுவையைப் பிரதிநிதித்துவப்படுத்திய சி.பி.டி.சில்வா முதலாவது மகாவலி அபிவிருத்தி அமைச்சராக டட்லி சேனாநாயக்கவுடன் பொல்கொல்ல அணைக்கட்டின் நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

1976 ஆம் ஆண்டு சனவரி மாதம் 08 ஆம் திகதி அணைக் கட்டுப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு பண்டாரநாயக்க அம்மையார் மற்றும் மைத்திரிபால சேனாநாயக்கவினால் ராஜரட்ட பிரதேசத்திற்கு நீரைத் திருப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சனவரி 08,  1976 இல் பொல்கொல்லையில் நடைபெற்ற அந்த நிகழ்வில் நானும் பஸ் வண்டியொன்றில் ஏறிவந்து இந்த அணைக்கட்டின் ஓரத்தில் நின்று நிகழ்வை அவதானித்துக் கொண்டிருந்தேன். அன்று முதல் இன்று வரை மகாவலி அபிவிருத்தித்திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாட்டில் முக்கிய பல்நோக்குத் திட்டமான மகாவலி அபிவிருத்திப் பெருந்திட்டம் 1977 இல் முன்னாள் சனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தின் கீழ் எனது நண்பரான அமைச்சர் காமினி திசாநாயக்கவின் தலைமையில் அபிவிருத்திப் பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது பண்டாரநாயக்க அம்மையாரின் காலத்தில் சோவியத் நாட்டின் பொறியியலாளர்களினால் மகாவலி பெருந் திட்டத்தை 30  ஆண்டுகளில் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் 1977 ஆம் ஆண்டு அரசாங்கம் கைத்தொழில்த் துறைக்கு முக்கியத்துவம் அளித்திருந்தமையினால் அதற்குத் தேவையான மின் உற்பத்தியை அடிப்படையாகக்கொண்டு காமினி திசாநாயக்கவின் தலைமையில் துரித மகாவலி அபிவிருத்தித் திட்டம் தொடக்கி  வைக்கப்பட்டது.

அமைச்சர் காமினி திசாநாயக்க மகாவலி அபிவிருத்தித் திட்டத்துடன் நெருங்கிய தொடர்பைக்கொண்ட ஒரு  மூத்த ஆளுமை என்பதை இந்த நாட்டில் எவரும் மறந்துவிட முடியாது. அவரது காலத்தில் கொத்மலை, ரந்தெனிகல, விக்டோரியா, ரந்தம்பே, மாதுரு ஓயா திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டன.

மொரகஹகந்த திட்டம் குறித்து கடந்த பல தசாப்தங்களாகப் பேசப்பட்டு வந்தது. இது விவசாயத்துறைக்கு மிக முக்கியமான திட்டமாகும். இதன் மூலம் 26, 27 மெகாவோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது. அக்காலத்தில் மொரகஹகந்தவுக்கு அவ்வளவுதூரம் கவனம் செலுத்தப்படவில்லை என்றாலும் நாம் பாடசாலை செல்லும் காலத்திலிருந்து அநுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, வவுனியா, வட மாகாணம், கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் நாம் தேர்தல் மேடைகளில் மொரகஹகந்த நீர்த்தேக்கம் குறித்து பேசக் கேட்டுள்ளோம். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனைத்து தேர்தல்களிலும் மொரகஹகந்த திட்டம் குறித்து பேசி வந்துள்ளனர்.

1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சனாதிபதித் தேர்தலின்போது பொலன்னறுவைக்கு வந்திருந்தபோது அங்கு உரையாற்றுவதற்கு முன்னர் என்னிடம் இந்தக்கூட்டத்தில் மக்களுக்கு  சிறப்பாக  என்ன கூறவேண்டியுள்ளது எனக்கேட்டார். நாம் ஆட்சிக்கு வந்ததும் மொரகஹகந்த திட்டத்தை மேற்கொள்வோம் என கூறுமாறு நான் சொன்னேன். அக்காலத்திலும் இந்தக் கனவு நிறைவேறவில்லை.  சனவரி 27,  2007  ஆம் திகதி முன்னாள் சனாதிபதி மகிந்த இராசபக்சாவுடன் மொரகஹகந்த திட்டத்திற்கு அடிக்கல் நடப்பட்டது. அவரிடம் நான் மொரகஹகந்தவின் வரலாற்றைக் கூறினேன். ராஜரட்ட விவசாயிகள் உள்ளிட்ட விவசாய சமூகத்தினர் நீருக்காக ஏங்கிய கண்ணீர்க் கதையை நான் கூறினேன்.

சனவரி 27,  2007   அன்று  ஒரு ரூபாவும் இன்றி மொரகஹகந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினோம். இந்த நீர்த்தேக்கத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வு ஐந்து வருடங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்படவிருந்தது. எனினும் இந்த நாட்டு அரசியலில் அரசியல் சீர்கேடுகள், துஷ்பிரயோகங்கள் இல்லாதிருந்தால் மக்களுக்காக ஐந்து வருடங்களுக்கு முன்னரேயே இந்த நிகழ்ச்சித் திட்டத்தை நிறைவு செய்திருக்க முடியும்.

இந்தப்  பாரிய திட்டத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படும். விவசாய சமூகத்தின் வரலாற்றில் பாரிய மாற்றங்கள் ஏற்படும். எமது தேசிய பொருளாதாரத்திற்கு முக்கியமான பலமாக அமையும்.

அரசர்கள் காலத்தில் அரிசியில் தன்னிறைவு பெற்றிருந்த வரலாறை நீங்கள் அறிவீர்கள். எமக்கு இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டை அரிசியில் தன்னிறைவு அடையச்செய்து விவசாயிகளின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தவும் நாட்டின் விவசாயத்துறையையும் இத்திட்டத்தின் மேலதிக பெறுபேறாக மீன்பிடித்துறையை மேம்படுத்தவும் கைத்தொழில் குடிநீர் போன்ற பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான பாரிய திட்டமாக இத்திட்டம் அமையும்

நாட்டைப் பொருளாதார ரீதியாக பலமான நாடாக முன்கொண்டு செல்வதற்கு மக்களுக்கு வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என நாம் பிரார்த்திக்கிறோம். எமது பிரார்த்தனைகள் நிறைவேறுவதற்கு இயற்கையின் வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் பாரிய நன்மைகள் எமக்குக் கிடைக்கும். மொரகஹகந்த திட்டத்தின் மூலம் சுமார் 82,.000 ஹெக்டெயார் விவசாயக் காணிகளை அபிவிருத்தி செய்ய முடியும். ஏனைய பல்வேறு துறைகளில் ஏற்படும் மாற்றங்களின் மூலம் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு மட்டுமன்றி சுகாதாரத்துறைக்கும் பாரிய நன்மைகள் கிடைக்கும். ராஜரட்ட சிறுநீரக நோய் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நோய்க்குக் காரணம் சுத்தமான குடிநீர் கிடைக்கப்பெறாமையாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இத்திட்டங்களின் பெறுபேறாக எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்கத்தை நாம் அடைந்துகொள்ள முடியும்.

இந்த நிகழ்ச்சித் திட்டத்துடன் பாடசாலைப் பிள்ளைகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் விவசாய சமூகத்தினரை அறிவூட்டுவதற்காக முன்னெடுக்கப்படும் சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் மிகவும் முக்கியமானவையாகும். இது இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கு நாம் செய்ய வேண்டிய முக்கியமான பொறுப்பாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டத்தை  தொடக்கியபோது மரம் நடுதல், வனப்பாதுகாப்பு, சுற்றாடல், பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டன. அதேபோன்று அமைச்சர் காமினி திஸாநாயக்க துரித மகாவலி அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பிக்கின்றபோது மரக்கன்றுகளை நாட்டி பாரிய சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்தார். எனவே இத்திட்டத்தை நடைமுறைபடுத்துவதன் மூலம் பொருளாதார கல்வி சுகாதாரம் போன்ற துறைகளிலும் இது முக்கியமான சந்தர்ப்பமாக அமைவதை குறிப்பிட முடியும்.

சனவரி 08, 1976 அன்று  ராஜரட்ட பிரதேசத்திற்கு நீரைத் திருப்புகின்ற நிகழ்வு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்றபோது மகாவலி கீதத்தை பாடியவர் பண்டிதர் அமரதேவ அகும் என்பதை நாம் மறந்துவிட முடியாது. அவரது குரல் மகாவலி இயக்கத்தை முன்கொண்டு செல்வதில் பாரிய சக்தியாக மாறியுள்ளது. மகாவலி இயக்கத்தில் இறுதி திட்டமாக மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டத்தின் பணிகளை நிறைவு செய்து நடைபெறும் இந்த நிகழ்வில் அன்று முதல் இன்று வரை மகாவலி இயக்கம் குறித்து 1930, 40 களில் தேசியக் கல்விமான்கள் அரசியல்வாதிகள் 60, 70 களில் சாத்திய வள ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் குறிப்பாக பொறியியலாளர்கள் தொழிநுட்பவியலாளர்கள் போன்ற அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தன்னிறைவான நாடாக இந்த நாட்டை கட்டியெழுப்பவும் உலகில் உன்னத தேசமாக மிளிரச் செய்யவும் நாளை பிறக்கவிருக்கும் தலைமுறையினருக்கு சிறந்ததொரு நாட்டை வழங்கவும் நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருக்கும் மகா சங்கத்தினருக்கும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.”

ஐந்து பிரம்மான்ட நீர்த் தேக்கங்களின் இறுதி நீர்த் தேக்கமான மொரகஹகந்த நீர்த் தேக்கம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த் தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 620,000 ஆயிரம் ஏக்கர் அடிகள், என்பதுடன் இது பராக்கிரம சமுத்திரத்தை விட ஆறு மடங்கு கொள்ளளவு  கொண்டது எஎன்பது குறிப்பிடத்தக்கதாகும். மொரகஹகந்த – களுகங்கை திட்டத்திற்கான மொத்தச் செலவு 100 பில்லியன் ரூபாவாகும்.

அடுத்ததாக கிளிநொச்சி, இரணைமடுக் குளத்துக்கு மொறகஸ்கந்த நீர்த் தேக்கத்திலிருந்து நீரைப் பெற்றுக் கொடுக்கும் திட்டம் உள்ளது. இதன் கீழ் வட மத்திய மாகாண வாய்க்கால் வழியே கனகராயன் ஆறு வரை தண்ணீர் கொண்டு போகப்படும். கனகராயன் ஆற்றுநீர் பின்னர் இரணைமடுக் குளத்தை சென்றடைகிறது. இந்தத் திட்டம் 2029 இல முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாவலி துரித அபிவிருத்தி திட்டத்தில் வேலைபார்த்த சிங்கள அதிகாரிகள்   மதுர ஓயா, மண்லாறு (வெலி ஓயா)திட்டங்களின் கீழ் சிங்களவர்களை குடியேற்றுவதன் மூலம் வடக்கையும் கிழக்கையும் பிரித்துவிடக்  கங்கணம் கட்டிக் கொண்டு பணியாற்றினார்கள்.

சிங்களக் குடியேற்றங்கள் ஆட்சி மாறினாலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதற்கு  அமைச்சர்களை விட  அதிகாரிகளே அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். வட – கிழக்கை சிங்கள மயப்படுத்துவதே  அரசாங்கத்தின் திட்டம் என்பதை மகாவலி அபிவிருத்தி சபையின்  அதிகாரி     ஹேகன் குணரத்தினா    ஒளிவு மறைவின்றிக் கூறியிருக்கிறார்.

“All wars are fought for land.. By settling the (Sinhala) people in the Maduru Oya we were seeking to have in the Batticaloa zone a mass of persons opposed to a separate state.” Sinhala Mahaveli Ministry Official, Herman Gunaratne in the Sri Lanka Sunday Times, 26 August 1990. ” (Sunday Times August 26, 1990).

“எல்லாப் போர்களும் நிலப்பறிப்புப் பற்றியதுதான். மாதுறு ஓயா இல் (சிங்கள) மக்களை குடியமர்த்துவதன் மூலம் மட்டக்களப்பு வலையத்தைத் தனிநாட்டுக்கு எதிரான ஆட்களால் நிரப்புவதுதான் எமது திட்டம்” என மகாவலி அமைச்சின் சிங்கள அதிகாரியான ஹேர்மன் குணரத்தின சிறீலங்கா சண்டே ரைம்ஸ் செய்தித்தாளில் (ஓகஸ்ட் 26,1990) எழுதியிருந்தார். (வளரும்)


கோடி கொடுத்தாலும் கோடீஸ்வரனை மறவோம்!

நக்கீரன்

முன்னாள் அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் தலைவரும், சட்டத்தரணியும் சிங்களம் மட்டும் சட்டத்தைத் எதிர்த்து மாவட்ட நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள் சபையின் நீதித்துறைப் பிரிவான Privy Council வழக்காடியருமான  செல்லையா கோடீஸ்வரன் அவர்களது மறைவு தமிழினத்துக்கு பெரிய இழப்பாகும். அரவது மறைவு ஆழ்ந்த கவலை அளிக்கிறது.  மறுபுறம் இந்த உலகில் பிறந்த எல்லோரும் ஒரு நாள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத்தான் போகிறார்கள். அதனால்தான் சாதலும் புதுவதன்றே எனச் சங்க காலப்  புலவர் பூங்குன்றன் பாடியிருக்கிறார்.

கோடீசுவரன் இறக்கும் போது 85 அகவையை நிறைவு செய்திருந்தார்.  நீண்ட காலம் உடல்நலக் குறைவாக இருந்தவர். அவரைப் பொறுத்தளவில் சாவு அவரது துன்பத்தில் இருந்து விடுதலை அளித்துள்ளது. நான் 1980 கடைசியில் பணி நிமித்தமாக வெளிநாடு சென்றுவிட்டதால் அவரோடு இருந்த உறவு அறுந்து போய்விட்டது.

கோடீஸ்வரனுக்கும் எனக்கும் அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் தோற்றம் பெறுவதற்கு முன்னரே நட்பு ஏற்பட்டிருந்தது. அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் மே 21, 1961 அன்று தொடக்கப்பட்டது. கொழும்புக் கோட்டையில் இருந்த ஒரு உணவகத்திலேயே தொடக்கக் கூட்டம்  இடம் பெற்றது.

அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தைத் தொடக்கு முன்னர் அரசாங்க  லிகிதர் சேவைச் சங்கம் (Government Clerical Service Union) என்ற தொழிற்சங்கத்தில் இருந்து விலகிக் கொண்டோம். இந்தச் சங்கத்தில் கணிசமான தமிழர்கள் உறுப்பினர்களாக இருந்தும் அதன் கட்டுப்பாடு சிங்களவர்களது கையிலேயே இருந்தது. இந்த அமைப்பில் இருந்து தமிழ் ஊழியர்கள் விலகுவதற்கு 1956 இல் நிறைவேற்றப்பட்ட சிங்களம் மட்டும் என்ற சட்டமே காரணமாக இருந்தது.

அரச சேவையில் இருந்த எழுதுவினைஞர்களைப் பிரதிநித்துவப் படுத்திய ஒரே தொழிற்சங்கமாக அரசாங்க  லிகிதர் சேவைச் சங்கம் இருந்தது. இந்தச் சங்கத்தை கட்டியெழுப்புவதில் கே.சி. நித்தியானந்தா, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தமிழீழம் பற்றி உரையாற்றிய கிருஷ்னா வைகுந்தவாசன் (பொதுச் செயலாளர் 1947-1950),  ஏ.ஆர். ஆசீர்வாதம் போன்றவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். கே.சி. நித்தியானந்தா அரசாங்க சேவை சங்கத்தின் தலைவராக 1950 – 1954 வரை பணியாற்றியவர். 1954 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டத்தை விமர்ச்சித்தார் என்ற குற்றச் சாட்டில் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் ஆறு மாதம் கழித்து மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார்.

கே.சி. நித்தியானந்தா பிற்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இயங்கிய பனம்பொருள் வாரியத்தின் தலைவராக இருந்தவர். 1978ஆம் ஆண்டில் தமிழரசுக் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் ஆக இருந்த அ. அமிர்தலிங்கம் அவர்களின் முயற்சியின் பயனாக பனை அபிவிருத்திச் சபை என்ற ஒரு சபை முதன்முதலாக வட பகுதியில் தொடக்கி வைக்கப்பட்டது. இதுவே வடபகுதி மக்களின் அப்போதைய தமிழரின் ஒரே ஒரு கூட்டுத்தாபனம் அல்லது சபையாக விளங்கியது என்று கூறலாம். இச்சபையின் தலைமை அலுவலகம் யாழ்ப்பாணத்தில் அமைய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பரிந்துரையின் பெயரில் தொழிற்சங்கவாதி கே.சி.நித்தியானந்தா பனம் பொருள் அபிவிருத்தி சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார். (https://www.thinakkural.lk/old/article.php?article/huedh7kwzo267894aef384416108jfgejefa3380a3bed3faf1f9d5duzihk)

நித்தியானந்தா ஆங்கிலத்தில் மிகவும் சரளமாகவும் ஆணித்தரமாகவும் மேடையில் பேசக் கூடியவர். கலாநிதிப் பட்டங்கள் பெற்ற என்.எம். பெரேரா, கொல்வின் ஆர்டி சில்வா போன்றவர்கள் மேடைப் பேச்சில் அவர் முன் நிற்க முடியாது!

கிருஷ்ணா வைகுந்தவாசன் (வி.கே. வைகுந்தவாசன்) தொழிற் சங்க நடவடிக்கைளில்  ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் 04 ஒகஸ்ட்,950 ஆம் ஆண்டு வேலையில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியால்  நீக்கப்பட்டார். அவரோடு சேர்த்து இன்னும் மூன்று பேர், எம்.சி. நல்லதம்பி, ஏ.ஆர். ஆசீர்வாதம், ரி.பி. இலங்கரத்தினா வேலையில் இருந்து நீக்கப்பட்டார்கள். இதில் இலங்கரத்தின அரசியலில் குதித்து கண்டித்  தொகுதியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு 1956 இல்  நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்.  எஸ்.டபுள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க எந்த உள்ளூராட்சி அமைச்சு அவரை வேலையில் இருந்து நீக்கியதோ அதே அமைச்சின் அமைச்சராக அவரை நியமித்தார்.  அடுத்த மூன்று சகாப்த காலம் நிதி அமைச்சு  உட்பட பல முக்கிய அமைச்சுப் பதவிகளை அவர் வகித்தார்.  இலங்கரத்தின சிங்களத்தில் பல நாடகங்கள், நாவல்கள் எழுதியிருக்கிறார்.

உள்த்துறை அமைச்சராக நியமனம் பெற்ற இலங்கரத்தின அவர்களுக்கு அரசாங்க லிகிதர் சேவைச்சங்கத்தின் கிளைகள் அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தின். இரத்தினபுரி கிளை சார்பாக அவருக்கு அளித்த இரவு விருந்தில் அந்தக் கிளையின் செயலாளர் என்ற முறையில் அவரை வரவேற்று உரையாற்றினேன்.

இலங்கரத்தின அவர்களது முதல் தேர்தல் வெற்றிக்கு நித்தியானந்தா போன்ற பல தமிழர்கள் அரும்பாடு பட்டார்கள். கொழும்பில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை கண்டிக்குச் சென்று பின்னர் ஞாயிறு இரவு திரும்புவார்கள்.

வைகுந்தவாசன் சந்தித்த பிரமுகர்கள் பலர்.  பிரதமர் இந்திரா காந்தி,   பிரதமர் பிவி நரசிம்மராவ் (1980)  போப்பாண்டவர் (1983)  ஹறோல்ட் மக்மிலன்,  இளவரசர்  சார்ல்ஸ் (1985). மூன்று மாதம் சீனா, சோவியத் ஒன்றியம் இரண்டையும் (1952)  சுற்றிப் பார்த்தவர். தனது பிரயாண அனுபவங்களை நூலாக வெளியிட்டார்.

வைகுந்தவாசன் ஒரு சிறந்த ஊடகவியலாளர். தமிழ் பற்றாளர். தமிழ் உணர்வாளர். இவர்தான் ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு ஒக்தோபர் 05, 1978 அன்று நியூயோர்க் நகரில் இடம்பெற்ற ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் தந்திரமாக  நுழைந்து “எனது பெயர் கிருஷ்ணா சிறி லங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இருக்கும் 25 இலட்சம் மக்களைக் கொண்ட பலம் பொருந்திய தமிழீழத்திலிருந்து வந்திருக்கின்றேன்…………..” எனப் பேசியவர்.

பொதுச் சபையில் 150 நாடுகளைச் சேர்ந்த 2000 பேராளர்கள் வரை அவரது பேச்சைக் 199 கேட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்களில் உலக நாடுகளின் சனாதிபதி, பிரதமர் வெளிநாட்டு அமைச்சர்கள் எனப் பலரும் பங்கு கொண்டிருந்தார்கள். பேசி முடித்ததும் அவரைப் பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றி விட்டார்கள். (https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D)

ஐ.நா வில் தமிழன் என் முதல் முழக்கம்! என்ற நூலை எழுதி வெளியிட்டவர்.  ஒக்தோபர் 1994  ஆம் ஆண்டு  கனடாவில் இந்த நூலை வெளியிட்டார். விற்பனையாகாத நூல்களின் பெறுமதிக்குரிய பணத்தை அவருக்கு கொடுத்து அனுப்பினேன். அவர் எழுதிய இன்னொரு நூல் “Life and Times of an Activist”. இந்த நூல் 1999 இல் வெளியிடப்பட்டது. ஆங்கிலத்தில் மக்கள் குரல் (People’s Voice)  என்ற  வார ஏட்டை (1951 1953) வெளியிட்டு வந்தார்.   இடதுசாரிப் போக்குடையவர்களால் விரும்பிப் படித்த வெளியீடு ஆகும்.

பழ நெடுமாறன் வீட்டில் நொவெம்பர் 1982 இல் பிரபாகரனைச் சந்தித்து வைகுந்தவாசன்  காலை 10.00 மணி முதல் மாலை 6.00 வரை தமிழீழ விடுதலைப் பற்றி உரையாடினார்கள். (ஐ.நா வில் தமிழன் என் முதல் முழக்கம்! பக்கம் 114 )

வைகுந்தவாசன் பின்னர் சாம்பியா நாட்டில் நீதிபதியாகக் கடமையாற்றினார். இதன் பின் ஓய்வு பெற்று இலண்டன் சென்று வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

இஏழாயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டிருந்த அரசாங்க லிகிதர் சேவைச் சங்கம் தொழிற்சங்கம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கின் கீழ் இருந்தது. பின்னர் அது எல்எஸ்எஸ்பி கட்சியின் செல்வாக்கின் வந்தது.

ந்த இடத்தில் அநியாயமாகக் கொலைசெய்யப்பட்ட க. சிவானந்தசுந்தரம் பற்றிப் பதிவு செய்ய வேண்டும். உண்மையில் அவர்தான் அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் உருவாகுவதற்கான காரண கர்த்தாவாக இருந்தார். கோடீஸ்வரன் உட்பட என்போன்றவர்களுக்கு சேவையிலும் அகவையிலும் மூத்தவரான அவர்தான் வழிகாட்டியாக விளங்கினார்.

அரசாங்க எழுது வினைஞர் சங்கத்தின் தொடக்கக் கூட்டத்தில் க. சிவானந்தசுந்தரம் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். திரு இ. பாலசுப்பிரமணியம் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இராமநாதன் துணைப் பொதுச் செயலாளர். நான் உட்பட சிலர் செயல்குழுவுக்குத் தெரிவானோம். அப்போது கோடீஸ்வரன் கேகாலைக் கச்சேரியில் பணியில் இருந்தார்.  அதனால் அவரால் தொடக்கக் கூட்டத்துக்கு வரமுடியவில்லை. ஆனால் பின்னர் செயல்குழுவுக்குத் தெரிவு செய்யப்பட்டார்.

சிவானந்தசுந்தரம் அரச சேவையில் இருந்து இளைப்பாறிய பின்னர் தந்தை செல்வநாயகத்தின் தனிச் செயலாளராக சில காலம் அவரது வீட்டில் பணியாற்றினார். பின்னர் தனது சொந்த ஊருக்குத் திரும்பி மக்கள் மன்றம் என்ற அமைப்புக்குத் தலைவராக இருந்தார். பருத்தித்துறை பிரசைகள் குழுத் தலைவராகவும் இருந்தார்.  வட – கிழக்கு இடைக்கால சபைக்கு வி,புலிகளால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று பேரில் சிவானந்தசுந்தரம் அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒக்தோபர் 21, 1988 அன்று அரியாலையில் வீரச்சாவு எய்திய வி.புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட சிறப்புத் தளபதியுமான  லெப். கேணல் சந்தோசம் அவர்களின் இறுதிச் சடங்கில் பங்கு பற்ற அரியாலை பிரஜைகள் குழுவின் அழைப்பின் பேரில் சிவானந்தசுந்தரம் அங்கு சென்றிருந்தார். இரங்கல் கூட்டத்தில் உரையாற்றினார். பின்னர் அவர் ஒரு தனியார் வாகனத்தில் பருத்தித்துறையில் இருந்த தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது வல்லை வெளியில் அவர் பயனித்த வாகனம் பழுதடைந்துவிட்டது.  அதனால்  அவர் இபோச வண்டியொன்றில் பயணத்தைத் தொடர்ந்தார். சிறிது நேரத்தில் அந்த வண்டி இபிஆர்எல்எவ அமைப்பைச் சேர்ந்த மூன்று ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டது. சிவானந்தசுந்தரம் அவர்களது பெயரை உச்சரித்து அந்தப் பெயருக்கு உரியவரை இறங்குமாறு கேட்டார்கள். சிவானந்தசுந்தரம் இறங்கியதுதான் தாமதம் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள். இந்தச் சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் உதயன் நாளேட்டில் அன்றைய இந்தியத் தூதுவர் டி.என். டிக்க்ஷித் அவர்களைச் சிவானந்தசுந்தரம் சந்தித்துப் பேசிய விபரத்தை வெளியிட்டிருந்தது. அந்தச் செய்திக்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு இருந்திருக்கலாம்.

கோடீஸ்வரன் இந்த முன்னோடிகளது  வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர். அவரைப் போல தன்னலமற்ற துணிச்சலான ஒருவரைப் பார்ப்பது அரிதாகும். கோடி கொடுத்தாலும் கோடீஸ்வரனை நாம் மறக்க மாட்டோம்.

எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்தால் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் யூன் 05, 1956 அன்று சிங்களம் மட்டும் சட்டம் (Sinhala Only Act) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு அல்லது அதிகாரபூர்வமாக 1956 ம் ஆண்டின் 33ம் இலக்க அரசகரும மொழிகள் சட்டம் (Official Language Act No 33) என்றே பெயரிடப்பட்டது. அதன் மூலம் இலங்கையின் ஆட்சிமொழியான ஆங்கில மொழி அகற்றப்பட்டு 70% (இன்று 75% ) பெரும்பான்மை சிங்களவர்கள் பேசும் சிங்கள மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டது.

1956 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சிங்களம் மட்டும் சட்டம் என்போன்ற இளைஞர்களை அரசியலில் தீவிரமாக ஈடுபட வைத்தது. அரசாங்க ஊழியர்களுக்கு அரசியல் உரிமை இருக்கவில்லை. அதனால் தொழிற்சங்கப் போர்வையைப் பயன்படுத்தி அரசியலில் ஈடுபட்டோம்.

ஆவணி 19, 1956 அன்று திருமலையில் நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கடக்சியின் 4 ஆவது  மாநில மாநாட்டில் பார்வையாளனாக கலந்து கொண்டேன். அடுத்த ஆண்டு (1957)  மே மாதம் 25 இல் நடந்த 6 ஆவது தேசிய மாநாட்டிலும் பார்வையாளனாகக் கலந்து கொண்டேன்.  இந்த இரண்டு மாநாடுகளிலும் கலந்து கொண்ட பின்னர் இரத்தினபுரி கச்சேரியில் இருந்து திருகோணமலை கச்சேரிக்கு மாற்றலாகிப் போக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.  மாற்றல் எடுப்பது சுலபமல்ல. கே.சி. நித்தியானந்தா அவர்களே தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மாற்றல் வாங்கித் தந்தார்.

1957 ஆம் ஆண்டு திருகோணமலை கச்சேரிக்கு மாற்றம் பெற்றுப் போனபோது கோடீஸ்வரன் ஏற்கனவே அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தார்.  திருகோணமலை அவரது சொந்த மாவட்டம்.  இருவரும் காணிப்பிரிவில்தான்  பணியாற்றினோம்.

மாவட்ட குடியேற்ற அதிகாரியாக அதிகாரம் என்ற சிங்களவர் இருந்தார். அவர்தான் எங்களது நேரடி உயர் அதிகாரி ஆவார்.  அரசாங்க அதிபராக இருந்தவர் மக்கேசர் என்ற பறங்கியர். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்.ஆர். இராசவரோதயம்.

இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் தொடக்கம் திருகோணமலை மாவட்டத்துக்கு தமிழர் ஒருவர் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டது கிடையாது. இப்போது கூட ஒரு சிங்களவர்தான் அரசாங்க அதிபராக (மாவட்டச் செயலாளர்) என்.ஏ.ஏ.புஸ்பகுமார இருக்கிறார். அவருக்கு முன்னர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ரி.ரி.ஆர்.டி.சில்வா இருந்தார். இவர்தான்  இந்துக்களுக்கு புனிதமான கன்னியா வெந்நீர் ஊற்றுக் கிணறுகளை  ஒரே நாளில் (ஒக்தோபர் 5, 2010)  கன்னியா பிரதேச சபையால் நாட்டப்பட்டிருந்த அறிவித்தல் பலகைகளை புடுங்கி எறிந்து விட்டு அதனை தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைத்தவர். க்கப்பட்டது.

இந்த வெந்நீர் ஊற்றுக் கிணறுகள் இலங்கை மன்னன் இராவணன் காலத்தில் இருந்து இந்துக்கள் இறந்தவர்களுக்கு பிதிர்க் கடன் செய்யப் பயன்பட்டு வந்திருக்கிறது. இராவணன் தனது தாய்க்கு இறுதிக்கிரியைகள் செய்வதற்காக தனது உடைவாளை உருவி ஏழு இடங்களில் குத்தியதாக ஐதீக, புராணக் கதைகள் மற்றும் செவி வழிக்கதைகளும் உள்ளன. கன்னியா வெந்நீரூற்றுககு அருகில் ஒரு பிள்ளையார் கோவிலும் சிவன் கோவிலும் காணப்பட்டன. தற்போது பிள்ளையார் கோவில் உடைக்கப்பட்டும் சிவன் ஆலயம் பராமரிப்பாரற்றும் காணப்படுகின்றன. இந்தக் கிணறுகளின்  அருகே ஒரு பவுத்த விகாரை கட்டப்பட்டு நிரந்தரமாக  அங்கு ஒரு தேரர் வசித்து வருகிறார். (http://velippunarvu.blogspot.com/2014/02/blog-post.html)

திருக்கோணேசுவரம் இராவணன் வழிபாடு செய்த சிவத்தலம். அந்தப் பூமி சிவபூமி (http://www.arayampathy.lk/history/173-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%).

நான் திருகோணமலைக்  கச்சேரியில் பணியில் இருந்த கால கட்டத்தில் அல்லை – கந்தளாய் சிங்களக் குடியேற்றம் நடந்து முடிந்திருந்தது.  அதனைத் தொடர்ந்து முதலிக்குளம் (மொறவேவா) பதவிக்குளம் (பதவியா) போன்ற குடியேற்றம் நடந்து கொண்டிருந்தது.

அல்லை – கநதளாய் குடியேற்றத் திட்டத்தில் குடியேறியவர்கள் தென்னிலங்கையில் இருந்து தங்களது நெருங்கிய சொந்தக்காரர்களை வரவழைத்து அடாத்தாக காடுகளை அழித்து அதில் ஒரு குடிசையைக் கட்டி உட்கார்ந்து விடுவார்கள். காலப்போக்கில்  சட்ட விரோதமாக குடியேறியவர் தனக்கு அந்தக் காணிக்கு காணி அபிவிருத்தி அனுமதிப் பத்திரம் (LDO permit) ஒன்றை வழங்குமாறு கேட்பார்.  மாவட்ட காணி அதிகாரி  கண்துடைப்புக்கு ஒரு சின்ன விசாரணையை வைத்துவிட்டு அந்தக் காணிக்குரிய அனுமதிப் பத்திரத்தை வழங்க உத்தரவு போட்டுவிடுவார்.  பல சமயங்களில் ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான சிங்களவர்கள் காட்டை வெட்டி அடாத்தாகக்  குடியேறிவிடுவார்கள். சிறிது காலம் கழித்து அவர்களுக்கு  தலைக்கு 5 ஏக்கர் காணிக்கான (3  ஏக்கர் நெற்காணி, 2 ஏக்கர் மேட்டுக் காணி) அனுமதிப் பத்திரங்கள் கொடுக்கப்பட்டுவிடும். அதன் பின்னர் அரசு  வீடு கட்ட, கிணறு வெட்ட, வேலியடைக்க பணம் கொடுக்கும்.

இதில் கொடுமை என்னவென்றால் இந்த விசாரணைக்கு பணிகாரணமாக நாங்களும் உடந்தையாக இருந்தோம்.   காணி அபிவிருத்தி அதிகாரி இந்தக் குடியேற்றத் திட்டங்களுக்கு எங்களைத்தான் அழைத்துப் போவார். அவ்வப்போது அரசாங்க அதிபரும் அழைத்துப் போவார். இப்படித்தான் திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர்களின் மக்கள் தொகை அதிகரித்தது. அதே நேரம் தமிழர்களுடைய தொகை தேய்ந்து கொண்டு வந்து இன்று அவர்கள்  அந்த மாவட்டத்தில் சிறுபான்மையாகி விட்டனர்.

அட்டவணை 1

திருகோணமலை மாவட்டம் இனவாரியான மக்கள் தொகை  1827 – 2012

 

ஆண்டு

முஸ்லிம்

தமிழ்

சிங்களம்

ஏனையவர்

Total
No.

No.

%

No.

%

No.

%

No.

%

      1827

3,245

16.94%

15,663

81.76%

250

1.30%

0

0.00%

19,158

1881 Census

5,746

25.89%

14,304

64.44%

935

4.21%

1,212

5.46%

22,197

1891 Census

6,426

24.96%

17,117

66.49%

1,105

4.29%

1,097

4.26%

25,745

1901 Census

8,258

29.04%

17,060

59.98%

1,203

4.23%

1,920

6.75%

28,441

1911 Census

9,700

32.60%

17,233

57.92%

1,138

3.82%

1,684

5.66%

29,755

1921 Census

12,846

37.66%

18,580

54.47%

1,501

4.40%

1,185

3.47%

34,112

1946 Census

23,219

30.58%

33,795

44.51%

11,606

15.29%

7,306

9.62%

75,926

1953 Census

28,616

34.10%

37,517

44.71%

15,296

18.23%

2,488

2.96%

83,917

1963 Census

40,775

29.43%

54,452

39.30%

39,925

28.82%

3,401

2.45%

138,553

1971 Census

59,924

31.83%

71,749

38.11%

54,744

29.08%

1,828

0.97%

188,245

1981 Census

75,039

29.32%

93,132

36.39%

85,503

33.41%

2,274

0.89%

255,948

2001 Census

n/a

n/a

n/a

n/a

n/a

n/a

n/a

n/a

n/a

2007 Enumeration

151,692

45.37%

96,142

28.75%

84,766

25.35%

1,763

0.53%

334,363

2012 Census

152,854

40.42%

122,080

32.29%

101,991

26.97%

1,257

0.33%

378,182

சரியாக நூறு ஆண்டுகளுக்கு (1921)  முன்னர் 1,501 (4.40%) ஆக இருந்த சிங்களவர்களின் எண்ணிக்கை 2012 இல் 101,991 (26.97%)  ஆக உயர்ந்துள்ளது.  இந்தச் சிங்களக் குடியேற்றம் பற்றி சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். குறிப்பாக கோப்பாய் கோமான் வன்னியசிங்கம் அவர்களது கவனத்துக்குக் கொண்டு சென்றோம்.  (வளரும்)


 

கோடி கொடுத்தாலும் கோடீஸ்வரனை மறவோம்!

About editor 3116 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply