அமரர் திருமதி  சரஸ்வதி கனகரத்தினம்

 

அமரர் திருமதி  சரஸ்வதி கனகரத்தினம்

பிறப்பு 04 – 02 – 1925                           இறப்பு 25 – 01 – 2019  

கோடி நன்றி 

எமது அருமை அம்மம்மா  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த போது ஓடோடி வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும்   அவரது மறைவுச் செய்தி அறிந்து தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறியவர்களுக்கும் நேரில் வந்து  இரங்கல்  தெரிவித்தவர்களுக்கும் மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் உணவு பரிமாறியவர்களுக்கும்  எங்கள் குடும்பத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது மறைவுச் செய்தியை வெளியிட்ட ஈழமுரசு, தமிழ்வண் தொலைக்காட்சி, லங்காசிறி இணையதளம் ஆகிய ஊடகங்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அம்மம்மாவின்  நினைவாக கொழும்புத்துறை துரையப்பா வித்தியால  நூலகத்துக்கு நூல்கள் அன்பளிப்புச் செய்துள்ளோம். 

தங்கவேலு (நக்கீரன்) குடும்பம்


நிறைவாழ்வு வாழந்து மறைந்த அம்மம்மா 

வணக்கம். இந்தக் கொட்டும் பனியிலும் குளிரிலும் (-30 பாகை ) எங்களது அன்பு அம்மம்மா சரஸ்வதி கனகரத்தினம் அவர்களது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்த வந்திருக்கும் உங்கள் எல்லோருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகக் குறுகிய காலத்தில் எங்களது குடும்ப உறவுகள் இருவரை இழந்துள்ளோம். ஒருவர் எனது மூத்த மருமகள் துஷ்யந்தி  கடந்த ஆண்டு மே மாதம் 31 இல் தனது 49 ஆகவையில் காலமாகிவிட்டார். கூற்றுவனோடான நீண்ட போரில் அவர் தோற்றுப் போனார். கூற்றுவன் வென்றுவிட்டான். அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்களால் முடியவில்லை. அவர் தான் அதிக நாட்கள் உயிரோடு இருப்பேன் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டார். தனது 49 பிறந்த நாளைக் கொண்டாடி எல்லோரோடும் சேர்ந்த ஒளிப்படம் எடுத்துக் கொண்டார்.

மற்றவர் இங்கே நிரந்தரமாகத் தூங்கிக் கொண்டிருக்கும் எமது அம்மம்மா.  ஒரு குடும்பப் பெண் எப்படி இருக்க வேண்டும் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணமாகவும் இலக்கியமாகவும் வாழ்ந்து தனது 93 ஆவது அகவையில்  மறைந்துவிட்டார். இது கொஞ்சமும்  இன்னும் இரண்டு வாரம் உயிரோடு இருந்திருந்தால்  அவர் 94 ஆவது அகவையைக் கொண்டாடி இருப்பார். 

ஒரு உயிரின் பயணம் கருவறையில் தொடங்கி கல்லறையில் முடிகிறது என்கிறார்கள் அறிஞர்கள். எங்கள் அம்மம்மாவின் பயணம் கருவறையில் தொடங்கி  சுடுகாட்டில் முடிந்துவிட்டது.

சாவு இயற்கையானது, அதனை யாராரும் வெல்ல முடியாது.  அது  மானிடர்களுக்கு இயற்கை கொடுக்கும் நிரந்தரமான விடுதலை. அனைத்து உயிரினங்களும் இயற்கையின் இந்த விதிக்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டும்.  தப்ப முடியாது. ஆனால் இளமையில் சாவு என்பது கொடுமையானது. பெரும்பாலானவர்களுக்கு மனைவி, கணவன் அல்லது பிள்ளையின் மரணமே தங்கள் வாழ்நாள் காலத்தில் சந்திக்கும் பெரும் அதிர்ச்சிதரும் அனுபவமாக இருக்கும்.  

முடிந்த வரை நீண்ட காலம் வாழவே அனைவரும் விரும்புகின்றனர் என்று பொதுவான நம்பிக்கை இருக்கிறது. பொன் வேண்டும், பொருள் வேண்டும் என்பவர்கள் சாவு வேண்டும் என்று யாசிப்பதில்லை. பயங்களில் சாவுப் பயம் அதிர்ச்சி தருவது. உலகின் எல்லா மொழிகளிலும் மக்களுக்கு பிடிக்காத ஒரு வார்த்தை மரணம்.

இரவு – பகல்  வருவதுபோல வாழ்க்கையில் இன்பம் –  துன்பம்,  உயர்வு – தாழ்வு, வந்தே தீரும் இவற்றை சமத்துவ பாவனையோடு பார்க்க வேண்டும். சாவதும் புதுவது அன்றே! செத்துப் போவதும் ஒன்றும் புதியது இல்லை. வாழ்தல்  இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் தவறு.

எல்லாவற்றையும் சமமாகப் பார்க்கும் மனப்பக்குவம் எமக்கு வேண்டும். அதனை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அம்மம்மாவும் எனது மாமனாரும் திருமணமான காலம் தொட்டு ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வாழ்ந்தவர்கள்.  இருவரும் ஒரே ஊரைச் சார்ந்த உறவுமுறைக்காரர்கள். அவர்களுக்கிடையே காணப்பட்ட அன்புக்கு அதுவும் ஒரு  காரணமாக இருந்திருக்கலாம். மாமா 1999 ஆம் ஆண்டு தனது 81 ஆவது அகவையில் மறைந்து போனார். அவருக்கு பிற்காலத்தில் நீரிழிவு நோய். மூன்று நேரமும் ஊசிமருந்து போட வேண்டும். இதை அம்மம்மாவே நேரம் தவறாமல் செய்வார். உணவிலும் மிகக் கவனம் எடுத்து உண்ணக் கொடுப்பார்.

மாமாவின் மறைவு அம்மம்மாவுக்கு பெரிய இழப்பு. அதில் இருந்து அவர்  முற்றாக மீளவே இல்லை. அவரது படத்துக்கு ஒவ்வொரு நாளும் விளக்கேற்றி ஒரு வாழைப்பழமோ, பாலோ படைப்பார். இதில் ஒரு நாள் கூடத்தவறியதில்லை. 

அம்மம்மா அதிகம் படியாதவர். ஆனால் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் பாடல்கள் அத்துப்படி. அவர் தனது பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள் எல்லோருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக (role model) விளங்கினார்.

நான் பணி நிமித்தம் 1980  கடைசியில் நைசீரியாவுக்கு நானும் எனது துணைவியாரும் கடைசி இரண்டு பிள்ளைகளும் போய்விட்டோம். எஞ்சியிருந்த பிள்ளைகளை அவரது பொறுப்பில் விட்டு விட்டோம். அவர்தான் அவர்களை கண்ணும் கருத்துமாகப் பார்த்து வந்தார். 1983 இனக் கலவரத்துக்குப் பின்னர் யாழ்ப்பாணம் சென்றுவிட்டனர்.  பின்னர் இரண்டு பிள்ளைகள்  தமிழ்நாட்டில் படிக்கப் போய்விட்டார்கள்.

அதில்  எங்களது மூன்றாவது மகன்  விடுமுறையில் வீடு வந்த போது மெலிந்து இருந்தார். அதனைப் பொறுக்க முடியாத மாமாவும் மாமியும் தமிழ்நாடு சென்று ஒரு  சின்ன வீட்டை வாடகைக்கு எடுத்து தன் கையால் சமைத்து உணவு பரிமாறினார்.  மொத்தம் மூன்று மாதங்கள் அங்கு இருந்தார்கள்.

நைசீரியாவில் இருந்து நாங்கள் கனடாவுக்கு 1987 இல் வந்த பின்னர் முதலில் பிள்ளைகளையும் பின்னர் மாமா, மாமி இருவரையும் கனடாவுக்கு 1993 ஆம் ஆண்டு வரவழைத்தோம்.

எனது மாமா 20 ஆண்டுகளுக்கு முன்னர்  தனது 81 ஆவது  அகவையில் காலமாகிவிட்டார்.  அதன் பின்னர் அம்மம்மாவுக்கு வாழவேண்டிய ஆசை போயிருக்க வேண்டும்  ஆனால்  கோகவில்லை.

காரணம் அவர் தனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள் மீது வைத்திருந்த அளவு கடந்த அன்பு, ஆசை. பாசம்.

பூட்டப் பிள்ளைகளை கிட்ட அணைத்து தனது மடியில் வைத்திருப்பதில் அவருக்கு அளவுக்கு அதிகமான ஆனந்தம்.

பூட்டப் பிள்ளைகள் ஒருவர் தவறாது பள்ளிக்குப் போகு முன்னர் கொஞ்சிவிட்டுப் போவார்கள் அது போல பள்ளியால் வந்த உடனும்  பாட்டியை கட்டிப் பிடிச்சுக் கொஞ்சுவார்கள்.

இது அவருக்கு ஒரு ரொனிக் மாதிரி.

கடந்த  நொவெம்பர் மாதத்தில் இருந்து அவருக்கு உடல் நிலை சரியில்லாது இருந்தது. அதனால் அவரது மகன்கள் இலண்டனில் இருந்து வந்து பார்த்தார்கள். அவர்களைக் கண்டபின் அவரது உடல்நிலை தேறியமாதிரி இருந்தது.

அவர்கள் ஒரு நான்கு கிழமை நின்றுவிட்டு ஒருவர்  டிசெம்பர் முதல் வாரத்திலும் மற்றவர் டிசெம்பர் இரண்டாம் வாரத்திலும் சென்றுவிட்டார்கள்.

அம்மம்மா சாப்பிடுவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைதjதுக் கொண்டு வந்தார். திராவகப் பொருட்களை மாத்திரம் அருந்தினார். பின்னர் அதுவும் முடியாமல் இருந்துவிட்டது.

கடந்த சனவரி 11 ஆம் நாள் ஒரு வெள்ளிக்கிழமைஅவரை மருத்துவமனையில் சேர்த்தோம். அவரைச் சோதித்த மருத்துவர்கள் அவருக்கு அவரது பித்தப்பையில் கல்லு இருப்பதாகச் சொன்னார்கள். அதனை அகற்ற

 14 ஆம் திகதியை தெரிவு செய்தார்கள்.  ஆனால் அவர் மருத்துவ மனையில் சேர்த்த நாள் தொடக்கம் இருமத் தொடங்கிவிட்டார்கள். மருத்துவர்கள் அதற்குக் காரணம் நியூமோனியா என்றார்கள். அதனால் பித்தப் பையில் உள்ள கல்லை அகற்றும் முயற்சி கைவிடப்பட்டது.

சனவரி 17 ஆம் திகதி எங்களது 57 ஆவது  திருமண நினைவு நாள். இதனை எனது துணைவியார் அம்மம்மாவுக்கு நினைவு படுத்தியிருக்கிறார். உடனே அவரது கையைத் தடவி நீ ஒரு குறையும் இல்லாமல் நீடு வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்.

இரவு பகல் கவனமாகப் பார்த்த மகளிடம் ‘என்னாலே உனக்குக் கரைச்சல்’ எனச் சொல்லியிருக்கிறார். இதைக் கேட்ட எனது துணைவியார் அழுதே விட்டார். ‘அப்படிச் சொல்லாதே அம்மா. எனக்கு எந்தக் கரைச்சலும் இல்லை என அழுது கொண்டே கையைப் பிடித்துக் கொண்டார். கடைசி சில நாட்கள் தான் அப்பாவிடம் போகப் போகிறேன் என்னை விடுங்கள் என்று சொல்லத் தொடங்கிவிட்டார்.

சனவரி 25 இரவு 10.45 போலத்தான் அம்மம்மாவோடு நின்ற எனது மருமகள் செல்வி தொலைபேசியில் அம்மாவின் உயிர் பிரிந்து விட்டது என்ற செய்தியைச் சொன்னார்.

அவரது இல்லறை வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.

வள்ளுவர் அறத்துப் பாலில், வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரத்தில் (6) ஒரு குடும்பப் பெண் எப்படி வாழ வேண்டும் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார்.

தற்காத்துத் தற்கொண்டான்  பேணித் தகைசான்ற
சொற்காத்துச்  சோர்விலாள் பெண்.                (குறள் 56)

இதன் பொருள்  கற்பினின்றும் வழுவாமல் தன்னைக் காத்துத் தன்னைக் கொண்டவனையும் உண்டி முதலியவற்றால் பேணி;  இருவர் மாட்டும் நன்மை அமைந்த புகழ் நீங்காமல் காத்து;  மேற்சொல்லிய நற்குண நற்செய்கைகளினும் கடைப்பிடி உடையவளே பெண் ஆவாள். 

இருவருக்கும் இடையில் இருந்த நட்பை அன்றில் பறவைக்குத்தான் ஒப்பிடலாம்.   மாமா மறைந்த போது தனது மகளுக்குச் சொன்னார் “அப்பா என்னை ஒரு நாள் பார்த்து நீ என்று சொல்லியிருக்க மாட்டார்” எனச் சொல்லிப் பெருமிதம் கொண்டார்.

மாமா மறைந்த நாள் தொடக்கம் தனது அறையில் அவரது படத்துக்கு விளக்கு வைத்து, பால் பழம் வைத்து வணங்கி  வந்தார்.

அம்மம்மா உறவினர்களுக்குக் கொடுத்து வாழ்ந்தவர். வீட்டுக்கு வருகிற நெருங்கிய உறவினர்களுக்கு ஏதாவது கையில் கொடுத்து அனுப்புவார். ஊரில் உள்ளவர்களுக்கும் கொடுத்து உதவுவார். அவருக்கு அரசாங்க கைம்பெண் ஊதியம் மாதா மாதம் வந்து  கொண்டிருந்தது.

பூட்டப் பிள்ளைகள் அனைவருக்கும் நத்தார் நாளில் பரிசுகள் கொடுப்பார். அவர் எங்களோடு 25 ஆண்டுகள்  வாழ்ந்தார். அதை  ஒரு பாக்கியமாகவே நினைக்கிறோம். நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்.

அம்மம்மா அவர்கள்  நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்துவிட்டார் என்றே நாம் நம்புகிறோம். அவர் இறக்கும் போது அவருக்கு அகவை 93. இன்னும் பத்து நாட்கள் உயிரோடு இருந்திருந்தால் தனது 94 அகவையை கொண்டாடியிருப்பார்.

வள்ளுவர் உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவை இப்படிச் சொல்கிறார்.

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.

பருவம் வந்ததும் பறவை தான் இருந்த கூட்டை விட்டுப் பறந்து விடுகிறது. அது போலவே உயிரும் உடலைவிட்டுப் பறந்து விடுகிறது.

எல்லாப் பிறப்புக்களிலும் பார்க்க மானிடப் பிறப்பே அரிதானது.  அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்கிறார் தமிழ்மகள் அவ்வையார்.

அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது
மானிடராய் பிறந்த காலையின்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையின்
ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்ததாயினும்
வானவர் நாடி வழி பிறந்திடுமே!   

மேலே உள்ள பாடல் முலம் தானமும் தவமும் தான் செய்தல் அரிது.  தான் படிப்பதாவது எப்படியாவது தத்தி முத்தி படித்து விடலாம்.  தானமும் தவமும்  செய்வது இருக்கிறதே  மிக மிக கடினமான செயல். 

“தவம் செய்வார்க்கு அவம் ஒரு நாளுமில்லை” ஔவையார் பிராட்டிதானே தானமும் தவமும் செய்யச் சொன்னது! மனிதா! தவம் செய்தால் உனக்கு ஒரு துன்பமும் கிடையாது என உறுதி கூறுகிறார்! ஞானதானம் குருவிடமிருந்து பெறு. நீ மற்றவர்க்கு ஞானதானம் செய். குரு மொழி தட்டாது தவம் செய் உன் பெரும்துன்பமான வினை கூட உன்னைப் பாதிக்காது!

தவம் செய்ய நாம் காட்டுக்கு போக வேண்டியதில்லை! குடும்பத்தை விட்டு ஓட வேண்டியதில்லை! காவி உடுத்து தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியதில்லை! நமது உடலை வெறுத்து வருத்தாது துன்புருத்தாது இருக்க வேண்டும்! உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம்! கடுமையான ஜப தாபங்கள் வேண்டாம்! சுருக்கமாக கூறுவதனால் ஒன்றும் செய்ய வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்!

திருமணம், ஞானம் பெற ஒரு தடையல்ல! இப்போது எப்படி இருக்கின்றீர்களோ, என்ன செய்து கொண்டிருக்கின்றீர்களோ அப்படியே இருங்கள். இந்தத் தவத்தை மட்டும் விடாது தொடர்ந்து 30 நிமிடமோ ஒரு மணி நேரமோ செய்தால் போதுமானது! நீதி நேர்மை ஒழுக்கமே உங்கள் தவத்தை சிறப்பிக்கும்! வேடம் போடாதீர்கள்! எந்த தீய பழக்கவழக்கமும் இல்லாது பார்த்துக் கொள்ளுங்கள்! குடும்பப் பொறுப்பு உணர்ந்து உங்கள் கடமையைச் சரிவரச் செய்யுங்கள்! இறைவன் உங்களுள் இருக்கிறானல்லவா? வெளியே கோயில், குளங்களில், மலைகளில் தேடாதீர்!

அருளே வடிவான இறைவன் அரவணைத்து காப்பான்! எந்த ஆபத்தும் வராமல் தடுப்பான்! எந்த நிலையிலும் கைவிட மாட்டான்! தாயுமானவனாகி அரவணைத்து, தந்தையுமாகி பராமரித்து, குருவுமாகி நம்மை கண்காணித்து நானே நீ என்று அறிவித்து, அடைவித்து, அகங்குளிர்வித்து அன்போடு தன்னோடு சேர்த்துக் கொள்வான்.

நல்லாரை காண்பது நமக்கு நன்மை பயக்கும்! நல்லார் உபதேசம் கேட்பது நமக்குப் பல தெளிவுகள், பெற ஏதுவாகும்! நல்லோரை சார்ந்து அவரோடு செயல்படுதல் மேலும் மேலும் புண்ணியம் கிட்டிய வழியாகும்! 

அம்மம்மாவின்  பூதவுடல் மறைந்தாலும் அவரது நினைவுகள் பசுமையாக இருக்கும். 

(அம்மம்மாவின் ஈமச் சடங்கின்போது பேசியதும் பேச நினைத்ததும்)


 

About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply