மனிதனும் உயிர்களும் கடவுள் படைப்பு என்ற மதக் கோட்பாட்டை தகர்த்தெறிந்த சார்ல்ஸ் டார்வின்

மனிதனும் உயிர்களும் கடவுள் படைப்பு என்ற மதக் கோட்பாட்டை தகர்த்தெறிந்த சார்ல்ஸ் டார்வின்
நக்கீரன்

(மனிதனும் உயிர்களும் கடவுளால் படைக்கப்பட்டவை எனும் மதக் கோட்பாட்டை அடித்து நொறுக்கி, அவை படிப்படியாக உருவானவை எனும் உருமலர்ச்சிக் கொள்கையை உலகுக்கு அளித்த அறிவியலாளர் சார்ல்ஸ் டார்வின்  பெப்ரவரி 2 
1809 ஆம் நாள் பிறந்தவர். இன்று அவரது 200 ஆம் ஆண்டு நிறைவும் அவரின் சிறந்த படைப்பான “உயிர்களின் தோற்றம்” என்ற நூலின் 150 ஆம் ஆண்டு நிறைவும் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நூல் டார்வினை புகழின் உச்சிக்கு இட்டுச் சென்றது)

அறிவியல், வானியல், தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் போன்ற கலைகள் இன்று மக்களது வாழ்க்கை முறையைத் தலைகீழாக மாற்றி அமைத்துள்ளன. ஆயிரம் ஆண்டுகள் காணாத மாற்றத்தை, புதிய கண்டு பிடிப்புக்களை கடந்த ஒரு நூற்றாண்டுக்குள் மனிதன் கண்டு பிடித்துவிட்டான். இதனால் ஆண்டாண்டு காலமாக வேதவாக்காக நம்பி வந்த பல நம்பிக்கைகள் தகர்க்கப்பட்டுள்ளன. இன்னும் பல நம்பிக்கைகள் ஆட்டம் கண்டுள்ளன.Image result for சார்ல்ஸ் டார்வின்

அறிவியல் கண்டு பிடித்த நீராவி, மின்னாற்றல், அணுசக்தி தொழில்த்துறையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. அச்சுயந்திரத்தின் கண்டு பிடிப்பு (கிபி 1450) கல்வி ஒளி பரந்துபட்ட அடித்தட்டுப் பொது மக்களையும் சென்றடைய வழி வகுத்திருக்கிறது.

கப்பல்கள், மிதிவண்டிகள், ஊர்திகள், வானூர்திகள், தொடர்வண்டிகள் போக்குவரத்தைத் துரிதப்படுத்தியுள்ளன.

வானொலி, திரைப்படம், தொலைபேசி, தொலைப்படி, தொலைக்காட்சி, கணினி, செய்மதிகள் தகவல் புரட்சியைத் தோற்றுவித்துள்ளன.

அறிவியல் கண்டு பிடித்த ஏவுகணைகள், விண் ஓடங்கள், இராட்சத தொலைநோக்கிகள் இயலுலகின் (அண்டத்தின்) புதிர்களை அவிழ்க்கவும் மனிதனை நிலாவில் இறக்கவும் வழி வகுத்துள்ளன.

தீராத நோய்கள் எனக் கருதப்பட்ட நீரிழிவு, எலும்புருக்கி, தொழுநோய் போன்றவற்றைக் குணப்படுத்த மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கொள்ளை நோய் (Plague) அம்மை, இளம்பிள்ளை வாதம், குக்கல், தொண்டை அழற்சி (Diphtheria) போன்ற நோய்களுக்குத் தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டு அவை முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளன.

புதியவகை நெல், கோதுமை, காய்கறிகள், பழங்கள் உணவு உற்பத்தியைப் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இவற்றால் மனிதனது பொதுமேனி அகவை உயர்ந்துள்ளது. பொதுமேனி வருவாய் அதிகரித்துள்ளது.

எவ்வளவுதான் ‘அந்தக்காலம்’ பற்றி வாய் சப்பிக் கொண்டாலும் மனித வரலாற்றின் பொற்காலத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே உறைப்பான உண்மையாகும்.

பண்டைக் காலத்தில் ஞாயிறு, நிலா, கோள்கள், விண்மீன்கள் (நட்சத்திரங்கள்), கிரகணம், அண்டவெளி, இடி, மின்னல், காற்று, புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம், எரிமலை, கடல்கொந்தளிப்பு ஆகிய இயற்கை நிகழ்வுகள், இயற்கைச் சீற்றங்கள் ஆகியவற்றைக் கண்டு ஆதி மனிதன் பயந்து நடுங்கினான். அவற்றைத் திருப்திப்படுத்த பொங்கல், படையல், யாகம், உயிர்ப்பலி கொடுத்து வழிபட்டான். காலப்போக்கில் இந்த அச்சம் தரும் இயற்கையை ஆட்டுவிக்க சகல வல்லமை படைத்த உலகியற்றியான் (கருத்தா) ஒருவன் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து அதற்குக் கடவுள், இறைவன், தெய்வம், தேவன், பிரம்மம் எனப் பலவாறு பெயரிட்டான்.

மனிதன் பேசத் தெரிந்த பின்னரே கடவுட் பெயர்களைக் கண்டு பிடித்திருக்க வேண்டும்! இன்னும் நன்றாகப் பேசத் தெரிந்த பின்னரே தத்துவம் என்ற பெயரில் கடவுள் பற்றிய கற்பனைக் கதைகளை உருவாக்கி இருக்க வேண்டும்.

கடவுளின் சினத்தைத் தணிக்கவும் அருளைப் பெறவும் தூபதீப நிவேதனங்கள், ஆடல் பாடல், மேள தாளம், தேர் திருவிழா, சரிகை கிரிகை, செபம் தொழுகை எனச் சடங்குகளை மனிதன் உருவாக்கினான்.

கடவுளர் இருக்க இடம் வேண்டாமா? கோயில், குளம், கோபுரங்கள், தேவாலயங்கள் ஆகியவற்றைக் கட்டினான். அதில் அம்பு, வில், வேல், வாள், கத்தி, சூலம், கதை, சக்கரம், தண்டு ஆகியவற்றைக் கொண்டு மிருகங்களை வேட்டையாடி வாழ்ந்த தன் முன்னோர்கள் உருவில் சிலைகளை வடித்து வைத்தான். தான் செய்வது போன்று அந்தச் சிலைகளைக் குளிப்பாட்டி, ஆடை உடுத்தி, ஆபரணம் பூட்டி, படையல் செய்தான். தனக்கு மனைவி மக்கள் இருப்பது போலத் தெய்வங்களுக்கும் மனைவி மக்களைக் கற்பி;த்துத் திருமணவிழாக்கள், பிறந்த நாள் கொண்டாட்டங்கள், வேட்டைத் திருவிழாக்கள் ஆகியவற்றை நடத்தினான்.

வேட்டையாடிப் பிழைக்கவும் உழுது பயிரிட்டு வாழவும் விரும்பாத ஒரு சோம்பேறிக் கூட்டம், தங்களை வானத்தில் இருக்கும் கடவுளருக்கும் நிலத்தில் வாழும் மனிதர்களுக்கும் இடையிலான தரகர்கள் என்றும் கடவுளை வசப்படுத்தி, விரும்பியதை விரும்பியவாறு பெற்றுத் தரத் தங்களிடம் மந்திரம் தந்திரம் யந்திரம் போன்ற ஆற்றல் இருப்பதாகச் சொன்ன பூசாரிகள,; குருமார்கள் அதற்கான சடங்குகளை நடத்தி வைத்தார்கள்.

நாளடைவில் சரிகை கிரிகை, பூசை பிரார்த்தனை, பக்தி, முக்தி என விரிந்து கடவுள் என்ற கற்பனைச் சொல்லினைச் சுற்றி சிக்கலான தத்துவங்களும் மதங்களும் தோன்றின.

இன்று மனிதன் பல் கலைகளையும் கற்று முன்னேறி, இயற்கையின் மர்மங்களைத் தெரிந்து கொண்டு அவற்றைக் கட்டுப்படுத்தவும் அடக்கி ஆளவும் கற்றுக் கொண்டு விட்டான். ஆன பொழுதும் பரம்பரைப் பழக்கத்தால் இந்தப் பொருளற்ற நம்பிக்கைகளையும் சடங்குகளையும் கற்றோரும் கல்லாதோரும் ஒரு சேரத் தொடர்ந்து கடைப்பிடித்;து வருகின்றனர்.

அண்டம், கடவுள், படைப்புப் பற்றிய சிந்தனையைத் தலைகீழாகப் புரட்டி எடுத்த பல அறிவியலாளர்களில் பத்தொன்பதாம் நூற்றண்டில் இங்கிலாந்தில் பிறந்த சார்ல்ஸ் டார்வின் (Charles Darwin  (1809-1882) முக்கிய பங்கினை வகிக்கிறார்.

உயிரியலாளர் சார்ல்ஸ் டார்வினின் உருமலர்ச்சிக் கோட்பாடு (Theory of Evolution) நீர் வாழ்வன, நிலத்தில் ஊர்வன, மேலே பறப்பன போன்ற உயிரினங்கள் தாமாகவே தோன்றின, அவை இன்றுள்ளது போல யாராலும் படைக்கப்படவில்லை என்பதை நிறுவியது.
குரங்கில் இருந்து மனிதன்

மேலும் நாம் காணும் உயிரினங்களின் உருவம் தொடக்க காலத்தில் இருந்தே வரவில்லை. அவை ஒரு கல (Single Cell)   உயிரியிற் தொடங்கி இடையறாத மாற்றம், படிமுறை வளர்ச்சி, மலர்ச்சி, இனப் பெருக்கம், இடப் பெருக்கம், இயற்கைத் தேர்வு (Natural selection)  நிலத்தின் தன்மை, சூழல் முதலியவற்றுக்கு ஏற்ப வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்தல் காரணமாக உருமாற்றம் அடைந்து வந்துள்ளன.

இன்று நாம் காணும், மரம், செடி, கொடிகள் கடலில் இருந்து கரையில் விழுந்த சிறு சாதாளையின் உருமலர்ச்சி ஆகும்.

மனிதனை எடுத்துக் கொண்டால் அவன் “முழுசாகக் கடவுளால் படைக்கப்படவில்லை, மண்ணின் செழுமையால் ஒன்று கூடி உண்டான உயிரணுக்களின் உருமலர்ச்சியே (பரிமாண வளர்ச்சியே) மனிதன். அதாவது பூச்சியாய், புழுவாய், நத்தையாய், மீனாய், பறவையாய், குரங்காய் வளர்ந்து இறுதியில் அவற்றின் திருத்த உருவமாய் மனிதன் தோன்றினான்” என டார்வின் உருமலர்ச்சிக் கோட்பாடு மூலம் நிறுவினார்.

மனிதன் ஊர்வன நிலையைக் கடந்து நாலு காலால் நடக்கும் குரங்கு நிலை எய்திப் பின்னர் வளைந்த முதுகை நேர் நிமிர்த்தி நாலு கால்களில் இரண்டைக் கைகளாகப் பயன்படுத்தி மீதி இரண்டு காலால் நடக்கக் கற்றுக் கொண்டு மரக் கொப்புகளுக்குப் பதில் குடிசை கட்டி சிற்சில கருவிகளைச் செய்து வாழப் பல இலட்சம் ஆண்டுகள் எடுத்தது என டார்வின் விளக்கினார்.

உலகத்தையும் அதிலுள்ள உயிர்களையும் கடவுள் படைத்தார், அரைகுறையாக அல்ல ஒவ்வொன்றையும் முழுதாகவே படைத்தார், அதே போல் ஆறறிவு படைத்த ஆணையும் பெண்ணையும் கடவுளே படைத்தார் என்றும் மதங்களும் மதவாதிகளும் சொல்லி வந்த படைப்புக் கோட்பாட்டை டார்வினின் உருமலர்ச்சிக் கோட்பாடு தகர்த்து எறிந்தது.

விவிலிய வேதத்தின் முதற்பகுதி (Genisis1)  கடவுள் உலகத்தையும் உயிரினத்தையும் மனிதனையும் 6,000 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் படைத்த கதையைக் கூறுகிறது. கடவுள் புல், பூண்டு, செடி, கொடிகளையும் விலங்குகளையும் படைத்த பின்னர் ஆணையும் பெண்ணையும் ஆறாவது நாளில் ஒரேசமயத்தில் படைத்தார் என்கிறது. ஆனால். விவிலிய வேதத்தின் இரண்டாம் பகுதி (Genisis 2) கடவுள் புல், பூண்டு, செடி, கொடிகளைப் படைக்கு முன்னர் மூன்றாவது நாளில் முதலில் ஆதாமைப் படைத்தார் என்றும் பின்னர் ஆதாமை நித்திரைகொள்ளச் செய்து அவனது விலா எலும்பில் இருந்து ஏவாளைப் படைத்ததாகச் சொல்கிறது. தொடர்ந்து அவர்களுக்கு காயீன் மற்றும் ஆபேலு என இரண்டு குழந்தைகள் பிறந்ததாகவும் ஆபேலு ; காயினைக் கொன்றதாகவும் கதை தொடர்கிறத. இது முழுதும் ஆதிமனிதனின் வளமான கற்பனை என்பது சொல்லாமலே விளங்கும் என நினைக்கிறேன்.

கடவுள் படைப்புக் கோட்பாட்டுக்கு முற்றிலும் எதிர்மாறாக டார்வினின் உருமலர்ச்சிக் கோட்பாடு உயிரினங்கள் தம் நிலை பேற்றுக்காகப் போராடுகின்றன, இறுதியில் தகுதியுள்ளவை மட்டுமே தப்பிப்பிழைக்கின்றன (The Struggle for Existence and Survival of the Fittest)  எனக் கூறியது.

டார்வின் பல ஆண்டுகள் நாடு நாடாகச் சென்று ஆய்வு செய்து எழுதிய உயிரினங்களின் மூலம் (The Origin of Speicies ) என்ற நூல் 1859 இல் வெளிவந்தபோது மனித வரலாற்றில் அதுவரை காலமும் அவிழ்க்கப்படாத பல முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட்டன. உயிரினங்களின் மூலம் முதல் பதிப்பு முழுதும் (1,250 படிகள்) ஒரே நாளில் விற்று முடிந்தன. உலகம் கண்டிராத ஒரு சிந்தனைப் புரட்சியை 230 பக்கங்கள் கொண்ட அந்த நூல் ஏற்படுத்தியது. அதற்கு முன்னர் 1842 ஆம் ஆண்டு இயற்கைத் தேர்வுக் கோட்பாடு (Theory of Natural Selection) என்ற சிறு நூலை எழுதி வெளியிட்டார். டார்வின் உருமலர்ச்சி பற்றி மொத்தம் 18 நூல்களை எழுதினார்.

டார்வின் 1874 ஆம் ஆண்டு மனிதன் குரங்கிலிருந்து உருமலர்ச்சி பெற்றவன் (Man is the Developed Monkey ) எனப் பல சான்றுகள் மூலமாக எடுத்துக் காட்டினார்.

டார்வினின் உருமலர்ச்சிக் கோட்பாடு மதவாதிகள் மத்தியில், குறிப்பாகச் செல்வாக்குப் படைத்த கிறித்தவ மதவாதிகள் மத்தியில், திகைப்பையும் வியப்பையும் அச்சத்தையும் உருவாக்கியது. .பரமண்டலம் பற்றியும் சொர்க்கத்தைப் ;பற்றியும் நரகத்தைப் பற்றியும் பேசியும் எழுதியும் வந்த மதகுருமார்க்குச் சொல்லி மாளாத சினம் ஏற்பட்டது. .டார்வினும் அவர் எழுதிய நூலும் பலத்த கண்டனத்துக்கும் எதிர்புக்கும் உள்ளாகியது. மதவாதிகள் உருமலர்ச்சிக் கோட்பாட்டைக் கடுமையாக எதிர்த்தார்கள். ‘அண்டம், அதில் அடங்கிய உலகம் அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டவை அதனை மறுப்பவர்கள் சாத்தானின் அவதாரங்கள்’ என ஆயர் வில்பபோர்ஸ் (Bishop Wilburforce)  கடுமையாகக் குற்றம்சாட்டினார்.

உயிரினங்களின் மூலம் என்ற நூல் நூல் வெளிவந்த ஆறு மாதத்துக்குள் (யூன் 30, 1860) நடந்த சொற்போரில் ஆயர் வில்பபோர்ஸ் பின்வருமாறு பேசினார்-

“மதிப்புக்குரிய மகாசனங்களே! பரம பிதாவின் பெயரால் நான் உங்களை ஒன்று கேட்கிறேன், சாத்தானின் அவதாரமான சார்ல்ஸ் டார்வின் நீங்களெல்லாம் குரங்கிலிருந்து தோன்றியவர்கள் என்று கொஞ்சமும் நாக் கூசாமால் கூறியிருக்கிறான். நீங்களே சொல்லுங்கள்? உங்களைக் கால்மேலும் தோள்மேலும் போட்டுச் சீராட்டி வளர்த்த உங்களுடைய பாட்டன்மார்களும் முப்பாட்டன்மார்களும் குரங்குகளா? இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

குரங்கிலிருந்து தோன்றிய மனிதன் இத்தனை இலக்கம் (இலட்சம்) ஆண்டுகளுக்குப் பின்னும் எந்தவித உருமலர்ச்சி கொள்ளாமல் அப்படியே இருக்கின்றான்? ஏன் அவனுக்கு இன்னும் ஒரு கொம்போ, ஒரு இறக்கையோ, ஒரு வாலோ அல்லது வேறு எதுவுமே உண்.டாகவில்லை? குரங்கின் உருமலர்ச்சி மனிதன் என்றால் மனிதனின் உருமலர்ச்சி என்ன?

இவற்றை எல்லாம் சிந்தித்துப் பார்க்காமல் நம்மைப் படைத்த ஆண்டவனை ஏளனம் செய்வது எத்தனை பெரிய பாவம் என்பதை நீங்கள் உணரவில்லையா?”

இவ்வாறு சொல்லாடல் செய்கின்;ற மதவாதிகள் ஒன்றை மட்டும் மறந்து விடுகின்றனர். .உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்றால் கடவுளைப் படைத்தவர் யார் என்ற கேள்வி எழுகிறது. அவர் யாராலும் படைக்கப்படவில்லை என்றால் இயற்கையின் செயல்களில் ஏது (காரணம்) இன்றி விளைவு (காரியம்) இல்லை என்பதால் கடவுளும் படைக்கப்பட்டவரே என ஒப்புக் கொள்ள வேண்டி நேரிடும்.

டார்வினின் உருமலர்ச்சி கோட்பாட்டை மறுத்து பள்ளிகளில் படைப்புக் கோட்பாட்டுக்குப் பதில் அறிவார்ந்த வரைபடம் (iவெநடடபைநவெ னநளபைn) என்பதை படிப்பிக்க முன்னாள் அமெரிக்க ஆட்சித்தலைவர் யோர்ஜ் புஷ் எடுத்த முயற்சி வெற்றிபெறவில்லை. 13 மாநிலங்கள் மட்டும் அதனைக் கற்பிக்க சட்டம் இயற்றியுள்ளன. இருந்தும் கிறித்துவ தலிபான்களால் இன்னும் வெற்றிபெற முடியவில்லை.

இந்த ஆண்டு; “படைப்பு” (Creation) எனும் திரைப்படம் வெளிவர உள்ளது. பிபிசி நிறைய வானொலி நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளது. உலகம் முழுக்கத் தொலைக்காட்சிகளிலும் வானொலியிலும் ஒளி, ஒலிபரப்பப்பட்டு வருகிறது.

“சார்லஸ் டார்வின் மற்றும் உயிர்மரம்” (Charles Darwin and Life Tree)  எனும் ஆவணப்படத்தை டேவின் அட்டன்பரோ தயாரித்து பிபிசி யில் ஒளிபரப்பினார். வாழ்வு (Life) என்ற பெயரிலும் 10 பாகங்கள் கொண்ட படத்தையும் அவர் தயாரித்துள்ளார். டார்வினின் அபாயகரமான வாழ்வு எனும் மூன்று பாகப் படமும் மார்ச் மாதத்தில் வெளிவரும்.

இன்று மதங்களின் “படைப்புக்” கோட்பாடு;களுக்கு எதிராக உருமலர்ச்சிக் கோட்பாடுகளை நிறுவிய சிறந்த அறிவியலாளரை உலகமே பாராட்டுகிறது. “கடவுள் நம்பிக்கை” கொண்டவர்களும் அறிவியலை ஏற்று வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். (Muzhakkam – February 13, 2009)


 

About editor 3120 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply