ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்று இந்த முரண்பாட்டையே இரா சம்பந்தன் சுட்டிக் காட்டியுள்ளார்! இது மாற்றப்பட வேண்டும்! – ஜெகன் பெரேரா

ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்று இந்த முரண்பாட்டையே இரா சம்பந்தன் சுட்டிக் காட்டியுள்ளார்!

இது மாற்றப்பட வேண்டும்! – ஜெகன் பெரேரா

மகிந்த இராசபக்சா உயர் நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து டிசெம்பர் மாதம் 15 ஆம் நாள் தனது பிரதமர் பதவியை இராசினாமா செய்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து இராசபக்சாதான்  எதிர்க்கட்சித் தலைவர் என நாடாளுமன்றச் சபாநாயகர் கரு ஜெயகசூரியா திடும் என அறிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தனை பதவி விலக்காமல் இன்னொருவரை எதிர்க்கட்சித் தலைவர் என சபாநாயகர் அறிவித்த காரணத்தால் ஒரே நேரத்தில் இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் பதவியில் இருந்தார்கள். அதற்கு முன்னர் இரண்டு பிரதமர்கள் இருந்தார்கள்.  சனாதிபதி சிறிசேனா ஒரு பிரதமர் இருக்கும் போது இன்னொருவரை பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்து வைத்தது அரசியல் யாப்புக்கு முரணானது என உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்த பின்னணியில் சபாநாயகர்  கரு ஜெயசூரியாவின் அறிவிப்பு பலரது புருவத்தை உயர்த்தியது.

மகிந்த இராசபச்சாவின் இராசினாமாவுக்கும் அவர் எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் நியமித்ததற்கும் ஏதோ தொடர்பு இருப்பது போல் தெரிகிறது. பிரதமர் பதவியை இராசினாமா செய்தால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தரலாம் என ஏதாவது பேரம் பேசப்பட்டதா என்ற ஐயம் எழுகிறது. அல்லது இனவாத அடிப்படையில் இந்த நியமனம் செய்யப்பட்டதா என்ற கேள்வியும் இருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிக்கப்பட்டது தொடர்பாக  நா.உறுப்பினர் இரா சம்பந்தன் நாடாளுமன்றத்தில் கடந்த டிசெம்பர் மாதம் 19 இல் உரையாற்றியிருந்தார். அப்போது :

2015ம் ஆண்டு பொதுத் தேர்தல்களின் பின்னர் நாடாளுமன்றம் செப்டம்பர் 2015 இல் கூடியபோது எதிர்க்கட்சியில் இரண்டாவது அதி கூடிய ஆசனங்களைக் கொண்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவராக என்னை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள். நாடாளுமன்றத்தில் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களால் இது தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்ட போது, இவ்வருடம் ஓகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அதி கூடிய ஆசனங்களை கொண்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவராக என்னை நீங்கள் மீண்டுமொருமுறை ஏற்றுக்கொண்டீர்கள்.

அந்தத் தீர்ப்பினை நீங்கள் வழங்கியபோது அதுவே எனது இறுதி முடிவு எனவும் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.

நேற்றைய தினம் டிசம்பர் 18ம் திகதியன்று, கௌரவ மஹிந்த ராஜபக்ச அவர்களை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு நியமிக்கவேண்டும் என்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கோரிக்கையினை ஏற்று நீங்கள் மஹிந்த இராஜபக்சா அவர்களைத் எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதாக அறிவித்தீர்கள்.

இரண்டுமுறை நீங்கள் மீளுறுதி செய்து எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் நியமித்த என்னைப் பதவியிலிருந்து நீக்காமல் இந்த அறிவிப்பினை நீங்கள் செய்ததுமன்றி, இந்தச் செயலானது தற்போதைய பாராளுமன்றத்தில் இருவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியினை தக்க வைத்திருப்பதாகவே புலப்படுகின்றது  எனக் குறிப்பிட்டிருந்தார். ((https://www.bbc.com/tamil/sri-lanka-46622534))

மீண்டும் இந்த மாதம் 25  இல் அரசியல் யாப்பையும் அரசியல் மரபுகளையும் மேற்கோள் காட்டி  நாடாளுமன்றத்தில் இரா சம்பந்தன்  நீண்ட உரையாற்றியிருந்தார்.(https://www.colombotelegraph.com/index.php/on-the-position-of-the-leader-of-the-opposition/)

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக சிறிலங்காவின் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று இயக்குனர் ஜெகன் பெரேரா  இரண்டு கட்டுரைகளை அடுத்தடுத்து ஊடகங்களில் எழுதியுள்ளார். முதல் கட்டுரை On The Position Of The Leader Of The Opposition  (எதிர்க் கட்சித் தலைவரின் நியமனம் பற்றி)  டிசெம்பர் 24 இல் வெளிவந்தது (https://peace-srilanka.org/media-centre/political-commentary/item/658-president-must-not-lead-the-opposition-jehan-perera).

இரண்டாவது கட்டுரை President needs to limit opposition in government  (சனாதிபதி எதிர்க்கட்சி (உறுப்;னர்களை) அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதை மட்டுப் படுத்த வேண்டும்) என்ற கட்டுரை சனவரி 28 இல்  (http://www.peace-srilanka.org/media-centre/political-commentary/item/670-president-needs-to-limit-opposition-in-government-jehan-perera) வெளிவந்தது.

எதிர்க்கட்சிப் பதவி தொடர்பாக தமிழர் தரப்பு முன்வைக்கும் வாதங்களைவிட ஜெகன் பெரேரா போன்ற ஒரு சமாதான செயற்பாட்டாளர், அதிலும் ஓரு சிங்களவர்,  முன்வைக்கும் நியாயங்கள் கனதியானதும்  நியாமானதாவும் இருக்கும். அந்தக் கட்டுரையின்  தமிழாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சனாதிபதி எதிர்க்கட்சி உறுப்பினர்களை அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதை மட்டுப் படுத்த வேண்டும்

ஜெகன் பெரேரா

சனவரி 28, 2019

எதிர்க்கட்சிப் பதவி பற்றிய சிக்கல்  நாடாளுமன்றத்தில் மீண்டும் ஒருமுறை  முன்நிலைப்படுத்தப் பட்டது. அது பற்றிக் கடந்த வாரம்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (ததேகூ) தலைவர் இரா சம்பந்தன் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்திருந்தார். இந்தச் சிக்கல் தொடர்பாக சபாநாயகர் வெளியிட்ட தீர்ப்பை அடுத்து – அதாவது ஐக்கிய  மக்கள் சுதந்திரக் கூட்டணியைச் (ஐமசுகூ)  சார்ந்த மகிந்த இராபக்சாதான் எதிர்க்கட்சித் தலைவர் –  இந்தச் சிக்கல்   முற்றுப் பெற்றுவிட்டதாக ஊடகங்களும் பெரும்பான்மை மக்களும் கருதினார்கள்.  அதாவது சபாநாயகரின் தீர்ப்புச் சரியானது மற்றும் முறையானது என அவர்கள் நினைத்துக் கொண்டார்கள்.

எனினும்,  ஐதேக – ஐமசுகூ  இடையிலான தேசிய அரசாங்கம் கடந்த ஒக்தோபர் மாதத்தில்  முறிவு ஏற்படும் வரை ததேகூ இன் தலைவரே எதிர்க்கட்சித் தலைவர் என்பது எலலோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக  எதிர்க்கட்சித் தலைவர் பதவியை திரு சம்பந்தன் வைத்திருந்தபோது ஐமசுகூ நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ததேகூ விட அதிகமாக இருந்தது.  அதுமட்டுமல்ல, அரசாங்கத்துக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுப்பதில்  ததேகூ விட ஐமசுகூ   தீவிரமாக இருந்தது. தேசிய அரசாங்கத்தில் ஐமசுகூ  பங்குவகிக்கிற காரணத்தால் அது  எதிர்க்கட்சிப் பதவியை வகிக்க முடியாது  என சபாநாயகர் தீர்ப்பளித்தார். காரணம் ஐமசுகூ கட்சியில் பெரும்பான்மைக் கட்சியாக இருந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சி தேசிய அரசாங்கத்தில் பங்குபற்றிக் கொண்டிருந்தது.

ஐதேக – சிறிலங்கா சுதந்திரக் கட்சி இடையிலான தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்ட முறிவுதான் சபாநாயகர் அவர்களது சமன்பாட்டை மாற்றிவிட்டது.  சிறிலங்கா  சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இல்லை என்ற காரணத்தை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவி முன்னாள் சனாதிபதி  மகிந்த இராசபக்சாவுக்கு வழங்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி  மகிந்த இராசபக்சாவை அந்தப் பதவிக்கு நியமனம் செய்தது.  ஆனால் சிலருக்கு அது சரியான முடிவாகப் படக்கூடும் என்றாலும்  – அவர்கள் பெரும்பான்மையாக இருக்கலாம் – அது பிழை என மறுத்து வாதிட (அவர்கள் சிறுபான்மையாக இருக்கலாம்) முடியும்.  நாடாளுமன்றத்தில் ததேகூ இன் தலைவர் சம்பந்தன் ஆற்றிய உரை சிக்கலுக்கு உரிய தீர்வுகளைக் காணவேண்டிய அவசியத்தைச் சுட்டிக் காட்டுகிறது.

சிறுபான்மையரது பாதுகாப்பு

சனநாயக ஆட்சி என்பது பெருப்பான்மையரது விருப்பு மட்டுமல்ல,  எது பகுத்தறிவோடு ஒத்துப் போகிறது என்பதும் முக்கியமாகும். அது சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியல்யாப்பில் சொல்லப்படுபவற்றோடு ஒத்துப் போகிறதாகவும் இருக்க வேண்டும். பெரும்பான்மையரது மன உணர்வுகளோடு ஒத்துப் போவதுதான் சனநாயக ஆட்சியென்றால் கடந்த ஒக்தோபர் மாதத்தில் சனாதிபதி சிறிசேனா  பிரதமர் இரணில் விக்கிரமசிங்காவை பதவியில் இருந்து விலக்கியது சரியாக இருந்திருக்கும். அரசியல் நெருக்கடி  இருந்த  காலத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த இராசபக்சா அவர்களால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெறமுடியாத நிலையில்,   பதவி விலகவும் விருப்பம் இல்லாமல் இருந்த போது அரசியல் முட்டுக்கட்டையில் இருந்து விடுபட புதிதாகப் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற யோசனைக்குப் பொதுமக்கள் மத்தியில்  பலத்த ஆதரவு காணப்பட்டது.

இருந்தும் அரசியல் முட்டுக்கட்டை இறுதியாக அரசியல் யாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி இரண்டின் பொருள்விளக்கத்தின் அடிப்படையில் நீதித்துறையால் தீர்த்து வைக்கப்பட்டது. சட்டத்தின் ஆட்சி அடிப்படையில்  அதிகாரத்தை ஒரு அரசாங்கத்தில் இருந்து இன்னொரு  அரசாங்கத்துக்கு மாற்றுவதில்தான் சிக்கல் இருந்தது. நீதித்துறை தனக்குரிய அரசியல் யாப்புப் பொறுப்பைத்  தட்டிக் கழிக்கவில்லை.  நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டம் இயற்றும் அதிகாரம்  இரண்டிலும் அரசியல்வாதிகள் நிலைகெட்டு நடக்கவிடாது அவர்களை வழிக்குக் கொண்டுவருவதில் நீதித்துறை  தலைமை இடத்தை எடுத்துக்  கொண்டது.  நாடாளுமன்றத்ததைச் சனாதிபதி  கலைத்த நடவடிக்கை  அரசியல்யாப்புக்கு முரணானது என அறிவிக்குமாறு  நீதிமன்றங்களைக் கேட்கும் வழக்குகளைத் தாக்கல் செயத கட்சிகளில் ததேகூ ம் ஒன்றாகும்.  ஆட்சி தொடர்பான காரியங்களில் அரசியல் யாப்பு கண்டிப்பாகப் பின்பற்றப் படவேண்டும் என்பது  ததேகூ இன்  நிலைப்பாடாகும்.

அதேபோல யார் எதிர்க்கட்சித் தலைவர் என்ற சிக்கலில் திரு சம்பந்தன்  அரசியல்யாப்பு பின்பற்ற வேண்டும் என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அதாவது சனாதிபதி சிறிசேனா அமைச்சரவையின் தலைவர் மற்றும் மூன்று அமைச்சுகள், 40 கும் அதிகமான திணைக்களங்கள் வைத்திருப்பவர் என்ற முறையில்  அவரது கட்சியின் உறுப்பினர் முன்னாள்  சனாதிபதி மகிந்த இராசபக்சா ஒரே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்பது   கேள்விக்குரியது.  அதே நேரம் ததேகூ நாடாளுமன்றத்தில் உள்ள சில உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் இராசபக்சா உட்பட,    நாடாளுமன்றத்தில் பதிவு செய்யப்படாத சிறிலங்கா பொதுசன பெருமுனையில் (எஸ்எல்பிபி)  உறுப்பினர்களாக இருப்பதன் செல்லுமை பற்றிக் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.   எனினும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடராத பட்சத்தில் இந்த நிலைமை மாறும் என்பது சாத்தியமில்லை.

சிறுபான்மையினராக இருப்பவர்களுக்கு சட்டம் உறுதியாகக் கடைப்பிடிக்கப்படுவது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.  அரசியல்  அதிகாரம் சம்பந்தப்பட்ட சூழ்நிலையில்   இன, சமய அல்லது சமூக சிறுபான்மையினரது  கருத்துக்கள் கவனத்தில் எடுப்பது பெரும்பாலும் குறைவாகவே இருக்கும்.  இதன் காரணமாக எண்ணிக்கையில் குறைவானவர்களது குரல் குறைவாகவே இருக்கும்.

தமிழ்ச் சிறுபான்மையரைப் பொறுத்தளவில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி முக்கியமானது.  காரணம் ஏனைய சிறுபான்மையர் போலல்லாது தமிழ்ச் சிறுபான்மை அரசாங்கத்தில் சேர்வதில் விருப்பம் காட்டுவதில்லை. ஏனைய சிறுபான்மையினர் அரசாங்கத்தில் சேருவதால் மட்டுப்படுத்தப்பட்ட ஆனால்  அதிகாரபூர்வமாக அரசாங்க நிறுவனங்களை அணுகுவதற்கு  வாய்ப்பு இருக்கிறது.

சனாதிபதிக்குச் சவால்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரை மாற்றியது தொடர்பாக எதிர்ப்புத் தெரிவித்து உரையாற்றும் போது  திரு சம்பந்தன் கலாநிதி நிகால் ஜெயவிக்கிரம என்பவர் எழுதிய ஒரு கட்டுரையைக் குறிப்பிட்டார்.  அதில் “அரசியல்யாப்பின் கீழ் சனாதிபதி அரசாங்கத்தின் தலைவர்.   தனது சொந்த விருப்பப்படி மயித்திரிபால சிறிசேனா சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐமசுகூ  இரண்டின் தலைவரும் ஆவர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி  என்பது சிறிலங்கா சுதந்திரக் கட்சி உட்பட ஒத்த மனப்பாங்குள்ள கட்சிகளின் கூட்டணி ஆகும்.  சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐமசுகூ இன்  உறுப்பினர்ரான மகிந்த இராசபக்சாதான் இப்போது எதிர்க்கட்சித் தலைவர்.  எனவே ஒரே நேரத்தில் எப்படி சனாதிபதி அரசாங்கத்தின் தலைவராகவும் எதிர்க்கட்சியின் தலைவராகவும்  இருக்க முடியும் என்ற கேள்விக்கு விடை அளிக்குமாறு நாடாளுமன்றம் கேட்பதற்கு உரித்துடையது.  மேலும் ஒரு நேரத்தில் இரண்டு பதவியிலும் இருப்பது அரசியல் அமைப்பின் அடிப்படை சனநாயகத்தை அப்பட்டமாக மீறுவதாகும்.”

மறுபுறம் சபாநாயகர் ஜெயசூரியா ததேகூ இன் தலைவர் இரா சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவிபற்றி ஆற்றிய உரைக்குப் பதிலளிக்கும்  போது இந்தச் சிக்கலுக்கு இப்போதுள்ள அரசியல்யாப்பு மற்றும் நிலைக் கட்டளைகளின் அடிப்படையில் தீர்வு காண முடியாது என்றார்.  “நான் சனவரி 08, 2019 இல் அளித்த தீர்ப்பில் சம்பந்தன் சுட்டிக்காட்டிய பொருள்பற்றி  விரிவாக எதனையும் சொல்லவில்லை.  எதிர்க்கட்சித் தலைவராக இராசபச்சாவை அங்கீகரித்தது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின்  பொதுச் செயலாளரின் வேண்டுகோளின்படி அல்ல.  அப்படி நடந்து கொண்டதற்குக் காரணம் இந்தச் சபையின் மரபுகளின்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளில்  எதிர்க் கட்சியில் எந்தக் கட்சிக்கு அதிகளவு உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அந்தக் கட்சியின் தலைவரே எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.”

எனினும், அரசியல் யதார்த்தம் என்னவென்றால் ததேகூ விட ஐமசுகூ இல் அதிக எண்ணிக்கையுள்ள உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதற்கு மேலாக இப்போது சனாதிபதி சிறிசேனா முன்னாள் சனாதிபதியான இராபக்சாவோடு கூட்டாக  இருந்துகொண்டு பணியாற்றுகிறார். இதனால் இன்றைய ஏற்பாட்டின் கீழ்  அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி இரண்டும் அரசாங்கத்தின் அதியுச்ச அதிகாரங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. அந்த அனுகூலத்தை கைவிடுவது என்பது எளிதல்ல.  அண்மையில் சனாதிபதி சிறிசேனா சிங்கப்பூருக்குப் பயணம் செய்த போது தன்னோடு சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தனது உத்தியோகபூர்வ பரிவாரத்தோடு கூட்டிப் போனது எதிர்க்கட்சியை ஆளுகைக்குள் கொண்டு வந்து விட்டது.  இந்த முரண்பாட்டைத்தான் ததேகூ இன் தலைவர் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.  இது மாற்றப்பட வேண்டும்.   (தமிழாக்கம் – நக்கீரன்)


.

About editor 3045 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply