உயர்தனிச் செம்மொழி என்னும் தொடரில் மூன்று அடைமொழிகள் உள்ளன. உயர், தனி, ;செம் என்பனவே அந்த அடை ;மொழிகள். உயர்ந்தமொழி, தனித்த மொழி, செம்மையான மொழி எதுவோ அதுவே உயர்தனிச் செம்மொழியாகும். உயர்வுத் தன்மை, தனித்தன்மை, செம்மைத் தன்மை ஆகிய மூன்று தன்மைகளையும் கொண்ட மொழியாக நம் தாய்மொழி தமிழ் இருப்பதை இங்கே பார்ப்போம்.
சொல் வளம் –
ஒரு மொழிக்கு உயர்வு அம்மொழியிலுள்ள சொல்வளத்தைப் பொறுத்தே அமையும். கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள உதவும் கருவியே மொழி. கருத்துகளைச் சொற்றொடர்கள் வழியாகவே உணர்த்துகிறோம். சொற்றொடர்களே சொற்களால்தான் உருவாகின்றன. எனவே மொழிக்கு அடிப்படையாக அமைவன சொற்களே. ஆ, ஈ, வா ,போ முதலிய ஒரெழுத்துச் சொற்கள் தமிழில் 50க்கு மேல் உள்ளன. ஒரெழுத்து முதல் ஈரெழுத்து வரையில் ஆன தமிழ்ச் சொற்கள் ஏறத்தாழ நூறாயிரத்திற்கு மேல் உள்ளன. இவை எழுத்தின் சுருக்கத்தையும் சொல்லின் பெருக்கத்தையும் மொழியின் வளத்தையும் காட்டும் இயல்புடையவை.
தமிழில் ஒரு பொருள் என்னும் நிலை மட்டுமல்லாது பல் பொருள் உணர்த்தும் ஒருசொல் நிலை பல உண்டு. மா என்னும் சொல்லுக்குப் பெரிய, மாவு, மாமரம், குதிரை, விலங்கு, இலக்குமி எனப் பல பொருள் உண்டு. இவ்வாறே ஒருபொருள் உணர்த்தும் பல சொற்கள் இருப்பதைப் பார்க்கலாம். கூறினான், சொன்னான், பேசினான், செப்பினான், உணர்த்தினான், உரைத்தான், மொழிந்தான், கழறினான் முதலான சொற்கள் கூறுதல் என்னும் ஒரு பொருள் குறித்து வழங்குபவை. இவ்வாறே வினைச்சொல், பெயர்ச் சொல், என இரண்டிற்கும் பொதுவான சொற்கள் அதாவது பூ, மலர், அடி, தழை, மலை போன்ற சொற்கள் பல தமிழில் உள்ளன.
தமிழ்ச் சொற்கள் நுட்பமாகப் பொருள் வேறுபாட்டினை உணர்த்தும் தன்மையைக் காணலாம். வாயினால் பொய் சொல்லாதிருப்பதது வாய்மை, உள்ளத்தால் பொய்யாது எண்ணுவது உண்மை. உடலால் பொய்யாது செயலாற்றுவது மெய்ம்மை. இவை எடுத்துக் காட்டுகள். ஒரு பொருளின் பல்வேறு நிலைகளை உணர்த்தும் சொற்களும் தமிழில் உண்டு. பூ என்பது தமிழர்களின் பண்பாட்டு பெயர்க் கூறுபாடுகளில் ஒன்று. பூவின் அரும்பும் நிலை அரும்பு என்றும், மொக்கு விடும் நிலை மொட்டு என்றும், முகிழ்க்கும் நிலை முகை என்றும், மலரும் நிலை மலர் என்றும், மலர்ந்த நிலை அலர் என்றும், வாடும் நிலை வீ என்றும் செம்மல் என்றும் அழைக்கப்படும். பூவின் பல்வேறு நிலைகளைக் கண்ட தமிழர், இலையிலும் இவ்வாறு நுட்பமாக நோக்கிக் கொழுந்து, தளிர், இலை, பழுப்பு, சருகு என அதன் பல்வேறு நிலைகளைக் காட்டும் சொற்களும் தமிழில் உள்ளன.
கணினி, பேருந்து முதலிய புதுச் சொற்களை அறிவியல் வளர்ச்சிக்கேற்ப அவ்வப்போது உருவாக்கவும் தமிழில் முடியும். இத்தகைய சொல்வளம் மிக்க மொழியை உயர்ந்த மொழி எனக் கூறுதல் தவறு ஆகுமா? எனவேதான் பாரதியார் சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே என்று கூறியுள்ளார்.
தனித்தியங்கும் தமிழ் _
தனித்தன்மை என்பது ஒரு மொழி மற்ற மொழிகளின் செல்வாக்கு இன்றித் தனித்து இயங்கும் தன்மையைக் குறிக்கும். தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய 23 மொழிகளைத் திராவிட மொழிகள் எனக் கூறுவர். இம்மொழிகளில் தமிழ் ஒன்றில் தான் சமஸ்கிருத மொழியின் செல்வாக்கு மிகக் குறைவு. ஏனைய மொழிகள் சமஸ்கிருத இலக்கண முறையைத் தழுவியும், சமஸ்கிருதச் சொற்கள் உதவியுடனும் இயங்கும் தன்மையன. ஆனால் தமிழ் மொழியோ வேறு எம்மொழியின் உதவியும் இல்லாமல் தனித்துப் பேசுவதற்குரிய தன்மை பெற்றது. பிற மொழிச் சொற்கலப்பு இல்லாமல் தூய தமிழில் பேசவும் எழுதவும் முடியம். ஆனால் உலகில் உள்ள பல மொழிகள் இப்படி அமையவில்லை. எனவேதான் தமிழைத் தனித்தியங்கும் மொழி என்று கூறினர். கடந்த நூற்றாண்டில் இதற்கெனத் தனித்தமிழ் இயக்கம் கண்டு வெற்றி பெற்றார் மறைமலை அடிகள்.
இலக்கணச் செம்மை –
ஒரு மொழிக்குச் செம்மைத் தன்மை என்பது அம்மொழியிலுள்ள இலக்கணக் கட்டுக்கோப்பால் கிடைப்பதாகும். இலக்கணம் என்பது ஒரு மொழியைப் பிழையறப் பேசவும், எழுதவும் உதவும் விதிகளைத் தருவது. மொழியின் செம்மைத் தன்மை குறையாமல் சுட்டிக் காப்பது இலக்கணமே ஆகும். இத்தகைய இலக்கண நூல்கள் தமிழில் பல உண்டு. இவற்றுள் காலத்தால் பழமையானது தொல்காப்பியம். இது 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்நூலாசிரியர் தொல்காப்பியர். இவர் ;தமிழ் மொழியில் பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு இவ்விரண்டையும் ஆராய்ந்து இலக்கண விதிகள் உருவாக்கி நூலாகத் தந்துள்ளார். இவர் தமிழ் மொழிக்குரிய எழுத்து, சொல், தொடர், சந்தி ஆகியவற்றின் இலக்கணத்தை மட்டும் தராமல் இலக்கியத்திற்குரிய உள்ளடக்கம், உருவம், உத்தி ஆகியவற்றுக்கும் இலக்கணம் இயற்றியுள்ளார். இதுவே இந்நூலின் சிறப்பு. வேறு எம்மொழியிலும் இல்லாத இந்தப் பெருமை தமிழுக்கு மட்டும் உண்டு. மேலும் தொல்காப்பியத்திற்கு முன்னரே பல இலக்கண இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்பதை அவர் நூல் நன்கு விளக்குகிறது. இது தமிழ் மொழியின் பழமையை உணர்த்துகிறது. தமிழில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என இலக்கணம் ஐந்து வகையாக அமைந்துள்ளது. தொல்காப்பியத்திற்குப் பிறகு இடைக்காலத்தில் நன்னூல் என்னும் இலக்கண நூல் தோன்றியது. இக்காலத்திலும் பல இலக்கண நூல்கள் எழுந்துள்ளன.
இலக்கியப் பெருமை –
ஒரு மொழியை உயர்தனிச் செம்மொழியாக ஆக்க உறுதுணையாக இருப்பவை அம்மொழியின் இலக்கியங்களே. அந்த வகையில் நோக்கினால் சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், மணீமேகலை, சீவக சிந்தாமணி, பெரிய புராணம், கம்ப இராமாயணம் எனப் பல்வேறு இலக்கியங்கள் தமிழின் பெருமையைப் பறைசாற்றும்.
செவ்வியல் மொழி –
உலகில் தனிச் செம்மொழிகளாகச் செவ்வியல் மொழிகளாக கிரேக்கம், ஹீப்ரு, இலத்தின், சமஸ்கிருதம் ஆகிய நான்கு மொழிகளைக் குறிப்பிடுவர். இம்மொழிகளின் பழைய நூல்களில் தமிழ்ச் சொற்கள் உள்ளன. எனவே இம் மொழிகளைப் போலத் தமிழும் பழமையான மொழி. அப்படியானால் தமிழை ஏன் செவ்வியல் மொழிப் பட்டியலில் சேர்க்கவில்லை எனக் கேட்கலாம். சீன மொழிக்கும் இந்நிலைதான். ஏன்எனில் கிரேக்கம், ஹீப்ரு, இலத்தின், சமஸ்கிருதம் ஆகிய நான்கு மொழிகள் ஏட்டு வழக்கில் மட்டுமே உள்ளன.ஆனால் தமிழும் சீனமும் வழக்கில் மட்டுமல்லாது மக்கள் நாவில் நடமாடும் பேச்சு மொழியாகவும் உள்ளன. அதனால் தான் இவற்றைப் இப்பட்டியலில் சேர்க்கவில்லை. பழமைக்குப் பழமையாகவும், புதுமைக்குப் புதுமையாகவும் இருக்கும் தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழி தானே.
எனவே சொல் வளத்தாலும், இலக்கிய இலக்கணச் சிறப்பினாலும் தனித்தியங்கும் தன்மையாலும் தமிழ்; ஒர் உயர்தனிச் செம்மொழியாக விளங்குவதுடன் இன்றும் வாழும் மொழியாகவும் இயங்குகிறது. இதனைப் போற்றிப் பேணுவது தமிழர்தம் தலையாய கடமை அல்லவா?http://thinmaithtamil.blogspot.in/2014/05/blog-post_2.html
தமிழ் – ஓர் உயர்தனிச் செம்மொழி.