ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சி அடையும் போதெல்லாம் சிங்கள மக்களை விடவும் அதிகம் பாதிப்டைவது சிறுபான்மையினரே! சுமந்திரன் பா.உ
இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை 19ம் திருத்தச் சட்டத்திற்கு விரோதமானது என 16 பேர் தாக்கல் செய்த வழக்குகளின் தீர்ப்பு நேற்றைய நாள் வெளி வந்த நிலையில் அந்த வழக்குகளில் ஒரு சட்டத்தரணியாக தோன்றிய ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ம.ஆ.சுமந்திரனுடனான ஓர் செவ்வி. செவ்வி கண்டவர் ந.லோகதயாளன்.
கேள்வி – தற்போது நாடாளுமன்றை ஜனாதிபதி கலைத்தமை அரசியல் யாப்பிற்கு விரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தமையின் அடிப்படையில் ஜனாதிபதி தவறு இழைத்தமை உறுதி செய்யப்படுகின்றது. எனவே ஜனாதிபதிக்கு எதிராக அவர் ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர் என வழக்குத் தாக்கல் செய்ய முடியுமா?
பதில் – ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரமுடியாது. ஆனால் நாடாளுமன்றில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர முடியும். அவ்வாறு ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று ஜனாதிபதி அரசியல் யாப்பினை வேண்டுமென்றே அல்லது தெரிந்தே மீறினார் என்பதன் அடிப்படையிலேயே கொண்டு வர முடியும். இங்கே தற்போது ஜனாதிபதி அரசியல் யாப்பினை மீறினாரா, இல்லையா என்ற சந்தேகத்திற்கு அப்பால் மிகத் தெளிவாக யாப்பிற்கு எதிராகச் செயல்பட்டார் என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டது. இதன் அடிப்படையில் ஜனாதிபதிக்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை முன்கொணர்ந்தால் அதன்போது அரசியல் யாப்பை மீறினாரா இல்லையா என்ற வாதமே அவசியம் இல்லாது போய்விடும்.
கேள்வி – இந்த வழக்கில் நீங்கள் காட்டிய அக்கறையினை தமிழ் மக்களின் அவசிய விடயங்களான நில விடுவிப்பு, காணாமல் போனோர் விடயம், திணைக்களங்களின் நில அபகிரிப்புக்களில் காட்டவில்லை எனக் கூறப்படுகின்றதே அது தொடர்பில் என்ன கூறுகின்றீர்கள்?
பதில் – தமிழ் மக்களின் நில விடுவிப்புக்கள் தொடர்பில் 2003ஆம் ஆண்டு முதல் முதல் பல வழக்குகளை நடாத்தியுள்ளோம். அதேபோல் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான வழக்கிலும் பங்குகொண்டோம். அதேபோல் எமது மக்களிற்கு பாதிப்பான திவுனகம வழக்கிலும் பங்கு கொண்டோம். இதில் நாம் வெற்றியீட்டியதனாலேயே எமக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கிய அன்றைய உச்ச நீதிமன்ற முதன்மை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவிற்கு நடந்தது இந்த நாடு மட்டுமல்ல உலகமே அறியும்.
கேள்வி – இந்தத் தீர்ப்பானது சிங்கள தேசத்திற்கும் சிங்கள மக்களிற்கும் நன்மை பயக்கும் அதேநேரம் எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு இதனால் நன்மை கிட்டாது, ஏனெனில் எந்த சிங்களத் தலைவர் ஆண்டாலும் தமிழர்களின் நிலை இதுதான் எனக் கூறப்படுவது தொடர்பில் என்ன கருதுகின்றீர்கள்?
பதில் – சிங்கள மக்கள் மட்டுமே நன்மை அடைவர் என்பது தவறான எண்ணம். ஏனெனில் இந்த நாட்டில் ஜனநாயகம் (Democracy) மற்றும் சட்டத்தின் ஆட்சி (Rule of Law) வீழ்ச்சி அடையும் போதெல்லாம் சிங்கள மக்களை விடவும் அதிகம் பாதிப்டைவது சிறுபான்மையினரே! அதனாலும் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. இவ்வாறு இந்த நாடு முழுவதற்குமான ஜனநாயகத்தை நிலைநாட்டியதில் எமது மக்களிற்கும் பாரிய பங்குண்டு என்பதனை யாரும் மறுக்க முடியாது.
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அரசியல் யாப்பு உறுப்புரை 4(டி) இல் அடையாளம் கண்டுள்ள மனித உரிமைகளை (Human Rights) அரசாங்கத்தின் ஒவ்வொரு உறுப்பும் மதித்து, கட்டிக்காத்து, முன்னெடுக்க வேண்டும் என கட்டளையிடுகிறது எனச் சுட்டிக் காட்டியுள்ளது. சட்டம் அனுமதிக்காத ஒவ்வொரு செயலும், சட்டத்தை மீறும் ஒவ்வொரு செயலும் சட்டத்துக்குப் புறம்பானது என சட்டத்தின் ஆட்சி ஆணையிடுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.