19 ஆவது திருத்தம் சாதனையா?
கே.சஞ்சயன்
சிறுபான்மை அரசாங்கம் ஒன்று, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ள எதிர்க்கட்சியின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன், இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொண்டது ஆச்சரியமான விடயமே.
அதுவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதிக்கப் போட்டிக்கு மத்தியிலேயே இது நடந்திருக்கிறது. 19ஆவது திருத்த வரைவு முன்வைக்கப்பட்ட நாளிலிருந்தே, அதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சிகள், வெளியிடப்பட்ட கருத்துகள், எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் உன்னிப்பாக அவதானித்த எவருக்கும், இந்த திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை ஊட்டியிருக்கவில்லை.
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைத்து, நாடாளுமன்றத்தை வலுப்படுத்தும் வகையிலான நகர்வில் பெரியளவில் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்காவிட்டாலும், இந்த திருத்தச்சட்டம் அந்த முயற்சியில் சில அடிகளை முன்நோக்கி எடுத்துவைத்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
இந்த திருத்த வரைவு முன்வைக்கப்பட்டபோது, ஜனாதிபதியின் அதிகாரங்களை கணிசமாக குறைக்கும் அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், உயர் நீதிமன்ற வியாக்கியானத்தில் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தியே நிறைவேற்ற வேண்டும் என்று விதந்துரைக்கப்பட்ட பகுதிகளை இந்த திருத்தச் சட்டமூலத்திலிருந்து நீக்கியபோதே, பிரதான இலக்கில் ஒரு தடுமாற்றம் ஏற்பட்டுவிட்டது.
அதற்குப் பின்னர், திருத்தங்களுடன் முன்வைக்கப்பட்ட சட்டமூலத்தில் மேலும் மேலும் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன.
இறுதியாக இரண்டாவது வாசிப்பின்போது, 174 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு, அவற்றில் பெரும்பாலானவை உள்ளடக்கப்பட்டதால், இந்த திருத்தத்தின் அடிப்படை அம்சம் குலைந்துபோனது. எவ்வாறாயினும், நிறைவேற்று அதிகாரத்தில் சில பிரிவுகளை வலுவிழக்கச் செய்வதில் வெற்றி கண்டிருக்கிறது அரசாங்கம்.
1978ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அரசாங்கம் உருவாக்கிய குடியரசு அரசியல் யாப்பில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தொடர்பான பிரிவில் செய்யப்பட்டுள்ள முதலாவது மிகப்பெரிய மாற்றமாக இதனைக் கருதலாம். 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சிகளை உடைத்தும் பிரித்தும் மிரட்டியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொண்டு, 18ஆவது திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருந்தார்.
அதன் மூலம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை குறித்த பிரிவில் – ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடத் தகுதி பெற்றவர்கள் குறித்த விடயத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அரசியலமைப்பு, ஜனாதிபதிப் பதவியை இரண்டு தடவைகள் வகித்த ஒருவர், மூன்றாவது பதவிக்காலத்துக்காக தேர்தலில் போட்டியிடமுடியாது என்று கூறப்பட்டிருந்தது. அந்த விதிமுறையை 18ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் தனக்காகவே மாற்றிக்கொண்டிருந்தார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அதன் மூலம் அவர் மூன்றாவது முறை போட்டியிட்டுத் தோல்வியையும் தழுவிக்கொண்டார்.
மஹிந்த ராஜபக்ஷவின் அந்தப் பேராசையே அவரை இரண்டாவது பதவிக்காலத்தைக் கூட, முழுமையாக ஆட்சியில் அமர்ந்திருக்கமுடியாத நிலையை ஏற்படுத்தியிருந்தது. இப்போது 19ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் ஜனாதிபதி பதவியில் இரண்டு முறை இருந்த ஒருவர், மூன்றாவது முறை போட்டியிடமுடியாமல் தடுக்கப்பட்டுள்ளது. அதாவது, மஹிந்த ராஜபக்ஷ கொண்டுவந்த 18ஆவது திருத்தம் நீக்கப்பட்டுள்ளது.
அதைவிட, ஆறு ஆண்டுகள் என்றிருந்த ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
இது, ஜனாதிபதி பதவியில் இனிமேல் அமரக்கூடிய எவரும் 10 ஆண்டுகளுக்கு மேல் அந்தப் பதவியில் அமர்ந்திருக்க முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முன்னர் ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரங்கள், அவரை நாடாளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டிய அவசியமற்றவராகவே வைத்திருந்தது. அந்த நிலை மாற்றியமைக்கப்பட்டு, நாடாளுமன்றத்துக்கு பொறுப்புக் கூறவேண்டிய நிலையை இப்போதைய திருத்தம் உருவாக்கியிருக்கிறது.
இதுவரை ஜனாதிபதிக்கு எதிராக, எந்தவொரு வழக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யமுடியாது என்ற நிலையே இருந்துவந்தது. ஆனால், இப்போது 19ஆவது திருத்தச்சட்டம் ஜனாதிபதிக்கு வழங்கியிருந்த அந்த சட்டப் பாதுகாப்பை நீக்கியிருக்கிறது.
ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு இந்த திருத்தம் வழிசெய்கிறது.
தமக்கெதிராக வழக்கு தொடுக்கமுடியாது என்ற துணிச்சல் – கர்வத்தில் ஜனாதிபதி ஒருவர் எதையும் செய்யமுடியும் என்ற நிலைக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
அமைச்சர்கள் நியமனத்தைக் கூட, ஜனாதிபதி தன்னிச்சையாக நியமிக்கலாம் என்ற நிலை மாற்றப்பட்டிருக்கிறது.
பிரதமருடன் கலந்தாலோசித்தே, அமைச்சர்களை நியமிக்கலாம் என்று 19ஆவது திருத்தச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, நாடாளுமன்றத்தின் மீது ஜனாதிபதி ஒருவர் தனது அதிகாரத்தை பிரயோகிப்பதற்கும் 19ஆவது திருத்தம் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தியிருக்கிறது.
5 ஆண்டுகளைக் கொண்ட நாடாளுமன்றத்தை முன்கூட்டியே அதாவது, நான்கரை ஆண்டுகளுக்கு முன்னதாக ஜனாதிபதியால் கலைக்கமுடியாது என்று சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இது ஜனாதிபதி ஒருவர், தனக்கு உடன்பாடில்லாத தன்னுடன் இணங்கிப்போகாத அல்லது மாற்றுக்கட்சி பெரும்பான்மை பலம் பெற்றிருக்கும் அரசாங்கம் ஒன்றைக் கலைப்பதை தடுக்கிறது.
முன்னதாக ஓர் ஆண்டுக்குப் பின்னர், எந்த நேரத்திலும் ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தைக் கலைக்கமுடியும் என்ற நிலை இருந்துவந்தது.
2001ஆம் ஆண்டு தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை, அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க குறுகிய காலத்திலேயே கலைத்திருந்தார். 2004ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே அப்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்த நிலை இனிமேல் ஏற்படாது என்பதை 19ஆவது திருத்தச்சட்டம் உறுதிப்படுத்துகிறது. இதன் மூலம் நாடாளுமன்றத்தின் மீதான ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம், வலுவற்றதாக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அமைச்சரவையின், அரசாங்கத்தின், நாட்டின் தலைவராகவும் முப்படைகளின் தளபதியாகவும் ஜனாதிபதியே பதவியில் இருக்கப்போகிறார். இது குறித்த சில திருத்தங்களும் முன்வைக்கப்பட்டபோதிலும், உயர் நீதிமன்றத்தில் வியாக்கியானத்தினாலும், எதிர்க்கட்சியின் அழுத்தங்களினாலும் அவற்றை கைவிடவேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டது.
முன்னதாக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி ஒழிக்கப்படும் என்றே வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. ஆனால், தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள திருத்தங்கள், ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்கான அடிப்படையை கொண்டிருக்கவில்லை.
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைப்பது மட்டுமே இதன் நோக்கமாக இருந்தது.
இதற்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை போலவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாக முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் தேர்தல்களில் வாக்குறுதிகளை கொடுத்திருந்தனர். ஆனால், அவர்களால் அதனைச் செய்யமுடியவில்லை என்பதை விட, செய்ய முயற்சிக்கவில்லை என்பதே உண்மை.
மஹிந்த ராஜபக்ஷவிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருந்தபோதும், அவர் தனது அதிகாரங்களை வலுப்படுத்திக்கொள்வதற்கே பயன்படுத்திக்கொண்டாரே தவிர, நிறைவேற்று அதிகார ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு பயன்படுத்த நினைக்கவேயில்லை. ஏனென்றால், அந்த அதிகாரங்களில் அவர் நன்றாகவே ருசி கண்டிருந்தார்.
இப்போது நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கப் போராடும் சந்திரிகா குமாரதுங்கவும் கூட, தனது பதவிக்காலத்தில், இத்தகையதொரு அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொண்டு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கவோ அல்லது அதிகாரங்களை குறைக்கவோ முனையவில்லை.
இப்போதுள்ள சிறுபான்மை அரசாங்கம், பெரும்பான்மை பலம் கொண்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் இந்த திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற முடிந்திருக்கிறது என்றால், சந்திரிகாவினால் அப்போதே அதனை செய்திருக்கமுடியும். ஆனால், அவரது அதிகார போதை அந்த துணிவை அவருக்கு கொடுத்திருக்கவில்லை.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி, அந்தப் பதவியில் அமர்ந்துகொள்ளும் எவரையும் சர்வாதிகாரியாகவே மாற்றிவிடும் வல்லமை பெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடயத்திலும் அது நடந்துவிடுமோ என்ற அச்சம் பலருக்கும் வந்ததும் உண்மை. சிலர் அதனை வெளிப்படையாகவே கூறினர்.
அதிகாரத்துக்கு வந்த பின்னர், நிறைவேற்று அதிகாரங்களை தக்கவைத்துக்கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கட்சியினரை தூண்டிவிட்டு, 19ஆவது திருத்தம் நிறைவேறுவதை தடுக்க முனைவதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற கட்சிகள் வெளிப்படையாகவே சந்தேகம் வெளியிட்டிருந்தன.
ஆனாலும், 19ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு தனது முழுமையான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பதில் துளியளவும் சந்தேகம் கொள்ளவேண்டியதில்லை.
இறுதிக்கட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான தமது கட்சியினரை வழிக்கு கொண்டுவந்து, அவர்களையும் 19ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்த பெருமைக்கு அவரே முக்கிய காரணம். அதற்காக அவர் நாடாளுமன்றத்துக்குள் இருந்துகொண்டு நடத்திய போராட்டத்தை குறைத்து மதிப்பிடமுடியாது.
அதிகாரத்தை விட்டுக்கொடுத்து, அரசியலமைப்பில் திருத்தம் செய்ய முன்வந்த முதல் ஜனாதிபதியாக அவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
அதேவேளை, இந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் எல்லாப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விட்டதாகவோ, ஜனநாயகம் முற்றாக வலுப்படுத்தப்பட்டு விட்டதாகவோ கருதமுடியாது. ஏற்கெனவே திட்டமிட்டது போன்று, அரசியலமைப்பு சபையை அரசியல் கலப்பற்றதாக – துறைசார் நிபுணர்களை மட்டும் கொண்டதாக உருவாக்கும் முயற்சி பலிக்கவில்லை.
மீண்டும், அது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதிக்கத்துக்குட்பட்டதாகவே அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுதந்திர ஆணைக்குழுக்களுக்கு நியமனங்களை செய்யும்போது, அரசியல் ரீதியான தலையீடுகளுக்கு வாய்ப்புகள் இருப்பதை மறுக்கமுடியாது.
அரசியலமைப்பு சபை விடயத்திலும் பிரதமரின் அங்கிகாரத்துடனேயே அமைச்சரவையை நியமிக்க முடியும் என்ற விடயத்திலும் கடைசிவரை நீடித்த இழுபறியால் 19ஆவது திருத்தமே நிறைவேற்றப்பட முடியாமல் போகும் நிலை ஏற்பட்டது.
அந்தக் கட்டத்தில், வேறு வழியின்றி எதிர்க்கட்சியின் அழுத்தங்களுக்கு பணிவதை விட, வேறு தெரிவு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு இருக்கவில்லை.
சிறுபான்மை அரசாங்கம் ஒன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றை மேற்கொள்ளும்போது, இது போன்ற விடயங்களில் விட்டுக்கொடுத்தேயாக வேண்டியது கட்டாயம். இல்லாவிட்டால், 19ஆவது திருத்தம் முற்றாகவே முடக்கிப் போயிருக்கும். அதனாலேயே, பல விடயங்களில் தமது பிடிவாதங்களை தளர்த்தி, எதிர்க்கட்சியின் ஆதரவைப் பெற முனைந்திருக்கிறது அரசாங்கம்.
தாம் நினைத்ததை சாதிக்கமுடியாது போனாலும், இப்போதைக்கு ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்தல் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய 19ஆவது திருத்தச்சட்டதை நிறைவேற்றியுள்ளதாக அரசாங்கத்தினால் காட்டிக்கொள்ள முடியும். ஆனால், இதன் முழுப்பலனை அடைவதற்கு மீண்டும் திருத்தங்களை செய்யவேண்டும் என்றும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், முழுமையாகவே அரசியலமைப்பை மாற்றப்போவதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருக்கிறார். அதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் மட்டுமன்றி, சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும்.
அத்தகையதொரு மாற்றத்துக்கான சூழல் இப்போது இலங்கையில் இருக்கிறதா என்பது சந்தேகமே. என்றாலும், இப்போதைக்கு நிறைவேற்று அதிகாரத்தின் சிறகுகள் சில வெட்டப்பட்டு, அளவுக்கு மிஞ்சிப் பறக்கமுடியாத நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும், இதன் பலனை அனைத்து மக்களும் அனுபவிக்கவேண்டுமாயின், அதற்கு அரசியலமைப்பில் இன்னமும் பல திருத்தங்கள் செய்யப்படவேண்டியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.