பொது வெளிக்கு வராத செய்திகளை வெளிக்கொணரும் முதல் முயற்சி செய்திகளின் மறுபக்கம்
நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் யோசேப் சந்திரகாந்தன் அடிகளார்
“உண்மைகளை, செய்திகளை உள்ளபடி வெளியிடாமல், வெளியிட முடியாமல் அவரவருக்கு வேண்டிய செய்திகளை மட்டும் அவரவருக்கு வேண்டிய விதத்தில் வெளியிடப்படும் இன்றைய காலகட்டத்தில், பொதுமக்களுக்கு காலம் தாழ்த்தியேனும் உண்மைகளை உள்ளபடி கொடுக்க வேண்டிய அவசியம் நிட்சயம் உண்டு. அந்தவகையில் “செய்திகளின் மறுபக்கம்” என்ற நூலை ஒரு முதல் முயற்சியாகப் பார்க்கின்றேன்” இவ்வாறு ரொறொன்ரோவில் நடைபெற்ற “செய்திகளின் மறுபக்கம்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் வண. யோசேப் சந்திரகாந்தன் அடிகளார் குறிப்பிடடார்.
மூத்த ஊடகவியலாளர் திரு இரா துரைரத்தினம் அவர்கள் எழுதிய ” செய்திகளின் மறுபக்கம்” என்ற நூல் தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தால் 21-10-2018 ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது.
இவ் வெளியீட்டு விழாவுக்கு தமிழ்ப் படைப்பாளிகள் கழகத் தலைவர் திரு நக்கீரன் தங்கவேலு தலைமை தாங்கிளார்.
கனடா தேசியப் பண், தமிழ்மொழி வாழ்த்து இரண்டையும் இசை ஆசிரியர் சங்கீத பூசணம் கமலாதேவி சண்முகலிங்கத்தின் மாணவர்கள் யாதவி பிரசன்னா, வித்யா விஸ்வகுமார், விஷ்வா விஸ்வகுமார் ஆகியோர் பாடினர். தமிழீழ விடுதலைக்குத் தங்கள் இன்னுயிர்களை ஈகை செய்த மாவீரர்கள் நினைவாக அகவணக்கம் அனுட்டிக்கப்பட்டது.
தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தின் செயலாளர் திரு முருகேசு தியாகலிங்கம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய திரு வி.வின் மகாலிங்கம் “மக்கள் தமது அபிப்பிராயங்களை நம்பிக்கைகளை உருவாக்குவது அவர்களுக்குக் கிடைக்கும் செய்திகள் மூலம்தான். தவறான செய்திகள் தவறான அபிப்பிராயங்களையும் நம்பிக்கைகளையுமே உருவாக்கும். அதன்மூலம் மக்கள் தவறான முடிவுகளையே எடுப்பார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உண்மைகள் உடனுக்குடன் வெளிக்கொணரப் படாவிட்டாலும் சந்தர்ப்பம் வரும்போதாவது அவை மக்களுக்குத் தெரியப்படுத்தப் பட வேண்டும் என்பதுதான் இந்நூல் வெளியீட்டின் நோக்கம் என்றார்.
திரு நக்கீரன் தங்கவேலு தனது தலைமை உரையில் நூலாசிரியர் திரு இரா.துரைரத்தினம் அவர்கள் எழுதிய “செய்திகளின் மறுபக்கம்” மட்டக்களப்பு, கொழும்பு, சுவிஸ் போன்ற இடங்களில் ஏற்கனவே வெளியீடு செய்திருப்பதாகவும் இப்போது ரொறன்ரோவில் இடம்பெறுவதாகவும் சொன்னார். வரலாறு வரலாறாக கமகாலத்தில் பதியப்பட வேண்டும். அந்தக் கண்யோட்டத்தில் இந்த நூல் ஒரு சமகால வரலாற்றுப் பதிவு என நான் நினைக்கிறேன். அப்படியான ஒரு நூலை வெளியீடு செய்து வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய பேராசிரியர் சந்திரகாந்தன் “தொடர்ந்து வெளிவரவேண்டிய இவ்வாறான நூல்களுக்கு, அதற்காகச் செய்யப்பட வேண்டிய பணிகளுக்கு இந்நூல் ஒரு தொடக்கமாக அமைகின்றது. பலரும் எதிர்பார்க்கும் ஒருவிடயம் இதுதான். ஆனால் இப்படியான நூல்கள் 500, 1000 வருடங்களுக்குப் பின்னரும் கூட ஆய்வுக்காக, மேற்கோளாக எடுக்கப்படலாம் என்பதை நூலாசிரியர்கள் மனதில் வைத்துக்கொண்டு நம்பகத்தன்மையுள்ள உறுதிப்படுத்தக் கூடிய செய்திகளைத் தாங்கி வரும் நூல்களை எழுத வேண்டும். நம்பகத் தன்மையற்ற வெறுமனே கேள்விப்பட்ட செய்திகளைச் சேர்க்கக் கூடாது.
பிரதேச வாதம் (பிரதேச அபிமானம்) பிழையல்ல, ஆனால் பிரதேச ஆதிக்கம் தவறானது. அதுபற்றிய செய்திகளும் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. போராட்ட காலத்தில் ஊடகவியலாளர் சிவராம் அவர்கள் வடக்குக்கு விஜயம் செய்திருந்தார். அதன் பின் அவரது சிந்தனைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டதை நான் அறிவேன். இந்நூலில் உள்ள சில விடயங்கள் செம்மைப்படுத்தப்பட வேண்டும். அவை எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக இருக்க வேண்டும். இப்படியான பணிகள் தொடர வேண்டும்” என்றார்.
அடுதுது ஆய்வுரை வழங்கிய “தேசியம்” சஞ்சிகையின் ஆசிரியர் திரு இலங்கதாஸ் பத்மநாதன் அவர்கள் “இந்நூலாசிரியர் பல பயனுள்ள செய்திகளைத் தந்துள்ளார். ஆனால் அது ஒரு முழுமை பெறாத விதமாக இருப்பது சற்று ஏமாற்றத்தைத் தருவதாகத்தான் நான் பார்க்கின்றேன். ஏனென்றால் சில விடயங்கள் உறுதிப்படுத்தப் படாதவையாக நம்பகத்தன்மை இல்லாததாக காணப்படுகின்றன. நாம் தாயகத்திற்கு பொருளாதார உதவிகளைச் செய்யலாம், கருத்தியல்களைக் கொடுக்கலாம் ஆனால் முடிவுகளை எடுக்கக் கூடாது. உண்மைகள் வெளிவருவதற்கு இது ஒரு நல்ல முயற்சி. இவரது பணியை மேலும் பலர் தொடரவேண்டிய அவசியத்தை நான் உணர்கின்றேன்” என்றார்.
அவரைத் தொடர்ந்து தமிழர் தகவல் ஆசிரியர் திரு திருச்செல்வம் ஆய்வுரை வழங்கினார். ” இந்த நூலாசிரியர் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்தவராயினும் அவர் யாழ்ப்பாணத்திலே பிறந்து வளர்ந்தவர். அவரை நன்கு தெரிந்தவன் என்ற வகையில் பேசுகின்றேன். இவரது இந்த முயற்சியை வரவேற்கின்றேன். இவ்வாறான பல நூல்கள் வெளிவரவேண்டும். ஆனால் ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போல உண்மைக்கு மாறான ஒரு செய்தி வந்தாலும் அனைத்து நல்ல விடயங்களும் அடிபட்டுப்போகும். நூலாசிரியர்கள் இவற்றில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
உண்மைச் செய்திகளை வெளியிடும் நூல் என்று அதிலும் முழுமையான உண்மை வெளிவரவில்லை என்றால் நோக்கம் பாழாகி விடும். எனவே இந்த நூலை மீளாய்வு செய்து மறுபிரசுரம் செய்வது நல்லது. இன்னும் பலரும் இப்படியான நூல்களை எழுதி வெளியிட முன்வரவேண்டும்.” என்று கூறினார்.
நிறைவாகத் தனது ஆய்வுரையை வழங்கிய ஊடகவியலாளர் திரு தம்பிராஜா பாபு வசந்தகுமார் அவர்கள் ” சிங்களக் குடியேற்றத்தால் ஆக்கிரமிப்பால் இன்று பதியத்தலாவ என்று வழங்கப்படும் அன்றைய தனித் தமிழ் ஊரான விந்தனைப்பற்றில் பிறந்தவன். அதனால் எனது பெற்றோர்கள் எனக்கு இட்ட பெயர் வனராஜா. ஆனால் இன்று வசந்தகுமாராக மாற்றியுள்ளேன். செய்திகளின் மறுபக்கம் என்ற இந்த நூல் மிகநல்லதொரு முயற்சி. சிறு தவறுகளை நான் பார்த்த போதும் தேவையான அவசியமான பல உண்மைகளை, செய்திகளை அவர் வெளிக்கொண்டு வந்துள்ளார். அதை நாங்கள் பாராட்ட வேண்டும். சிவராம் பாடசாலையிலேயே ஆங்கிலக் கவிதைகள் எழுதியவர். அவர் அந்நாளில் படிக்காத புத்தகங்களே இல்லை என்று சொல்லலாம்.
அவரைப் பற்றிய செய்திக்குறிப்புகளும் இந்நூலில் உள்ளன. அவை சரி பார்க்கப்பட வேண்டும். போராட்ட காலத்திலும் சில தவறுகள் நடந்தன. இக்காலத்தில் நாம் சரியான முறையில் முன்னேறிச்செல்ல கடந்த கால வரலாற்று உண்மைகள் எமக்கு உதவ வேண்டும். இந்நூலைப் போன்று இன்னும் பல நூல்களை பலரும் எழுத முன்வரவேண்டும். அதற்கு இந்நூல் ஒரு முன்னோடியாக விளங்குகின்றது. ஆயுதப் போராட்டம் முடிந்து நாம் இப்போது ஜனநாயக வழியில் இராஜதந்திரப் போரில் ஈடுபட்டுள்ளோம். நா.உறுப்பினர் சுமந்திரன் போன்ற ஆளுமைமிக்க தளபதிகள் அதை முன்நகர்த்திச் செல்கின்றார்கள். ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்துவது அல்லது பொருள் ஈட்டுவதை மட்டும் குறியாக இல்லாமல் மக்கள் நன்மைக்காக உண்மைகளைத் துணிவாக வெளிக்கொணர வேண்டும்” என்றார்.
வைத்திய கலாநிதி போல்.ஜோசேப் அவர்கள் நூலை வெளியிட்டு வைத்தார். நூலின் முதற் படியை கனடா தமிழ்க் கலைக் கல்லூரி அதிபர் திருமதி தியாகேஸ்வரி மகேந்திரன் பெற்றுக் கொண்டார்.
திரு நக்கீரன் தங்கவேலு அவர்களின் நன்றியுரையுடன் விழா நிறைவடைந்தது.
Leave a Reply
You must be logged in to post a comment.