பனை மரத்தை பாதுகாப்போம்

பனை மரத்தை பாதுகாப்போம்


பனை மரத்தை பாதுகாப்போம்
மக்கள் வாழ்க்கையுடன், கலாசாரத்துடன் பின்னிப்பிணைந்த அத்தியாவசியமான மரங்கள். மக்களுக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மரங்கள் இவை.
பதிவு: மார்ச் 25,  2018 14:37 PM
பனை மரம்… தென்னை மரம்… வாழை மரம்…

மக்கள் வாழ்க்கையுடன், கலாசாரத்துடன் பின்னிப்பிணைந்த அத்தியாவசியமான மரங்கள். மக்களுக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மரங்கள் இவை.

அதிலும் குறிப்பாக பனை மரத்தின் எல்லா பகுதியும் மக்களுக்கு பயன்படக்கூடியது. தேவை இல்லை என்று அதில் எதையும் தூக்கி எறிந்து விட முடியாது. அதனால்தான் அதை ‘கற்பகதரு’ என்கிறோம்.

அவ்வளவு ஏன்?… தமிழகத்தின் தேசிய மரமே பனை மரம்தான். கம்போடியா நாட்டின் தேசிய சின்னமும் பனைதான். பனை மரத்தின் பெருமைக்கும், முக்கியத்துவத்துக்கும் இதைவிட வேறு என்ன வேண்டும்?

மனிதனின் எந்த முயற்சியும், உதவியும் இன்றி இயற்கையாக தானாக வளரக் கூடியது பனை மரம். அதன் கொட்டை எந்த இடத்தில் விழுகிறதோ, அது எத்தகைய நிலப்பகுதியாக இருந்தாலும் தானாக முளைத்து வளர்ந்து விடும். அப்படி தானாக வளரக்கூடிய மரம், மனிதர்களுக்கு தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் கொடுத்து தியாகச் செம்மலாக விளங்குகிறது.

நீர்வளம் மிக மிகக் குறைவாக உள்ள வறட்சி மிகுந்த பகுதியிலும் வளரக்கூடியது. பனை மரங்கள் 100 அடி உயரம் வரை வளரக்கூடியவை. எத்தகைய தட்பவெட்ப நிலையையும், சூறாவளி காற்றையும் தாக்குப்பிடித்து நிலைத்து நிற்கக்கூடியவை.

பனைமரம் ஒரு வெப்ப மண்டல தாவரம். மிகவும் அபூர்வமாக சில பனை மரங்கள் கிளைகளுடன் வளரும். உலகம் முழுவதும் சுமார் 14 கோடி பனை மரங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக இந்தியாவில் 6 கோடி பனை மரங்கள் உள்ளன. இந்தியாவுக்கு அடுத்தபடியாக மேற்கு ஆப்பிரிக்காவில் 5 கோடி பனை மரங்கள் உள்ளன.

இதுதவிர இலங்கை, இந்தோனேசியா, மடகாஸ்கர், மியான்மர், கம்போடியா, தாய்லாந்து நாடுகளிலும் அதிக அளவில் இருக்கின்றன. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ஏராளமான பனைகள் உள்ளன.

பனை மரத்தின் வேர் முதல் உச்சியில் உள்ள ஓலை வரை எல்லாமே பயன்படக்கூடியவை. பனை மரத்தின் இலையைத்தான் ஓலை என்கிறோம்.

பனை மரத்தின் பாளையில் இருந்து கிடைக்கும் சாறு பதநீர் எனப்படுகிறது. சிறிதளவு சுண்ணாம்பு சேர்க்கப்பட்டு பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் பதநீர் மிகவும் சுவையானது மட்டுமின்றி உடலுக்கு குளிர்ச்சியையும் தருகிறது.

ஜெல்லி போன்று மிருதுவாக இருக்கும் நுங்கு, ஐஸ் கட்டியை விழுங்குவது போன்று ஜில்லென்று சுவையாக இருக்கும். இதனால்தான் நுங்கை ‘ஐஸ் ஆப்பிள்’ என்கிறார்கள்.

மஞ்சள் நிறத்தில் திடமான கூழ் போன்று காணப்படும் பனம் பழமும் சுவை மிகுந்தது. இதை நெருப்பில் சிறிது சுட்டு சாப்பிட்டால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். பனங்கொட்டையின் மூலம் பூமிக்கு அடியில் வளர்ந்து கிடைக்கும் பனங்கிழங்கு நார்ச்சத்து மிகுந்தது.

பனை ஓலை கூரை வேயவும், பெட்டி, கூடை, விசிறி, பாய், முறம் மற்றும் பூச்சாடி போன்ற கைவினை பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. கயிறு தயாரிப்பு தொழிலில் பனை நார் முக்கிய பங்கு வகிக்கிறது.

பனை மரத்தின் தண்டு எனப்படும் கருநிறம் கொண்ட பிரதான பகுதி வீடு போன்ற கட்டிடங்கள் கட்டுவதற்கு உத்திரம், வளையாக பயன்படுகிறது.

பறவைகளின் வாழ்விடமாகவும் பனைமரம் விளங்குகிறது. தூக்கணாங்குருவிகள் தங்கள் கூடுகளை கட்ட பெரும்பாலும் பனைமரங்களையே தேர்ந்துதெடுக்கின்றன.

அந்த காலத்தில் கிராமப்புறங்களில் பெரும்பாலான காரை வீடுகள் கட்டுவதற்கு பனை மரம்தான் பெரிதும் ஆதாரமாக இருந்தது. காலப்போக்கில் பிற மரங்கள் மற்றும் காங்கிரீட்டின் பயன்பாடு அதிகரித்ததால் கட்டுமான பணிக்கு பனை மரத்தின் தேவைப்பாடு கிட்டத்தட்ட முற்றிலுமாக குறைந்துவிட்டது. வீடு கட்டுவோர் யாரும் இப்போது அதை சீண்டுவது இல்லை.

மேலும் பனை ஏறும் தொழில் ஆபத்தானது என்பதாலும், உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைப்பது இல்லை என்பதாலும் பனை மரங்கள் மெல்ல மெல்ல தங்கள் மவுசை இழக்கத் தொடங்கின.

ஒரு காலத்தில் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய பனை மரங்கள், சமீப காலத்தில் கண்மூடித்தனமாக வெட்டப்பட்டு செங்கல் சூளைகளுக்கு விறகாக பயன்படுத்தப்படுகின்றன.

மண் அரிப்பை தடுப்பதில் பனை மரங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அதனால்தான் அந்த காலத்தில் நம் முன்னோர்கள் ஏரி மற்றும் குளக்கரைகளில் பனை மரத்தை வளர்த்தார்கள். இப்போதும் அந்த இடங்களில் அவற்றை நாம் பார்க்க முடியும்.

பனை மரத்தின் வேர்கள் அடர்த்தியாகவும், உறுதியாகவும் இருக்கும் பனை மரத்தின் வேர்கள் மண்ணுக்குள் நீண்ட தூரம் ஊடுருவிச் சென்று வலை குவியல் போல் சேர்ந்து மண்ணை இறுக்கமாக பற்றிக் கொள்ளும். இதனால் எவ்வளவுதான் மழை பெய்தாலும், நீரோட்டம் பெருக்கெடுத்தாலும் கரைகள் உடையாமல் உறுதியாக இருக்கும்.

ஆனால் அதன் அருமை பெருமையை உணராமல் ஏரி, குளக்கரைகளில் உள்ள பனை மரங்களையெல்லாம் வெட்டி வீழ்த்திவிட்டார்கள். கடந்த 2015-ம் ஆண்டு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பேய் மழையின் போது சில ஏரி மற்றும் குளக்கரைகள் உடைந்ததற்கு அங்குள்ள பனை மரங்களை கண்மூடித்தனமாக வெட்டித்தள்ளியதுதான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது நினைவு இருக்கலாம்.

காலத்தின் கோலத்தால் பனை மரங்கள் அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது வெறும் 5 கோடி பனைமரங்களே இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 2 கோடி பனைமரங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

நிலைமை இப்படியே நீடித்தால் பனை மரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிடும் ஆபத்து உள்ளது. அந்த மாதிரியான ஒரு நிலை ஏற்பட்டால் வருங்கால சந்ததியினர், இப்படி ஒரு மரம் இருந்தது, அது இன்னென்ன பயன்களை கொடுத்தது என்பதை பாடப்புத்தகத்தில் படித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

எனவே அழிவின் விளிம்பில் இருக்கும் பனை மரங்களை பாதுகாப்பதோடு, புதிதாக பனை மரங்களை வளர்ப்பதும் காலத்தின் கட்டாயம் ஆகும்.

கோவில்களின் தல விருட்சம்

* பனை மரத்தின் தாவரவியல் பெயர் ‘போராசஸ் பிளாபெரிபெர்லின்’.

* அபூர்வமாக சில பனை மரங்கள் பல கிளைகளுடன் வளர்வது உண்டு.

* காகம், மைனா, தூக்கணாங்குருவி போன்ற சில வகை பறவைகள் தங்கள் இருப்பிடமான கூட்டை அமைப்பதற்கு பனை மரத்தையே தேர்வு செய்கின்றன. அவை அருந்துவதற்கு அங்கு பதனீர் கிடைப்பதும் அதற்கு ஒரு காரணம் ஆகும்.

* மரம் கொத்தி பறவைகள் தங்கள் அலகால் பனைமரத்தை கொத்தி கொத்தி துவாரத்தை ஏற்படுத்தி அதை தங்கள் வசிப்பிடமாக பயன்படுத்துகின்றன. அவை அதை காலி செய்து விட்டு வெளியேறும் போது, அந்த இடத்தில் கிளிகள் குடியேறுவது உண்டு.

* திருப்பனந்தாள், திருப்பனங்காடு, திருப்பனையூர், திருக்குறுங்குடி உள்ளிட்ட சில கோவில்களின் தல விருட்சம் பனை மரம் ஆகும்.

* இந்துக்களும், புத்தர்களும் பனை மரத்தை தெய்வமாக கருதி வழிபடுகிறார்கள்.

* ராமபிரான் எய்த ஒரே அம்பு ஏழு பனை மரங்களை துளைத்துச் சென்றதாக புராணத்தில் கூறப்பட்டு உள்ளது. இதை விளக்கும் சிற்பம் கர்நாடக மாநிலம் அம்ரிதாபுராவில் உள்ள அமிர்தேஸ்வரர் கோவிலில் உள்ளது. ராமபிரானின் இந்த வீரத்தை பாராட்டும் வகையில் அவருக்கு விபீஷணன் 7 தங்க பனைகளை பரிசாக வழங்கியதாகவும் புராணத்தில் கூறப்பட்டு உள்ளது.

* பகவான் கிருஷ்ணரின் சகோதரனான பலராமனின் கொடி பனை மரம் என்று தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

* சேர மன்னர்கள் பனம்பூ மாலை அணிவதை தங்கள் கவுரவமாகவும், அடையாளமாகவும் கொண்டிருந்ததார்கள்.

* கேரளாவில் தமிழகத்தையொட்டி அமைந்துள்ள பாலக்காடு மாவட்டத்தில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. இதனால் அங்கு அந்த மாவட்டத்தை பனை மர மாவட்டம் என்றே அழைக்கிறார்கள். அங்குள்ள மக்களின் கலாசாரம், பண்பாடு பனை மரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. மலையாள மொழியில் பனை மரத்தை கருவாக கொண்டு ஏராளமான சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் எழுதப்பட்டு உள்ளன. பாலக்காடு மாவட்டத்தின் அடையாளமாக விளங்கும் பனை மரத்தை பாதுகாக்க, அந்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பனை ஏறும் தொழில் நசிந்தது ஏன்?

தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் பனை ஏறுவது முக்கிய தொழிலாக விளங்கியது. குறிப்பாக தென் மாவட்டங்களில், இந்த தொழில் மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கியது. ஆனால் காலப்போக்கில் பனை ஏறும் தொழில் நசிந்துவிட்டது. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமானது இந்த தொழிலில் உள்ள ஆபத்து.

பனை ஏறுவது மிகவும் கடினமானது மட்டுமின்றி, ஆபத்து நிறைந்ததும் ஆகும். கரடு முரடான பனை மரத்தில் ஏறி இறங்குவதற்கு நல்ல ஆரோக்கியமும், உடல் திறனும், மன தைரியமும் வேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்பது போல, சிறிது கவனம் சிதறினாலும் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. பதனீரை இறக்குவது, அதை வீட்டுக்கு கொண்டு வந்து காய்ச்சி பனைவெல்லம் ஆக்குவது என்று இந்த தொழிலில் குடும்பம் முழுவதுமே ஈடுபட வேண்டி உள்ளது. ஆனால் அந்த அளவுக்கு கடுமையாக உழைத்தாலும், போதிய வருமானம் கிடைப்பது இல்லை.

இதனால்தான் பரம்பரை பரம்பரையாக பனை ஏறும் தொழில் செய்து வந்தவர்கள் கூட, தங்கள் வாரிசுகள் அந்த தொழிலில் ஈடுபடுவதை விரும்புவதில்லை. உயிருக்கு உத்தரவாதம் இல்லாத இந்த தொழிலை இளைய சமுதாயத்தினரும் விரும்புவதில்லை. இதன் காரணமாக அவர்கள் வேறு தொழில்களுக்கு சென்று விட்டதால், பனை ஏறும் தொழில் கிட்டத்தட்ட அழிவுப்பாதையின் விளிம்பில் நின்று கொண்டு இருக்கிறது.

தொழில் செய்வோர் குறைந்து விட்டதால், பனை மரங்களும் பயன்பாடு இன்றி செங்கல் சூளைகளுக்கு விறகாக சென்று கொண்டிருக்கின்றன.

கரும்பில் இருந்து கிடைக்கும் சர்க்கரையை விட பனைவெல்லம் மிகுந்த சத்தும், மருத்துவ குணமும் நிறைந்தது. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. நீரிழிவு நோயாளிகள் கூட சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தலாம். பனை ஏறும் தொழில் நசிந்து விட்டதால், கருப்பட்டி கிட்டத்தட்ட காட்சிப் பொருளாகி விட்டது.

கரும்பு பயிருக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் பனைமரம் தண்ணீர் பயன்பாடு இல்லாமல் வளரக் கூடியது. வறட்சி இல்லாமல் இருந்தாலே போதும் தாக்குப்பிடித்துவிடும். ஆண்டுக்கு ஆண்டு மழை வளம் குறைந்து வருவதால், அரசு பனைமரம் வளர்ப்புக்கும், பனை ஏறும் தொழிலுக்கும் ஊக்கம் அளிக்கவேண்டும்.

அரசாங்கம் நினைத்தால் இந்த தொழிலை காப்பாற்றுவதோடு, தமிழகத்தின் தேசிய மரமான பனை மரங்களையும் அழிவில் இருந்து பாதுகாக்க முடியும்.

ஓலைச்சுவடிகள்

பனை மரங்கள் 100 ஆண்டுகளுக்கும் மேல் வளரக் கூடியவை. இது மெதுவாக வளரும் தாவரம்.

காகிதம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் குறிப்புகளும், தகவல்களும் பாறைகள், கற்களில் எழுதி வைக்கப்பட்டன. இதைத்தான் கல்வெட்டு என்கிறோம். இதுதவிர களிமண் பலகைகளிலும் எழுதி வைத்தார்கள்.

இதன் அடுத்த கட்டமாக ஓலைச்சுவடிகள் வந்தன. காகிதமும், பேனாவும் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் நம் முன்னோர்கள் ஓலைச்சுவடிகளில்தான் எழுதினார்கள். அதாவது பனை ஓலைகளை சீரான அளவில் நறுக்கி, அதில் எழுத்தாணி மூலம் எழுதினார்கள். இப்படி எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளை அடுக்கடுக்காக வைத்து, ஓரத்தில் போடப்பட்ட துளைகளின் மூலம் நூலை செலுத்தி ஒன்றாக கட்டி வைப்பார்கள்.

ஓலையில் எழுதப்பட்ட எழுத்து வாசிப்பதற்கு தெரிய வேண்டும் என்பதற்காக அதன் மீது மஞ்சள் அல்லது கருப்பு நிற மையை தேய்ப்பார்கள். அந்த வகையில் பனை ஓலை முக்கிய எழுது பொருளாக பயன்பட்டது.

அந்த காலத்தில் கிராமப்புறங்களில் பெரும்பாலும் ஜாதகம் ஓலைச்சுவடியில்தான் எழுதப்படும். சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை இந்த வழக்கம் இருந்தது. அதன்பிறகு நோட்டு புத்தகத்தில் எழுதும் பழக்கத்துக்கு மாறிவிட்டார்கள்.

கரையான், ஓலைச்சுவடிகளின் முதல் எதிரி. கரையான் அரிப்பு, தண்ணீர் போன்றவற்றில் இருந்து பாதுகாத்தால் ஓலைச்சுவடிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு கூட அழியாமல் பத்திரமாக இருக்கும்.

ஓலைச்சுவடிகள் தமிழர்களின் கலாசாரம், பண்பாடு, பழக்க வழக்கங்களின் பொக்கிஷம் என்பதால் அவற்றை பாதுகாக்க வேண்டியது அவசியம் ஆகும்.

About editor 3123 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply