கொழுந்து விடும் சமஷ்டி அரசியல்
என்.கண்ணன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் பகிரங்க அரசியல் மோதலில் ஈடுபடும் துணிச்சல் கொண்டவராக சுமந்திரன் தான் இருக்கிறார். எனவே அவரை வறுத்தெடுக்க கிடைத்திருக்கின்ற வாய்ப்பை முதலமைச்சரின் தரப்பிலுள்ளவர்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்
காலியில் நடந்த, புதிய அரசியலமைப்பு யோசனை குறித்து விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்றில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்து பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது.
தமிழ் மக்களுக்கு சமஷ்டி தேவையில்லை என்றும், 13 ஆவது திருத்தச்சட்டத்தை விட சற்று கூடுதலான அதிகாரங்களையே அவர்கள் கோருவதாகவும் சுமந்திரன் அந்தக் கூட்டத்தில் கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், அவர் யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், தாம், தமிழ் மக்களுக்கு சமஷ்டி தேவையில்லை என்று கூறவில்லை என்றும், சமஷ்டி என்ற பெயர் பலகையில் தொங்கிக் கொண்டிருக்க தேவையில்லை என்றே குறிப்பிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
தாம் சார்ந்த தமிழரசுக் கட்சியினது கொள்கை சமஷ்டியை அடிப்படையாகக் கொண்டது என்றும் அதிலிருந்து விலக முடியாது என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான விரிசல், உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் சூழலில், விக்னேஸ்வரனின் முன்னாள் மாணவனாகவும், தற்போதைய பிரதான அரசியல் எதிரியாகவும் இருக்கும் சுமந்திரன், சமஷ்டி பற்றிக் கூறிய கருத்து இன்னும் எரியும் நெருப்பில் எண்ணெயை வார்த்திருக்கிறது.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் அவரது பக்கத்தில் இருக்கின்ற சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள், சுமந்திரனின் கருத்தை வலுவாகக் கண்டித்தும், கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றி விட்டது, துரோகம் செய்து விட்டது என்றும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் பகிரங்க அரசியல் மோதலில் ஈடுபடும் துணிச்சல் கொண்டவராக சுமந்திரன் தான் இருக்கிறார்.
எனவே அவரை வறுத்தெடுக்க கிடைத்திருக்கின்ற வாய்ப்பை முதலமைச்சரின் தரப்பிலுள்ளவர்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்து நடக்கப்போகும் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும், சுமந்திரனுக்கு எதிராகவும், முதலமைச்சரின் தரப்பிலுள்ளவர்கள் இந்த துருப்புச்சீட்டை வைத்து, நன்றாகவே பிரசாரம் செய்வார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.
சமஷ்டி தேவையில்லை என்று கூறவில்லை என சுமந்திரன் மறுத்திருந்தாலும், சமஷ்டி என்ற விடயத்தில், அவர் வெளிப்படுத்திய விடயங்கள், அவருக்கு எதிரான அரசியல்வாதிகளுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் இருந்தே, சமஷ்டி விடயத்தில் சுமந்திரன் பல்வேறு சந்தர்ப்பங்களில் விமர்சனங்களுக்கு முகம் கொடுத்து வந்திருக்கிறார்.
ஒற்றையாட்சி, சமஷ்டி போன்ற சொற்களுக்கு அவர் அளிக்க முயன்ற விளக்கங்களும், அதற்குக் காரணம்.
எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டிருந்த சமஷ்டியை விட்டு விலகி, ஒரு அரசியலமைப்பை உருவாக்குவதில் சுமந்திரன் கணிசமாகவே பங்களித்திருக்கிறார்.
அத்தகைய குற்றச்சாட்டு வரும்போதெல்லாம் அவர், தன்னைக் காத்துக் கொள்வதற்கு, சமஷ்டி என்ற பெயர்ப் பலகை முக்கியமல்ல, அதன் உள்ளடக்கம் தான் முக்கியம் என்ற கவசத்தைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்.
அதாவது சமஷ்டி முறையில் உள்ளது போன்ற அதிகாரப்பகிர்வு தான் முக்கியமே தவிர, சமஷ்டி என்ற அடையாளம் தேவையில்லை என்று அவர் நியாயப்படுத்தி வந்திருக்கிறார்.
புதிய அரசியலமைப்பு வரைவில் ஆட்சி முறை பற்றிய பதங்கள் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. அந்த விடயத்தில் சுமந்திரனின் பங்களிப்பு முக்கியமானது.
ஆனால், அவ்வாறு பெயர்ப்பலகை இல்லாத அதிகாரப்பகிர்வு சமஷ்டிக்கு இணையானதாக இருக்குமா என்றால், அதுவுமில்லை.
சமஷ்டி என்ற பெயர்ப் பலகையில் தொங்கிக் கொண்டிருக்க வேண்டியதில்ல ை என்று, சுமந்திரன் கூறினாலும், அத்தகைய ஒரு தீர்வை ஏற்க சிங்களத் தலைமைகள் தயாராக இல்லை என்பதே உண்மை.
அதேவேளை, புதிய அரசியலமைப்பு 13 ஆவது திருத்தச்சட்டத்திலும் சற்று அதிகமான அதிகாரப் பகிர்வை உள்ளடக்கியதாக இருந்தால் போதும் என்ற வகையில் சுமந்திரன் கருத்து வெளியிட்டது உண்மையானால், நிச்சயமாக அவரது கட்சியின் சமஷ்டி பற்றிய கொள்கை கேள்விக்குரியதே.
சமஷ்டி என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்துவதில்லை என்று சுமந்திரன் ஏற்கனவே கூறி விட்டார். ஆனால் அதில் உள்ள அடிப்படை அம்சங்களை விட்டுக்கொடுக்க முடியாது என்றும் அவரே கூறியிருந்தார்.
அவ்வாறாயின் புதிய அரசியலமைப்புக்கான வரைவு, சமஷ்டி முறையில் உள்ள அதிகாரப் பகிர்வை ஒத்ததாகவே இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.
காலியில் நடந்த கருத்தரங்கிலும் சரி, தெற்கில் நடக்கும் கருத்தரங்குகளிலும் சரி, சுமந்திரன் மற்றொரு விடயத்தை கூறி வருகிறார். அதாவது, புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகளை முழுமையாகத் தீர்க்காது, அவர்களின் அபிலாஷைகளை முற்றிலுமாக நிறைவேற்றாது என்பதே அது.
அவ்வாறாயின், சமஷ்டியும் இல்லாத- தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் முற்றிலுமாக தீர்க்காத, அவர்களின் அபிலாஷைகளையும் நிறைவேற்றாத புதிய அரசியலமைப்பு எதற்காக என்ற நியாயமான கேள்வி இருக்கிறது.
இப்போது, உள்ளதை விட முன்னேற்றகரமான ஒரு அரசியலமைப்பு என்ற வாதம் முன்வைக்கப்பட்டாலும், அது தமிழ் மக்கள் தமது அபிலாஷைகளைக் கைவிட்டு விட்டார்கள் என்ற வாதத்துக்குத் துணை போகுமானால் பேராபத்தாக அமையும்.
அதாவது, சமஷ்டி என்ற பெயர்ப்பலகையும் இல்லாத- சமஷ்டியின் பண்புகளை ஒத்த அதிகாரங்களும் இல்லாத ஒரு வெற்றுக் கூட்டுக்கு தமிழ் மக்கள் இணங்கி விட்டார்கள், அதனை ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்ற கற்பிதத்துக்கு காரணமாகி விடும்.
சுமந்திரனைப் பொறுத்தவரையில், யதார்த்த அரசியலை அதிகம் பேசுகிறார் என்பதில் சந்தேகமில்லை. தற்போதுள்ள சூழலில் சமஷ்டி அரசியல் யாப்பை உருவாக்க முடியாது. அதேவேளை, சமஷ்டித் தீர்வு இல்லாமல் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தவும் முடியாது.
எனவே இந்த இரண்டுக்கும் நடுவே, அங்குமிங்கும் நெகிழ்ந்து ஒரு அரசியல் யாப்பை உருவாக்குவதே சாலப்பொருத்தம் என்று அவர் நினைக்கிறார்.
இத்தகைய ஒரு நழுவலான நிலையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா- அதனை அங்கீகரிப்பார்களா? இதனை எந்த அரசியல்வாதியும் முடிவு செய்ய முடியாது. மக்களே தீர்மானிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
எது எவ்வாறாயினும், ஒரு காலத்தில் தனிநாடு கோரிய தமிழ் மக்கள், தமது பிரச்சினைகளுக்கு சமஷ்டி மூலமே தீர்வு காண முடியும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள்.
காலியில் போய் சுமந்திரன், சமஷ்டி வேண்டாம் என்று கூறியிருந்தாலும், கூறியிருக்கா விட்டாலும், சமஷ்டி வேண்டாம் என்று முடிவு செய்யும் அதிகாரத்தை தமிழ் மக்கள் அவருக்கு அளித்திருக்கவில்லை.
அதேவேளை, சமஷ்டி தான் தீர்வு, அதற்கு இம்மியளவும் விட்டுக் கொடுக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் தரப்புகள் ஒன்றும், யோக்கியமானவை என்றும் எடுத்துக் கொள்ளமுடியாது.
விடுதலைப் புலிகள் தனிநாட்டை உருவாக்குவதற்கான ஆயுதப் போராட்டத்தை நடத்தினார்கள். அவர்களைப் போலவே மேலும் பல தமிழ் இயக்கங்கள் ஆயுதங்களை ஏந்தின. ஆனால், புலிகளால் மட்டும் தான் அதனை தொடர்ந்து நடத்த முடிந்தது.
தனிநாட்டுக்கான கட்டுமானங்களை உருவாக்கி, நடைமுறை அரசு ஒன்றைக் கொண்டு நடத்தவும் முடிந்தது.
அதாவது தனிநாடு தான் தீர்வு என்பதை செயலிலும் காட்டுவதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.
ஆனால், சமஷ்டி தான் தீர்வு என்று ஒற்றைக் காலில் நிற்கின்ற தமிழ் தரப்புகள் எவற்றிடமுமே, அதனை அடைவதற்கான மூலோபாயமோ, செயற்திட்டங்களோ கிடையாது.
தேர்தல் மேடைகளிலும், ஊடக மாநாடுகளிலும், அறிக்கைகளிலும் மட்டும் தான், சமஷ்டியில் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்களே தவிர, சமஷ்டி தீர்வு ஒன்றை எட்டுவதற்கான சாத்தியமான வழிமுறையை கண்டறியவும் அவர்கள் தயாராக இல்லை.
தமிழ் மக்கள் சமஷ்டித் தீர்வைத் தான் வலியுறுத்துகிறார்கள். அதனையே விரும்புகிறார்கள் என்பதில் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. ஆனாலும், அதனையே அரசியல் வியாபாரமாக மாற்றுவதில் தான் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரி, ஏனைய தரப்புகளும் சரி இந்த விடயத்தில், பெரிதாக வேறுபட்டிருக்கவில்லை.
சமஷ்டி என்ற கோஷத்தை வைத்து தமிழ் மக்களின் உணர்வுகளோடு விளையாடும் அரசியல் தான் முன்னெடுக்கப்படுகிறது.
இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான் இந்த நிலை தொடரப் போகிறது என்று தெரியவில்லை.
ஆனால், வரும் காலத்தில் அடுத்தடுத்து தேர்தல்கள் நடக்கும் என்பதால், சமஷ்டி அரசியல், உணர்ச்சி அரசியல் எல்லாமே கொளுந்து விட்டு எரியப் போகின்றன.
எரியும் நெருப்பில் எண்ணெயை வார்ப்பதற்கு அரசியல்வாதிகள் தயாராக இருப்பார்கள். ஏனென்றால், அந்த நெருப்பில் தான் அவர்கள் எப்போதும் குளிர்காய்ந்து வருகிறார்கள்.
http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-09#page-1
மகிந்த இப்பொழுதும் பலமாக இருக்கிறாரா? நிலாந்தன்…
கடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மகிந்த மீண்டும் தனது பலத்தைக் காட்ட முயன்றிருக்கிறார். இவ்வாண்டு அவர் இவ்வாறு தன் பலத்தைக்காட்டுவது இது மூன்றாவது தடவை. கடந்த மே தினத்தன்று காலிமுகத்திடலை அவர் தனது ஆதரவாளர்களால் நிறைத்தார். அது ஒரு பிரமாண்டமான சனத்திரள். அதன்பின் கடந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் அவர் தன் பலத்தைக்காட்டியிருந்தார். இந்த வரிசையில் பார்த்தால் கடந்த புதன்கிழமை அவர் ஒழுங்குபடுத்திய ஆர்ப்பாட்டம் ஏறுமுகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது அப்படி அமையவில்லை.
கொழும்பிற்கு வெளியிலிருந்து ஆயிரக் கணக்கானவர்களை அவர்களால் திரட்ட முடிந்தது. அத்தொகை கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் வரை வரலாம் என்று கணிக்கப்படுகிறது. ஆனால் இரவானதும் அதில் பலர் ஊருக்குத் திரும்பி விட்டார்கள். இரவுப் போராட்டத்தில் கிட்டத்தட்ட இருபதினாயிரத்திற்கும் குறையாத தொகையினரே பங்குபற்றியதாகக் கணக்கிடப்படுகிறது. நிதிக்குற்ற விசாரணைப்பிரிவு, விசேட உச்சநீதிமன்றம் போன்றவற்றை அவர்கள் முற்றுகையிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியெதுவும் நடக்கவில்லை. அன்றைய இரவை உறங்கா இரவாக மாற்றப்போவதாக மகிந்த அணி அறிவித்திருந்தது. ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் போதையில் தடுமாறும் காட்சிகளும், வீதிகளில் வீழ்ந்து கிடக்கும் காட்சிகளும் ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டன.
இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. இலங்கைத்தீவில் மட்டுமல்ல இந்தியாவிலும் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் தன்னியல்பாக நடப்பது குறைவு. மனோகணேசன் கூறுவது போல இது ‘அரப் ஸ்பிரிங்’ அல்ல. அரப் ஸ்பிரிங்கில் கூட மேற்கத்தைய முகவர்கள் பின்னணியில் இருந்தார்கள். எனவே செல்பி யுகத்தில் தன்னியல்பான எழுச்சிகள் என்று கூறப்படும் பல ஆர்ப்பாட்டங்கள் தன்னியல்பானவையல்ல. இவற்றில் பெரும்பாலானவை ஏற்கெனவே கிராம மட்டத்திற் காணப்படும் கட்சி வலைக்கட்டமைப்புக்களின் ஊடாக நன்கு திட்டமிட்டு ஒழுங்குபடுத்தப்பட்டவைதான். எத்தனை பேரைத் திரட்டுவது? எப்படித் திரட்டுவது? யார் திரட்டுவது? எப்படி ஒரு மையமான இடத்திற்கு கொண்டு வருவது? வாகன ஒழுங்குகளை யார் செய்வது? சாப்பாட்டை, சிற்றுண்டியை யார் ஒழுங்குபடுத்துவது? போன்ற யாவும் முன்கூட்டியே மேலிருந்து கீழ்நோக்கி செம்மையாகத் திட்டமிடப்படும். பங்குபற்றும் சாதாரண சனங்களை கவர்வதற்கு காசைக் கொடுப்பதா? மதுவைக் கொடுப்பதா? அல்லது வேறெதைக் கொடுப்பதா? போன்றவையும் நன்கு திட்டமிடப்படுகிறது. இது போன்ற ஆர்ப்பாட்டங்களுக்கு ஒரு பட்ஜட் இருக்கும். எவ்வளவு பேரைத்திரட்டுவது என்பதையும் பட்ஜட்டே தீர்மானிக்கின்றது.
மகிந்தவுக்கு ஆதரமான மக்கள் திரள் எனப்படுவது அதன் முதலாவது பொருளில் யுத்த வெற்றிவாதத்திற்கு ஆதரவானதுதான். யுத்தவெற்றிவாதம் எனப்படுவது இனவாதத்தின் 2009ற்குப் பிந்திய வடிவம்தான். எனவே மகிந்தவிற்காகச் சேரும் கூட்டமென்பது அதிகபட்சம் இனவாதத்திற்காகச் சேரும் கூட்டம்தான். அதை மகிந்ததான் திரட்ட வேண்டும் என்றில்லை. அது ஏற்கெனவே நன்கு நிறுவனமயப்பட்ட ஒன்றுதான். இலங்கைத்தீவின் இனவாதமென்பது கடந்த பல நூற்றாண்டுகளாக நன்கு நிறுவனமயப்பட்டிருக்கும் ஒரு கூட்டு உளவியலாகும். மகாசங்கம், யாப்பு, நாடாளுமன்றம், கட்சிகள், நீதிபரிபாலனக் கட்டமைப்பு, படைக்கட்டமைப்பு, அதிகாரப்படிநிலைக் கட்டமைப்பு, நிர்வாகக்கட்டமைப்பு, ஊடகக்கட்டமைப்பு என்று பல்வேறு கட்டமைப்புக்களிற்கூடாகவும் பேணிப் பாதுகாக்கப்படும் ஒரு கூட்டு உளவியல் அது. மகிந்த அதற்குத் தலைமை தாங்குகிறார். எனினும் கடந்த புதன்கிழமை அது எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஏனெனில் ராஜபக்ஷக்களுக்கிடையே நிலவும் வாரிசுப் போட்டியே காரணமென்று கருதப்படுகிறது.
புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தியது நாமல் ராஜபக்ஷ. அவரை எதிர்காலத்தில் தலைவராக ஸ்தாபிப்பதற்கு உரிய அடித்தளத்தை உருவாக்குவதும் இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு நோக்கம்தான். ராஜபக்ஷ குடும்பத்தில் யுத்தக் குற்றச்சாட்டிற்கு இலக்காகமுடியாத வாரிசுகளில் ஒருவர் நாமல். மற்றவர் பசில். கடந்த மே நாள் கொண்டாட்டத்தை பசிலே ஒழுங்குபடுத்தினார். அது அவருடைய ஒழுங்குபடுத்தும் திறனுக்கு ஒரு சான்றாகக் காட்டப்பட்டது. ஆனால் கடந்த புதன்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் நாமலுக்கு பெரு வெற்றியாக அமையவில் 19ஆவது சட்டத் திருத்தத்தின் படி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு வயதெல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வயதை அடையும் வரை நாமல் போட்டியிட முடியாது. எனினும் எதிர்காலத் தலைமைத்துவத்திற்கு மகிந்த தன் வாரிசைத் தயார்ப்படுத்துகிறார்.
எதுவாயினும் மகிந்தவின் ஆர்ப்பாட்டம் அரசாங்கம் பயந்த அளவிற்கு பிரமாண்டமாகவோ அல்லது உக்கிரமாகவோ அமையவில்லை. ஆனால் அதற்காக மகிந்த ஆதரவு அலை ஓயத் தொடங்கிவிட்டது என்று கருத முடியாது. ஆர்ப்பாட்டத்திற் கலந்து கொள்ளாதவர்கள் தேர்தலில் அவருக்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடும். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வராதவர்கள் வாக்களிப்பதைப் போல. இவ்வாறு மகிந்த ஓர் ஆண்டுக்குள்ளேயே மூன்று தடவை தன் பலத்தைக் காட்ட வேண்டிய தேவை என்ன?
வருமாண்டு மாகாண சபைகளுக்கான தேர்தலும் ஆண்டின் இறுதியில் அரசுத்தலைவருக்கான தேர்தலும் நடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தரும், சுமந்திரனும் நம்புவது போல ஒரு புதிய யாப்பு உருவாக்கப்பட்டால் வருமாண்டில் அரசுத்தலைவருக்கான தேர்தலைப்பற்றி அஞ்சத்தேவையில்லை. ஆனால் மனோகணேசன் கூறுவது போல யாப்பு மாற்றப்படவில்லையென்றால் மகிந்;த அணி அத்தேர்தலின் மூலம் தலைகீழ் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடும். அது இச்சிறிய தீவில் இப்போதுள்ள வலுச்சமநிலையை மட்டுமல்ல இப்பிராந்தியத்தின் இப்போதுள்ள வலுச்சமநிலையையும் மாற்றிவிடக்கூடும். அது உலகப்பரப்பிலும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
எனவே வருமாண்டு ஒரு தேர்தலாண்டாக இருக்கலாம் என்ற ஓர் எதிர்ப்பார்ப்பின் பின்னணியில் மகிந்த இந்த ஆண்டு மூன்றாவது தடவையாக தனது பராக்கிரமத்தைக் காட்ட முற்பட்டார். அதுமட்டுமல்ல வாற கிழமை புதுடில்லியில்; மகிந்தவும் உட்பட ஏனைய எல்லாக்கட்சித் தலைவர்களும் வௌ;வேறு நிகழ்வுகளில் பங்குபற்றவிருக்கிறார்கள். மகிந்த சுப்பிரமணிய சுவாமியின் அழைப்பின் பேரில் போகிறார். ஏனைய கட்சித் தலைவர்கள் இந்திய நாடாளுமன்றத்தின் அழைப்பின் பேரில் போகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே காலப்பகுதியில் புதுடில்லியில் தங்கியிருப்பார்கள். இவர்களை இந்திய அரசின் பிரதானிகளும் அதிகாரிகளும் சந்திக்கவிருக்கிறார்கள். இப்படியொரு பின்னணிக்குள்ளும் மகிந்த தனது பலத்தைக் காட்ட முற்பட்டிருக்கிறார்.
அரசியலில் ஒரு தரப்பு தனது பலத்தை எதிரிக்கு எப்பொழுது காட்டலாம்? எப்பொழுது காட்டக்கூடாது? இக்கேள்விக்குப் பதில் காண்பதென்றால் மகிந்த யார் யாருக்குத் தனது பலத்தைக் காட்ட முற்படுகிறார் என்று பார்க்க வேண்டும். முதலாவதாக ரணில் – மைத்திரி அரசாங்கத்திற்கு இரண்டாவதாக இந்தக் கூட்டரசாங்கத்தைப் பின்னிருந்து ஆதரிக்கும் மேற்கு நாடுகளுக்கு. மூன்றாவதாக இந்தியாவிற்கு.
இவ்வாறு தனது பலத்தைக் காட்டுவதன் மூலம் இப்பிராந்தியத்தில் தான் ஓர் இன்றியமையாத தலைவர் என்ற செய்தியை மேற்படி தரப்புக்களுக்கு மகிந்த உணர்த்த முற்படுகிறார். யாப்பை மாற்றுவதும் மாற்றாமல் விடுவதும் கூட தனது கையில்தான் இருக்கிறது என்பதை அவர் காட்ட முற்படுகிறார். யாப்பை மாற்றாவிட்டால் அடுத்த அரசுத்தலைவருக்கான தேர்தலில் தனது அணி வெற்றி பெறுவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்பதையும் மேற்படி தரப்புக்களுக்கு உணர்த்த முற்படுகிறார். இது எவ்வாறான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்?
மகிந்த தொடர்ந்தும் பலமாக இருந்தால் அது சீனாவுக்கு உற்சாகமூட்டும் ஆனால் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் அது அச்சத்தையும், எரிச்சலையும் கொடுக்கும். கோத்தபாய அடுத்த அரசுத்தலைவராக வருவதை அமெரிக்கா விரும்பவில்லை என்பதை இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத்தூதுவர் மறைமுகமாக உணர்த்தியிருந்தார். இந்நிலையில் மகிந்த அணி மேலும் மேலும் தனது பலத்தைக் காட்ட முற்படுவதை அமெரிக்கா, எப்படிப் பார்க்கும்? இந்தியா எப்படிப் பார்க்கும்? நிச்சயமாக அவர்கள் மகிந்தவின் மீள் வருகையைத் தடுக்கவே முயற்சிப்பார்கள். அதற்கு எல்லாவிதமான வழிவகைகளையும் அவர்கள் பயன்படுத்துவார்கள். 2015ல் மகிந்தவைக் கவிழ்க்க அவர்கள் எப்படியெல்லாம் காய்களை நகர்த்தினார்களோ அப்படியே இப்பொழுதும் யோசிப்பார்கள். தமக்கு விசுவாசமான ரணில் – மைத்திரி அரசாங்கத்தை எப்படியாவது பாதுகாக்க முயற்சிப்பார்கள்.
இது மகிந்தவுக்கும் தெரியும். முப்பெரும் வல்லரசுகள் மோதும் ஒரு ஆடுகளத்தில் தானும் ஒரு துருப்புச்சீட்டு என்பது அவருக்கு நன்கு தெரியும். அவருடைய இந்திய விஜயத்தி;ன்போது இது அவருக்கு உணர்த்தப்படும். எனினும் அவர் ஏன் திரும்பத் திரும்ப தனது பலத்தைக் காட்டப்பார்க்கிறார்? தனக்கு எதிராக உள்நாட்டிலும், பிராந்திய அளவிலும் உலக அளவிலும் காய்கள் நகர்த்தப்படும் என்று நன்கு தெரிந்திருந்தும் அவர் ஏனிப்படிச் செய்கிறார்?
மக்கள்சக்தி எனப்படுவது அரசியலில் ஒரு கவர்ச்சியான தோற்றப்பாடுதான். ஜனநாயக அரசியலில் அது தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் ஒரு பிரதான தோற்றப்பாடாகும். ஆனால் சிறியநாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடும் பெரிய நாடுகள் மக்கள் சக்தியைப் பொருட்படுத்தாது முடிவெடுத்த பல சந்தர்ப்பங்கள் உண்டு. மக்கள் ஆணையைப் பெற்ற ஜனவசியம் மிக்க, பல தலைவர்கள் அவர்களைத் தெரிந்தெடுத்த மக்களின் பெருவிருப்பங்களுக்கு மாறாக கவிழ்க்கப்பட்டிருக்கிறார்கள். சூதான சதிகள் மூலம் அரங்கிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார்கள். பேரரசுகள் தமது பிராந்திய மற்றும் உலகளாவிய வியூகத் தேவைகளுக்காக சிறிய பலங்குன்றிய நாடுகளின் தலைவர்களைக் கவிழ்த்த பல முன்னுதாரணங்கள் உண்டு. குறிப்பாக பேரரசுகளின் இழுவிசைக்களத்தில் அமைந்திருக்கும் இலங்கைத்தீவு போன்ற நாடுகளின் தலைவர்கள் யார் என்பதைப் பேரரசுகளே பெரிதும் தீர்மானிக்கின்றன. அப்படித்தான் மகிந்தவும் கவிழ்க்கப்பட்டார். ரணில் – மைத்திரி ஆட்சி உருவாக்கப்பட்டது. அண்மையில் பாகிஸ்தானிலும் இதுதான் நடந்தது. இம்ரான் கானைத்தான் மக்கள் தெரிந்தெடுக்க வேண்டும் என்பதை படைத்தரப்பே தீர்மானித்தது. படைத்தரப்பு என்ன முடிவெடுக்க வேண்டும் என்பதை வெளித்தரப்புக்கள் தீர்மானித்தன.
எனவே மகிந்த நம்புவது போல அவருக்குப் பின்னாலுள்ள மக்கள் பலத்தைக் கண்டு பேரரசுகள் பயப்படும் என்பதற்கும் அப்பால், அவை அவருடைய மீள்வருகையைத் தடுக்கும் விதத்தில் தற்காப்பு மற்றும் முற்தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கக் கூடுமென்பதே இப்போதுள்ள இலங்கைத் தீவின் கள யதார்த்தமாகும். இவ்வாறு மேற்படி நாடுகள் முற்தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தால் மகிந்த நம்வுவது போல நிலமைகள் தொடர்ந்தும் இப்படியே இருக்கும் என்பதல்ல. அரசாங்கம் சிலவேளை தேர்தல்களை ஒத்தி வைக்கலாம். அல்லது புதிதாகச் சட்டங்களை இயற்றி மகிந்த அணியை தொடர்ந்து முன்னேற விடாமல் தடுக்கலாம்.
உதாரணமாக இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடுவதென்றால் அப்பிரஜாவுரிமையை போட்டியிடுவதற்கு ஓராண்டுக்கு முன்னரே துறக்க வேண்டும் என்ற ஒரு சட்டத்தை உருவாக்குவது பற்றி அரசாங்கம் சிந்திக்கின்றது. இது கோத்தபாய, பசில் போன்றவர்களை முடக்கும் ஒரு நடவடிக்கை. அரசாங்கம் மட்டுமல்ல மேற்கு நாடுகளும் இந்தியாவும் கூட முற்தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்தும். மகிந்த எவ்வளவிற்கு எவ்வளவு பலத்தைக் காட்டுகிறாரோ அவ்வளவிற்கு அவ்வளவு முற்தடுப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்படும். ஆயின் தனது பலத்தைத் திரும்பத் திரும்பக் காட்டுவதன் மூலம் மகிந்த தன்னை விரும்பாத தரப்புக்களை உசாரடைய வைக்கிறாரா? இது அவருக்கு விளங்காதா?
விளங்கும். ஆனால் அவருக்கு வேறு வழியில்லை. அவரது அணியைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் சட்ட நடவடிக்கைகளை எதிர் கொள்ளவும் வரவிருக்கும் தேர்தல்களை எதிர் கொள்ளவும் அவருக்குள்ள ஒரே வழி இதுதான். அவருடைய ஆட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகளால் அவருடைய அணியின் வெளிவட்டம், உள்வெளிவட்டம் என்று கருதப்படும் பலர் விசாரிக்கப்பட்டு விட்டார்கள். அவருடைய சகோதரர்களும், பிள்ளைகளும் கூட விசாரணைகளை எதிர்நோக்குகிறார்கள். இதை இப்படியே விட்டால் அது தனது குடும்பத்தைச் சுற்றிவளைத்துவிடும் என்பது மகிந்தவிற்குத் தெரிகிறது. உள்நாட்டில் சட்டநடவடிக்கை என்ற கூரான வாள் அவருடைய குடும்பத்தின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து விடுபட அவருக்குள்ள ஒரே வழி தனக்குள்ள மக்கள் பலத்தைக் காட்டி அரசாங்கத்தை மிரட்டுவதுதான். அதைத்தான் அவர் இப்பொழுது செய்கிறார்;. ஆனால் அரசாங்கத்தை தற்காப்பு நிலைக்குத் தள்ளுவதற்காக அவர் கடந்த புதன்கிழமை திறந்த ஓர் புதிய போர்அரங்கு அவரையே அதிகரித்த அளவு தற்காப்பு நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறதா?
http://globaltamilnews.net/2018/94813/
மறுக்கப்படும் உரிமைகள்…!
பி.மாணிக்கவாசகம்
மொழியுரிமையும், காணி உரிமையும் மறுக்கப்படுவது, இனப்பிரச்சினையின் அடிநாதமாகத் திகழ்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு, அவர்கள் ஆளும் தரப்பினரால் அடக்கி ஒடுக்கப்பட்டதன் விளைவாகவே இனப்பிரச்சினை உருவாகியது. உரிமைகள் மறுக்கப்படுவதைத் தட்டிக்கேட்டும் பலன் கிடைக்காத காரணத்தினாலேயே போராட்டங்கள் தலையெடுத்தன.
உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்கள் பல்வேறு வழிகளில் திசைதிருப்பப்பட்டு, அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டன. அதிகார வலுவுடன் கூடிய சட்ட ரீதியான அடக்குமுறைகள் ஒருபக்கமாகவும், குழுக்களின் ஊடாக வன்முறைகளைப் பயன்படுத்தி மறைமுகமான அச்சுறுத்தல்களுடன் கூடிய அடக்குமுறைகள் மற்றுமொரு பக்கமாகவும் காலம் காலமாக தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகள் கடந்த காலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன.
சிங்களம் மட்டும் என்று குறிப்பிடப்படுகின்ற சிங்களத்தை அரசகரும மொழியாகப் பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து மொழியை அடிப்படையாகக் கொண்டு வன்முறைகள் வெடித்திருந்தன. இந்த அடாவடித்தனம்,1956ஆம் ஆண்டு எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா சிங்களம் மட்டும் என்று குறிப்பிட்டு சிங்களத்தை தனித்துவமான அரச கரும மொழியாகப் பிரகடனம் செய்ததைத் தொடர்ந்து, தலைவிரித்தாடியது.
வாகனங்களின் இலக்கத்தகடுகளில் ‘ஸ்ரீ’ என்ற சிங்கள எழுத்தை அன்றைய அரசாங்கம் வலிந்து திணித்து, தமிழ் மக்களுக்கு எதிராக மொழி ரீதியான வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டிருந்தது. சிங்களப் பகுதிகளில் வர்த்தக நிலையங்களைக் கொண்டிருந்த தமிழ் மக்களுடைய நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளிலிருந்த தமிழ் எழுத்துக்கள் தார் பூசி அழிக்கப்பட்டன.
சிங்களம் மட்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டதன் மூலம் தமிழ் மக்களுடைய மொழியுரிமை மறுக்கப்பட்டு, அவர்களுடைய சுயகௌரவத்திற்குப் பாதகம் ஏற்படுத்தும் வகையிலான சம்பவங்கள் நடந்தேறின. இந்தச் சட்டமூலத்திற்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குதித்த தமிழ் அரசியல் தலைவர்கள் மீது காடைத்தனம் பிரயோகிக்கப்பட்டது. பொலிஸார் அவர்களைத் தாக்கி இழுத்தெறிந்து அராஜகம் புரிந்தார்கள்.
கல்லோயா பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த சிங்களக் குடியேற்றப் பகுதிகளைச் சேர்ந்த கும்பல்கள் அங்கு பண்ணைகளில் பணியாற்றிய தமிழ்த் தொழிலாளர்களைத் தாக்கியதில் 150 பேர் வரையில் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் கல்லோயா படுகொலை என வரலாற்றில் பதிவாகியிருக்கின்றது. இதனையடுத்து, நாடெங்கிலும் தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள், வீடெரிப்புக்கள், கொள்ளைகள், ஆட்கொலைகள் என்பன இடம்பெற்றன. இந்த வன்முறைகளில் 300 தொடக்கம் 1500 பேர்வரையில் பலியாகியிருக்கலாம் என மதிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ் மக்களின் மொழி உரிமையை அரசியல் ரீதியாக இல்லாமற்செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட சிங்ளம் மட்டும் என்ற மொழிச்சட்டம் பல்வேறு அனர்த்தங்களை ஏற்படுத்தியதுடன், ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர் முதற் தடவையாக தமிழ் மக்களுக்கு எதிராக இன ரீதியான வன்முறையை நாடெங்கிலும் வெடிக்கச் செய்திருந்தது.
மொழியுரிமை மறுக்கப்பட்டதன் விளைவாகப் பாரிய உயிரிழப்புக்களும், உடமை இழப்புக்களும் ஏற்பட்டிருந்தன. இழப்புக்கள் மாத்திரமல்ல, இன ரீதியான வெறுப்புணர்வு தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் எழுந்தது. ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதற்கு இந்த வெறுப்புணர்வு தூண்டுதலாக அமைந்திருந்தது.
அதன் பின்னர் தமிழுக்கும் அரச கரும மொழி அந்தஸ்து வழங்கப்பட்டு, சிறுபான்மை இனத்தவராகிய தமிழ் மக்களுக்கு மொழி உரிமை வழங்கப்பட்டதாக வெளி உலகுக்குக் காட்டப்பட்டது. ஆனால் உண்மையான, நடைமுறைச் சாத்தியமான மொழி உரிமை வழங்கப்படவில்லை. ஒன்றுக்கொன்று முரண்பாடான வழிகளில் அரசியலமைப்பின் சரத்துக்கள் அமைக்கப்பட்டு, தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய உரிமை நடைமுறையில் கடினமானதாக அல்லது நடைமுறைப்படுத்தப்பட முடியாத நிலைமை உருவாக்கப்பட்டிருக்கின்றது.
சிக்கல்களை உருவாக்குகின்ற சிங்களக் குடியேற்றங்கள்
மொழி உரிமைக்கு அடுத்ததாக காணி உரிமைகள் தமிழ் மக்களுக்கு அப்பட்டமாக மறுக்கப்படுவது காலம் காலமாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மொழி உரிமையை மறுப்பதற்கான சிங்களம் மட்டும் என்ற சிங்கள மொழிச்சட்டம் கொண்டு வரப்பட்ட 50களிலேயே தமிழர்களின் தாயகப் பிரதேசமாகக் கருதப்படுகின்ற வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பிரதேசத்தில் குறிப்பாக கிழக்கில் கல்லோயா பகுதியில் காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. அன்று தொடங்கிய தமிழர் பிரதேசங்களில் காணிகளை அபகரிக்கும் கைங்கரியம் காலத்திற்கு ஏற்ற வகையில் வெவ்வேறு வடிவங்களில் மிகவும் சாதுரியமாகவும், நுணுக்கமான முறையிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கிழக்கு மாகாணம் அம்பாறையை மையமாகக்கொண்டு சிங்களக் குடியேற்றங்கள் விரிவுபடுத்தப்பட்டன. வடக்கும், கிழக்கும் தமிழ் மக்களின் பூர்வீகத் தாயகப் பிரதேசம் என்ற தாயகக் கோட்பாட்டை உடைத்து நொறுக்குவதை நோக்கமாகக் கொண்டு சிங்கள மக்களைக் குடியேற்றுகின்ற சிங்களக் குடியேற்றங்கள் கையாளப்பட்டு வந்தன. இன்றுவரையிலும் அது தொடர்கின்றது.
சிங்களக் குடியேற்றங்களுக்கு மூலாதாரமாக மகாவலித் திட்டம் தந்திரோபாய ரீதியில் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. நாட்டின் அதி நீளமான ஆறாகிய மகாவலி கங்கையை வரண்ட பிரதேசங்களை நோக்கி திசைதிருப்பி நீர்வளத்தைப் பகிர்ந்தளிப்பதை இலக்கு வைத்து நடைமுறைப்படுத்தப்பட்டதாகக் காட்டப்பட்டது. உண்மையில் அந்தத் திட்டத்தின் நோக்கம் அதுவல்ல. தமிழர் பிரதேசங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றுவதை உள்நோக்காகக் கொண்டு அந்தத் திட்டம், நீண்டகால அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆளும் தரப்பினராகிய பேரினவாதிகளின் இந்த நோக்கம் முல்லைத்தீவில் மகாவலி திட்டத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்கள் எழுச்சியின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
இந்தப் போராட்டத்திற்கு முன்னர், மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தமிழர் பிரதேசங்கள் அடாவடித்தனமாக சிங்களக் குடியேற்றங்களின் மூலம் சூறையாடப்படுகின்றன என பொதுவான முறையிலேயே குற்றம் சாட்டப்பட்டு வந்தது. ஆனால் மகாவலி எல் வலயத்தின் கீழ் முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களின் காணிகளை அடாவடித்தனமாக சுவீகரிக்கப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதையடுத்தே, இந்தக் காணி அபகரிப்பின் விபரீதமும், ஆபத்தான நிலைமையும் வெளிச்சத்திற்கு வந்தது.
இது ஒருபக்கம் இருக்க, யுத்த மோதல்களின்போதும், அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் தமிழர்களுக்கு, காணி உரிமைச் சட்டத்தின் கீழ் உரித்துடைய காணிகளை வனபரிபாலன திணைக்களமும், தொல்லியல் திணைக்களமும், அலுங்காமல் நசுங்காமல் அபகரித்து உரிமை கோருகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
யுத்தத்தின் பின்னரான காலத்தில் பௌத்த விகாரைகளை அமைப்பதன் ஊடாகவும், மழைக்காலத்தில் காளான்கள் முளைப்பதைப் போன்று புத்தர் சிலைகளை நிறுவுவதன் ஊடாகவும் காணிகளை ஆக்கிரமிக்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலைமைகள் யுத்தத்தில் வெற்றிகொண்ட முன்னைய அரசாங்கத்தைவிட அதன் பின்னர், சிறுபான்மை இன மக்களின் பேராதரவுடன் ஆட்சிப்பீடம் ஏறிய புதிய அரசாங்க காலத்தில் தீவிரம் பெற்றிருப்பதைக் காண முடிகின்றது.
இடம்பெயர்வும் காணி அபகரிப்பும்
விடுதலைப்புலிகளுக்கும் அரச படைகளுக்குமிடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த யுத்தமோதல்களின்போது பொதுமக்கள் குறிப்பாக தமிழ்மக்களின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்காளாகியிருந்தது. உயிர் தப்புவதற்காக உடமைகளைக்கைவிட்டு, உறைவிடங்களையும் வரலாற்று ரீதியாக உரித்துடைய காணிகளைக்கைவிட்டு பாதுகாப்புத் தேடி மக்கள் அடியோடு இடம்பெயர்ந்தார்கள்.
இந்த இடம்பெயர்வை, தமக்கு சாதகமான நிலைமையாகக்கொண்டு பேரினவாதிகள் தமிழ் மக்களுடைய காணிகளையும் கிராமங்களையும் வனபரிபாலன திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்களம் என்பனவற்றின் ஊடாகக் கபளீகரம் செய்துள்ளனர். அந்தத் திணைக்களங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அடாவடித்தனமாக இந்த காரியம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மக்கள் இடம்பெயர்ந்ததன் பின்னர், தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் அரச படைகள் நிலைகொண்டிருக்க வேண்டிய அவசியத்தை முதன்மைப்படுத்தி, தமிழ் மக்களுக்குச் சட்ட ரீதியாகச் சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவைக் கொண்ட காணிகள் இராணுவத்தின் பிடிக்குள் கொண்டு வரப்பட்டன.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், ஆயுத மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களிலிருந்து படையினர் வெளியேறியிருக்க வேண்டும். ஆனால் அது இங்கு நடைபெறவில்லை. தமிழர் கிராமங்களிலும் பொதுமக்களுடைய காணிகளிலும் படையினர் நிரந்தரமான முகாம்களை அமைத்து அங்கு நிலைகொண்டிருக்கின்றார்கள். படையினர் வசமுள்ள பொதுமக்களுடைய காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள அந்த மக்களை மீள்குடியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை பாதிக்கப்பட்ட மக்களாலும், ஐ.நா. மற்றும் சர்வதேச நாடுகளினாலும் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும் அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலைமையே இன்னும் தொடர்கின்றது. புண்ணியத்திற்காகக் கிள்ளிக் கொடுப்பதைப் போன்று படைகள் வசமுள்ள காணிகள் சிறிய சிறிய அளவிலேயே கையளிக்கப்பட்டு வருகின்றன.
யுத்தம் முடிந்து 10 வருடங்கள் நிறைவடைகின்ற போதிலும், காணிகளை மீளக் கையளிக்கும் நடவடிக்கைகள் இன்னும் இழுபறி நிலையிலேயே இருக்கின்றன. காணிகளை மீட்பதற்காக மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். கண்டன ஊர்வலங்களை நடத்தினார்கள். ஆனால் பலன் கிடைக்கவில்லை. இதனையடுத்து, புதுக்குடியிருப்பு, கேப்பாப்புலவு, கிளிநொச்சி, பரவிப்பாய்ஞ்சான் உள்ளிட்ட பல இடங்களில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மண் மீட்புக்கான இந்தப் போராட்டம் கேப்பாப்புலவில் முடிவின்றி இன்னும் தொடர்கின்றது.
அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பதில் ஒரு வகையில் கண்மூடித்தனமான செயற்பாடே அரச தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தேசிய பாதுகாப்பு அரசாங்கத்தின் முன்னுரிமை பெற்ற ஒரு செயற்பாடாக இருந்தபோதிலும் இறைமையுள்ள மக்களின் குடியிருப்பு காணிகளை இராணுவத்தின் பிடியில் வைத்துக்கொண்டு அவற்றை விடுவிப்பதற்கு அரச படைகளை மேவிச் செயற்பட முடியாத ஒரு நிலையிலேயே அரசாங்கம் காணப்படுகின்றது. மேலோட்டமான பார்வையில் இது அபத்தமானது. ஆனால் அடிப்படையில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையின் உச்சக்கட்ட நடவடிக்கையாக இது அரங்கேற்றப்படுகின்றது என்பதே உண்மையான நிலைப்பாடாகும்.
பொதுமக்களுக்குச் சொந்தமான கிராமங்கள், காணிகளில் நிலைகொண்டுள்ள படையினர், அவற்றை மீளக்கையளிக்கும் போது, அங்குள்ள பொதுமக்களின் வீடுகள், பொதுக்கட்டிடங்கள் என்பனவற்றைத் தரைமட்டமாக்கி வெற்றுக்காணிகளாகவும், பெருமளவில் இடிபாடுகள் நிறைந்த காடடர்ந்த பிரதேசமாகவுமே கையளித்திருக்கின்றார்கள். யாழ். மாவட்டத்தில் கிட்டத்தட்ட 3 தசாப்தங்களாகக் கைநழுவியிருந்த வலிகாமம் வடக்குப் பிரதேச காணிகள் இந்த நிலைமையிலேயே சிறிது சிறிதாகக் கையளிக்கப்பட்டு வருகின்றன.
காஞ்சிரமோட்டையின் கதி
அதேவேளை, சட்டவிதிகளைப் பயன்படுத்தி இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களின் காணிகளை அபகரிக்கின்ற கைங்கரியத்தில் வனபரிபாலன திணைக்களம் பகிரங்கமாக இறங்கியுள்ளது. குறிப்பாக வவுனியா வடக்குப் பிரதேசமாகிய நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரமோட்டை கிராமம், இவ்வாறு வனபரிபாலன திணைக்களத்தின் ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருக்கின்றது.
யுத்தமோதல்கள் தீவிரமடைவதற்கு முன்னால், கிராமங்கள் தேடுதலுக்காகச் சுற்றிவளைக்கப்பட்ட காலப்பகுதியில் சிவிலுடையில் ஆயுதமேந்தி வந்து ஆட்களைக் கைது செய்தும், அடையாளம் தெரியாத வகையில் ஆட்களைக் கடத்திச் சென்ற சம்பவங்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் நெடுங்கேணி பிரதேசம் அச்சத்தில் உறைந்து போயிருந்தது. வெடிவைத்த கல்லு பகுதியில் 3 பேர் இவ்வாறு அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்டதையடுத்து, அந்தப் பிரதேசத்தில் மக்கள் பெரும் பீதியடைந்திருந்தார்கள். இதனால் தமது சொந்தக் கிராமங்களில் அவர்கள் குடியிருப்பதற்கு அஞ்சி பாதுகாப்புத்தேடி வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்திருந்தார்கள்.
அவ்வாறு இடம்பெயர்ந்த கிராமங்களில் காஞ்சிரமோட்டையும் ஒன்று. இங்கு வசித்த குடும்பங்களில் சில கடல் கடந்து தமிழகத்தில் சென்று தஞ்சமடைந்தன. ஏனைய குடும்பங்கள் உள்ளூரிலேயே பல இடங்களில் தஞ்சமடைந்து யுத்தம் முடிந்த பின்னர் காலம் தாழ்த்தியே மீள்குடியேறுவதற்காகத் தமது சொந்தக் காணிகளுக்குத் திரும்பியிருக்கின்றார்கள்.
இவ்வாறு திரும்பிய குடும்பங்கள் அரச அதிகாரிகளின் அனுமதியுடனும், மீள்குடியேற்ற உதவித்திட்டங்களின் அடிப்படையிலும் காடாகக் கிடந்த தமது காணிகளைத் துப்புரவு செய்து தற்காலிக வீடுகளை அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றனர். இந்த மக்கள் அந்தக் காணிகளில் நிரந்தரமாகக் குடியிருப்பதற்கான செயற்பாடுகள் எதனையும் மேற்கொள்ள முடியாது. அபிவிருத்திச்செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடாது என்று அங்கு சென்று நிலைமைகளை அவதானித்த வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள் அந்த மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கின்றார்கள்.
சொந்தக்கிராமத்திற்குத் திரும்பி வந்த போதிலும், தமக்கு சட்டரீதியாகச் சொந்தமான காணிகளில் குடியிருப்பதற்கு வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள் தடை விதித்ததையடுத்து, அவர்கள் திகைப்படைந்தார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் சிவில் நிர்வாக அதிகாரிகளிடம் முறையிட்டார்கள். அதேபோன்று இந்தக் கிராமத்தையும் உள்ளடக்கிய மருதோடை கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் இந்த நிலைமை குறித்து வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனின் கவனத்திற்குக் கொண்டுவந்து உரிய நடவடிக்கை எடுத்து இந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கு வழிசெய்யுமாறு கோரியிருந்தார்கள்.
மாகாணசபை உறுப்பினர் லிங்கநாதன் இந்த விடயத்தை ஒரு தீர்மானத்தின் ஊடான தீர்வைப் பெறுவதற்காக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் கவனத்திற்கு, அரசாங்க அதிபருக்கு எழுதிய ஒரு கடிதத்தின் ஊடாகக் கொண்டுவந்தார்.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வனபரிபாலன திணைக்கள அதிகாரிகளின் இந்தச் செயற்பாடு கடும் கண்டனத்திற்குள்ளாகியது. இதனையடுத்து, கூட்டத்திற்கு வருகை தந்திருந்த வனபரிபாலன திணைக்கள அதிகாரிகளுடன் குழுவின் இணைத்தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் வாக்குவாதப்பட்டதன் பின்னர், அந்த மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருப்பினும் மறுநாள் அந்தப் பகுதிக்குச் சென்ற வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள் அரச உயர் மட்டத்திற்கு இந்தவிடயம் கடிதம் மூலமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், அங்கிருந்து பதில் வரும் வரையில் எந்தவிதமான அபிவிருத்தி வேலைகளும் மேற்கொள்ளக்கூடாது என அந்த மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தக் கிராமத்தின் காணிகள் வனபரிபாலன திணைக்களத்திற்குச் சொந்தமானது என 2005ஆம் ஆண்டளவில் வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற ஒரு தகவலும் உண்டு. எவ்வாறாயினும், இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேறுவது என்பது சர்வதேச சட்டமுறைமைகளுக்கு அமைய இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை உரிமையாகும். உள்ளூர்ச் சட்டத்திற்கமைய இடம்பெயர்ந்திருந்த போதிலும், இந்த நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் இறைமையுள்ள அந்த மக்கள் தமது சொந்தக்காணிகளில் மீள்குடியமர்வது என்பது அவர்களின் அடிப்படை உரிமையாகும். அந்த உரிமையைத் தடுப்பதற்கு அரசாங்கம் உள்ளிட்ட எந்த ஒரு தரப்பினருக்கும் உரிமையும் அதிகாரமும் கிடையாது.
இந்த நிலையில் வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள் காஞ்சிரமோட்டை கிராமத்து மக்களை அவர்களுடைய காணிகளில் நிரந்தர கட்டிடங்களோ வேறு அமைப்புக்களையோ கட்டக்கூடாது என்று எந்தச் சட்டத்தின் கீழ் தடுத்துள்ளார்கள் என்பது கேள்விக்குரியது. வனங்களையும் அவற்றின் வளங்களையும் கண்காணிப்பதும், பாதுகாத்து நிர்வகிப்பதுமே வனபரிபாலன திணைக்களத்தின் வெளிப்படையான பொறுப்பும் கடமையுமாகும்.
சட்ட ரீதியாகக்குடியேறி வசிப்பதற்கென அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளில் அவர்கள் குடியிருக்க முடியாது என்றோ அல்லது நிரந்தரமான கட்டிடங்களை அமைக்கக்கூடாது என்றோ உத்தரவிடுவதற்கு வனபரிபாலன திணைக்களத்திற்கு எந்த வகையில் அதிகாரம் உள்ளது என்பது கண்டறியப்பட வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்தக் காணிகளுக்குத் திரும்பிச் செல்வது என்பது இயல்பானது. இயற்கையானது. இயற்கைச் சட்ட நெறிமுறைக்கமைய அது தடுக்கப்பட முடியாத உரிமையுமாகும். இதனால்தான் வேறு பல இடங்களில் தமது காணிகளை மீட்பதற்காக மக்கள் இராணுவத்திற்கு எதிராக மண்மீட்புப் போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருக்கின்றார்கள்.
நிலைமை அவ்வாறிருக்க வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் இடையூறு செய்வதற்கும், அதனைத் தடுப்பதற்கும் எந்த வகையில் அதிகாரம் பெற்றிருக்கின்றார்கள் என்பது கண்டறியப்பட வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேறுவது என்பது அடிப்படை உரிமை சார்ந்த விடயம். அந்த அடிப்படை உரிமையை, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்குப் பின்னரும் வனபரிபாலன அதிகாரிகள் மீறியிருப்பது சாதாரண விடயமல்ல. இது மிகவும் பாரதூரமான விடயமாகும்.
இதற்கு சிவில் நிர்வாகச்செயற்பாட்டு நெறிமுறைகளின் கீழ் தீர்வு காணப்பட வேண்டும். அல்லது நீதிமன்றத்தின் ஊடாக அடிப்படை உரிமை மீறல் குற்றச்சாட்டின் கீழ் நீதியும் நியாயமும் தேடப்பட வேண்டும். இல்லையேல் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கின்ற அரச தரப்பினருடைய கபடத்தனமான நடவடிக்கைகள் தடுப்பார் எவருமின்றி தொடர்வதைத் தடுத்து நிறுத்த முடியாது. அத்தகைய நிலைமைகள் எதிர்காலத்தில் மோசமான விளைவுகளுக்கே இட்டுச்செல்லும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-09-08#page-1
ஏமாற்றத்தின் விளிம்பில் ஈழத் தமிழ் மக்கள்
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணாமல் தொடர்ந்து இழுத்தடிப்பதால் நாட்டின் ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் ஏற்பட்டு விடும் என்பதை ஆட்சியாளர்களும் தென்பகுதி அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிர மரட்ண இதை உணர்த்தும் வகையிலேயே அரச தலைவருக்கும், தலைமை அமைச்சருக்கும் எச்சரிக்கை கலந்த வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அரசமைப்பு உருவாக்கம் மற்றும் ஏனைய விடயங்க ளில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத தலைவர்களாக இவர்கள் இருவரும் மாறிவிடக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகள் சூழ்ந்த நிலையில் நகர்கிறது தமிழர்களின் வாழ்வு
மேலோட்டமாகப் பார்க்கும்போது, தமிழ் மக்கள் பிரச்சினைகள் எதுவுமின்றி வாழ்வது போன்றதொரு தோற்றம் வெளித் தெரிந்தாலும், உண்மை நிலை அதுவல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஏராளமான பிரச்சினை களுக்கு முகம்கொடுத்த வண்ணம் தமிழர்கள் தமது காலத்தைக் கடத்தி வருகின்றனர்.
இவற்றுள் இனப்பிரச்சினை முக்கிய மானதாகும். இதற்குத் தீர்வு காணாததன் காரணமாகவே இனமோதல்கள் அடிக்கடி ஏற்பட்டதோடு நீண்ட போர் ஒன்றும் இடம்பெற்றது. இவை மீண்டும் இடம்பெறாமல் பார்த்துக் கொள்வது ஆட்சியாளர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.
புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பாகப் பலரும் பேசிவருகின்றனர். அரசதலைவரும், தலைமை அமைச்சரும் இதன் உருவாக்கம் தொடர்பாகத் தமிழ்த் தலைவர்களிடம் பல தடவைகள் வாக்குறுதிகளையும் வழங்கியுள்ளனர். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இதன் காரணமாகவே புதிய அரசமைப்பு உருவாக்கப்படுவது நிச்சயமானது என்று தமிழ்மக்களுக்கு நம்பிக்கை வெளியிட்டிருந்தார். தமிழ் மக்களும் அதை முற்றுமுழுதாக நம்பியிருந்தனர். ஆனால் அனைத்தும் ஏமாற்றத்திலேயே முடிந்துள்ளன.
புதிய அரசமைப்பு மிகமிக அவசியம்
புதிய அரசமைப்பின் கீழ் அதிகாரங்களைப் பகிர்ந்து வழங்குவதன் ஊடாகத் தமிழர்கள் சுயாட்சி யைப் பெற்றுக்கொள்ள முடியும். தற்போது நடைமுறையிலுள்ள ஒற்றையாட்சி முறையிலான ஆட்சிமுறை தமிழர்களை அதிகாரங்கள் எவற்றையும் பெறமுடியாத நிலைக்குக் கட்டிப்போட்டுள்ளது.
மாகாண சபைகள் அதிகாரங்கள் எவையுமற்ற வெறும் சபைகளாகவே காணப்படுகின்றன. இதனால் எதையுமே செய்ய முடியாத நிலையில் அவை காணப்படுகின்றன. தமிழர் பகுதிகளில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் இடம் பெறுவதற்கும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுவதற்கும் இதுவே காரணமாகும். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தால் இவற்றை மாகாண சபைகளால் தடுத்திருக்க முடியும். ஆனால் அதிகாரங்கள் வழங்கப்படாததால் மாகாண சபைகளால் அவ்விதம் செயற்பட முடியவில்லை.
இந்த நாடு மூன்று இனத்தவர்களை முதன்மையானவர்களாகக் கொண்டது. மத ரீதியிலும் மக்கள் வேறுபட்டுக் காணப்படுகின்றனர். சிறுபான்மையின மக்கள் அடிக்கடி பாதிப்புக்குள்ளாவதை இங்கு காணக்கூடியதாகவுள்ளது. இதற்கு, இந்த நாடு தமக்குரியதெனப் பெரும்பான்மையின மக்கள் கருதுவதே காரணமாகும். சுமார் 70 வீதமானபெரும்பான்மை இனத்தவர்கள் ஏனைய சிறுபான்மை இனத்தவரை மதிக்கின்ற மனநிலையில் இல்லையென்றுதான் கூறவேண்டும்.
அந்த அளவுக்கு இனவாத அரசியல்வாதிகள் அவர்களை மூளைச் சலவை செய்துள்ளனர். இன நல்லிணக்கம் மக்களின் அடிமனங்களிலிருந்து தானாகவே உருவாக வேண்டும். பிறர் மீதான காழ்ப்புணர்வும், வெறுப்பும் இருக்கும் வரையில் நல்லிணக்கம் ஏற்படவே முடியாது. இன ஐக்கியத்தின் வாயிலாகவே நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டுசெல்ல முடியுமென்பதைத் தென்பகுதி அரசியல்வாதிகள் உணரும்போது இன நல்லிணக்கம் தானாகவே உருவாகிவிடும். ஆனால் அதை அவர்கள் உணருவதற்கான அறிகுறிகள் எவற்றையும் இதுவரை காணமுடியவில்லை.
உரிமைகள் மறுக்கப்பட்டால் வன்முறை வெடிப்பது வரலாறு
ஒரு குறிப்பிட்ட இன மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டு அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதன் காரணமாகவே உலகில் ஆயுதம் ஏந்துகின்ற இயக்கங்கள் உருவெடுத்தன. பாதிக்கப்பட்ட இன மக்கள் தமது உரிமைகளை அகிம்சை வழியில் பெறுவதற்கு இயலாதுவிட்டால் ஆயுத நடவடிக்கைகள் மூலமாகவா வது அவற்றைப் பெறுவதற்கு முயற்சி செய்வார்கள்.
எமது நாட்டில் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தி போராடியதும் இதனால்தான். ஆனால் அவர்களின் உரிமைக்கான போராட்டம் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு அழித்தொழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழ் மக்களின் உரிமைக்கான வேட்கை இன்னமும் தணிந்து விடவில்லை.
ஆகவே ஆட்சிக்கு மாறிமாறி வருகின்ற பெரும்பான்மையின அரசியல்வாதிகள் இந்த யதார்த்தத்தை இனியாவது புரிந்து கொண்டு செயற்படுவதுதான் நாட்டின் மீட்சிக்கு வழிவகுக்கும்.
https://newuthayan.com/story/12/ஏமாற்றத்தின்-விளிம்பில்-ஈழத்-தமிழ்-மக்கள்.html
https://www.yarl.com/aggregator/sources/11?page=3
வட கிழக்கு இணைப்பும் முஸ்லிம் மக்களும்
வட கிழக்கு இணைப்பும் முஸ்லிம் மக்களும்
https://www.yarl.com/aggregator/sources/11?page=3
ஊரறிந்த வழக்கும் உலகப் பஞ்சாயத்தும்….மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்கள் பற்றிய தாருஸ்மான் அறிக்கை
ஒரு ஒடுக்கப்பட்ட இனக்குழுமம். அதன் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அட்டூழியங்கள், அவை பற்றிய அறிக்கை வெளியாகியிருக்கிறது.
மியன்மாரைச் சேர்ந்த ரோஹிங்கிய முஸ்லிம்கள். ரக்கைன் மாநிலத்தில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள். இவை பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் குழுவொன்று விசாரித்தது.
இந்தோனேஷியாவின் முன்னாள் சட்டமா அதிபர் இலங்கை மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். மர்சுக்கி தாருஸ்மான் தலைமையிலான குழுவினர் வரைந்த அறிக்கை. சுருக்கமாக சொன்னால், இன்னொரு தாருஸ்மான் அறிக்கை.
கடந்த ஆகஸ்ட் மாதம் ரக்கைன் மாநிலத்தில் தீவிர வன்முறைகள் நிகழ்ந்தன. கூட்டுப் படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள், சூறையாடல்கள். இவற்றில் இருந்து உயிர் தப்புவதற்காக இலட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்தார்கள்.
ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதான வன்முறையை ஐக்கிய நாடுகள் சபை ஏற்கெனவே இனச்சுத்திகரிப்பாக வர்ணித்தது. இன்று தாருஸ்மான் அறிக்கை இன அழிவாக விபரித்துள்ளது. இந்தக் குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்கிறது.
தாருஸ்மான் குழுவினருக்கு மியன்மார் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. இவர்கள் செய்மதிப் படங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை பரிசீலித்தனர். சுமார் 875 பேருடன் ஆழமான நேர்காணல்களை நடத்தினார்கள்.
இவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை, கடந்த திங்கட் கிழமை வெளியானது. இந்த அறிக்கை ரக்கைன் மாநிலத்தில் நிகழ்ந்தவற்றை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது. வன்முறைகளின் ஆணிவேர்களை ஆராய்கிறது.
இந்த வன்முறையால் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. எனினும், குறைந்தபட்சம் 10,000 மரணங்களாவது நிகழ்ந்திருக்கக்கூடும் என ஐ.நா.வின் தகவல் அறியும் குழு கூறுகிறது.
ரோஹிங்கிய மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்கொடுமைகளின் தன்மையை அறிக்கை விபரிக்கிறது. இவை சர்வதேச சட்டங்களின் கீழ் மிகவும் தீவிரமான குற்றச்சாட்டுக்களாக இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடுகிறது.
இவை புதியவை அல்ல. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அந்தோனியோ குத்தரெஸ் அவர்களும் விபரித்தவை. இம்முறை புதிய விடயம் உண்டெனின், அது ஆறு இராணுவ மேலதிகாரிகளைப் பெயரிட்டமை தான்.
மியன்மாரின் இராணுவத் தளபதி அடங்கலாக ஆறு பேர். இனப்படுகொலை, மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் பற்றி விசாரிப்பதாயின் இவர்களையே முதன்மைப்படுத்த வேண்டும் என தாருஸ்மான் அறிக்கை கூறுகிறது.
மியன்மாரின் நிகழ்நிலைத் தலைவி ஆங் சான் சூகி அம்மையார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பற்றியும் அறிக்கை பேசுகிறது. ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பு வாளாதிருந்து வன்முறைகளுக்கு துணைபோன விதத்தை விபரிக்கிறது.
ஆன் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் இனப்படுகொலையில் நேரடியாக பங்கேற்கவில்லை. ஆனால், வன்முறைகளின் முன்னிலையில் மௌனம் சாதித்து, குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார்கள்.
அத்துடன், ஆட்சியாளர்களை ஆதாரங்களை அழித்து, சர்வதேச சமூகத்தின் விசாரணைகளுக்கு இடமளிக்க மறுத்தார்கள் எனவும் தாருஸ்மான் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை சொல்வதை சாராம்சப்படுத்தலாம். ரக்கைன் மாநிலத்தில் ரோஹிங்கியர்களின் படுகொலை இன-அழிப்பிற்கு சமமானது. மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் இராணுவ அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும்.
இந்த அறிக்கையின் பரிந்துரைகள் பாரதூரமானவை. இவை ஐ.நா. பாதுகாப்பு சபையின் கவனத்தைப் பெறும். அறிக்கையில் கூறப்படும் விடயங்கள் ஒட்டுமொத்த உலகத்திற்கும் உரத்துக் கூறப்படும். அது மாத்திரமே.
ஏனெனில், தாருஸ்மான் குழு பரிந்துரைக்க மாத்திரமே முடியும். இவர் குற்றவாளி என்று தீர்மானிக்கும் அதிகாரம் குழுவிற்குக் கிடையாது. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் அதிகாரமும் அதற்கு இல்லை.
இந்த நிலையில், ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக கொடுமை புரிந்தவர்கள் முறையாக விசாரிக்கப்படுவார்களா, அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்குமா என்பது முக்கியமான கேள்வி. அதுவே முதன்மையானதும் கூட.
இன-அழிவு, மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம் போன்றவற்றை விசாரிப்பதற்கு பொருத்தமான அமைப்பென்றால், அது ஐ.நா. கட்டமைப்பிற்குள் வரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றமே.
அது தவிர, ஐ.நா.வின் தீர்ப்பாயங்களை ஸ்தாபிக்கலாம். யுகொஸ்லாவிய நெருக்கடி, ருவாண்டாவின் முரண்பாடு போன்றவற்றில் நிகழ்ந்த அட்டூழியங்களை விசாரிப்பதற்காக அத்தகைய தீர்ப்பாயங்கள் ஸ்தாபிக்கப்பட்டன.
ஆனால், ரோஹிங்கிய அகதிகள் விவகாரத்தை அவ்விரு நீதிமன்றங்களிலும் பாரப்படுத்துவது அரசியல் நடைமுறையாகும். இந்த அரசியல் ஐ.நா. பாதுகாப்பு சபையை சார்ந்ததாகக் காணப்படுகிறது.
பாதுகாப்பு சபையில் வீற்றோ அதிகாரம் படைத்த நாடுகள் நினைக்கும் பட்சத்தில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ரோஹிங்கிய முஸ்லிம்கள் விவகாரம் பாரப்படுத்தப்படுவதைத் தடுக்கலாம்.
சீனாவை எடுத்துக் கொள்வோம். மியன்மார் தண்டிக்கப்படுவதை சீனா விரும்பமாட்டாது. ஏனெனில், மியன்மாருடன் கூடுதலான வர்த்தக, பொருளாதார உறவுகளைப் பேணும் நாடாக சீனா திகழ்கிறது.
அது தவிரவும், தமக்கு அருகிலுள்ள நாடுகள் மீது வெளித்தலையீடுகள் மேற்கொள்ளப்படுவதை சீனா அனுமதிப்பதில்லை. குறிப்பாக, மேற்குலகத் தலையீடுகள் என்றால் சீனாவிற்கு அலர்ஜி.
பூகோள அரசியலை ஆராய்ந்தால், மியன்மார் விவகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படுவதை ரஷ்யாவும் விரும்பப் போவதில்லை. அந்நாடும் வீற்றோ அதிகாரத்தைப் பயன்படுத்தலாம்.
அமெரிக்காவை எடுத்துக் கொள்வோம். மியன்மார் இராணுவ மேலதிகாரிகள் சிலர் மீது சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளை விதித்தார். இவர்களில் தாருஸ்மான் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டவரும் உள்ளார்.
ஆனால், டொனால்ட் ட்ரம்பைப் பொறுத்தவரையில், சிரியா, ஆப்கானிஸ்தான், யெமன் போன்ற நாடுகள் அளவிற்கு மியன்மார் முக்கியமானது அல்ல. அங்கு ‘ஜனநாயகத்தை மேம்படுத்துவதில்’ ட்ரம்பிற்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை.
அது தவிர, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் சேரவும் இல்லை. இந்த நீதிமன்றத்தை ஸ்தாபிக்க வழிவகுத்த ரோமன் சட்டத்தில் அமெரிக்காவும், ரஷ்யாவும் கைச்சாத்திட்டன. ஆனால் அங்கீகரிக்கவில்லை.
இந்த நீதிமன்றத்தை ஸ்தாபித்த நாடுகளுள் ஒன்றாக பிரிட்டன் திகழ்கிறது. முன்னர் பர்மா என்றழைக்கப்பட்ட மியன்மாரின் காலனித்துவ ஆட்சியாளராக இருந்த பிரிட்டன், பாதுகாப்புச் சபையில் மியன்மாரை வழிநடத்துகிறது.
இதுவரை காலமும் மியன்மாரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் முயற்சிகளை பிரிட்டன் ஆட்சேபித்து வந்தது. இந்தப் பிரச்சினையில் உலக நாடுகள் மத்தியில் கருத்தொற்றுமை இல்லையென பிரிட்டன் கூறியது.
இந்த வல்லரசு நாடுகளின் கபட நாடகம் புதியதல்ல. தமக்கு நன்மை தருமாயின் மனித உரிமைகள், போர்க்குற்றங்கள் பற்றி பேசுவதும், மாறி நடந்தால் மௌனம் காப்பதும் வல்லரசுகள் காலங்காலமாக அனுசரித்த தந்திரம்.
மியன்மாரின் ரோஹிங்கிய அகதி நெருக்கடி பற்றிய தாருஸ்மான் அறிக்கையை ஒருபுறம் தள்ளி வைப்போம். அந்த முஸ்லிம்கள் மீது பாரதூரமான அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டதை நிராகரிக்க முடியாது.
இன்று குற்றமிழைக்கப்பட்டிருப்பதை அறிந்தும், குற்றமிழைத்தவர்கள் இவர்களென உறுதியாகத் தெரிந்தும், ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஊடாக முறையாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க முடியாமல் இருக்கிறது.
மியன்மாரின் ரோஹிங்கிய அகதிகள் என்ற பிரச்சினை, மனிதகுல நாகரிகத்தைக் கேள்விக்குள்ளாக்கும் விடயம் மாத்திரமல்ல, சர்வதேச சட்டத்தின் ஆற்றலைப் பரிசோதிக்கும் பலப்பரீட்சையாகவும் இருக்கிறது என்பதே உண்மை.
http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-02#page-3
https://www.yarl.com/aggregator/sources/11?page=3
Leave a Reply
You must be logged in to post a comment.