இந்தியத் தூதரகம் முல்லைத்தீவு மீனவர்களுக்கு ருபா 100 மில்லியன் செலவில் 150 மீன்பிடிப் படகுகள் மற்றும் 150 இயந்திரங்கள் கையளிப்பு!
நமது யாழ்ப்பாண நிருபர் தயாளன்
இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மீனவர்களுக்கு ரூபா100 மில்லியன் செலவில் 150 மீன்பிடிப் படகுகள் மற்றும் 150 இயந்திரங்கள் என்பன நேற்றைய நாள் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரி கே.பாலச்சந்திரனால் கையளிக்கப் பட்டது. கையளிக்கும் நிகழ்வு நேற்று கரைத்துறைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் 300 மீனவர்கள் நன்மையடையும் வகையில் 150 படகுகள் 150 பேருக்கும் மேலும் 150 இயந்திரங்கள் 150 பேருக்குமாக கையளிக்கப்பட்டு ஒரு படகில் இருவர் வீதம் இணைந்து தொழில் புரியும் வகையில் குறித்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்திய அரசாங்கத்தின் இலங்கையின் அபிவிருத்திக்கு என மொத்தமாக அளித்த அ.டொலர் 3 பில்லியன் நிதியில் இருந்து குறித்த உதவியில் அ.டொலர் 550 மில்லியன் நிதியானது நன்கொடையாக வழங்கப்படுகின்றது.
இந்த நிகழ்வில் இந்திய துணைத் தூதரக பாலச்சந்திரன், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி றுபவதி கேதீஸ்வரன், இந்திய உயர் ஸ்தானிக கொழும்பின் ஆலோசகர் சந்தோஸ் வர்மா, யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரி திரு நிரஞ்சன் கரைத்துறைப்பற்று , புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட மீனவப் பயனாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் இந்திய அரசாங்கத்திற்கு முல்லைத்தீவு மீனவர்கள் சார்பில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன் பயனாளிகள் இந்த மீன்பிடிப் படகுகளையும் மீன்பிடி படகு இயந்திரங்களையும் வேறு நபர்களுக்கு கையளிக்காது உரிய முறையில் பயன்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். அடுத்து உரையாற்றிய இந்திய துணைத் தூதுவர் திரு பாலசசந்திரன் இந்திய அரசாங்கம் வடமாகாணத்திற்கு வழங்கிய உதவிகளைப் பட்டியலிட்டதுடன் சிறப்பாக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட உதவி திட்டங்களான ரூபா 70.96 மில்லியன் செலவில் மன்னாரில் மீன்பிடிப் படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் வழங்கப்பட்டமை, 152 மில்லியன் இலங்கை ரூபாய் செலவில் குருநகரில் மீன்வலை உற்பத்தித் தொழிற்சாலை அமைக்கப்பட்டமை, அதன் அடுத்த கட்டமாக இன்று இந்த மீன்பிடிப் படகுகளையும் மீன்பிடி படகு இயந்திரங்களையும் கையளிக்கப்படுகின்றது என்றார்.
இதே நேரம் இந்திய அரசானது மீனவர்களுக்கென மேலும் பல்வேறு உதவித் திட்டங்களை வழங்கத் தயாராக உள்ளதெனவும் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.