சோல்பரி யாப்பும் மனித உரிமைகளும்

சோல்பரி யாப்பும் மனித உரிமைகளும்

டொனமூர் யாப்பு ஜனநாயக பாரம்பரியங்களை இலங்கையில் நிலைபெற செய்யக்கூடியதாக இருந்தாலும் தேசாதிபதியினதும் அரசாங்க ஊளியர்களினதும் அதிகாரமும் அவர்கள் செயற்பட்ட விதமும், காரணமாக இந்த யாப்பு நடைமுறைக்கு வந்த காலகட்டத்தில் இருந்தே இலங்கையரது எதிர்ப்பினை பெற்று வந்தது. இதனால் இரண்டாம் உலகப்போர் ஆரம்பமான வேளையில் இலங்கை பிரதிநிதிகள் இச்சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாக்கி பிருத்தானியருக்கு எதிராக அரசியல் சீர்திருத்த கோரிக்கைகளை முன்வைத்தனர். இதனடிப்படையில் பல முன்னேடுப்புக்களை முன்னேடுத்து தோல்வியில் முடிந்தாலும் பின்னர் சோல்பரி பிரபு தலைமையில் ஓர் குழுவினர் இலங்கை வந்து விசாரணைகளை நடாத்தி 1945ல் ஓர் யாப்பு ஒன்றினை வரைந்து 1947ல் நடைமுறைப்படுத்தினர். இதுவே சோல்பரி அரசியல் யாப்பாகும்.

இவ் யாப்பினை நாம் மனித உரிமைகளோடு தொடர்புபடுத்தி நோக்க முற்படும்போது சோல்பரி அரசியல் யாப்பில் அடிப்படை உரிமைகள் பற்றிய அத்தியாயம் இடம்பெறவில்லை. இருப்பினும் 29(2) உறுப்புரை சேர்க்கப்பட்டது. இது சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றும் அவர்களுடைய உரிமைகளுக்கு உத்திரவாதமளிக்கும் என்றும் கூறப்பட்டு யாப்பில் உள்வாங்கப்பட்டிருந்தது. ஆனால் இது நடைமுறையில் வெறும் கானல் நீராகவே போனது எனலாம். சிறுபான்மையோர் காப்பீடு மட்டுமன்றி இன்னும் பல ஏற்பாடுகளும் இதில் இடம்பெற்றிருந்தது. ஆனாலும் அவை ஒவ்வொன்றும் நடைமுறையில் செயற்பட்ட விதம் பற்றி நோக்கும் போது பலனளிக்காத ஒன்றாகவே அடையாளம் காணப்படுகிறது. 1972 ஆம் ஆண்டு மற்றும் 1978 ஆம் ஆண்டுடைய முதலாம் இரண்டாம் குடியரசு யாப்புகளில் உரிமைகள் பற்றிய ஏற்பாடுகள் உள்வாங்க சோல்பரி திட்த்தில் இடம்பெற்ற சிறுபான்மையோர் காப்பீடு முன்னோட்டமாக காணப்பட்டதேனலாம்.

சிறுபான்மையோரின் உரிமைகளை பாதுகாக்க செய்யப்பட்ட காப்பீடுகள் சோல்பரி அரசியல் திட்டத்தில் காண முடிந்தாலும் அவற்றை உரிமைகள் என ஏற்றுக்கொள்ள முடியாது. அவற்றினை வெறும் காப்பீடுகள் என்றே கூறவேண்டியுள்ளது. மற்றும் அவற்றின் நடைமுறைப் பயன்பாட்டினையும் நோக்கும் போது அவற்றினால் எந்த வித நன்மைகளையும் சுதேசிய மக்கள் பெறவில்லை என்பது தெளிவாகிறது. சோல்பரி காப்பீடுகளாக பிரதிநிதிகள் தொகை அதிகரிக்கப்பட்டமை அதாவது டொனமூர் திட்டத்தில் சட்டசபை உறுப்பினர்கள் 61 பேர் காணப்பட்டதானது சோல்பரி திட்டத்தில் 101 ஆக அதிகரிக்கப்பட்டது, இரட்டை அங்கத்தவர் தொகுதி காணப்பட்டமை, மகாதேசாதிபதியால் 6உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டமை, அரசசேவை ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டமை, மகாதேசாதிபதிக்கு சில விசேட சிறப்புரிமைகள் வழங்கப்பட்டமை, முக்கியமான விடையமாகவும் நடைமுறையில் ஏதோ ஓர் அளவில் பயன்பாடுகளையும் மற்றும் சோல்பரி திட்டத்தில் முதன்மை விடையமாகவும் பாராளுமன்றத்தின் இறைமையினை கட்டுப்படுத்திய ஓர் அம்சமாகவும் காணப்பட்டது யாப்பின் 29 வது பிரிவாகும். இத்தகைய விடையங்களை உள்ளடக்கியதாக சோல்பரி திட்ட காப்பீடுகள் அமைந்தன. பிற்பட்ட அரசியல் யாப்புக்களில் அடிப்படை உரிமைகள் சேர்க்கப்பட்து போன்று சோல்பரி யாப்பில் இடம்பெற்ற உரிமைகள் பற்றிய மிகக் குறைந்த மட்டுப்படுத்தப்பட்ட ஏற்பாடுகளாக நாம் இவற்றினை அடையாளப்படுத்தலாம்.

சோல்பரி அரசியல் திட்டத்தில் சிறுபான்மையோர் நலன் பேணும் ஏற்பாடுகளில் பிரதான ஏற்பாடாக 29வது பிரிவு காணப்படுகிறது. இதன் படி ஓர் இனத்தையோ அல்லது சமூகத்தையோ பாதிக்ககூடிய எச் சட்டங்களையும் பாராளுமன்றம் இயற்றக்கூடாது என விதித்தது. பாராளுமன்றத்தின் இறைமையினை கட்டுப்படுத்தும் ஓர் அம்சமாகவும் இதனை நாம் நோக்கலாம். முக்கியமாக பின்வரும் விதிகளுக்கு அமைவாகவே சோல்பரி பாராளுமன்றம் சட்டங்களை இயற்ற வேண்டியிருந்தது.

  1. எந்த மத சமூக பிரிவினர்களினதும் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு இடையூறுகளை விளைவிக்க கூடிய சட்டங்கள் எதையும் இயற்றக்கூடாது.
  2. பிற சமூக பிரிவு மக்களுக்கு வழங்கப்படாத ஒன்று வேறு எந்த சமூக பிரிவு மக்களுக்கும் வழங்க கூடாது.
  3. பிற மத பிரிவு மக்களுக்கு விதிக்கப்படாத தடைகளை வேறு எந்த சமூக பிரிவு மக்குளுக்கும் விதிக்ககூடாது.
  4. அரசியல் யாப்பில் மத சம்மந்தமான சட்ட விதிகளை திருத்துவதாக அல்லது மாற்றி அமைப்பதாக இருந்தால் அந்த மதத்தினை பிரதிநிதித்துவபடுத்துகின்ற தலைவர்களின் அலோசனையை பெற்ற பின்பே மாற்ற வேண்டும்.

இத்தகைய விதிகள் அனைத்தும் சிறுபான்மையோரினை பாதிக்கும் இன, மத வேறுபாடுகள் பாராபட்சங்களை தடை செய்வதாக அமைந்தது. அதனால் இவ் ஏற்பாடு பிரதானமான ஏற்பாடாக கருதப்பட்ட போதும் நடைமுறையில் சிறுபான்மையோருக்கு பாதுகாப்பாக அமையவில்லை. இவ் ஏற்பாடு நடைமுறையில் இருக்கும்போதே சிறுபான்மை இனத்திற்கு எதிரான பல சட்டங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டன.

  • 1948 – பிரஜா உரிமைச்சட்டம்
  • 1949 – பாராளுமன்ற தேர்தல் திருத்த சட்டம்
  • 1956 – தனிச் சிங்கள மொழிச்சட்டம்
  • 1967 – சிறிமா சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்க சட்டம்

போன்ற பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட போதும் இவ் 29 வது உருப்புரையினால் எதனையும் தடுக்க முடியாது போனது. இவ்வாறு சிறுபான்மையோர் நலன் பாதிக்கப்படும் சட்டங்கள் பாராளுமன்றத்தில் இயற்றினால் அவற்றுக்கு சிறுபான்மையோரின் நலன்களை காரணம் காட்டி மகாதேசாதிபதி இறுதி கையோப்பமிட மறுக்கலாம். ஆனால் நடைமுறையில் இவரும் மேற்கூறப்பட்ட சிறுபான்மையோருக்கு எதிரான சட்டங்கள் அனைத்திற்கும் இறுதி ஒப்பமிட்டு சட்டமாக அங்கிகரித்தார். பிரஜா உரிமைச்சட்டம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் திருத்த சட்டம் என்பன சுதந்திர இலங்கையில் சுதேசிகளால் 1820 களில் இருந்து பொருந்தோட்ட தொழில்களை செய்வதற்காக தெனன்னிந்தியாவில் இருந்து வந்து குடியமர்ந்த இந்திய தமிழ் மக்களை வெகுவாக பாதிப்பதாக அமைந்தது. 1987 ஆம் ஆண்டு வரை அம்மக்கள் பாதிப்படைய இச்சட்டமே காரணமாக அமைந்தது. அடுத்து தனிச் சிங்கள மொழிச்சட்டம் நிறைவேற்றப்பட்மையால் இலங்கைவாழ் புர்வீக தமிழர்கள் பாதிப்புற்று இற்றை வரையான இன முரண்பாட்டிக்கும் காரணியாக அமைந்தது எனலாம்.

சோல்பரி யாப்பின் பாராளுமன்றினை இரு சபைகளாக உருவாக்கி அதில் இரண்டாம் சபையான செனற்சபை சிறுபான்மையோருக்கு போதியளவு பாதுகாப்பையும் பிரதிநிதித்துவத்தையும் வழங்கும் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் நடைமுறையில் இச் செனற்சபை போதியளவு பாதுகாப்பையும் பிரதிநிதித்துவத்தினையும் வழங்கவில்லை. அதாவது செனற்சபை 30 உறுப்பினர்களை கொண்டிருந்தது. அதில்15 உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் சபையால் ஒற்றை மாற்று வாக்கு முறைப்படி தெரிவு செய்யப்பட்டனர். மக்கள் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை உறுப்பினர்களே அதிகமாக இருந்தமையினால் இதன் மூலம் சிறுபான்மை இனத்தவர்கள் அதிகளவில் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கவில்லை. மீதி 15 பேரும் பிரதமரின் சிபார்சின் பேரில் மகா தேசாதிபதியால் நியமிக்கப்பட்டனர். பிரதமர் பெரும்பான்மை இனத்தவரை சேர்ந்தவராக இருந்தமையினால் அவரும் சிறுபான்மையினரை அதிக அளவில் சேர்ப்பதற்கு அக்கரை காட்டவில்லை. இவரால் nதிரிவு செய்யப்பட்ட ஒரு சிலர் கூட தாம் சார்ந்த இனத்திற்கு விசுவாசமாக இருப்பதற்கு பதிலாக தம்மை தெரிவு செய்த பிரதமருக்கே விசுவாசமாக இருந்தனர்.

பாதுகாப்பு விடையத்திலும் செனற்சபை சிறுபான்மையோருக்கு ஆதரவாக எதுவும் செய்யவில்லை. 1948 – பிரஜா உரிமைச்சட்டம், 1949 -பாராளுமன்ற தேர்தல் திருத்த சட்டம், 1956 – தனிச் சிங்கள மொழிச்சட்டம், 1967 – சிறிமா சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்க சட்டம் அகிய சட்டங்கள் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட போது செனற்சபையும் அதற்கான அனுமதியினை வழங்கியிருந்தது. செனற்சபையில் பெரும்பான்மை இனத்தவர்கள் அதிகமாக இருந்தமையினாலும் அவர்களில் அனேகர் பெரும்பான்மையினரின் கட்சிகளின் பிரதிநிதிகளாக இருந்தமையினாலும் இந்த நிலைமை ஏற்பட்டது. தற்செயலாக அவர்கள் சிறுபான்மையினருக்கு ஆதரவாக வாக்களித்தாலும் செனற்சபை அதிகாரம் குறைந்த சபையாக இருந்தமையினால் எந்தவொரு தாக்கத்தினையும் ஏற்படுத்தவோ சட்டத்தினை தடுத்து நிறுத்தவோ முடியாமல் போனது. செனற்சபைக்கான அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்பட்டதனால் மசோதாக்களை அவற்றினால் கால தாமதப்படுத்த முடிந்ததே தவிர சிறுபான்மையோரின் உரிமைகளை பாதுகாப்பதாக அமையவில்லை.

பொது தேர்தலின் மூலம் போதியளவு பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளாத சிறுபான்மையினர் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதற்காக உறுப்பரை 11(2)ன் பிரகாரம் நியமன உறுப்பினர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இதன்படி 6 பேர் சிறுபான்மை இனங்களில் இருந்து பிரதமரிகன் சிபார்சின் பெரில் மகாதேசாதிபதியால் நியமிக்கப்பட்டனர். இவ் நியமனங்கள் சுய வருப்பின் பேரில் இடம்பெற வேண்டும் என எதிர்பார்த்தாலும் நடைமுறையில் அரசியல் இலாபம் கருதி அரசியல் நியமனங்களாகவே பேயின. இவ் நியமன உறுப்பினர் பதவிகள் சிறுபான்மை இனத்திற்கு பிரதிநிதித்துவத்தை வழங்குவதோடு பாதுகாப்பையும் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதாவது அவர்கள் சார்பான பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் கதைப்பதன் மூலம் தமது உரிமைகளை பாதுகாக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் இதுவும் சிறுபான்மையோருக்கு பாதுகாப்பாக அமையவில்லை. ஆரம்பத்தில் இவ் நியமன உறுப்பினர்களுக்கு சிறுபான்மையோர் நியமிக்கப்பட்டாலும் பின்னர் அரசியலமைப்பை மீறி பெரும்பான்மை இனத்தவர்களும் இதற்கு நியமிக்கப்பட்டனர்.

இதைவிட சிறுபான்மை இனத்தவர்கள் நியமிக்கப்பட்டாலும் அவர்கள் தம்மை தெரிவு செய்த பிரதமருக்கும் பிரதமர் சார்ந்த அரசியல் கட்சிக்கும் விசுவாசமாக இருந்தார்களே தவிர தாம் சார்ந்த இனங்களுக்கு விசுவாசமாக இருக்கவில்லை. எடுத்துக்காட்டாக 1970ம் ஆண்டு நியமன உறுப்பினர்களாக M.C சுப்பிரமணியம், செல்லையா குமாரசூரியர் என்போர் நியமிக்கப்பட்டனர். 1972ம் ஆண்டு அரசியல் திட்டம் சிறுபான்மையோர் நலன்களை பேணாத ஒன்றாக உருவாக்கப்பட்ட போதும் அதனை அவர்கள் ஆதரித்தனர். ஒரு சில நியமன உறுப்பினர்கள் தாம் சார்ந்த இனத்திற்கு விசுவாசமாக இருந்தபோதும் அரசாங்க கட்சிக்குள் இவர்கள் மிக சிறுபான்மையாக இருந்தமையால் இவர்களுடைய கருத்துக்கள் முக்கியம் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அங்கு காணப்படவில்லை. இதனால் சிறுபான்மை இனத்திந்கு எதிரான தீர்கானங்களை அரசு கொண்டுவரும்போது அவற்றை இவர்களால் தடுக்க முடியாமல் பேகானது.

பல்வேறு இனங்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசங்களில் குறிப்பிட்டளவு செறிவாகவுள்ள இனங்கள் ஒவ்வொன்றும் தங்களுடைய பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக அப்பிரதேசங்கள் பல அங்கத்தவர் தொகுதியாக உருவாக்கப்பட்டன. இதன்படி கொழும்பு மத்தி,மட்டக்களப்பு, பலாங்கொடை, அக்குறணை, பதுளை, மூதூர் போன்ற தொகுதிகள் இரட்டை அங்கத்தவர் தொகுதிகளாகவும் உருவாக்கப்பட்டன. ஆனால் நடைமுறையில் இதுவும் போதியளவு பிரதிநிதித்துவத்தை வழங்கவில்லை. உதாரணமாக கொழும்பு மத்தியில் மூன்று இனத்தவர்களும் அதிகம் வாழுவதால் அங்குள்ளவர்கள் தாம் சார்ந்த இனங்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக மூன்று அங்கத்தவர் தொகுதியாகவும், மட்டக்களப்பில் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்வதனால் இரட்டை அங்கத்தவர் தொகுதிகளாகவும் உருவாக்கப்பட்டாலும் நடைமுறையில் கொழும்பில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் பிரதிநிதிகளை தெரிவு செய்யக் கூடியதாக இருந்ததனால் தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை நிறைவேற்ற முடியாமல் போனது. இதேபோன்று மட்டக்களப்பில் சோல்பரி காலம் முழுவதும் இரு அங்கத்தவர்களும் தமிழர்களாகவே தெரிவு செய்யப்பட்டனர். குறிப்பாக 1970ம் ஆண்டு செல்லையா ராஜதுறை, இராஜன் செல்வநாயகம் என இருவரும் தமிழ்களாகவே தெரிவு செய்யப்பட்டனர். அதனால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டனர். பலங்கொடை தேர்தல் தொகுதி அங்கு வாழும் சிங்கள இந்திய வம்சாவளி தமிழர்களுக்காக இரட்டை அங்கத்தவர் தொகுதியாக உருவாக்கப்பட்டாலும் 1952 ம் ஆண்டு தேர்தலில் இரு உறுப்பினர்களும் சிங்களவர்களாகவே தெரிவு செய்யப்பட்டனர்.

ஓர் ஜனநாயக நாட்டில் நாட்டில் வாழுகின்ற மக்கள் தமது உரிமைகளை பாதுகாக்கும் முக்கிய வழிமுறைகளில் ஒன்று தமது பிரதிநிதிகளினுடாக தமது பிரச்சினைகளை பாராளுமன்றிக்கு கொண்டு சென்று அதன் மூலம் தீர்வினை பெற்றுக்கொள்ளும் செயன்முறையாகும். இதனாலேயே பிரதிநிதித்துவம் முக்கியம் பெறுகின்றது. இதற்கான ஏற்பாடுகளை சோல்பரி யாப்பு பல இனங்களை கருத்தில் கொண்டு முன்வைத்தாலும் அவை நடைமுறையில் பலனளிக்காமல் போனது. இதன் விளைவாகவே 1948, 1949, 1956, 1967காலப்பகுதியில் சிறுபான்மையிருக்கு எதிராக உரிமை மீறல் சட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றக்கூடியதாக இருந்தது எனலாம். தெரிவு செய்யப்பட்ட குறைந்த பட்ச பிரதிநிதிகளினால் பெரும்பான்மையோருக்கு எதிராக செயற்பட முடியாமல் போனது.

இலங்கை நீதிமன்றங்களில் போதியளவு நீதி கிடைக்காதவர்கள் பிருத்தானிய உயர் நீதிமன்றமான கோமறைக் கழகத்திற்கு விண்ணப்பிப்பதன் மூலம் திருப்தியான நீதியினை பெற்றுக்கொள்ளலாம் என கருதப்பட்டு கோமறைக்கழகத்திற்கு மேல் முறையிடும் செய்யும் உரிமை அரசியல் அமைப்பின் ஊடாக நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. அது சிறுபான்மையினருக்கு போதியளவு காப்பீடாக அமையும் என நம்பப்பட்டது. இருப்பினும் நடைமுறையில் இதுவும் சிறுபான்மையினருக்கு போதிய காப்பீடாக அமையவில்லை. 1948 ம் ஆண்டு பிரஜா உரிமைச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது அது தொடர்பாக அச்சட்டம் அரசியலமைப்பின் 29 லது பிரிவுக்கு எதிரானது என கூறப்பட்டு கோமறைக்கழகத்திற்கு முறையீடு செய்யப்பட்டது. ஆனால் கோமறைக்கழகம் பிரஜா உரிமைகள் தொடர்பான சட்டம் இயற்றும் அதிகாரம் இலங்கை பாராளுமன்றத்திற்கு உண்டு என தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு இலங்கையின் சிறுபான்மையினாரான இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிரானதாக காணப்பட்டது. 1956ம் ஆண்டு தனிச் சிங்கள மொழிச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது அச்சட்டத்தினால் பாதிக்கப்பட்ட அரசாங்க எழுதுவினைஞரான கோடிஸ்வரன் மூலமாக கோமறைக்கழதத்திற்கு மேல் முறையீடு செய்யப்பட்து. இது தொடர்பாக கோமறைக்கழகம் கோடீஸ்வரனுக்கு சார்பாக தீர்ப்பு வழங்கியபோதும் இலங்கையரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தவில்லை.

மக்கள் தமது உரிமையினை பாதுகாப்பதற்காக அணுகும் இடம் நீதிமன்றமாகும். இது ஏனைய துறைகளின் செல்வாக்கு இன்றி தனித்து செயற்படவேண்டும். மற்றும் யாப்பின் பாதுகாவலனாகவும் இம் நீதிமன்றங்கள் காணப்படுகின்றன. ஆனால் சோல்பரி திட்டத்தினுடாக நாட்டு மக்கள் உரிமைகளை இழக்கவோ உள்நாட்டு நீதியில் திருப்தியினம் இருந்தாலோ மேல் முறையீட்டு ஏற்பாடான கோமறைக்கழகம் ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும் இது நடைமுறையில் பயனற்று போனமையானது சோல்பரி யாப்பில் உள்ள ஏனைய உhமைகளையும் உத்திரவாதப்படுத்த முடியாத நிலைக்கு கொண்டு சென்றது.

அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ள சிறுபான்மையோர் காப்பீடுகள் நீக்க கூடாது என்பதற்காக அரசியலமைப்பை திருத்துவதற்கு 2ஃ3பெரும்பான்மை அவசியம் என விதிக்கப்பட்டது. இவ் 2ஃ3 பெரும்பான்மையினை எந்தவொரு கட்சியாலும் பெற முடியாது எனவே அரசியலமைப்பின் 29வது உறுப்புரை உள்ளிட்ட சிறுபான்மையோர் காப்பீடுகள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என்றும் அதனடிப்படையில் சிறுபான்மையோர் பாதுகாக்கப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் 1970 ஆம் ஆண்டு வரையும் ஆட்சிக்கு வந்த கட்சிகள் ஏனைய கட்சிகளுடன் கூட்டணியினை ஏற்படுத்திக் கொண்டு 1948-பிரஜா உரிமைச்சட்டம், 1949-பாராளுமன்ற தேர்தல் திருத்த சட்டம், 1956-தனிச் சிங்கள மொழிச்சட்டம், 1967-சிறிமா சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்க சட்டம் போன்ற சிறுபான்மையோர் நலன்களை பாதிக்கும் சட்டங்களையும் யாப்பின் 29 வது உறுப்புரைக்கு எதிராகவும் இயற்றி நடைமுறைப்படுத்தியது. 1970ம் ஆண்டு தேர்தலில் சிறுபான்மையோரின் ஆதரவில்லாமலே சிறிலங்கா சுதந்திர கட்சி இடதுசாரி கட்சியுடன் கூட்டணி அமைத்து 2ஃ3 பெரும்பான்மையினை பெற்று பெயரளவில் காணப்பட்ட சிறுபான்மையோர் காப்பீடுகளை இல்லாமல் செய்து 1972 ம் ஆண்டு முதலாம் குடியரசு அரசியல் யாப்பினை உருவாக்கப்பட்டது.

நீதிச்சேவை பொதுச்சேவை என்பவற்றில் சிறுபான்மையோருக்கு பாராபட்சம் காட்டக்கூடாது என்பதற்காக நீதிச்சேவை மற்றும் பொதுச்சேவை ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. 5 வருட காலங்களை கொண்ட மூன்று உறுப்பினர்களை இவ் ஆணைக்குழு கொண்டிருந்தது. இதனது பணி 3600 ரூபாய்க்கு மேல் வருடாந்த சம்பளம் பெறும் பதவிகளுக்கான நியமனங்கள் மற்றும் அரசாங்க சேவையினரின் பதவி உயர்வு, இடமாற்றம் , பதவி நீக்கம், ஒழுக்க கட்டுப்பாடு முதலிய விடையங்களில் இவ்வாணைக்குழுக்கள் அதிகாரம் கொண்டிருந்தது. இத்தகைய பணிகளின் போது வேறுபாடுகள் காட்டக்கூடாது என யாப்பு வலியுறுத்துவதால் இது சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்கும் ஒன்றாக இருந்தது. ஒப்பீட்டு ரீதியில் பார்க்கும் போது ஏனைய காப்பீடுகளை விட நடைமுறையில் இவை ஒரளவு சிறுபான்மையோருக்கு பாதுகாப்பாக அமைந்தது. ஆனால் 1956 ம் ஆண்டு தனி சிங்கள மொழிச்சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர் இதனது பங்களிப்பும் பயனற்று போனது. அதாவது 1956ம் ஆண்டு சட்டம் ஆங்கில மொழியினை புறம் தள்ளி சிங்கள மொழியினை அரச கரும மொழியாக கொண்டுவந்ததன் அடிப்படையில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியினர் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இதனால் சிங்கள மக்கள் அதிகம் அரச வேலையினை பெறவும் ஏனைய மொழியினர் வேலை வாய்ப்புக்களை இழக்கவும் வேண்டியிருந்தது. இதன் காரணமாக நீதிச்சேவை பொதுச்சேவை ஆணைக்குழுக்கள் தமது பணியினை நடு நிலையில் மேற்கொள்ள முடியாமல் போனது.

1956ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிங்கள மொழிச்சட்டத்தினால் பல வழிகளிலும் தமிழ் பேசும் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் தமிழ் அரசியல் தலைவர்கள் தொடர் போரட்டங்களை நடாத்தியதுடன் தமிழ் மொழியின் முக்கியம் பற்றியும் வலியுறுத்தினர். இதன் காரணமாக1958ம் ஆண்டு விசேட தமிழ் மொழி ஏற்பாடுகள் கொண்டுவரப்பட்டது. மற்றும் 1966ம் ஆண்டுகளில் தமிழ் சட்டவிதிகள் இயற்றப்பட்டது. இவ்விரு முயற்ச்சிகளில் 1958ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ் மொழி ஏற்பாடுகள் ஒரளவிற்கு மொழி உரிமைகளை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள செய்திருந்தது. இது சோல்பரி யாப்புக்காலத்தில் இடம்பெற்றதால் மொழி உரிமைகள் தொடர்பான சாதகமான ஒன்று எனலாம். இருப்பினும் இது பல குறைபாடுகளை கொண்டிருந்ததுடன் ஒரு கண்துடைப்பு விடையமாகவும் காணப்பட்டது. அடுத்து வந்த1966ம் ஆண்டு தமிழ் சட்ட விதிகள் என்னும் விடையங்கள் இயற்றப்பட்டாலும் அவை நடைமுறைப்படுத்தப்படாத விடையங்களாகவே உள்ளது.

1956ம் ஆண்டைய சட்டத்தின் பின்னர் இலங்கைவாழ் தமிழர்கள் அரசாங்க வேலைகளையும் இழக்க வேண்டியிருந்தது. அதாவது சுதந்திரத்திற்கு பின்னர் அரசாங்க வேலைகளில் 30 வீதமாக காணப்பட்ட தமிழ் மக்கள் இச்சட்டத்தின் காரணமாக 1970ம் ஆண்டுகளில் 6வீதமாக குறைந்தனர். இது பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியதுடன் இலங்கையின் இன முரண்பாடுகளை மேன்மேலும் சிக்கலாக்கியது. பின்னிட்ட காலங்களில் தமிழ் இளைஞ்ஞர்கள் ஆயுத வழியினை தெரிவு செய்ய இச்சட்டத்துடன் 1970ம் ஆண்டு காலங்களில் கொண்டுவரப்பட்ட கல்வி தரப்படுத்தலும் முக்கிய காரணங்கள் எனலாம். சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் சிங்கள மொழி உலகிலேயே இலங்கையில் மட்டும்தான் உள்ளது என்பதால் ஏனைய இனங்களை புறம் தள்ளி இவர்களது அடையாளங்களை முதன்மைப்படுத்தும் பேக்கு உள்ளது.

சோல்பரி அரசியல் திட்டத்தில் சிறுபான்மையோர் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்கவும் பல ஏற்பாடுகள் செய்யப்பட்ட போhதிலும் அவை நடைமுறையில் வலுவிளந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இலங்கையில் பெரும்பான்மை இனமான சிங்கள மக்களிடையே காணப்பட்ட குரொத மனப்பான்மையாகும். அதாவது இது பெரும்பாலும் ஆட்சியிலிருந்த தலைவர்களிடமும் தென்னிலங்கை அரசியல் வாதிகளிடமும் அதிகம் காணப்பட்டது. இவர்கள் தமிழர்களுக்கு எந்த உரிமைகளையும் வழங்ககூடாது என்பதில் தெளிவாக இருந்தனர். இவற்றையும் தாண்டி சில அரசியல் தலைவர்கள் சமத்துவம் பற்றி சிந்தித்தால் இலங்கையில் அரசியல் நடத்த முடியாத நிலை ஏற்படும். ஆரம்பத்தில் S.W.R.D பன்டாரநாயக்கா சமஸ்டி கோரிக்ககையினையும், சேர்.ஜோன் கொத்தலாவல இரு மொழி அந்தஸ்து நிலைப்பாட்டினையும் கொண்டிருந்தனர். ஆனால் அரசியல் இலாபம் கருதி அவற்றினை மாற்றி செயற்பட வேண்டியதாயிற்று. இலங்கையில் சமத்துவம் பற்றி பேசினாலோ அல்லது தமிழர்களின் உரிமைகள் பற்றி பேசினாலோ அது தென்னிலங்கை மக்களின் எதிர்ப்பினை சம்பாதிக்கும் ஒர் விடையமாக அமைந்துவிடும். இதற்கு முக்கிய காரணம் பௌத்த மத வாதிகளின் செயற்பாடுகள் எனலாம்.

எனவே சோல்பரி யாப்பில் அடிப்படை உரிமைகள் என்னும் விடையங்கள் உள்ளடக்கப்படவில்லை. சோல்பரி யாப்பு பிருத்தானியரால் உருவாக்கப்பட்டதனாலும் அது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடுவதற்கு முன்னர் கொண்டுவரப்பட்டதாலும் அடிப்படை உரிமைகள் அத்தியாயம் தனித்து முக்கியம் பெற்று இடம்பெற்றிருக்கவில்லை. இவ் அடிப்படை உரிமைகள் பற்றிய ஏற்பாடுகளுக்கு பதிலீடாக சிறுபான்மையினரின் உரிமைகள் பெரும்பான்மையோரால் பாதிக்க கூடாது என்பதற்காக சில ஏற்பாடுகளை சோல்பரி குழுவினர் அறிமுகம் செய்திருப்பினும் அவை நடைமுறையில் திருப்தியில்லாத ஒன்றாகவே காணப்பட்டது. இதன் காரணமாக சோல்பரி யாப்பு உரிமைகள் பற்றிய விடையத்தில் சிறப்புற்ற ஓன்றாக கருத முடியாது. இலங்கைத்தீவில் பல இன முரண்பாடுகளுக்கு காரணமான சட்டங்கள் அனைத்தும் யாப்பு விதிகளுக்கு அப்பால் பட்டு நிறைவேற்றப்பட்டு சிறுபான்மையோரின் உரிமைகளையும் பறித்தேடுத்தது எனலாம்.

https://www.matheepan.org/2016/12/blog-post.html


 

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply